வலம்புரி ஆசிரியருக்கு பதில் மடல் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
(கடிதத்தின் பிற் பகுதி மட்டும்)
மேற்சொன்னவை என் மகிழ்ச்சிக்கான காரணங்கள்.
இனி எனது கவலைக்கான காரணம் பற்றி சில உரைக்கப்போகிறேன்.
நீங்களும் மன நடுநிலையோடு விருப்பு வெறுப்பைத் தவிர்த்து, தர்க்க நியாயங்களை அங்கீகரித்து, என் கருத்துக்களை ஆராய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து எழுதுகிறேன்.
✎✎✎
உங்கள் தலையங்கத்தின் முடிவில் தேர்தல் காலத்தில் சரியான தலைமையை நான் இனங்காட்ட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து,
தமிழ் மக்களுக்குப் பொருத்தமான தலைவர் என்றால், அது வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனாக மட்டுமே இருக்கமுடியும் என்றும்,
அவரிடம் இருக்கக் கூடிய நேர்மையும் நீதியும் ஆத்மபலமும், தமிழ்மக்களின் அரசியல் பயணத்திற்கு வழிகாட்டும் என்றும் எழுதி,
அதற்காக நானும் அறைகூவல் விடுக்கவேண்டும் என்றும் எழுதியிருந்தீர்கள்.
பல விடயங்களில் உங்களோடு நான் ஒத்துப்போனாலும், இந்த விடயத்தில் மட்டும் உங்களோடு ஒத்துவர என் மனம் மறுக்கிறது.
அதற்கான காரணங்களை இனி எழுதுகிறேன்.
✎✎✎
நீதியரசர் எங்கள் கழகத்தின் பெருந்தலைவராக பதினைந்தாண்டுகளுக்கு மேலாகச் செயலாற்றியவர்.
என்மேல் தனிப்பட்ட மதிப்பும் அன்பும் கொண்டவர்.
எங்கள் கழகத்தின் பெருந்தலைவராக அவர் இருந்தபோது, அவரது பெருமைக்கு எவ்வித மாசும் வராமல் நாம் பார்த்துக் கொண்டோம்.
முதலமைச்சராக அவர் வரவேண்டுமென, பத்திரிகைகளிலும் மேடைகளிலும் துணிந்து குரல் கொடுத்தவன் நான்.
அப்போது அறிவுத்துறை சார்ந்த பலரும், அக்கோரிக்கையில் தங்களை அடையாளப்படுத்த விரும்பவில்லை.
முதலமைச்சர் கண்ணியமானவர் என்பதில் எனக்கு இன்றும் நம்பிக்கை உண்டு.
அவர் பெருமை தெரியாத யாரோ சிலர் அவரைப் பிழையாய் வழிநடத்தி, மதிப்புக்குரிய அவரை இன்று மதிப்பிழக்கச் செய்திருக்கிறார்கள் என்பதே என்கருத்து.
இன்றும் அவர்மேல் தனிப்பட்ட வகையில் எந்தவிதமான பகையும் எனக்கில்லை.
ஆனால் சமுதாய நலம் நோக்கி மிக நிதானமாகச் சீர்தூக்கியே, அவர் மீதான எனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறேன்.
✎✎✎
இன்றுவரை அவரோ அவரைச் சார்ந்தவர்களோ, அந்த விமர்சனங்களை எவ்விதத்திலும் சரியான முறையில் எதிர்கொள்ளவில்லை.
அது அவர்கள் பிரச்சினை!
வயது அறுபதைத்தாண்டி முதியோர் வரிசையில் சேர்க்கப்பட்ட இன்றைய நிலையில், யார் ஏற்கிறார்களோ இல்லையோ சமுதாய நலன் நோக்கிய எனது கருத்துக்களை,
முன் வைக்கவேண்டியது என் கடமை என்று கருதியே, முதலமைச்சர், சம்பந்தன் ஐயா, சுமந்திரன் போன்ற பலரின் செயற்பாடுகள் மீதான, எனது கருத்துக்களை பகிரங்கமாய் எழுதி வருகிறேன்.
✎✎✎
‘ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்’ என்ற, சுமந்திரன் பற்றியதான எனது கடும் விமர்சனத்தைப் பார்த்துவிட்டு, நான் உங்கள் அணியில் இனிச் சேர்ந்து விடுவேன் என நீங்கள் நினைத்திருப்பது தெரிகிறது.
தயைகூர்ந்து மன்னியுங்கள்!அப்படி நீங்கள் நினைத்திருந்தால் அது மிகப்பெரிய தவறு.
ஒருவர் மீதான கோபத்தை இன்னொருவர் மீதான விருப்பாக, நீங்கள் எப்படிக் கணித்தீர்களோ தெரியவில்லை!
✎✎✎
இப்போதும் தெளிவுபட ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து, ஆயுதப்போராட்டத்தில் தோல்வியுற்று நிற்கும் இன்றைய நிலையில், உலக நாடுகளின் நிரந்தரம் இல்லாத ஆதரவை மட்டுமே நம்பி இருக்கிறோம் நாம்.
இந்நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை, யதார்த்தம் உணர்ந்து, சரியான வழியில் முன்னெடுக்கும் தகுதியில்,
இன்றும் சுமந்திரன்தான் முன் நிற்கிறார் என்பது,
என்னுடைய முடிவான கருத்தாகும்.
✎✎✎
அத்தகுதியை வைத்து ஜனநாயக மரபுகளை மீறி, தான்தோன்றித்தனமாக ‘என்னைக் கேட்பார் எவரும் இல்லை’ எனும் நினைப்போடு,
மக்கள் உணர்வைக் கூட மதிக்காமல்,பேசியும் எழுதியும் செயற்பட்டும்வரும் அவரது போக்கைத்தான் நான் கண்டிக்கிறேன்.
தயைகூர்ந்து இதை உணர்ந்து கொள்ளுங்கள்.
✎✎✎
அவரது இந்த சர்வாதிகாரப்போக்கில் இனப்பற்றும் மக்கள் ஆதரவும் இல்லாத, பல சுயநலவாதிகள் பயனும் பதவியும் பெற்று மேலெழுவதும்,
இனப்பற்றாளர் பலர் கீழிறக்கப்படுவதுமே எனது வெறுப்பின் அடிப்படைகள்.
கேள்வியின்றித் தன்னை ஆதரிக்கும் பொய்மையாளர்களை, சூழ வைத்திருப்பதை பலம் என்று கருதுகிறார் அவர்.
அதுதான் பலயீனம் என்பது அவருக்குத் தெரியவில்லை. அமிர்தலிங்கம், பிரபாகரன் போன்றோரது வீழ்ச்சியைக் கண்டபிறகும்,
வரலாற்றுப் பாடம் படிக்காத அவர்மேல் எனக்குக் கோபம் வருகிறது.
அதனால்த்தான் அவரைக் கண்டித்தேன்.
சுமந்திரன்மீதான எனது கண்டிப்பை முதலமைச்சர் மீதான ஆதரவாக, தயைகூர்ந்து வியாக்கியானம் பண்ணிக்கொள்ளவேண்டாம் என,
தாழ்மையாகத் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
சுமந்திரன் மீதோ, முதலமைச்சர் மீதோ, எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இல்லை.
இது என் நிலை பற்றிய பிரகடனம்.
சமூக வாழ்வுக்கு வந்த நீங்களும் இங்ஙனமே இருக்கவேண்டுமென, நட்பின் உரிமையால் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
✎✎✎
இனி முதலமைச்சர் பற்றியதான உங்களது கோரிக்கையை, நான் ஏற்க முடியாததற்கான காரணங்களை வரிசைப்படுத்துகிறேன்.
கடந்த நான்கு ஆண்டுகால அரசியல் செயற்பாடுகளில், தன் தலைமைத் தன்மையை எந்தவிதத்திலும் நிரூபிக்காமல், முழுத்தோல்வி அடைந்திருக்கிறார் முதலமைச்சர்.
அவர்மீதான பற்றினால் இக் கருத்து உங்களை வெறுப்படையச் செய்யலாம்.
காரணமின்றி எந்தக் கருத்தையும் நான் முன்வைக்கமாட்டேன்.
என் மனத்திருக்கும் காரணங்களைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.
➧➧ தன்னை மதித்து வரவேற்றுப் பதவி தந்த அமைப்பை ஒன்றரை வருடகாலத்திற்குள் வெறுத்து, அடுத்து வந்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக மறைமுகமாய்ச் செயற்பட்டு குழப்பம் உண்டாக்கிய, முதலமைச்சரின் செயலில் அவரது நன்றியின்மை வெளிப்பட்டது.
➧➧ ‘இனஅழிப்புச் செய்த ஜனாதிபதி மஹிந்தவின் முன் பதவி ஏற்கமாட்டேன்’ என்று பகிரங்கமாய் அறிவித்துவிட்டு அவரை நம்பி மற்ற உறுப்பினர்கள் அக்கொள்கையைப் பின்பற்ற திடீரென அதே ஜனாதிபதியின் முன் தன் குடும்பத்தாருடன் மட்டும் சென்று பதவியேற்றதில் அவரது கருத்தின் உறுதியின்மை வெளிப்பட்டது.
➧➧ இவர்களை வெறுக்க இது காரணம்! இவர்களை ஆதரிக்க இது காரணம்! இவர்கள்தான் என் கருத்தில் தலைமைக்குரியவர்கள்! இவர்கள் பின்னால்தான் நான் நிற்கிறேன்! அதனால் முன்னவர்கள் தந்த பதவியை உடன் உதறுகிறேன் என்று, இன்றுவரை சொல்லவும் செயற்படவும் துணிவில்லாது, பொதுப்படப்பேசிவரும் அவரது செயலில், அவரது ஆளுமையின்மை வெளிப்பட்டது.
➧➧ இந்தியச் சிறைகளிலும் இலங்கைச் சிறைகளிலும் நம்மவர் பலர் வாடி இருக்க, முதலமைச்சராய் ஆன பின்பு இந்திய நீதிமன்றால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட தனது குருநாதர் பிரேமானந்தரது சீடர்களை விடுவிக்குமாறு இந்தியப்பிரதமருக்கு முதல்முதலாய்க் கடிதம் எழுதியதில் அவரது சுய உணர்வால் ஏற்றபட்ட நீதியின் மீதான நம்பிக்கையின்மையும் இனப்பற்றின்மையும் வெளிப்பட்டன.
➧➧ சுன்னாகக் கிணறுகளில் பெற்றோலியம் கலந்ததாய்ச் செய்தி வந்தபோது மக்களின் உயிரைப் பாதிக்கக் கூடிய அவ்விடயத்தை ஆராய்வதில் எடுத்துக்கொண்ட தேவையற்ற நீண்டகால அவகாசத்திலும் பின்னர் தனக்குப் பிடித்த அமைச்சர் நீரில் எதுவும் கலக்கவில்லை என வெளியிட்ட முடிவோடு உடன்பட்ட பொய்மையிலும் (பின்னர் அது கலந்தது உண்மை என மத்திய அமைச்சர் உறுதிசெய்தார்.) அவரது மக்கள் மீதான அக்கறையின்மையும் தன்னைச் சார்ந்தவர்களின் பிழைகளை மூடிமறைக்கும் பொய்மையும் வெளிப்பட்டன.
➧➧ தன்னால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் ஊழலை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிடும் மட்டும் அறியாதிருந்ததிலும், வெளியிட்ட பின்பும் அவ் அமைச்சருக்குச் சார்பாய் பல இடங்களிலும் பேசியதிலும் தான் அமைத்த நீதிவிசாரணைக் குழு தன் ஆதரவு அமைச்சரை குற்றம் சாட்ட, அவ்விசாரணைக்குழுவின் செயற்பாட்டில் சந்தேகம் தெரிவித்ததிலும், அக்குழுவின் முடிவை அப்படியே ஏற்காமல் தனது ஆதரவாளர் மட்டுமன்றி மற்றைய அமைச்சர்களும் குற்றவாளிகள்தான் என்றுரைத்து அவர்களையும் நீக்க முயன்றதிலும் அவரது நிர்வாகத்திறனின்மையும், நீதியின்மையும், பக்கச்சார்பும் வெளிப்பட்டன.
➧➧ ஆரம்பத்தில் ஆயுதக் கலாசாரக்காரரோடு என்னால் ஒத்துப்போக முடியாது என்றுரைத்து ஈ.பி.ஆர்.எல்.எப். சிபாரிசு செய்த சுரேஷ் பிரேமச்சந்திரனின் தம்பியை அமைச்சராக்க மறுத்துவிட்டு பின்னர் அதே சுரேஷ் பிரேமச்சந்திரனை அணிசேர்த்து நின்றதிலும், கூட்டமைப்போடு பகை வந்த பிறகு அதே பிரேமச்சந்திரனின் தம்பியை அமைச்சராக்கிய செயலிலும் தன் அணி சார்ந்த இவர்களே தமிழ்மக்களின் மாற்றுத்தலைமையாகும் தகுதி கொண்டவர்கள் என இனங்காட்ட முயன்ற செயலிலும் அவரது உண்மைக்கு மாறான தன்உணர்ச்சியும் வெற்றிக்காய் எதையும் செய்யத்துணியும் பொய்மையும் வெளிப்பட்டன.
➧➧ முதலமைச்சர், அண்மையில் நம் உரிமையை தெற்கிடம் இரந்து பெறும் அவசியமில்லை என்றும் பிரபாகரன் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளை புறந்தள்ளி இருக்கலாம் அதனால் மரணத்தையும் தழுவியிருக்கலாம். ஆனால், மண்டியிட்டு மாலை பெறவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதன் மூலம் தானும் பிரபாகரனின் வழியைப் பின்பற்றுவதாய் மறைமுகமாய்ச்சுட்டி மக்கள் ஆதரவைப் பெற முயன்றிருக்கிறார். பிரபாகரனுடைய தியாகம் அனைவரும் அறிந்தது. அத்தியாகத்தின் ஒரு கூறினையாவது முதலமைச்சர் இனத்திற்காகச் செய்திருக்கிறாரா? என்பது முதல் கேள்வி. பிரபாகரனின் பிடிவாதத்தால் நம் இனம் பெற்ற அழிவை இன்னொருதரமும் நம்மால் தாங்க முடியுமா? என்பது இரண்டாவது கேள்வி. இல்லை அதே பிடிவாதத்துடன் அழிவேதுமின்றி இனத்திற்கான உரிமைகளைப் பெற வேறேதேனும் வழிகளை முதலமைச்சர் வைத்திருக்கிறாரா? என்பது அடுத்த கேள்வி. அப்படி வைத்திருக்கிறார் என்றால் அதனை ஏன் வெளிப்படுத்தாமல் இருக்கிறார்? என்பது முக்கியமான நிறைவுக் கேள்வி. இதுதான் வழி. இன்ன பலத்தால் பேரினத்திற்குப் பணியாமல் வெற்றி காண்பேன். பேரினத்தாரை எதிர்க்க என்னிடம் இன்ன சக்தி இருக்கிறது என்பது பற்றி ஏதும் உரைக்காமல் இனப்பிரச்சினை தீர்வில் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டேன். பேரினத்தாருக்குத் தாழ்ந்து போகமாட்டேன் என்றெல்லாம் வீர வசனம் பேசி மக்களின் உணர்ச்சியைக் கிளறி தன் தலைமை நிலைப்பதற்காக, யதார்த்தமின்றிப் பேசிவரும் பேச்சுக்களில் அவரது தீர்க்க்தரிசனமின்மை வெளிப்பட்டது.
➧➧ கவர்னரின் செயலாளருடன் முரண்பாடு, கவர்னருடன் முரண்பாடு, பிரதமருடன் முரண்பாடு, தனது அமைச்சர்களுடன் முரண்பாடு, தன் கட்சியினருடனே முரண்பாடு என பதவிக்கு வந்தகாலம் தொடக்கம் பலருடன் முரண்பாடுகளை வளர்த்ததன்றி, அவர் சாதித்த காரியங்கள் என எதனையும் சுட்டமுடியவில்லை. இரந்து எதனையும் பெறப்போவதில்லை எனப் பேசும் இவர் முரண்பாடுகளுக்கிடையில் தனக்கும் தனது அமைச்சர்களுக்குமாக முரண்பட்ட கவர்னரிடமே விண்ணப்பித்து வாகனம் முதலியவற்றைப் பெற்றதில் பிரபாகரனுக்கு நிகராகக் காட்டவிரும்பும் அவரது தியாகத்தின் (?) வீரியம் வெளிப்பட்டது.
➧➧ அரசியலுக்கு அழைத்து வந்து அவரது தேர்தல் செலவுகளுக்காக பணம் சேர்த்துக் கொடுத்து தம்முயற்சியால் பெருவெற்றி தேடிக் கொடுத்து, பதவி தந்த அணியினரை ஏன் வெறுக்கிறார் என்றும், அவர்களிடம் இல்லாத என்ன தகுதி அவர் இனங்காட்ட நினைக்கும் புதிய தலைமையிடம் இருக்கிறது என்றும் இன்றுவரை தெளிவாக வெளிப்படுத்த முடியாத தன்மையில் அவரது தடுமாற்றம் வெளிப்பட்டது.
➧➧ இரணைமடுக் குளத்திட்டம், வவுனியா பொருளாதார வர்த்தக மையத்திட்டம். அகதிகளுக்கான பொருத்து வீட்டுத்திட்டம், வவுனியா பஸ்நிலையத் திட்டம், நாவற்குழி உப்பளத்திட்டம் எனப் பல திட்டங்களில் குளறுபடி செய்ததோடு இன்றுவரை கல்வியிலோ. பொருளாதாரத்திலோ அகதிகள் மறுவாழ்விலோ இனஉரிமை விடயத்திலோ எதனையும் பெரிய அளவில் சாதிக்காமல் இருப்பதில் அவருடைய முடிவெடுக்கும் திறனில் உள்ள குறைபாடு வெளிப்பட்டது.
இப்படியாய் இன்னும் பலவற்றைச் சொல்லலாம்.
✎✎✎
மேலே நான் சொன்னவைகள், அவரிடம் தலைமை தாங்கும் ஆற்றல் இல்லை என்பதற்கான ஒரு சோற்றுப்பத விடயங்கள்.
இவற்றிற்கான பதில்களைக் கூட நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.
உங்களிடம் நான் கேட்க விரும்புவது.
இவர்தான் தலைமைக்குரியவர் எனச் சொல்லும் நீங்கள், குறித்த ஓரிரு யதாரத்தத் தலைமைப்பண்புகளையேனும் சுட்டி,
இவை இவரிடம் மட்டும்தான் இருக்கின்றன, அதனால் இவர் மட்டுமே தலைமைக்குரியவர் என்று சொல்லமுடியுமா?
இதுதான் என் கேள்வி.
✎✎✎
மீண்டும் ஒன்றை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். சுமந்திரன் மீது நான் சொன்ன குற்றங்களை,
முதலமைச்சருக்கு ஆதரவானவையாய் எப்படி எடுக்கமுடியாதோ, அதே போலத்தான் முதலமைச்சர் மீது நான் சொல்லியிருக்கும் குற்றங்களையும்,
சுமத்திரனுக்கான ஆதரவுக்கருத்தாய் எடுக்கமுடியாது.
தனிமனிதர்களிடம் பலமும் பலயீனமும் இருப்பது தவிர்க்கமுடியாததே.
என்னைப் பொறுத்தவரை தனிமனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, இனத்தைப்பற்றிக் கவலைப்படுவதையே முக்கியமெனக் கருதுகிறேன்.
எங்கள் எல்லாத் தலைமைகளிலும் குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன.
பதவி நோக்கிய விருப்பு, அண்மையில் ஏற்பட்ட அழிவுகளை மறந்து, தலைவர்களை ஒருவரோடொருவர் மோதச் செய்திருக்கிறது.
நான் நம் தலைவர்களிடம் ஒன்றே ஒன்றைத்தான் கைகூப்பிக் கேட்க விரும்புகின்றேன்.
சமஉரிமையை நம் இனம் பெறும் வரைக்கும், தயைகூர்ந்து எல்லோரும் ஒன்றுபட்டு ‘ஏகத்தலைமை’ என்ற ஒன்றை உருவாக்குங்கள். நான் சொல்வது கூட்டமைப்புச் சொன்ன அணிசார்ந்த ஏகத்தலைமையை அன்று.
இனஉரிமைபற்றிப் பேச மாற்று அணி என்ற ஒன்றே இல்லாத ஒருமைப்பட்ட தலைமையை.
ஆகக் குறைந்தது பத்தாண்டுகளுக்கேனும், அவ் ஒற்றுமையை நம் தலைவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். பேரினத்தாரோடு தமிழினத்தாரின் குரல் ஒரே குரலாய்ப் பேசவேண்டும்.
உலக ஆதரவோடு நம் உரிமையை நாம் பெற்றபிறகு, நீங்கள் பழையபடி கட்சிகளாய்ப் பிரிந்து ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்ளலாம்.
அதுவரை கட்சி, ஆதரவாளர், பதவி என்ற எண்ணங்களைத் துறந்து, நீங்கள் செயற்பட்டே ஆகவேண்டும்.
இல்லாவிட்டால் எதிரி செய்யவேண்டிய மித்திரபேதத்தை நீங்களே செய்து, இனத்தைப் பலயீனப்படுத்தி மீண்டும் ஒருதரம் ஓர் பேரழிவை நம் இனத்தின் மீது திணிப்பீர்கள். அங்ஙனம் நடந்தால் வரலாறு உங்களை மன்னிக்காது.
✎✎✎
அன்பு நண்ப,
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாய் ஊடகத்தையும் உலகம் உரைத்து நிற்கிறது.
ஆகவே, உங்கள் பணி பாரியது.
நீங்களும் அணிசார்ந்து இனத்தைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பது என் வேண்டுகோள்.
உங்கள் செயற்பாடுகளில் நடுநிலையின்மையின் சாயல் தெரிவதைக் கண்டு வருந்துகிறேன்.
தயைகூர்ந்து அந்நிலை தவிர்த்து ஒற்றுமையின் பலத்தை, நம் தலைவர்களுக்கு உரத்து உரைக்க நீங்கள் முன்வரவேண்டும்.
இது நட்பின் பெயரால் நான் விடுக்கும் வேண்டுகோள்.
Leave a Reply
You must be logged in to post a comment.