புலிகளின் ‘பேரூட் தளம்” மீது தாக்குதல்- (அவலங்களின் அத்தியாயங்கள் (34 -43)

  • November 19, 2012
மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின் மவுன்டன் டிவிசன்( Mountain Division) படைப்பிரிவு பாரிய படை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.

குறிப்பிட்ட அந்தப் படை நடவடிக்கைக்கு “ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்” ( Operation Blooming Tulip) என்று இந்திய இராணுவம் பெயரிட்டிருந்தது.அப்பொழுது மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முக்கிய தளத்தை ஒன்றைத் தாக்கி அழிப்பதே அந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்ததாக இந்தியப்படையின் மட்டக்களப்புத் தலைமை புதுடில்லிக்கு அறிவித்திருந்தது.

புலிகளின் அந்த முக்கிய தளத்தின் பெயர் பேரூட் பேஸ் என்று இந்தியப் படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், பிராந்தியத் தலைமை, பயிற்சி முகாம்கள், நடவடிக்கைத் தலைமையகம், தொலைத்தொடர்பு மையங்கள் என்பன இந்த “பேரூட்” பேசிலேயே அமைந்திருப்பதாகவே இந்தியப்படையினர் நம்பியிருந்தார்கள்.

பேரூட் தளம்

புலிகளின் “பேரூட் தளம்” மீதான இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், மட்டக்களப்பில் அந்தக் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்ற “பேரூட் தளம்” அல்லது “பேரூட் பேஸ் ( Beirut Base)) பற்றிப் பார்ப்பது அவசியம்.

மட்டக்களப்பில் அந்தக் காலத்தில் இருந்த புலிகளின் “பேரூட் தளம்” மக்கள் மத்தியில் மாத்திரமல்ல சிறிலங்காப் படைகள் மத்தியிலும், மற்றயை தமிழ் இயக்கங்கள் மத்தியிலும் இந்தியப் படையினர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாகவே இருந்தது.

மட்டக்களப்பில் இருந்த புலிகளின் மிகப் பெரிய தளமே “பேரூட் தளம்” என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த பேரூட் தளத்தில் பலவகையான கனரக ஆயுதங்கள், பயிற்சி முகாம்கள் நிலக்கீழ் சுரங்கங்கள்” பாரிய ஆயுதக் களஞ்சியங்கள் எல்லாம் அமைந்திருப்பதாகவே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பின் தரவை மற்றும் குடும்பிமலைப் பிரதேசித்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே புலிகளின் இந்த பாரிய பேரூட் தளம் அமைந்திருப்பதாகவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பேச்சடிபட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் உண்மையிலேயே “பேரூட் பேஸ் ( Beirut Base) என்று புலிகளால் குறிப்பிடப்பட்ட அந்தத் தளம் தரவையிலோ அல்லது குடும்பிமலைப் பிரதேசத்திலோ அமைந்திருக்கவில்லை.

மட்டக்களப்பின் படுவான் கரைப்பிரதேசத்தில் உள்ள கொக்கட்டிச் சோலையில் உள்ள காடுகளின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு முகாமையே புலிகள் “பேரூட் பேஸ்” என்று சங்கேத பாஷையில் அழைத்துவந்தார்கள்.

மக்கள் பேசிக்கொண்டது போன்று அல்லது மற்றய தமிழ் இயக்கங்கள் நம்பிக்கொண்டிருந்தது போன்று, அல்லது சிறிலங்காப் படையினர் அச்சப்பட்டுகொண்டிருந்தது போன்று புலிகளின் அந்த பேரூட் முகாமில் கனரக ஆயுதங்களோ அல்லது நிலக்கீழ் சுரங்கங்களோ இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் குறிப்பாகக் குறிப்பிடுவதானால் அந்த பேரூட் தளத்திலும் அதனை அண்டிய கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலும் 48 போராளிகள் மாத்திரமே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.

பின்நாட்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத்தளபதியாக இருந்த தளபதி ரீகன் தலைமையில் பின்நாட்களில் பிரபல்யமான தளபதிகளான தளபதி ராம், தளபதி ரமேஷ்,தளபதி ரமணன் போன்றோர் அந்தக் காலகட்டத்தில் இந்த பேரூட் பேசிலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள் மக்கள் மத்தியில் மிக மிக வேகமாகப் பரவிக்கொண்டிருந்தன் ஒரு அங்கமாக இந்த பேரூட் பேஸ் பற்றிய மாயை மக்கள் மத்தியில் பெரிய அளவில் உருவாகி அடிக்கடி அச்சத்துடனும், பெருமையுடனும் பேசப்படுகின்ற ஒரு விடயமாக மாறியிருந்தது.

லெபனானின் தலைநகரம்

அத்தோடு அந்தக் காலகட்டத்தில் லெபனானின் தலைநகரான பேரூட் என்ற பெயரானது போராடுகின்ற இனக் குழுமங்களினால் ஆச்சரியமாக நோக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற ஒரு பெயராகவே இருந்தது.

அந்த நேரத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களில் பல முக்கியஸ்தர்கள் லெபனானில் இராணுவப் பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்ததால், லெபனானின் தலைநகரான பேரூட்டின் பெயர் போராளிகள் மத்தியில் அதிகம் பிரபல்யமாகியிருந்தது.

இவை அனைத்தையும்விட 1983ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் லெபனான் தலைநகரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தளம் மீது இஸ்லாமிய போராளிகள் மேற்கொண்டிருந்த ஒரு பாரிய தற்கொலைத்தாக்குதலும், அந்த தாக்குதல் பற்றிய செய்தியும் தமிழ்ஈழப் போராளிகள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாலும் பேரூட் என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபல்யமாகியிருந்தது.

1983 ஒக்டோபர் மாதம் 23ம் திகதி லெபனான் தலைநகரான பெரூட்டில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படையினரின் தளம் மீது இஸ்லாமிய ஜிகாத் போராளிகள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

அதில் அமெரிக்காவின் 220 சிறப்பு அதிரடிப்படையினர், உட்பட 299 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் – குறிப்பாகப் போராடும் இனக்குழுமங்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்ட தாக்குதல் அது.

இரண்டாம் உலகப் போருக்கு அடுத்ததாக அமெரிக்க மரைன் பிரிவுக்கு மிகப் பெரிய இழப்பினை ஏற்படுத்திய தாக்குதல் இடம்பெற்ற பிரதேசம் என்பதால் மக்கள் மத்தியில் பேரூட் என்ற பெயர் மிகவும் பிரபல்யமாகியிருந்தது.

குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் இந்த பேரூட் என்ற பெயர் அதிக மரியாதையுடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராகவே இருந்தது. ஆக்கிரமிப்பாளருக்கு அச்சத்தையும், போராடும் இனத்திற்கு விடுதலை உணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பெயராகவே இந்த பேரூட் என்ற பெயர் அந்த நேரத்தில் உலகில் வலம் வந்துகொண்டிருந்தது.

(புளொட் அமைப்பு இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது தளத்தின் ஒரு முகாமிற்கு பேரூட் முகாம் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்குப் பெயர்போன ஒரு விடுதிக்கு பேரூட் விடுதி என்று பெயரிட்டிருந்தார்கள். பேரூட் என்ற பெயர் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் எந்த அளவிற்குப் பிரபல்யமாக இருந்தது என்பதற்கு இவைகள் சில உதாரணங்கள்)

சரி. குறிப்பாக மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகளின் இந்த முகாம் அல்லது தளத்திற்கு பேரூட் பேஸ் என்று எவ்வாறு பெயர் வந்தது?

இதற்கான காரணம் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பல ஊகங்கள் இருக்கின்றன.

தொலைத்தொடர்புக் கருவி

அந்தக் காலகட்டத்தில் பிரதேசவாரியாக விடுதலைப் புலிகள் தமது தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்திய சக்திவாய்ந்த பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை மையப்படுத்தி சில குறியீட்டுகளைப் பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தொடர்பாடலை மையப்படுத்தி அவர் சார்ந்த தொடர்பாடல் பிரதேசத்தை 1-4 அதாவது ஒவன்-போர் ( One-Four) பேஸ் என்று அழைப்பார்கள்.

புலிகள் தலைவர் இந்தியாவில் தங்கியிருந்த பொழுது இந்தியாவில் இருந்த வன்-போர் தளம் பின்னர் அவர் வன்னியில் அலம்பில் காடுகளில் தங்கியிருந்த பொழுது அங்கு செயற்பட்டது இந்தக் காரணத்தினால்தான்.

இதேபோன்று யாழ்பாணத்தை 2-2 டு-டு ( Two-Two) பேஸ் என்றும் வடமாராட்சியை 2-3 டு-திறீ ( Two-Three) பேஸ் என்றும் அழைப்பார்கள்.

இவை அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை அடிப்படையாக வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டன. ஒரு பெரிய தொலைத் தொடர்பு கருவி. ஏதாவது மரமொன்றில் அதன் அன்டனாக்களை உயரத்தில் கட்டிவிட்டால் இலங்கை முழுவதும் மாத்திரமல்ல, இந்தியாவில் உள்ள புலிகளைக் கூட இதனூடாக இலகுவாகத் தொடர்பு கொண்டுவிட முடியும்.

அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மாத்திரமே இருந்த தொலைத் தொடர்பு வசதிகள் அவை.

80களின் நடுப்பகுதியில் தளபதி அருணா மட்டக்களப்பிற்கு வந்தபொழுது அவரால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திற்கென்று ஒரு பிரதான தொலைத்தொடர்புக் கருவி கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு வந்தறுமூலைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட அந்தத் தொலைத்தொடர்பு கருவியை அடிப்படையாக வைத்து 4-6 போர்-சிக்ஸ் ( Four-Six) பேஸ் என்று மட்டக்களப்பு பிரதேசதம் குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டது.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் இருந்து புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட முதலாவது போராளியும், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவரும், பின்நாட்டகளில் புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாகப் பல களம் கண்டவரும் தற்பொழுதும் ஐரோப்பிய நாடொன்றில் உயிருடன் இருப்பவருமான தளபதி காந்தன் அவர்களே மட்டக்களப்பின் முதலாவது பிரதான தொலைத் தொடர்புக் கருவியை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்திற்கான தொலைத் தொடர்புக் கருவி அங்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறைப் பிரதேசத்தை 4-8 போர்-எயிட் ( Four-Eight) பேஸ் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகள் அணிகளுக்கான தொலைத்தொடர்புகள் அம்பாறை மாவட்டத்துடனோயே அதிகம் இருந்ததால், கொக்கட்டிச்சோலை புலிகள் அணியின் தளங்களையும் ஆரம்பத்தில் 4-8 போர் எயிட் ( Four-Eight) பேஸ் என்றே அழைத்துவந்தார்கள். இந்த போர்- எயிட்தான் கால ஓட்டத்தில் பேரூட்டாக திரவடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அதேபோன்று அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உலகின் பிரபல்யமா நகரங்களின் பெயர்களைச் சூட்டி அழைப்பது வழக்கம்.

யாழ்பாணப் பிரதேசத்தை சிக்காக்கோ என்றும், வடமாராட்சிப் பிரதேசத்தை கலிபோர்ணியா என்றும் அழைப்பதைப் போன்று மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தை பேரூட் என்று அழைத்திருப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

ஆக மொத்தத்தில் பேரூட் பேஸ் என்பது மட்டக்களப்பில் புலிகளின் பிரபல்யமான ஒரு முகாம் என்பதும், இந்த பேரூட் பேஸ் என்பது கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலேயே அமையப்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட புலிகளின் பேரூட் தளத்தைத் தாக்கி அழிக்க என்று கூறித்தான் இந்திய இராணுவத்தின் மவுன்டன் டிவிசன் ( Mountain Division) படைப்பிரிவு “ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்” ( Operation Blooming Tulip) என்ற பெயரில் ஒரு பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

ஆனால் புலிகளின் பேரூட் பேஸ் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் தரவையில் இருந்த புலிகளின் வேறொரு முகாமை நோக்கித்தான் படையெடுத்திருந்தார்கள் என்பதுதான் இங்கு முரன்நகையான விடயம்.

சோரம்போன படை நடவடிக்கை

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம், வாழைச்சேனை காகித ஆலையில் அமைக்கப்பட்டிருந்த முகாம் போன்றவற்றில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட இந்தியப்படையினர் உற்சாகமாக தமது நகர்வினை ஆரம்பித்தார்கள்.

இராணுவ கவச வாகனங்கள் முன் நகர, சீக்கியப் படையினர் அணிவகுத்து நடையாகவே புலிகளின் இந்த முகாமை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். புலிகளை ஒரு வழிபண்ணிவிடும் முனைப்பு அவர்களிடம் காணப்பட்டது.

மட்டக்களப்பின் பிரதான பகுதியில் இருந்து குறிப்பிட்ட தரவைப் பிரதேசத்தை அடையவேண்டுமானால் முப்பதிற்கும் அதிகமான கிராமங்களைக் கடந்துதான் அவர்கள் சென்றாக வேண்டும்.

இந்தியப் படையினரும் அவ்வாறுதான் வீரநடைபோட்டுச் சென்றார்கள். இந்தியப் படையினர் முதலாவது கிராமத்தைக் கடந்துசெல்லும் போதே புலிகளுக்குச் செய்தி பறந்துவிட்டது. புலிகள் நிதானமாக தமது முகாமைக் காலி செய்துகொண்டு அடர்ந்த காடுகளுக்குள் தப்பிச் சென்று விட்டார்கள்.

போராளிகளைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து மக்களுடன் மக்களாகக் கலைத்தும் விட்டார்கள். சுமந்து கொண்டு செல்லமுடியாத ஆயுதங்களில் சிலவற்றையும், வெடி பொருட்களையும் கைவிட்டுச் செல்லவேண்டி ஏற்பட்டது.

நீண்ட நடைபோட்டு தரவையில் இருந்த புலிகளின் முகாமை அடைந்த இந்தியப் படையினர் அங்கு எவரையும் காணாமல் திகைப்படைந்தார்கள். மவுன்டன் டிவிசன் இலங்கையில் களம் இறக்கப்பட்டு முதலாவதாக மேற்கொண்ட நடவடிக்கை இப்படிச் சோரை போவதா?

அயல் கிராமத்தில் வயல்வேலைகளில் ஈடுபட்டிருந்த சில அப்பாவிகளை முகாமிற்கு அழைத்துவந்து சுட்டுக்கொன்று, அருகில் ஆயுதங்களைப் போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

முகாமில் எஞ்சியிருந்த சில வெடிபொருட்களுடன், தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்களில் சிலவற்றையும் சேர்த்துவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

பாரிய சண்டையின் பின்னர் புலிகளின் முக்கிய தளமான பேரூட் தளம் கைப்பற்றப்பட்டதாக மறுநாள் செய்திகள் வெளியிடப்பட்டன. பல புலிகள் கொல்லப்பட்டதாகவும் பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் புகைப்படங்களுடன் வெளியாகின. (கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் அமெரிக்காவினதும், பாக்கிஸ்தானினதும் ஆயுதங்கள் காணப்பட்டதாக சில இந்திய பிராமணிய நாளிதழ்கள் கதைவிட்டிருந்தது சுவாரசியமாக மற்றொரு விடயம்.)

தொடர் நடவடிக்கைகள்

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு பிராந்தியத்தில் நிலைகொள்ள ஆரம்பித்த இந்திய இராணுவத்தின் 57வது மவுன்டன் டிவிசன் ( Mountain Division) சீக்கியர்கள், தொடர்ச்சியாக நடவடிக்கைளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

விடுதலைப் புலிகள் மீள அணிதிரளக் கூடாது என்கின்ற யுத்தியைக் கையாளுவதற்காக அவர்கள் இடைவிடாத தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இவர்கள் எதிர் கெரில்லாப் போரியலில் உண்மையிலேயே கைதோர்ந்தவர்கள்.

புலிகளின் நடவடிக்கையின் வேகம் குறையும் அளவிற்கு இவர்களின் நடவடிக்கைள் மிக உறுதியாகவும், வேகமாகவும் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. குறுகிய காலப்பகுதியில் இவர்கள் பல இராணுவ நடவடிக்கைகளை மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடாத்தியிருந்தார்கள்.

அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைளுள் சில:

Operation rolling trumpets

Operation Red Rose

Operation lilac

Operation sweep strike

Operation steel Cray

Operation sward fish.

அவலங்கள்

இந்தப் பிரிவனரின் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் பலத்த சவால்களை எதிர்நோக்கியிருந்தாலும், தமிழ் மக்கள் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருந்தாலும், தமது இருப்பிடங்கள், கிரமங்களை விட்டு வெளியேற வேண்டிய அளவிற்கு இன்னல்களை அனுபவித்த தரப்பினராக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம்களைக் குறிப்பிட முடியும்.

முஸ்லிம்களை விடுதலைப் புலிகளை நோக்கி இழுத்துத்தந்த பெருமை இந்த மவுண்டன் பிரிகேட் சீக்கிய ஜவான்களையே சாரும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இந்தியப் படையினர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் சமூகம் அனுபவித்த அவலங்கள் பற்றி தொடர்ந்துவரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

http://www.nirajdavid.com/புலிகளின்-பேரூட்-தளம்-மீ/

13.09.1987 அன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மீது விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.  இந்தியப் படையினர் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பில் நடைபெற்ற முதலாவது தாக்குதல் என்று இதனைக் கூறலாம்.

இந்தத் தாக்குதலில் புளொட்| அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.புளொட் அமைப்பின் அரசியல் துறைச் செயலாளர் வாசுதேவா, இராணுவத்துறைச் செயலாளர் கண்ணன், மட்டக்களப்பு பொறுப்பாளர் சுபாஸ், ஆனந்தன் போன்றவர்கள் உட்பட, இந்தியாவில் இருந்து அப்பொழுதுதான் இலங்கை திரும்பியிருந்த முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள்.

புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மீது புலிகள் மேற்கொண்ட இந்தத் தாக்குதலானது அந்தக் காலகட்டத்தில் மாத்திரமல்ல, தற்பொழுது கூட அதிகம் சிலாகிக்கப்படுகின்ற ஒரு தாக்குதல் என்றால் மிகையில்லை.

பேச்சுவார்தைக்கு என்று அழைக்கப்பட்ட புளொட் முக்கியஸ்தர்கள் புலிகளால் நயவஞ்சகமாகப் படுகொலைசெய்யப்பட்டதாக இந்தத் தாக்குதல் பற்றிய ஒரு பேச்சு தற்பொழுதும் இருந்துகொண்டிருக்கின்றது.

புளொட் முக்கியஸ்தர்கள் மீதான தாக்குதல் இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவினாலேயே உத்தரவிடப்பட்டு புலிகளால் மேற்கொள்ளப்பட்டதான ஒரு குற்றச்சாட்டு அந்த நாட்களில் புளொட் அமைப்பினரால் வெளியிடப்பட்டிருந்தது. புளொட் முக்கியஸ்தர்களது நடமாட்டம் பற்றிய தகவல்கள் றோவினாலேயே புலிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் கூட ஒரு பேச்சு அந்த நேரத்தில் அடிபட்டது.

ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட வதந்திகள், பேச்சுக்கள் அனைத்தையும் கடந்து உண்மையில் என்ன நடந்தது என்கின்ற சரியான தகவல்கள் ஊடகங்களில் பெரிதாக வெளிவில்லை என்றுதான் கூறவேண்டும்.

புளொட் முக்கியஸ்தர்கள் மீதான புலிகளின் தாக்குதலின் உண்மையான பின்னணி என்ன? உண்மையிலேயே என்ன நடந்தது? – இந்த விடயம் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

புளொட் அமைப்பினர் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் பற்றியும், அந்தத் தாக்குதலின் பின்னணி பற்றியும் நாம் பார்ப்பதானால், முதலில் அந்தக் காலகட்டத்தில் புளொட் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி மேலோட்டமாகப் பார்ப்பது நல்லது என்றது என்று நினைக்கின்றேன்.

புளொட்டின் புதிய பின்னணி

இந்தியப் படையினர் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து திறீ ஸ்டார் என்ற பெயரில் இந்தியப் படையினரால் களமிறக்கப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொள்வதே இவர்களது பிரதான செயற்பாடாக இந்தியாவின் ~றோ| அமைப்பினால் திட்டமிடப்பட்டிருந்தது. (இந்த தமிழ் ஆயுத அமைப்பினது சில நடவடிக்கைகளை முன்னர் பார்த்திருந்தோம்)

இதேவேளையில், அக்காலப்பகுதியில் ~புளொட்| அமைப்பும் தமிழ் பிரதேசங்களில் அதிக அளவில் ஊடுருவி நிலை கொள்ள ஆரம்பித்திருந்தது. ~புளொட்| அமைப்பின் நடவடிக்கைளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தன.

ஆனால் புளொட் அமைப்பின் செயற்பாடுகளின் பின்னணி, மற்றய தமிழ் இயக்கங்களின் பின்னணியில் இருந்து மாறுபட்டு காணப்பட்டது.  புளொட் அமைப்பின் செயற்பாடுகளுக்குப் பின்னால் இந்திய றோவின் கைகள் நிச்சயமாக இருக்கவில்லை.

புளொட் இற்கு அக்காலத்தில் அனுசரனை வழங்கிக்கொண்டிருந்தது வேறொரு தரப்பு.

எவருமே எதிர்பார்க்காத வகையில், புளொட் அமைப்பு ஸ்ரீலங்கா அரசிடம் அனுசரனைகளைப் பெற்றே அக்காலகட்டத்தில் செயற்பட ஆரம்பித்திருந்தது.

கையறு நிலையில் புளொட்

புலிகளைப் போலவே புளொட் அமைப்பும் ஆரம்பம் முதலே இந்தியாவின் கைகளுக்குள் சிக்கவில்லை.

இந்தியா வழங்கிய பயிற்சிகளைப் புளொட் பெற்றிருந்தாலும், இந்தியாவின் கைக்கூலிகளாக அவர்கள் செயற்படத் தலைப்படவில்லை. அதனால் ஈழத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே புளொட் அமைப்பு பலவழிகளிலும் இந்தியாவினால் ஓரங்கட்டப்பட்டே வந்தது.

இந்தியப்படை இலங்கைக்கு வருவதற்கு சிறிது காலத்தின் முன்னர், புளொட் அமைப்பு ஈழத்தில் தனது போராட்டத்தை விரைவுபடுத்துவதற்கு என்று வெளிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்திருந்த பெரும் தொகை ஆயுதங்கள் தமிழ் நாட்டுக் கரையில் வந்திறங்கிய போது, இந்தியா அதனைக் கைப்பற்றியிருந்தது. அதேபோன்று தமிழ் நாட்டில் பலவழிகளிலும் புளொட் அமைப்பிற்கு எதிராக தனது நடவடிக்கைகளை இந்தியா முடுக்கிவிட்டிருந்தது.

அதேவேளை, அளவிற்கதிகமான போராளிகளை உள்வாங்கிவிட்ட நிலையில் அவர்களைப் போஷிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த புளொட் அமைப்பினுள், உள் முரண்பாடுகளும் தலைவிரித்தாட அரம்பித்திருந்தன. திறமையான பல போராளிகள் புளொட் அமைப்பினுள் காணப்பட்டிருந்த போதிலும், சரியான வழிநடத்தல்கள் இல்லாத காரணத்தால் புளொட் அமைப்பு சரியான முறையில் இயங்கமுடியாத ஒரு அமைப்பாகவே மாறி இருந்தது.

உட்படுகொலைகள், தலைமைத்துவ ஊழல்கள், கீழ்மட்டப் போராளிகளிடையேயான வறுமை, கந்தசாமி அணியினர் ஆடிய தாண்டவம் என்பன, புளொட் அமைப்பை பலவழிகளிலும் செயற்படமுடியாத ஒரு அமைப்பாக மாற்றியிருந்தது.

கட்டுப்பாடிழந்த நிலையில் விரக்தியுடன் கூடிய பல போராளிகள் தமிழ் நாட்டில் சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் புளொட்டிலிருந்த ஒரு முக்கிய தளபதியான பரந்தன் ராஜன் என்பவர் இந்திய றோ அமைப்பினால் உள்வாங்கப்பட்டு, முக்கிய போராளிகள் அடங்கிய ஒரு குழுவுடன் ஈ.என்.டி.எல்.எப்.(Eela National Democratic Liberation Front- ENDLF)என்ற அமைப்பை ஸ்தாபித்துச் சென்றுவிட, எஞ்சிய புளொட் அமைப்பு செயற்பட முடியாத அளவு தனித்து நிற்கவேண்டி இருந்தது.

ஆரம்பம் முதலே புலிகளுக்கு எதிராக புளொட் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டுவந்த அமைப்பென்ற காரணத்தினால், புலிகளுடனும் கைகோர்த்துக்கொள்ள முடியாத நிலை புளொட்டிற்கு இருந்தது. அத்தோடு, புலிகள் அமைப்பு மீது ஜென்மப் பகை கொண்ட ஒரு அமைப்பாகவே புளொட் அமைப்பும், அதன் தலைமையும் செயற்பட்டு வந்திருந்தது.

புளொட் அமைப்பின் இந்த கையறு நிலையை ஸ்ரீலங்கா அரசு நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டது.

இந்தியப் படையின் வருகையின் பின்னர், எதுவுமே செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த புளொட் தலமையை தொடர்பு கொண்ட ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, புளொட் அமைப்பிற்கு அபயம் அளிப்பதற்குத் தாம் விரும்புவதாக தெரிவித்தார்.

அப்பொழுது ஈழமண்ணில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த புலிகள் மற்றும் இந்தியா- என்ற தமது இரண்டு எதிரிகளையும் மீறி, எவ்வாறு அங்கு மீண்டும் கால்பதிப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்த புளொட் அமைப்பின் தலைமைக்கு, அத்துலத் முதலியின் அழைப்பு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே இருந்தது.

ஸ்ரீலங்கா அரசின் அழைப்பின் பெயரில் புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் கொழும்பிற்கு வந்தார். ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியுடன் பல பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். இதனைத் தொடர்ந்து, புளொட் அமைப்பு கொழும்பில் பல முகாம்களை அமைக்க ஆரம்பித்தது. பெருமளவு போராளிகள் அந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா படை அதிகாரிகளுடன் இணைந்து செயற்படவும் ஆரம்பித்தார்கள்.

ஸ்ரீலங்காவை திருப்திப்படுத்த புலிகள் மீது பாய்ச்சல்:

வவுனியாவிலும் பல புளொட் முகாம்கள் அமைக்கப்பட்டன. அப்பொழுது வவுனியாவில் தங்கியிருந்த மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, வவுனியாவில் புளொட் அமைப்பு முகாம்களை அமைக்க உதவி புரிந்தார். மாணிக்கதாசன் தலைமையில் வவுனியாவில் புளொட் அமைப்பு காலூன்ற ஆரம்பித்தது.

இதேபோன்று மட்டக்களப்பிலும், புளொட் அமைப்பின் அரசியல்துறைச் செயலாளர் வாசுதேவா மற்றும் பொறுப்பாளர் சுபாஸ், சிவராம் போன்றவர்கள் தலைமையில் அந்த அமைப்பு காலூன்ற ஆரம்பித்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு போராளிகள் புளொட் அமைப்பில் இருந்ததால், அந்தப் போராளிகளின் பெற்றோர், உறவினர்களை சந்தித்து தமது அமைப்பிற்கு ஆதரவு தேடிக்கொள்ளும் எண்ணத்துடனும், தமது அமைப்பை மீளவும் கட்டியெழுப்பும் நோக்கத்துடனும், செயற்பட ஆரம்பித்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே மன்னாரில் புலிகள் அமைப்பு மீது புளொட் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

அந்தத் தாக்குதலில் கில்மன், அர்ச்சுனா, ரஞ்சன் என்ற மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். புலிகள் மீது புளொட் உறுப்பினர்கள் காலாகாலமாக கொண்டிருந்த பகை உணர்வின் வெளிப்பாடாக அந்தத் தாக்குதல் இருந்தாலும், தமது புதிய எஜமானர்களாகிய ஸ்ரீலங்காப் படையினரைத் திருப்திப்படுத்துவதற்காகவே புளொட் அந்தத் தாக்குதலை அப்பொழுது மேற்கொண்டிருந்தது.

புலிகளின் பதிலடி:

தமது உறுப்பினர்கள் மீது புளொட் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றி இந்தியப் படையினரிடம் தமது முறைப்பாட்டை தெரிவித்த புலிகள் சம்பந்தப்பட்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரினார்கள். இந்தியப்படை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராத காரணத்தினால், புலிகள் புளொட்டிற்கு பதிலடி கொடுக்க தயார் ஆனார்கள்.

மன்னாரில் புளொட் அமைப்பு மீது புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 50 இற்கும் அதிகமான புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மட்டக்களப்பிலும் புளொட் அமைப்பிற்கு எதிராக தாக்குதல்களை நடாத்தவேண்டும் என்ற முடிவை புலிகள் எடுத்திருந்தார்கள்.

அதிலும் புளொட் அமைப்பின் ஒரு குறிப்பிட்ட முக்கியஸ்தரைக் குறிவைத்து தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என்று மட்டக்களப்பில் உள்ள புலிகள் தீர்மானம் எடுத்தார்கள். அந்த குறிப்பிட்ட புளொட் முக்கியஸ்தரைக் குறிவைத்து அவர்கள் தேடித்திரியவும் ஆரம்பித்தார்கள்.

இதற்கு முக்கிய காரணம்: கருணா.

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவினால் அந்த நேரத்தில் குறிவைக்கப்பட்ட புளொட் முக்கியஸ்தின் பெயர்: பவானந்தன்.

அந்த நேரத்தில் புளொட்| அமைப்பின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இருந்தார் பவாணந்தன். அவரது இயக்கப்பெயர் சுபாஸ். 1978ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்த பவாணந்தன்;, தனிப்பட்ட ரீதியில் பல கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு புலிகள் அமைப்பில் இருந்து விலக்கப்பட்டார்.

புலிகளால் தேடப்பட்டநிலையில் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரணடைந்து சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது, 1983ம் ஆண்டு மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பித்து இந்தியா சென்று புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். புலிகள் அமைப்பில் இருந்து ஏற்கனவே பிரிந்து புளொட் அமைப்பை ஸ்தாபித்திருந்த உமாமகேஸ்வரனுடன் அவருக்கு இருந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி புளொட் அமைப்பில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

இந்தியப்படையின் வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்த பாவாணந்தன்(சுபாஸ்) புலிகள் அமைப்பிற்கு மிகுந்த சாவாலாகவே செயற்பட்டார். அதுவும் சிறிலங்கா அரச படைகளின் தொடர்பு, பின்னணி என்பன இவருக்கும், இவர் சார்ந்த பிரிவினருக்கும் இருந்ததால், மட்டக்களப்பில் புலிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலை இவரால் தொடர்ந்து ஏற்படுத்த முடிந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் பவாணந்தனுக்கும், புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு தளபதியாக அந்த நேரத்தில் இருந்த கருணாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. கருணாவுக்கு அந்த நேரத்தில் 21 வயது. கருணாவையும், புலிகள் அமைப்பையும் மிகக் கேவலமாக விமர்சித்தார் பவாணந்தன். ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் முற்றி கருணாவை சுட்டுவிடும்படி தனது போராளிகளுக்கு கட்டளை பிறப்பித்தார் பவாணந்தன்.

கருணாவுடன் துணைக்குச் சென்ற அர்ஜூனா என்ற போராளி நிலமையைச் சமாளித்து கருணாவை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தார். இந்தச் சம்பவம் கருணாவை மிகவும் பாதித்திருந்தது. பவாணந்தனை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று நினைத்த கருணா, பவாணந்தனை குறிவைக்கும்படி தனது பேராளிகளுக்கு கட்டளை பிறப்பித்தார்.

பவாணந்தனின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்கள் கவனமாகத் திரட்டப்பட்டன புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால்.

குழப்பப்பட்ட புலிகளின் பொதுக்கூட்டம்

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியப்படைகள் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை புலிகள் பகிரங்கமாக வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். திலீபன் யாழ் கோட்டையில் ஆற்றிய உரையில் இதனை முதன் முதலில் வெளியிட்டிருந்தார்.

அதேவேளை வடக்கு கிழக்கு முழுவதிலும் இந்தியப்படையனருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வந்தன. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் புலிகள் ஒரு பாரிய பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையா, அரசியல்துறைப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி போன்றவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் இரண்டு காரணங்களினால் இந்தப் பொதுக்கூட்டம் கைவிடப்பட்டது.

முதலாவது காரணம் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவென வருகைதரும் விடுதலைப் புலி முக்கியஸ்தர்களைப் படுகொலைசெய்ய புளொட் அமைப்பு திட்டமிட்டிருந்ததாக புலிகளின் புலனாய்வுத் துறை தெரிவித்திருந்தது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த திலீப்(சொந்தப் பெயர்: திருச்செல்வம்) மற்றும் நீலன் போன்றவர்கள் இந்தத் தகவலை புலிகளின் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள். புலிகளின் தலைவர்களைப் படுகொலை செய்யும் நோக்குடன் புளொட் அமைப்பின் இராணுவச் செயலாளர் கண்ணன் மட்டக்களப்பிற்கு வருகை தந்திருப்பதாகவும் அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக பொதுக்கூட்டம் நடைபெற இருந்த தினத்தில் சிறிலங்கா அரசாங்கம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்தக் காரணங்களினால் புலிகள் ஏற்பாடு செய்த பாரிய பொதுக்கூட்டம் தடைப்பட்டிருந்தது.  இதுவும் மட்டக்களப்பில் புலிகள் அமைப்பிருக்கு புளொட் மீது பாரிய கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.  புளொட் அமைப்பினருக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும் எற்று தீர்மானம் எடுத்தார்கள் புலிகள்.

தாக்குதல்

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி பாவனந்தன் தனது நன்பர்களுடன் பாசிக்குடா சென்று திரும்புவதாக கருணாவுக்கு தகவல் கிடைத்தது.

‘பாவானந்தனை போடுங்கள். நான் அங்கு வந்துகொண்டிருக்கின்றேன்” உத்தரைவை கருணா கிரானில் இருந்த போராளிகளுக்கு தொலைத்தொடர்பில் அறிவித்தார்.  அந்த நேரத்தில் கிரான் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த கப்டன் ரதீஷ் மற்றும் சாண்டோ என்ற போராளி உட்பட ஒரு சிறு குழு பாவனந்தன் பயணம் செய்த வாகனம் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள்.

கொல்லப்பட்ட புளொட் உறுப்பினர்களின் உடல்கள் கிரான் சந்தியில் கருணாவினால் பார்வையிடப்பட்டது. பவானந்தனைத் தவிர மற்றவர்களை புலிகளுக்குத் தெரியவில்லை. மட்டக்களப்பில் இருந்து கிராணுக்கு வந்த அரசியல்துறைப் போராளிகள்தான் கொல்லப்பட்டவர்களில் புளொட் அமைப்பின் அரசியல் துறைச் செயலாளர் வாசுதேவாவையும் மற்றய சிலரையும் அடையாளம் காண்பித்தார்கள்.

கொல்லப்பட்டவர்களில் புளொட் அமைப்பின் இராணுவத்துறைச் செயலாளர் கண்ணனும்; அடங்கியிருந்தது பின்னரேயே புலிகளுக்குத் தெரியவந்தது. பொதுக்கூட்டத்திற்கு வருகை தர இருந்த புலி முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதற்காக கண்ணன் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளதாக புலிகளின் புலனாய்வுத்துறை ஏற்கனவே வழங்கியிருந்த தகவலை கண்ணனின் உடல் ஊர்ஜிதப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் புளொட் அமைப்பிற்கு எதிராக புலிகள் பாரிய தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள். இந்த நடவடிக்கையில் 70 இற்கும் அதிகமான புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் புளொட் உறுப்பினர்கள் துரத்தித் துரத்தி புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள்.

புலிகளால் புளொட் அமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதலை இந்தியப்படை வேடிக்கை பார்த்தபடி இருந்தது. இந்தியப்படையினரைப் பொறுத்தவரையில், இந்த இரு அமைப்புக்களுமே அவர்களுக்கு வேண்டப்படாத அமைப்புக்களாகவே இருந்தன.


 

தமிழ் மண்ணை நனைத்த சிங்கள இரத்தம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 36) –நிராஜ் டேவிட்

  • November 19, 2012
இந்தியப்படை காலத்தில் கிழக்கில் இடம்பெற்ற மிக முக்கியமான ஒரு சம்பவம் பற்றி இந்த வாரம் அவலங்களின் அத்தியாயத்தில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளுடன் இனிப் பேசுவதில்லை என்கின்ற முடிவை உறுதியாக எடுப்பதற்கு இந்தியாவையும் சிறிலங்காவையும் நிர்பந்தித்த சம்பவம் என்று இதனைக் குறிப்பிடலாம்.விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலையை ஜே.ஆர் அறிவிப்பதற்குக் காரணமாக அமைந்த சம்பவம் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.

புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்வதற்குக் காரணமாக அமைந்த விடயம் என்றும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அந்த மோசமான சம்பவம், இலங்கையில் பாரிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படவும், அவலங்களின் அத்தியாயங்கள் பல தமிழர்களின் வாழ்வில் இடம்பெறவும் காரணமாக அமைந்தது.

இலங்கையின் வரலாற்றில் முதன்முதலில் சிங்கள மக்கள் மீது தமிழர் தரப்பு மேற்கொண்ட ஒரு இன வன்முறை நடவடிக்கை என்று இதனைக் குறிப்பிடலாம்.

வடக்கு கிழக்கு மண்னை சிங்கள இரத்தம் நனைத்த முதலாவது சந்தர்ப்பம் என்றும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

இவை பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்தச் சம்பவம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த பின்னணி பற்றிப் பார்ப்பது அவசியம்.

சயனைட் சம்பவம்

3.10.1987 அன்று அதிகாலை 2 மணியளவில், பருத்தித்துறைக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 17 விடுதலைப் புலி முக்கியஸ்தர்களில் 13 பேர் 1987ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதி சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்கள்.

சிறிலங்கா படையினரால் பலவந்தமாக கொழும்புக்குக் கொண்செல்லப்படவிருந்த நிலையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த தற்கொலை நடவடிக்கையைச் செய்திருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 போராளிகள் சயனைட் அருந்தித் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, தமிழீழம் முழுவதும் மிக இறுக்கமான ஒரு சூழ்நிலை உருவானது.

அதேவேளை, சயனைட் உட்கொண்டு தம்மை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்பட்ட போராளிகள் சிலரது உடல்களில் காயங்கள் காணப்பட்டதாக வெளிவந்திருந்த செய்தியும் தமிழ் மக்களை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது.

குறிப்பாக புலேந்திரனின் உடலின் முதுகுப் புறத்திலும், பின் கழுத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. துப்பாக்கி முனையில் பொருத்தப்படும் பயனைட் என்ற கத்தியினால் புலேந்திரன் குத்தப்பட்டதாக விடுதலைப் புலிப் போராளிகள் மிகுந்த சினத்துடன் தெரிவித்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்ட போராளிகளை உயிருடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லமுடியாத தமது இயலாமையை, ஸ்ரீலங்காப் படையினர் அவர்களின் உயிரற்ற உடல்களின் மீது காண்பித்திருந்தார்கள்.

மாவீரர்களின் இறுதி ஊர்வலத்தின் போதே, போராளிகளின் உடல்கள் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களின் கத்திக்குத்துக்களுக்கு இலக்கான கதை பொதுமக்கள் மத்தியிலும், போராளிகளிடையேயும் பரவியிருந்தது. மரணச் சடங்குகள் முடிவடைந்ததும் மக்களினதும், சக போரளிகளினதும் சோகம் கோபமாக மாற ஆரம்பித்தது.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெளியான தினசரிகள் அனைத்துமே, மிக அண்மையில் திருமணமான குமரப்பா, புலேந்திரன் போன்றோரது திருமண புகைப்படங்களை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்த தமிழ் மக்களின் மனங்கள் ஏற்கனவே கணன்றுகொண்டிருந்தது. மரணமடைந்தவர்களது உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து மக்களும், போராளிகளும் தமது கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள்.

சிறிலங்கா இராணுவத்தினர் மீதான புலிகளின் கோபம் உச்சத்தை எட்டியிருந்தது. புலித் தளபதிகளின் இறந்த உடலங்கள் மீது கூட தமது காழ்ப்புணர்வைத் தீர்த்துக்கொள்ளத் தயங்காத சிங்களப் படையினர் மீதான அவர்களது கோபம் படிப்படியாக சிங்கள மக்களை நோக்கியும் திரும்ப ஆரம்பித்தது.

அடுத்த சில நாட்கள், வடக்கு-கிழக்கு இரத்தமயமாகக் காட்சியளித்தது.

சிறிலங்காப் படையினரின் உடல்கள்

6ம் திகதி காலை யாழ் பஸ் நிலையத்தின் முன்னால் 8 ஸ்ரீலங்காப் படைவீரர்களின் உடல்கள் போடப்பட்டிருந்தன. அவர்களது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன.

23.03.1987 அன்று பண்ணை தொலைத்தொடர்பு கோபுர இராணுவ முகாம் தாக்குதல் சம்பவத்தின் பொழுது புலிகளினால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த 8 ஸ்ரீலங்காப் படையினரின் உடல்களே அவை.

புலிகளின் எல்லை கடந்த கோபம் ஸ்ரீலங்காப் படையினரை நோக்கித் திரும்பியிருந்ததை அது வெளிப்படுத்தியது.

சிங்கள இரத்தத்தால் நனைந்த தமிழ் மண்:

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளர் ஜெயமண்ண மற்றும் உதவி முகாமையாளர் கஜநாயக்க போன்றோர் படுகொலை செய்யப்பட்டு காங்கேசன்துறை சீமேந்துத் தொமிற்சாலையின் முன்பாக வீசியெறியப்பட்டிருந்தன.

சுன்னாகத்தில் பேக்கறி வைத்திருந்த ஒரு சிங்கள முதலாளி கொலைசெய்யப்பட்டார்.

அன்றைய தினம் யாழ்பாணத்தில் தங்கியிருந்த ரூபவாகினி தொலைக்காட்சி ஊழியர்களான அத்தனாயக்க, காமினி ஜெயந்த, நிலாந்த, கருணபால என்ற நான்கு பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலைகளைப் புரிந்திருந்ததாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

போராளிகளுக்கு நடந்த நீதியால் ஆத்திரமடைந்த பொதுமக்களே இதனைச் செய்திருந்ததாக புலிகள் தரப்பு தெரிவித்திருந்தது.

அடுத்த சில தினங்கள், தமிழ் பிரதேசங்கள் எங்கும் இரத்த வெள்ளமாக காட்சி தந்தன.

ஆனால், இம்முறை சிந்தப்பட்ட இரத்தம் தமிழருடையது அல்ல. காலாகாலமாகவே தமிழர்கள் சிந்திய குருதியினால் நனைந்து வந்த தமிழ் மண்ணை, முதல்முறையாக சிங்கள இரத்தம் செந்நிறமாக்கியது.

புலேந்திரன்- குமரப்பா

சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட விடுதலைப் புலித் தளபதிகளில் புலேந்திரன் திருகோணமலையைச் சேர்ந்தவர். திருகோணமலைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளை வளர்த்ததுடன் நீண்ட காலம் திருகோணமலைப்பிராத்தியத்தில் தளபதியாகப் பணியாற்றியிருந்தவர்.

அதேபோன்று தளபதி குமரப்பா அவர்கள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக புலிகள் அமைப்பின் தளபதியாகப் பணியாற்றியிருந்தவர்.

பல போராளிகளை அங்கு உருவாக்கியதுடன் ஏராளமான போராளிகளை அந்தப் பிராந்தியத்தில் வளர்த்திருந்தார்.

எனவே இந்தத் தளபதிகளின் மரணம் என்பது இயல்பாகவே கிழக்கில் பாரிய உணர்வலையை போராளிகள் மத்தியில் உருவாக்கிவிட்டிருந்தது. போதாததற்கு விடுதலைப் புலிகளின் தலமைப்பீடத்தின் கண்ணசைவும் கிடைத்ததைத் தொடர்ந்து சிங்கள பாதுகாப்புப் படையினருக்கு எதிராகவும், சிங்கள மக்களுக்கு எதிராகவும் வன்முறைகள் மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தன.

கிழக்கில் பரவிய வன்முறை

மட்டக்களப்பு நகரின் மத்தியில் கம்பீரமாகக் காட்சிதந்துகொண்டிருப்பது சிறிபால கட்டிடம். மட்டக்களப்பில் சிங்கள முதலாளி ஒருவருக்குச் சொந்தமான கடை மற்றும் குடிமனைத்தொகுதி அது. தமிழ் மக்களுக்கு எதிரான ஸ்ரீலங்காப் படையினரின் அடக்குமுறைகள் முனைப்படைய ஆரம்பித்ததின் பின்னர், இந்தக் கட்டிடமும், அதில் வசிப்பவர்களும் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைய ஆரம்பித்திருந்தார்கள்.

ஸ்ரீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படும் தமிழ் இளைஞர்களின் விடுதலை தொடர்பான பேரம்பேசல்கள் இந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஸ்ரீலங்காவின் விஷேட அதிரடிப் படையினர் சகட்டுமேனிக்கு கைதுசெய்யும் தமிழ் இளைஞர்களை பணத்தை வாங்கிக்கொண்டு விடுவிக்கும் கைங்காரியத்தை ஸ்ரீபால கட்டிடத்தில் வசித்துவந்த சிங்கள முதலாளிகள் ஒரு வியாபாரமாகவே செய்துவந்தார்கள். (சுறனைகெட்ட சில தமிழர்கள் இதனை ஒரு உதவியாகக் கருதி பாராட்டி வந்தது வேறு விடயம்.)

கிழக்கிற்கு பரவிய கலவரத்திற்கு முதலில் பலியானவர்கள் இந்தச் ஸ்ரீபால கட்டிடவாசிகளே. 06.10.1987ம் திகதி நள்ளிரவில் இந்த கட்டிடத்திற்குள் புகுந்த போராளிகள்; சிலர், அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களை வாளினாலும், கத்திகளினாலும் வெட்டிக்கொன்றார்கள்.

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட இருதயபுரம் என்ற பிரதேசத்திற்கு அருகாமையில், ஜயந்திபுர என்றொரு சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பிற்குப் பணியாற்றவென வந்த சிங்களப் பொலிஸ் மற்றும் அரச ஊழியர்களின் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன. இந்தக் குடியேற்றப் பிரதேசமும் தாக்குதலுக்கு உள்ளானது. பலர் கொல்லப்பட்டார்கள்.

மறுநாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் புறப்பட்ட புகையிரதமும், வாழைச்சேனை காகித ஆலைக்கு அருகில் வழிமறிக்கப்பட்டது. அதில் பயணம்செய்த 40 சிங்கள மக்கள் கொல்லப்பட்டு, இரயில் பெட்டிகளில் போட்டு எரிக்கப்பட்டார்கள். மயிலங்கரச்சியைச் சேர்ந்த, தமிழ்-சிங்கள கலப்புப் பெற்றோருக்குப் பிறந்த சுனில், ரவி என்ற விடுதலைப் புலி உறுப்பினர்களே இந்தக் கொலைச் சம்பவத்தை முன்னின்று நடாத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கல்குடா பிரதேசத்திலும் அங்கு வாழ்ந்து வந்த சிங்கள மக்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 25 சிங்கவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

வாழைச்சேனை மற்றும் கல்குh பகுதியில் சிங்கள மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைப் பார்வையிடுவதற்காக சிறிலங்கா அரசாங்கக் குழு ஒன்று பல வாகனங்களில் புறப்பட்டது. சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்க இந்த விசேட குழு மட்டக்களப்பு நகரில் இருந்து புறப்பட்டது. சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பெருமளவில் தொடரணியாக வருவதான தகவல்கள் புலிகளுக்குக் கடைத்தது. இந்த தொடரணிமீது தாக்குதலை மேற்கொள்ளும்படியா திட்டத்தைத் தீட்டிய விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு கொமும்பு நெருஞ்சாலையில் கொம்மாதுறை என்ற இடத்தில் ஒரு கன்னிவெடித்தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலி போராளியான மேஜர் அகத்தியன் என்பவரால் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் மாவட்ட இணைப்பதிகாரி நிமால் டி சில்வா உட்பட 8 சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டார்கள். விசேட அதிரடிப்படை வாகனத் தொடரனியில் பயணம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து உட்பட ஐந்து அரசாங்க அதிகாரிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை.

அரச அதிபர் அந்தோனிமுத்துவின் இல்லத்திற்குச் சென்ற புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரான்ஸிஸ், தாரிணி, டிலினி என்ற அரச அதிபரின் இரண்டு மகள்களிடமும் தமது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருந்தார்.

தாக்கப்பட்ட சிங்களக் கிராமங்கள்

அக்டோபர் 6, 7 மற்றம் 8ம் திகதிகளில் கிழக்கில் உள்ள பல சிங்களக் கிராமங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் தமிழ் இளைஞர்களினால் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகின.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிங்கபுர சிங்களக் கிராமம் மீது 6.10.87 நள்ளிரவு நடைபெற்ற தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டார்கள்.

07.10.1987 அன்று அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் மொனராகல வீதியில் அரச பேரூந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த சிங்கள சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டார்கள். இதேபோன்று புல்மோட்டை வழியாகப் பயணம் மேற்கொண்ட ஒரு தனியார் பேரூந்து ஆயுதம்தாங்கிய சில தமிழ் இளைஞர்களால் இடைமறிக்கப்பட்டு அதில் பயணம் செய்த 11சிங்கள மக்கள் இறக்கியெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.

அதேபோன்று திருகோணமலைப் பிரதேசத்தில் பல சிங்களக் கிரமங்கள் தாக்குதலுக்கு இலக்காகின. அந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 700 சிங்களவர்கள் தமிழர் தரப்பினரால் கொலைசெய்யப்பட்டதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

கண்டனம்

ஒரு யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாத சிவிலியன்கள் கொல்லப்படுவதென்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாததுமானதே என்பதில் சந்தேகம் இல்லை.

கிழக்கில் சிங்கள மக்களுக்கு எதிராகத் தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலை நடவடிக்கைகள் கண்டிக்கப்படவேண்டியவையே.

என்னதான் உணர்ச்சியின் வேகம் என்று கூறிக்கொண்டாலும், 1987ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில், வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் மீது தமிழ் தரப்பினர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை, மனவருந்தத்தக்க ஒரு நிகழ்வுதான். சிங்களத்தின் வெறித்தனமான பிடிவாதத்தைத் தொடர்ந்து, 12 போராளிகள் அநியாயமாக தமது உயிர்களை இழக்க நேரிட்டதன் சோகம், இப்படியான ஒரு ரூபத்தில் வெளிப்பட்டதாக இந்தச் சம்பவங்களுக்கு காரணம் கற்பிக்கப்பட்டாலும், ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு கறைதான் என்பதில் சந்தேகம் இல்லை.

முக்கிய விடயம்

ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாகக் குறிப்பிடவேண்டிய மற்றொரு முக்கிய விடயமும் இருக்கின்றது.

1987 அக்டோபர் முதல் வாரத்தில் தமிழர் தரப்பினால் சிங்கள மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டிப்பதற்கும், விமர்சிப்பதற்குமான உரிமை சாதாரன தமிழ் மக்களுக்கு அல்லது சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இருக்கின்றதே தவிர, இந்தச் சம்பவம் பற்றி வாய்திறப்பதற்கான தகுதி சிறிலங்கா அரசாங்கத்திற்கோ, இந்திய அரசாங்கத்திற்கோ அல்லது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசாங்கங்களுக்கோ கிடையாது என்பதுதான் யதார்த்தம்.

1984ம் ஆண்டு, இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி சீக்கியத் தீவிரவாதிகளினால் கொலைசெய்யப்பட்ட போது, ஆத்திரம் அடைந்த இந்திய மக்கள் நாடுமுழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் இறங்கியிருந்தார்கள். இரண்டு நாட்களில் இந்தியா முழுவது நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

இந்தியாவின் இராணுவத்திலும் சரி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இந்தியாவின் விளையாட்டுத்துறையிலும் சரி, பாரிய பங்களிப்பைச் செய்துவந்த சீக்கிய இன மக்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டார்கள்.

டெல்லி, கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களின் தெருக்களிலெல்லாம் அப்பாவிச் சீக்கியர்களின் பிணங்கள்.

சில நாட்களில் பிரதமர் பதவி ஏற்றுக்கொண்ட ராஜிவ் காந்தியிடம், சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைகள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த ராஜீவ் காந்தி, ’’ஒரு பெரிய மரம் சாயும் போது, சில அதிர்வுகள் அங்கு ஏற்படத்தான் செய்யும். அந்த அதிர்கள் காரணமாக அருகில் இருக்கும் சில புல்பூண்டுகள் அழிந்துவிடுவது தவிர்க்கமுடியாதது’’ என்று பதில் அளித்திருந்தார்.

இதேபோன்று, 83ம் ஆண்டு ஜுலையில் புலிகளின் கன்னிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி 13 சிறிலங்காப்படைவீரர்கள் யாழ்பாணத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் அயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால் கோபம் கொண்ட சிங்கள மக்கள் உணர்ச்சிவசப்பட்டு, இப்படியான காரியத்தைப் புரிந்துவிட்டதாக இந்தச் சம்பவத்திற்கு சிறிலங்கா அரச தரப்பால் நியாயம் கற்பிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும், தமிழ் நாட்டிலும், பெங்களுரிலும் வாழ்ந்துவந்த நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியப் பொலிசாரினால் வகைதொகையின்றிக் கைதுசெய்யப்பட்டார்கள். அடித்து நொறுக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார்கள்.

கடைகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழ் பேசிய பலர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். (இத்தனைக்கும்  ராஜீவ்காந்தியை புலிகள்தான் கொலைசெய்தார்கள் என்ற ஒரு சந்தேகம் மட்டுமே அப்பொழுது அங்கு நிலவியிருந்தது).

பிரதமரை இழந்த சோகத்தில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்ளுகின்றார்கள் என்று நியாயம் கூறப்பட்டது.

2001ம் ஆண்டு செப்டெம்பர் 11 இல், நியுயோர்க் மற்றும் வோஷிங்டனில் இஸ்லாமிய அல்கயிதா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதிபலிப்பு, முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கத் தெருக்களில் தாக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள்.

போதாததற்கு அமெரிக்க காவல்துறையும் அமெரிக்காவில் வாழ்ந்த பல முஸ்லிம் மக்களை கைதுசெய்து துன்புறுத்தியது. தாடியுடன் தலைப்பாகை அணிந்து காணப்படும் சீக்கியர்களைக் கூட, முஸ்லிம்கள் என்று நினைத்து தாக்குதலை நடாத்தியிருந்தார்கள். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர், ’’மக்கள் தமக்கு ஏற்பட்ட தாங்கமுடியாத இழப்பினால் கோபம் கொண்டிருக்கின்றார்கள்“ என்று கூறியிருந்தார்.

சில வருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடொன்றில் ஒரு உல்லாச ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில், அவுஸ்திரேலிய பிரஜைகள் சிலரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் பல முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றியும் ஊடகங்களில் அறிய முடிந்தது. இந்தச் சம்பவத்திற்கும், இயல்பான கோபம் காரணமாகக் கூறப்பட்டது.

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், இழப்புகள் நேர்ந்து, தாங்க முடியாத சோகம் ஏற்படும் போது இயல்பான கோபம் வரலாம், ஆனால் தமிழ் மக்களுக்கு மட்டும் அப்படியான கோபம் எதுவும் வந்துவிடக் கூடாது.

07.09.1996 இல் கிருஷாந்தி போன்றவர்கள் கொல்லப்பட்டதுடன், யாழ்குடாவில் 600இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படையினரால் கொலை செய்யப்பட்டால், அது புலிகள் முல்லைத்தீவு மீது தாக்குதல் நடாத்தியதால் படைவீரர்களுக்கு ஏற்பட்ட மனப்பாதிப்பின் வெளிப்பாடு என்று நியாயம் கற்பிக்கும் சிறிலங்கா அரசாங்கம், 1992ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 9ம் திகதி மைலந்தனையில் 12 சிறுவர்கள் உட்பட 36 தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, – அது டென்சில் கொப்பேகடுவ கொலை செய்யப்பட்டதால் படையினருக்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு என்று நியாயம் கற்பிக்கத் தெரிந்த சிங்கள தேசம், – தமிழ் மக்களுக்கு தாங்கமுடியாத சோகம் ஏற்படும்போது, அவர்களுக்கும் கோபம் ஏற்படத்தான் செய்யும் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

காலாகாலமாகவே சிங்களவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு, பலவிதமான துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வந்த தமிழ் சமுகம், கிளர்ந்து எழுந்த முதலாவது சந்தர்ப்பம் என்று இதனைக் குறிப்பிடலாம்.

வன்முறைகள் மலிந்திருந்த அந்தக் காலத்தில், அதுவும் குறிப்பாக சிங்களப் படையினராலும், சிங்களக் காடையர்களினாலும் தொடர்ந்து வன்முறைக்கு இலக்காகி வந்த தமிழ் சமுகம், ஆற்றமுடியாத தமது கோபத்தை வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பம்தான் என்பதை வேறு வழியில்லாமல் இந்தியா நியாயப்படுத்தியேயாக வேண்டும்.

தமிழ் மக்கள் தமது உரிமையைக் கேட்டாலும் அடி, உண்ணாவிரதம் இருந்தாலும் அடி, சத்தியாக்கிரகம் இருந்தாலும் அடி, தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடாத்தினால் வெடி,

சரி எதுவுமே வேண்டாம் என்று கொழும்புக்கு ஒதுங்கிச் சென்றவர்களுக்கு எதிராகவும் வன்முறை, கலவரம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒருவாறு சமாதானம் திரும்பிவிட்டது என்று நினைத்து, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து, படிப்படியாக சுமுக நிலைக்குத் திரும்புகின்ற வேளையில், இப்படியான ஒரு சம்பவம் இடம்பெற்றுவிட்டதை நினைத்து தமிழ் சமுகம் சோகமும், ஆதங்கமும், கோபமும் கொள்ளத் தலைப்பட்டதில் உள்ள நியப்பாட்டை வேறுவழியில்லாமல் மேற்குலகமும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

ஏனென்றால் தங்களுடைய தரப்பில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்ற சந்தர்பங்களில் சிறிலங்கா தேசமும், இந்தியாவும், மேற்குலகும் இவற்றை நியாயப்படுத்தியிருக்கின்றனவே…

அவலங்கள் தொடரும்…

 


முஸ்லிம்கள் மீது கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 37)

–நிராஜ் டேவிட்

  • November 19, 2012
மட்டக்களப்பு நகரின் மத்தியில், மத்திய வீதியில் அமைந்துள்ள ரீயோ கூல் பார் (Rio Cool Bar) மிகவும் பிரபல்யமான குளிர்பானக் கடை. இந்தக் குளிர்பானக் கடையுடன் இணைந்து ரியோ இலக்ரிகல்ஸ் (Rio Electrical) என்கின்ற மின்சார உபகரணக் கடையும் இருந்தது.

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கடைகள் இவை. இந்தியப் படையினர் இந்தக் கடைகளில்தான் தமக்குத் தேவையான மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்வது வழக்கம். அருகில் உள்ள குளிர்பானக் கடையில் குளிர்பானம் அருந்திவிட்டு, ரியோ இலக்ரிகல்சில் தமக்குத் தேவையான மின்சார உபகரணங்களை கொள்வனவு செய்வார்கள்.அன்றைய தினம் ரியோ கூல்பாரில் குளிர்பானம் அருந்திவிட்டு அருகில் இருந்த மின்சார உபகரணக் கடைக்கு சில இந்தியப் படையினர் சென்றார்கள். கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த முதலாளிக்கு மகிழ்ச்சி. கடையின் உள்ளே இருந்த தனது உதவியாளரிடம் வருபவர்களை நன்றாகக் கவனிக்கும்படி உரிமையாளர் தெரிவித்தார். தனது கடைக்கு வந்த இந்தியப் படை ஜவான்களைக் குறிப்பிட்டு தனது உதவியாளனிடம் “மச்சான்கள் வாறாங்கள் உள்ளே கூட்டிக்கொண்டு போய் கவனி“ என்று தெரிவித்தார்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சாதாரணமாக “மச்சான்’’ என்கின்ற வார்த்தையை அதிகம் உபயோகிப்பார்கள். அதிகம் நட்புரிமை பாராட்டுகின்ற நபர்களை அவர்கள் ’’மச்சான்’’ என்கின்ற வார்த்தையை உபயோகித்துத்தான் அழைப்பார்கள்.

கடைக்கு வந்த இந்தியப் படை ஜவான்களுள் ஒரு தமிழ் நாட்டுப் படைவீரரும் வந்திருந்தார். கடை உரிமையாளர் “மச்சான்’’ என்று தம்மை அழைத்தது அந்த இந்திய வீரருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. கடை உரிமையாளரை சட்டையைப் பிடித்து வெளியில் இழுத்து வந்து தெருவில் போட்டார். நல்ல அடி, உதை கிடைத்தது. கூட வந்த ஹிந்தி ஜவான்களுக்கு என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. ஆனால் அவர்களும் தம்பங்கிற்கு அந்த கடை உரிமையாளரைப் போட்டு மிதித்தார்கள்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் எம்.சீ.எம் இஸ்மைல் அன் சன்ஸ், மொட் சென்டர் என்று நிறைய முஸ்லிம் கடைகள் காணப்பட்டன. தெருவிலும் நிறைய பேர் இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். நிறையப் பேர் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். எதற்கு அந்த வயோதிப நபரைப் போட்டு அடிக்கின்றாhகள் என்று எவருக்குமே புரியவில்லை. கேட்கவும் தைரியம் இல்லை.

கடைசியில் அந்த இந்தியப் படை வீரரே சுற்றிநின்று வேடிக்கை பார்த்தவர்களுக்கு விளக்கினார்.

‘’என்னை இவன் மச்சான் என்று அழைத்தான். இவனுக்கு நான் எப்படி மச்சான் ஆக முடியும்? இவன் ஒரு முஸ்லிம். பாக்கிஸ்தானி. நானோ இந்து. என்னை மச்சான் என்று அழைத்ததன் மூலம் எனது தங்கையை இவன் பெண்டாளக் கேட்கிறான். இது சரியா??’’ என்று கேட்டார். சுற்றி நின்றவர்களுக்கோ திகைப்பு. வேறு வழியில்லாமல் அங்கு திரண்டு நின்ற முஸ்லிம்களும், ’’அவர் மச்சான் என்று அழைத்தது பிழைதான்’’ என்று தெரிவிக்கவேண்டி இருந்தது.

முஸ்லிம்கள் இந்தியப் படை ஜவான்களால் எதற்கெல்லாம் தாக்கப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான். இதுபோன்ற, இதனையும்விட மோசமான நிறையச் சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன.

முஸ்லிம்கள் சாதாரணமாக அணியும், அவர்களது மார்க்க தனித்துவ அடையாளமான தொப்பிகளை அணிந்து செல்லும் முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு ’’பாக்கிஸ்தானி??’’ என்று கேட்டுக் கேட்டுத் தாக்கப்பட்டார்கள்.

பஸ்வண்டிகளில் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இந்தியப்படையினரின் சோதனைச் சாவடிகளில் இறங்காது விட்டால் போதும். அவர் இறக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள். பயணங்களின் போது முஸ்லிம் பெண்கள் ’பர்தா’ அணிவதைத் தவிர்க்கும் ஒரு சூழ்நிலை கூட இந்தியப்படையின் காலங்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உருவாகி இருந்தது. முஸ்லிம் பெண்கள் என்று இந்தியப் படையினர் அடையாளம் கண்டு கொண்டால் பாலியல் சேஷ்டைகள் அதிகம் இடம்பெறும். இந்தியப் படையினருடன் கூட இருந்த தமிழ் இயக்க உறுப்பினர்களும் இதில் சற்று மோசமாகவே நடந்துகொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் முஸ்லிம்கள்:

இந்தியப் படையினரின் இதுபோன்ற துன்புறுத்தல்களின் பலனாக நிறைய முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். பொறுப்பாளர்கள் தரத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் செயற்படும் அளவிற்கு முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு அக்காலகட்டத்தில் காணப்பட்டது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத் தளபதிகளான கரிகாலன், விசு போன்றவர்களின் மெய்ப்பாதுகாவலர்களாக முஸ்லிம் போராளிகளே இருக்கும் அளவிற்கு முஸ்லிம் இளைஞர்கள் இந்தியப் படையினருக்கு எதிரான போராட்டங்களில் முனைப்பு வெளிப்படுத்தியிருந்தார்கள்.

விளைவு: பல முஸ்லிம் கிரமங்கள் இந்தியப் படையினருதும், இந்தியக் கைக்கூலிகளினுடையதும் தாக்குதல்களுக்கு உள்ளாகவேண்டிய துர்பாக்கிய நிலை உருவானது.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு, பொத்துவில், காத்தான்குடி, மூதூர், ஓட்டைமாவடி போன்ற முஸ்லிம் கிராமங்கள் இந்தியப் படையின் தாக்குதல் கொடுமைகளுக்கு உள்ளாயின.

தாக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள்:

முஸ்லிம்கள் மீதான இந்தியப் படையினரின் தாக்குதல்களுக்கு முத்தாய்ப்பாக அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

இந்திய றோவினால் வழிநடத்தப்பட்ட திறீ ஸ்டார் அமைப்புடன் இணைந்து சென்ற இந்தியப்படையினர் அம்பாறை மாவட்டத்தில் சாந்தமருது மற்றும் மாளிகைக்காடு முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

1988ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்த கிராமங்களுக்கு இந்தியப் படையினர் வாகனங்களில் வந்திறங்கி சகட்டுமேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 16 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 67 வீடுகள் சூறையாடப்பட்டு சேதமாக்கப்பட்டன. 65 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், உடமைகள் சேதமாக்கப்பட்டதாக கணிப்பிடப்பட்டது. பல முஸ்லிம் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளானார்கள். இரண்டு வயதுக் குழந்தைகள் முதல் 60 வயது முதியவர்கள்வரை இந்தியப் படையினரால் கொல்லப்பட்டிருந்தார்கள்.   விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இந்தக் கிராமத்து மக்கள் தஞ்சம் அளித்தார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு.

இந்தக் கிராமங்கள் முழுக்கமுழுக்க முஸ்லிம் கிராமங்கள் என்பதும் இந்தக் கிராமங்கள் மீது இந்தியப் படையினர் தாக்குதல் மேற்கொள்ளுவதற்கான இரண்டாவது காரணம்.  இதேபோன்ற தாக்குதல் சம்பவங்கள் பொத்துவில், காத்தான்குடி, மூதூர், ஓட்டைமாவடி போன்ற முஸ்லிம் கிராமங்களில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

“அது நாங்கள் அல்ல..“

முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியப் படையினர் தாக்குதல் நடாத்துவது பற்றி பல கண்டனங்கள் எழுந்தன.

இந்திய முஸ்லிம் அமைப்புக்கள் மூலமாக இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட ஆரம்பித்தன. களத்தில் இருந்த இந்தியப் படையினர் இலகுவாகவே பொறுப்பை திறிஸ்டார் அமைப்பின் மீது சுமத்தியிருந்தார்கள்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து 1988 ஏப்ரல் மாதம் இந்தியப்படைத் தளபதிகளுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியப் படையின் அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த கிருஷ்ணசுவாமி லோகநாதன் அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் “இந்திய-இலங்கை ஒப்பத்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்கமறுத்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை முற்றாகவே அழிக்கும்படியான உத்தரவு இந்தியப் படையினருக்கு கிடைக்கப்பெற்றது. அதனால் புலிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் அரவணைக்கவேண்டிய ஒரு தேவை எங்களுக்கு உருவானது. திறிஸ்டார் என்ற அமைப்பும் அந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த திறிஸ்டார் உறுப்பினர்கள் தங்களுடைய ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு எதிராக இப்படித் திருப்புவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

அதாவது தமக்கெதிராக எழுப்பப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மிகவும் இலகுவாக தமிழ் இயக்கங்கள் மீது அவர் திருப்பிவிட்டிருந்தார்.

வரப்பிந்திய படையினர்:

இதில் ஒரு விடயம் முக்கிமானது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற இடங்களில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இந்தியப் படையின் முகாம்கள் அமைந்திருந்தன. முஸ்லிம் கிராமங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சுமார் ஒன்று முதல் மூன்று மணி நேரம்வரை நீடித்தன. ஆனால் ஒவ்வொரு தடவையும் தாக்குதல் நடைபெற்று முடிந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர்தான் இந்தியப் படையினர் ஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தார்கள்(தமிழ் சினிமாக்களில் இந்தியப் பொலிசார் வருவதைப் போன்று).

இந்தியப் படையினரே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமாணவர்கள் என்று முஸ்லிம்கள் நம்புவதற்கு இவைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

அவலங்கள் தொடரும்…


 

புலிகளுடன் முஸ்லிம்கள் செய்துகொண்ட ஒப்பந்தம்!- (அவலங்களின் அத்தியாயங்கள்- 38)

–நிராஜ் டேவிட்

  • by admin
  • November 19, 2012
இந்தியப் படையினர் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப் பகுதிகளில் முஸ்லிம்கள் மீது அவர்கள் வெளிப்படுத்திய வெறுப்புணர்விற்கான சில மாதிரிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.

கிழக்கு முஸ்லிம்களின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு மோசமான அவலநிலையை அவர்கள் சந்தித்த காலம் என்று இந்தியப்படையின் ஆக்கிரமிப்பு காலத்தைக் குறிப்பிடலாம்.அதேவேளை முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிக நெருக்கத்தினை ஏற்படுத்திய காலப்பகுதி என்றும் அந்தக் காலப்பகுதியைக் குறிப்பிடலாம்.

ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு இந்தியப்படையினரைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தார்கள். கால ஓட்டத்தில் அவ்வாறு செய்யவும் தலைப்பட்டார்கள்.

மட்டக்களப்பு தரவை, தாண்டியடி, கிளிநொச்சி போன்ற இடங்களில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏராளமான முஸ்லிம் மாவீரர்களின் கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. (சிறிலங்காப் படைகளால் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்படும்வரை முஸ்லிம்களின் கல்லறைகள் அங்கு பேணப்பட்டுவந்தன)

இந்தியப்படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், அந்தப் பங்களிப்பினால் இலங்கையின் இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்ட அவலங்கள் பற்றியும் மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

அதற்கு முன்பாக இந்தியப்படை காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

முஸ்லிம்களும் ஈரோஸ் அமைப்பும்

தமிழீழ போராட்ட அமைப்புக்களிலேயே ஈரோஸ் (EROS- Eelam Revolutionary Organisation of Students) அமைப்புத்தான்; கிழக்கு முஸ்லிம்களையும் உள்ளடக்கியதான ஒரு விரிந்த போராட்டப்பாதையை உருவாக்கி அதில் பயணிக்கவும் தலைப்பட்ட முதலாவது அமைப்பு என்று கூறலாம்.

1975ம் ஆண்டு இளையதம்பி இரட்ணசபாபதி மற்றும் பொறியியலாளர் ஏ.ஆர். அருட்பிரகாசம் (அருளர்) போன்றவர்களால் லண்டனில் வைத்து ஈரோஸ் அமைப்பு உருவாக்கப்பட்டபொழுதே கிழக்கு வாழ் இஸ்லாமியர்களின் தேவைகள், இருப்பு, எதிர்காலம் போன்றனவற்றையும் கருத்தில் கொண்டே அந்த அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகள் போன்றன வடிவமைக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களிலும் இஸ்லாமியர்களின் தனித்துவம் போணப்படவேண்டும் என்பது ஈரோஸ் அமைப்பின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாவே இருந்துவந்தது.

ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அனைத்தும் கிழக்குவாழ் முஸ்லிம்களை தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாகவே கருதி அவர்களைக் கையாள முற்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற பார்வையைத் தனதாகக் கொண்ட ஒரே தமிழ் போராட்ட அமைப்பு ஈரோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்பும் ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான தேசிய இனமாகக் கருதி அவர்களை அனுகவில்லை என்றுதான் கூறவேண்டும்.

(இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட இருந்த வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகசபையின் பிரதிநிதிகளாக சில இஸ்லாமிம்களை புலிகள் பிரேரித்திருந்தாலும், அந்த முஸ்லிம் பிரதிநிதிகள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதைவிட புலிகள் அமைப்பின் முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற அடையாளத்தையே அப்பொழுது கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது)

இப்படியான பின்னணியில்தான் 17.04.1988 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையில் ஒரு வரலாற்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

இலங்கையின் இனவிடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு தமிழ் அமைப்பிற்கும் இஸ்லாமியச் சமூகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முதலாவது ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தூதுக்குழு

சென்னை அடையாற்றில் உள்ள இந்திரா நகரில்தான் புலிகளின் அலுவலகம் இருந்தது. அலுவலகத்திற்கு பொறுப்பாக கஸ்ரோ இருந்தார். புலிகளின் மூத்த உறுப்பினர் பேபி சுப்பிரமணியம், கிட்டு போன்றோரும் அங்கு இருந்தார்கள்.

இந்தியப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலகட்டத்திலும் இந்த அலுவலகம் செயற்பட்டுக்கொண்டுதான் இருந்தது.

சென்னையில் இருந்த கிட்டு உட்பட பலரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துகொண்டிருந்த பொழுதும் இந்திரா நகரில் இருந்த புலிகளின் அலுவலகம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது.

அந்த அலுவலகத்தில் இருந்த சக்திவாய்ந்த தொலைத்தொடர்புக் கருவிகளினுடாக வன்னியில் இருந்த புலிகளின் தலைமையுடன் கிட்டு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

(புலிகளின் நடவடிக்கை தொடர்பான முக்கியமான தகவல்களை ஒட்டுக்கேட்டு அறிந்துகொள்ளமுடியும் என்ற காரணத்தால் இந்த தொலைத்தொடர்பு கருவிகளை புலிகள் சென்னையில் வைத்திருப்பதற்கு இந்தியப் புலனாய்வுத்துறை தெரிந்தே அனுமதித்திருந்தது)

1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் துதுக்குழு விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை சென்னை அடையாற்றில் இந்திரா நகரில் இருந்த புலிகளின் அலுவலகத்தின் ஆரம்பித்தது.

இந்த பேச்சுவார்தைக்கு முஸ்லிம்கள் தரப்பில் பதியுதீன் முகமட் தலைமை தாக்கினார். கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான எம்.ஐ.எம். மொகைதீன் அவர்களும் அங்கம் வகித்திருந்தார். புலிகள் தரப்பில் தளபதி கிட்டு தலைமைதாங்கினார். பேபி சுப்ரமணியம் உட்பட சில முக்கியஸ்தர்கள் புலிகள் தரப்பில் கலந்துகொண்டார்கள்.

முன்னர் சிறிலங்காவின் கல்வி அமைச்சராக இருந்த பதியுதின் முகமட் பற்றிப் பெரிதாக எனக்குத் தெரியாது. வியாபாரத்ததையே முதன்மையாக நினைத்துக்கொண்டிருந்த கிழக்கு முஸ்லிம்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை கல்விப்பாதையில் நடப்பித்த ஒரு முஸ்லிம் தலைவர் என்பதைத் தவிர அவர் பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது.

ஆனால் முஸ்லிம்களின் துதுக்குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்ர் எம்.ஐ.எம்.முகைதீன் எனக்கு நன்கு பரிச்சயமானவர். முஸ்லிம்கள் தொடர்பான ஆழ்ந்த அக்கரை உள்ளவர். அதேவேளை தமிழ் முஸ்லிம் உறவு நீடித்து நிலைக்கவேண்டும் என்பதில் அதிக கரிசனை உள்ளவர்.

2002 சமாதான காலத்தில் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையினால புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் குலைக்கும் சதிகளுக்கு இந்தியா கிழக்கின் முஸ்லிம்களைப் பயன்படுத்த நினைத்த நேரத்தில், இந்தியச் சதியை முறியடிக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறையை வெளிப்படுத்தியவர் முகைதீன்.

கிழக்கு முஸ்லிம்களின் பிரதான பிரச்சனை அவர்களது வயல் நிலங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருப்பதுதான் என்பதை உணர்ந்துகொண்டு, புலிகளுடன் இதுபற்றிப் பேசி, முஸ்லிம்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள தமது வயல்நிலங்களில் பயிர் செய்யும் ஏற்பாட்டை தனி மனிதனாக நின்று மேற்கொண்டவர் முகைதின்.

புலிகளின் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் தொடர்சியான கலறந்துரையாடல்களை ஏற்பாடு செய்து, அந்தச் சந்திப்புக்களினூடாக கிழக்கில் தமிழ் முஸ்லிம் கலவரம் ஏற்படால் தடுத்தவர் ஜனாப் முகைதீன் என்றால் மிகையாகாது. (2002 சமாதான காலத்தில் முகைதீன் தலைமையில் நடைபெற்ற புலிகள்-முஸ்லிம் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)

இப்படியான சில பேச்சுவார்தைகளில் ஒரு ஊடகவியலாளனாகக் கலந்துகொண்டவன் என்கின்ற ரீதியிலும் தமிழ் சமூகத் தலைவர்களிடையேயான சில சந்திப்புக்களை ஏற்பாடுசெய்து ஒருங்கமைப்பாளனாகக் கடமையாற்றியவன் என்கின்ற ரீதியிலும் ஜனாப் எம்.ஐ.எம்.மொகைதீன் அவர்கள் பற்றியும், தனது இனம் தொடர்பான அவர் கொண்டிருந்த வைராக்கியமும் பற்றியும், தமிழ் முஸ்லிம் உறவின் எதிர்காலம் பற்றிய அவரது ஆழ்ந்த அக்கறை பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும்.

எனவே புலிகளுடனான அந்தப் பேச்சுவார்த்தை சம்பிராயபூர்வமானது என்பதைக் கடந்து தமிழ் முஸ்லிம் உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் உயரிய நோக்கத்துடன் கூடியதாக இருந்திருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

1988 ஏப்ரல் 15ம் திகதி ஆரம்பமான பேச்சுவார்த்தை 16ம் திகதியும் நடைபெற்றது. முஸ்லிம்களின் தனித்துவம், முஸ்லிம்களின் தாயகம், அதிகாரப் பகிர்வு போன்ற முக்கியவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பேச்சுவார்தையில் பேசப்பட்ட அத்தனை விடயங்களும் வன்னியில் இருந்த புலிகளின் தலைமைக்கு தொலைத்தொடர்பு கருவிகளினூடாக அறிவித்தபடி இருந்தார் கஸ்ரோ. ஒப்பந்தம் பற்றிய முடிவு புலிகளின் தலைமையினால் தொலைத்தொடர்பினூடாக அறிவிக்கப்பட்டதும், 17ம் திகதி புலிகளுக்கும் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட விடயங்களில் சில:

1. இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட, தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஒரு இனக்குழு என்பதையும், வடக்கு கிழக்கு மாகானம் ஏனய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகமாக உள்ளது போலவே முஸ்லிம்களினது பாரம்பரிய தாயகமாக உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்கின்றோம்.

2. 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது.

3.  தமிழ் பேசும் சமூகத்தின் தாயகத்தற்கும் ஒருமைப்பாட்டிற்கும் முஸ்லிம்கள் குந்தகம் விளைவிக்கக்கூடாது.

4.  ஒன்றிணைந்த வடக்கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம்கள் 30வீதமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்க உரித்துடையவர்கள்.

5.  பொதுத்துறை வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள் அந்தந்தப் பிரதேசத்தில் விகிதாசார அடிப்படையில் தெரிவுசெய்யப்படவேண்டும்.

6.  வடக்கு கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் முறைப்படி தெரிவுசெய்யப்படாத பட்சத்தில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நபர் நியமிக்கப்படவேண்டும்.

7.  தமிழ்பேசும் மக்களின் தாயகத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் அங்குள்ள இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் வகையிலும் அவர்களது பொருளாதார அரசியல் நிர்வாகப் பலத்தினை முறியடிக்கும் கொள்கையுடனும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரச குடியேற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை களையும் வகையில் ஒரு குடியகல்வுக் கொள்கை உருவாக்கப்படவேண்டும்.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் முக்கியமான விடயங்கள் இவைதான்.

புலிகள் தரப்பில் கிட்டுவும், முஸ்லிம்கள் தரப்பில் பதியுதீன் முகமட் அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள்.

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் தரப்பும் முஸ்லிம்கள் தரப்பும் முதன்முதலாக ஒரு உடன்பாட்டுக்கு வந்த சந்தர்ப்பம் என்ற வகையில் இந்த ஒப்பந்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

அத்தோடு, விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம்தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி உடன்பாடுகண்ட முதலாவது சந்தர்ப்பம் என்ற வகையிலும் இந்த உடன்படிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.

தொடரும்

இந்திய இராணுவம் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 39) –நிராஜ் டேவிட்
80களின் பிற்பகுதியில் இந்தியப் படைகள் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதி. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியத் துருப்புக்கள், இந்தியாவின் முப்படைகள், ஆயிரக்கணக்கான இந்தியச் சார்பு தமிழ் ஆயதக்குழுக்கள் என்பன, தமிழீழ மக்கள் மீது பாரிய ஆக்கிரமிப்பொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

தமிழீழம் ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டிருந்தது.தமிழ் மக்கள் கைதிகளாகவே நடத்தப்பட்டார்கள். வகைதொகையின்றி தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார்கள். கொள்ளைகள், கொலைகள் பரவலாகவே இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

இப்படி பல காரியங்கள் ஒரு பக்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், மறுபக்கத்தில் மற்றொரு முக்கியமான காரியத்தை இந்தியப் படையின் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தார்கள்.

மிகவும் இரகசியமாக, அதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தைக்  குறிவைத்து பரந்த அளவில் இந்தக் காரியத்தை அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள்.

கஞ்சாச் செய்கை.

வடக்கு கிழக்கு முழுவதிலும் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் கஞ்சா விதைகளை தூவி, கஞ்சா செடிகளை உருவாக்கும் காரியத்தைத்தான் அவர்கள் அதிசிரத்தையுடன்; செய்துகொண்டிருந்தார்கள்.

வடக்கு கிழக்கில் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கஞ்சாச் செடிகளை இந்தியப் படைகள் உருவாக்கினார்கள்.

இந்தியப் படைகள் வடக்கு கிழக்கில் கஞ்சாச் செடிகளை இத்தனை ஆர்வமாக உருவாக்குவதற்கு காணம் என்ன ?

அப்பொழுது இந்த விடயத்தைப் பற்றி தமிழ் மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. அக்காலகட்டத்தில் இந்தியப் படை ஜவான்கள் ஈழத்தில் பல வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

வெளிநாட்டு மின்சார உபகரணங்களை மலிவு விலையில் கொள்வனவு செய்து இந்தியாவிற்கு கொண்டு செல்வது முதல், நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த பாரிய மரங்களை வெட்டி இந்தியாவிற்கு கொண்டு செல்வது வரை, பல வியாபார நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். கஞ்சா செடிகளை உருவாக்கி கஞ்சாவை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காகவே இந்தியப் படையினர் கஞ்சா செய்கையில் ஆர்வம் காண்பிப்பதாக நினைத்து தமிழ் மக்கள் இந்த விடயத்தில் அத்தனை ஆர்வம் காண்பிக்கவில்லை.

ஆனால் ஈழத்து இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே, இந்தியா இத்தகைய கைங்காரியத்தைச் செய்து வருகின்றது என்று பாவம் எமது மக்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

கேவலமான சதி:

தமிழர் பிரதேசங்களில் இந்தியப் படைகள் கஞ்சா செடிகளை வளர்த்ததற்கு பல காரணங்கள் இருந்தன.

முதலாவது, தமிழ் மக்களை கஞ்சா வியாபாரம் செய்வதற்குத் தூண்டுவது. யுத்த நிலை காரணமாக அக்காலகட்டத்தில் பல தமிழ் விவசாயக் குடும்பங்கள் பொருளாதார இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். நல்ல வருமானமுள்ள ஒரு தொழிலாக கஞ்சா வியாபாரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயக் குடும்பங்களை, கஞ்சாப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தமுடியும் என்று இந்தியத் தரப்பினர் நினைத்திருக்கலாம்.

ஆனால், இந்தியப் படையினர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையை பாரிய அளவில் மேற்கொள்ளுவதற்கு, மேற் கூறப்பட்டதை விட மற்றொரு மற்றொரு முக்கிய நோக்கம் அவர்களுக்கு இருந்ததாக பின்நாட்களில் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருந்தார்கள். வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்களை கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் ஒரு கேவலமான நோக்கம் இந்தியாவிடம் காணப்பட்டதாக புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

கஞ்சா புழக்கம் தமிழ் பிரதேசங்களில் அதிகமாக, அதிகமாக, தமிழ் இளைஞர்கள் கஞ்சாவைப் புகைக்க ஆரம்பிப்பார்கள். படிப்படியாக கஞ்சாப் பழக்கம் தமிழ் இளைஞர்களிடையே பரவிவிடும்.

கஞ்சா புகைப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எம்மில் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கும். எதற்கும் கவலைப்படாமல், அனைத்திற்குமே சிரித்தபடி, ஒருவித போதை மிதப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு கோபம் என்பது ஒருபோதும் வராது. எந்தவித உணர்ச்சியும் ஏற்படாது. எப்படியான நிகழ்வுகளும் அவர்களைப் பாதிக்காது. ஒரு முறை கஞ்சாவை உட்கொண்டவர்கள், தொடர்ந்து கஞ்சாவை உள்கொள்ளும்படியான போதைக்கு அடிமைகளாக மாறிவிடுவார்கள். இதுதான் கஞ்சாவின் மகிமை.

இப்படிப்பட்ட போதைக்கு, தமிழ் இளைஞர்களை அடிமையாக்க இந்தியா ஏன் விரும்பியது?

சிதைக்கும் நோக்கம்:

ஈழத்தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்ச்சிகளை அழிக்க இந்தியா விரும்பியது. எதிர்கால ஈழத் தமிழ் சந்ததியினரை, தமது இனம் சார்ந்த எந்தவித பிரஞ்சையும் இல்லாத ஒரு சந்ததியாக உருவாகவேண்டும் என்று இந்தியா திட்டமிட்டது. தனது இந்த கேவலமான சதியின் ஒரு நகர்வாகத்தான், இந்தியத் தரப்பினர் தமிழீழப் பிரதேசங்களில் கஞ்சாச் செடிகளை இலட்சக்கணக்கில் உருவாக்கியிருந்தார்கள்.

இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகள், தற்பொழுது கூட வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகளை அழிக்க, இந்தியப் படையின் வெளியேற்றத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் வனவளத்துறை கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்ததாக புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஒருதடவை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சண்டைகள் அதிகம் இடம்பெறும் பிரதேசங்களான வாகநேரி, பொண்டுகள்சேனை, காயங்கேணி, குளத்துமேடு போன்ற பிரதேசங்களில் இந்தியப் படையினர் விதைத்த இலட்சக்கணக்கான கஞ்சாச் செடிகள் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கின்றன.

முகாம்களிலும்:

தமிழ் இளைஞர்களிடையே போதைப் பழக்கவழக்கத்தை உருவாக்கும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையின் மற்றொரு பக்கம், அக்காலங்களில் இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக் குழக்களின் முகாம்களில் அரங்கேறியிருந்தது. தமிழ் குழுக்களது முகாம்களுக்கு இந்திய ’ரம்’ மதுப்புட்டிகள் பெட்டி பெட்டியாக வினியோகிக்கப்பட்டன.

தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் இந்தியாவின் விஷேட மதுபானமான ரம் இற்கு அடிமையாகியிருந்தார்கள். அத்துடன் வெற்றிலை பாக்குடன் ஒரு வகைப் போதை வஸ்தை கலந்து தயாரிக்கப்படும் ’பாண் பராக்’ எனப்படும்- மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளுக்கும், தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் திட்டமிட்டு அடிமையாக்கப்பட்டிருந்தார்கள்.

பங்களாதேஷிலும்….

இந்த கஞ்சாச் செடி வளர்க்கும் சதியை இந்தியா ஈழத்தில் மட்டும் அரங்கேற்றியிருக்கவில்லை. ஏற்கனவே பங்காளதேஷை விடுவிக்கவென்று இந்தியப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்த காலத்திலும், இதே வகையான பயிர் வளர்ப்பை அங்கு மேற்கொண்டிருந்தார்கள். ஈழத்தைப் போலல்லாது பங்காளதேஷில் இந்தியா தனது சதியின் பயனை அறுவடைசெய்து வருகின்றது.

முன்னர் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்த பங்களாதேஷ் நாட்டின் இன்றைய தலைமுறையினரில் அதிகமானவர்கள் கஞ்சா போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். பங்களாதேஷின் இளம் தலைமுறையினரிடையே இன்று புரையோடிக் காணப்படும் போதை வஸ்துப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு அந்நாட்டு அரசு இன்றைக்கும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் விடுதலைப் போராட்டம் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களிலுள்ள காடுகளிலும், கிராமங்களிலும் கூட இந்தியப் படைகள் கஞ்சாப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது.

இரகசிய நடவடிக்கைகள்.

இலங்கையைப் பொறுத்த வரையில் இந்திய இராணுவத்தினர் பல்வேறு சந்தர்பங்களில் பலவிதமான இரகசிய இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்தார்கள். மிகவும் இரகசியமாகத் திட்டமிடப்பட்டிருந்த இத்தகைய நடவடிக்கைகளில் சில நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தன. சில வெளித்தெரியவராமல் மறைக்கப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான இந்தியாவின் இரகசியப் புலனாய்வு நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இலங்கையில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட சில முக்கிய இராணுவ நடவடிக்கைகள் பற்றி இன்றைய அத்தியாயத்தில் ஓரளவு மேலோட்டமாக ஆராய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இலங்கையின் இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா நேரடியாகவும், மறைமுகமாகவும், இரகசியமாகவும் பல தலையீடுகளைச் செய்து வருகின்ற இன்றைய காலகட்டத்தில், இலங்கை தொடர்பான இந்தியாவின் கடந்தகால அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய அறிவும் தெளிவும் தமிழ் இனத்தின் மத்தியில் இருப்பது அவசியம் என்பது – காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது.

இராணுவ நடவடிக்கைகள்:

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் இராணுவத் தலையீடுகள் முதன்முதலில் 1971ம் ஆண்டு ஆரம்பமாகி இருந்தன – என்று கூறலாம்.  ஜே.வீ.பி.யை அடக்குவதற்கு என்று, ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையின் பெயரில், இந்தியப்படைகள் இலங்கைக்கு வந்திருந்தன.

அதன் பின்னர் 1987ம் ஆண்டில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு என்று கூறி, இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்திருந்தன.

இந்த இரண்டு நடவடிக்கைளும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் அரசாங்கத்தின் அழைப்பின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேபோன்று விடுதலைப்புலிகள் யாழ் குடாவைக் கைப்பற்ற மேற்கொண்டிருந்த ஓயாத அலைகள்-4 நடவடிக்கைகளின் போது, யாழ் குடாவில் முற்றுகைக்கு உள்ளாகி இருந்த ஸ்ரீலங்கா படையினரைக் காப்பாற்ற இந்தியப் படையினர் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி இருந்தார்கள்.

பலாலி தளத்தைக் கைப்பற்றி ஒரு நாள் முழுவதும் அதனைத் தக்கவைத்தபடி ஸ்ரீலங்காப் படையினரை வெளியேற்றுவதற்கு இந்தியப் படையினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இறுதி நேரத்தில் பலவேறு காரணங்களினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டன.

அந்த நடவடிக்கையும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பெயரிலேயே மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

அதேவேளை, ஸ்ரீலங்கா அரசின் அனுமதி இல்லாமல் இலங்கையில் படைநடவடிக்கைள் எடுப்பதற்கான திட்டங்கள் சிலவற்றையும் இந்தியப் படையினர் முன்னர் வகுத்திருந்தார்கள்.

அவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியுமிருந்தார்கள்.

1987ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஸ்ரீலங்காப் படைகள் யாழ்ப்பாணம் வடமாராட்சியில் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது, யாழ் மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போடும் ஒப்பரேசன் பூமாலை நடவடிக்கை 04.06.1987 அன்று இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதி இன்றி இலங்கையில் இந்தியா மேற்கொண்ட ஒரு அதிரடி இராணுவ நடவடிக்கை இது.

இரகசியத் திட்டங்கள்:

இது போன்று சிறிலங்கா அரசுக்கு எதிராக இலங்கை மண்ணில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு இந்தியா பல இரகசியத் திட்டங்களை வகுத்திருந்த விடயம் பின்நாட்களிலேயே வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

80 களின் ஆரம்பத்தில் ஈழப் போராளிகளை அடக்குவதற்கு என்று ஜே.ஆர். அரசாங்கம் மேற்குலக நாடுகளின் பக்கம் சாய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சிறிலங்காவை வழிக்குக் கொண்டு வருவதற்கும், இலங்கை மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கும் – இந்தியா பல திட்டங்களை வகுத்திருந்தது.

இனப்பிரச்சினையைக் காரணம் காண்பித்து இந்தியாவின் அப்போதைய ஜென்ம விரோதிகளான அமெரிக்கா, பாக்கிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்தெல்லாம் ஸ்ரீலங்கா அரசாங்கம், ஆயுதம் மற்றும் பல்வேறு உதவிகளையெல்லாம் பெற ஆரம்பித்திருந்ததைத் தொடர்ந்து, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கம் இந்திய அரசியல் தலைமையிடம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது.

அதற்கான ஒரு இராணுவத் திட்டமும் தீட்டப்பட்டது.

அதேவேளை, இந்திய இராணுவத்தின் தளபதி பொறுப்பை கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜீ புதிதாக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தியப் படைகள் நவீனமயப்படுத்தப்பட்டன. புதிய போர் யுக்திகள் வகுக்கப்பட்டன. நவீன ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவம் தான் புதிதாகப் பெற்றிருந்த தனது பலத்தைப் பரீட்சித்துப்பார்க்க ஒரு இடத்தைத் தேடிவந்தது.

அதேவேளை இலங்கை மீது ஒரு ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவேண்டிய அரசியல் தேவையும் உருவாகி இருந்ததால், இலங்கைத் தீவை தனது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு நிலையமாகத் தெரிவுசெய்து கொண்டது. இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்தியப் படைத்தளபதி சுந்தர்ஜீயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை மீது மேற்கொள்ளப்பட இருந்த படையெடுப்பிற்கு யார்யார் தலைமை தாங்குவது, எந்தெந்த இலக்குகளைத் தாக்குவது, எந்தெந்தப் படைப்பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குபற்றுவது என்றெல்லாம் திர்மாணிக்கப்பட்டிருந்தது. இலங்கை மீது மேற்கொள்ளப்பட இருந்த தாக்குதல் நடவடிக்கைக்கு திரிஷக்தி என்று பெயரும் சூட்டப்பட்டிருந்தது.

ஏதோ காரணத்திற்காக இந்த நடவடிக்கை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.

ஸ்ரீலங்காவிற்கான பணி:

இதேபோன்று இலங்கைக்கு எதிரான மேற்கொள்வதற்கென்று மற்றொரு இரகசிய நடவடிக்கையும் திட்டமிட்டப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தியின் பணிப்புரையின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்காக இந்திய இராணுவத்தின் பல்வேறு படை அணிகளைக் கொண்ட தனிப் பிரிவொன்றும் 1987ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. `MO-SL’  என்று இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பெயரிடப்பட்டிருந்தது.

`MO-SL’ என்றால் (Mission Of Sri Lanka) என்று அர்த்தம்.

87ம் ஆண்டு ஜுன் மாதம் 4ம் திகதி இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட ஒப்பரேசன் பூமாலை(Operation Poomalai) நடவடிக்கைக்கு ஸ்ரீலங்காப் படையினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தால் இந்தியப் படையின்; இந்த விஷேட பிரிவினர் களமிறக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒப்பரேஷன் பூமாலை நடவடிக்கையின்போது ஸ்ரீலங்காப் படையினர் எதுவுமே செய்யமுடியாது அடங்கிப்போயிருந்ததால் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிருந்தது.

இதேபோன்று, இலங்கையில் மேற்கொள்ளுவதற்கென்று இந்தியா மற்றொரு இரகசிய இராணுவ நடவடிக்கையையும் திட்டமிட்டிருந்தது.

ஒப்பிரேஷன் கொழும்பு:

இந்தியப் படைகள் இலங்கைக்கு வருவதற்கு சற்று முந்திய காலப்பகுதியில், கொழும்பில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன்; இரகசிய இராணுவ நடவடிக்கை ஒன்றை இந்திய இராணுவம் திட்டமிட்டிருந்தது.

யாழ்பாணத்தில் ஆப்பரேசன் பூமாலை(Operation Poomalai) இராணுவ நடவடிக்கை இடம்பெறுவதற்கு சற்று முன்னர் இந்த இரகசிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது.

வெளியே எவருக்கும் தெரியாது இந்தியா மேற்கொண்டிருந்த இந்த இரகசிய நடவடிக்கை பற்றி, ராஜேஷ் காடியன் என்கின்ற இந்திய இராணுவ ஆய்வாளர் பின்னாட்களிலேயே தகவல் வெளியிட்டிருந்தார். INDIA’S SRI LANKA FIASCO என்ற தனது ஆய்வு நூலில் இந்தியாவின் இந்த இரகசிய இராணுவ நடவடிக்கை பற்றி அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.

1987 இல், ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பு மீது, அல்லது கொழும்பிலுள்ள முக்கிய இலக்கொன்றின் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு இந்தியா திட்டமிட்டிருந்தது. அதற்காக இந்திய இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற பராக் கொமாண்டோக்கள் 100 பேர் கொழும்பிற்கு அனுப்பப்பட்டிருந்தார்கள்.

இந்தப் பராக் கொமாண்டோக்கள் பொதுமக்கள் போலவும், வியாபாரிகள் போலம் மாறுவேடமிட்டே கொழும்புக்கு வந்திருந்தார்கள். கொழும்பின் புறநகர் பகுதியில் இருந்த இந்திய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா ஒன்றிலும், மற்றொரு இந்தியருக்குச் சொந்தமான ஆடம்பர ஹோட்டல் ஒன்றிலும் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

இவர்கள் மேற்கொள்ள இருந்த தாக்குதலுக்கு உதவுவதற்காகவும், மேலதிக துருப்பக்களை ஏற்றி இறக்குவதற்கு ஏதுவாகவும், நான்கு எம்.ஐ.-8 ரக உலங்குவானூர்திகள் இந்தியாவின் தென்கரைப் பகுதி ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஏதோ காரணத்தினால் இறுதி நேரத்தில் அந்த இரகசிய நடவடிக்கை கைவிடப்பட்டது. பின்னர் அந்தப் பராக்கொமாண்டோக்களில் சிலர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைப் பாதுகாக்க அனுப்பட்டார்கள் மற்றவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டார்கள்.

மலையகத்தில்:

இதேபோன்று,1987-88ம் ஆண்டுகளில் இலங்கையில் இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தபோதும், இலங்கையில் மேற்கொள்வதற்கு என்று இந்திய இராணுவத்தினர் மற்றொரு இரகசியத் திட்டத்தை தீட்டியிருந்தார்கள்.

இந்தியாவிற்கு எதிராக ஜே.வீ.பியினர் தென்பகுதியில் பிரச்சாரங்களைக் கட்விழ்த்துவிட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வன்முறையில் இறங்கியிருந்த காலப்பகுதியில் இந்தியப் படையினர் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டடிருந்தனர்.

இந்தியப் பொருட்களை கடைகளில் விற்கக்கூடாது என்று உத்தரவிட்டு இந்திய விரோதப் போக்கை ஜே.வீ.பியினர் மிக மேசமாக தென்பகுதிகளில் மேற்கொண்டு வந்த வேளையில், மலைநாட்டில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தாக்குதல்கள் இடம்பெற்றுவிடும் என்று இலங்கையில் இருந்த இந்தியப் படையினர் எதிர்பார்த்தார்கள்.

அப்படி மலையகத்தில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது தாக்குதல்கள் இடம்பெறும் பட்சத்தில் மலையகத்தில் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு, இந்தியப் படையின் அதிகாரி லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங்கின் தலைமையில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

இதற்காக பலாலி தளத்தில் இந்திய இராணுவத்தின்ஒரு விஷேட பரசூட் கொமாண்டோ அணி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஹெலிக்கொப்பர்ஸ் மூலமாக இவர்களை மலைநாட்டில் தரையிறக்குவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. அதேவேளை மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் 76வது காலட் படைப்பிரிவை மட்-பதுளை ஏ-5 வீதி வழியாக மலைநாட்டிற்கு நகர்த்தும் திட்டத்தையும் இந்தியப்படையினர் கைவசம் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.

ஆனால் மலையகத்தில் இந்தியத் தமிழர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் எதுவும் ஏற்படாததால் இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

மாத்தையாவிற்கு துணையாக..

இதேபோன்று புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையா, புலிகளின் தலைமைக்கு எதிராக சதி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போதும், இந்தியா தனது படைகளை வன்னிக்கு அனுப்பி மாத்தையாவிற்குத் துணையாகக் களம் இறக்கும் திட்டத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

ஆனால் அந்தச் சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுவிட்டதால், அது கை கூடாமல் போயிருந்தது.

இதேபோன்று புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததைத் தொடர்ந்தும், இந்தியாவில் இருந்த ஈ.என்.டி.எல்.எப் அமைப்பை கருணாவுடன் இணைத்து ஒரு இரகசிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது. (அந்த நடவடிக்கை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப்போம்)

கேள்விகள்

இந்த இடத்தில் எமது வாசகர்களாலும், பொதுவாக பல தமிழ் மக்களாலும், குறிப்பாக இளையதலைமுறையினராலும் எழுப்பப்படுகின்ற சில கேள்விகள் பற்றிப் பார்க்கவேண்டி இருக்கின்றது.

1)இந்தியா எதற்காக ஈழப்பிரச்சனையில் தலையீடு செய்தது?

2)தமிழ் மக்களைக் காப்பாற்றத்தானே இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டது?

3)தமிழ் மக்களில் அக்கறைகொண்டு இலங்கைப் பிரச்சனையில் தலையிட்ட இந்தியா மீது விடுதலைப் புலிகள் எதற்காகத் தாக்குதல் நடாத்தினார்கள்?

4)புலிகள் செய்தது சரியா?

5)புலிகள்-இந்திய யுத்தம் எவ்வாறு ஆரம்பமானது?

6)ஏன் ஆரம்பமானது?

எமது வாசகர்கள் மத்தியில் இருந்து எழுகின்ற இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை அடுத்தவாரம் முதல் தேடுவதற்கு முனைவோம்.


 

புலிகளுக்கும் இந்தியப்படையினருக்கும் இடையில் ஏன் யுத்தம் மூண்டது? (அவலங்களின் அத்தியாயங்கள்- 40) – நிராஜ் டேவிட்

  • November 19, 2012
 
 இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏன் முரண்பாடு ஏற்பட்டது? புலிகளுக்கும் இந்தியப்படையினருக்கும் இடையில் ஏன் யுத்தம் மூண்டது? தமிழர்களைக் காப்பாற்றவென்று இலங்கை வந்த இந்தியப் படையினரை விடுதலைப் புலிகள் எதற்காகத் தாக்கினார்கள்?

அவலங்களின் அத்தியாயங்கள் என்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசித்துவருகின்ற வாசகர்கள் அடிக்கடி எழுப்புகின்ற கேள்விகள் இவை.இந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவர்கள், புலம்பெயர் இளையதலைமுறையினர் போன்றவர்களுக்கு இதுபோன்ற சந்தேகங்கள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

எனவே இந்தக் கேள்விகள், சந்தேகங்கள் போன்றனவற்றிற்கான பதிலைச் சரியானபடி தேடியதன் பின்னர்தான் இந்திய-புலிகள் யுத்தத்தின் மற்றய பக்கங்களை இந்தத் தொடரில்; பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

வரலாறு

இந்தியாவின் கடந்தகால சரித்திரம் தெரிந்தவர்களுக்கும், இந்தியா இலங்கை விடயத்தில் கடைப்பிடித்துவந்த கடந்தகால கொள்ளைகள் பற்றிய அறிவை ஓரளவு கொண்டிருப்பவர்களும், ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பெரிதாக ஒன்றும் ஆச்சரியம் இருக்கச் சந்தர்பம் இல்லை.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர, இந்தியா ஒருபோதும் ஈழத்தமிழருக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுத்தது கிடையாது என்பதுதான் உண்மையான வரலாறு.

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவின் தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான தொடர்புகள் அவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்ததாக வரலாறு இல்லை. சினிமாவை அடிப்படையாகக்கொண்ட கலாச்சாரத் தொடர்புகள் அல்லது வியாபார ரீதியிலான தொடர்புகள் என்பன தவிர மிகவும் மேலோட்டமான ஒரு அரசியல் தொடர்பு மாத்திரமே இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்து வந்தது.

1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் காரணமாக 10 இலட்சம் மலைநாட்டுத் தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டு, இலங்கையின் பூர்வீகத் தமிழ்க் குடிகள் சந்தேகப் பிரஜைகள் ஆக்கப்பட்ட காலம் தொடக்கம், இலங்கையில் இருந்த தமிழர்கள் பற்றி இந்தியா ஒருவிதப் பாராமுகப் போக்கையே கடைப்பிடித்து வந்தது.

ஈழத் தமிழரில் அக்கறை இன்றி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்:

1954 இல் கைச்சாத்திடப்பட்ட நேரு-கொத்தலாவல ஒப்பந்தம், 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சாஸ்திரி-சிறிமா ஒப்பந்தம், 1974 கச்சத்தீவு ஒப்பந்தம் போன்றவை முதற்கொண்டு, 1987 இலங்கை-இந்திய ஒப்பந்தம் வரை, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் போதிய அக்கறை இன்றியே இந்த ஒப்பந்தங்கள்; இந்தியாவினால் செய்துகொள்ளப்பட்டிருந்தன.

குடியுரிமைப் பறிப்பில் சிங்களப் பேரினவாதிகள் இலங்கையில் ஆரம்பித்த தமிழ் இன விரோத நடவடிக்கைகள், மொழி உரிமை, நில உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, கலாச்சார உரிமை என்று தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தபோதும், சிங்களத்தின் இந்த அநீதியை எதிர்த்து இந்தியா எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் பல்வேறு காந்திவழி சாத்வீகப் போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும், அவற்றிற்குத் தார்மீக ஆதரவைக்கூட வழங்க அந்த ’காந்தியின் தேசம்’ அப்பொழுது முன்வரவில்லை.

தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டம் சிங்கள இனவாத அரசுகளினால் அடக்கி ஒடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் சரி, 1956, 1958, 1961 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடாத்தி நூற்றுக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த காலங்களிலும் சரி, குறிப்பிடத்தக்க எந்தவொரு பிரதிபலிப்பையும் இந்தியா வெளிக்காண்பிக்கவில்லை.

1958 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் இலங்கைத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து சென்னையில் ஒரு பேரணி நடாத்தப்பட்டது. அது போன்று ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து சிறிய அளவிலான ஒருசில அடையாள போரட்டங்கள் தமிழ் நாட்டில் அவ்வப்பொழுது இடம்பெற்றனவே தவிர, இந்தியாவின் நடுவன் அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடியதான நடவடிக்கைகள் எதுவும் இலங்கைத் தமிழர்களுக்குச் சார்பாக அக்காலத்தில் எடுக்கப்படவேயில்லை.

ஈழத்தமிழ் தலைவர்களின் நகர்வுகள்

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவை எப்படியாவது சம்பந்தப்படுத்திவிட இலங்கையில் இருந்த தமிழ்த் தலைவர்கள் பல முயற்சிகளையும் அப்பொழுது மேற்கொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் தேசியத் தலைவர்களைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி விளக்கி அவர்களது அனுதாபத்தைப் பெற்றுவிடும் நோக்கத்தில் தமிழ் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிவடைந்தன.

இந்தியாவிலுள்ள தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழருக்குச் சார்பான ஒரு எழுச்சி அலையை ஏற்படுத்தி இந்தியாவின் மத்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலமே இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவை தலையிடவைக்கமுடியும்; என்று எண்னிய தமிழ் தலைவர்கள் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு சென்ற ஈழத்தமிழ் தலைவர்கள்:

1972ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தந்தை செல்வா தலைமையில் அமிர்தலிங்கம் அடங்கலான ஒரு குழு தமிழ் நாடு சென்று அப்போதய முதலமைச்சர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் உட்பட பல தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும், சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றி விலாவாரியாக விளக்கம் அளித்தார்கள்.

தமிழ் தலைவர்களின் இந்த விஜயத்தின் போது தந்தை செல்வா அவர்கள் புதுடெல்லி சென்று பாரதப் பிரதமரைச் சந்திக்கவேண்டும் என்று பலத்த முயற்சி மேற்கொண்ட போதிலும், தமிழ் தலைவர்களைச் சந்திக்க டெல்லி மறுப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ் தலைவர்களின் இந்த தமிழ் நாட்டு விஜயம் மற்றும் அவர்கள் தமிழ் நாட்டில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் என்பன இலங்கைத்தமிழர் பற்றி இந்தியத் தமிழர்களிடம் ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தியதுடன், இலங்கைத் தமிழருக்கு சார்பான ஒரு நிலையை அவர்கள் எடுப்பதற்கும் ஏதுவாக அமைந்தது.

தமிழ் நாட்டில் வீச ஆரம்பித்த ஈழத் தமிழ் அலை இந்திய நடுவன் அரசிற்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்ததுடன், இலங்கை சம்பந்தமாக இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்துவந்த அதன் கொள்கையை மீள்பரிசீலனை செய்யவேண்டிய ஒரு தர்மசங்கடத்தையும் அதற்கு ஏற்படுத்தியிருந்தது.

அக்காலத்தில் ஈழத் தமிழருக்கு சார்பாக தமிழ்நாட்டு அரசு காண்பித்த ஆதரவு, கடைப்பிடித்திருந்த கொள்கை என்பன, 1975 இல் கருணாநிதி தலைமையிலான தமிழ் நாட்டு அரசை இந்தியாவின் மத்திய அரசு கலைப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது. கருணாநிதி தலைமையிலான அரசைக் கலைப்பதற்கு ~இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தமிழர்களுக்குச் சார்பாக தி.மு.க. தலையிட்டதையும் ஒரு காரணமாகக் இந்தியாவின் மத்திய அரசு குற்றம் சுமத்தியிருந்தது.

இந்திய அரசின் பாராமுகத்திற்கான காரணம்:

இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு தென் இந்தியாவில் வசித்து வந்த தமிழர்கள் தனி திராவிட நாடு கேட்டுப் போராட்டம் நடத்திவந்ததும், இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்று அங்குள்ள தமிழர்களின் போராட்டம் அடிக்கடி தொடர்ந்து வந்ததும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாததற்கு ஒரு பிரதான காரணமாக இருந்தது.

அத்தோடு அக்காலகட்டத்தில் சீனா, பாக்கிஸ்தான் என்று தனது அயல்நாடுகளுடன் இந்தியா சிண்டுமுடித்துக்கொண்டு இருந்ததால் மற்றய அயல்நாடான இலங்கை பக்கம் இருந்து சிக்கல்கள் எதுவும் எழுவதை அது அப்போது விரும்பவில்லை என்பதும் மற்றொரு காரணம்.

ஈழப் பிச்சனையில் அக்கறையெதுவும் காண்பிக்காது, இலங்கை அரசின் சண்டித்தனத்தையெல்லாம் கண்டும் காணாதது போன்று இருந்துவந்த இந்தியாவிற்கு, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டேயாகவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் 1980களின் ஆரம்பத்தில் ஏற்பட்டது.

ஈழத்தமிழர்கள் மீது கொண்ட பாசத்தினால் அல்ல, இந்தியாவின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் விவகாரங்களில் மூக்கை நுளைக்கவேண்டிய அவசியமொன்று இந்தியாவிற்கு தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டது.


இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சதி: (அவலங்களின் அத்தியாயங்கள்- 41) – நிராஜ் டேவிட்

  • November 9, 2012
இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியா எதற்காகத் தலையிடவேண்டிவந்தது என்று தற்பொழுது பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இலங்கையின் இனப்பிரச்சனை விடயங்களில் தமிழர்கள் தொடர்பில் ஒருவிதப் பாராமுகப் போக்கைக் கடைப்பிடித்துவந்த இந்தியா ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை விவகாரத்தினை நோக்கித் தனது பார்வையைச் செலுத்தியேயாகவேண்டிய நிலமை உருவானது.

1977ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் தனது அரசியல் பாதையில் கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்த வெளிநாட்டுக் கொள்ளைகளே இந்தியாவை இலங்கையின் பக்கம் தனது பார்வையைத் திருப்பவைத்த ஒரு முக்கியமான காரணி என்று கூறலாம்.இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று கூறியபடி, திறந்த பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்த ஜே.ஆர். அரசு, மேற்கு நாடுகளின் பொருளாதாரச் சந்தைகளுக்கு இலங்கையில் களம் அமைத்துக் கொடுத்திடும் ஒரு அதிரடி அரசியலை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தது. இது இந்தியா அக்காலத்தில் கடைப்பிடித்து வந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு பாரியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்ததுடன், இலங்கையின் வளர்ச்சியையிட்டு இந்தியாவை பொறாமை கொள்ளவும் வைத்தது.

அத்தோடு, திருகோணமலையில் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற எண்ணெய் குதங்களை ஒரு அமெரிக்க நிறுவணத்திற்கு குத்தகைக்கு விடும் முயற்சியையும் இலங்கை அரசு திரைமறைவில் மேற்கொண்டிருந்தது.

கூட்டணி இரகசியமாக வழங்கிய ஆதாரங்கள்:

இலங்கை அரசினால் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் அனுதாபத்தை எப்படியாவது பெற்றுவிட பகிரதப்பிரயத்தனம் மேற்கொண்டிருந்த தமிழ் தலைவர்களுக்கு இந்த விடயம் அவலாகக் கிடைத்தது. எண்ணெய் குதம் விவகாரத்தை த.வி.கூ. தலைவர்கள் இந்தியாவின் காதுகளில் போட்டுவைத்ததுடன் அதற்கான ஆதாரங்களையும் இரகசியமாகத் திரட்டி இந்திய அரசின் பார்வைக்கு அனுப்பிவைத்தார்கள்.

இது இலங்கை விடயத்தில் இந்தியா அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த மற்றுமொரு காரணமாக அமைந்தது. இந்தக் காலகட்டத்தில், இலங்கை அரசின் அடக்குமுறைகளினால் ஏற்கனவே இலங்கையை விட்டு வெளியேறி தமிழ் நாட்டில் தஞ்சமடைய ஆரம்பித்திருந்த ஈழப் போரளிகளின் தீவிரமான பிரச்சாரங்களும், செயற்பாடுகளும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் துன்பங்கள் பற்றிய ஆழ்ந்த அனுதாபத்தையும், உணர்ச்சி வேகத்தையும் ஏற்படுத்த ஆரம்பித்திருந்தன.

1981ம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது, உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிங்களப் படையினரால் குழப்பப்பட்டது, தமிழ் நாட்டில் இருந்து கதிர்காம யாத்திரை வந்த தனபதியின் கொலை போன்ற பல்வேறு சம்பவங்கள் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கொந்தளிப்பின் விளைவாக ஏற்பட்ட அழுத்தங்கள், இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட்டேயாகவேண்டிய கட்டாயத்தை இந்தியாவின் மத்திய அரசிற்கு ஏற்படுத்தியது.

இந்திராவின் நிலைப்பாடு:

அனைத்திற்கும் மேலாக, 1980 ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறியிருந்த திருமதி. இந்திரா காந்தியின் கரிசனை ஈழத்தழிழர்களுக்குச் சார்பாக மாற ஆரம்பித்திருந்ததும், இந்திய நிலைப்பாட்டில் படிப்படியாக மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

தமிழ் நாட்டு மக்களிடம் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக அக்காலத்தில் ஏற்பட ஆரம்பித்திருந்த அணுதாபமும், தமிழ் நாட்டு அரசுடன் இந்திராவின் காங்கிரஸ் கட்சி அக்காலகட்டத்தில் செய்துகொண்டிருந்த தேர்தல் உடன்படிக்கையும், ஈழத்தமிழருக்குச் சார்பான ஒரு நிலைப்பாட்டை எடுத்தேயாகவேண்டிய கட்டாயத்தை இந்தியாவின் நடுவன் அரசிற்கு ஏற்படுத்தியிருந்தது.

விளைவு, இந்திரா தலைமையிலான இந்திய அரசின் தலையீடுகள் படிப்படியாக ஈழத்திழர்களுக்கு சார்பாக மாற ஆரம்பித்தது.

1983 ஜுனில் இலங்கை அரசினால் தமிழர்களது போராட்டங்களை அடக்குவதற்கென்று கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டப் பிரிவுகளை எதிர்த்ததன் மூலம் இலங்கையில் இந்தியாவின் தலையீடு ஆரம்பமானது. தொடர்ந்து இந்தியாவின் தலையீடுகள் 83 ஜுலைக் கலவரத்தில் தலையிட்டு சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது முதற்கொண்டு, இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொண்ட மனிதப் படுகொலையை சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்தியது, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய மண்ணில் புகலிடம் அளித்தது, ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியை வழங்கியது என்று தொடர்ந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கைப் பிரச்சனையில் ஈழத்தமிழருக்குச் சார்பான நிலைப்பாட்டை முழுமனதுடன் எடுத்திருந்ததுடன், அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் செயற்பட்ட முதலாவதும் இறுதியுமான ஒரே இந்திய தேசியத் தலைவர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர் விடயத்தில் நம்பிக்கைத் துரோகமிழைத்த ராஜிவ் காந்தி:

திருமதி. இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து ஆட்சியைப் பொறுப்பேற்ற அவரது புதல்வர் ராஜீவ் காந்தி ஈழத் தமிழர் விடயத்தில் ஓரளவு அக்கரை காண்பிப்பவர் போன்று வெளிப்பார்வைக்கு செயற்படாலும், நிஜத்தில் அவர் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.

இந்தியாவின் சுயலாப நலன்களை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டங்களை மட்டுமே அவர் கையாண்டதுடன், ஈழத்தமிழர்கள் விடயத்தில் ராஜீவ் காந்தி ஒரு நம்பத்தகுந்த தலைவராக ஒருபோதும் நடந்துகொண்டதும் கிடையாது. அவரது சக்தியையும் மீறி தமிழ் நாட்டில் வளர்ந்துவிட்டிருந்த ஈழப் போராளிகளை இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்து, அவர்களை இந்தியாவின் ஒரு கூலிப்படையாக செயற்படவைக்கவே அவர் விருப்பம் கொண்டு செயற்பட்டு வந்தார்.

இந்திய உளவு அமைப்புக்களின் விருப்பமும், திட்டமும் கூட இதுவாகத்தான் இருந்தது. ஈழப் போரட்ட அமைப்புக்கள் இந்தியாவின் சொல்கேட்டு நடக்கக்கூடிய, இந்தியாவின் தேசிய நலன் சார்ந்து செயற்படக்கூடிய ஒரு கூலிப்படையாக செயற்படவேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தியாவைக் கவனிக்காது மேற்குலக நாடுகளின் பக்கம் தனது பார்வையைச் செலுத்த ஆரம்பித்திருந்த இலங்கையை சிறிது தட்டி வைக்கும் நோக்கத்துடனேயே இந்தியா ஈழப்போரளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியிருந்தது. தமிழருக்கு ஒரு தனிநாட்டை அமைத்துக் கொடுக்கும் நோக்கம் இந்தியாவிற்கு என்றைக்குமே இருந்தது கிடையாது.

இப்படி இருக்கையில், இந்தியாவின் இந்த திட்டத்தைப் புரிந்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஒரு சில போராட்ட அமைப்புக்கள், இந்தியாவின் உளவுப் பிரிவினருக்குத் தெரியாமல் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், நிதி என்பனவற்றை இரகசியமாக பெற்று தம்மை வளர்த்துக்கொள்ள முயன்றதுடன், தனி ஈழம் ஒன்றை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் தம்மை சுயமாக வளர்த்துக்கொள்ளவும் முயன்றனர்.

சில ஈழப்போராட்ட அமைப்புக்களின் இந்த நடவடிக்கையானது ஈழப்போராளிகள் தமது கைகளைவிட்டுச் சென்றுவிடுவார்களோ என்கின்ற பயத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.

ஈழப் போரளிகளின் அசுர வளர்ச்சி, போராட்டக் களங்கில் அவர்கள் காண்பித்த வேகம், சர்வதேச ரீதியாக அவர்கள் பெற்றுக்கொள்ள ஆரம்பித்த ஆதரவுகள் என்பன, இந்த அமைப்புக்களின் செயற்பாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், இந்த அமைப்புக்கள் விடயத்தில் சற்றுக் கடுமையாக நடந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தையும் இந்திய அரசுக்கு ஏற்படுத்தியது.

இந்தியாவிற்கு ஏற்பட்ட இந்தக் கட்டாயம், ஈழத்தமிழர் நலன்களில் இந்தியா கொண்டிருந்த உண்மையான நிலைப்பாட்டை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதாக அமைந்தது.

அடுத்ததாக ஆட்சிக்கு வந்த இந்தியாவின் மத்திய அரசாங்கம் ஈழப்போராளிகள் விடயத்தில் கடைப்பிடிக்க ஆரம்பித்த நடவடிக்கைகள், ஈழ விடுதலை பற்றி இந்தியாவின் திட்டத்தை தோலுரித்துக் காண்பிப்பதாக அமைந்ததுடன், இந்தியா பற்றி ஈழத்தமிழர்களுக்கும்- ஏன் தமிழ் இயக்கங்களுக்கும்கூட இருந்த நம்பிக்கை, எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பதாக அமைந்திருந்தன.

இந்தியப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சதி:

ஈழப் போராளிகள் தனது கைகளை விட்டுச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவும், ஈழப் போராளிகள் இந்தியாவின் தயவில் மட்டுமே வாழவேண்டும் என்கின்ற பாடத்தை அவர்களுக்குக் கற்பிக்கும் நோக்கத்திலும் இந்தியாவின் மத்திய அரசாங்கம் அப்பொழுது சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது..

சென்னையில் இருந்த புலிகளின் அலுவலகங்கள் இந்தியப் பொலிஸாரால் முற்றுகை இடப்பட்டு புலிகளின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன் புளொட் அமைப்புக்கென்று வெளிநாடு ஒன்றிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயுதத் தொகுதியை இந்தியா இராணுவம் கைப்பற்றிக்கொண்டதுடன் அவற்றை மீளவும் அவர்களுக்கு வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தது. தமிழ் இயக்கங்களுடன் தொடர்புடைய மூன்று ஈழத்தமிழ் தலைவர்கள் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார்கள்.

இது போன்ற பல நடவடிக்கைகளை தமிழ் இயக்கங்களை அச்சுறுத்தும் நோக்கத்திலும், அவர்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நோக்கத்திலும் இந்தியா மேற்கொள்ள ஆரம்பித்திருந்தது.

ரொமேஷ் பண்டாரி வெளியிட்ட அதிர்ச்சி தரும் கொள்கைகள்:

இந்த நேரத்தில் இந்தியாவின் வெளிநாட்டுச் செயலாளராக திரு.ரொமேஷ் பண்டாரி பதவி ஏற்றதைத் தொடர்ந்து, ஈழத்தமிழர் தொடர்பான இந்தியாவின் உண்மையான நிலைப்பாட்டை ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழ் இயக்கங்களின் பிரதிநிதிகள், த.வி.கூ. தலைவர்கள் போன்றவர்களை அழைத்த திரு ரோமேஷ் பண்டாரி, இந்தியா ஈழத்தமிழர் தொடர்பாக கடைப்பிடித்துவரும், தொடர்ந்து கடைப்பிடிக்கப்போகும் கொள்கைகள் என்ற அடிப்படையில் மூன்று முக்கிய விடயங்களை தெரிவித்தார்.

1. இலங்கையில் இந்தியாவின் இராணுவத் தலையீடு சாத்தியமற்றது.

2. தனிநாடு பிரிவினையை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.

3. இந்தியாவில் தற்பொழுதுள்ள ஒரு மாநிலத்தின் அதிகாரத்திற்கு கூடுதலான அதிகாரத்தை இலங்கையில் தமிழ் மாநிலத்திற்கு வழங்குமாறு கோர முடியாது.

இவையே திரு.ரொமேஷ் பண்டாரி அறிவித்த இந்தியாவின் கொள்ளைகள்.

இந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்தியா எதிர்காலத்தில் செயற்படும் என்றும் அவர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

தமிழ் இயக்கங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள்.

பங்காளதேஷில் நடந்துகொண்டது போன்று, இந்தியா இலங்கைக்கு தனது இராணுவத்தை அனுப்பி தமிழ் மக்களுக்கு தனிநாட்டைப் பெற்றுக் கொடுத்துவிடும் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் மக்களுக்கும், ஒருசில தமிழ் ஆயுத இயக்கங்களுக்கும் இந்தியாவின் இந்த அறிவித்தல் பேரிடியாக அமைந்தது. இந்தியாவின் இந்த அறிவிப்பை உடனடியாக அவர்களால் நம்ப முடியாமல் இருந்ததுடன் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலகுவில் அவர்களால் ஜீரணித்துக்கொள்ளவும் முடியாது இருந்தது.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு உண்மையானால் பின்னர் எதற்காக இந்தியா எங்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது, எதற்காக எங்களைப் போராடச் சொன்னது? என்று இந்தியாவை மட்டுமே நம்பி இருந்த தமிழ் இயக்கங்கள் கேள்வி எழுப்பின. ஆனால் முற்று முழுதாக இந்தியாவின் தயவில் மட்டுமே வாழ்க்கை நடாத்திவந்த அந்த இயக்கங்களால் வெறும் கேள்விகளை மட்டுமே அப்பொழுது எழுப்ப முடிந்தது.

அவர்களால் வேறு எதையுமே செய்ய முடியவில்லை. எனென்றால் இந்த இயக்கங்கள் வெளிப்பார்வைக்கு ஒரு விடுதலை அமைப்புப் போன்று தோற்றம் அளித்திருந்தாலும் உண்மையில் இவர்கள் இந்திய அரசின் அபிலாஷைகளை மட்டுமே நிறைவுசெய்ய உத்தரவிடப்பட்ட ஒரு கூலிப்படையாகவே கட்டமைக்கப்பட்டிருந்தார்கள். ( இதே அமைப்புக்கள்தான் பின்நாட்களில் இந்திய அமைதிப்படையுடன் இலங்கைக்கு வந்து, இந்தியா ஈழத் தமிழர்கள் மீது மேற்கொண்ட அனைத்து அட்டூழியங்களுக்கும் உடந்தையாகவிருந்ததுடன், பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்கும் இந்தியாவின் எண்ணங்களுக்கு செயல் வடிவமும் கொடுத்தவர்கள்.)

தமிழ் மக்கள் எதிர்பார்த்தது போன்று தனி நாடு ஒன்றைத் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் இந்தியாவிற்கு என்றுமே இருந்தது கிடையாது. மேற்குலக நாடுகளின் பக்கம் சாய ஆரம்பித்திருந்த இலங்கை அரசை மிரட்டி பணியவைக்கும் நோக்கத்திற்கே ஈழப் போராட்ட இயக்கங்களைப் பயன்படுத்த இந்தியா எண்ணியிருந்தது. ஈழப் போராட்ட அமைப்புக்களை அது வளர்த்துவந்ததும், இலங்கை அகதிகளுக்கு இந்தியா புகளிடம் அளித்ததும், ஈழத்தமிழர்களுக்காக அது நீலிக்கண்ணீர் வடித்ததும் இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான்.

ஆனால் ஒருசில தமிழ் இயக்கங்களது வளர்ச்சியின் வேகமும், அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தனித் தமிழீழம் அமைக்கும் தமது இலட்சியத்தில் காண்பித்த உறுதி போன்றன, இந்தியாவின் உண்மையான பக்கத்தை தமிழ் மக்களுக்கும் உலகிற்கும் அவசர அவசரமாக வெளிப்படுத்தவேண்டிய அவசியத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்தியாவில் தனது பார்வையில் தங்கியிருந்து சிறுசிறு தாக்குதல்களை நடாத்திவந்த தமிழ் இயக்கங்கள் ஈழத்தில் தளம் அமைத்து போராட்டம் நடாத்த ஆரம்பித்திருந்தமை, இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக இருந்த சில இயக்கங்கள் ஈழத்தில் மக்கள் ஆதரவை இழந்த நிலையில் மாற்று இயக்கங்களால் அழிக்கப்பட்டமை, தனிஈழம் கைக்கெட்டிய தூரத்தில் இருந்தமை போன்றன இலங்கை விடயத்தில் இந்தியா நேரடியாகத் தலையிட்டு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டிய அவசியத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.

ஈழம் வேண்டிப் போராட்டம் நடாத்திக்கொண்டிருந்த பிரதான போராட்ட அமைப்புக்கள் தனது பிடிக்குள் இல்லாததாலும், இந்தியா தனது நலனுக்காகவென்று வளர்த்துவந்த இயக்கங்கள் போராட்ட சக்தியை இழந்துவிட்டிருந்ததாலும், தமிழ் விடுதலை இயக்கங்கள் மூலமாக காரியம் சாதிக்கும் தனது திட்டத்தை இந்தியா கைவிட்டதுடன், தமிழ் இயக்கங்களை கைகழுவிவிடவும் இந்தியா தீர்மானித்தது.

தனி நாடு அல்லாத ஒரு அரைகுறைத் தீர்வை தமிழ் இயக்கங்கள் மீது தினிக்கும் பல நடவடிக்கைகளை இந்தியா அடுத்தடுத்து எடுக்கத் தலைப்பட்டது. ஸ்ரீலங்கா அரசுடன் அல்லது ஸ்ரீலங்கா அரச பிரதிநிதிகளுடன் தமிழ் இயக்கங்களுக்குச் சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து, அரைகுறை தீர்வொன்றை ஈழத்தமிழர் மீது திணித்து, இலங்கைப் பிரச்சனையில் கையோங்கிய நிலையில் காணப்பட்ட ஈழப்போராளிகளின் பங்கை குறைத்துவிடும் முயற்சியில் இந்தியா ஈடுபட ஆரம்பித்தது.

ஆனால், தீர்வு விடயத்தில் ஈழப் போராட்ட அமைப்புக்கள் மிகவும் கவனமாகவே காய்நகர்த்தின. இந்தியாவினதோ அல்லது இலங்கையினதோ எந்தப் பொறிகளுக்குள்ளும் அவை விழுந்துவிட தயாராக இருக்கவில்லை.

இந்தியாவின் உண்மையான எண்ணங்களை அறிந்திருந்த இயக்கங்கள் இந்தியாவின் விடயத்தில் கவனமாகவே நடந்துகொண்டன.

தமிழர்களது விடுதலை சம்பந்தமாக இந்திய அரசாங்கம் கொடுத்துவந்த நிர்பந்தங்களை தட்டிக்கழித்து தமது தலைவிதியை தாமே தீர்மாணிக்கவேண்டும் என்ற விடயத்தில் மிகவும் கவனமாகவே செயற்பட்டார்கள்.

உதாரணமாக, ஜுலை 1985 இல் நடைபெற்ற திம்பு மாநாட்டில் தமிழ் அமைப்புக்கள் தாம் எடுத்த நிலைப்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்புக்களுக்கும் உடன்படாது உறுதியாக இருந்தார்கள்.

அதேபோன்று, 31.08.1985 அன்று இந்தியா சென்றிருந்த இலங்கைத் தூதுக் குழுவிற்கும், இந்திய அரசிற்கும் இடையில் டெல்லியில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரைகுறை ஒப்பந்தத்தை தமிழ்  இயக்கங்கள் ஏற்றேயாகவேண்டும் என்ற இந்திய அரசின் நிர்ப்பந்தத்தை தமிழ் இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளாததுடன், அதனை பகிரங்கமாகவே எதிர்த்தும் இருந்தார்கள்.

அதேபோன்று, 1986 ஜுலையில் இந்தியா கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஸ்ரீலங்கா அரசுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவதற்கும் தமிழ் இயக்கங்கள் மறுப்புத் தெரிவித்திருந்தன.

தமிழ் இயக்கங்களின் இந்த நடவடிக்கைகள், இந்தியா தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களில் இருந்த தனது பிடிமாணங்களை இழந்து வருவதை உணரும்படி செய்தன.

தமிழ் ஈழ இயக்கங்களை தொடர்ந்தும் தனது தேச நலன்களுக்காப் பயன்படுத்த முடியாது என்ற உண்மையை இந்தியா படிப்படியாக உணரத் தொடங்கியது.

இது, இயக்கங்கள் விடயத்தில் மாற்று நடவடிக்கை ஒன்றை எடுக்கும் முடிவுக்கு இந்தியாவை இட்டுச்சென்றது. இந்தியாவின் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி தமிழ் இயக்கங்களைப் பலவீனப்படுத்தும் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தத் தயாரானது.

தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் ஈழப்போராளிகள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் சதித்திட்டமும் அதில் அடங்கியிருந்தது.

ஈழப்போராட்ட அமைப்புக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தவும், ஈழப்போரட்ட அமைப்புக்களை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தவும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சதி நடவடிக்கைகளை அடுத்தவாரம் பார்ப்போம்

தொடரும்..


தமிழ் இயக்கங்களை நசுக்க “ரோ” அமைப்பு மேற்கொண்ட திட்டமிட்ட சதி: (அவலங்களின் அத்தியாயங்கள்- 42): நிராஜ் டேவிட்

  • November 17, 2012
 
 இந்தியாவில் தங்கியிருந்த ஈழ விடுதலை இயக்கங்களைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களிடம் இந்த இயக்கங்களுக்கு இருந்து வந்த ஆதரவை குறைக்கவும் இந்தியாவின் உளவுப் பிரிவான “ஆய்வு-பகுப்பாய்வு பிரிவு”(RAW – Research and Analyse Wing) பல சதித் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்தது.

இயக்கங்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியது முதல், இயக்கங்களுக்கு உள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தியதன் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான RAW  இனது கைகள் இருந்ததாக பல தமிழ் இயக்கங்கள் பின்நாட்களில் குற்றம் சுமத்தியிருந்தன.இந்திய RAW அமைப்பின் பூரண கண்காணிப்பின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் செயற்பட்டு வந்த தமிழ் இயக்கங்களின் உள்ளே திடீர் திடீர் என்று உட்பூசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. இயக்கங்களின் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கு திடீரென்று பதவி ஆசை ஏற்பட ஆரம்பிக்கலாயிற்று.

மாற்று இயக்கங்களுடன் முரண்பாடுகள் வளர்ந்தன.  தமது இயக்க நடவடிக்கைகளை மாற்று இயக்கங்கள் கண்காணிக்கின்றன. தமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு மற்றைய இயக்கங்கள் வழங்குகின்றன என்பது போன்ற சந்தேகங்கள் ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஏற்பட்டன. “சந்தேகங்கள் ஏற்பட்டன” என்று கூறுவதைவிட சந்தேகங்கள் ஏற்படுத்தப்பட்டன என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

இயக்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகள்,  அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இயக்க மோதல்கள் போன்றனவற்றிற்கு இந்தியப் புலனாய்வு பிரிவான “ரோ” அமைப்பினரது சதிவேலைகளே காரணமாக இருந்தன. ஒவ்வொரு இயக்கத்திற்கும் மாற்று இயக்கங்கள் பற்றி பிழையான அல்லது பிழையான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடியதான தகவல்களை இந்திய “ரோ” அமைப்பினரே வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் இயக்கங்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கும், தமக்குப் பிடிக்காத ஈழத் தமிழ் தலைவரைகளை மற்றைய தமிழ் அமைப்பினைக் கொண்டே பழிவாங்குவதற்கும் ரோ பல சதிகளை நடாத்தியிருந்தது.

இதோ ஒரு உதாரணம்:

த.வி.கூ. தலைவர்கள் படுகொலை

1985ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுமான திரு.தர்மலிங்கம் மற்றும் திரு.ஆலாலசுந்தரம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்ல இந்தியா மற்றும் சர்வதேசம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியிருந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்த அரசியல் கட்சிகள், தலைவர்கள் இந்தப் படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

கொலைப்பழி விடுதலைப் புலிகள் மீது வந்து விழுந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலைகளைச் செய்ததாக அனைவருமே நம்பினார்கள். விடுதலைப் புலிகளே இந்த படுகொலைகளைச் செய்ததாகக் த.வி.கூட்டணித் தலைவர்களும் குற்றம் சுமத்தினார்கள்.

1986ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகளுக்கும் டெலோ அமைப்பிற்கும் இடையில் ஈழத்தில் மோதல் உருவாகி,  அதனைத் தொடர்ந்து டெலோ அமைப்பு விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டது. டெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரெத்தினம் அவர்களும்,  நூற்றுக்கணக்கான டெலோ உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்கள்.

நூற்றுக்கணக்கானவர்கள் புலிகளால் கைது செய்யப்பட்டார்கள். அவ்வாறு புலிகளால் கைதுசெய்யப்பட்ட டெலோ உறுப்பினர்களுள் கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் ராஜன் என்ற உறுப்பினர்,  ஒரு அதிர்ச்சிகரமான தகவலை புலிகளிடம் வெளியிட்டார்.

அந்தத் தகவல் இந்திய உளவுப் பிரிவான ரோவினது ஒரு முக்கிய சதியை அம்பலப்படுத்துவதாக அமைந்திருந்தது.

ஒப்புதல் வாக்குமூலம்

அதாவது த.வி.கூட்டணித் தலைவர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் போன்ரோரின் படுகொலையில் தானும் பங்கேற்றதாக அந்த டெலோ உறுப்பினர் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளால் அவர் தீவிரமாக விசாரிக்கப்பட, ஒரு பெரிய இரகசியச் சதி அம்பலமானது.

தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் படுகொலை செய்யும்படியான உத்தரவு டெலோ அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பொபி என்பவரால் தமக்கு வழங்கப்பட்டதாகவும், தாம் காரணம் கேட்டபொழுது இது தலைமைப் பீடத்தின் முடிவு. இது ஒரு அரசியல் தந்திரம். விளக்கம் தேவையில்லை என்று அவர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அந்த டெலோ உறுப்பினர் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

அந்த டெலோ உறுப்பினர் வழங்கியிருந்த வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறியிருந்தார்.

‘இக்கொலைகளுக்கு வலன்டைன் தலைமை தாங்கினார். நான், சிட்டிபாபு, ரஞ்சித் ஆகியோர் நடவடிக்கையில் பங்குபற்றினோம். சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் வல்வெட்டித்துறையில் இருந்த எங்களது முகாமில் பழுப்பு நிற மொறிஸ் ஒகஸ்பேர்ட் கார் எங்களிடம் தரப்பட்டது.

இந்தக் கார் சம்பவத்திற்கு முன்னய நாள் கிருபா என்பவரால் எங்கிருந்தோ கடத்திக் கொண்டு வரப்பட்டிருந்தது. அந்தக் காரில் நாம் நால்வரும் மாலை 7.30 மணிக்கு ஆலாலசுந்தரத்தின் வீட்டுக்குச் சென்றோம். பாஸ்போர்ட் விடயமாக அவருடன் பேசவேண்டும் என்று கூறினோம். வெளியே வந்த அவரைப் பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு தர்மலிங்கம் வீட்டிற்குச் சென்றோம்.

ஆலாலசுந்தரம் உங்களுடன் கதைப்பதற்கு வந்துள்ளார் என்று கூறி அவரையும் காரில் ஏற்றினோம். அவர்களை அழைத்துக் கொண்டு 8 அல்லது 8.30 மணியளவில் கோண்டாவிலை அடைந்தோம். தர்மலிங்கத்தை சிட்டிபாபுவுடன் அங்கு இறக்கிவிட்டு ஆலாலசுந்தரத்தை  நல்லூர் இராஜ வீதிச் சந்திக்குக் கொண்டு சென்றோம்.

சனநடமாட்டம் அற்ற ஒதுக்குப் புறத்தில் ஆலாலசுந்தரத்தின் கண்களைக்கட்டி நானும் வலன்டைனும் அவரைச் சுட்டுக் கொன்றோம். பின்னர் திரும்பிவந்து தர்மலிங்கத்தை ஏற்றிக்கொண்டு தாவடி றோட்டில் உள்ள தோட்டவெளிக்குக் கொண்டு சென்றோம். அவரையும் சிட்டிபாபு சுட்டுக் கொன்றார். பின்னர் அவர்களது உடல்களை அவர்களது தொகுதிகளுக்குக் கொண்டு சென்று போட்டோம்.

பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் தொலைவில் இருந்ததால் அன்றிரவு அவரைக் கொல்லமுடியாமல் போய்விட்டது. நீலன் திருச்செல்வத்தையும் கொல்வதற்கு ஆயத்தங்கள் நடைபெற்றதாக அறிந்தேன். இக்கொலைகளுக்கு ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, இரண்டு ஏ.கே-47 ரகத் துப்பாக்கிகள் எம்மால் உபயோகப்படுத்தப்பட்டன“ இவ்வாறு அந்த டெலோ உறுப்பினர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்படியான உத்தரவை டெலோவை இயக்கிய இந்திய உளவுத்துறை அதிகாரியாலேயே டெலோவின் வழங்கப்பட்டதாக பின்னர் தெரியவந்தது.

காரணம்?

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக ஈழத் தமிழ் தலைமையை மிதவாத தலைமைகளிடம் இருந்து பிடுங்கி தமது கட்டுப்பாட்டின்கீழ் செயற்பட்ட ஆயுத அமைப்புகளிடம் கொடுக்க விரும்பிய இந்தியப் புலனாய்வுப் பிரிவு, அந்த நேரத்தில் தனது பூரணகட்டுப்பாட்டின் கீழ் செயற்படாத விடுதலைப் புலிகளையும் இந்தக் கொலைகளினூடாக மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அதனை நோக்காகக் கொன்டே இது போன்ற இரகசிய நடவடிக்கைகள் அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் தங்கியிருந்த ஈழ விடுதலை இயக்கங்களைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தவும், தமிழ்நாட்டு மக்களிடம் இந்த இயக்கங்களுக்கு இருந்துவந்த ஆதரவை குறைக்கவும் இந்தியாவின் உளவுப் பிரிவான “ஆய்வு-பகுப்பாய்வு பிரிவு”  பல சதித் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்தது.

பிடிபட்ட உளவுத்துறை அதிகாரி

தமிழ் நாட்டு பொலிஸ் உளவுத்துறையின் டீ.ஐ.ஜி ஆக இருந்த கே.மோகணதாஸ் அவர்கள் இந்தியாவில் தங்கியிருந்த விடுதலை இயக்கங்கள் பற்றிய விபரங்களை ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கினார் என்ற விடயம் பின்னாளிலேயே இயக்கங்களுக்கு தெரியவந்தது.

இயக்க தலைமைகள் பற்றியும், உறுப்பினர்கள் தொகை பற்றியும், அவர்களது நடவடிக்கைகள்,  அவர்களிடமுள்ள ஆயுதங்கள் போன்ற விபரங்களை ஸ்ரீலங்கா அரசிற்கு இவர் வழங்கியிருந்தார் என்ற தகவல் நீண்ட காலத்தன் பின்னரே வெளிவந்தது. தமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் மாற்று இயக்கங்கள் மூலமாகவே ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சென்றடைகின்றன என்றே அதுவரை ஒவ்வொரு இயக்கங்களும் நம்பியிருந்தன.

மாட்டிக்கொண்ட றோ அதிகாரி

இதேபோன்று இயக்கங்களுடன் நெருங்கிப் பழகி பின்னர் இயக்கங்கள் பற்றிய தகவல்களை ஸ்ரீலங்கா அரசிற்கும் இயக்கங்களின் மீது தனது கழுகுப் பார்வையைச் செலுத்த ஆரம்பித்திருந்த அமெரிக்க உளவு ஸ்தாபனமான CIA அமைப்பிற்கும் வழங்கிவந்த ஒரு அதிகாரியின் குட்டு நீண்ட நாட்களின் பின்னரே உடைந்தது.

தமிழ் நாட்டில் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிவந்த இந்திய ‘ஆய்வு-பகுப்பாய்வு பிரிவு” (RAW) தமிழ் இயக்கங்களுடனான தனது தொடர்புகளுக்கு உண்ணிக்கிருஷ்ணன் என்ற மலையாள அதிகாரியை நியமித்திருந்தது. உண்ணிக்கிருஷ்ணன் தமிழ் இயக்கங்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு இயக்க நடவடிக்கைகளுக்கு பலவிதமான ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

இயக்கங்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி, இயக்கங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்திய சதியில் இந்த அதிகாரியே பிரதானமாகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(பின்னாளில் இந்த அதிகாரிக்கும் CIA  நிறுவனத்திற்கும் இடையில் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இந்திய அரசால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.)

இயக்கங்களுக்கு இடையிலான பகையை ஏற்படுத்திய கைங்காரியத்தில் “ரோ” அமைப்பின் திட்டமிட்ட செயற்பாடுகள் இருந்துவந்தது நீண்ட காலத்தின் பின்னரே இயக்கங்களுக்கு தெரியவந்தது. ஆனால் இயக்கங்கள் “ரோ” இனது சித்து வேலைகள் பற்றி அறிந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

பிரதான இயக்கங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி அவற்றைப் பலவீனப்படுத்தும் பல நடவடிக்கைகள் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த அதேவேளை தமிழ் நாட்டில் ஈழ விடுதலை இக்கங்கள் மீது தமிழ் நாட்டு மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் பல முயற்சிகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் வெறுப்பு ஏற்படுத்தும் முயற்சி

அப்பொழுது இந்திய அரசின் செல்லப் பிள்ளைகளாக இருந்த “டெலோ” அமைப்பினரும், சிதறிப் போகும் ஆரம்ப கட்டத்தில் இருந்த “புளொட்” அமைப்பினரும்,  மற்றய சில உதிரி ஈழ இயக்கங்களும் தமிழ் நாட்டில் பல்வேறு கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

முற்றுமுழுதாக இந்தியாவின் உதவிகளையும், ஆலோசனைகளையும் மட்டுமே நம்பி போராட்டம் நடாத்திவந்த இதுபோன்ற இயக்கங்கள், கொள்ளைகளையும், சமுகவிரோத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் நிலைக்கு திட்டமிட்டுக் கொண்டு செல்லப்பட்டார்கள். இந்த இயக்கங்களின் தலைமைகளின் திறமையின்மை மற்றும் கட்டுப்பாடு இன்மை என்பன ஒருபுறம் இருக்க,  கொள்ளை, களவு என்பனவற்றில் இவ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஈடுபடும் வகையில் நிலமையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஏற்படுத்தப்பட்டன.

வீடுகளில் கொள்ளை, வங்கிக் கொள்ளை, ஆட்கடத்தல், கொலை என்று தமிழ் நாட்டில் இந்த இயக்க உறுப்பினர்களின் சமூக விரோத நடவடிக்கைகள் 1986ம்,  87ம் வருடங்களில் உச்சத்தை அடைந்தன.

அதேவேளை இயக்க உறுப்பினர்கள் ஈடுபட்ட இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளும் வேடிக்கையாகவே இருந்தன. தமிழ் நாட்டில் இதுபோன்ற சமுகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுத்திரிந்த போரளிகளை தமிழ் நாட்டுப் பொலிஸார் கைதுசெய்யும் சந்தர்ப்பங்களில், “ரோ” அதில் தலையிட்டு அவர்களை விடுதலைசெய்து தமிழ் நாட்டு மக்களின் கோபத்தை கனகச்சிதமாக போராளிகளின் பக்கம் திருப்பிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

“அண்ணா நகரில் கொள்ளை. ஈழப்போராளி கைது” என்று கொட்டை எழுத்துக்களில் முதல் நாள் பத்திரிகைகளில் செய்தி வரும். மறுநாளே ”பொலிஸார் கைதுசெய்த போராளி விடுதலை” என்றோ அல்லது “போராளி தப்பி ஓட்டம்” என்றோ செய்தி வெளியாகும்.

“ஈழப்போராளிகளுக்கு உதவுகின்றோம் பேர்வழிகள்” என்று கூறிக்கொண்டு செயற்பட்ட மத்திய உளவு அமைப்பான “ரோ” உண்மையிலேயே தமிழ் நாட்டு மக்கள் மத்தில் ஈழப் போராளிகளுக்கு இருந்த ஆதரவை சிதைப்பதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டன. அதில் படிப்படியாக வெற்றியும் கண்டன.

அக்காலத்தில் எந்த ஒரு ஈழப் போராளியையும் “விடுதலைப் புலி” என்றே தமிழ் நாட்டு மக்கள் அழைத்து வந்தார்கள். “புளொட்” என்றும் ”டெலோ” என்றும் வேறுபடுத்திப் பார்க்க தமிழ் நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஸ்ரீலங்காவில் எந்த இயக்கப் போராளி கொல்லப்பட்டாலும் “கொட்டியா” என்று சிங்கள இராணுவத்தினர் அழைத்தது போன்று தமிழ் நாட்டில் அனைத்து இயக்கங்களையும் “விடுதலைப் புலிங்க” என்றுதான் அழைப்பார்கள். புலிகளின் செயற்பாடுகள், அவர்களது நடவடிக்கைகள், அவர்கள் மேற்கொண்ட பிரசாரங்கள், புலிகள் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் நடந்துகொண்ட விதம் போன்றன புலிகள் பற்றிய பிரமிப்பை தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியருந்தது.

ஆனால் தமிழ் நாட்டில் புலிகள் பெற்றிருந்த பிரபலமே புலிகளில் பெயரைச் சிதைப்பதற்கும் சதிவேலைகளில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. மற்றய இயக்க உறுப்பினர்களால் பல சந்தர்ப்பங்களில் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமுகவிரோத செயல்கள் அனைத்தும் புலிகளாளேயே மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் நாட்டில் உள்ள ஒரு தொகுதி மக்கள் நினைத்துவிடும் அபாயம் இதனால் ஏற்படலாயிற்று.

களவுகள், கொள்ளைகளில் ஈடுபட்ட “புளொட்” இயக்க உறுப்பினர்கள் தங்களை புலிகள் என்று கூறி கொள்ளையடித்த சந்தர்ப்பங்கள் பலவும் உள்ளன. அக்காலத்தில் SOLT ( Students Organisation of Liberation Tigers) என்ற பெயரில் விடுதலைப் புலிகள் சென்னை அடையார் உட்பட பல இடங்களில் அலுவலகம் திறந்து,  தமது இயக்க நடவடிக்கைகள் பற்றிய பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்கள்.

அதேபோன்று தமிழ் நாட்டில் தங்கியிருந்து கல்வி கற்றுக் கொண்டிருந்த ஈழத் தமிழ் மாணவர்களது நடவடிக்கைகளினாலும், அகதிகளாக தமிழ் நாடு வந்து தங்கியிருந்த இளைஞர்களின் தீய செயல்களினாலும் ஈழத்தமிழர்கள் பற்றி தமிழ் நாட்டு மக்களுக்கு இருந்த அபிப்பிராயம் கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பல செயற்திட்டங்களை இந்த SOLT உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

ஈழத் தமிழர்கள் எங்காவது பிரச்சினைப்படுத்தினால் தமிழ் நாட்டிலுள்ள பொதுமக்கள் அவர்களைப் பிடித்து புலிகளின் இந்த ளுழுடுவு அலுவலகத்தின் ஒப்படைக்கும் அளவிற்கு இதன் செயற்பாடுகள் அங்கு பிரசித்திபெற்றிருந்தது.

ஆனால் ஈழத்தமிழர்கள் பற்றி நல்ல எண்ணத்தை தமிழ் நாட்டு மக்களிடம் கட்டி எழுப்பும் நோக்குடன் புலிகள் மேற்கொண்ட இதுபோன்ற பல நடவடிக்கைகள்,  மாற்று இயக்கங்களின் திட்டமிட்ட சதி காரணமாக சிதறிப் போகலாயின.

ஈ.பி.ஆர்.எல்.எப்.

அதேபோன்று,  விடுதலைப் புலிகள் போலவே அந்த நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பும் (டக்ளஸ் தலைமையிலான சூழைமேட்டுச் சம்பவங்கள் போன்ற ஒன்றிரண்டைத் தவர) பெரிதாக சமூக விரோத நடவடிக்கைகளில் தமது உறுப்பினர் ஈடுபடாமல் பார்த்துக் கொண்டதையும் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

ஈழத் தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடக்கூடாது என்பதிலும், அவர்கள் தமக்கும் மோதுபட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்பதிலும், ஆரம்பம்முதலே இந்திய உளவு அமைப்புக்கள் உறுதியாக இருந்தன. ஆதில் அவர்கள் வெற்றியும் கண்டிருந்தார்கள்.

அத்தோடு 1986ம் ஆண்டில் இந்திய அரசு சிறிலங்கா அரசாங்கத்துடன் நேரடியாகப் பேச நினைத்த உடனேயே,  தமிழ் நாட்டு மக்களின் மனங்களில் இருந்து போராட்ட இயக்கங்களை அன்னியப்படுத்தும் சதிகளை இந்த புலனாய்வு அமைப்பு கனகச்சிதமாக அரங்கேற்றியிருந்தது. போராட்ட இயக்கங்கள் தமக்குள் மோதுபட்டு தம்மைத்தாமே பலவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சதியையும் மிகக் கவனமாகவே இந்தியப் புலனாய்வாளர்கள் அரங்கேற்றியிருந்தார்கள்.

தொடரும்


  இந்தியா பற்றி புலிகள் வெளியிட்ட அதிர்ச்சிதரும் தகவல்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 43) – நிராஜ் டேவிட்

  • November 22, 2012 
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருந்த துரோக நடவடிக்கைகள் பற்றி நிறைய விடயங்களைக் கூறமுடியும்.

இந்திய அரசியல்வாதிகளும், இந்தியப் புலனாய்வு பிரிவினரும் ஈழத் தமிழரின் விடுதலைப் போருக்கு எதிராக மேற்கொண்டிருந்த வரலாற்றுத் துரோகங்கள் பற்றி அக்காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளியாகி இருந்தன. இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, புலிகளுக்கும் இந்திய படைகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிராகரித்து இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றியும், இதில் தமது நிலைப்பாடு பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கும் முகமாக புலிகள் இந்த நூலை வெளியிட்டிருந்தனர்.

`இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்` என்ற தலைப்பில் 1987 டிசம்பர் மாதம் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் இந்த நூல் புலிகளால் வெளியிடப்பட்டது.

அதிர்ச்சி தரக்கூடியவைகளும், சர்ச்சைக்குரியவைகளுமான பல தகவல்கள் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்திய அரசின் துரோக நடவடிக்கைகள் பலவும் இந்த புத்தகத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டிருந்தன.

அந்தப் புத்தகத்தில் தொரிவிக்கப்பட்டவைகளுள் சில:

‘’1987 ஜனவரியில் சிங்கள இனவாத அரசு யாழ் குடாநாட்டில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியருந்ததுடன், வடக்கிலும் கிழக்கிலும் பெரியளவிலான இராணுவப் படையெடுப்பையும் மேற்கொண்டிருந்தது. வடக்கில் மாத்திரம் இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்ரீலங்காத் துருப்பினர் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் எமது விடுதலைப் புலிகள் அணியினரோ, பல்வேறு அரங்குகளில் ஸ்ரீலங்கா அரச படையினரை எதிர்த்து வீராவேசத்துடன் போரிட்டு வந்தனர். ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றாக்குறையுடன் கூட எமது எதிரியை நாம் மிகவும் வெற்றிகரமாகச் சமாளித்துக்கொண்டிருந்தோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் இந்திய அரசிடம் ஆயுத உதவி கோரினோம். எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகின்றார்கள் என்பதைச் சுட்டிக் காண்பித்து எமது மக்களை காப்பாற்ற உதவிசெய்யுமாறு நாம் பாரதத்திடம் பலதடவைகள் கோரிக்கைவிடுத்திருந்தோம்.

எமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிக்கொண்ட பாரதம் மௌனமாகவே இருந்துவந்தது. நாம் கோரிய ஆயுதப் பட்டியல் விபரங்கள், எமது வெடிமருந்துப் பற்றாக்குறைகள் போன்றவற்றைச் சேகரித்த ’’றோ’’ அதிகாரிகள் அதனை ஸ்ரீலங்கா அரசிடம் சமர்ப்பித்திருந்தார்கள். ’’றோ’’ அதிகாரியான உன்னிக்கிருஷ்ணனே இந்த விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் வழங்கியிருந்த தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கா இராணுவம் தமது போர் உபாயங்களை வகுத்து யுத்தத்தை தீவிரப்படுத்தியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், களத்தில் நின்று போராடிய எமது இயக்கத்திற்கு ஆயுத உதவி அளித்து எமது மக்களைப் பாதுகாக்கத்தயங்கிய இந்தியா, தமிழ் நாட்டில் செயலிழந்து கிடந்த இயக்கங்களுக்கு பயிற்சியும், ஆயுத உதவியும் வழங்க முன்வந்தது.

அத்தோடு இந்த இயக்கங்களை தமிழ் மக்களுக்காகப் போரடிவரும் எமது அமைப்பிற்கெதிராகத் திருப்பிவிடுவதிலும் இந்தியா கவனம் செலுத்தியது. இந்த நடவடிக்கையானது எமக்கு இந்தியா மீதிருந்த நம்பிக்கையை தகர்த்தது. இதன் மூலம் இந்திய அரசின் நோக்கம் எமக்கு தெளிவானது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம்வாய்ந்த இராணுவ சக்தியாக உருவெடுத்து ஸ்ரீலங்காப் படையினரைத் தோற்கடிப்பதை இந்தியா விரும்பவில்லை. “ஸ்ரீலங்காப் படையினர் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, புலிகளை அழித்து, அவர்களை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்தவேண்டும். புலிகளால் தமிழ் மக்களைப் பாதுகாக்கமுடியாத சூழ்நிலை உருவாகவேண்டும். மக்கள் மத்தில் புலிகள் மீதிருந்த நம்பிக்கை தளரவேண்டும். அந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் இரட்சகர் என்ற போர்வையில் நேரடியாக இராணுவரீதியில் தலையிட்டு தனது நலன்களைப் பேணிக்கொள்ளவேண்டும்’’.- இப்படித்தான் இந்திய அரசு திட்டமிட்டது.

அதேசமயம் இந்திய அரசு ஜயவர்த்தனவை மிரட்டி ’’ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்களை ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு வழங்கி ஸ்ரீலங்கா இரணுவத்தை முறியடிப்போம். பெரிய அழிவுகளை உண்டுபண்ணுவோம். எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியிடம் உதவிபெற்றாலும் யுத்தத்தில் வெல்லமுடியாமல் பண்ணுவோம்’’ என்று மிரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

தமிழர் நலனில் இந்தியா உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதவி வழங்கி தமிழ் மக்களின் அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அதனை விரும்பவில்லை. புலிகளின் வெற்றிக்கு வழிவகுத்துக்கொடுத்துவிட்டால் தனது தலையீட்டுக்கு வாய்ப்புகள் இல்லாமல்போய்விடும் என்று இந்தியா கருதியது.

ஒரு அப்பட்டமான இனப்படுகொலையைத் தடுக்க வேண்டும் என்கின்ற மனிதாபிமான நிலைப்பாட்டைக் கைவிட்டு, தனது பூகோள நலன்களில் மட்டுமே இந்தியா அக்கறை காண்பித்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழீழ மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. இலங்கையில் வாழும் பல்லின மக்களில்; ஒரு சமுகக் குழுவாகவே தமிழீழ மக்கள் கணிப்பிடப்படுகின்றார்கள்.

இந்த ஒப்பந்தமானது தமிழர் தாயகத்தையும், அந்தத் தாயகத்தில் தமிழரின் ஒருமைப்பாட்டு உரிமையையும் அங்கீகரிக்கவில்லை.

தற்காலிக வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றிக் குறிப்பிட்டபோதும், கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழர் தாயகத்தை பிரிவுபடுத்தும் ஆபத்தான விதிகளையும் கொண்டிருக்கின்றது. இப்படி தமிழீழ மக்களுக்கு பாதகமான பல குறையாடுகள் இந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்றது.

இந்திய அரசானது எம்மை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணாகதியடையச் சொல்லுகின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கச் சொல்லுகின்றது.

நாம் ஆயுதத்தில் காதல்கொண்ட அராஜகவாதிகள் அல்லர். நாம் பலாத்காரத்தை வழிபடும் பயங்கரவாதிகளும் அல்லர். நாம் யுத்த வெறிகொண்ட, இரத்த வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம். எமது மக்கள் சமாதானமாக, நிம்மதியாக, சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்.

ஒடுக்கப்பட்ட எமது மக்களின் உரிமையை மீட்டெடுக்கவே நாம் ஆயுதங்களை ஏந்தினோம். அந்த இலட்சியத்திற்காகவே நாம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றோம். அந்த இலட்சியத்திற்காக இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது வீரர்கள் தமது உயிரை அற்பனித்துள்ளார்கள்.

எமது வீரவரலாற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எம்மைச் சரணாகதி அடையச் சொல்லுகின்றது இந்திய அரசு.

நாம் பாரத நாட்டுடன் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுடன் போர் புரியவும் விரும்பவில்லை. நாம் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கின்றோம். ஆனால் நாம் ஆயுதங்களைக் கையளித்துவிடுவதால் எமது மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு தரப்பட்டுவிடுமா? எமது மக்கள் நிம்மதியாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வழி பிறக்குமா?

நாம் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கின்றோம். ஆனால் எமது மக்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். இந்திய அரசு தனது இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு, புலிகளை வேட்டையாடுவதைக் கைவிட்டு, எமது மக்களுக்கு சுபீட்சமான ஒரு வாழ்வை, ஒரு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு முன்வரவேண்டும். அப்பொழுது நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம்.

இந்திய இராணுவம் எமது மண்ணில் நிகழ்த்திவரும் அடாவடித்தனங்களைக் கண்டு நாம் அஞ்சி அடிப்பணிந்து போனால், ஜயவர்த்தன அரசிற்கு எமது தமிழ் இனம் அடிமைகளாகப் போக நேரிடும். இத்தனை காலமாக நாம் இரத்தம் சிந்திப் போராடியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இன்று நாம் இந்தியாவிற்கு அடிப்பணிந்து போய்விட்டால் அடுத்த எமது தலைமுறை எம்மை மன்னிக்கப்போவதில்லை. நாம் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்களுக்கு அஞ்சப்போவதில்லை.

இந்தியா ஒரு அந்நிய நாடு. இங்கு வந்து எமது மண்ணை ஆக்கிரமித்துக்கொண்டு இந்திய இராணுவம் எம்மை அடிமைப்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.

எமது மக்களுக்கு எதிராக தான் செய்யும் அட்டூழியங்களையும், அநியாயங்களையும் இந்திய அரசு உலகின் முன்பாக இருட்டடிப்புச் செய்கின்றது. அபாண்டமான பொய்களைக் கூறிவருகின்றது.

பொய்மையின் திரைகளைக் கிழித்துக்கொண்டு உண்மை ஒருநாள் வெளிவரத்தான் செய்யும். அப்பொழுது பாரதம் உலக மனச்சாட்சியின் முன்பு தலை குணிந்து நிற்கும். அப்பொழுது வரலாறு எமது பக்கம் திரும்பும். அன்றுதான் எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். அதுவரை நாம் உண்மைக்காக, நீதிக்காகப் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம்.|“

இவ்வாறு புலிகள்; 1987 டிசம்பர் மாதம் சென்னையில் பிரசுரித்திருந்த ’’இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்’’ என்ற தமது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்கள்.

இதேபோன்று, இந்தியா தமிழ் மக்களுக்கு எதிராக தமிழ் ஈழ மண்ணில் மேற்கொண்டிருந்த அட்டூழியங்களை எல்லாம் பட்டியலிட்டு, புலிகள் ஆங்கிலத்திலும் ஒரு நூலை வெளியிட்டிருந்தார்கள்.

‘’இந்தியா….நீயுமா???“(You too India?) என்ற தலைப்பில் வெளியான இந்த நூலும் இந்தியாவின் பல துரோக நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டுவதாக இருந்தது.

ஈழத்தமிழர் பற்றி ஒன்றுமே தெரியாத ராஜீவ் காந்தி

ஈழத் தமிழர் பிரச்சனையில் அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதாக வெளி உலகிற்கு காண்பித்துக்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, உண்மையிலேயே ஈழத்தின் வராலாறு பற்றி ஒன்றுமே தெரியாதவராக இருந்தார். புலனாய்வு அதிகாரிகள் வழங்கும் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு தீர்மானங்களை எடுக்கும் ஒரு நிலையிலேயே ராஜீவ் காந்தி இருந்துவந்தார்.

இந்தியாவின் பிராந்திய நலன்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கும் நோக்கத்தில் காய்களை நகர்த்திக்கொண்டிருந்த இந்திய புலனாய்வுப் பிரிவினரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்களை மூடிக்கொண்டு அவர் அனுமதி வழங்கிவந்தார். இதனால் ஈழத் தமிழர் பற்றி உண்மையான அக்கறை எதனையும் அவரால் காண்பிக்கமுடியாமல் போயிருந்தது.

‘’ஈழப்பிரச்சனையில் இந்தியா முழுமூச்சுடன் இறங்கியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், இந்தியாவின் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு ஈழத்தின் நிலப்பரப்பு பற்றிய அறிவு போதியளவு இல்லாது இருந்திருந்தது’’ என்று ஈழத் தமிழர்களின் முக்கிய தலைவர் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.

அந்தத் தமிழ் தலைவர் வேறு யாரும் அல்ல! இந்தியாவின் அத்தனை ஈழ விரோத நடவடிக்கைகளுக்கும் துணை போய்கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களே, ராஜீவ் காந்தி பற்றி இவ்வாறு தெரிவித்திருந்தார். ’’செல்வா ஈட்டிய செல்வம்’’ என்ற தலைப்பில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் எழுதியிருந்து நூல் ஒன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

‘’செல்வா ஈட்டிய செல்வம்’’

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மகாநாடு இந்தியாவின் பெங்களுர் நகரில் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அந்த மாநாட்டின்போது ஈழப் பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுடன் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடாத்தனார்.

இனப்பிரச்சனைக்கு தீர்வாக தெரிவிக்கப்பட்டிருந்த உத்தேச மாநில சுயாட்சி பற்றி அங்கு ஆராயப்பட்டது. காணிப் பங்கீடு, கவர்ணரின் அதிகாரம் போன்ற விடயங்களுக்கு ஸ்ரீலங்கா தரப்பில் இருந்து சில மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது, வடக்கு கிழக்கு மாகாண இணைப்புப் பற்றிய யோசனைக்கு மாற்றாக, கிழக்கு மாகாணத்தை மூன்று மாகாணங்களாகப் பிரிக்கும் ஓர் ஆச்சரியமான திட்டம் ஸ்ரீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தோடு திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் உள்ள தமிழ் பகுதிகளை இணைத்து ஓர் தமிழ் மாகாணமும், எஞ்சிய திருகோணமலை மாவட்டம் ஒரு சிங்கள மாகாணமாகவும், அம்பாறை மாவட்டம் ஒரு முஸ்லிம் மாகாணமாகவும் பிரிக்கப்படுவதற்கான யோசனையை ஜே.ஆர். முன்வைத்திருந்தார்.

கிழக்கு மாகாணக் குடிசன இனவாரி அமைப்பு பற்றி மிகத் தவறான கருத்தைக் கொடுக்கக்கூடிய வரைபடங்களையும் ஜே.ஆர். இந்திய அதிகாரிகளிடம் வழங்கியிருந்தார். இந்த பொய்யான வரைபடங்கள் பற்றி தமிழர்கள் தரப்பு எவ்வளவோ எடுத்துக் கூறியபோதிலும், ராஜீவ் காந்தி அவர்களும், இந்திய அதிகாரிகளும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.

இந்த பொய்யான வரைபடங்களின் அடிப்படையில், ஜே.ஆர். முன்வைத்த காணிப்பங்கீட்டுத் திட்டத்திற்கு தமிழ் அமைப்புக்களைச் சம்மதிக்கவைக்க இந்திய அரசு அவசரம் காண்பித்தது. இரவோடு இரவாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரனை பெங்களூருக்கு அழைத்து இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி அவரை இந்திய அரசு நிர்ப்பந்தித்தது.

ராஜீவ் காந்தி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் திரு.பிரபாகரன் நீண்ட விவாதங்களை நடாத்தியபோதும், இதற்கு தீர்வெதுவும் காணப்படவில்லை. இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு திரு.பிரபாகரன் ஒரேயடியான மறுப்புத் தெரிவித்து விட்டார்.

திருகோணமலையை சிங்கள மாகாணமாக்கித் தன்பிடிக்குள் வைத்திருக்கும் ஜே.ஆரின் திட்டத்தில், நீண்ட கால நோக்கத்தில் அமைந்த சதி ஒன்றும் காணப்பட்டிருந்தது.

வடக்கையும், கிழக்கையும் இணையவிடாது, இடையில் சிங்கள பிரந்தியம் ஒன்றை அமைத்து வடக்கு கிழக்கை நிரந்தரமாகக் கூறு போட்டுவிடும்; திட்டத்திலேயே ஜே.ஆர். அந்த மூன்று கிழக்கு மாகாணங்களின் யோசனையை முன்வைத்திருந்தார். ஜே.ஆரின் இந்த கபட திட்டம் பற்றி பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தமிழ் தலைவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த யோசனையை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்.

கிழக்கு மாகாணம்

இந்த விடயம் பற்றி திரு. அமிர்தலிங்கம் அவர்கள் தனது நூலில் குறிப்பிடும் போது, ’’…….. இந்திய அதிகாரிகளும், இந்தியப் பிரதமரின் ஆலோசகர்களும், கிழக்கு மாகாணம் பற்றிய மிகத் தவறான கருத்தையே கொண்டிருந்தார்கள். வடக்கு மாகாணத்தில் இருந்து நிலத்தொடர்புகள் எதுவும் அற்ற ஒரு தனி பிரதேசமே இந்தக் கிழக்கு மாகாணம் என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள்.

கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றத்தின் வரலாறும் அதன் தாக்கமும் பற்றியும், அங்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட தேர்தல் தொகுதிகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகள் பற்றியும், புதிய சிங்கள நிர்வாகப் பிரிவுகளில் அபிவிருத்தி செய்யப்படாத தமிழ் நிலங்களையெல்லாம்; சேர்த்த சிங்கள அரசின் சூழ்ச்சி பற்றியும், 1983ம் ஆண்டு கலவரங்களின் பின் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பற்றியும், இந்திய அதிகாரிகளுக்கு முதலில் இருந்து விரிவாக விளக்கவேண்டி இருந்தது..’’ என்று திரு. அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

1986ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதியே இதுபற்றி இந்திய அதிகாரிகளிடம் தாம் இந்தத் தரவுகளை வழங்கியிருந்ததாக திரு.அமிர்தலிங்கம் தனது நூலில் தொவித்திருக்கின்றார்.

அப்படியானால், ஈழமக்கள் போராட்டம் மேற்கொள்வதற்கு அடிப்படையாக இருந்த காரணங்கள் தெரியாத நிலையிலேயே இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட்டிருந்ததா என்கின்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

1986ம் ஆண்டு டிசம்பரில், இனப்பிரச்சனைத் தீர்வு பற்றி பேச்சுவார்த்தை நடாத்துவதற்கென்று இந்திய அமைச்சர்களான சிவசிதம்பரமும், நட்வர்சிங்கும் கொழும்பு செல்வதற்கு முன்னர், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் அவர்களைச் சந்தித்து, இலங்கையின் கிழக்கு மாகாணம் பற்றிய உண்மையான வரைபடத்தையும், அதன் பூகோள விபரத்தையும் தாம் வழங்கியதாக திரு.அமிர்தலிங்கம் தனது நூலில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

இது, ஈழத்தமிழர்களுக்கு சார்பாகவென்று கூறிக்கொண்டு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த இந்திய அதிகாரிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும், ஈழநாட்டின் வரைபடம் முதற்கொண்டு ஈழ வரலாறு பற்றிய எந்தவித அடிப்படையும் இல்லாது இருந்திருக்கின்றது என்பதை புலப்படுத்துவதாக உள்ளது.

அதுவும் இலங்கை நாட்டில், ஈழ மண்ணில் இந்தியாவின் நேரடித் தலையீடு இடம்பெறுவதற்கு சில மாத காலம் வரை கூட ஈழத்தின் பூகோள வரைபடவிபரம் இந்தியாவிடம் இல்லாதிருந்தது ஆச்சரியமான விடயம்தான்.

அப்பொழுது இந்தியாவிடம் இருந்ததெல்லாம் இந்திய நாட்டின் பூகோள நலன் மட்டும்தான் என்பது இதிலிருந்து தெளிவாகவில்லையா?

தொடரும்..


About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply