ஜெகஜ்ஜால சாமியார்கள்

 

ஜெகஜ்ஜால சாமியார்கள்

திக்கப்படும் பிரபலங்களின் முகமூடிகளே தினம் தினம் கழன்றுவிழும் இந்த டெக்னாலஜி யுகத்திலும் சாமியார்களால் ஏமாற்றி ஜீவிக்க முடிகிறது. மக்களின் பிரச்னைகளும், நம்பிக்கைகளுமே இந்த சாமியார்களின் மூலதனம். இப்படி விதவிதமான சாமியார்களைப் பற்றி ஜூ.வி. எழுதியிருக்கிறது. உபத்திரவமில்லாத சாமியார்கள் முதல், இன்றைய குர்மீத் ராம் ரஹீம் போல அந்தக் காலத்தில் இருந்த பிரேமானந்தா வரை அந்தப் பட்டியல் நீளமானது…

‘‘ஓள.. ஓள.. ஊ.. ஊ.. ஓள.. ஓள..’’ என்று நரிமாதிரி சாமியார் ஊளையிட, பக்தர்களும் தொடர்கின்றனர். பிறகு நிமிஷத்துக்கொருதரம், ‘‘எனக்கு கொலவச் சத்தம் கேக்கட்டும்’’ என்று சாமியார் ஆணையிட… பெண்களும் ஆண்களும் நரிமாதிரி ஊளையிடுகின்றனர். இதில் நாலைந்து பேர் ‘செட்டப்’. மீதிப் பேர் பயத்திலேயே ஊளையிடுகின்றனர். இவர் கரூர் நரி ஊளைச்சாமி.

l மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த தி.புதுப்பட்டியில் இருந்தார் ஆணிச் சாமியார். ‘சாமியோ, பூதமோ இவர் தலையில் இரும்பு ஆணியை அடிக்கிறது’ என்கிற விசித்திர செய்தி பரவியிருந்தது. ‘மலையாள மஹேஸ்வரி திடீர்னு விரட்டி அடிக்கும். அந்த நேரத்தில் நான் மயங்கி விழுந்துடுவேன். எழுந்து பார்த்தா என் தலையில் ஒரு ஆணி முளைச்ச மாதிரி அடிச்சிருக்கும். இப்படி இதுவரைக்கும் ரெண்டாயிரம் ஆணிக்கு மேல் அடிச்சிப் பிடுங்கியிருக்கு, இந்த மலையாள மஹேஸ்வரி’ என்றார் ஆணிச்சாமியார். நம் முயற்சியில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் மனநோய் மருத்துவரும் சாமியாரை தீவிரமாக ஆராய்ச்சி செய்து, ‘நெருப்பைக் கண்டு மயக்கமடைதல் போன்ற ஒரு வகை வலிப்புநோய் சாமியாருக்கு இருக்கிறது. சுயநினைவிழந்த பிறகு, அரை மயக்கநிலையில் அவருக்குத் தெரியாமல் அவரே ஆணி அடித்துக் கொள்கிறார்’ என மர்மம் அவிழ்த்தார்கள்.

எல்லோரும் அறுசுவை உணவை ஒரு பிடி பிடித்து முடிக்கவும், மாணிக்கம் மீது ‘சாமி’ ஏறவும் சரியாக இருந்தது. அவசரமாக எச்சில் இலைகளை வரிசையாக ஓரிடத்தில் பரப்பி வைத்தனர் பக்த கோடிகள். இலைகளில் சட்டென்று சாமி விழுந்து புரள ஆரம்பித்ததும், பக்தர்கள் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி, அருள்வாக்கு பெற ஆரம்பித்தனர். தஞ்சை மாவட்டத்தில் ரகுராமசமுத்திரம் கிராமத்தில் தான் இந்த ‘எச்சில்’ இலை சாமியார் இருக்கிறார்.

‘இந்திய கிரிக்கெட் அணியில் இவர் இல்லையே’ என்று ஏங்கிப் போகிற அளவுக்குக் குறிபார்த்து அடிக்கிறார், ‘பால்வாக்கு’ சரோஜா. கிரிக்கெட் வீரர்கள் அடிப்பது ‘பால்’ என்றால், இந்த அம்மணி அடிப்பது சுத்தமான பால். தேனியில் இருக்கும் சரோஜா, தன்மீது சிவன் இறங்கியிருப்பதாகத் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார். பக்தர்கள் கொண்டுவரும் பாலை வாய்நிறையக் குடித்துவிட்டு, சம்பந்தப்பட்டவரை வாய்பிளந்து எதிரில் உட்காரச் சொல்கிறார். குறி தப்பாமல், பக்தனின் வாய்க்குள் தன் வாயில் உள்ள பாலை முழு வேகத்தில் பீய்ச்சியடிக்கிறார். சிவனே நேரில் வரம் தந்த மாதிரி, குஷியோடு வீடு திரும்புகின்றனர் அவர்கள்.

சாமியார்களில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன் பக்கம் திருப்பியவர், பிரேமானந்தா. அவரது பம்பைத் தலையும், உருட்டுவிழிப் பார்வையும் வெகுநாளைக்கு மக்களின் பேச்சாக இருந்தது. பிரேமானந்தாவின் ஆசிரம மர்மங்களை ஜூ.வி-தான் அம்பலப்படுத்தியது. திருச்சி பாத்திமா நகரில் இருக்கும் பிரேமானந்தா ஆசிரமத்திலிருந்து தப்பிவந்த சுரேஷ்குமாரி, லதா என்ற இரண்டு இளம்பெண்கள், ஜூ.வி அலுவலகத்துக்கு போன் செய்து, நம்மை ஓரிடத்துக்குக் கூப்பிட்டு சில பயங்கர உண்மைகளைச் சொன்னார்கள். ‘ஆசிரமத்தில் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை பிரேமானந்தா தன் காமவெறிக்கு பலியாக்கிக்கொண்டிருக்கிறார். இதை எதிர்த்த ரவி என்பவரைக் கொன்றுவிட்டார்’ என்பது அவர்கள் சொன்ன பகீர் தகவல்.

இதைத் தொடர்ந்து ஆசிரமத்துக்கு ஜூ.வி நிருபர் சென்றார். இந்த விஷயத்தை விசாரித்ததும் பிரேமானந்தாவின் முகம் மாறியது. ‘‘இதோ பாரு ராஜா! நான் ஓபனா சொல்கிறேனே… பல பெண்பிள்ளைகள் என்கிட்டே வந்து ‘ஏன் என்னிடம் அப்படி நடந்துக்க (அதாவது… லீலைகள்!) மாட்டேங்கறீங்க’னு கெஞ்சுவாங்க. வற்புறுத்துவாங்க. சாமி டாலரைப் போட்டுக்கிட்டு, நான் எப்படிப் பொண்ணுங்களைக் கூப்பிட்டு வெச்சுக்கிட்டுத் தடவ முடியும்?’’ எனக் கேட்டு திடுக்கிட வைத்தார் சுவாமி.

விவகாரம் ஜூ.வி-யில் வெளியானது. தமிழகமே அதிர்ந்து நிமிர்ந்தது. போலீஸ் அவரைக் கைது செய்தது. அவருடன் ஆசிரமத்தின் தலைவியாக இருந்த திவ்யா மாதாஜி உல்லாசமாக கிடார் வாசிக்கும் படங்களெல்லாம் கிடைத்ததே தவிர, மாதாஜி லண்டனுக்கு கிரேட் எஸ்கேப் ஆகியிருந்தார்.

ஆசிரமத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவன் ரவியின் சடலத்தைத் தோண்டி எடுத்தனர். ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை செய்ததில் பணம், சாமியாரின் சில வீடியோ காஸெட்கள், கம்ப்யூட்டர் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ‘சுவாரஸ்யமான’ பல படங்களைக் கைப்பற்றி ஜூ.வி வெளியிட… வாசகர்கள் திகில் கலந்த த்ரில்லோடு இந்த ஆன்மிக அலம்பலை ஃபாலோ செய்தனர்.

மூன்று ஆயுள் தண்டனைகளைப் பெற்று சிறையில் இருந்தபோதே இறந்தும்போனார் பிரேமானந்தா.

 

https://www.vikatan.com/juniorvikatan/2018-jan-03/jv-milestone:-society/137432-junior-vikatan-milestone-articles-samiyargal.html


 

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply