அனுராதபுரத்தை ஆண்ட தேவநம்பிய தீசன் நாக வம்சத்தை சேர்ந்த அரசனாவான்!

அனுராதபுரத்தை ஆண்ட தேவநம்பிய தீசன் நாக வம்சத்தை சேர்ந்த அரசனாவான்!

நக்கீரன்

தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் அரசனா இல்லையா என்பதுபற்றிய வாதம், எதிர்வாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. “தேவநம்பிய தீசன் பற்றிய கருத்துமாறுபாடுக்கு எனது விளக்கம்” (My Explanation To The Devanampiya Tissa Controversyஎன்ற தலைப்பில் முதலமைச்சர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நீண்ட காலமாக எல்லாளன் – துட்டகைமுனு போரைத்  தமிழ் – சிங்கள அரசர்களுக்கு இடையான போர் என்றுதான் வரலாற்றில் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதனைத் தமிழர்களும் நம்பி வருகிறார்கள்.

மறைந்த ஊடகவியலாளர்  ரி.சபாரத்தினம்  The Tamil Struggle (தமிழர்களின் போராட்டம்) என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் முதலதிகாரம் யூலை 10, 2010  இல் அமெரிக்க தமிழ்ச் சங்க இணையதளத்தில் வெளிவந்தது. சபாரத்தினம்  கொழும்பு ஏரிக்கரை செய்தித்தாளான தினகரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர்.  அதே நிறுவனத்தின் வெளியீடான டெயிலி நியூஸ் நாளேட்டின் செய்தியாளராகவும் இருந்தவர். அவர்  செய்தி சேகரிப்பதோடு பல கட்டுரைகள், நூல்கள்  எழுதியவர்.  ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் வரலாற்றில் இடம்பெற்ற  பல சிங்கள – தமிழ்த் தலைவர்களோடு பழகியவர். நேரில் கண்டு உரையாடியவர்.  அவர் Out of Bondage: The Thondaman Story,” (அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை: தொண்டமானின் கதை) என்ற நூலை 1990 இல் எழுதி இருக்கிறார். “Murder of a Moderate: Political Biography of  A. Amirthalingam,” (கொலைசெய்யப்பட்ட மிதவாத அரசியல்வாதி  அ.அமிர்தலிங்கம் அவர்களின் தன்சரிதை) என்ற நூலை 1996 இல் எழுதினார்.

தமிழர்களின் போராட்டம் என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொடரை  முடிக்கு முன்னர் மார்ச் 05, 2011 அன்று அவர் இயற்கை எய்திவிட்டார்.  அவரது மறைவு தமிழர்களுக்கு பெரிய இழப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை. எங்கள் மத்தியில் வரலாறு, குறிப்பாக சமகால வரலாறு பற்றி எழுதக் கூடியவர்கள் மிகச் சிலரே. தமிழர்களின் போராட்டம் என்ற தொடர்கட்டுரையில் தேவநம்பிய தீசன் இலங்கையின் முதல் சிங்கள பவுத்த அரசன் என அவர் எழுதியதைப் படித்துவிட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். துட்ட கைமுனு உட்பட  தேவநம்பிய தீசனின் வம்சம் சிங்கள – பவுத்த வம்சம் என அவர் எழுதியிருந்தார். இவருக்கு முன்னைய வரலாற்று ஆசிரியர்களும் இதே தோரணையில்தான் எழுதியிருக்கிறார்கள்.

இலங்கையின் புராண வரலாற்றை எழுதிய  மகாநாம தேரர்  கூட தேவநம்பிய தீசனை ஒரு சிங்கள பவுத்த அரசன் என இனம் காட்டவில்லை. இவனை மட்டுமல்ல மகாவம்சத்தில் கூறப்படும் எந்த அரசனையும் சிங்கள – பவுத்த அரசன் என அவர் குறிப்பிடவில்லை. அதற்கான காரணம் இருக்கிறது.

மகாவம்சம் கிபி 6 ஆம் நூற்றாண்டளவில்  பாளி மொழியில் மகாநாம தேரர் என்பவரால்   பாடல் வடிவில் எழுதப்பட்ட  வரலாறும் கட்டுக்கதைகளும் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும்.   விஜயன் லாலா நாட்டில் இருந்து  இலங்கைக்கு வருகை தந்ததாகச் சொல்லப்படும் கிமு 483 முதல் மகாசேனன் ஆட்சிக் காலம் வரை (கிபி 325-352) வரை இலங்கையை ஆண்ட அரசர்கள் அவர்கள் பவுத்த மதத்துக்கு ஆற்றிய தொண்டுகள், அளித்த தானங்கள், கட்டிய  விகாரைகள், நிறுவிய தூபிகள், அரசர்களுக்கு இடையே நடந்த சண்டைகள், அரியணைக்கான போட்டிகள், கொலைகள்   பற்றி மகாவம்சம் விபரிக்கிறது.

மகாவம்சம் எழுதப்பட்டதன் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் மகாவம்ச தேரர் “பவுத்த சமயத்தின் மேன்மைக்காகவும் பவுத்தர்களின் பக்தி உள்ளுணர்வுகளின் மகிழ்ச்சிக்காகவும் எழுதப்பட்டது”       என ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடுகிறார்.   இதனை இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள – பௌத்த பெரும்பான்மை மக்கள் கூறினாலும் அதனை  முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் கருத்து வரலாற்றாசிரியர்களிடையே உள்ளது. 

அதேவேளை இலங்கையில் வரலாற்று குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதனால், மகாவம்சம்  என்ற நூலைத் தவிர்த்துவிட்டு  இலங்கையின்  வரலாற்றை ஆய்வுசெய்ய முடியாது என்ற  கருத்தும் வரலாற்றாசிரியர்களிடையே  உள்ளது.

மகாவம்சத்தின் கதாநாயகனாக துட்ட கைமுனு (துட்ட காமினி)  சித்தரிக்கப்படுகிறான்.   காலத்தால்  முந்திய  தீபவம்சம்  துட்ட கைமுனு (கிமு 101 – 77)) பற்றி  பத்து வரிகளில் பாடியதை மகாவம்சம்  பதினொரு   அத்தியாயங்களில் (22-32) அவனது புகழ் பாடுகிறது. அதாவது மகாவம்சத்தின் 1/ 3 பாகம் துட்டகைமுனுவின் வீர வரலாறு கூறப்படுகிறது.

துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு தேசிய விடுதலை (சிங்களவனாக அல்ல)  வீரனாக வருணிக்கப் படுகிறான். இலங்கையின் தொடக்க  வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் பவுத்த மதத்துக்கு பெருமை தேடித் தந்த வீரனாக வருணிக்கப்பட்ட துட்ட கைமுனுவின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.

மேலும் எல்லாளனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் புன்நெறியைத் (இந்து மதத்தினை) தழுவியவன் எனக் கூறப் பின் நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பவுத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும் தன் பழைய மத நம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் குறை கூறுகிறது.

தேவநம்பிய தீசன் சிங்கள – பவுத்த தேசியவாதிகள் சித்திரிப்பது போல  சிங்கள அரசனா? அல்லது  முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுவது போல தமிழ் அரசனா? என்பதற்கான விடை மகாவம்சத்திலேயே காணப்படுகிறது. அதாவது தேவநம்பிய தீசன்  சிங்கள அரசன் அல்லன். அவன் தமிழ் அரசனும் அல்லன். அவன் நாக வம்சத்தைச் சேர்ந்த அரசன் ஆவான்.  இவனே இலங்கை வரலாற்றில் முதன் முதலாக வேத வைதீக  (இந்து) மதத்தில் இருந்து பவுத்த மதத்தைத் தழுவிக் கொண்ட  நாகவம்ச  அரசன் ஆவான். மகாவம்சம் தரும் தரவுகளை வைத்து இந்த முடிவுக்கு  நாம் வரலாம்.

மேலும்  மகாவம்சம் மூலமே இலங்கைத் தீவு முழுதும் தமிழர்களும் நாகர்களும் செறிந்து வாழ்ந்திருந்திருந்தார்கள் என்ற  உண்மை தெரிய வருகிறது. தமிழர்கள் செறிந்து வாழ்ந்ததை  துட்ட  கைமுனுவுக்கும் அவனது தாய் விகாரமாதேவிக்கும் இடையில் நடந்த ஒரு உரையாடல் மூலம் வெளிவந்துள்ளது. எங்களுக்கு இந்த இராச்சியம் (உருகுண)  போதும்.  அதனால் தமிழர்களோடு போர் செய்யக் கூடாது எனச் சத்தியம் செய்து தருமாறு துட்ட கைமுனுவின் தந்தை  காகவண்ண தீசன் தனது பிள்ளைகளான  கைமுனு மற்றும் தீசன் இருவரிடத்திலும் கேட்கிறான். அப்படிச் சத்தியம் செய்து கொடுக்க  துட்ட கைமுனு மறுக்கிறான்.

தந்தை மீதுள்ள கோபத்தில் ஒரு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கிடக்கிறான். இதனைக் கண்ட அவனது தாய் விகாரமாதேவி காரணம் கேட்கிறாள். அப்போது  துட்ட கைமுனு “மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழரும் இன்னொரு பக்கத்தில் கோத சமுத்திரமும் (வங்கக் கடல்) இருக்கும் போது என்னால் எப்படி காலை நீட்டிப் படுக்க முடியும்” எனப்  பதில் இறுத்தான்.  

பின்னர் தனது தந்தையுடன் கோபித்துக்கொண்டு பெண்கள் அணியும் ஆடை ஆபரணங்களை அனுப்பி “நீ ஒரு கோழை என்பதாலையே பெண்களைப்போல் பயப்படுகின்றாய் இதை அணிந்து கொண்டிரு” என்று கூறிவிட்டு மலை நாட்டிற்குச் சென்றுவிட்டான். அவன் இந்த இழிய செயலைச் செய்ததால் அவனுடைய பெயரில் துட்ட என்ற பெயரை சேர்த்து துட்டகைமுனு என்று அழைத்தனர்.

துட்ட கைமுனு  அனுராதபுரத்தைப் பிடிக்கப் படை திரட்டிக் கொண்டு போன போது வழி நெடுகிலும் 32 தமிழ் சிற்றரசர்களோடு ஓர் ஆண்டு காலம்  போரிட்டு  வென்றான் என மகாவம்சம் சொல்கிறது.

தமிழ்ச் சிற்றரசர்கள் மீதான போரில்  இருவரது  கோட்டைகளை அவனால் வெல்ல இயலவில்லை. மகேலனின் கோட்டையும், தித்தம்பன் என்பவனின் கீழ் இருந்த அம்பதித்தை கோட்டையும் நேரில் போர் செய்து வெல்ல இயலாதவை என்று கண்ட துட்ட கைமுனு தன் தாயான விகார மாதேவியை மணம் செய்து தருவதாக ஆசைக்காட்டியும் அவளது உடலழகைக் காட்டியும்  தன் பக்கம் ஈர்த்தான்.

விகாரமாதேவியை மணந்து கொள்வதால் அரசாட்சி கிடைக்கும் என கனவு கண்ட சிற்றரசர்கள் இருவரும் ஒழுங்காகப் போர் செய்யாததால் இரு கோட்டைகளும் விழுந்தன. இவ்வாறு துட்டகைமுனுவின் வெற்றியை எளிதாக்க விகாரமாதேவி இரண்டு முறை உதவியதாக மகாவம்சம்  குறிப்பிடுகிறது. கடைசி தமிழ்ச் சிற்றரசனை வென்றபோது “நான் படையெடுத்து எதிரிகளை வெற்றி கொண்டது இராச்சியத்துக்கு அல்ல, சம்புத்தரின் கோட்பாட்டை நிலை நாட்டவே” என துட்ட கைமுனு பிரகடனம் செய்தான் என மகாவம்சம் (அத்தியாயம் 25) சொல்கிறது.Image result for தேவநம்பிய தீசன்

ஆனால் உண்மை அதுவல்ல. துட்ட கைமுனு தனது பாட்டன் முப்பாட்டன் ஆண்ட அனுராதபுரத்தை கைப்பற்றி ஆளவே எல்லாளன் மீது படையெடுத்தான் என்பதே சரியானதாகும். 

துட்ட கைமுனுவின் இந்தப் படையெடுப்பு  கிமு  2 ஆம்  நூற்றாண்டில் உருகுண நீங்கலாக  முழு இலங்கையிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.  தமிழர்கள் மகியங்கன உட்பட பரந்துபட்ட  நிலப்பரப்பில் ஆட்சி செய்தார்கள் என்பதையும் காட்டுகிறது.

 விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள 5  ஈசுவரங்களான திருக்கேதீசுவரம், நகுலேசுவரம், திருக்கோணேசுவரம், இலங்கையின் தென்பகுதியில்  தொண்டீசுவரமும் இருந்தன. இதனை யாழ்ப்பாண வைபமாலை குறிப்பிடுகிறது. தொல்பொருள் வரலாற்று ஆராய்ச்சியாளரான  Dr.Paul E.Pieris   (1917)  உறுதிப் படுத்துகிறார். (http://tamilnation.co/heritage/fiveishwarams.htm) தொண்டீசுவரம் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போத்துக்கீசியரால் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட கோயிலை  அந்தப் பகுதியைச் (மாத்தறை) சேர்ந்த சிங்கள – பவுத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றி வழிபடுகின்றனர்.

சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் துட்ட கைமுனு – எல்லாளன் இடையிலான போரைத் தமிழர் – சிங்களவர் போர் எனத் திரித்து எழுதி வைத்திருக்கிறார்கள். ஏன் சபாரத்தினம் போன்ற தமிழர்களும் அதனை நம்பி எந்தச் சான்றுமின்றி துட்ட கைமுனுவை சிங்களவனாகச்   சித்திரிக்கிறார்கள்.   துட்டகைமுனுவை சிங்களவன் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது தவறு.  அதே போல் அவனது முன்னோர்களை சிங்கள அரசர்கள் என வருணிப்பதும் தவறாகும். துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன்.

துட்ட கைமுனுவின் முன்னோர்கள் நாக வம்சத்தினர்.    அவனது தாயார் விகாரமாதேவி கல்யாணி (கலனி) இராச்சியத்தை ஆண்ட  நாக மன்னன் களனி தீசன்  மகளாவாள். துட்ட கைம்முனுவின் தந்தை பெயர் காகவண்ண தீசன்.  காகவண்ண தீசனது தந்தை பெயர் கோத்தபாய. பாட்டன் பெயர் மகா நாகன். மகாநாகன் தேவநம்பிய தீசனின் சகோதரன் ஆவான்.  தேவநம்பிய தீசனே பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசனாவான்.  அவனது  உடன்பிறப்பான மகாநாகன் அநுராதபுரத்தை விட்டு மனைவியோடு ஓடி உருகுணாவுக்குச் (இன்றைய மாத்தறை, அம்பாந்தோட்டை, கதிர்காமம்) சென்று தனக்கென நாக மகாவிகலம் என்ற நகரை உருவாக்கினான்.

மகாவம்சம் எந்த இடத்திலும் துட்டகைமுனுவை சிங்களவன் என்று சொல்லவில்லை. மகாவம்சத்தின் படி மகாவலி கங்கைக்கு வடக்கே தமிழர்கள் வாழ்ந்தார்கள்.  தமிழர்களில் பவுத்தர்களும்  இருந்தார்கள்.  இந்துக்களும் இருந்தார்கள். அதே போல் நாகர்களில் இந்துக்களும் இருந்தார்கள் பவுத்தர்களிலும் இருந்தர்கள்.

விஜயன் வாரிசு இல்லாது இறந்து போகிறான். இறக்கு முன்னர் சிங்கபுரத்தை ஆண்ட  தனது தம்பி சுமித்தாவுக்கு ஓலை அனுப்பி இலங்கைக்கு வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு கேட்டான். அவன் தனது  இளைய மகனான பாண்டு வாசுதேவனை (கிமு 512 – கிபி 474)  அனுப்புகிறான். இடைக் காலத்தில் விஜயனின் அமைச்சர்களில் ஒருவனான  பிராமணனான உபதிஸ்ச ஆட்சி செய்தான். பாண்டு வாசுதேவனுக்குப் பின்னர் அவனது மகன் அபயன் ஆட்சிக்கு வருகிறான். அவனுக்குப் பின்னர் பாண்டுகாபயன் (கிமு 437 -367) ஆட்சிக்கு வருகிறான். இவன் பாண்டு வாசதேவனின் பேரன் ஆவான். இவன்தான் அனுராதபுரத்தின் முதல் அரசனாவான். பாண்டுகாபயனுக்குப் பின்னர் அவனது மகன் மூத்தசிவன் (கிமு 367-கிமு 307)  பட்டத்துக்கு வருகிறான்.

இவனுக்குப் பின்னர் தேவநம்பிய தீசன் (கிமு 307 – கிமு 267) முடிசூட்டிக் கொள்கிறான் இவனது ஆட்சிக் காலத்திலேயே மகிந்த தேரர் பவுத்த மதத்தைப் பரப்ப  இலங்கை வந்தார். தேவநம்பிய தீசன் (இவனது இயற்பெயர் தீசன் மட்டுமே) பவுத்த மதத்தைத் தழுவுகிறான். மகிந்த தேரரைத் தொடர்ந்து சங்கமித்தை வெள்ளரசுக் கிளை ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த மரம் அனுராதபுரத்தில் நடப்பட்டது. துப்பராம என்ற தூபியை இவன்தான் நிறுவினான். தேவநம்பிய தீசனுக்குப் பின்னர் அவனது உடன்பிறப்புக்கள் உத்தியன், மகாசிவன் மற்றும் சூரத்திசா அனுராதபுரத்தை ஆண்டார்கள். அவனது இன்னொரு உடன்பிறப்பு மகாநாகன் தன் உயிருக்குப் பயந்து உருகுணக்கு  ஓடித்தப்பினான். அங்கொரு இராட்சியத்தையும் உருவாக்கினான். மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் விஜயனை சாக்கிய வம்சத்தில் பிறந்த புத்தரோடு தொடர்பு படுத்த கடும் முயற்சி எடுத்துள்ளார்.

பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவாசுதேவனை மணக்கின்றாள். அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா ஆகும். உன்மாத சித்ராவின் மகன் – பாண்டுகாபயன் பண்டுகாபயவின் மகன் – மூத்தசிவன், மூத்தசிவனின் மகன் – தேவநம்பிய தீசன் தேவநம்பிய தீசனின் உடன்பிறப்பு – மகாநாகன். இவனே உருகுணைக்கு தனது மனைவியோடு தப்பிச் சென்று புதிய இராசதானியை உருவாக்கியவன்.

மகாநாகநாகனின் உடன்பிறப்பு – யடாலதிஸ்ஸ, யடாலதிஸ்ஸவின் சகோதரன் – கோத்தபாய கோத்தபாயாவின் மகன் – காகவண்ண தீசன் காகவண்ண தீசன் மகன் துட்ட கைமுனு. மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் விஜயனுக்குப் பின்னர் அரசு கட்டில் ஏறியவர்களை கவுதம புத்தரின் குடும்பத்தோடு வலிந்து இணைத்துள்ளார். உண்மையில் விஜயனுக்குப் பின்னர் பட்டத்துக்கு வந்தவன் பாண்டிய வம்சத்தை சேர்ந்த பாண்டுவாசு தேவன். அவனது பெயரே அவனது வம்சத்தைக் கூறிவிடுகிறது. எனவே   துட்ட கைமுனுவின் தந்தை, பாட்டன், பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) எல்லோரும் நாக வம்ச அரசர்களே. 

விஜயன் காலத்துக்கு முன்னர் இலங்கைத் தீவில்  நாகர், தமிழர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடுவர்) வாழ்ந்தார்கள் எனக் கூறுகிறது.

Image result for தேவநம்பிய தீசன்

 

 

 

 

 

அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு (1) கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) (8) அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் இலங்கையை 7 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள்.

தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகன் II தந்தை பெயர் வீர தீசன். (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). தீசன் என்ற சொல் திசையில் இருந்து பிறந்த சொல் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வது தவறாகும். தீசன் என்ற சொல்  நாக வம்ச அரசர்கள் சூட்டிக்  கொண்ட வம்சம் அல்லது பட்டப் பெயர் ஆகும்.  அனுராத புரத்தை ஆண்ட பல மன்னர்கள்  நாகன், தீசன் என்ற பின் னொட்டுகளைத் தொடர்ந்து  பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தீசன் என்ற பெயரை வைத்துக் கொண்ட கடைசி மன்னன் தாத்தோப்ப தீசன் (கிபி 659-667) ஆவான். நாகன் என்ற  பெயரை வைத்துக் கொண்ட கடைசி அரசன் மகாநாகன் (கிபி 575-கிபி 608) ஆவான்.

இன்றைய சிங்களவர்களுக்கு சிங்கள மொழியும் அதன் அரிச்சுவடியும்  பவுத்த மதம்  கொடுத்த கொடையாகும்.  தேவநம்பிய தீசனை மிகிந்தலையில் மகிந்த தேரர் சந்தித்தபோது என்ன மொழியில் உரையாடினார்கள்? அந்த மொழி தீவபாசா என மகாவம்சம் குறிப்பிடுகிறது. சிங்களம் என்று குறிப்பிடவில்லை. சிங்கள மொழி அப்போது இருக்கவில்லை. 

தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் அரசன் என கூறும் தமிழர்கள் துட்ட கைமுனுவை சிங்கள அரசன் எனக் கூறுகிறார்கள்.  மூத்தசிவன்  அவனது மக்களான தேவநம்பிய தீசன், மகாநாகன் பரம்பரையில் வந்த துட்ட கைமுனு எப்படிச் சிங்கள அரசன் ஆவான்? இதுகாறும் கூறியவற்றால் தேவநம்பிய தீசன் நாகவம்சத்து அரசன் என்ற முடிவுக்கு வரலாமேயொழிய அவன் தமிழ்மொழி பேசிய தமிழன் அல்லன். தமிழ்மொழி வேறு நாகர்கள் பேசிய மொழி வேறு என மணிமேகலை குறிப்பிடுகிறது. மணிமேகலை ஆதிரையின் கணவன் சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது. சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம்  சேர்ந்தனர். 

கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனைக் கொன்று உண்ண முயன்றனர். சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான். நல்லறிவு பெற்ற நாகர் தலைவன், சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்தான். அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான்.

சங்க இலக்கியத்தில்  புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகராயர், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் போன்றவர்களது பெயர்களைக் குறிப்பிடுகிறது.  முடிநாகர் இனத்தைச் சேர்ந்த முரஞ்சியூர் முடிநாகராயர் சேர மன்னனான உதியஞ்சேரலைப் பாடியிருக்கிறார். இவர்கள் நாகவுருவைத் தலையில் அணிந்ததால் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோயில்  வரலாற்றுத் தொடர்புடையது  ஆகும். இலங்கையில் வாழ்ந்த நாகர்களில் பவுத்தத்தை சார்ந்தவர்கள் நாளடைவில் சிங்களவர்களாக மாறினார்கள். பவுத்தர்களாக இருந்த தமிழர்களும் இவ்வாறே  இனம் மாறினர். அதே சமயம் இந்துக்களாக இருந்த நாகர்கள் தமிழர்களாக மாறினர். தமிழ்நாட்டிலும் ஈழத்திலும்  வாழ்ந்த நாகர்கள் காலப் போக்கில் தமிழ்மொழி பேசி தமிழர்களாக மாறியிருக்க வேண்டும். 

இரண்டு நூற்றாண்டுக்கு முன்னர் நீர்கொழும்பு, சிலாபம் போன்ற இடங்களில் வாழ்ந்த கத்தோலிக்கத் தமிழர்களது கற்கை மொழியை பேராயர் எட்மன்ட் பீரீஸ் (27 -12- 1897 =04-09-1989) தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றியதன் விளைவாக இன்று அவர்கள் சிங்களம் பேசி சிங்களவர்களாக மாறிவிட்டார்.  மே 28, 1915 இல் சிங்களவர்களுக்கும் கரையோர முஸ்லிம்களுக்கும் இடையில் நாடு தழுவிய கலவரம் நடந்து பலர் கொல்லப்பட்டனர். டி.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  பிரித்தானிய அரசு சொத்துக்கள் நாசமாக்கப்பட்டதை ஈடுசெய்ய  சிங்களவர் மீது தண்டம் விதித்தது.

நீர்கொழும்பு, சிலாபத்தில் வாழ்ந்த  பரதவர்  தாங்கள் தமிழர்,  சிங்களவர்கள் அல்லர் எனவும் தண்டத்திலிருந்து தவிதிவிலக்குத் தருமாறும்  பிரித்தானிய அரசுக்கு விண்ணப்பம் செய்தார்கள்!

இதே போல் வெலிமட இராசபக்சாக்களும் தாங்கள் தமிழர்கள் சிங்களவர்கள் அல்லர் என விண்ணப்பித்தார்கள்.

எது எப்படியிருப்பினும் தேவநம்பிய தீசன் சிங்கள அரசன் அல்ல என்பது தெளிவாகும். அவனது பரம்பரை ஆயிரம் ஆண்டுகளாக தங்களது அடையாளத்தைத் தொலைக்காமல் அனுராதபுரத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டில்  பவுத்தம் அவர்களுக்கு வேறான மொழி அடையாளத்தைக் கொடுத்த போது அவர்கள்  சிங்களம் பேசி சிங்களவர்களாக  மாறினார்கள்.

 

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply