புதுடில்லியில் சிறைவைக்கப்பட்ட புலித்தலைவர்கள்- (அவலங்களின் அத்தியாயங்கள்- 44 – 52


 புலிகளின் தலைவரை இந்தியா வஞ்சித்த சந்தர்ப்பங்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 44): நிராஜ் டேவிட்

  • November 29, 2012
தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவை பகைத்துக் கொண்டதற்கும், இந்தியா மீது போர்தொடுத்ததற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புலிகள் இந்தியாவை தமது எதிரியாக ஆக்கிக்கொண்டதற்கு இந்தியா புலிகளுக்கு செய்த பல நம்பிக்கைத் துரோகங்களே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

புலிகளின் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பல தலைவர்களது மரணத்திற்கும், புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபனது மரணத்திற்கும் இந்தியா நேரடியாகக் காரணமாக இந்ததும், இது இந்தியா மீது புலிகளை நம்பிக்கை இழக்கச்செய்திருந்ததும், அதனைத் தொடர்ந்து இந்தியப் படை- புலிகள் மோதல்கள் ஆரம்பமானதும் யாவரும் அறிந்ததே.ஆனால் இந்திய அரசு மீது புலிகள் வைத்திருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் நீக்கிவிடக் கூடியதாக இருந்ததும், இந்தியா மீது புலிகளை தீராப் பகைகொள்ள வைத்ததுமான இரண்டு சம்பவங்களைக் முக்கியமாகக் குறிப்பிட முடியும்.

இந்தியாவை இனி நம்பிப் பிரயோஜனமில்லை என்று புலிகளை தீர்மானம் எடுக்க வைத்ததற்கும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று புலிகளை உறுதிபூணவைத்ததற்கும் அடிப்படையாக இரண்டு முக்கியமான சம்பவங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றன.

இந்திய விரோத உணர்வை ஏற்படுத்திய சம்பவங்கள்

•முதலாவது சம்பவம் 8.11.1986 அன்று இடம்பெற்றது. தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியா கைது செய்தது. அவர்களது ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளைக் கைப்பற்றியது.

•அடுத்த சம்பவம் 24.07.1987 இல் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்கு என்று இந்தியாவிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை வீட்டுக்காவலில் வைத்ததுடன், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றேயாகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்தியது.

இந்த இரண்டு சம்பவங்களுமே, ராஜீவ் காந்தி தலைமையிலான இந்தியாவை எதிர்ப்பதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்பதை புலிகளுக்குப் புரியவைத்திருந்த சம்பவங்களாகும்.

இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் பாதையை புலிகள் தெரிவுசெய்வதற்கும், இவ்விரு சம்பவங்களுமே பிரதான காரணங்களாகவும் அமைந்திருந்தன.

பின்நாட்களில் இந்தியாவிற்கு எதிராக ஒரு “துன்பியல் சம்பவம்” புலிகளால் மேற்கொள்ளப்படுவதற்கும், இந்த இரண்டு சம்பவங்களுமே பிரதான காரணங்களாக அமைந்திருந்தன.  இதிலே முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட சம்பவம், 1986ம் ஆண்டு இந்தியா பெங்களுரில் நடைபெற இருந்த “சார்க்” மகாநாட்டை அடிப்படையாகக்கொண்டு இடம்பெற்றிருந்தது.

1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம், 16ம், 17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த “தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது. இவரது இந்திய விஜயத்தின் போது புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத் துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.

இவ்வாறு ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடச் சந்தர்பம் உள்ளது என்றே இந்தியப் பிரதமர் ராஜீவும் நம்பினார். அப்பொழுது ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக இந்தியா தனது நகர்வை ஆரம்பித்திருந்த காலம். ஆகவே, சார்க் மாநாட்டை அடிப்படையாக வைத்து புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவும் ராஜீவ் காந்தி எண்ணினார்.

“தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் ஈழப் போராளிகள் “சார்க்” மாநாடு நடைபெறும் பெங்களுருக்குச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு, இந்திய மத்திய உள்துறையில் இருந்து தமிழ் நாடு தலைமைச் செயலாளருக்கு ரகசியத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள போராட்ட அமைப்புக்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு, தமிழ் நாட்டு உளவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த டீ.ஜீ.பி. மோகனதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

நவம்பர் மாதம் 8ம் திகதி அதிகாலை தமிழ் நாட்டிலிருந்த ஈழ விடுதலை இயக்கங்களின் முகாம்கள் அனைத்தும் தமிழ் நாட்டுப் பொலிஸாரால் திடீரென்று சுற்றிவளைக்கப்பட்டன.

அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ் நாட்டுப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன. சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகுதியினுள், SAM-7 (Surface to Air Missile) விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் அடங்கி இருந்ததாக அப்பொழுது செய்திகள் வெளியாகி இருந்தன.

பிரபாகரன் கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழ் நாடு பொலிஸார் கைது செய்தார்கள். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவரை தமிழ் நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்தில் பொலிஸார் நடந்துகொண்டதாகவும் அப்பொழுது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னர் சார்க் மாநாட்டுக்காக இந்தியா வந்திருந்த ஜே.ஆர்.ஜயவர்தனாவுடன் இந்தியப் பிரதமர் உடன்பாடு கண்டிருந்த ஒரு ஒப்பந்தத்திற்கு,  திரு.பிரபாகரனையும் சம்மதிக்கவைக்கும் நோக்கத்தில் திரு பிரபாகரன் அவர்கள் பெங்களுருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். (திரு.பிரபாகரன் அவர்கள் பெங்களுர் அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு அவர் இந்த உடன்பாடை ஏற்க மறுத்தது போன்ற விடயங்கள் பற்றி இத்தொடரில் ஏற்கனவே விபரித்திருந்தேன்.)

விடுதலைப் புலிகள் மீது இந்தியாவின் தீர்மானங்களைத் திணிக்கும் நோக்கத்திலேயே, புலிகளின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன், புலிகளின் தலைவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று புலி உறுப்பினர்கள் அப்பொழுது நம்பினார்கள். தமது அதிருப்தியையும். மனவருத்தத்தையும் பரவலாக வெளியிட்டிருந்தார்கள்.

ஆனால் தலைவர் பிரபாகரன் இந்தியாவின் எந்தவிதமான அழுத்தத்திற்கும் மசியவில்லை. தனது நிலையில் அவர் அசைக்கமுடியாத உறுதியையே கடைப்பிடித்தார். இந்தியாவினதும், ஸ்ரீலங்காவினதும் கூட்டுத்தந்திரத்திற்கு அகப்படாமல் சென்னை திரும்பிய திரு.பிரபாகரனுக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியம் செய்ய இந்தியா முடிவு செய்திருந்தது. “இந்தியாவின் பேச்சை மீறினால் இப்படியான இன்னல்களையெல்லாம் சந்திக்க நேரிடும்” என்பதை புலிகளுக்கு உணர்த்தவே இந்தியா இந்த நகர்வை எடுத்திருந்தது.

புலிகளின் தொலைத்தொடர்பு கருவிகள் பறிமுதல்

புலிகள் வைத்திருந்த தொலைத்தொடர்பு கருவிகளையும் இந்தியப் பொலிஸார் கைப்பற்றினார்கள். புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் தமது உயிரைப் போன்று மதிக்கும் முக்கிய விடயங்களான “ஆயுதங்கள்”, “சயனைட்” போன்று அவர்களது தொலைத்தொடர்பு சாதனங்களும் மிக முக்கியமான ஒன்று. அந்தக் காலத்தில் ஈழமண்ணில் நின்று போராடிய அத்தனை தமிழ் இயக்கங்களிலும் பார்க்க புலிகளது தொலைத் தொடர்பு வலைப்பின்னல்கள் பல மடங்கு முன்னேற்றகரமானவைகள் என்பதுடன் அக்காலத்திலேயே புலிகள் தமது தொலைத்தொடர்பு நடவடிக்கைகளுக்காக மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த காலத்தில் யாழ் மண்ணில் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்டுவந்த கிட்டு அவர்கள், சண்டைக்கள நிலவரங்கள் பற்றி, இந்தியாவில் தமிழ் நாட்டில் தங்கியிருந்த தலைவர் பிரபாகரனுடன் உடனுக்குடன் தொடர்புகொண்டு உத்தரவுகளை பெற்றுக்கொள்ள அதி நவீன தொலைத் தொடர்புக் கருவிகளை கையான்டுவந்தது பற்றி அக்காலத்திலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோன்று இந்தியப் படைகள் ஈழமண்ணில் புலிகளிடம் அடிவாங்கிக் கொண்டிருந்த காலத்தில் புலிகள் தரப்பில் இருந்து இந்தியப் படைகளை ஆச்சரியப்பட வைத்திருந்த பல விடயங்களுள், புலிகளின் தொலைத் தொடர்பு செயற்பாடுகளும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி மிகவும் அக்கறையுடன் புலிகளால் கட்டியெழுப்பப்பட்டிருந்த புலிகளின் தொலைத் தொடர்பு சாதனங்கள் இந்தியப் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்ட விடயமானது, இனி இந்தியாவை நம்பிப் பிரயோஜனமில்லை என்று புலிகளை தீர்மானம் எடுக்கும்படி வைத்தது.இந்தியாவை நம்பி தொடர்ந்தும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து போராட்டம் நடாத்த முடியாது என்பதை

புலிகளுக்கு உணர்த்தும்படியாக இந்தச் சம்பவம் அமைந்திருந்தது.

பிரபாகரனின் உண்ணாவிரதம்.

இதனைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் இருந்த புலிகளது அலுவலகத்தில் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்து புலிகளின் ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றை புலிகளிடம் ஒப்படைக்கும்படி தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். உத்தரவு பிறப்பித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற் தடவையாக ஒரு சாத்விகப் போராட்டத்தை நடாத்தும்படியான சந்தர்பத்தை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவமே, இந்தியா மீது புலிகளை பகைகொள்ள வைத்த முதலாவது சம்பவம் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றர்கள்.

இந்தியாவிற்கு எதிராக புலிகளை விரோதம் கொள்ள வைத்த இரண்டாவது சம்பவம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.


 

விரோதத்திற்கு வித்திட்ட பயணம்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 45) – நிராஜ் டேவிட்

  • December 5, 2012
இந்தியாவுடன் புலிகளைப் பகைகொள்ளவைத்த முதலாவது சம்பவம்பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம். இந்தியாவிற்கு எதிராகப் புலிகளை களம் இறங்கும்படி செய்த இரண்டாவது சம்பவம், இந்தியப் படைகளின் நேரடித் தலையீடு இலங்கையில் ஏற்பட்ட பின்பு இடம்பெற்றிருந்தது.

“ஒப்பரேஷன் பூமாலை“ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் குள்ளநரித் தந்திரத்துடனும், இந்தியாவின் பூகோள நலனை நோக்காகவும் கொண்டும் தயாரிக்கப்பட்டிருந்த இந்த ஒப்பந்த யோசனைகள் பற்றி புலிகளுக்கு எதுவும் முதலில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

அக்காலத்தில் ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே நின்று போராடிக்கொண்டிருந்தார்கள். “ஈரோஸ்“ அமைப்பு தவிர மற்றைய ஈழ இயக்கங்கள் அனைத்தும் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமன்னில் தமது தலமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.

இந்த ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். இந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது

(இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் துறை உயரதிகாரியாகக் கடமையாற்றியவர்தான் ஹாதீப் பூரி. இந்திய பாதுகாப்புத்துறை சம்பந்தமான நடவடிக்கைளுக்கு பொறுப்பான அதிகாரியாக இந்திய தூதரகத்தில் கடமையாற்றிய அதிகாரிதான் கப்டன் குப்தா)

ஸ்ரீலங்கா அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்“ என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.

தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்  என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

19.07.1987 இடம்பெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பல தடவைகள் இந்திய அதிகாரிகளுக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

தவிர்க்க முடியாமல் இந்திய நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர், அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டேயாகவேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருந்தது. அதனால் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியில் தீர்மானித்தார்.

இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக விமர்சகர்களால் கருதப்பட்ட பிரபாகரனின் அந்த இந்தியப் பயனம், 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்காப்பரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.

ஏமாற்றப்பட்ட தமிழ் இயக்கங்கள்

புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு புலிகளின் தலைவர் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதை நன்கு உணர்ந்திருந்தது. ஆனாலும் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு என்ற ரீதியிலும், அப்பொழுது ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த ஒரே அமைப்பு என்ற ரீதியிலும் புலிகளை இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது ஏற்றுக்கொள்ளவைத்துவிட வேண்டும் என்பதில் ராஜீவ் காந்தி திண்ணமாக இருந்தார். அதனால் புலிகளை இணங்க வைக்க அவர் சில தந்திரங்களை கையாண்டார்.

தமிழ் இயக்கங்களுக்கு இடையே அக்காலங்களில் காணப்பட்ட முரன்பாடுகளை கனகச்சிதமாக தனது திட்டத்திற்கு பயன்படுத்த ராஜீவ் காந்தி தீர்மானித்தார். (இப்படி, இந்தியாவிற்கு சாதகமான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன்தான் இந்தியாவின் “றோ“ புலனாய்வு அமைப்பு ஆரம்பத்தில் ஈழப் போராட்ட அமைப்புக்களிடையே விரோதத்தை திட்டமிட்டு வளர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்கள் பற்றி ஏற்கனவே இத்தொடரின் 5ம் அத்தியாயத்தில் விரிவாகத் தெரிவித்திருந்தேன்.)

ஈழமண்ணில் இருந்து வெளியேறி தமிழ் நாட்டில் இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், டெலோ, ஈ.என்.டீ.எல்.எப்., த.வி.கூட்டணி போன்ற அமைப்புக்களை அழைத்த ராஜீவ் காந்தி, இந்திய இலங்கை உத்தேச ஒப்பந்தத்திற்கு இந்த இயக்கங்கள் தமது முழு ஆதரவைத் தருவதாக அவர்களது சம்மதத்தைப் பெற்றார். இதற்காக இந்திய அதிகாரிகள் மேற்கொண்டிருந்த தந்திர நடவடிக்கையையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

இயக்கங்களுக்கு இடையிலான மோதல்கள், இயக்கங்களின் உள்ளேயான பிளவுகள், ஈ.என்.டீ.எல்.எப். போன்ற புதிய அமைப்புக்களின் தோற்றங்கள் போன்றவற்றை கவனத்தில் எடுத்து, சரியான தருணத்தில் இந்தியத் தரப்பால் காய் நகர்த்தப்பட்டது.

இந்த இயக்கங்களின் தலைமைகளையும், பிரதிநிதிகளையும் தனித்தனியாக சந்தித்த இந்திய அதிகாரிகள் தமது ஒப்பந்தம் பற்றி விளக்கம் அளித்ததுடன், ஒப்பந்தத்தின் பிரதிகளையும் கொடுத்திருந்தார்கள். அத்தோடு இயக்கங்களின் மாற்று அமைப்புக்கள் அல்லது அந்த குறிப்பிட்ட இயக்கங்களில் இருந்து பிரிந்திருந்த அணியினர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றும் மற்றைய இயக்கங்களிடம் கூறிவைத்தார்கள்.

உதாரணத்திற்கு “புளொட்“ அமைப்பினரைச் சந்தித்த இந்திய அதிகாரிகள், அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றிருந்து பரந்தன் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று கூறியிருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையைச் சந்தித்த இந்திய அதிகாரிகள், அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அணியினர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு செயற்படத் தயார் என்று அறிவித்துவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்கள். இதேபோன்று டெலோவிடம் சென்ற அதிகாரிகள், “புளொட் அமைப்பு ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டுவிட்டது“ என்று தெரிவித்திருந்தார்கள். இப்படி ஒவ்வொரு இயக்கத்திடமும் மாற்றிமாற்றி கூறி இந்தியா தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டது.

அக்காலத்தில் புலிகள் அமைப்பால் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவின் தயவை மட்டுமே முற்று முழுதாக நம்பியிருந்த இந்த இயங்கங்களோ, தமது மாற்று இயக்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தாம் இதனை ஏற்காது போனால், எங்கே இந்தியா தம்மை கைகழுவிவிட்டுவிடுமோ என்கின்ற பயத்தில், இந்தியாவின் திட்டத்திற்கு பலியாகின.

அக்கால கட்டத்தில், தமது கொள்கைகளையும், கட்டுப்பாடுகளையும் இழந்த நிலையில், பெயருக்கு இயக்கம் நடத்திக்கொண்டிருந்த இந்த இயக்கத் தலைமைகள், இந்தியாவின் வலையில் தெரிந்துகொண்டே விழுந்தன. அத்தோடு இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதைத் தவிர இந்த இயக்கங்களுக்கு அப்பொழுது வேறு மார்க்கங்கள் எதுவும் இருக்கவில்லை.

26.07.1987 அன்று, தமிழ் அரசினர் விருந்தினர் விடுதியில் தமிழ் இயக்கத் தலைவர்களுடன் இந்த ஒப்பந்தம் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் அழைக்கப்படவில்லை. இந்தியத் தரப்பில், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கே.பி.எஸ்.மேனனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீக்ஷித்தும் பங்கு பற்றினார்கள். ஒப்பந்தம் பற்றிய விளக்கத்தை தமிழ் இயக்கத் தலைவர்களுக்கு வழங்கிய அவர்கள், நயவஞ்சகமான ஒரு பொய்யை கூறினார்கள். புலிகள் அமைப்பு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாக மற்ற அமைப்புக்களிடம் தெரிவித்தார்கள்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதில் தமிழ் இயக்கங்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச தயக்கமும் இதனால் உடைக்கப்பட்டது. இறுதியில் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை அனைத்து தமிழ் இயக்கங்களும் எடுத்தார்கள்.

“புலிகளே இதனை ஏற்றுக்கொண்ட பின்னர் தாம் இதனை ஏற்காது அடம் பிடித்தால், தமது அமைப்புக்கள் ஓரங்கட்டப்பட்டுவிடும்“ ஏற்கனவே அழியும் தறுவாயில் நின்றுகொண்டிருக்கும் தமது இயக்கங்களை இந்தியாவும் கைவிட்டால் முற்றுமுழுதாகவே அழிந்துவிடுவோம்“ என்று நினைத்த இயக்கங்கள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுச் செயற்படும் தீர்மானத்தை எடுத்தன.

இதேவேளை, ஒப்பந்தத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறப்பட்ட விடுதலைப்புலிகளோ, உண்மையிலேயே ஒப்பந்தம் பற்றி எதுவும் அறிந்திராத நிலையில் புது டில்லியில் தங்கியிருந்தனர்.

“புதுடில்லியில் தங்கியிருந்தார்கள்“ – என்று கூறுவதைவிட, “புதுடில்லியில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள்“ என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

புதுடில்லியின் அடைத்துவைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது?

அங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்ன?

அதற்கு பிரபாகரனின் பதில் நடவடிக்கை எப்படியாக இருந்தது?

இது பற்றி தொடர்ந்துவரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்


புதுடில்லியில் சிறைவைக்கப்பட்ட புலித்தலைவர்கள்- (அவலங்களின் அத்தியாயங்கள்- 46) – நிராஜ் டேவிட்

  • December 14, 2012
இந்திய விமானப்படை ஹெலிக்கொப்டரில் 24.07.1987 அன்று புதுடில்லி அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள “அஷோகா” ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

“தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்” என்று கூறுவதை விட, சிறை வைக்கப்பட்டிருந்தார்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் “கறுப்புப் பூனைகள்” பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள்.அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் “கறுப்புப் பூனை” பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்புகொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

விடுதியின் உள்ளே இருந்த தொலையேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியோகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் நேர்மையில் புலிகளைச் சந்தேகம் கொள்ளவைத்த மற்றுமொரு சம்பவமாக இந்த “அஷோக்கா ஹோட்டல்” சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது. இந்தியா மீது புலிகளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்த ஒரு சம்பவமாக இந்த சிறைவைப்புச் சம்பவம் அமைந்திருந்தது.

இந்தியாவை நம்பி அதன் விருந்தினராக வந்திருந்த புலிகளின் தலைவரை கைதுசெய்து சிறைவைத்தது போன்று நடந்துகொண்ட இந்தியாவின் நம்பிக்கைத் துரோகச் செயலே, இந்தியா பற்றிய ஒரு எதிர் நிலைப்பாட்டை புலிகள் பிற்காலத்தில் எடுப்பதற்கும் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காண்பிக்கின்றனர்.

இந்தியாவிற்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும், இந்தியாவின் முகத்தில் கரிபூசவேண்டும் என்று ஒவ்வொரு ஈழத்தமிழனையும் நினைக்கவைத்த ஒரு சம்பவமாக இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடமுடியும்.

இந்தியாவின் நம்பிக்கைத் துரோகம்

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை அடைத்துவைத்து, பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்தத்தை அவர் மீது திணித்த இந்திய அரசின் அடாவடித்தனத்தையும், எதேச்சாதிகாரத்தையும், நம்பிக்கைத் துரோகத்தையும், எந்த ஈழத் தமிழனும் மன்னிக்கவோ, மறக்கவோமாட்டான் என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தியது.

24ம் திகதி முதல் “அஷோகா” ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார். இந்த நான்கு நாட்கள் இடைவெளியை, அவர் மற்றய இயக்கங்களைச் சமாளிப்பதற்கும், ஒப்பந்தத்திற்கான அவற்றின் ஒப்புதல்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக்கொண்டார்.

புலிகளின் தலைவர்கள் வெளித் தொடர்புகள் எதுவும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் “புலிகள் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள்” என்று இந்திய தரப்பினரால் வெளி உலகிற்கு கூறப்பட்ட பொய்யையும் மறுப்பதற்கு எவருமே இல்லாமல் போயிருந்தது.

சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களை பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.

புதுடில்லியிலுள்ள “அஷோக்கா ஹோட்டலில்” புலிகளின் தலைவர்களுக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றி சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருமே உடனே எதுவும் வெளியே தெரிவிக்கவில்லை. வெவ்வேறு மனநிலையில் இருந்த இந்த இரண்டு தரப்பினரும் தங்களுக்கிடையில் நடைபெற்ற அந்த சம்பாஷனைகளின் விபரங்களை வெளியிட விரும்பவும் இல்லை.

ஆனால், அன்றைய தினம் “அஷோக்கா ஹோட்டலில்” நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றிய செய்திகள் படிப்படியாக இந்திய ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. வெறும் கலந்துரையாடல்களுக்கு என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டிருந்த தமிழீழ தலைவர்கள் மீது இந்தியா எப்படியான அழுத்தங்களையெல்லாம் பிரயோகித்திருந்தது என்ற விபரங்கள் வெளியாகி, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் துரோகத்தை இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, முழு உலகிற்குமே வெளிப்படுத்தியிருந்தது.

ஜூலை மாதம் 28ம் திகதி இரவு “அஷோக்கா ஹோட்டலில்” புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களையும், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களையும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார். தமிழ் நாடு அமைச்சர் பண்டிருட்டி ராமச்சந்திரன் மற்றும் இந்திய மத்திய உளவுத்துறைத் தலைவர் எம்.கே.நாராயணன் போன்றோரும் இந்தியப் பிரதமருடன் அங்கு சென்றிருந்தார்கள்.

“சிங்கள அரசுகளை நம்பி பல தடவைகள் நாம் ஏமாந்துவிட்டோம். தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவது தற்கொலைக்கு ஒப்பானது” என்று பிரபாகரன் ராஜீவ் காந்தியிடம் உறுதியாகத் தொரிதித்திருந்தார்.

“ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். ஸ்ரீலங்கா அரசு ஒப்பந்தத்திற்கு மாறாக நடந்துகொள்ளாமல் இந்தியா பார்த்துக்கொள்ளும்” என்று கூறி பிரபாகரனின் மனதை மாற்றுவதற்கு ராஜீவ் காந்தி முயன்றார்.

ஆனாலும் பிரபாகரன் தனது பிடியை விட்டுக்கொடுக்க தயாரில்லாதவராகவே நிலைப்பாடு எடுத்தார். ராஜீவ் காந்தயின் எந்தவொரு நெருக்குதலுக்கும் மசியாதவராகவே பிரபாகரன் காணப்பட்டார். இதனால் மிகவும் கோபமடைந்த ராஜீவ்காந்தி, “உங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது” என்று மிரட்டியதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.

இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்கள் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களைச் சந்திக்கும் முன்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீட்ஷித் அவர்கள் பிரபாகரனைச் சந்தித்திருந்தர். புதுடில்லி “அஷோக்கா ஹோட்டலில்” கறுப்புப் புனைகளின் பாதுகாப்பில் அடைத்துவைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவரைச் சந்தித்த தீட்ஷித், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விபரங்களை விளக்கி, புலிகள் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினார்.

கவனமாகச் செவிமடுத்த புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள், ஒப்பந்தத்தில் உள்ள பல விடயங்களில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, புலிகளின் ஆயுத ஒப்படைப்பு மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு சம்பந்தமாக சர்வஜன வாக்கெடுப்பு போன்ற விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஓரேயடியாக மறுத்திருந்தார்.

“இது மிகவும் குழப்பம் அளிக்கும் ஒப்பந்தம்”, “எமக்கு ஏமாற்றத்தைத் தரும்படியான ஒப்பந்தம்” என்று அவர் தெரிவித்தார். இதனால் மிகவும் கோபமுற்ற தீட்ஷித், “நீங்கள் நான்கு தடவைகள் எங்களை முட்டாளாக்கி ஏமாற்றியுள்ளீர்கள்” என்று தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த புலிகளின் தலைவர், “அப்படியானால், நான்கு தடவைகள் நாங்கள் எங்கள் மக்களைக் காப்பாற்றி இருக்கின்றோம் என்று அர்த்தம்” என்று தெரிவித்தார்.

வைகோவின் கவலை

இந்தியத் தலைவருடனான சந்திப்பின் போதான அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் காணப்பட்ட மனநிலை பற்றி, அப்பொழுது தி.மு.கா.வின் “போர் வாள்” என்று அழைக்கப்பட்டவரும், தற்போதய ம.தி.மு.கா.வின் தலைவரும், ஈழ விடுதலை பற்றி பேசி “பொடா” சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றவருமான வை.கோபால்சாமி (வைக்கோ) பின்னர் ஒரு தடவை நினைவு கூர்ந்திருந்தார்.

அஷோக்கா ஹோட்டலில் பிரபாகரன் அவர்கள் மீதான கடும் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட பின்னர், திரு. பிரபாகரன் அவர்கள் வை.கோபால்சாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார். அப்போது திரு.பிரபாகரன் தன்னிடம் தெரிவித்ததை வை.கோபால்சாமி இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்.

“அவரது குரல் இப்பொழுதும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது. பிரபாகரன் என்னிடம் கூறினார்:

“நாங்கள் இந்திய அரசாங்கத்தினாலும், பிரதமர் ராஜீவ் காந்தியினாலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம். எனது முதுகில் குத்தப்பட்டுவிட்டது. என்னிடம் “சயநைட்” கழுத்தில் தொங்குகின்றது. தற்கொலை செய்துவிடலாமோ என்றுகூட நினைத்தேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான எனது சகோதர சகோதரிகளை நினைத்து என்னால் அந்த முடிவை எடுக்கமுடியவில்லை”. இவ்வாறு திரு.பிரபாகரன் தெரிவித்ததாக வைகோ குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அரசினதும், பிரதமர் ராஜீவ் காந்தியினதும் இந்த துரோக நடவடிக்கையே, பின்னாலில் இந்தியாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை புலிகள் எடுக்கக் காரணமாக அமைந்திருந்தன.

இந்தியத் தலைவருக்கு எதிரான “துன்பியல் சம்பவம்“ இடம் பெறவும், இந்திய அரசின் இந்த நம்பிக்கைத் துரோகச் செயலே பிரதான காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தொடரும்…


  ராஜீவ் காந்தி அனுப்பிய இரகசியக் கடிதமும்! இலங்கை-இந்திய ஒப்பந்தமும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 47)

 நிராஜ் டேவிட்

  • December 22, 2012
பேச்சுவார்த்தைக்கு என்று இந்திய அரசால் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்,  அங்கு “அஷோகா ஹோட்டலில்” அடைத்துவைக்கப்பட்டிருந்தது பற்றியும், இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட இருந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது பற்றியும் ஏற்கனவே விரிவாகப் பார்த்திருந்தோம்.

புதுடில்லியில், இந்தியாவின் விஷேட கொமாண்டோ பயிற்சி பெற்ற கறுப்புப் பூனை படைப் பிரிவு வீரர்களின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் பூட்டப்பட்ட அறைகளுக்குள் இந்திய பிரதமருக்கும், புலிகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்திருந்த சம்பாஷனைகள் பற்றி அதிகம் வெளியே தெரியச் சந்தர்ப்பம் இல்லை. ஆனால் அங்கு புலிகளின் தலைவர்கள் ஒருவகையில் சிறைக் கைதிகள் போன்று வைக்கப்பட்டார்கள் என்பதற்கான மற்றொரு ஆதாரம் 5 வருடங்களின் பின்னரே வெளியிடப்பட்டது.இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்கு 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி அனுப்பியிருந்த ஒரு இரகசியக் கடிதம் பின்னர் அம்பலமானபோதுதான் இந்த உண்மை வெளிவந்தது.

ராஜீவின் இரகசியக் கடிதம்:

இலங்கை-இந்திய ஒப்பந்தம் இரண்டு நாடுகளின் தலைவர்களாலும் 29.07.1987 அன்று கைச்சாத்திடப்பட்டபோது புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவின் தலை நகர் புதுடில்லியில் கறுப்புப் பூணைகளின் பாதுகாவலிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

30.07.1987 அன்று இந்தியப் படைகள் அமைதிகாக்கவென்று கூறி ஈழ மண்ணில் கால் பதித்தபோதும், ஈழத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் இந்தியாவிலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில்லேயே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகவும் அந்தரங்கமான அந்த இரகசியக் கடிதத்தை ஸ்ரீலங்காவின் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார்.

பிரபாகரன் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு, பிரபாகரன் விடயத்தில் எதிர்காலத்தில் இந்தியா எவ்வாறு நடந்துகொள்ள இருக்கின்றது போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக அந்த இரகசியக் கடிதம் அமைந்திருந்தது.

ளுழுருவுர் SOUTH ASIAN NETWORK ON CONFLICT RESEARCH (SANCOR) என்ற அமைப்பு 1993ம் ஆண்டு கொழும்பில் வெளியிட்ட மிகவும் பிரபல்யமான ஆய்வு நூலான “ஸ்ரீலங்காவில் இந்திய தலையீடும், அதில் இந்திய உளவு அமைப்பு வகித்த பங்கும்” (INDIAN INVATION IN SRI-LANKA –THE ROLE OF INDIA’S INTELLIGENCE) என்ற நூலில் வெளியிடப்பட்டிருந்த அந்த இரகசியக் கடிதத்தில் காணப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

1. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அமைய இருக்கும் இடைக்கால நிர்வாக சபைக்கு எப்படியான பணிகள் இருக்கும் என்பது பற்றி தீக்ஷித் மூலம் 01.08.1987 அன்று அறிவித்திருந்தேன். ஆயுதங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படக்கூடியதான தொழில் வசதிகள் பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தீக்ஷித் அறிவித்தபோது, அதற்குப் பிரபாகரன்:

அ) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆ) ஆயுதங்களை ஒப்படைக்கச் சம்மதம் தொவித்துள்ளார்.

இ) ஆயுதங்களை ஒப்படைக்கும்போது அவரும் யாழ்பாணத்தில் இருந்து ஆயுத ஒப்படைப்பை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்புகின்றார்.

2) ஒப்பந்தத்தை நல்லமுறையிலும், அமைதியான முறையிலும்  நடைமுறைப்படுத்தப்படுவதைக் கருத்தில்கொண்டு, பிரபாகரன் ஆகஸ்ட் 2ம் திகதி யாழ்பாணம் கொண்டுவரப்படுவார். இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட பின்வரும் அட்டவணைப்படி ஆயுதங்களை ஒப்படைக்க பிரபாகரன் சம்மதித்துள்ளார்.

02.08.1987-மாலை: பிரபாகரனின் யாழ் வருகை.

03.08.1987: இந்தியப் படைகள் யாழ் நகர் உட்பட குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நிலைகொள்ளும்.

03.07.1987- நன்பகல்: ஆகஸ்ட் 4ம் திகதி மாலை 6மணிக்கு முன்னர் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்துவிடுவார்கள் என்பதை முறைப்படி இந்தியத் தூதருக்கு அறிவிக்கும். இச் செய்தி பகிரங்கமாக வெளியிடப்படும்.

04.07.1987, 05.07.1987: புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள். இது பத்திரிகைகளிலும்,  தொலைக்காட்சி ஊடகங்களிலும் காண்பிக்கப்படும்.

05.07.1987: வடக்கு கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால சபை அமைக்கப்படும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவிக்கவேண்டும். இதுபற்றிய விடயங்கள் இந்திய அரசுடன் பின்னர் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

3) பிரபாகரன் கொடுத்த வாக்கையும் மீறி ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் புலிகளிடமுள்ள ஆயுதங்களை இந்தியப்படையினர் பலவந்தமாக களைவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

4) ஆகஸ்ட் 3ம் திகதி முதல் 5ம் திகதிவரை ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படவேண்டுமானால் மேலும் 48 மணி நேரம் நீடிக்கப்படலாம். போர் நிறுத்தம் இந்தியப்படைகளால் கண்காணிக்கப்படும்.

அந்தக் கடிதத்தில் காணப்பட்ட சில முக்கிய விடயங்கள் இவைதான்.

இந்தக் கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர், இந்தக் கடிதத்திலுள்ள விடயங்கள் பற்றி கருத்துத் தெரிவித்த ஆய்வாளர்கள், “இந்தியா புலிகள் விடயத்தில் கடும் போக்குடன் நடந்துகொண்டதும், புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது பிடியில் உள்ள ஒருவர் போன்று ராஜீவ் கருதிச் செயற்பட்டதும் இக்கடிதத்தின் மூலம் தெளிவாக வெளித்தெரிவதாகத் குறிப்பிட்டிருந்தார்கள்.

தமது அழைப்பை ஏற்று இந்தியா சென்றிருந்த ஒரு இனத்தின் தலைவரை தம்மிடம் உள்ள ஒரு கைதி போன்று இந்தியப் பிரதமர் கருதி செயற்பட்டதுதான், பின்னாட்களில் பல விபரீதங்கள் இடம்பெறக் காரணமாக அமைந்தது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காண்பித்துள்ளார்கள்.

“ரோ” வை இனி நம்பமாட்டேன்- பிரபாகரன்.

இதேபோன்று, புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவில் இருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் எப்படியான நிலையில் காணப்பட்டார் என்பது பற்றி, தென் இந்தியாவின் இராணுவ கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் பின்நாட்களில் நினைவு கூர்ந்திருந்தார்.

இலங்கைக்கான இந்தியப் படைகளின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் அப்பொழுது பொறுப்பாக இருந்த திபீந்தர் சிங்கை, இந்தியாவில் பிரபாகரன் சந்தித்திருந்தார். அஷோக்கா ஹோட்டலில் பிரபாகரன் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், அவர் இலங்கைக் மீண்டும் கொண்டுசெல்லப்பட முன்னதாக, சென்னையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் பிரபாகரனுடனான தனது சந்திப்புப் பற்றி IPKF in SriLanka என்ற தலைப்பில் 1992 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலில் இவ்வாறு நினைவுகூறுகின்றார்.

“என்றுடைய அணுபவத்தில் பிரபாகரனுடனான சந்திப்பு நான் மிகவும் விரும்பிய ஒரு விடயமாகவே இருந்தது. அப்பொழுது நான் தங்கியிருந்த சென்னையின் பிராந்திய இராணுவ தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினருக்கான பகுதியில் பிரபாகரனை அழைத்துவருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொழிபெயர்ப்பு செய்வதற்காக யோகரெட்ணம் யோகி மற்றும் வேறு இரண்டு போராளிகளுடன் பிரபாகரன் அங்கு வருகைதந்தார். அவர் எனது அறைக்குள் நுளைவதற்கு முன்னர் தனது காலில் இருந்த பாத அணிகளை அறையின் வாசலில் கழட்டிவிட்டே அறைக்குள் பிரவேசித்தார்.

நீளமான காற்சட்டையும், வெளியில் விடப்பட்ட மேற்சட்டையும் அணிந்திருந்த அவர் அதிகம் உயரமில்லாதவராகவும் அனால் மிகவும் திடகாத்திரமானவராகவும் உறுதியான உடற்கட்டை கொண்டவராகவும் காட்சி தந்தார். அவரது முகம் கடுமையானதாகவும், உறுதியானதாகவும் அதேவேளை சாந்தமான தோற்றத்தைக் கொண்டதாக காணப்பட்டது.

இக்காலகட்டத்தில் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு மாபெரும் “இரட்சகராக” கருதப்பட்ட பிரபாகரனைப் பற்றி வெளியாகியிருந்த பல சாகசக் கதைகளில் சில உண்மையானதாகவும், பல மிகைப்படுத்தப்பட்டதாகவே இருந்தன.தேநீர் அருந்தியபடி அவர் பேசியபோது, இந்தியாவின் வற்புறுத்தலின் பெயரிலேயே தாம் ஸ்ரீலங்கா அரசுடனான யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டி ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் யுத்தத்தினாலும், பொருளாதார தடைகளினாலும் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட பாரிய கஷ்டங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன்தான் இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான இந்த அழுத்தத்தை பிரயோகிக்கவேண்டி இருந்தது என்று நான் பிரபாகரணுக்கு விளக்கினேன். அதற்கு பிரபாகரன் பலமாக தலையை அசைத்து அதனை மறுத்தார்.

இப்பேச்சுவார்த்தைகளின் போது பிரபாகரன் உண்மையிலேயே புதுடில்லியில் வீட்டுக்காவலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்துவதற்கோ அல்லது மறுப்பதற்கோ நாங்கள் இரண்டு தரப்பினருமே நினைக்கவில்லை. இப்படியான பல சம்பாஷனைகளின் பின்னர், இறுதியாக கருத்து தெரிவித்த பிரபாகரன்,

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சையோ அல்லது “ரோ” புலனாய்வு பிரிவையோ தாம் இனி ஒரு போதும் நம்பப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். இவ்வாறு லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் பிரபாகரனுடனான தனது சந்திப்புப் பற்றி நினைவு கூர்ந்திருந்தார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம்- இந்தியாவின் நற்பெயருக்குத் தோண்டப்பட்ட படுகுழி

ஈழ மண்ணில் இருந்துகொண்டு ஸ்ரீலங்கா படைகளுடனான போருக்கு தனித்து முகம்கொடுத்துக் கொண்டிருந்த ஒரே விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள்,  ஈழமண்ணில் இருந்து இந்தியாவினால் அபகரித்துச் செல்லப்பட்ட நிலையில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஈழத்தமிழர்களின் ஒரே தலைவனாக அப்பொழுது இருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனை நயவஞ்சகமாக அழைத்துச்சென்று இந்தியாவில் தடுத்துவைத்துவிட்டு, ஈழத்தமிழர்களைக் காப்பாற்றவெனக்கூறி ஒரு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்தார்.

1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி காலை 11மணிக்கு இலங்கை கட்டுநாயக்கா விமாண நிலையத்தில் வந்திறங்கிய ராஜீவ் காந்தி, அன்று பிற்பகல் 3.37 மணிக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். எதிர்காலத்தில் இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு மிகப்பெரிய அவப்பெயரைப் பெற்றுக்கொடுக்க இருக்கின்ற ஒரு ஒப்பந்தத்தில் தான் கைச்சாத்திடுகின்றேன் என்றும் அப்பொழுது ராஜீவ்காந்தி நினைத்திருக்கமாட்டார்.

ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை, அவர்களின் அரசியல் இருப்பை குழிதோண்டிப் புதைத்துவிடக் கூடியதான இந்த ஒப்பந்தம், ஸ்ரீலங்காவினதும், இந்தியாவினதும் தேசிய மற்றும் கேந்திர நலன்களை மட்டுமே கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவின் கேந்திர நலனை மட்டுமல்ல தனது உயிரைக்கூட பறித்துவிடக்கூடியதாக இந்த ஒப்பந்தம் அமைந்துவிடும் என்பதை பிரதமர் ராஜீவ் காந்தி அப்பபொழுது எண்ணியிருக்கமாட்டார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவின் நற்பெயருக்கு தோண்டப்பட்ட ஒரு பாரிய படுகுழி என்பதையும் எவருமே அப்பொழுது உணர்ந்துகொள்ளவில்லை.



ந்திய நலன்களுக்காக விற்கப்பட்ட ஈழத்தமிழர்கள்(அவலங்களின் அத்தியாயங்கள்- 48)– நிராஜ் டேவிட்

  • December 28, 2012
 இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்னாவுடன் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, இலங்கையில், குறிப்பாக தலைநகர் கொழும்பிலும், இலங்கையின் தென் பகுதிகளிலும் பாரிய எதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.

ஸ்ரீலங்கா அரசுடனான பிரச்சினையில் நேரடியாச் சம்பந்தப்பட்டிருந்த ஈழத்தமிழர்களையும், தமிழ் தலைவர்களையும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைத்துவிட்டு, இந்தியப் பிரதமரினால் எதேச்சாதிகாரத்துடன் செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் உண்மையிலேயே ஈழத்தமிழருக்கு சார்பான எந்தவொரு விடயமும் அடங்கியிருக்கவில்லை.இப்படி இருந்தும் சிங்கள மக்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததுதான் வேடிக்கை. ஈழத்தமிழருக்கு சார்பாக இந்த நாட்டில் எதுவுமே நடந்துவிடக்கூடாது என்பதில் திண்ணமாக இருந்த சிங்களப் பேரினவாதிகளும், பௌத்த அடிப்படைவாதிகளும் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கத் தலைப்பட்டார்கள்.

இலங்கையின் தென் பகுதியில் பாரிய கலவரம் வெடித்தது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இராணுவ மரியாதை அணிவகுப்பின்போது, ~விஜயமுனி விஜித்த றோகன டீ சில்வா| என்ற ஸ்ரீலங்காவின் கடற்படை வீரரால்; தாக்கப்பட்டார்.

சிங்கள மக்களாலும், ஈழத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காத இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம், உண்மையிலேயே இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் என்பனவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை வடிவமைத்தவரும், இந்த ஒப்பந்தம் பின்நாட்களில் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதற்கு முன் நின்று உழைத்தவருமான, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜே.என்.தீட்ஷித் அவர்கள், இந்த ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் பற்றி பின்னொரு தடவை தெளிவுபடுத்தியிருந்தார்.

ஈழ மண்ணில் இந்தியப் படைகள் புலிகளுடன் யுத்தம் புரிந்து பலத்த அடி வாங்கிக்கொண்டு தடுமாறியபோது, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள ஐக்கிய சேவைகள் மன்றத்தில் (United Service Institute)ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

10.03.1989 இல் நடைபெற்ற இந்த மாநாட்டில், ~இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினரது குறிக்கோளும், நடவடிக்கைகளும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்த ஜே.என்.தீட்ஷித் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பட்டன.  இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்திருந்த உற்காரணிகள் எவை, அமைதிப் படை இலங்கையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன? போன்றன பற்றி தனது உரையில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

தீட்ஷித் தனது உரையில் தெரிவித்திருந்த கருத்துக்களில் சில:

எங்களுடைய நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடன், எங்களுக்கு நாங்களே செய்து கொண்டிருந்த வித்தியாசமான சோதனை நடவடிக்கை ஒன்றின் வெற்றியை நிச்சயப்படுத்திக் கொள்ளவே நாங்கள் இலங்கைக்கு செல்லவேண்டி இருந்தது.

1972ம் ஆண்டு முதல் இலங்கையில் அதிகரித்து வந்த தமிழ் தீவிரவாதத்தை எதிர்கொள்ளுவதற்காக என்று கூறி ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வந்த சில நடவடிக்கைகளின் விழைவாகவே இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிடவேண்டி ஏற்பட்டது.

தனது சொந்தப் பலத்தையும், உள்நாட்டில் அவர்களிடம் இருந்த வளங்களையும் மட்டும் கொண்டு தமிழ் தீவிரவாதத்தை அடக்கிவிட முடியாது என்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் உணர்ந்துகொண்டது.

அதேவேளை இந்தியாவில் வாழும் 50 மில்லியன் தமிழ் மக்களின் நிலைப்பாடு பற்றிய சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு, சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஸ்ரீலங்கா அரசு, இந்தியாவிடம் உதவி கோரவும் தயங்கியது. இதனால் தமிழ் தீவிரவாதத்தை அடக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசானது வேறு சில சக்திகளிடம் இருந்து உதவிகளைபெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

1978ம் ஆண்டு தொடக்கம் 1986ம் ஆண்டுவரை இலங்கை இராணுவம் தனது படைகளின் எண்ணிக்கையை 12,000 இலிருந்து 35,000 இற்கு அதிகரித்துக் கொண்டது. அமெரிக்க மற்றும் பிரித்தானிய யுத்தக் கப்பல்களை இலங்கையிலுள்ள கொழும்பு, திருகோணமலை, காலி துறைமுகங்களுக்கு கொண்டு வருவதற்கான சில இரகசிய ஒப்பந்தங்களை அந்த நாடுகளுடன் ஸ்ரீலங்கா அரசு செய்துகொண்டது.

இங்கிலாந்தின் இரகசிய தகவல் துறை அமைப்பொன்றை ஸ்ரீலங்கா இராணுவம் தனது புலனாய்வு நடவடிக்கைகளுக்கு உதவியாக வரைவழைத்திருந்தது. அதேபோன்று, சின்பெட் (Shin Bet), மொஸாட் (Mossad)போன்ற கூலிப் படைகளின் உதவியையும் ஸ்ரீலங்கா இராணுவம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

தனது கடற்படைகளையும், ஊர்காவல் படைகளையும் பயிற்றுவிக்கவென்று கூறி பாகிஸ்தானிடம் இருந்தும் உதவிகளைப் பெற்று வந்தது. வொய்ஸ் ஒப் அமெரிக்கா (Voice of America) தனது ஒலிபரப்பை ஸ்ரீலங்கா மண்ணில் மேற்கொள்ளுவதற்கும் ஸ்ரீலங்கா அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதன் மூலம் சக்திவாய்ந்த, அதி நவீன தொலைத்தொடர்புக் கருவிகளை இலங்கையில் நிறுவி, இந்தியாவின் இராணுவ மற்றும் அரசியல் தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளை அமெரிக்கா ஒட்டுக்கேட்கக் கூடியதான அபாயம் எமக்கு அங்கு ஏற்பட்டிருந்தது.

அத்தோடு, இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த பல நாடுகளிடம் இருந்தும் ஸ்ரீலங்கா போர் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருந்தது.

இதுபோன்ற ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவுமே நாங்கள் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ளவேண்டி ஏற்பட்டது.

இந்தியாவில் இருந்து 15,000 மைல்களுக்கு அப்பால் உள்ள பிஜி தீவு போன்று இலங்கையும் இருந்துவிட்டால் இந்தியாவின் தலையீடு இலங்கையில் இல்லாது இருந்திருக்கும். ஆனால் இந்தியக் கரையில் இருந்து 18 மைல்கள் தொலைவில் மட்டுமே அமைந்துள்ள இலங்கை நாட்டில் நடப்பவற்றைப் பார்த்து நாம் கைகட்டிக்கொண்டு இருந்துவிடமுடியாது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறைமைக்கும் நேரடியாகச் சவால் விட்டுக்கொண்டிருக்கும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விடயத்தில் நாங்கள் அக்கறை செலுத்தினால் மட்டும் போதாது. எமது நாட்டின் பாதுகாப்பிற்கு மறைமுகமாக அச்சுறுத்தல்களை விடுத்துவரும் விடயங்கள் பற்றியும் நாங்கள் அக்கறை காண்பித்தேயாகவேண்டி உள்ளது.

1498ம் ஆண்டு முதல் இந்தியாவின் தென்கரையில் இருந்து இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டு வந்த அச்சுறுத்தல்களையும் நாம் இலகுவில் மறந்துவிடக்கூடாது.

விஸ்தரிக்கப்பட்ட எமது கடற்படை, நவீனமயப்படுத்தப்பட்ட எமது விமானப்படை, நுணுக்கங்கள் பல சேர்த்துக்கொள்ளப்பட்ட எமது தொலைத்தொடர்புகள் என்பனவற்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, எமது நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் நாம் திருப்திப்பட்டுக்கொண்டு இருந்துவிட முடியாது.

எமக்கெதிரான ஆபத்துக்கள் ஒருவேளை நேரடியான இராணுவத் தலையீடாக அல்லாமல், வேறு ரூபத்திலும் வந்துவிடக்கூடிய சாத்தியமும் உள்ளது. எமது அயல் நாடுகளில் ஏற்படுகின்ற அரசியல் நிர்ப்பந்தங்களும், சமுக மாற்றங்களும் கூட, எமது நாட்டின் கொள்கைகளில் பாரிய பாதிப்புக்களை ஏப்படுத்தக்கூடியதான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

இந்தியா இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு இவைகள்தான பிரதான காரணம்.

இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

ராஜீவின் நிலைப்பாடு:

இது இவ்வாறு இருக்க, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் மாற்றுக் கருத்து கொண்டவராகவே இருந்தார். இதனை ராஜீவ் காந்தியே தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பின்னொரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.

றொகான் குணரட்ன என்ற பிரபல சிங்கள எழுத்தாளருக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றின் போதே ஜே.ஆர். இதனைத் தெரிவித்திருந்தார்.

ராஜீவ் காந்தி தன்னிடம் பேசும் போது,  ‘I don’t want these fellows to have the northeast merged. I will help you’ என்று தெரிவித்ததாகவும், தனக்கு உதவியாக அவர் இந்தியப்படைகளை இலங்கைக்கு அனுப்பச் சம்மதித்ததாகவும் ஜே.ஆர். அந்தச் செவ்வியில் நினைவு கூர்ந்திருந்தார்.

மறந்து விடப்பட்ட ஈழத்தமிழர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், தெற்காசியப் பிராந்தியத்தில் தனது கேந்திர பாதுகாப்பையும், தனது பிராந்திய வல்லாதிக்கத்தையும் விஸ்தரிக்கும் நோக்கத்துடன்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.

புலிகளுக்கோ, ஈழத்தமிழருக்கோ ஒரு விடிவைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அதற்கு சிறிதும் இருந்தது கிடையாது. உண்மையிலேயே இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈழத்தமிழர், இந்தியாவின் நலனுக்காக விற்கப்பட்டிருந்தார்கள் என்றுதான் கூறவேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம், அவர்களது தியாகங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் போன்றவற்றின் பெறுபேறுகளை அடகு வைத்து, தனது நலனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இந்தியா மேற்கொண்டிருந்த ஒரு நகர்வே இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாகவோ, அல்லது தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவோ இல்லை என்று, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக இருந்த விடுதலைப் புலிகள் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள்.

ஈழ மண்ணில் இந்தியப் படைகள்:

ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத அந்த ஒப்பந்தம் இவர்கள் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, ஈழத்தமிழர்களைப் பாதிக்கும்படியான மற்றொரு நகர்வையும் இந்தியா மேற்கொண்டது.

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியது.

30.07.1987ம் ஆண்டு இந்தியப் படைகள், இந்திய அமைதி காக்கும் படைகள் (Indian Peace Keeping Force)  என்ற பெயரில் ஈழ மண்ணில் கால்பதித்தன.

ஒரு மாபெரும் கெரிலாப் போரை அங்கு எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதை எதிர்பார்க்காத சுமார் ஒரு இலட்சம் இந்திய ஜவான்கள் உற்சாகத்துடன் ஈழமண்ணில் வந்திறங்கினார்கள்.

தங்களது வருகை ஆயிரக்கணக்காண ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பறிக்கப் போகின்றது என்றோ, கோடிக்கணக்கான அவர்களின் சொத்துக்களை நாசமாக்கப் போகின்றது என்றோ அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

இவர்களில் 3000 ற்கும் அதிகமான ஜவான்கள் மீண்டும் உயிரோடு தமது நாட்டிற்கு திரும்பிப் போகமாட்டார்கள் என்பதையும், பாவம் அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

தொடரும்…


ஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49)

நிராஜ் டேவிட

  • January 4, 2013
இந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து வருகின்றது.

ஸ்ரீலங்காப் படைகள் 1987ம் ஆண்டில் மேற்கொண்டிருந்த “ஒப்பரரேசன் லிபரேசன்” நடவடிக்கையினால் யாழ்ப்பாணம் சிங்களப் படைகளிடம் வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காகவே இந்தியா தனது படைகளை யாழ்பாணத்திற்கு அனுப்பிவைத்ததாக சிலர் கூறுகின்றார்கள். ஸ்ரீலங்காப் படைகளிடம் இருந்து யாழ்ப்பாணத்தையும், தமிழர் வாழும் மற்றப்பகுதிகளையும் விடுவித்து தமிழ் அமைப்புக்களிடம் வழங்குவதற்கே இந்தியப்படைகள் இலங்கை வந்ததாக வேறு சிலர் கருதிக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கைப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென்று இலங்கைக்குள் நுழைந்திருந்த இஸ்ரேலிய “மொஸாட்”  மற்றும் பாக்கிஸ்தான் இராணுவத்தினரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்காவின் கைகளில் விழுந்துவிடாமல் தடுக்கவுமே இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.

இலங்கையின் தென்பகுதியில் எழுந்த புரட்சியை அடக்குவதற்கு இந்தியப் படைகளின் உதவியை ஸ்ரீலங்காவின் ஜணாதிபதி ஜே.ஆர். கோரி இருந்ததன் காரணமாகவே இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பபட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேற்கூறப்படுகின்ற கருத்துக்களில் காணப்படுகின்ற உண்மைத்தன்மை, அல்லது இவை பற்றி எழுப்பப்படுகின்ற சந்தேகங்கள் போன்றன எல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தியப் படைகளின் இலங்கை வருகைக்கான காரணங்களில், “இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அழுல்படுத்துவது” என்பதும் பிரதானமாக இருந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாக அமைந்திருந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதுடன், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த புலிகளைப் பலவீனப்படுத்துவதும் இந்தியப் படைகளது இலங்கை வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு முக்கியமான அம்சமாக இருந்த “புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவது” என்கின்ற சரத்தை அழுல்படுத்தவே இந்தியப்படைகள் அவசரஅவசரமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில், தமிழர்களின் நலன்களை சிறிதும் கருத்திலெடுக்காது, அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடியதான ஒரு ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா அரசுடன் இந்தியா கைச்சாத்திட்டுவிட்டு, “தமிழர்களைக் காப்பாற்ற” தனது படைகளை அது அனுப்பிவைத்ததாக கூறுவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

அதேபோன்று, இலங்கையின் தென் பகுதியில் ஏற்பட்டிருந்த சிங்கள இளைஞர்களின் புரட்சியை அடக்குவதற்குத்தான் இந்தியப்படைகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டன என்று அப்பொழுது ஜே.ஆர் தெரிவித்திருந்தது உண்மையானால், இந்தியப்படைகள் இலங்கையின் தென்பகுதிக்குத்தான் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். எதற்காக தமிழ் பிரதேசங்களுக்கு அவை வரவழைக்கப்பட்டிருந்தன என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது.

“ஒப்பந்தத்தை அமுல்படுத்துகின்றோம் பேர்வழிகள்” என்று கூறிக்கொண்டு, புலிகளை நிராயுதயாணிகள் ஆக்கவே இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது. பின்னர் புலிகள் மீது இந்தியப்படைகள் தொடுத்திருந்த யுத்தம் இதனை உறுதிப்படுத்தியது.

இவற்றை விட, இலங்கை வந்த இந்தியப்படைகளின் சில உயர் அதிகாரிகளும், இந்தியப் படைகளின் வருகையுடன் சம்பந்தப்பட்ட சில இந்திய இராஜதந்திரிகளும், பின்நாட்களில் வெளியிட்ட சில கருத்துக்களும், இவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன.

இலங்கைக்கு உதவவே இந்தியப் படைகள்

இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொறுப்பாக இருந்த லேப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் அவர்கள் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியின்போது, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கம் இந்தியப்படைகளுக்கு என்றுமே இருந்தது கிடையாது என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.

“ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இந்தியப்படைகளின் பலத்தைப் பிரயோகிக்கும் நோக்கம் எங்களுக்கு என்றுமே இருந்ததில்லை. அத்தோடு இலங்கையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோகூட கைப்பற்றும் எண்ணம் இந்தியப்படைகளுக்கு இருந்தது கிடையாது. அப்படியான ஒரு செயலை இந்தயாவில் உள்ள எவருமே விரும்பியிருக்கமாட்டார்கள் என்பதும் நிச்சயம்” என்று அந்த இந்திய இராணுவ உயரதிகாரி அண்மையில் வழங்கியிருந்த அந்தச் செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அப்பொழுது கடமையாற்றியவரும், புலிகள் மீது இந்தியப் படைகளை ஏவிவிடுவதில் முதன்மையானவராக புலிகளாலும், இந்திய இராணுவ அதிகாரிகளாலும் குற்றம்சாட்டப்பட்டவருமான ஜே.என்.தீட்ஷித் அவர்கள் பின்நாட்களில் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், “ஸ்ரீலங்காவின் ஜணாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அழைப்பின் பெயரிலேயே இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக” குறிப்பிட்டிருந்தார்.

ஜோஷி ஜோசப் என்ற பிரபல இந்தியப் பத்திரிகையாளருக்கு அவர்  வழங்கியிருந்த அந்தச் செவ்வியில், “இலங்கைக்கு எமது படைகளை அனுப்புவதற்கு உண்மையிலேயே நாங்கள் விரும்பவில்லை. இலங்கைக்குப் படைகளை அனுப்புவது என்பது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு அம்சமும் அல்ல.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தினமான 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி காலைவரை இந்தியப்படைகளை இலங்கைக்கு அணுப்பும் எண்ணம் எமக்கு இருக்கவேயில்லை. இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்புவது இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த மிகவும் அவசியம் என்று ஜே.ஆர். தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால்தான், படைகளை அனுப்ப ராஜீவ் காந்தி சம்மதம் தெரிவித்தார். இதற்கான எழுத்து மூல கோரிக்கையையும் ஜே.ஆர்.எமக்கு அனுப்பிவைத்தார்|| என்று தீட்ஷித் தெரிவித்தார்.

மேற்கூறப்பட்ட இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டவர்கள் வேறு யாரும் அல்ல. இந்தியப் படைகள் இலங்கையில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளிலும் பிரதான பங்குவகித்த அதி உயர் அதிகாரிகளே இவர்கள்.

இவர்களின் கூற்றுக்களில் இருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, ஸ்ரீலங்கா அரசு மீதோ அல்லது ஸ்ரீலங்காப் படைகள் மீதோ நிர்ப்பந்தம் செலுத்தும் நோக்கத்துடன் இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை – என்ற விடயம் மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.

அப்படியானால் எதற்காக இந்தியப்படைகள் ஈழமண்ணில் வந்திறங்கின?

இதற்கான பதிலையும் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதி உயர் அதிகாரிகளே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். இந்தியப் படைகள் ஈழ மண்ணில் கால்பதிக்கும் முன்னதாகவே, அங்கு புலிகளை இராணுவ ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், திட்டமும் அவர்களிடம் இருந்தன என்பதை அந்த இந்திய அதிகாரிகளே பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

பிரபாகரனை கைப்பற்றிவிடுவோம்.

இலங்கையில் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளில் ஆரம்பம் முதல் பங்குபற்றிய கேணல் ஜோன் டெய்லர் என்ற முதன்மை நிலை அதிகாரி பின்நாட்களில் இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்: IPKF இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை முழுக்க முழுக்க இந்திய புலனாய்வு அமைப்பான “றோ” இனது திட்டமிடலிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கையில் அமைதிப் படையின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி இராணுவ உயரதிகாரிகளுடன் ராஜீவ் காந்தி திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, புலிகளின் பலம் பற்றி அவர் கேள்வியெழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த “றோ” உயரதிகாரி ஒருவர், “நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் பிரபாகரனை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்” என்று அடித்துக் கூறியிருந்தார், என்று கேணல் ஜோன் டெய்லர் நினைவுகூர்ந்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில், இந்தியப் படைகள் இலங்கையில் புலிகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்று ஆராய்ந்ததாகவும், அப்பொழுது இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் “புலிகள் 1977ம் ஆண்டு முதல் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்துமே எங்களுக்கு அத்துபடி. அவர்களில் பலர் எங்கள் சொல்லை மீறமாட்டார்கள்” என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பற்றி ஜே.என்.தீட்ஷித் எழுதி வெளியிட்டிருந்த Assignment Colombo என்ற புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் தனது புத்தகத்தில், “ஒருவேளை இந்திய இராணுவம் இலங்கையில் புலிகளுடன் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று இந்தியத் ராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி முன்நிலையிலேயே நான் இதனைக், கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, “ஒரு இராவிற்குள் நாங்கள் அவர்கள் கதையை  முடித்துவிடுவோம்” என்று தெரிவித்தார். இதே கேள்வியை இந்தியப் புலனாய்வு பிரிவின் உயரதிகாரி ஆணந்வர்மாவிடம் ராஜீவ் காந்தி கேட்டபோது, அதற்கு அவர், “அவர்கள் எங்களுடைய பையன்கள். அவர்கள் எங்களுடன் உடன்படுவதற்கு மாறாக எதுவும் செய்யமாட்டார்கள்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக தீட்ஷித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தவறான கருத்து

“இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்தபோது, இங்கு புலிகளை எதிர்கொள்ளும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. புலிகளே அவர்களை சண்டைக்கு வலிந்திழுத்துக் கொண்டார்கள்.” – என்பது போன்ற ஒரு தவறான கருத்து தற்பொழுதும் இங்குள்ள சிலரிடம் காணப்படவே செய்கின்றது.

ஆனால், உண்மையிலேயே இந்திய இராணுவம் ஈழமண்ணில் கால் பதித்தபோது புலிகளை எதிர்கொள்ளும் நோக்கம் அதற்கு இருந்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. புலிகளை நீராயுதபாணிகளாக்கி, அவர்களது கட்டுக்கோப்புக்களை சிதறடித்து, முடியுமானால் அந்த இயக்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவே இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அல்லது புலிகளைப் பலவீனப்படுத்திவிட்டு தனது செல்லப்பிள்ளைகளான EPRLF, ENDLF, TELO போன்ற அமைப்புக்களை முதன்மைப்படுத்தி, வடக்குக் கிழக்கின் மீது ஆதிக்கும் செலுத்தும் திட்டமே இந்தியாவிற்கு இருந்தது.

ஆனால், அக்காலத்தில் புலிகள் பெற்றிருந்த பலம், அவர்கள் புரிந்திருந்த தியாகங்கள, அவர்கள் தமது குறிக்கோளில் கொண்டிருந்த உறுதி என்பன, இந்தியாவின் தனது இந்த நோக்கத்தை அடைவதற்கு பலத்த சவாலாக இருந்தன.

இவற்றை எதிர்கொள்ள, புலிகள் மீது போர் தொடுக்க இந்தியா எப்படியான திட்டங்களை தீட்டியிருந்தது என்றும் ஒரு மாபெரும் ஜனநாயக நாடு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இந்தியா தனது குறிக்கோளை அடைவதற்கு எப்படியான இழி செயல்களையெல்லாம் செய்தது என்றும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்றும், தொடர்நதுவரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்

இந்திய-விடுதலைப் புலிகள் யுத்தத்தின் பக்கங்கள் பற்றியும்,  ஈழத் தமிழரைக் குறிவைத்து இந்தியப்படைகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றியும், வன்னிக்காடுகளில் புலிகள் சந்தித்த சவால்கள் பற்றியும், இவைகள் அனைத்திலும் அகப்பட்டு ஈழத் தமிழர் சந்தித்த அவலங்கள் பற்றியும் தொடர்ந்து நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.


 இந்தியப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த கசப்பான முதல் அனுபவம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 50) – நிராஜ் டேவிட்

  • January 12, 20
 இந்தியாவில் உள்ள செகுந்தலாபாத் இராணுவத் தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையின் ஒரு தொகுதி, 30.07.1987 அன்று இலங்கையில் வந்திறங்கியது. இந்திய இராணுவத்தின் சில முக்கிய படைப்பிரிவுகள் இந்த முதலாவது தரை இறக்கத்தின் மூலம் இலங்கையில் தரையிறக்கப்பட்டன.

இந்தியாவின் 24வது காலாட் படைப்பிரிவு,340வது காலாட் படைப் பிரிவு,

பிரந்திய ரிசேவ் படைப்பிரிவினர்,

10வது பரா மிலிடரி கோமாண்டோ படைப்பிரிவினர்,

65வது கவச வாகனப் பிரிவினர்,

91வது காலட் படைப்பிரிவு,

5வது மெட்ராஸ் ரெஜிமென்ட்,

8வது மராத்திய ரெஜிமென்ட்,

போன்ற படைப்பிரிவுகள் முதற் கட்டமாக தரையிறக்கப்பட்டன.

இலங்கையில் தரையிறக்கப்பட்ட இந்தியப் படைகளுக்கு மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், பொறுப்பாக வந்திருந்தார். அவருக்கு துணையாக, பிரிகேடியர் குல்வந் சிங் மற்றும் பிரிகேடியர் பெர்ணான்டஸ் போன்றோரும் வந்திருந்தார்கள்.

பலப்பரிட்சை:

இந்தியப் படைகளின் இந்த முதலாவது தரை இறக்கத்திற்கு, AN-12 மற்றும் AN-32 வகை அட்டனோவ் ரக விமானங்கள் 24 பயன்படுத்தப்பட்டன. விமானங்கள் மூலமான தரை இறக்கம் பலாலி விமானத் தளத்திலும், கப்பல்கள் மூலமான தரையிறக்கம் காங்கேசன்துறை துறைமுகத்திலும் இடம்பெற்றன.

T-72 பிரதான யுத்தத் தாங்கிகள், கவச வாகனங்கள்( Infantry Combat Vehicles) போன்ற கனரக யுத்த தளபாடங்களும் பெருமளவில் தரையிறக்கப்பட்டன.

இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு பின்னர் இந்தியப் படைகள் மேற்கொண்ட மிகப் பெரிய தரை இறக்கம் என்று போரியல் ஆய்வாளர்களால் வர்ணிக்கப்பட்ட இந்த தரை இறக்கத்தை, இந்தியா தனது இராணுவத்தின் பலத்தை பரிசீலித்துப் பார்க்கும் ஒரு நடவடிக்கையாகவும் திட்டமிட்டிருந்தது. வான் மூலமாகவும், கடல் வழியாகவும் இந்தியா தனது படைகளை எத்தனை வேகமாக தரை இறக்க முடிகின்றது என்பதை இந்தியா, இந்த தரை இறக்கத்தில் பரீட்சித்துப் பார்த்திருந்ததாக, இந்தியப்படைகளின் உயரதிகாரிகள் பின்நாட்களில் தெரிவித்திருந்தார்கள்.

இப்படியான பாரிய ஏற்பாடுகளுடன் இந்திய இராணுவம், ’’இந்திய அமைதி காக்கும் படைகள்’’ (Indian Peace Keeping Force) என்ற பெயரில் இலங்கைக்கு வந்திறங்கின.

தமிழ் மக்களின் வரவேற்பு

இந்தியப்படைகள் யாழ்பாணத்தில் வந்திறங்கிய செய்தி காட்டுத் தீ போல் தமிழ் மக்களிடையே பரவியது. அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள். தமது பிறவிப் பயனை அடைந்துவிட்டது போன்ற ஒரு சந்தோஷத்தில் அவர்கள் திளைத்திருந்தார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு அது ஒரு பொன் நாளாகவே இருந்தது. தம்மை மீட்க இந்தியப்படைகள் வந்திறங்கிவிட்டார்கள். இனி எதற்கும் கவலைப்படத்தேவையில்லை. ஸ்ரீலங்கா இராணுவம் பற்றியோ, அல்லது ஸ்ரீலங்கா விமானங்களின் குண்டுவீச்சுக்களுக்கோ, இனிமேல் பயப்படத்தேவையில்லை என்று குதூகலித்தார்கள். விரைவில் தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்றே தமிழ் மக்கள் அனைவரும் நம்பினார்கள்.

தமிழீழத்தைப் பெற்றுத்தருவதற்கே இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்திருந்ததாக தமிழ் மக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில், காலாகாலமாக அவர்களிடம் இருந்துவந்த எதிர்பார்ப்புக்களின் வெளிப்பாடாகவே அவர்களது அந்த நம்பிக்கை இருந்தது.

ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தமிழ் விடுதலை இயக்கங்கள் சுயமாக ஒரு தனி ஈழத்தை அமைக்கும் என்று அவர்கள் ஒருபோதும் நம்பியது கிடையாது. அல்பட் துரையப்பா, பஸ்தியாம்பிள்ளை கொலைகளில் தொடங்கிய இயக்கங்களில் ’’களையெடுப்பு’’ நடவடிக்கைகள், ஈழத்தில் பரவலாக இடம்பெற்று வந்த ’’வங்கிப் பணமீட்பு நடவடிக்கைகள்’’, ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பதுங்கியிருந்து தாக்குதல் நடவடிக்கைகள் போன்று, ஈழ இயக்கங்கள் மேற்கொண்டு வந்த அனைத்து நடவடிக்கைகளையும்; ஈழத்தமிழர்கள் பாராட்டி, ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்றாலும், இந்த இயக்கங்கள் தனி நாடொன்றைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதில் ஆரம்பம் முதலே எவரும்; நம்பிக்கை கொள்ளவில்லை.

யாழ்பாணத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கிவைப்பதில் ஈழ இயக்கங்கள் வெற்றி கண்டிருந்த காலகட்டத்தலும் கூட, ஈழ இயக்கங்கள் தனித்து நின்று தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுக்கும் என்று எவருமே அப்பொழுது நினைத்துப் பார்க்கவும் இல்லை.

கடைசிக் கட்டத்தில் இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி, தனி ஈழத்தை ஸ்தாபிக்க உதவும் என்றே ஒவ்வொரு ஈழத் தமிழனும் நினைத்திருந்தான். எதிர்பார்த்திருந்தான்.

ஈழ விடுதலைக்காகப் போராடிய பெரும்பாலான விடுதலை இயக்கங்கள் கூட, இதே வகையிலான கருத்துக்களைத்தான் வெளியிட்டு வந்தன. இந்தியா பங்காளதேஷில் செய்தது போன்று, இலங்கைக்கும் தனது படைகளை அனுப்பி ஈழத்தை மீட்டுத்தரும் என்ற நம்பிக்கையையே, விடுதலை இயக்கங்களும்; தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து வந்தன.

இந்த அடிப்படையில், இந்தியப் படைகள் ஈழமண்ணில் வந்திறங்கியபோது, ஈழத்தமிழர்களை மீட்கவே இந்தியப்படைகள் வந்துள்ளதாக தமிழ் மக்கள் நம்பினார்கள். ஆரவாரத்துடன் இந்தியப் படைகளை வரவேற்கவும் செய்தார்கள். வந்திறங்கிய இந்திய ஜவான்கள் திக்குமுக்காடும் அளவிற்கு தமிழ் மக்களின் வரவேற்பு யாழ்ப்பாணத்தில் இருந்தது.

கசப்பான முதல் சந்திப்பு

யாழ்பாணம் வந்திறங்கிய இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கின் முதல் பணி, புலிகளுடன் ஒரு சுமுகமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதாகவே இருந்தது.

புலிகளுடன் நட்புடன் கூடிய ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அந்தத் தொடர்பின் மூலம் இந்தியப்படைகளின் பணிகளைச் சுமுகமாக்கிக் கொள்ளவே அந்த உயரதிகாரி விரும்பினார்.

இந்த நோக்கத்துடன் அவர் புலிகளின் உள்ளூர் தலைவர்களைச் சந்திக்கப் புறப்பட்டார். புலிகளின் யாழ் நகர பொறுப்பாளராக இருந்த குமரப்பா என்பவர், மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கை, புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவிடம் அழைத்துச் சென்றார்.

புலிகளின் வாகனத்தில், குமரப்பாவுடன்; மேஜர் ஜெனரல் ஹரிகிரத்சிங்கும், இந்தியப்படைகளின் பிரிகேட் கொமாண்டர் பெர்ணாண்டஸும் புறப்பட்டார்கள்.

யாழ் நகரின் மத்தில் சென்ற அவர்களது வாகனம், ஒரு வீட்டின் முன்பதாக நிறுத்தப்பட்டபோது, அந்த வீட்டின் வாசலில் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா நின்றுகொண்டிருந்தார்.

வாகனத்தில் இருந்து இறங்கிய இந்தியப்படை உயரதிகாரி மாத்தையாவுடன் பேச முற்பட்டபோது, “ஜெனரல், நான் உங்களுடன் எதுவும் பேசத் தயாரில்லை… ’’ என்று தெரிவித்த மாத்தையா, அவர்களை அந்த வீட்டினுள் செல்லவும் அனுமதிக்கவில்லை.

தொடரும்


புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பரப்பட்ட வதந்திகள்!- (அவலங்களின் அத்தியாயங்கள் (51) – நிராஜ் டேவிட்

  • by admin
  • January 25, 2013
Frame-063-150x150.jpgஇலங்கையில் வந்திறங்கிய முதலாவது இந்தியப்படைத் தொகுதிக்கு தலைமை தாங்கி வந்த இந்தியப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவைச் சந்திக்கச் சென்றபோது, மாத்தையா அந்த இந்திய உயரதிகாரியுடன் பேசத் தயாராக இருக்கவில்லை.

எக்காரணம் கொண்டும் இந்தியப்படை அதிகாரிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடாத்த மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார். மாத்தையாவின் இந்தச் செய்கை இந்திய அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருவதாக அமைந்திருந்தது. இப்படியான ஒரு கட்டத்தை அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவும் இல்லை.

நாங்கள் உங்களுக்கு சமாதானத்தின் செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றோம். இந்தியாவின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவே இங்கு வந்துள்ளோம்|| என்று அந்த இந்திய உயரதிகாரி மாத்தையாவிடம் தெரிவித்தார்.

அதற்கு மாத்தையா, எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை மீண்டும் எங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் வரை உங்களுடன் பேச நாங்கள் தயாரில்லை என்று உறுதியாகவே தெரிவித்து விட்டார்.

பின்னர் அந்த இந்திய உயரதிகாரிகளை புலிகள் தமது அலுவலகத்தினுள் அழைத்துச் சென்று உபசரித்த போதிலும், எந்தவிதப் பேச்சுவார்த்தையையும் நடாத்தவில்லை.

இந்திய அதிகாரிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் தமது முகாமிற்குத் திரும்பிச் சென்றார்கள்.

பரப்பப்பட்ட வதந்திகள்

இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியா தடுத்துவைத்துள்ள செய்தி தமிழ் மக்களிடையே மிக வேகமாகப் பரவ ஆரம்பித்திருந்தது. இந்தச் செய்தியுடன் பல வதந்திகளும் சேர்ந்து பரவ ஆரம்பித்தன.

தலைவர் பிரபாகரன் இந்தியச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் பலாலி இராணுவத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பலவாறான வதந்திகள் தமிழ் மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தன.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததினால், புலிகளின் தலைவர் அந்தமான் தீவுகளுக்கு இந்தியாவினால் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் சில வதந்திகள் யாழ்ப்பாண மக்களிடையே பரவ ஆரம்பித்திருந்தன.

இந்தியப் படைகளின் வருகையினாலும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதினாலும் ஒருவித மாயையில் இருந்த தமிழ் மக்கள் அப்பொழுதுதான் விழித்தெழ ஆரம்பித்தார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கே என்ற கேள்வி அப்பொழுதுதான் அவர்களின் மனங்களில் எழ ஆரம்பித்தது.

இதேவேளை, இந்தியாவிடம் இருந்து ஒரு பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு புலிகளின் தலைவர்கள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் சொகுசு பங்களாக்களில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதாகவும், ஒரு வதந்தி சென்னையில் பரப்பப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பெருந்தொகைப் பணத்தை இந்திய அரசிடம் பெற்றுக்கொண்டு, தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், மற்றொரு வதந்தி தமிழ்நாட்டில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.

புலிகளினால் தடைசெய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கு செல்ல முடியாமல் தமிழ் நாட்டிலேயே தங்கியிருந்த டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் போன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களே இந்த வதந்திகளைப் பரப்புவதில் முன்நின்று செயற்பட்டார்கள். ஈழத் தமிழர்கள் தங்கியிருந்த வீடுகள், விடுதிகளுக்குச் சென்ற இவ் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இதுபோன்ற வதந்திகளை பரப்பினார்கள்.

உண்மையிலேயே, இப்படியான வதந்திகள் தமிழ் மக்களிடையே பரவிக்கொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியாவினால் புதுடில்லியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இலங்கையில் தனது எண்ணத்தை ஈடேற்றிக்கொள்வதற்கான சூழ்நிலை ஒன்று உருவாகும் வரையில், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை தனது கண்காணிப்பின் கீழ் வைத்துக்கொள்ளவே இந்தியா திட்டம் தீட்டியிருந்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் சந்தர்ப்பத்திலும், இந்தியப் படைகள் தமிழ் மண்ணில் வந்திறங்கும் சந்தர்ப்பத்திலும், புலிகளிடம் ஆயுதங்களை களையும் சந்தர்ப்பத்திலும், புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மண்ணில் இருப்பது தமது நடவடிக்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று ராஜீவ் காந்தி நினைத்திருந்தார்.

பிரபாகரனின் குணம் அவருக்கு நன்கு தெரியும். பிரபாகரனின் கொள்கைப்பிடிப்பு பற்றியும், அவரது போர்க் குணம் பற்றியும் இந்தியாவின் பிரதமர் நன்கு அறிந்திருந்தார்.

அதனால், தமது இந்த தகிடுதத்தங்கள் எல்லாம் நிறைவடையும் வரை பிரபாகரனை ஈழ மண்ணில் இருந்து அன்னியப்படுத்தி, தனது கண்காணிப்பில் வைத்துக்கொள்வது அவசியம் என்று அவர் எண்ணியிருந்தார்.

புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் பிரபாகரனை யாழ்ப்பாணம் அனுப்புவதில்லை என்றுதான் இந்தியா முதலில் எண்ணியிருந்தது. ஆனால் கள நிலவரம் அதற்கு ஒத்துளைக்கவில்லை.

ஆயுத ஒப்படைப்பு சம்பந்தமான எந்விதப் பேச்சுவார்த்தைக்கும் முன்னதாக தமது தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணம் வரவேண்டும் என்று புலிகள் தரப்பு ஊறுதியாகவே தெரிவித்துவிட்டது.

அத்தோடு, யாழ்ப்பாணம் வந்திறங்கிய இந்தியப்படைகள் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத அளவிற்கு பல நெருக்குதல்கள் அங்கு அவர்களுக்கு ஏற்பட ஆரம்பித்தன.

பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியப்படைகள் வெளிக்கிளம்பும் போது, வீதிகளில் பெரும் திரளாக மக்கள் திரண்டு வந்து, பிரபாகரன் எங்கே? என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள்.

வீதிகளின் நடுவில் நூற்றுக்கணக்கில் மக்கள் அமர்ந்து இந்திப்படைகளின் நகர்வுகளை தடுக்க ஆரம்பித்தார்கள்.

இது போன்ற நடவடிக்கைகள், இந்திய அரசிற்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தின. இந்தியப்படைகளின் வருகையை சிங்கள மக்கள் பெருமளவில் எதிர்க்க ஆரம்பித்திருந்த நிலையில், தமிழ் மக்களிடம் இருந்தும் தமக்கு எதிர்ப்புக்கள் உள்ளன என்று வெளி உலகிற்கு காண்பிக்க இந்தியா அப்பொழுது விரும்பவில்லை.

தமிழ் மக்களின் வீதி மறியல் போராட்டத்தால், இந்தியப்படைகளின் சமாதான முயற்சிகள் பற்றிய சந்தேகம் சர்வதேச மட்டத்தில் தோற்றுவிக்கப்படக் கூடியதான ஒரு அபாயத்தை இந்தியா எதிர்கொண்டது.

ஈழத் தமிழர்களை மீட்க இந்தியா தனது படைகளை அனுப்பியதாகவே தமிழ் நாட்டு மக்களுக்கு கூறப்பட்டிருந்த நிலையில், ஈழத்தமிழ் மக்கள் இந்தியப் படைகளுக்கு அங்கு காண்பிக்க ஆரம்பித்திருந்த எதிர்ப்புக்கள் தமிழ் நாட்டில் ஒரு புதிய சிக்லைத் தோற்றுவித்து விடும் என்றும் ராஜீவ் காந்திக்கு அச்சம் ஏற்பட்டிருந்தது..

அத்தோடு, இலங்கை சென்றிருந்த இந்தியப் படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்ற மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், உடனடியான பிரபாகரனை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று, தென்னிந்தியாவின் இராணுவ கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் இடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரபாகரன் இங்கு இல்லாமல் இந்தியப்படைகளால் எந்த ஒரு விடயத்தையும் சீரானமுறையில் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. புலிகள் ஒழுங்கான முறையில் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உடனடியாக பிரபாகரனை இங்கு அனுப்பி வையுங்கள் என்றும் அவர் தெளிவுபட அறிவித்திருந்தார்.

பிரபாகரன் வருகை

02.07.1987ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் பலாலி விமானப்படைத் தளத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவருடன் அவரது மெய்ப்பாதுகாவலர்கள், புலிகளின் முன்னைநாள் யாழ்.மாவட்ட தளபதி கிட்டு போன்றோரும் வந்திறங்கியிருந்தார்கள்.

(இந்த விமாணத்தில், பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகளும் வந்ததாக, இந்திய இரணுவப்படை உயரதிகாரி மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது இந்தக் கூற்றை உறுதிப்படுத்தக்கூடிய மேலதிக தரவுகள் எதுவும் என்னிடம் இல்லை.)

பலாலி வந்திறங்கிய பிரபாகரனும் குழுவினரும் பலத்த பாதுகாப்புடன் இந்தியப்படைகளின் கவச வாகனங்களின் மூலம் (APC- Armoured Personal Carriers)  யாழ்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.

தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புக் கருதி ஒரே தோற்றத்தில் அமைந்த பல கவச வாகனங்கள் இந்தியப் படையினரால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் ஒன்றிலேயே பிரபாகரன் அவர்கள் பயணம் செய்த போதிலும், அவர் எந்த வாகனத்தில் பயணிக்கின்றார் என்பது வெளியில் எவருக்கும் தெரியாமல் இருப்பதற்காக, அனைத்து கவச வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பயணம் செய்தன. இந்த வாகனத் தொடரணிக்கு ஆயுதம் தாங்கிய புலிகளும், இந்தியப் படையினரும் பாதுகாப்பு வழங்கினார்கள்.

இதேவேளை, தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பை முன்னிட்டு, அவரது வாகனம் பயணம் செய்த பிரதேசங்களில் புலிகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தார்கள். வீதிகளில் எவரும் நடமாட புலிகள் அணுமதிக்கவில்லை. வீதிகள் தோறும் ஆயுதம் தாங்கிய புலிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

சுதுமலை அம்மன் கோவிலில் வைத்து புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவிடம் பிரபாகனை கையளித்த இந்தியப் படையினர், பிரபாகரனை தாம் பாதுகாப்பாக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு படிவத்தில் கையொப்பமும் பெற்றுக் கொண்டார்கள்.

இதே சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் வைத்துத்தான் 24.07.1987ம் திகதி இந்திய விமானம் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் போரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத இருக்கும் ஒரு சரித்திர நாயகன் என்கின்ற எண்ணமோ, கர்வமோ சிறிதும் இல்லாமல், புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் அன்று மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி இருந்தார்.

தொடரும்…


இந்தியப் படையினருக்கு பிரமிப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் – (அவலங்களின் அத்தியாயங்கள்- 52) – நிராஜ் டேவிட்

  • January 25, 2013   
இலங்கை வந்த இந்தியப் படையினருக்கு யாழ்பாணச் சூழலும், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை முறையும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன. இலங்கைத் தமிழர்கள் எனப்படுபவர்கள் இத்தனை அந்தஸ்துடன் வாழ்க்கை நடாத்தும் ஒரு பிரிவினர் என்பது சாதாரண இந்திய ஜவான்களுக்கு ஆச்சரியமான ஒரு விடயமாகவே இருந்தது.

இந்திய இராணுவ வீரர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களிலில் இருந்தே வந்தவர்கள். அத்தோடு 80களில் இந்தியமக்களின் வாழ்க்கை முறை மிகவும் தரம் குறைந்ததாகவே காணப்பட்டிருந்தது. மிகவும் சிறிய வீடுகளை உடையவர்களும், நாளாந்த உணவுக்கே கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்வர்களாகவே இங்கு வந்திருந்த அனேகமான இந்தியப்படை வீரர்கள் இருந்தார்கள்.அத்தோடு, இப்படியான பின்னணியில் இருந்து வந்த இந்திய இராணுவ வீரர்கள் இலங்கையில் தரை இறங்கியபோது, அவர்கள் எதற்காக இங்கு வருகின்றார்கள் என்பது பற்றிய தெளிவும் அவர்களுக்கு போதிய அளவு வழங்கப்பட்டிருக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை பற்றி இந்தியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்கள், இலங்கைத் தமிழர்களை ஒரு பரிதாபமான ஜென்மங்களாகவே அவர்களது கற்பனையில் வடித்திருந்தது. மிகவும் பரிதாபகரமான ஒரு மனிதக் கூட்டத்தை தாம் இலங்கையில் சந்திக்கப்போகின்றோம் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து மிகவும் வறுமையில் பரிதவிக்கும் ஒரு பிரதேசமாகத்தான் யாழ்ப்பாணத்தையும், இங்கு வாழும் மக்களையும் இந்திய ஜவான்கள் கற்பனையில் எதிர்பார்த்து வந்திருந்தார்கள்.

ஆனால் அவர்கள் யாழ்பாணத்தில் நடமாடத் தொடங்கிய போது அவர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்து வந்ததற்கு மாறாக யாழ்ப்பாணமும், அங்கு வாழ்ந்த மக்களும் காணப்பட்டார்கள். யாழ்பாணத்தில் இருந்த வீடுகள் அவர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன. யாழ்பாணத் தமிழர்களின் உணர்ந்த வாழ்க்கைத்தரம் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.

யாழ்ப்பாண மக்கள் நல்ல தரமான ஆடைகளை அணிந்திருந்தார்கள். அங்கிருந்த வீடுகள் அனைத்தும் விசாலமாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவே இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள், ரேடியோக்கள் என்று பலவிதமான மின்சார உபகரணங்கள் காணப்பட்டன. கடைகள் அனைத்திலும் நவீன ஜப்பான் பொருட்கள் நிறைந்திருந்தன. இந்தியா திறந்த பொருளாதாரக் கொள்கையை பின்பற்ற ஆரம்பித்திருக்காத அந்தக் காலத்தில், இந்தியாவில் ஒரு பெரிய அதிகாரியின் வீட்டில் கூட இப்படியான சௌகரியங்கள் காணப்படுவது கிடையாது. யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்திப்படை வீரர்களுக்கு இவைகள் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன.

இந்தியாவில் தண்ணீர், மற்றும் மலசலகூட வசதிகள் அவ்வளவாக கிடையாது. கிரமங்களில் குளங்களிலும், வாய்கால்களிலும்தான் தமது தண்ணீர் தேவைகளை பெரும்பான்மையான மக்கள் பூர்த்தி செய்வது வழக்கம். சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். ஒரு குடம் தண்ணீருக்காக நெடுநேரம் வரிசையில் காத்திருக்கவேண்டும். இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்வதில் கூட இந்தியாவில் பலவித சிக்கல்கள் உள்ளன. ஒரு சிறிய செம்பு நீரில் தமது காலைக் கடன்களை முடிக்கவேண்டிய கட்டாயம் சாதாரண மக்களுக்கு அங்கு காணப்பட்டது. அங்கு தெருக்களிலும் வீதி ஓரங்களிலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மலசலம் கழிப்பது சாதாரண ஒரு விடயம். இப்படியான பின்னணியில் இருந்து வந்த இந்தியப்படை வீரர்களுக்கு, யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு வீடு கிணறும் மலசல கூடமும்  இருப்பது பெரிய விடயமாகத் தென்பட்டது.

இந்தியாவில் உள்ளது போன்று, தெருவோரங்களில் வாழ்க்கை நடாத்தும் மனிதக்கூட்டங்களை அவர்களால் யாழ்ப்பாணத்தில் காணமுடியவில்லை.

இந்தியப்படை வீரர்கள் யாழ்பாணத்தில் வந்திறங்கியதும் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். “என்ன செழிப்பான பூமி“ என்று தமிழ் நாட்டு வீரர்கள் தமது வியப்பை வெளிப்படுத்தினார்கள். “இது எம் நாட்டு கேரளா போன்று இருக்கின்றது“ என்று சிலரும், “இது குட்டி சிங்கப்பூர்“ என்று மற்றும் சிலரும் வியப்படைந்தார்கள்.

`இலங்கையில் நாளாந்தம் தமிழ் மக்கள் சிங்களவர்களால் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்| என்று கேள்விப்பட்டிருந்த இந்திய ஜவான்கள், யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களையே காணாததால், சிங்களவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று பொதுமக்களிடம் கேட்கும் நிலையில் காணப்பட்டார்கள்.

வல்வெட்டித்துறை பிரதேசத்திற்கு சென்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், ஒரு மீனவக் கிராமம் இத்தனை செழிப்பாக இருப்பது கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள். அங்கிருந்த மக்களிடம், “நீங்கள் எதற்காகத் தனி நாடு கேட்கின்றீர்கள்? இங்குதான் உங்களுக்கு அனைத்து வசதிகளும் தாராளமாக இருக்கின்றனவே? சொல்லப்போனால், இந்தியாவில் தமிழ் நாட்டு தமிழர்கள் அனுபவிப்பதை விட ஈழத்தமிழர்கள் அதிக சுதந்திரத்தை அணுபவிக்கின்றீர்கள். உங்களுக்கென்று முழுநேர தமிழ் வானொலி சேவை இருக்கின்றது. உங்களது ரூபாய் நோட்டில் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றது. இங்கு சிங்களத்தையே காண முடியவில்லை. நீங்கள் எதற்காக தனிநாடு கேட்டுப் போராடுகின்றீர்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை“ என்று தெரிவித்தார்கள்.

இந்திய ஜவான்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது யாழ்ப்பாண விஜயத்தை வெளிநாடொன்றிற்கு சுற்றுலா வந்தது போன்றே கருதினார்கள். வீடியோ ரெக்கோடர்கள், டீவீக்கள், மின்சார உபகரணங்கள் என்று வெளிநாட்டுப் பொருட்களாக வாங்கித்தள்ளினார்கள்.

அவசரப் பயணம்

சாதாரண இந்திய ஜவான்களின் நிலைதான் இதுவென்றால், இந்தியப்படை அதிகாரிகளின் நிலையும், இதற்குச் சற்றும் குறையாமலேயே இருந்தது.

இந்தியப்படை அதிகாரிகளுக்கும் தாம் இலங்கைக்கு வந்ததற்கான உண்மையான நோக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. தாம் இலங்கையில் செய்யவேண்டிய பணி பற்றிய அறிவுறுத்தல்களும் சரியானபடி வழங்கப்பட்டிருக்கவில்லை. கடுமையான இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு முகாம்களிலும், பாக்கிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களிலும் வாழ்க்கை நடாத்திக்கொண்டிருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு, இலங்கைக்கான இந்த பயண உத்தரவு மிகக் குறுகிய ஒரு கால அவகாசத்திலேயே வழங்கப்பட்டிருந்தது. அனேகமான இந்தியப்படை அதிகாரிகளுக்கு தமது இலங்கைப் பயணம் பற்றி தமது உறவுகளுக்கு அறிவிக்கக்கூட அவகாசம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கையில் வந்திறங்கிய முதலாவது இந்தியப் படையணிகளுக்கு தலமை தாங்கிவந்த மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் அவர்களுக்குக் கூட தமது இலங்கைப் பயணம் பற்றிய முழு விபரமும் சரியானபடி வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனை, பின்நாட்களில் செய்தி ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியில் உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டிருந்தார்.

“வெளிநாடு ஒன்றில் ஒரு பயிற்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய நான், செகுந்தலாபாத்தை சென்றடைந்தேன். விமான நிலையத்தில் நான் வந்திறங்கியபோது, அங்கு என்னுடைய உப இராணுவ உத்தியோகத்தர்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். ~எதற்காக இங்கு வரிசையாக நின்றுகொண்டிருக்கின்றீர்கள்“ என்று அவர்களிடம் கேட்டேன். எனெனில் என்னை வரவேற்ற எனது உதவி உத்தியோகத்தர் ஒருவர் மட்டுமே வருவது வழக்கம்.

அதற்கு அவர்கள், “சேர், முதலாவது விமானம் இன்றிரவு ஒரு மணிக்கு புறப்படுகின்றது“ என்று தெரிவித்தார்கள்.

“விமாணம் எங்கே புறப்படுகின்றது“ என்று நான் அவர்களிடம் கேட்டேன். `ஸ்ரீலங்காவிற்கு` என்று பதில் வந்தது.

அப்பொழுது நேரம் காலை 10 மணி. இந்த அளவு குறுகிய நேர இடைவெளியில் எப்படி இதனை மேற்கொள்ளுவது என்று எனது சக அதிகாரிகளிடம் வினவினேன். அதற்கு அவர்கள், “சேர், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விட்டது. இந்தியாவின் பிரதம மந்திரி தற்பொழுது கொழும்பில் இருக்கின்றார். இந்திய இராணுவத்தின் தளபதி திபீந்தர் சிங்கை அவர் தொலையேசியில் தொடர்பு கொண்டு இலங்கைக்கு இந்திய இராணுவத்தின் ஒரு டிவிசனை உடனடியாக நகர்த்தும்படி கூறியுள்ளார்“ என்று தெரிவித்தார்கள்.

எல்லோரையும் கட்டுப்பாட்டு காரியாலயத்திற்கு செல்லும்படி உத்தரவிட்டுவிட்டு, நானும் அங்கு சென்று எமது அவசர இலங்கை பயணம் பற்றி அவசர அவசரமாக விவாதித்தோம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றிய தொலை நகல் செய்தி எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இலங்கைக்குச் சென்று அங்கு சமாதானத்தை நிலைநாட்டும்படியாக எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

கடைசியில் மறுநாள் காலை 5 மணிக்கு எனது விமானம் செகுந்தலாபாத்தில் இருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நிடமும் அங்கிருந்து ஒவ்வொரு விமானம் இலங்கைக்கு புறப்பட்டபடி இருந்தது.

எந்தவித ஏற்பாடுகளும் இன்றி நாங்கள் இலங்கைக்குப் புறப்பட்டோம். எங்களது எதிரி யார்?, அவர்களது பலம் என்ன? – போன்ற புலனாய்வு விபரங்கள் எதுவும் இல்லாமலேயே எங்களது நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பிக்கவேண்டி இருந்தது. இலங்கை தொடர்பான ஒரு ஒழுங்கான வரைபடம் கூட எங்களிடம் இருக்கவில்லை. என்னுடன் இருந்த மேனன் என்ற ஒரு அதிகாரியிடம் இலங்கை வரைபடம் ஒன்று இருந்தது. அவரிடம் அதைப் பெற்று போட்டோ பிரதி எடுத்தே என்றுடைய மற்றய அதிகாரிகளுக்கு வழங்கினேன்…’’ இவ்வாறு, மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங் தனது செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு தொடர்பான தீர்மாணங்கள் அனைத்தையும், ராஜீவ் காந்தியும், சில இராஜதந்திரிகளும், றோ அமைப்புமே எடுத்துவந்தது.

தொடரும்…


 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply