வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து ததேகூ வெற்றிவாகை சூட வைக்குமாறு தாயக உறவுகளை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!
உள்ளூராட்சி தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியிருக்கின்றன. முன்பு போல் அல்லாது இம்முறை நாடுதழுவிய 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் ( (24 மாநகர சபை, 41 நகரசபை, 276 பிரதேச சபை) ஒரே நாளில் (பெப்ரவரி 10) தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 15.8 மில்லியன் (158 இலட்சம்) வாக்காளர்கள் 8,293 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அத்தோடு அரசியற் கடசிகள் தத்தம் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு என்பதை இந்தத் தேர்தல் மூலம் நிரூபிக்க முடியும். இதனால் ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய முக்கியத்துவம் இந்த உள்ளூராட்சி தேர்தலுக்கும் உண்டு எனக் கருதப்படுகிறது.
யாழ்ப்பாணம் – ஒரு மாநாகர சபை, 3 நகர சபை, 13 பிரதேச சபை, 453 வேட்பாளர்கள்.
கிளிநொச்சி – மூன்று பிரதேச சபை 75 வேட்பாளர்கள்
மன்னார் – ஒரு நகர சபை மற்றும் 4 பிரதேசபைகள் 103வேட்பாளர்கள்
முல்லைத்தீவு – நான்கு பிரதேச சபைகள் 79 வேட்பாளர்கள்
வவுனியா – ஒரு நகரசபை 3 பிரதேச சபைகள் 99வேட்பாளர்கள்
திருகோணமலை – ஒரு நகரசபை 6 பிரதேச சபைகள் 184வேட்பாளர்கள்
மட்டக்களப்பு – ஒரு மாநகரசபை, 10 பிரதேச சபைகள் 254வேட்பாளர்கள்
அம்பாரை – நான்கு பிரதேச சபைகளில் இரண்டு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 10 வேட்பாளர்கள்.
ஆக ததேகூ 2 மாநகர சபைகள், 6 நகரசபைகள், 43 பிரதேச சபைகள் என மொத்தம் 51 சபைகளுக்கு 1,257 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேச சபை, வவுனியா மாவட்டம் வவுனியா வடக்குப் பிரதேச சபை போன்ற பிரதேசங்களில் பிற இனத்தவரும் தமிழரும் ஏறத்தாழச் சமனான அளவில் இருக்கிறார்கள். இச் சபைகளின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் தமிழர்களது வாக்களிப்பு விழுக்காடு 80 க்கும் கூடுதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்க வேண்டும்.
2011 இல் நடந்த தேர்தலில் ததேகூ 32 சபைகளில் வெற்றி பெற்றது. மொத்தம் 274 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இம்முறை தமிழ்மக்கள் தங்களுக்கு இருக்கிற ஒரே வாக்கை தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்குப் போட வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழ் வாக்காளர்களும் தேர்தல் நாளன்று தமிழரசுகட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு தவறாது வாக்களிப்புச் செய்தால் மட்டுமே கூடுதலான சபைகளின் ஆட்சி அதிகாரத்தை வடக்கிலும் கிழக்கிலும் கைப்பற்ற முடியும். ததேகூ உருவாக்கியதன் ஒரே நோக்கம் தமிழர்களது வாக்குகள் பல கட்சிகளுக்கு இடையே சிதறுண்டு போகாமல் ஒருமுகப் படுத்துவதே. தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி (தமிழர் விடுதலைக் கூட்டணி + இபிஎல்ஆர்எவ்) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், சுயேட்சைக் குழுக்கள் போன்றவை தமிழ் வாக்குகளைப் பிரித்து தென்னிலங்கை தேசியக் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறவே போட்டியிடுகின்றன.
இந்தக் கட்சிகள் ததேகூ க்கு எதிரான பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளன. இடைக்கால அறிக்கையில் இணைப்பாட்சி இல்லை, வட கிழக்கு இணைப்பு இல்லை என இடைக்கால அறிக்கையை படிக்காமலே பரப்புரை செய்கின்றன. மேலும் ததேகூ நா.உறுப்பினர்கள் மத்திய அரசிடம் தலைக்கு ரூபா 2 கோடி இலஞ்சம் பெற்றுவிட்டதாக எந்தவித அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இந்த ரூபா 2 கோடி தொகுதி அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியாகும். அதனை ததேகூ நா.உறுப்பினர்கள் பரிந்துரை செய்யும் திட்டங்களுக்கு மாவட்ட செயலகங்களே செலவு செய்யும். பள்ளிக்கூடங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வீதிகள், நூலகங்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை நா.உறுப்பினர்கள் பகிரங்கப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு திட்டமும் 5 இலட்சத்துக்குக் குறையாமலும் 15 இலட்சத்துக்கு கூடாமலும் இருக்கும்.
ததேகூ தனது அரசியல் செயற்பாடுகளையும் பொருளாதார மேம்பாடுகளையும் சமாந்திரமாக முன்னெடுக்கிறது. இந்த நிதி ஒதுக்கீட்டினால் பொதுமக்கள் பயன் அடைவர்.
இந்த உள்ளூராட்சித் தேர்தல் இடைக்கால அறிக்கைக்கான கருத்துக் கணிப்பாகவும் பார்க்கப்படுகிறது. எனவே தமிழ்மக்கள் பெப்ரவரி 10 (சனிக்கிழமை) 2018 இல் தவறாது வாக்குச் சாவடிக்குச் சென்று தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
ததேகூ பலத்தோடு இருக்கும் பட்சத்தில்தான் நாடாளுமன்றத்திலும் இலங்கை அரசியலமைப்புச் சபையிலும் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிடுக்கோடு பேச முடியும். ததேகூ இன் தலைவர் இரா சம்பந்தன் ஐயா அவர்களது கைகளை மேலும் வலுப்படுத்த முடியும்.
தாயக மக்கள் அனைவரும் தங்கள் தேசியக் கடமையைச் தவறாது செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். வெற்றி நமதே.
கனடாத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
6–02-2018
Leave a Reply
You must be logged in to post a comment.