தற்போது எமக்கு கிடைத்துள்ள இராஜதந்திர சந்தர்ப்பங்களையும் நாம் தவற விடலாமா? 

தற்போது எமக்கு கிடைத்துள்ள இராஜதந்திர சந்தர்ப்பங்களையும் நாம் தவற விடலாமா? 

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களின் அறிமுக கூட்டம்  திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் மாவட்டக்குழுத் தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, தமிழ் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் என கட்சியின் பலமுக்கியஸ்தர்களும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா  குறிப்பிடுகையில்,

என்னை பொறுத்தவரையில் இந்த அரசியலமைப்பு விடயங்களில்  நான் ஒரு வித்தகரல்ல. ஆனால் சுமார் 50 ஆண்டுகள் அளவில் இந்த அரசியலிலே போராட்டங்களில் ஈடுபட்ட ஒருவன்.  இந்த அரசியல் கால அனுபவம் சிறை வாசம், மற்றும் எமது மக்கள் இதற்காக சிந்திய வியர்வை, சிந்திய இரத்தம், இதன்பின்னணி அனுபவத்தின் அடிப்படையில், இன்று ஏற்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று நாங்கள் திட்டவட்டமாக நம்புகின்றோம்.

எங்களுடைய உச்சபலமாக இருந்தகாலமானது  ஜனநாயக ரீதியாக மக்கள் போராட்டம் இருந்த காலமாகும். அதன்பின்னர் ஆயுத ரீதியான போராட்டம் பலமடைந்த காலம். பின்னர் இந்த நாட்டில்   தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மிகப்பலம் வாய்ந்த ரீதியாகபோராட்டம் நடாத்திக் கொண்டிருந்தகாலம்,  எமது கூட்டமைப்பு அரசியல் ரீதியாகவும் பலம்பெற்ற காலம் என்பனவே  உச்சபலமாக இருந்த காலமாகும்.

அந்தக்காலத்தில் நாமும் விடுதலைப்புலிகளும் புரிந்துணர்வோடு ஒஸ்லோவில் நடந்த பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளை தீர்வு சம்பந்தமாக பேசுமாறு சொல்லியிருந்தோம். நாம் அதில் பங்கேற்க வில்லை.

அந்தக்காலம் தான் நாம் பலம் வாய்ந்த காலம். அது  தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றிலே மிகப்பலமாக இருந்த காலமாகும். இன்று அதில் ஒரு பலத்தை நாங்கள் இழந்து நிற்கின்றோம். ஆனால் அதன் பின்னர் நடந்த ஜனநாயக ரிதியான தேர்தலில் கொள்கை மாறாது மக்கள் அணிதிரண்டு வாக்களித்து நின்றதைக்கண்ட சர்வதேச நாடுகள் எங்களுடன் பேசும் நிலமைக்கு வந்தார்கள்.

இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம்வரவேண்டும் என்று எமக்குத்தோன்றிய பொழுது எமது மக்களும் அதனை ஏற்று வாக்களித்து ஏற்படுத்திய மாற்றம் பலரையும் வியக்க வைத்தது. அதனால் நீங்கள் மிகப்பெரும் ஜனநாயக பலத்தை சேர்த்துள்ளீர்கள் என பல இராஜ தந்திரிகளும் பாராட்டும் நிலமையும் ஏற்பட்டது. எமது மக்கள் தமது வாக்குப்பலத்தை பல நாடுகளுக்கு உதாரணமாக பயன்படுதத்தியதன் காரணமாகத்தான் தற்காலத்தில் எமக்கு இந்த ராஜதந்திரப்பலமும் ஏற்பட்டுள்ளது. யுத்த காலத்தில் எங்களது இராஜ தந்திர தொடர்பு போதாது என்று பல நாடுகளால் சுட்டிக்காட்பட்டிருந்தது.

ஆனால் இன்று அந்த இராஜதந்திரபலமும் எமக்கு ஏற்பட்டுள்ளது.அதனடிப்படையில் அவர்களது எண்ணங்களையும் நகர்வுகளையும் நாம் மதித்து பின்பற்ற வேண்டிய நிலமைகள் உள்ளன. அவர்களுடைய ஆலோசனைக்கிணங்கவும் எமது இராஜ தந்திர நடவடிக்கையின்காரணமாகவும் நாம் இன்று ஒரு அரசியல் யாப்பு மாற்றம்பற்றி பேசும் நிலமை ஏற்பட்டிருக்கிறது. அதில் எமது மக்களின் கொள்கை  சார்நத பல விடயங்களை நாம் முன்வைத்துள்ளோம்.இன்று பல ரும் பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். சமஷ்டி முறை கைவிடப்பட்டுவிட்டது.

வடகிழக்கு இணைப்பு  கைவிடப்பட்டு விட்டது. என்றெல்லாம் பலரும் பொய்யான விடயங்களை பரப்பி மக்களை குழப்ப முற்படுகின்றனர். தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற இடைக்கால அறிக்கையை நீங்கள் யாரும் பார்க்கலாம்.  அதில் என்ன விடயங்கள்   எங்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை நீங்கள் தெளிவாக ஆராயலாம்.

எமது அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய மாற்றம். தற்போது வைக்கப்பட்ட மாற்றங்களை படிக்காமலே நாம் வெளியேற வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.வெளியேறி நாம் என்ன மாற்று வழியில் பயணிப்பது ?  கிடைத்த ராஜதந்திரப்பலம், மற்றும் உதவிகளையும் இழப்பதா?

கடந்த யுத்தத்தில் எமது விடுதலைப்புலிகளின் தியாகங்களும்,மக்களின் பாரிய இழப்புக்களும் எமது போராட்டங்களும் இன்று சர்வதேசத்தினையும்ஈர்த்துள்ளன. இராஜதந்திர தொடர்புகளை கிடைக்க செய்துள்ளன.

எமது தலைவர் இரா சம்பந்தன்  ஐ.நா.வின்பொதுச்செயலாளரை  யாழில் வைத்துச் சந்தித்த பொழுது எமது நாட்டில் உங்களது மேற்பார்வையில் ஒரு சிறந்த தீர்வு எமது மக்களுக்கு கிடைக்காமல் போகும்போது சர்வதேச ரீதியான ஒரு தீர்வுக்கு நீங்கள் ஆதரவளிக்கவேண்டியது ஐ.நா. வின் கட்டாய கடமையாகும் என்பதனை சுட்டிக்காட்டியிருந்தார். அதனை  ஏற்றுக்கொண்டிருந்தார்  பான் கி மூன். அதனடிப்படையில் பல்வேறு நாடுகளுடனான பேச்சு வாரத்தைகளில் இது பற்றி வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. அது இன்று வரை பேசப்பட்ட வண்ணமுள்ளன.

இந்த அராசாங்கம் இந்தப்பிரச்சினைகளை தீர்க்க தவறும் பட்சத்தில்  சர்வதேசம் எங்களுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதனை அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளின் விஷேட சந்திப்புக்களிலும் வலியுறுத்தியுள்ளோம். இதுபோன்ற பல வரலாற்று மாற்றங்கள் இந்த காலத்தில் எம்மால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அது மட்டுமன்றி இந்த அரசியல் ரீதியான அதிகாரபகிர்வை இன்று தென்னிலங்கையில் உள்ள பல மாகாண முதலமைச்சர்களும் புத்திஜீவிகளும் ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களை குழப்பியவர்கள் நாங்களாக இருக்கமுடியுமா? இவ்வாறான குழப்ப முயற்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா? அது தொடர்பில்   நாம் கவனமாக சிந்திக்க வேண்டும் ஏன் இன்று நீங்கள் அனைவரும் ஜனநாயக ரீதியாக தேர்தலில் போட்டியிடுவதற்கு போட்டிபோட்டுக்கொண்டு முன்வந்ததனை கடந்த வாரத்தில் நான்நேரடியாகப்பாரத்தேன்.அதனை இங்கும் நான் பாரத்தேன்.  அது ஒரு ஜனநாயக ரீதியான முன்னேற்றமாக நாம்பார்க்க முடியும். முற்காலத்தில் நாம் தேர்தலுக்கு ஆட்களை தேடித்திரியும் நிலமைகள் காணப்பட்டன. இவ்வாறு படிப்படியாக பல முன்னேற்றங்களை நாம் கண்டு வருகின்றோம்.

இவ்வாறான அரசியல் வரலாற்றையும் சந்தர்ப்பங்களை நீங்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதனை மக்களுக்கு நீங்கள் ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும் எமக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீண்ட போராட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் நிதான மாக செயற்படும் எம்மை எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் பொய்யாக விமர்சனங்களை செய்கிறார்கள் . இது பற்றி மக்கள் நன்கு தெளிவாக அறிவார்கள். அதனை மக்கள் நிதானமாக பார்த்த வண்ணமும் அறிந்த வண்ணமும் உள்ளனர். நீங்கள் நாளைய தலைவர்களாக இங்கு  வந்துள்ளீர்கள்.

எதிர்காலத்தில் எமது மக்களின் இந்தப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டியவர்கள் நீங்கள்.  எனவே மிகவும் தெளிவாக நீங்கள் செயற்பட வேண்டும் அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

http://tnaseiithy.com/news/can-we-miss-the-diplomatic-opportunities-we-have-now


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply