சங்க கால திருமணம்………..

சங்க கால திருமணம்………..திருமகள்

தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ, இலத்தீன் போன்ற மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்கு இருக்கும் இலக்கிய வளம் ஏனைய மொழி இலக்கியங்களைவிட உயர்வானது. தமிழர் மொழியாலும், நாகரிகத்தினாலும் சிறந்தவர் என்பது மொழி ஆராய்ச்சியாலும், அகழ்வாராய்ச்சியாலும் நிறுவப்பட்ட உண்மைகளாகும்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு -புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு …
வள்ளுவன் தன்னை உலகினிக்கே -தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
யள்ளும் சிலப்பதிகார மென்றோர்- மணி
யாரம் படைத்த தமிழ்நாடு
என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடுவார்.

ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு காலம் பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது. தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்ககாலமே தமிழரது பொற்காலமாகும். பாரதியார் வார்த்தையில் கூறவேண்டும் என்றால் உண்மை இது வெறும்புகழ்ச்சி இல்லை.

முடியுடை வேந்தர்கள் மூவரும் கொற்றம் வைத்து சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் அறத்தோடும் மறத்தோடும் பாராண்ட காலம் அது.

சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழரின் ஒப்பற்ற நாகரிகச் சிறப்புக்கு சான்று பகர்கின்றன.

கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துத் தௌளு தமிழ்ப் புலவோர் செய்த தீஞ்சுவைக் காவியங்களான அய்ம்பெரும் காப்பியங்கள் தமிழ் அன்னையின் புகழை திக்கெட்டும் மணம்வீசிப் பரப்பின.

காலில் சிலம்பு, இடையில் மேகலை, காதில் குண்டலம், கையில் வளை, மார்பில் சிந்தாமணி தமிழன்னையின் இயற்கை அழகுக்கு அழகு சேர்த்தன.

இடைக்காலத்தில் தமிழ்மரபுக்கு மாறான வாழ்க்கைமுறை தமிழரிடம் புகுந்தது. தமிழரின் பழக்க வழக்கங்கள் மாறின. மணமுறை மாறியது. பொருளற்ற சடங்குகள் பெருகின. இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர் நாமமது தமிழராக இருக்கின்றாரே தவிர மெய்த் தமிழராக – சங்ககால தமிழர்தம் வழித்தோன்றலாக இல்லை.

நாம் தாய்மொழியைப் போற்றாது விட்டோம். தமிழ்க் கலையை வளர்க்காது விட்டோம். தமிழினத்தின் மரபைக் காவாது விட்டோம். வடமொழிக்கு அடிமையானோம்.

பாவேந்தர் பாரதிதாசனின் ஆசையை இன்று தமிழீழம்தான் செயல்படுத்தி நிறைவு செய்து வருகிறது. தமிழகம் பாரதி, பாரதிதாசன் காலத்திலேயே இன்றும் இருக்கிறது.

இன்றைய தமிழரின் மணமுறை பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானாதாக இருக்கிறது. இதனைத் தமிழ் இலக்கியச் சான்று கொண்டு காட்டலாம்.

அன்றைய தமிழருடைய திருமணம் எளிமையாக நிகழ்ந்தது. அதில் சடங்குகள் எதுவும் இல்லை. எரியோம்புதல் இல்லை. தீவலம் வருதல் இல்லை. அருந்ததி பார்த்தல் இல்லை. புரோகிதர் இல்லை.

அகநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌவேறு காலத்தில் வௌவேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (பாடல் 86, 138) பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன.

அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து சென்று திரும்பும் தலைவனை தலைவியின் தோழி வழிமறித்து “எனது தலைவி உன்னோடு மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இந்தப் பாடலில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
“கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
“பேரில் கிழத்தி யாகென” தமர் தர
ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென
வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி யுவகைய ளாகி முகனிகுத்
தொய்யென விறைஞ்சி யோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ தோதி மாஅ யோளே.                                      (அகநானூறு பாடல் 86)

“எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் “கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!”

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். “ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு’

என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்” என்று தோழியிடம் கூறினான்.

(பதவுரை)

உழுந்து – பருப்பு

களிமிதவை – குழைதலையுடைய கும்மாயம்

கோள் – கெட்ட கிரகங்கள்

கால் – இடம், சகடம்

திங்களையுடைய நாள் – திருமண நாள்

பொதுசெய் கம்பலை – திருமணம். எல்லாரும் புகுதற்கு யோக்கிய மாதலால் முதுசெம் பெண்டிர் – அதனைச் செய்கிற ஆரவாத்தினையுடைய செவ்விப்

பெண்டிர்

முன்னவும் பின்னவும் – முற்படக் கொடுப்பனவும் பிற்படக் கொடுப்பனவும் முறை

முறையாகக் கொடுக்க

புதல்வர் பயந்த – பிள்ளைகளைப் பெற்ற மகளிர்

அலரி – பூ

வதுமை நன்மணம் – வதுவைத் திருமணம்

ஓரில் – சதுர்த்தி அறை

உடன்புணர்தல் – கூடப்புணர்கிற

நெஞ்சம் நினைந்தது எஞ்சாதுரை – மறையாதுரை

கொடும்புறம் – நாணத்தால் வளைந்த உடம்பு

சதுர்த்தியறை – நான்காம் நாட் பள்ளியறை

சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பையும் பகுத்தறிவையும் எண்ணி மனம் பூரிப்படைகிறது.

புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் – தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரிகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது.

முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய

திருமணங்களில் உள்ள –

(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை

(2) புரோகிதர் இல்லை.

(3) எரி ஓம்பல் இல்லை.

(4) தீவலம் இல்லை.

(5) அம்மி மிதித்தல் இல்லை.

(6) அருந்ததி காட்டல் இல்லை.

(7) கோத்திரம் கூறல் முதலியன இல்லை.

சங்ககாலத் திருமணங்களைப் பற்றிக் கூறுமிடத்துக் காலம் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் “இப்பண்டைத் திருமண நிகழ்ச்சிகளில் எரிவளர்த்தல் இல்லை, தீவலம் இல்லை, இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்” எனக் குறித்திருத்தல் மகிழத்தக்கது.

பழந்தமிழர் திருமண முறைப்பற்றி நமக்கு தாராளமான வரலாற்றுச் செய்திகள் இல்லை. அகநானூறு 86 ஆவது பாடலில் ஊரில் நடந்த திருமணம் பற்றிய செய்தி உள்ளது.

அதுபோல புறநானூற்றில் 77 ஆவது பாடல் மற்றும் 37 ஆம் பாடலிலும் அகநானூற்றின் 54-ஆவது பாடலிலும் மணவிழாவைபற்றி ஒரு சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தாலி கட்டுதல் போன்ற சடங்குகள் எல்லாம் பின்னால் வந்தவைகளாக இருக்கின்றன.

மணப்பந்தலிலே புது மணல் பரப்பப் பட்டிருந்தது, பந்தலில் மறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது, காலை நேரம் மாசற்று இருந்தது, ஒருபுறம் உணவு குவியல் கிடந்தது, முதுபெண்டிர் உச்சியில் நீர்குடம் ஏந்தி நின்றனர், அவர்கள் முன்னவும், பின்னையும் நீர்க் குடங்கள் முறை முறையாகப் பல பிள்ளைகளைப் பெற்ற மகளிர் நால்வர் கூடி கற்பு நெறி என்றும் தவறாமல் நல்லறங்களை செய்து கணவன் விரும்பத்தக்க மனைவியாக வாழ்வாயாக என வாழ்த்தி மணமகளை நீராட்டினர். அந்த நீரில் நெல்லும், மலரும் கலந்திருந்தன.

இங்ஙனம் பெண்ணை நீராட்டும் சடங்கு நடைபெற்றது. இது நடைபெற்ற பிறகு மணமகளை அவளின் உறவினர் சிலர் விரைந்துவந்து பெரிய இல்லக்கிழத்தியாய் திகழ்வாயாக! என்று வாழ்த்தி என் கையில் ஒப்படைத்து அவளும், நானும் ஒருங்கு கலந்திருந்த இராப்பொழுது என்று அந்தப் பாடலிலே இருக்கின்றது.

ஆகவே குத்து விளக்கு வைப்பது, மணமக்கள் நெருப்பைச் சுற்றி வருவது, அம்மி மிதிப்பது, ‘அருந்ததி ‘ என்ற இல்லாத நட்சத்திரத்தைப் பகலிலே காண முயற்சிப்பது, இதுபோன்ற கற்பனைகள் எல்லாம் பழைய திருமண முறையில் இருக்கவில்லை. அது மட்டுமல்ல திருமணத்தைப் பெண்களே செய்து வைத்தார்கள்.

குறுந்தொகை நிகழ்வு இருக்கிறதா? இங்கே கவிஞர் அவர்கள் அருமையாக சுட்டிக் காட்டினார்கள் ‘ஞாயும், யாயும் யாராகியரோ’ என்று.

அப்படி இருவர் உள்ளங்கள் இணைந்த ஒரு மணவிழாவாகத்தான் முதலில் நடந்து கொண்டிருந்தன. ஆனால், இன்றைக்கு தமிழர்களின் வாழ்வில், குறுந்தொகை நிகழ்வு இருக்கின்றதா? இதுபற்றிதான் இன்றைக்கு நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எனவே, மனப்பொருத்தம் என்கிற அடிப்படையிலே ‘ஞாயும், யாயும் யாராகியரோ’ என்ற முறையிலே ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள் என்று கவிஞர் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ் நாட்டில், ஏன் பல இடங்களிலே திருமணம் எப்படி நடைபெறுகின்றது? குறுந்தொகைக்குப் பதவுரை பொழிப்புரை சொல்லிக் கொடுக்கிறவர் வீட்டில் கூட, இதைச் செரிமானம் செய்து கொள்கிறார்களா என்றால் இல்லை! தந்தை – மகனை கண்டிப்பார் ‘அய்யோ இப்படி வேறு சாதியில் பெண்ணைப் பார்த்துவிட்டாயே உனக்காக பெரிய இடத்தில் அல்லவா பெண் பார்த்து வைத்திருந்தேன். பெருந்தொகை வரும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்தேன் வருந்தொகையும் போய்விட்டதே’ என்று குறுந்தொகைப் பாடலை சொல்லிக் கொடுப்பவர் கேட்பார்.

நுழையக் கூடாத ஒரு தத்துவம் தமிழர் வாழ்விலே வரதட்சணை என்ற பெயராலே நுழைந்திருக்கின்றது. வரதட்சணை என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. வரனும் தமிழ் சொல் அல்ல, தட்சணையும் தமிழ் சொல் அல்ல, தமிழனுக்கு வரதட்சணை வாங்கி பழக்கமே கிடையாது.

மணமக்களுடைய அழைப்பிதழைப் பாருங்கள் மன்றல் அழைப்பு மடல் என்று தூய தமிழிலே, நல்ல தமிழிலே அழைப்பிதழ் அச்சடித்திருக்கின்றார்கள். இந்த உணர்வு வருகின்ற தலைமுறையினருக்கும் இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக் கின்றார்கள் எனக்கு முன்னாலே வாழ்த்துரை கூறிய அறிஞர் பெருமக்கள்.

பழைய திருமணத்திலே யாரோ ஒருவரிடம் கொடுத்து ‘முகூர்த்த ஓலை’ என்று எழுதச் சொல்வார்கள். இதில் முகூர்த்தம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. விவாஹ சுப முகூர்த்தம் என்று போட்டு கன்னிகாதானம் செய்விக்கப் பெரியோர்களால் நிச்சயித்தபடி என்று போட்டு, தாராமுகூர்த்தம் செய்விக்க என்று திருமண ஓலையில் போடுகின்றார்கள். இதிலே ஏதாவது ஒரு சொல் தமிழ்ச் சொல் உண்டா? இதற்குப் பொருள் தெரிந்து கொண்டு யாராவது எழுதியிருக்கின்றார்களா? இதை மட்டும் இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

‘கன்னிகா தானம்’ என்று சொல்லுகின்றார்கள். கன்னி என்றால் பெண் தானம் என்றால் தர்மம். பெண்ணை வளர்த்துத் தருமமாகக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்வதிருக்கிறதே அது தமிழர் பண்பாடு அல்ல, ஏன் மனித பண்பாடே அல்ல, காரணம் பெண்களை ஒரு பொருள் போலக் கருதிய அடிமை மனப்பான்மை இது. எப்படியோ, ஆரியப் பண்பாட்டின் மூலமாக உள்ளே நுழைந்ததன் மூலமாகத்தான் இப்படி ஏற்பட்டது.

பேனா என்னிடத்திலே இருக்கிறது, இதை ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தால், வாங்கியவர் இதை இன்னொருவருக்கு விற்கலாம் – கொடுக்கலாம் அல்லது உடைத்தும் போடலாம், நொறுக்கலாம் ஏன் என்று கேட்கக்கூடிய உரிமை எனக்குக் கிடையாது. இது பொருளுக்குப் பொருந்தும். ஆனால், பெண் ணுக்குப் பொருந்துமா? என்று கேட்டவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அதனுடைய விளைவு தான் மாறுபட்ட சுயமரியாதை சீர்த்திருத்த வாழ்க்கை இணை ஒப்பந்தம் ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவ்வளவு உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு.

இதை பார்த்துத்தான் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றோம்.

பாரதக் கதை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாரதக் கதையில் தருமன் சூதாடினான் பஞ்ச பாண்டவர்கள் அய்ந்து பேரில் யோக்கிய மானவர் யார் என்று சொல்லும்பொழுது தர்மராசா என்றுதான் சொல்லுவார்கள்.

தருமன்தான் தன் மனைவி திரௌபதையை வைத்துச் சூதாடினான். அதுவும் தருமனுக்கு அய்ந்திலே ஒரு பங்குதான் சொந்தம். தருமன் சூதாட்டத்திலே தோற்கிறான். பெண்ணை ஒரு பொருளாக வைத்துத் தருமன் சூதாடினான்.

இந்தக் கருத்து நமது இனத்திற்கோ, பண்பாட்டிற்கோ, மனித சமுதாயத்திற்கோ ஒத்ததல்ல. இதில் தாரா முகூர்த்தம் என்று சொல்வது இன்னும் மோசமானது.

பெற்றோர், மணப் பெண்ணை மடியிலே உட்கார வைத்து கையிலே எள்ளும், தண்ணீரையும் விட்டுத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம் என்று சொன்னால், அந்தப் பொருள் கைநழுவிப் போய் விட்டது என்று பொருள். ஆகவே தாரா முகூர்த்தம் அதுவும் தமிழ்ச் சொல் அல்ல, தமிழ்ப் பண்பாட்டிற்குரியது அல்ல ஏன் பண்பாட்டிற்கே உரியது அல்ல.

http://www.tamilnation.org/culture/marriag…am_marriage.htm

 

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply