தலைவரும் நானே  பேரவையும்  நானே!பொதுக் குழுவும் நானே! மத்திய செயல் குழுவும் நானே! கேள்வியும் நானே பதிலும் நானே!

தலைவரும் நானே  பேரவையும்  நானே!பொதுக் குழுவும் நானே! மத்திய செயல் குழுவும் நானே! கேள்வியும் நானே பதிலும் நானே!

நக்கீரன்

தமிழ் மக்கள் பேரவை என்பது தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள், சக்திகள், தனிமனிதர் போன்ற விக்னேஸ்வரன், ஓய்வுநேரத்தில் அரசியல் செய்யும் இரண்டொரு மருத்துவர்கள் போன்றோரால் உருவாக்கப்பட்டதாகும். தமிழ் மக்கள் பேரவையின் தொடக்க கூட்டத்துக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு க்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இது தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் ததேகூ க்கு எதிரான என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த அமைப்பின் தோற்றத்துக்குப் பின்னாலே புலத்தில் இருக்கும் வன்னியின் எச்சங்களும் மிச்சங்களும் இருந்தார்கள். குறிப்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)  தமிழ் மக்கள் பேரவையை இயக்கி, கதை, உரையாடல் எழுதி தயாரித்து வெளியீடு செய்து வைத்தது. மக்கள் பேரவை என்ற சொற்றொடர் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு வாலாயமான ஒன்றாகும். தமிழ் மக்கள் பேரவையின் அமைப்பு,  அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை,  உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு  போன்ற அமைப்புகளின் மறுவார்ப்பாகும். தாயகம், தேசியம், சுயநிர்ண உரிமை (தன்னாட்சியுரிமை)  மொழி, கலை,  பண்பாடு தமது நோக்கங்கள்  என்பது போலவே தமிழ் மக்கள் பேரவையும்   அதே நோக்கங்களைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப் பட்டது. 

 இந்த   அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவையில்  மக்கள் பேரவை, தேசிய பேரவை, தேசிய மக்கள் பேரவை, பண்பாட்டுக் கழகம் என 12 க்கும் அதிகமான அமைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.  தாயகம், தேசியம், தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை என்ற முழக்கங்கள் இந்த அமைப்புகளின் கோட்பாடாகும்.

2015 இல் இலங்கையில் நடந்த சனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும்  என்றால்  தேர்தலில் முதன்மை வேட்பாளர்களாக நிற்கும் மகிந்த ராபக்சவின் செயற்பாட்டையும் பதவிக்கு வரத்துடிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் ஆழமாக ஆராய்ந்து கலந்துரையாடலுக்கு உட்படுத்தியதன் அடிப்படையில், தமிழ் மக்களின் தெரிவாக இருவரும் இருக்கமுடியாது என்று அனைத்துலாக ஈழத்தமிழர் மக்கள் அவை அறிக்கை விட்டது. இந்த அமைப்பின் இன்னொரு முகமான தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணியும் (ததேமமு)  தேர்தலில் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அதாவது தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டது.

இரண்டு எதிரிகள் இருக்கும் போது அதில் ஒரு எதிரியோடு நட்புக் கொண்டு இரண்டாவது எதிரியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது அடிப்படை  அரசியல் பாலபாடம். இதைக் கூட இந்த அமைப்புக்கும்  ததேமமு கும்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் (நாகதஅ) தெரியவில்லை. ஆனால் எமது தாயக மக்கள் புத்திசாலிகள். வரலாறு காணாத வகையில் 75 விழுக்காட்டுக்கும்  மேலான தமிழ் வாக்காளர்கள் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். தமிழ்மக்களது ஆயுதப் போராட்டத்தை பூண்டோடு அழித்த மகிந்த இராசபக்சாவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதே ஆண்டு 2015 ஓகஸ்த் மாதம் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடந்த போது அஈமஅ,   ததேமமு என்ற முகமூடியை அணிந்து கொண்டு தேர்தலில் குதித்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு பகிரங்க வேண்டுகோள் விடுத்தது. சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு  கேட்டுக் கொண்டது.  பொன்னும் பொருளும் கொடுத்து ஆதரித்தது. அப்போது இந்த அமைப்பு  ததேமமு யை ஆதரித்து வெளியிட்ட அறிக்கை வேடிக்கையானது.

“தமிழர் தாயகமே, எமது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தின் அடித்தளம். ஆதலால், அனைத்துலகளவில் நாம் தொடரும் போராட்டங்கள் வெற்றியடைவதற்கு, தாயகத்தில் வாழும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓங்கி ஒலிக்கின்ற உறுதியான குரலொன்று எமக்குத் தேவை. அந்தக் குரல் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பதே எமது நிலைப்பாடு.

‘நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம், சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும், தமிழின அழிப்புக்கு நீதியையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வல்லமை பொருந்திய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதனால், உங்களுடைய வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இடப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளே, ஊரில் உள்ள உங்கள் உறவுகளுடன் விரைவாகக் தொடர்புகொண்டு, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுங்கள். புலம்பெயர் தேசத்தில் செயற்படும் ஏனைய அமைப்புகளையும் இந்த பரப்புரை பணியில் இணைந்து கொள்ளுமாறு சகோதரத்துவத்துடன் அழைக்கிறோம்.

ததேமமு போட்டியிட்ட 7 மாவட்டங்களில் 6 மாவட்டங்களில் கட்டுக்காசை இழந்தது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 5 வாக்குகளால் கட்டுக்காசைக்  காப்பாற்றிக் கொண்டது.

எனவே இந்த தமிழ் மக்கள் பேரவை,  அஈதமஅ, நாகதஅ, உதஒகு எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் தெரியாதது போல உலக அரசியலின் யதார்த்தம், பூகோள அரசியலின் போக்கு, உலக ஒழுங்கு தெரியாதவையாக இருக்கின்றன.

ஒரு அமைப்பு ஒழுங்காகச் செயற்பட வேண்டும் என்றால் அதில் இருப்பவர்களுக்கு ஒத்த கோட்பாடு, கொள்கை, நோக்கம் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அமைப்பு குழப்பம் இல்லாமல்  இயங்க முடியும்.  இதற்கு மாறாக தமிழ் மக்கள் பேரவை  ஒரு கலவையாக, சாம்பாராகக் காட்சி அளிக்கிறது. 2015 இல் நடந்த தேர்தலில் ததேமமு அடைந்த படுதோல்வியைச்  சரிக்கட்டவே தமிழ் மக்கள் பேரவை தொடங்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவைக்கு அரசியல் நோக்கம் கிடையாது தமிழ் மக்களை ஒன்றிணைப்பதே அதன் நோக்கம் என்று அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான (இப்போது தான் மட்டுமே  தலைவர் என விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார் என்ற செய்தி வந்திருக்கிறது) விக்னேஸ்வரன் சொல்கிறார். ஆனால் அந்த அமைப்பில் ஈபிஎல்ஆர்எவ் மற்றும் ததேமமு இரண்டு கட்சியையும் சேர்ந்தவர்கள் உறுப்பினராக இருக்கிறார்கள்.  இந்த இரண்டு கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தலில் தமபே பங்கு கொள்ள வேண்டும் என்று வாதாடின. இல்லை பேரவை தொடர்ந்து அரசியல் சாராது இயங்கும் என்று சொன்னவுடன் அந்தக் கட்சிகள் வெளியேறிவிட்டன. வெளியேறிய கட்சிகள் இரண்டும் தேர்தலில் ஒருமித்து போட்டியிடப் போவதாக அறிவித்தன. ஆனால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற சிக்கலில் பிரிந்து விட்டன. இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணி ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. இபிஎல்ஆர்எவ் இன் நிரந்தரத் தலைவர்  ஆனந்தசங்கரியாரின் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு சேர்ந்து தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பில் போட்டியிட்டது. ஆனால் அங்கேயும் குழப்பம்.  இபிஎல்ஆர்எவ்  தலைவர் பிறேமச்சந்திரன் தன்னைக் “காய் வெட்டிப்” போட்டதாக ஆனந்தசங்கரி இப்போது தலையில் கைவைத்து ஒப்பாரி வைக்கிறார்.

எனவே தமிழ் மக்கள் பேரவை ஒரு அமைப்பாக நீண்ட நாள் செயற்பட முடியாது. அவர்களுக்குள் ஒத்த கோட்பாடு, கொள்கை கிடையாது. எடுத்துக்காட்டாக ததேமமு  இந்தியா மற்றும்  மேற்குநாடுகளின் அடிவருடிகளாக நின்று கொண்டு ஈழத் தமிழ் மக்களைக்  காட்டிக் கொடுக்கிறது, துரோகம் செய்கிறது என கஜேந்திரகுமார் மேடை தோறும் கூக்குரல் இடுகிறார். இது ஒரு குழந்தைத்தனமான வாதம் என்பது அரசியலில் அ, ஆ படித்தவர்களுக்கே தெரியும். ஆனானப்பட்ட வி.புலிகளே இந்தியா எமது நேச நாடு எனக் கடைசிவரை  சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த நாட்டுடன் உறவு வைத்துக் கொள்ளப் பெரும் பாடுபட்டார்கள்.

1987ம் ஆண்டு  தலைவர் பிரபாகரன்  யாழ்ப்பாணம்,  சுதுமலை என்ற இடத்தில் முதன் முதலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முன்பு உரையாற்றினார்.  வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரை சுதுமலைப் பிரகடனம் என்று பெயர் பெற்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு உரிமை எதையும் பெற்றுத் தராது என்பதையும் இந்த ஒப்பந்தத்தை தாம் ஏற்கவில்லை என்பதையும் இந்தியாவின் கேந்திரச் செல்வாக்கானது, தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தோடு உரசுகின்றது என்பதையும் சுட்டிக் காட்டிய தலைவர் பிரபாகரன் இன்னுமொரு முக்கியமான செய்தியையும் சொன்னார். நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். நாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல  என்று அன்று மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.

அன்றைய இராதந்திரிகளினதும் இந்திய உளவுப்பிரிவினரதும் இந்திய அரசியல்வாதிகளினதும் தவறான கணிப்புக்களாலும் செயல்களாலும் பின்னாளில் புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையே போர் மூண்டு கசப்புணர்வுகள் தோன்றினாலும் இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் அடிப்படையில் விடுதலைப்புலிகள் எதிரானவர்கள் அல்லர் என்ற திடமான, தெளிவான, சிந்தனை  தலைவர் பிரபாகரனுக்கு  இருந்தது.

2002 இல் இரணில் விக்கிரமசிங்கவின் அரசோடு  விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சவார்த்தைகளை தொடங்கியபோது அச்சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குரிய களமாக இந்தியாவைத் தெரிவு செய்வதை புலிகள் ஆதரித்தார்கள்.

எனவே கிழக்காசிய பிராந்தியத்தின் வல்லரசாக விளங்கும் இந்தியாவை ஓரங்கட்டிவிட்டு அல்லது ஒதுக்கிவிட்டுத் தமிழ்மக்களது சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும் என்பது அறிவீனம். கடந்த ஒக்தோபர் 01,2015 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் (ஐநாமஉ) பேரவையில்  நிறைவேற்றப்பட்ட இல 30/1 தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவு வரப்பிரசாதமாக இருந்தது. போர் முடிந்த கையோடு 2009 இல் நடந்த ஐநாமஉ பேரவையில் சிறிலங்கா அரசுக்கு எதிராகக் கனடாவும் சுவிஸ்தலாந்து நாடும் முன்மொழிந்த தீர்மானம் ஆதரவு இல்லாததால் மீளப்பெறப்பட்டது. அதுமட்டுமல்ல  பயங்கரவாதத்தை ஒழித்த சிறிலங்கா அரசைப் பாராட்டி  இந்தியா கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது.

இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளை எமக்கு  ஆதரவாக 2012 இல் ஒரே கோட்டில் கொண்டுவந்த சாணக்கியம்  ததேகூ தலைமைக்கு உரியது. குறிப்பாக இரா சம்பந்தனுக்கு உரியது.

தமிழ் மக்கள் பேரவையில்  கஜேந்திரகுமாரின் ததேமமு தவிர வேறு யாரும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடடைக் கொண்டிருக்கவில்லை. இப்படி வட துருவம் – தென்துருவமாக பிரிந்து கிடக்கும் தமிழ் மக்கள் பேரவை தமிழ்மக்களை ஒன்று திரட்டும் என்பது  ஊமையன் கண்ட கனவாகத்தான் இருக்கும்.

இதை எழுதிக் கொண்டிருக்கம் போது தமிழ் மக்கள் பேரவையை விக்னேஸ்வரன் மறுசீரமைத்து விட்டார் என்ற செய்தி வந்துள்ளது. அதாவது பொதுக் குழு அப்படியே இருக்க பத்துப் பேர் கொண்ட செயல் குழுவை அவர் உருவாக்கியுள்ளார். அதில் ததேகூ இல் இருந்து வெளியே கூட்டித்தள்ளப்பட்ட  அனந்தி, அருந்தவபாலன் இருப்பார்களாம். ஊழல் குற்றச்சாட்டில் விக்னேஸ்வரன் அவர்களாலேயே அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ஐங்கரநேசனும் இந்தச் செயல் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  இணைத் தலைவராக இருந்த விக்னேஸ்வரன் தன்னைத்தானே தலைவராக நியமித்துக் கொண்டுள்ளார். மற்றைய இணைத் தலைவர் வசந்தராசா உள்ளேயா? வெளியேயா? என்பது தெரியவில்லை.

தமிழரசுக் கட்சியில் சனநாயகம் இல்லை, கூட்டங்களுக்கு எனக்க அழைப்பு அனுப்பவதில்லை, தலைவர்கள் தாங்கள் நினைத்தபடி தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று ஒப்பாரி வைக்கும் விக்னேஸ்வரனது சனநாயம் அம்மணமாகக்  காட்சி தருவதை அவருக்குப் பின்னால் நிற்பவர்கள் ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்? காதிருந்தும் செவிடர்களாக ஏன் இருக்கிறார்கள்?

இப்போது தலைவரும் நானே  பேரவையும்  நானே!பொதுக் குழுவும் நானே! மத்திய செயல் குழுவும் நானே! கேள்வியும் நானே பதிலும் நானே! மொத்தத்தில்  எல்லாமே நானே! என்கிறார் விக்னேஸ்வரன்.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹ குரு சாட்சாத் பரப்ரம்மாஹ் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!

About editor 3085 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply