தமிழ் மக்கள் ஏற்காத எந்த ஒரு தீர்வையும் கூட்டமைப்பு ஏற்காது
“தமிழ் மக்கள் ஏற்காத எந்த ஒரு தீர்வையும் கூட்டமைப்பு ஏற்காது, அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிற்கு ஒருபோதும் துரோகம் இழைத்து கைவிடவும் மாட்டாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பெப்ரவரி 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் யாழ். சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட உரை ஆற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கே கூட்டமைப்பின் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
தமிழ் மக்கள் 56ம் ஆண்டில் இருந்து இன்றுவரையில் என்றுமே ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம் என்ற செய்தி 11ம் திகதி வர வேண்டும். இங்கே இடைக்கால அறிக்கையில் ஒன்றுமே கிடையாது என கூறுகின்றனர். இடைக்கால அறிக்கையில் ஒற்றை ஆட்சி என்ற சொல் தமிழில் இல்லை . யுனிற்றரி ஸ்ரேட் என்ற சொல் ஆங்கிலத்தில் இல்லை . ஏக்கிய இராச்சிய என்ற சொல் மட்டுமே சிங்களத்தில் உள்ளது. ஏனெனில் அந்தச் சொல்லை சிங்கள மக்கள் விரும்புகின்றனர்.
சிங்கள மக்கள் நினைக்கின்றனர் அது இருந்தால்தான் நாடு பிரிபடாது என. நாடு பிரிபடாமல் இருப்பதனை ஏற்றுக்கொள்ள நாம் தயார். ஆனால் அதனை நீங்கள் அரசியல் சாசனத்திலும் கொண்டு வருவதானால் யோசிக்க முடியும் என்றோம்.
அதன்பால் பிரிபடாத , பிரிக்கப்பட முடியாத ஒருமித்த நாடு என பிரதேசம் சார்பில் பாவிக்கப்பட்ட ஓர் சொல்லே ஏக்க இராச்சிய. இது ஆட்சி உரிமை தொடர்பில் பிரயோகிக்கப்படவில்லை என்பதே விளக்கம். இவ்விடயம் ஒருவேளை நீதிமன்றிற்கு வருமாக இருந்தால்கூட அரசியல் யாப்பில் உள்ளதை மீறி வேறு எதையும் யாரும் கூற முடியாது. இதில் பகிரப்பட்ட அதிகாரம் மீறப்பட முடியாது. பகிரப்பட்ட அதிகாரத்தில் மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியாது. அதிகாரங்கள் பகிரப்பட்ட ஓழுங்குகள் தொடர்பில் மாற்றம். செய்ய முடியாது. ஆட்சி அதிகாரம் மத்தியிலும் மாகாணத்திலும் இருக்கும்.
இவ்வாறு சமஷ்டிக்கு சமனான பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது சமஷ்டி ரீதியிலான உள்ளடக்கம் . மாகாண இணைப்பிற்கும் 3 தேர்வுகள் உண்டு . இவற்றின் அடிப்படையில் சில முன்னேற்ற கரமான விடயங்கள் உண்டு . சில விடயங்கள் பேச வேண்டும். சில விடயத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். இதே நேரம் இறுதி அறிக்கையும் தயார் செய்யப்படவில்லை.
தீர்வு விடயத்தில் எம் மக்களிற்கு ஏற்புடைய சர்வதேச நாடுகளால் ஏற்கும் வகையிலான ஓர் தீர்வு அமைந்தால. அதை உதாசீனம் செய்ய மாட்டோம். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் நாம் பல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோம். அதே தவறை இழைக்க முடியாது. அன்று சமஷ்டியை எதிர்த்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இன்று தாம்தான் சமஷ்டியாம். அன்று பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தனர். பின் டட்லி – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்தான் எதிர்த்தது. அவ்வாறானால் அன்று ஏன் எதிர்த்தனர். அது மட்டுமன்றி தந்தை செல்வா சமஷ்டியை முன் வைத்தபோதும் எதிர்த்தனர். அவ்வாறெல்லாம் எதிர்த்த சயிக்கிளில்தான் இப்பவும் ஓடுகின்றனர்.
இதேபோல் 2004 முதல் 2015 வரையில் மகிந்தவோடு ஒட்டியிருந்து தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராக செயல்பட்டு 13 ஆம் சரத்தையே நீக்க முயன்றபோது மௌனமாகவும், 18ம் சரத்தை கொண்டுவந்தபோது ஆநரித்தவர்கள் யாழ்ப்பாணம் , திருமலையில் வாக்கு கேட்கின்றனர்.
எனவே தமிழ் மக்கள் என்றுமே நம்பக்கூடிய ஒரே ஒரு கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான். நாம் தமிழ் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.