ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐநா விடயங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள் -மாவை சேனாதிராக

ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐநா விடயங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள் – மாவை சேனாதிராக

தயாளன்

ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐநா விடயங்களைப் பற்றி பேசுகின்றார்கள். வடமாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்புப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு  உரிய பதில் வழங்குவோம் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர்  நீங்களும் அவ்வாறு செய்யாதீர்கள் என தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் உடனான கலந்துரையாடல் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,Image result for திரு மாவை சேனாதிராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரச்சினைகள் சர்ச்சைகள் கருத்து மோதல்கள் இருந்தாலும் கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளுக்குள் கட்சித் தலைவர்களிடம் ஒற்றுமை உள்ளது. ஒற்றுமையாகவே செயற்பட்டு வருகின்றோம் இன்றும் உங்கள் முன்னால் வந்துள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை இணைத்துள்ளோம். எமது இனத்திற்காக மண்ணிற்காக விடுதலைக்காக சயனைட் குப்பி கட்டியவர்கள் இன்று எம்முடன் இணைந்துள்ளார்கள். அவர்களை ஜனநாயகப் பாதையில் கொண்டு செல்லவேண்டும். அதற்காக அவர்களை நாம் இணைத்துள்ளோம்.

வடக்கு கிழக்கில் பல இடங்களிலும் வேட்பாளர்களாக நியமித்துள்ளோம்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் போராளிகளுக்காக மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்காக பல திட்டங்களை உள்ளடக்கியுள்ளோம். இவை எமது முயற்சியே. புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்காக அங்கவீனமடைந்தவர்களுக்காக பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் 21 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

50ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடந்த காலம்போல் புள்ளித்திட்டங்கள் இலகுபடுத்தப்பட்டுள்ளது. பொருத்து வீடுகள் தொடர்பில் பல சர்ச்சைகள் உருவாக்கப்பட்ட நிலையில் அவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஊடகங்களில் பல உண்மைக்கு மாறான செய்திகள் எங்களுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பில் அனைவரும் அறிந்திருப்பீர்கள். வடமாகாண முதலமைச்சர் கூட தானே கேள்வி எழுதி தானே பதிலளிக்கின்ற விடயத்தில் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். அதற்கான பதிலை திட்டவட்டமாக விரைவில் அறிவிப்போம். எமது கட்சியின் செயலாளர் அதற்குப் பதில் வழங்குவார் அதன் பின்னர் நாங்கள் பதில் வழங்குவோம். நாங்கள் இதற்காக அஞ்சவுமில்லை. மறைந்திருக்கவுமில்லை. வரலாற்றில் அவ்வாறான தவறுகள் நாங்கள் இழைக்கவில்லை. எமது இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம்.

எங்களைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு முதலமைச்சரோ வேறு யாராக இருந்தாலோ மக்களுக்கு முன்னால் தெளிவான பதிலை வழங்குவோம். மக்களுக்கு முன்னால். உண்மையைப் பேசுவதற்கும் தெ ளிவாகவும் இராஜதந்திரமாகவும் எடுத்துச் சொல்வோம். ஒற்றுமையாக எமது இலக்குகளை நோக்கிச் செல்வோம்.

தனித் தனிக் கட்சிகளாகச் சேர்ந்து வாக்குகளைக் கேட்பதற்குப் பதிலாக ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான ஒரே சின்னத்திற்கு வாக்களிக்கக் கோருவோம். ஊர் விடயங்களைத் தெரியாதவர்கள் ஐ.நா. விடயங்களைப் பற்றி பேசுகின்றார்கள். அவ்வாறானவற்றை நீங்களும் செய்யாதீர்கள். கிராமங்கள் வட்டாரங்களின் அபிவிருத்தியை பேசவேண்டும். உள்ளூராட்சியில் அதுவே முக்கியமான விடயமாகும்.

கடந்த உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக சபைகளைக் கொண்டிருந்தபோதும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. வடக்கு மாகாண சபையிலும் நீதியரசர், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் கல்விமான்கள் என இருந்தபோதும் விமர்சனங்கள் எழுந்த வண்ணமே இருந்துள்ளன. இலங்கையில் வடமாகாண சபையைப் போல் வேறு எந்தவொரு சபையும் கல்விமான்களைக் கொண்டிருக்கவில்லை. அப்பிரச்சினை பற்றி பின்னர் பார்ப்போம். இவ்வாறான விமர்சனங்கள் இனிவரும் சபைகளில் இடம்பெறக்கூடாது.

இனிவரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் அதிகளவில் பகிரப்படவுள்ளன. ஆகவே முறையான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த திட்டங்களை வகுக்கவேண்டும். சபைகள் திறம்படச் செயற்படுவதற்கு நாங்கள் பயிற்சிகளை வழங்குவோம்.

மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு செயலாற்றுபவர்களாக நீங்கள் அனைவரும் மாறவேண்டும். அதற்கேற்ப திட்டங்களை வகுத்து மக்கள் முன்செல்லவேண்டும் என்றார்.


 

About editor 3123 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply