தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்
நக்கீரன்
உள்ளூராட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. முன்னர் போலல்லாது உள்ளூராட்சி தேர்தல் ஏழாண்டு கழித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு சிறப்பு ஆணையர்களால் அந்தச் சபைகள் நிருவகிக்கப்பட்டு வந்தன. இந்தத் தேர்தலில் மொத்தம் 15.8 மில்லியன் (158 இலட்சம்) வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
2011 இல் நடந்த தேர்தலில் 335 உள்ளூராட்சி சபைகளுக்கு 4,486 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இம்முறை 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் (24 மாநகர சபை, 41 நகரசபை, 276 பிரதேச சபை) 8,293 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். முன்னரை விட 3,870 உறுப்பினர்கள் (86 %) அதாவது இரண்டு மடங்கு உறுப்பினர்கள் அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதன்படி 2,500 குடிமக்களுக்கு ஒரு பிரதிநிதி இருப்பார். 2011 இல் 4,750 குடிமக்களுக்கு ஒரு பிரதிநிதி இருந்தார்.
உறுப்பினர்களது எண்ணிக்கை இரட்டிப்பாகும் போது செலவும் இரட்டிக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். அண்ணளவாக சம்பளம் மற்றும் சலுகைகள் உட்பட 3.0 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) ரூபா தேவைப்படும். மாநகர சபை மேயருக்குச் சம்பளம் மாதம் ரூபா 30,000, துணை மேயருக்கு மாதம் ரூபா 25,000 உறுப்பினர்களுக்கு மாதம் ரூபா 20,000 கொடுக்கப்படுகிறது. மாநகரசபை மேயர், நகரசபைத் தலைவர் உட்பட இந்தப் பதவிகள் பகுதி நேரப் பதவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதே கடனில் மூழ்கித் தத்தளிக்கும் இலங்கையின் பொருளாதாரம் மேலும் மோசம் அடையும் எனச் சொல்லத் தேவையில்லை.
நாடாளுமன்றத் தேர்தலைப் போல இம்முறை ஒரே நாளில் (பெப்ரவரி 10) நாடுதழுவிய தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்த வாக்காளர்களில் 60% – 70 % வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கிய மாற்றம் பெண்களுக்கு 25 % இடங்கள் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. கடந்த (2011) தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 4,486 உறுப்பினர்களில் 82 (1.8%) பேரே பெண்களாவர். இப்போது நடைபெறும் தேர்தலில் குறைந்தது 2,089 பெண்கள் தெரிவு செய்யப்படுவர். இது 2,447 % கூடுதலாகும்.
இந்தத் தேர்தல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்றாலும் இதன் மூலம் அரசியற் கட்சிகள் தத்தம் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு விழுக்காடு இருக்கிறதென்பதை நாடி பிடித்துப் பார்க்க முடியும். இதனால் ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய முக்கியத்துவம் இந்த உள்ளூராட்சி தேர்தலுக்கும் இருக்கிறது எனக் கருதப்படுகிறது.
தேர்தல் சட்டம் திருத்தப்பட்டு உள்ளூராட்சி சபைகளுக்கு 60% உறுப்பினர்கள் பழைய வட்டாரத் தேர்தல் மூலமும் எஞ்சிய 40% உறுப்பினர்கள் விகிதாசார தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பு வாக்குகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. வட்டார முறைத் தேர்தல் மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வட்டாரங்கள் இரட்டை அல்லது மூன்று உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வட்டாரங்களாக இருக்கும். இது சிறுபான்மையிர் தேர்ந்தெடுக்க வழி செய்யும்.
புதிய தேர்தல் முறையில் வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு என்று இல்லாமல் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். உண்மையில் வாக்காளர்களுக்கு இரண்டு வாக்குச் சீட்டுக் கொடுத்திருக்கலாம். ஒன்று கட்சிக்கும் மற்றது தங்களுக்குப் பிடித்த வேட்பாளருக்கும் போட அது வழி செய்திருக்கும். அப்படியிருந்திருந்தால் கட்சிபேதமின்றி “நல்ல” வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வசதியாக இருந்திருக்கும். ஒரு வேட்பாளருக்கு அல்லாது ஒரு கட்சிக்குப் போடும் தேர்தல் முறை வேட்பாளருக்கு அல்லாது கட்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக இரட்டை உறுப்பினர் தொகுதியில் கட்சியே வென்றவரைத் தேர்ந்தெடுக்கும்.
நாற்பது விழுக்காடு உறுப்பினர்கள் பொதுப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். எடுத்துக்காட்டாக யாழ்ப்பாண மாநகரசபைக்கு 45 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதில் வட்டார அடிப்படையில் 27 உறுப்பினர்களும் (60%) விகிதாசார முறையில் 18 உறுப்பினர்களும் (40%) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் வட்டாரங்களில் போட்டி போடுகிற 27 வேட்பாளர்களோடு மேலதிகமாக 3 பெயர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது கொடுக்க வேண்டும்.
விகிதாசார தேர்தல் முறையில் இருக்கைகள் ஒவ்வொரு கட்சிக்கும் விழுந்த மொத்த வாக்குகளில் அது பெற்ற வாக்குகள் அடிப்படையில் பிரித்து கொடுக்கப்படும். விருப்பு வாக்குகள் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. எடுத்துக்காட்டாக ஏ என்ற கட்சி 50% இருக்கைகளில் வெற்றி பெற்றால் அந்தக் கட்சி 50% வாக்குகளைப் பெறத் தவறினாலும் அந்தக் கட்சி 50% வட்டாரங்களை வைத்திருக்க முடியும். ஆனால் விகிதாசார முறையில் அந்தக் கட்சிக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட மாட்டாது. அந்தக் கட்சி 55 % வாக்ககளைப் பெற்று 50% இருக்கைகளைப் பெற்றால் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படும் இருக்கைகள் 55 விழுக்காட்டைத் தாண்ட முடியாது. எடுத்துக்காட்டாக 110 உறுப்பினர்கள் கொண்ட கொழும்பு மாநகர சபைக்குப் போட்டியிடும் கட்சி ஏ 45% வாக்குகளையும் 66 இல் 35 வட்டாரங்களில் வெற்றி பெற்றால் அந்தக் கட்சிக்கு 45 % இடங்களை (45 x 44 =20 இடங்கள்) ஒதுக்கினால் மொத்தம் 55 இடங்கள் (50 %) அந்தக் கட்சிக்குக் கிடைக்கும். அதாவது மொத்தம் 110 இடங்களில் 50 %. இதனை தேர்தல் திணைக்களம் அனுமதிக்காது. அதற்கு ஒதுக்க வேண்டிய இருக்கைகளில் 5 முதல் 15 குறைக்கப்படும். இதன் மூலம் அந்தக் கட்சிக்கு மொத்தம் 50இருக்கைகள் (45.4 %) மட்டும் ஒதுக்கப்படும். இந்த 5 இருக்கைகளும் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். எடுத்துக்காட்டாக கட்சி டி மொத்த வாக்குகளில் 10 % பெற்று வட்டாரத் தேர்தலில் ஒரு இடத்திலேனும் வெற்றி பெறாவிட்டால் அந்தக் கட்சிக்கு 3,4 ஏன் 5 இருக்கைகள் கூட ஒதுக்கப்படலாம்.
இந்தத் தேர்தலில் தேசிய மட்டத்தில் கையூட்டு, ஊழல் மற்றும் தேசிய அபிவிருத்தி பற்றிக் கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. குறிப்பாக மத்திய வங்கி பிணைமுறி வழங்கியதில் ஊழல் நடந்திருக்கிறதாக சனாதிபதி நியமித்த ஆணைக் குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது. அதற்கிணங்க Perpetual Treasury Limited (PTL) நிறைவேற்றதிகாரி அர்ச்சுன் அலோசியஸ் மற்றும் அதன் முன்னாள் நிறைவேற்றதிகாரி கசுன் பலிசேனா இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ச்சுன் மகேந்திரனை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவர் சிங்கப்பூர் நாட்டின் குடிமகனாவார். இது தொடர்பாக பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக கைவிரல்கள் நீட்டப்படுகின்றன. அர்ச்சுன் அலோசியஸ் அவர்களின் மாமனார் அர்ச்சுன் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணமுறி விற்பனையில் அரசுக்கு ரூபா 11 பில்லியன் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. Perpetual Treasury Limited (PTL) நிறைவேற்றதிகாரி திறைச்சேரி பணமுறிவுகளை குறைந்த வட்டிக்கு வாங்கி கூடிய வட்டிக்கு விற்பனை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
வட – கிழக்கு நீங்கலாக எஞ்சிய 7 மாகாணங்களில் 13.7 மில்லியன் (87 %) வாக்காளர்கள் இருக்கிறார்கள். முன்னைய தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்த்தால், குறிப்பாக 2015 நாடாளுமன்றத் தேர்தலை வைத்துப் பார்த்தால், ஐதேமு கொழும்பு, கண்டி நுவரேலியா மாவட்டங்களில் பலத்தோடு இருக்கிறது. இந்த மூன்று மாவட்டங்களும் ‘தெற்கில்’ உள்ள 3.2 மில்லியன் (24 %) வாக்குகளைக் கொண்டுள்ளது. அதே தரவுகளின் அடிப்படையில் மகிந்த இராசபக்சாவின் சிறிலங்கா பொதுசன பெரமுன அம்பாந்தோட்டை, மொனறாக்கல, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் காலி 3.1 மில்லியன் (23 %) வாக்குகளைக் கொண்டுள்ள மாவட்டங்களில் பலத்தோடு காணப்படுகிறது. ஐமசுகூ(UPFA ) சனாதிபதி சிறிசேனாவின் சொந்த மாவட்டமான பொலநறுவையில் மாத்திரம் பலமாக இருக்கிறது. ஆனால் இந்த மாவட்டத்தில் மொத்தம் 300,000 (2.2%) வாங்கு வங்கியே இருக்கிறது. இங்கு குறிப்பிடாத 8 மாவட்டங்களில் 7.0 மில்லியன் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த மாவட்ட வாக்காளர்களே (வட – கிழக்கு நீங்கலாக) வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பார்கள். சிறுபான்மையினர் கணிசமாக உள்ள பதுளை (30 %) புத்தளம் (20 %) மற்றும் மாத்தளை (20 %) மாவட்டங்கள் ஐதேமு பக்கம் சாய வாய்ப்பிருக்கிறது.
சனாதிபதி சிறிசேனா அவர்களது ஐமசுகூ (UPFA ) மற்றும் மகிந்த இராசபக்சா அவர்களது சிறிலங்கா பொதுசன பெரமுன (சிபொபெ) கம்பகா, குருநாக்கல (92% சிங்களம்) ஆகியவற்றில் உள்ள மொத்த வாக்குகளை தமக்குள் பிரிக்கக் கூடும்.
இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் மகிந்த இராசபக்கா தலைமையிலான சிலங்கா பொசன பெரமுன (சிபொபெ) கட்சியும் மூன்றாம் இடத்தில் சனாதிபதி சிறிசேனா தலைமை தாங்கும் ஐமசுகூ ம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தம் 51 சபைகளுக்கு 1,257 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 2011 இல் நடந்த தேர்தலில் ததேகூ மொத்தம் 255,078 வாக்குகளைப் பெற்று 32 சபைகளில் வெற்றிபெற்றிருந்தது. தெரிவான உறுப்பினர்கள் தொகை 274 ஆகும்.
இந்தத் தேர்தல் அரசியல் யாப்பு தொடர்பாக வெளிவந்த இடைக்கால அறிக்கையை வைத்து எடுக்கப்படும் கருத்துக் கணிப்பு ஆகவும் இருக்கக் கூடும். தனியார் காணிகள் மீள் கையளிப்பு, அரசியல் கைதிகள், காணாமல் போனோர் பற்றிய சிக்கல்கள் முற்றாகத் தீர்க்கப்படாது விட்டாலும் கணிசமான முன்னேற்றம் காணப்படுகிறது. இது தமிழ் மக்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் நீண்ட காலமாக அரசியல் மயப்படுத்தப் பட்டவர்கள். எப்போதும் புத்திசாலித்தனமாக வாக்களித்துப் பழக்கப்பட்டவர்கள். எது சாத்தியம் எது சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கு விளங்கும். கையில் இருக்கிற ஒரு பட்சி பற்றையில் இருக்கிற இரண்டு பட்சிகளுக்குச் சமம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
இதுகாலவரை முக்கியத்துவம் பெறாத உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இம்முறை முக்கியத்துவம் பிடித்துள்ளது. பரப்புரை அனல் கக்குகிறது. உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய மாற்றங்களை உண்டாக்குவதற்கான சாத்தியம் இருக்கின்றது. சனாதிபதி தேர்தல், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டும் 2020 இல் நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.