பாபா பகுர்தீன்
போதி தர்மர் / அத்தியாயம் 1 தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அது. மூவேந்தர்களும் வெளிநாட்டு வணிகத்தால் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நேரம். யவனர்கள், அரேபியர்கள், சீனர்கள், வட இந்தியர்கள் என பெரும் வணிகக் கூட்டம் இங்கிருந்து இஞ்சி, மிளகு, இலவங்கம், பருத்தி போன்ற வாசனை பொருட்களை தங்கள் நாட்டுக்கு அள்ளிச் சென்றனர். பதிலுக்கு சர்க்கரை, தங்கம், வெள்ளி, பட்டு, உயர்ரக மது, அழகிகள், குதிரைகள் என்று கொட்டிக் கொடுத்தனர். தேனை வண்டு பார்த்துக்கொண்டா இருக்கும்! தமிழகத்தின் செழிப்பு பிற தேசங்களின் கண்களை உறுத்தின. இப்படியே செழிப்பாக போய்க்கொண்டிருக்கையில்தான் இந்தத் தென்பகுதியில் தொடர்ச்சியான அயல்நாட்டுப் படையெடுப்புகள் எழுந்தன.
எதிர்பாராத பல்லவர் படையெடுப்பு மூவேந்தர்களின் எல்லையைச் சற்று சுருக்கியது. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாக கைப்பற்றத் தொடங்கியிருந்தனர். அந்த சமயத்தில்தான் திடீரென்று களப்பிரர்களின் கை ஓங்கியது. தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்களே களப்பிரர் என்பது ஒரு கூற்று. இல்லை இவர்கள் தமிழர்களே என்பது மற்றொரு சாராரின் கருத்து.
இங்கு நமக்கு என்ன தேவையென்றால், இவர்கள் பௌத்த, சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பது மட்டுமே. அவர்களுக்கு முன்பே அதாவது சக்கரவர்த்தி அசோகர் காலத்திலேயே பௌத்தமும் சமணமும் தமிழகத்துக்கு அறிமுகமாகி இருந்தாலும், இவர்கள் மூலமாகவே தமிழகத்துக்குள் பௌத்த சமண மதங்கள் ஆழமாக ஊடுருவின. தமிழர் பண்பாட்டை பாதித்தன. அப்படியானால் இதற்கு முன் எந்த மதமும் தமிழகம் வந்ததில்லையா?
வந்திருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு வெற்றி கண்டதில்லை. எடுத்துக்காட்டாக, பௌத்தம் இங்கு வேரூன்றுவதற்கு முன்பே வேதாந்தத்தின் பிரதியான வைதீகம் தமிழகம் வந்துவிட்டது. மக்கள் மனதில் அகிம்சையையும் சமதர்மத்தையும், பகுத்தறிவையும் புகட்டிய பௌத்த சமண மதங்களுக்கு முன் உயிர்ப் பலிகளையும், பிறப்பால் சாதியத்தையும், பிளவையும், அறிவு நம்ப மறுக்கும் கட்டுக் கதைகளையும் முன்வைத்த வைதீகம் நிற்கக்கூட முடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையை தமிழகத்தின் இருண்ட காலம் என்று கூறப்படும் களப்பிரர்கள் ஆட்சி நடந்த வேளையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.
பௌத்தமும் சமணமும் அப்படிப் பரவக் காரணம் என்ன? மக்கள் தொண்டு. புத்த, சமண துறவிகள் தமிழகமெங்கும் பரவினர். தீண்டாமை களைந்தனர். பிறரை/பிறவற்றை இம்சிக்காத அவர்களது எளிமை மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது. அசோகர் தோற்றுவித்த வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தி எழுத்துப் புரட்சி கண்டனர். எழுத்துப் பணி கடை நிலை மனிதனையும் சென்றடைய உதவினர். மக்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று கல்வியையும் கற்றுத்தந்தனர். சுருக்கமாகச் சொன்னால், பௌத்தமும் சமணமும் சாமானியர்களையும் அறிவில் சிறந்தோரையும் ஈர்த்தன. இவ்விரு மதங்களிலும் மக்கள் திரள் திரளாக இணைந்தனர். காஞ்சி தமிழகத்தின் புத்த மக்காவானது. மதுரை, பூம்புகார் போன்ற நகரங்கள் பிற புத்த திருத்தலங்களாயின. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிருந்தும் பயணிகள் இங்கு வரலாயினர். தமிழகத்தில் பௌத்தம் தழைத்தது.
இது பலருக்கு வியப்பாக இருக்கலாம், களப்பிரரின் காலம் இருண்ட நூற்றாண்டல்லவா? எனும் கேள்வி எழலாம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்றுதான் சொல்லி ஒதுக்கி வந்தனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகளும் வரலாற்று ஆய்வுகளும் இந்தக் கருத்தை உடைத்தெறிகின்றன. உண்மையில் களப்பிரர் வரவுக்குப் பின்னர்தான் மக்களை நெறிப்படுத்தும் திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. களப்பிரர்களின் சிறப்பை இருட்டடிப்பு செய்யவே திட்டமிட்டு அவர்களின் ஆட்சியை இருண்டகாலம் என்று பொய்யுரைத்ததாகக் கூறுகின்றன.
இவ்வாறு பௌத்தமும் சமணமும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த தருணத்தில்தான் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மீண்டும் பெரும் எழுச்சி பெற்ற பல்லவர்கள் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த களப்பிரர் ஆட்சியை வீழ்த்தி அகற்றுகின்றனர்.
இப்படியாக ஆட்சியை மறுபடியும் கைப்பற்றிய பல்லவர்களும் பௌத்த சமண சமயங்களைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். இந்த இரண்டாம் தலைமுறையில் வந்த பல்லவ மன்னன் (சிலர் கோசிவர்மன் என கூறுவதுண்டு) ஒருவனின் மூன்றாம் மகன்தான் போதிதாரா எனும் இயற்பெயர் கொண்ட போதிதர்மர் என்பது பொதுவான கருத்து.
ஆனால் போதிதர்மர் களப்பிரர் வம்சத்தை சார்ந்தவர் என்று மற்றொரு கருத்து நிலவுகிறது. வரலாற்றில் களப்பிரர் வரலாறு எப்படி இருண்டு கிடக்கிறதோ அதுபோலவே போதிதர்மரின் வரலாறும் இருண்டுதான் கிடக்கிறது. போதிதர்மர் களப்பிரராக இருந்ததாலேயே அவருடைய வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது என்பதும் சிலரின் குற்றச்சாட்டு.
இதனாலேயே போதிதர்மர் பற்றிய செய்திகள் மிகச் சொற்பமாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளன. அதிலும் அவரது இந்திய வாழ்க்கை குறித்த குறிப்புகளைத் தொகுத்தால் ஒரு பக்கத்தைக்கூட தாண்டமுடியாது. இப்பொழுது நமக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்சத் தகவல்கள், செய்திகள்கூட சீன மற்றும் ஜப்பானிய ஆசிரியர்கள் வரலாற்றில் பதிவு செய்து வைத்துள்ளவைதான்.
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த யுவாங் சுவான்ஸியின் லியோயங் என்பவரின் ‘பௌத்த மட பதிவுகள்’ என்னும் நூலும், ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த தான்லின் என்பவரின் ‘இரண்டு நுழைவாயில்கள் மற்றும் நான்கு சட்டங்கள்’ எனும் நூலும், ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த தாவோக்ஷுவான் என்பவரின் ‘பிரபல பௌத்த துறவிகளின் சரிதம்’ எனும் நூலும் தான் போதிதர்மரின் வரலாற்றை பதிந்த மூன்று முக்கிய சீன நூல்கள் எனலாம்.
இவ்வாறு பதியப்பட்டுள்ள சீன, ஜப்பானிய வரலாற்றாசிரியர்களின் பதிவிலும் பெருத்த முரண்பாடு காணப்படுகிறது. உதாரணத்துக்கு போதிதர்மர் தேநீர் பருகினார் என்கிற ஒரு சாதாரண நிகழ்வை பதிவு செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
‘போதிதர்மர் தேநீர் பருகுகிறார்’
‘அது இனிப்பானது’
‘இல்லை கசப்பானது’
‘அதன் நிறம் பச்சை’
‘அதன் நிறம் வெள்ளை’
‘அதன் நிறம் கருப்பு’
‘அதன் நிறம் சிவப்பு’
‘அது எங்கள் வீட்டு தேநீர். நான்தான் பரிசளித்தேன்’
‘போதிதர்மர் பருகும் தேநீர் அவருக்கு தேவலோகத்தில் இருந்து வருகிறது’
‘போதிதர்மர் போன பிறவியில் தேநீர் பயிரிடுபவராக இருந்தார். அதனால் தான் அவர் இந்த பிறவியில் தேநீராய் அருந்துகிறார்’
‘போதிதர்மர் கசப்பான தேநீரை அருந்துவதன் பின்னணியில் இருக்கும் தத்துவம், வாழ்க்கையின் கசப்பை ஏற்றுக்கொண்டால் தான் நம் வாழ்வு ஆரோக்கியமாகச் செல்லும்.’
இப்படித்தான் போதிதர்மர் பற்றிய நிகழ்வுகளை முரண்பாட்டு மூட்டையாகப் பதிந்துவைத்துள்ளனர் சீனர்கள். ஜப்பானியர்களோ இதற்கு ஒரு படி மேலே சென்றுவிடுகின்றனர்.
‘போதிதர்மர் குடித்த தேயிலையை இந்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து குடித்தால் சகல வல்லமையும் பெறுவாய். ஏனென்றால் அவர் அதனை ஒன்பதாண்டுகள் தவமிருந்து பெற்றார்’ என்று ஒரு சாதாரண நிகழ்வை புராணம் ஆக்கிவிடுகின்றனர்.
எது உண்மை; எது மிகை என்பது புரியாத புதிர்தான்.
‘தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத புனிதராகக் கருதப்பட்டு அதற்குத் தகுந்தபடி வரலாறு புனையப்பட்ட மனிதரின் துல்லியமான உண்மைச் சரிதத்தை எழுதுவது என்பது முற்றிலும் இயலாத காரியம். அதனால், போதிதர்மரின் வாழ்க்கையை மீட்டு எழுத முயற்சிக்கும் எவரும் முழுமையாக வெற்றி அடைவதே இல்லை.’ என்று புலம்புகிறார் பிரபல வரலாற்று ஆய்வாளர் John McRae.
அவரது கருத்துப்படி போதிதர்மரின் வரலாற்றை எழுதுவதென்பது இன்றைய, நேற்றைய ஆசிரியர்களின் தலைவலி அல்ல. பல நூற்றாண்டு காலமாக தொன்றுதொட்டு நிலவிவரும் சங்கடம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மரின் சீடரான தான்லின் காலத்திலேயே நிலவிய தலைவலி இது.
இப்படி இருக்கையில், போதிதர்மர் இன்ன இடத்தில்தான் பிறந்தார், இன்னாருக்கு மகனாக, இன்ன குலத்தில், இன்ன தேதியில் என்று அவர் பற்றிய செய்திகளை திட்டவட்டமாக வரையரை செய்வது இயலாத காரியம்.
(தொடரும்)
போதிதர்மர் / அத்தியாயம் 2
ஐந்தாம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு, எட்டாம் நுற்றாண்டு என்று பல்வேறு நூற்றாண்டுகளில் போதிதர்மர் வாழ்ந்தார் என்பதற்கான பதிவுகள் சரித்திரத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. ஒரு மனிதன் ஐந்நூறு ஆண்டுகளா வாழ்வான்? ஆகையால், அவர் வாழ்ந்த நூற்றாண்டு ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டு என்பது ஜான் மிக் ரே போன்ற வரலாற்றாசிரியர்களின் கருத்து. எப்படி ஆறாம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள்?
அதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவாக்கிக்கொள்ளவேண்டும். போதிதர்மர் சீனாவுக்கு எதற்குச் சென்றார்? தமிழர் தற்காப்புக் கலையையும் மருத்துவக் கலையையும் சீனாவில் பரப்புவதற்கா? சத்தியமாக இல்லை. அசோக சக்கரவர்த்தியின் மகளும் மகனும் போலவே, போதிதர்மரும் பௌத்தம் பரப்புவதற்காகவும், பௌத்த மதம் சம்பந்தப்பட்ட பிற பணிகளுக்காகவுமே சென்றிருக்கிறார்.
தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டு வாக்கில் பௌத்தமும் சமணமும் படரத்தொடங்கியது என்று பார்த்தோம் அல்லவா! அதன் பிறகு, பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் இடையே சொற்போர், விவாதம் என ஆரம்பித்த சண்டை சமயப் போர் ஆனது. சொற்போரில் சமணர்களிடம் தோற்ற பௌத்தர்கள் அவமரியாதை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இதுமட்டும் இந்தியாவில் பௌத்தம் அழிந்ததற்கான காரணம் இல்லை. பௌத்த மதத்துக்குள் உண்டான பிளவுகளும்கூட அதற்கு காரணம். அதுதான் முதன்மைக் காரணமும் கூட. மஹாயானம், தேராவாதம், வஜ்ராயானம் என்று கிட்டத்தட்ட ஆறு பிரிவுகள் பௌத்த சமயத்துக்குள் அன்றே இருந்தனவாம். இதனால் புத்தர் கண்ட பௌத்த கொள்கைகள் திரியத் தொடங்கின.
இது போக, புத்த பிக்குகளால் செல்வ போகத்தைத் துறக்க இயலவில்லை. தான, தர்மம் செய்யப்பட்ட பொருள்களே மடங்களை நிரப்பும் அளவுக்கு இருந்தது. அந்த செல்வத்தின் காரணமாக மடங்களுக்குள் பூசல்கள் ஏற்பட்டன. இந்த உட்கட்சிப் பூசல் மன்னர்களையும் மக்களையும் விரக்தி கொள்ளவைத்து புறக்கணிப்புக்கு காரணமாக அமைந்தது.
இவ்வாறு பௌத்த அஸ்திவாரம் சமணத்தாலும் மடங்களின் உட்கட்சிப் பூசலாலும் ஆட்டம் கண்டது. புத்த மடங்கள், புத்த குகைகள் சமண மயமாக்கப்பட்டன. புத்த பிக்குகள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனாலும் புத்த மதம் தமிழகத்தில் இன்றிருப்பதைப் போல் முழுமையாக துடைத்து எறியப்படவில்லை.
பக்தி இயக்கம் வடநாட்டில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த வேளை அது. தமிழகத்திலும் அதன் அதிர்வலைகள் வீசத் தொடங்கியிருந்தன. சமணர்கள் விளைவித்தவை அவர்கள் அடிமடியிலேயே இடியென வந்து விழுந்தன. பிற்பகுதி பல்லவர்களும், அதன் பின் வந்த சோழர்களும் இந்துமதக் கோட்பாடுகளை ஏற்றனர். பௌத்த, சமண சித்தாந்தங்கள் பலவற்றை உள்வாங்கிக்கொண்டு இந்து மதம் வளர்ந்தது. மக்களிடம் மிகுந்த வரவேற்பும் பெற்றது.
இப்படியாக, பௌத்தர்களிடம் பிடுங்கிய இடங்களுடன் சேர்த்து தங்கள் இடங்களையும் இந்து மதத்திடம் இழந்தனர் சமணர்கள். இந்து மதத்தை ஏற்காத சமணர்கள் கழுவிலேற்றப்பட்டனர். இன்னும் பல விதங்களில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்நிகழ்வுகளை கலைநயத்துடன் விவரிக்கும் செய்யுள்களையும் கோவில் சிற்பங்களையும் சுவர் ஓவியங்களையும் இன்றும் காணலாம். இதன் விளைவால் தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த புத்த மதமும் பிறரை இம்சிக்காமல் சமணத்தை அணைத்துக்கொண்டு சாந்தத்துடன் மரணத்தை தழுவியது. இப்படியாக, பௌத்தம் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் அழியத் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
இந்த நிலையில் போதிதர்மர் நிச்சயமாக ஆறாம் நூற்றாண்டுக்கு மேல் பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிறந்திருந்தால் அவர் பௌத்த மதத்தை பின்பற்றியிருக்க முடியாது. மேற்கண்ட காரணங்களுடன் இன்னும் சில காரணங்களை வைத்துத்தான் போதிதர்மர் ஐந்தாம் நூற்றாண்டில் பிறந்து ஆறாம் நூற்றாண்டு வரைக்கும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நவீன சரித்திர ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
அடுத்து வருவது, போதிதர்மரின் பெயர். போதிதர்மரின் இயர் பெயர் என்ன?
போதிதாராவா? தெரியவில்லை. போதிதர்மரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் இளம்வயதில் போதிதாரா என அழைக்கப்பட்டார் எனும் குறிப்புகள் மட்டும் தான்லின் (Tánlín) என்பவரின் நூலில் உள்ளன. அதேவேளையில், போதிதர்மரின் ஆசிரியரின் பெயர் ப்ரஜ்னதாரா. ஒருவேளை அவர் ஆசிரியரின் பெயரில் இருந்து போதிதாரா என்ற பெயர் வந்திருக்கக் கூடும் என்னும் வாதமும் உண்டு.
மேலும் போதிதர்மரின் தோற்றம் குறித்து இன்னும் பல கருத்துகள் நிலவுகின்றன. அவர் பாரசீக நாட்டைச் சார்ந்தவர் என்றும், தென் இந்தியாவின் பிராமணகுல மன்னனின் புதல்வர் என்றும் அவரது சமகாலத்தில் வாழ்ந்த சீன சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த முரண்பாடுகளில் இருந்து இன்றைய சரித்திர ஆசிரியர்கள் ஓர் உண்மையை நிறுவுகின்றனர். ‘போதிதர்மர் பல்லவரே’, என்று!
எப்படி? மூவேந்தர்களின் வரலாற்றைப்போல் பல்லவர்களின் வரலாறு எளிமையானதல்ல. மிக மிகச் சிக்கலானது. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் இன்று சரித்திர வல்லுனர்கள் பல்லவர் தமிழர் இல்லை எனும் முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால், பல்லவர் எங்கிருந்து வந்தனர் என்ற குழப்பம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.
வேங்கி நாடு, ஈழம், பாரசீகம், கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கிடையிலான வேங்கி நாட்டில் வாழ்ந்த தெலுங்கு பேசும் பிராமண குடிகளே பல்லவர் என்பது ஒரு கருத்து.
சோழ மன்னனுக்கும் ஈழத்தீவில் வாழ்ந்த நாகர் இனப்பெண் ஒருவருக்கும் பிறந்த வம்சம் பல்லவர்களுடையது. தற்போது, ஈழத்தில் உள்ள மணித்தீவே (மணிபல்லவத் தீவு, நயினா தீவு, நாகத்தீவு போன்றவை இத்தீவின் பிற பெயர்கள்) பல்லவர்களின் பூர்வீகம். ஆகவே அவர்கள் தமிழ் மரபினர் என்றும் ஒரு சிலர் நம்புகின்றனர்.
இது எதுவுமே உண்மை இல்லை. பல்லவர்கள் பாரசீக ‘பஹல்வர்’ மரபினர். நாடோடிகளாகத் திரிந்த அவர்கள் பாரசீகத்திலும், வடஇந்தியாவிலும் வலுவான அரசுகள் செயல்பட்டதால் தென் இந்தியாவுக்குள் புகுந்தனர். பஹல்வரின் எரிதழல் சின்னத்தை பல்லவர்கள் தங்கள் சின்னமாகக் கொண்டிருந்தததையும் பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்ததையும் இதற்குத் தக்க சான்றாய் காண்பிக்கிறார்கள். இவை போக இவர்களிடத்தில் இன்னும் பல சான்றுகள் வேறு உள்ளனவாம்.
பல்லவர் தோற்றம் குறித்த நிலையற்ற தன்மை போதிதர்மரின் தோற்றதிலும் எதிரொலிப்பதை உணரலாம். வேற்றுமையில் ஒரு விசித்திர ஒற்றுமை இது. இதனை வைத்துக்கொண்டு தான் போதிதர்மர் பல்லவரே என்று கற்பூரம் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிறார் பிரபல வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி பிராடன்.
போதிதர்மர் பல்லவர்தான் என்பதை நிரூபிப்பதற்கு மற்றொரு சான்றும் உள்ளது. போதிதர்மர் காலத்திய சீன ஆசிரியர்கள், போதிதர்மர் காங்சீ (Kang-Chi) எனும் ஊரைச் சார்ந்தவர் என்று குறிபிட்டுள்ளனர். இந்தப் பெயர் காஞ்சி என்பதன் சீன திரிபுபோல் தென்படுவதைக் காணலாம்.
மொத்தத்தில் போதிதர்மர் காஞ்சிபுரத்தில் ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் அரசாண்ட பல்லவ மன்னனின் மூன்றாம் மகன். இதுவே கம்பே (Tsutomu Kambe), ஸ்வெலிபில் (Zvelebil), டுமோலின் (Dumoulin), மெக் ரே (McRae) ஆகிய பெரும்பான்மை ஆசிரியர்கள் ஒப்புக்கொள்ளும் போதிதர்மர் பற்றிய பொதுவான ஒற்றை வரி அறிமுகம்.
இவை அனைத்துக்கும் சிகரமாக பிரபல கிறிஸ்தவ இறையியல்வாதியான ஹென்ரிச் டுமோலின் (Heinrich Dumoulin, S.J) போன்ற தற்கால ஆய்வாளர்கள் ஒரே வரியில் போதிதர்மர் எனும் நபரே கற்பனை என கூறிவருகின்றனர். ஆனால், இவர்களது கருத்து கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவாக இருப்பதைப்போல் தெரிவதால், இவர்கள் கூறுவனவற்றை நம்ப யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.
இவை தவிர போதிதர்மரின் தெளிவான இளம்பருவ வரலாறு என்று எதுவும் கிடைக்கவே இல்லை. ஆனால் எவ்வாறு அவருடைய வாழ்க்கையின் பிற்பகுதிக்கேற்ப அவர் இளம்பருவத்தைச் சிலர் கட்டமைத்தார்கள் என்பதை சில ஆசிரியர்களின் குறிப்புகளின் மூலம் அரிய வருகிறோம்.
இளவரசனாக இருந்த போதிதர்மர் தனது இளம்பருவத்தை பௌத்த மதத்தை கற்றுக்கொள்வதில் செலவழித்திருக்கிறார். பௌத்தத்தின்மீது ஈர்ப்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக முற்றி துறவறம் வரை அதுவே அவரை இட்டுச் சென்றுள்ளது என்பதை மட்டும் இங்கு தெளிவாகக் கூறலாம். எப்படி அவருக்கு பௌத்தத்தில் ஈர்ப்பு வந்தது என்பது தெரியவில்லை. ஆனால் ஏன் துறவறம் மேற்கொண்டார் என்பதற்கு வெவ்வேறு வகையான கருத்துகள் உள்ளன. அதற்கு முன் பௌத்த மதம் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
(தொடரும்)
http://www.tamilpaper.net/?p=6262
பௌத்தத்தில் கடவுள் உண்டா?
போதி தர்மர் / அத்தியாயம் 3
போதிதர்மர் தனது பிற்கால வாழ்க்கையை பௌத்தத்துக்கே அர்ப்பணித்தவர் என்பதால் நாம் அதைப் பற்றி அறிந்துகொள்வதும் கொஞ்சம் அவசியமாகிறது. ஒரு மதத்தை அறிய அதன் கடவுள் கோட்பாட்டை முதலில் அறிய வேண்டும். ஏனென்றால் மதங்கள் அனைத்தும் கடவுளில் இருந்துதான் தங்கள் கொள்கைகளை விரிக்கின்றன. ‘புத்த மதத்தில் யார் கடவுள்? கௌதம புத்தரா? இல்லை வேறு யாருமா?’
அதர்மம் மலிந்திருக்கும்போது, அறத்தை நிலைநாட்ட ஒரு விழிப்படைந்த மனிதர் அவ்வப்போது வரலாற்றில் தோன்றுவது வழக்கம். அவ்வாறு தோன்றுபவர் தன் சமூகத்தாரை நேர்வழியில் கொண்டு செல்வார். புத்தர் அவர்களில் ஒருவர். கௌதமருக்கு முன்னும் பின்னும் பல்வேறு நாடுகளில் பல்வேறு சமூகத்தில் பல புத்தர்கள் தோன்றியுள்ளனர். கௌதமருக்கு பின் ‘மைத்ரேயர்’ எனும் புத்தர் தோன்றுவார் என்றும் அவர் தன் சமூகத்தினரை மட்டுமின்றி உலகமக்கள் அனைவரையும் செம்மைப்படுத்தி உலகத்துக்கே ஒரு வரமாவார் என்றும் புத்தர் முன்னறிவிப்பு செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுவே புத்த மதத்தின் புத்தர்கள் பற்றிய நம்பிக்கை. அப்படியென்றால் கடவுள்?
எதா எதாஹி தர்மஸ்ய கிலானிர் பவதி பாரத; அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ர்ஜான்ம் அஹம் (பொருள்: பாரத நாட்டில் எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ; அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் (கிருஷ்ணன்) அவதரிப்பேன்.
மேற்படி பகவத் கீதை உபதேசத்தை எடுத்துக்கொண்டு ஹிந்துக்கள் இன்று புத்தரை கிருஷ்ணரின் அவதாரமாகக் கொண்டாடுகின்றனர். புத்தரைக் கடவுளாக பாவிக்கின்றனர்.
பௌத்த மதத்தில், புத்தர் கடவுளின் அவதாரம் எனும் கருத்துக்கு மட்டுமல்ல புத்தர் கடவுள் எனும் கருத்துக்கே இடமில்லை. புத்தர் கடவுளுமில்லை, கடவுளின் அவதாரமும் இல்லை. ஜஸ்ட் நம்மைப்போல் ஒரு மனிதர் அவ்வளவே. நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வேறுபாடு. நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம்; அவர் விழிப்படைந்துவிட்டார். அவ்வளவே. விழிப்படைந்தால் நாமும் புத்தரே.
அப்படியானால் புத்த மதத்தில் கடவுள் நம்பிக்கை இல்லையா?
புத்தர் ஒருபோதும் கடவுளைப் பற்றி நேரடியாக விவாதித்ததில்லை. தன் சீடர்களுடனும் அதுபற்றிக் கலந்துகொண்டதாகக் குறிப்புமில்லை. இறைவன் இருக்கிறார் என்றும் அவர் கூறியதில்லை. இல்லை என்றும் சொன்னதில்லை. கடவுள் விஷயத்தில் புத்தர் நடுநிலைமை காத்துள்ளார் என்பது மட்டும் புலனாகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு தெரியவருவது என்னவென்றால் ‘புத்த மதம் கடவுள் விமரிசனமற்ற மதம்’ . ‘இருந்தால் நல்லா இருக்கும்’ என்று கூறும் அக்னாஸ்டிக் வகையறா.
ஓஷோ ரஜ்னீஷ் போன்ற பல பௌத்தர்கள் மறைமுகமாகக் கடவுளை ஏற்றுக்கொண்டாலும் சிலர் இல்லவே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்கள். ஆக, இன்றுவரை புத்தமதத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்கிற கேள்விக்கு தெளிவான பதில் மட்டும் இல்லை.
சித்தார்தர் புத்தராகி விழிப்பு நிலை அடைந்த பிறகு (புத்தர் என்பதற்கு ‘விழிப்படைந்தவர்’ என்று பொருள்.) தேடலின் முடிவில் தான் கண்டடைந்த உண்மைகளை ஒரு சூத்திர வடிவில் அறிவித்தார்.
1. இது இருந்தால் அதுவும் இருக்கும்.
2. இதனுடைய எழுச்சியினால் அதுவும் எழும்.
3. இது இல்லை என்றால் அதுவும் இல்லை.
4. எனவே, இதை நிறுத்தினால் அதுவும் தானாக நின்றுவிடும்.
அது எது? இது எது?
இது=ஆசை; அது=துன்பம்.
புத்தர் சொல்ல வருவது என்னவென்றால்,
1. துன்பம் இருக்கும் இடத்தில் ஆசையும் இருக்கும்.
2. ஏனென்றால் துன்பம் எழக் காரணம் ஆசை.
3. ஆகவே, ஆசை இல்லையேல் துன்பம் இல்லை.
4. எனவே, ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பமும் நின்றுவிடும்.
இவையே புத்தர் கண்ட நான்கு பேருண்மைகள்.
இவற்றை அடைய புத்தர் ஒரு நிபந்தனையும் முன்வைக்கிறார். நிபந்தனை என்னவென்றால், இவற்றை அடைய ஒருவர் ‘உலகம் ஒரு மாயை’ என்று முதலில் உணர்ந்திருக்க வேண்டுமாம்.
ஆம், நேற்றிருந்தது இன்றில்லை. இன்றிருப்பது நாளை இல்லை. எனவே இந்த மாய உலக வாழ்வில் வெற்றி பெறுவது ஒரு மனிதனின் பிறவி நோக்கம் அன்று என்று மொழிந்தார் புத்தர்.
ஆசைப்படுவதை அடக்கி ஒழுக்க நெறியில் செல்ல, தனது தொண்டர்களுக்கு சில வழிமுறைகளையும் நெறிமுறைகளையும் வகுத்தளித்தார் புத்தர்.
ஆசைப்படுவதை நிறுத்த அவர் மூன்று வழிகளைப் போதித்தார். இதனை எட்டு மடிவழிகள் என்றும் கூறுவர்
1. ஒழுக்கம்
2. ஞானம்
3. தியானம்
ஒழுக்கம்
நன்மொழி: உண்மை, பிறர் மனம் புண்படாதபடி பேசுதல், தேவையற்ற வீண்பேச்சைத் தவிர்த்தல், மௌனம் காத்தல்.
நற்செய்கை: செய்கையால் பிறரை புண்படுத்தாதிருத்தல், அஹிம்சையான செயல்களை மட்டும் செய்தல்.
நல்வாழ்க்கை: பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யா வாழ்க்கை. (அஹிம்சை)
ஞானம்
நற்காட்சி: காணும் காட்சியை அது தோன்றும் விதத்தை வைத்து அணுகாமல், அதனுடைய உண்மை நிலையை மதிப்பிடுவது.
நல்லெண்ணம்: வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட எண்ணுவது, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யா எண்ணம், பிறர் நலம் விரும்புவது.
தியானம்
நன்முயற்சி: தன்னை செம்மைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளல்.
நற்கடைப்பிடி: உலகின் மெய்ஞானத்தை முன்னுணர்ந்த விழிப்பு நிலையைக் கடைப்பிடித்தல்.
நல்லமைதி: அமைதியை நிலைநாட்ட தியானம் மேற்கொள்ளல்.
இவையே எட்டு நல்வழிகள் எனப்படும்.
இவையே புத்த மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் என்று கூறினாலும் இதனுள் வராத, புத்தரால் போதிக்கப்பட்ட பல அறநெறிகளும் ஒழுக்கநெறிகளும் உள்ளன. புத்தரின் அத்தகைய உபதேசங்களை அவர் மறைந்து சில மாதங்களுப்பின் புத்த பிக்குகள் தொகுத்து ‘திரிபிடகம்’ என்று வழங்கினர்.
திரிபிடகம் மூன்று நூல்களை உள்ளடக்கியது. ஒழுக்கத்தை போதிக்கும், ‘விநயபிடகம்’, அறநெறியைப் போதிக்கும், ‘தம்மபிடகம்’, மனத்தில் உருவேற்ற வல்ல ‘சூத்திரபிடகம்’.
திரிபிடகம் பாலி மொழி நூலாகும். புத்தர் தனது போதனைகளை பாலி மொழியிலேயே நிகழ்த்தினார். புதிய வழக்கங்களை, சடங்குகளை புத்த மதத்தில் புகுத்தும் வேலை புத்தர் மறைந்து சுமார் நூறு ஆண்டுகள் கழித்து சில பிக்குகளால் மேற்கொள்ளப்பட்டது. ஏனென்று கேட்டால் ‘பழையன கழிந்து புதியன புகுந்தால் மட்டுமே புத்தமதம் தழைக்கும்’ என்றனர். இதற்காக ‘வைசாலி’ நகரத்துக்கு அருகில் எட்டு மாதம் தங்கி பிக்குகள் ஆலோசித்தனர்.
முடிவாக, ‘புத்த மதத்தில் புதுமைகளைப் புகுத்துவதற்கு இடமில்லை’ என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இவர்களை எதிர்த்து புதுமையை விரும்பி வெளியேறியவர்களே இன்றைய மஹாயான அதாவது, ‘பெருஞ்சுழற் பௌத்தர்கள்’ (அவர்களாகவே வைத்துக்கொண்ட பெயர் இது).
இந்தப் புதுமை விரும்பிகள், ‘புதுமை மதத்தை பாழ்படுத்தி விடும்’ என்றவர்களை ஹினயான அதாவது சிறுஞ்சுழற் பௌத்தர்கள் என்றழைத்தனர்.
இதனை எதிர்த்து தங்களுக்கு தேரவாத (மூத்தோர் வழி) பௌத்தர்கள் என்று பெயர் சூடிக்கொண்டார்கள் மூத்தவர்கள்.
தேராவதத்துக்கும் மஹாயானத்துக்கும் வித்தியாசங்கள் அநேகமிருந்தாலும் மஹாயானம் இல்லையென்றால் பௌத்தம் இவ்வளவு தூரம் பரவி இராது; அதேபோல, தேராவதம் இல்லையென்றால் பௌத்தம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்காது என்பார்கள் பொது பௌத்தர்கள்.
புத்தர் புலால் உண்பதை தடை செய்ததைக்கூட அறியாமல் இருக்கும் இன்றைய சீனர்களை பார்த்தால் உங்களுக்கு மஹாயானம் நன்கு விளங்கும்.
போதிதர்மர் மஹாயானப் பிரிவைச் சார்ந்தவர். இவர் மஹாயான பௌத்த பிரிவின் வலது பக்கம் புகுந்து இடதுபுறம் புதிதாக ஜென் (தியான) புத்த மதத்துடன் வெளியேறியவர். இந்த பௌத்தம்தான் அவரை துறவு மேற்கொள்ள வைத்தது. சீனா செல்லத் தூண்டியது. ஜென்னைத் தோற்றுவிக்க உதவியது.
இனி தொடர்ந்து போதிதர்மர் வரலாற்றைப் பார்ப்போம். போதி தர்மர், பிறந்தார் வளர்ந்தார். தன் அரச பதவியை உதறித் துறவியானார். ப்ரஜ்னதாராவின் சீடரானார். சீனா சென்றார். இது தான் போதிதர்மரது முற்பாதி வரலாறு.
முதலில் வளர்ப்பிலிருந்து தொடங்குவோம். போதிதர்மர் ஒரு இளவரசர். ஆகையால் அவர் மற்ற அரச பரம்பரை குழந்தைகளைப் போல்தான் வளர்க்கப்பட்டிருப்பார். அதாவது வாள்வீச்சு, குதிரையேற்றம், மருத்துவம், தற்காப்புக்கலை, ராஜதந்திரம் என ஆயகலைகள் அனைத்தும் கற்றுக்கொடுக்கப்பட்டுதான் வளர்க்கப்பட்டிருப்பார். மதம் சார்ந்த கல்வி என்பது ஊறுகாயாயைப் போலத்தான் இருந்திருக்கும். தவிர அவரது கல்வி முறையும் கண்டிப்பாக அவருக்கு அரசாட்சியின்மீதும் அதிகாரத்தின்மீதும் ஆர்வம் வளர்க்கும்படியாகத்தான் அமைந்திருக்கும். அப்படி இருக்கும்போது எப்படி பௌதத்தின் மீது அவருக்கு துறவு மேற்கொள்ளும் அளவுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தன் வாழ்நாளின் பிற்பகுதி முழுவதையும் பௌத்தத்துக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி அவருள் எழுந்தது? அவரது துறவு முடிவுக்குப் பின்னால் வேறுசில நிகழ்வுகளும் நடந்திருக்கலாம் அல்லவா?
போதிதர்மரின் துறவறம் பற்றி படிக்கும் எவரது மனதிலும் இந்தக் கேள்விகள் பிறப்பது இயற்கை.
போதிதர்மர் ஏன் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்?
பௌத்த மதத்தை அறிய அறிய போதிமர்தருக்கு பௌதத்தின் மீதும் புத்தரின் மீதும் காதல் அதிகமாகிவிட்டது. அதனால் தான் துறவறம் மேற்கொண்டார். அவர் திடீரென்று மனம் மாறும் அளவிற்கு எந்த நிகழ்வும் நடக்கவில்லை. இது ஒரு சாரரின் கருத்து.
போதிதர்மருக்கு அவரைவிட வயதில் மூத்த இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தன் இரு சகோதரர்களைக் காட்டிலும் திறமை வாய்ந்தவர். எனவே சகோதரர்கள் இருவரும் பயந்தனர். போதிதர்மர் தங்கள் இருவரையும் வீழ்த்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வாரோ என்று கலங்கி போதிதர்மரைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர்.
(தொடரும்)
போதிதர்மர் / அத்தியாயம் 4
வீரத்திலும் சரி, அறிவாற்றலிலும் சரி போதி தர்மர் தனது மூத்த சகோதரர்கள் இருவரையும்விட திறமைசாலி என்பது உண்மைதான். ஆனாலும் சகோதரர்கள் பயந்ததுபோல அவர்களை வீழ்த்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்கிற ஆசையெல்லாம் அவருக்கு இருந்ததில்லை.
சகோதரர்களின் மேற்படி பயத்தைப் பற்றி அறிந்துகொண்ட போதிதர்மர், அவர்கள் தன்னையே கொல்ல நினைக்கும் அளவுக்கு மாறிப்போனதை நினைத்து மனம் வருந்தினார். ஆசையானது தன் சகோதரர்களை கொலைகாரர்களாக ஆக்கும் ஆற்றல் படைத்தது எனக் கண்டுகொண்டார். சொந்தம், பந்தம் அனைத்தும் ஆசைக்கு முன் மண்டியிட்டுக் கிடக்கும் மாயைகளே என்பதை உணர்ந்தார். இத்தனைநாள் தான் அனுபவித்த துன்பத்துக்கும் மன உளைச்சலுக்கும்கூடக் காரணம் ஆசையே என்பதை இனம் கண்டுகொண்டார். தன்னிடத்தில் ஆசை இருப்பதாலேயே துன்பம் இருக்கின்றது; ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பப்படுவதும் நின்றுவிடும். உலகத்தின் மீது ஆசைப்படுவதை நிறுத்த உலகையே துறக்க வேண்டும் என்று உணர்ந்த போதி தர்மர், அவ்வாறே துறப்பதற்கும் தயாரானார். அடுத்த கணம் கொஞ்சமும் யோசிக்காமல், கௌதமர் சென்ற பாதையிலேயே தானும் நடக்கத் தொடங்கிவிட்டார்.
போதிதர்மர் ஏன் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார் என்பதற்கு ஒரு சாரார் சொல்லும் கருத்து இது. இதுதவிர இன்னொரு சாரரும் இருக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை, ‘போதிதர்மர் எதற்காக அரச வாழ்வை துறந்தார் என்பதற்கு வரலாற்றில் தெளிவான ஆதாரம் இல்லை’. மேற்கத்திய ஆசிரியர்கள் அனைவரும் இந்த ரகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் போதிதர்மர் எதற்காகத் துறவியானார் என்பதை அறிவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. சீனர்களும் ஜப்பானியர்களும்தான் போதிதர்மரின் துறவுக்குப் பின்னால் ஒரு பெரும் நிகழ்ச்சி இருப்பதாகக் கருதி, ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
சரி, எப்படியோ ஒருவழியாக துறவறம் மேற்கொண்ட போதிதர்மர், ப்ரஜ்னதாரா என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு புத்த பிக்குவானார்.
யார் இந்த ப்ரஜ்னதாரா?
ப்ரஜ்னதாரா காஞ்சியின் பௌத்த மடம் ஒன்றில் தங்கியிருந்த பிக்கு. சாக்கிய முனி கௌதம புத்தருக்கு முன்பிருந்த ஏழு புத்தர்கள் தொடங்கி பௌத்த மதத்தின் ஆன்மாவாகிய தியானத்தை வழிவழியாகச் சுமந்துவந்த பௌத்த சமய குருமார்களில் ப்ரஜ்னதாரா 27ஆம் தலைமுறை குரு ஆவார். இவரே போதிதாரா எனும் பெயரை போதிதர்மர் என மாற்றி தன் சீடனாக போதிதர்மரை சேர்த்துக் கொண்டவர். இதற்கு மேல் ப்ரஜ்னதாராவைப் பற்றி தகவல் ஏதும் இல்லை. அவர் ஆணா, பெண்ணா என்ற தகவல் கூட இல்லை!
ஓஷோ போன்ற சிலர் ப்ரஜ்னதாராவை பெண் என்றே கூறுகின்றனர். அதேநேரத்தில் சீனர்களும் மேற்கத்திய ஆசியர்களும் அவரை ஆண் என்று கூறுகின்றனர்.
இவ்வாறு போதிதர்மர் தன் அரச வாழ்வைத் துறந்து பௌத்த பிக்குவாகிறார். அரச வாழ்க்கை எப்படிப்பட்ட ராஜபோக வாழ்க்கை என நமக்கெல்லாம் தெரியும். ஆனால், பிக்கு வாழ்க்கை?
ஒரு சாமானியன் பிக்குவாகிவிட்டான் என்று இதனை ஒரே வரியில் சொல்லிவிடலாம். ஆனால், உண்மை அப்படியானதல்ல. ஒரு சாமானியன் இருபது வயதைக் கடந்து, உலகம் மாயை என்று உணர்ந்திருப்பதால் பிக்கு ஆகத் தகுதி மட்டுமே ஆகிறான். ஆனால் அவன் முழுமையான பிக்குவாகத் தொடர, நிர்வாணம் அடைய இத்தகுதிகள் போதாது. அசாதாரணமான பிக்கு வாழ்வில் 227க்கும் மேற்பட்ட விதிகள் உண்டு. இதுவே பிக்குணி (பெண் பௌத்த துறவிகள்) என்றால் 311. அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ஏதாவது ஒரு விதியில் பிசகினால்கூட அவன் பிக்கு எனும் அந்தஸ்தை இழந்துவிடுவான். இப்படி ஒருமுறை தவறினால் போதும் அவனால் மீண்டும் பிக்குவாகவே முடியாது.
உண்ணல், உடுத்தல், பருகல், உறங்கல், தும்மல், இருமல், பார்த்தல், கேட்டல், படித்தல், பழகுதல் என பிக்கு வாழ்க்கையின் அனைத்து நிகழ்’தல்’களும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு திட்டமான வரையறை உண்டு. கொலை கூடாது, பொய் கூடாது, திருட்டு கூடாது, உடலுறவு கூடாது என நாம் அறிந்த கட்டுப்பாடுகளுடன் மேலும் தலை சுற்றும் அளவுக்குக் கூடாதுகள் உள்ளன.
வழக்கமாக பிக்குகள் கூட்டம் கூட்டமாக மடங்களிலும் குகைகளிலும்தான் வசிப்பர். இந்த பிக்குகளின் கூட்டத்துக்கு ‘சங்கம்’ என்று பெயர். மேலும், இந்த பிக்கு இன்ன முறையில்தான் தவம் செய்யவேண்டும், இன்ன முறையில்தான் மற்றவர்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்று பிக்குகளின் அகவாழ்வையும் புறவாழ்வையும் நிர்வகிப்பது இச்சங்கமே.
பொதுவாக பிக்குகள் தினமும் ஒரு வேளை மட்டுமே உண்பர். அதுவும் பிச்சையெடுத்து. உண்மையில், பிக்கு என்பதற்கு பாலிமொழியில் பிச்சைக்காரன், யாசகன் என்பதுதான் நேரடிப் பொருள். ‘புத்தம் சரணம் கச்சாமி. சங்கம் சரணம் கச்சாமி’ எனும் மந்திரத்தை மெல்லிய குரலில் ஓதிக்கொண்டே தெரு நெடுகப் போவர். கண்ணில் படும் ஏதாவதொரு வீட்டின் முன் நின்று இருமுறை மட்டும் ‘புத்தம் சரணம்’ ஓதுவர். அதற்குள் அந்த வீட்டைச் சார்ந்தவர் உணவளித்தால் ஏற்றுக்கொள்ளுவர். இல்லை என்றால் அங்கிருந்து நகர்ந்து விடுவர்.
இப்படி பிச்சையெடுக்கும் உணவை பிக்குகள் தரையில் அமர்ந்துதான் உண்ணவேண்டும். ஒரே வீட்டில் தினசரி பிச்சை எடுக்கக்கூடாது. ஏழைகளிடம் பிச்சை கேட்கக்கூடாது. பிக்குகளின் திருவோடு ஒரே அளவில்தான் இருக்கவேண்டும். திருவோட்டின் முக்கால்வாசி பகுதிக்கு மேல் உணவை யாசித்து நிரப்பக் கூடாது. ஒரு பருக்கையைக்கூட வீணடிக்கக்கூடாது. யாசிக்கச் செல்லும்போதும், திரும்பும்போதும் யாசிக்கும்போதும் பாதையையும் திருவோட்டையும் தவிர வேறு திசைகளில் பார்வையை ஓடவிடுவது கூடாது. அவனுக்கு என்ன உணவு கிடைத்துள்ளது என பக்கத்து பிக்குவின் திருவோட்டை எட்டிப்பார்க்கக்கூடாது.
பொது மக்கள் வாழும் பகுதிகளில் பலமாகச் சிரிப்பதோ சத்தம் போடுவதோ கூடாது. யாசித்து வாங்கிய உணவை அழகிய முறையில் சாப்பிட வேண்டும். சூரியன் உதிக்கும் முன்பும், அஸ்தமனத்துக்குப் பின்பும் உண்ணக் கூடாது. சங்கத்தின் அனுமதியின்றி குடில்கூட கட்டக் கூடாது. மாற்று ஆடைகள் வைத்திருக்கக் கூடாது. துறவாடையை இயற்கை பொருள்களால் தவிர வேறு பொருள்களைக் கொண்டு சாயம் போடக்கூடாது. துறவறத்துக்கு அத்தியாவசியமான பொருள்களைத் தவிர பிற பொருள்களை நாற்பத்தெட்டு மணிநேரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.
ஆறு மாதத்துக்குக் குறைவாக பயன்படுத்திய போர்வைகளை (பெரும்பாலும் சணல் சாக்குகள்தான் பிக்குகளுக்குப் போர்வைகளாகப் பயன்படும்) மாற்றக்கூடாது. தீ மூட்டக் கூடாது. பிற பிக்குகளை பயமுறுத்தக் கூடாது, கிண்டலடிக்கக் கூடாது. நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது. கட்டாந்தரை தவிர வேறு படுக்கை கூடாது. அறிமுகமில்லா பிக்குணிகளிடம் பேசக்கூடாது. இது போல் இன்னும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் நிறைந்தது பிக்குகளின் சங்கம்.
சங்கத்தில் இணையும் இளம் பிக்குகள் இவ்விதிமுறைகளை மூத்த பிக்குகளின் நடைமுறையிலிருந்து அறிந்துகொள்வர். அடிக்கடி திரிபிடகம் ஓதுவதாலும், பிற பௌத்த நூல்களை வாசிப்பதாலும் இவ்விதிமுறைகள் பிக்குகளின் மனத்தில் உருவேறிவிடுகின்றன. மேலும், மாதத்துக்கு நான்கு அல்லது ஆறு முறை, உபசத்தா எனும் நாள், தேராவாத மற்றும் மஹாயான பிக்குகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில், ‘நான் ஒழுங்கான துறவாடையை அணிவேன்; நான் ஒழுங்கான மேலங்கியை அணிவேன், மக்கள் வசிக்கும் பகுதிகளுள் நுழையும் முன் என் அங்கிகளை ஒழுங்குபடுத்திக் கொள்வேன்; முழு கவனத்துடன் நான் யாசித்து உணவை வாங்கிக்கொள்வேன்’ எனத் தொடங்கும் நீண்ட நெடிய உறுதிமொழிகள் அடங்கிய சூத்திரம் ஒன்றை பிக்குகள் அனைவரும் சேர்ந்து ஜெபிப்பர். தாங்கள் தியானத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வர். நிர்வாணத்தை அடைய தாங்கள் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என வரையறுத்துக் கொள்வர்.
ஒரு நாளின் முக்கால்வாசி பொழுதை தியானத்திலும் மெய்யறிவதிலேயே செலவு செய்வர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானம்தான். அனைத்திலும் கவனம் வேண்டும். மன ஒருமைப்பாடு வேண்டும். அதற்காகத்தான் இத்தனை விதிமுறைகள், கட்டுப்பாடுகள்.
உடலுக்குப் பயிற்சி அளிப்பது போல் மனத்துக்கு அளிக்கப்படும் பயிற்சி. நாம் சொல்வதை மனம் கேட்டால் நிர்வாணம் அதாவது பிரபஞ்ச விழிப்படைவது எளிது. இதுதான் பௌத்த பிக்குகளின் வாழ்க்கை உணர்த்தும் நீதி. இவ்வாறாக, பிக்குகள் தங்கள் மனத்தைப் பயன்படுத்தி தொடர் தேடலில் ஈடுபட்டு தங்கள் நிலைகளை உயர்த்திக்கொள்வர்.
அவரவர் தியான நிலைக்கேற்றாற்போல் விதவிதமான பணிகள் ஒதுக்கப்படும். தம்மத்தை (பௌத்தத்தை) மக்களுக்குக் கொண்டுசெல்ல சிலர் ஊர் ஊராக அனுப்பி வைக்கப்படுவர். சிலர் மற்ற புத்த பிக்குகளுக்கு ஆசிரியராக, கண்காணிப்பாளாராக நியமிக்கப்படுவர். வேறு சிலர் மடத்து வேலைகளைக் கவனிப்பர்.
பிரபஞ்ச விழிப்படைய போதிதர்மரும் இப்படிப்பட்ட விதிமுறைகள் அனைத்தையும் கடக்க வேண்டியிருந்தது. இவ்விதிகள் அவருள் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வளர்த்திருப்பதை அவரது பின்னாளைய வாழ்க்கை படம் பிடித்துக் காட்டுகின்றது. இளவரசனாக இருந்தாலும், பௌத்த வழியில் நிர்வாண நிலையை அடைய தன் மனத்தைத் தயார்படுத்தத் தொடங்கினார். குரு ப்ரஜ்னதாராவும் போதிதர்மரைச் சரியான திசை நோக்கி நகர்த்திச் சென்றார்.
பல வருட மெய்ஞ்ஞானப் பயணத்தின் பலனாக போதிதர்மர் பிறருக்கு பௌத்த தம்மத்தை போதிக்கும் ‘போதி நிலைக்கு’ உயர்ந்தார். அதே சமயம் அவரது சகோதரர்களோ பல்லவ நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து குடும்பம், குழந்தைகளுடன் சுகபோக வாழ்க்கை நடத்தினர்.
போதிதர்மர் வகுத்துக்கொண்ட வழியில் தொடர்ந்து முன்னேறினார். ப்ரஜ்னதாராவுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் போதிதர்மரை சீனாவுக்கு அனுப்பக்கூடாது?
(தொடரும்)
போதிதர்மர் / அத்தியாயம் 5
போதிதர்மரை தனது வாரிசாக அறிவித்த ப்ரஜ்னதாரா அவரை சீனாவுக்கு அனுப்பி வைக்க ஆசைப்பட்டார். அதன் காரணமாகவே ப்ரஜ்னதாரா இறந்த பிறகு போதி தர்மர் குருவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சீனா சென்றார். உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க, ப்ரஜ்னதாரா ஏன் குறிப்பாக சீனாவுக்கு அனுப்ப முடிவெடுத்தார்? அதற்குக் காரணம் ஒருவர்.
கி.மு. 260. மேற்கில் இரான், ஆப்கானிஸ்தான் போன்ற தேசங்களையும், கிழக்கில் வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளையும், வடக்கில் பூடான், நேபாளம் போன்ற இமாலய நிலங்களையும், தெற்கே தமிழகம் தவிர்த்த பிரதேசங்களையும் உள்ளடக்கிய மாபெரும் ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டவன். தன் பதவியை நிலைநாட்ட போர் தொடுக்கத் தயங்காதவன். அரியணையைக் கைப்பற்ற உடன்பிறந்த அண்ணன்களையே காவு வாங்கியவன். தன் மீதுள்ள விசுவாசத்தை நிரூபிக்க தன் கீழ் இருந்த ஊழியர்களின் உயிரைக் பிடுங்கியவன். தன்னை எதிர்க்க நினைத்தவனை விரைந்து அழித்தவன். மொத்தத்தில் கொலை வெறிபிடித்தவன். செங்கிஸ்கானுடனும் ஹிட்லருடனும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டியவனை மஹா அலெக்ஸாண்டருடனும் அக்பருடனும் சேர்த்தது வைத்த நிகழ்வு, கலிங்கப் போர். அவன் என்று குறிப்பிடப்படவேண்டியவன் மரியாதைக்குரியவராக மாறியதற்குக் காரணம் இந்த இறுதிப் போர். அவர், சாம்ராட் அசோக கக்கரவர்த்தி.
திரும்பும் இடம் எங்கும் ஓலக்குரல். கண்ணுக்கெட்டிய தூரம்வரை குருதி வெள்ளம். தீப் பற்றி எரியும் கட்டடங்கள். செத்து மடிந்து கிடக்கும் யானைகள், குதிரைகள், மனிதர்கள். இறந்த போர்வீரர்களைச் சுற்றி நின்று கதறும் உறவுகள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை பலி வாங்கிக்கொண்டு அசோகருக்கு வாகை சூட்டியது கலிங்கத்துப் போர்க்களம்.
பார்ப்போர் மனதை பதைபதைக்கச் செய்யும் இக்காட்சிகளுக்கிடையே மன்னன் அசோகன் அமர்ந்திருந்தான். வல்லூறுகளும் பிணவாடையும் வெற்றி முழக்கங்களும் எதிரொலித்த சூழலில் அவனிடம் ஒரே ஒரு சிந்தனை! ‘வெற்றி யாருக்கு? எனக்கா இல்லை காலனுக்கா? வெற்றி எனக்குத்தான் என்றால் இத்தனை உயிர்களை இழந்தது எப்படி வெற்றியாகும்? ஒரு சாராரின் கண்ணீரும் ரத்தமும்தான் மற்றொரு சாரரின் வெற்றியைத் தீர்மானிக்கிறதா? ஒருவன் மடிந்தால் தான் மற்றொருவன் தழைக்க முடியுமா?’
இது போன்ற கேள்விகள் அசோகனைச் சல்லடையாகத் துளைத்தெடுத்தன. ‘மனத்தில் ஏன் இந்த அமைதியற்ற நிலை? இத்தனை பெரிய வெற்றி பெற்றும் துளியும் சந்தோஷமில்லையே. குற்ற உணர்வு பாடாகப் படுத்துகிறதே. இதையெல்லாம் அறிந்துதான் நம் பாட்டனார் சந்திரகுப்த மௌரியர் சமணராக துறவு மேற்கொண்டாரா?’
அப்போதுதான் ஞானோதயம் பிறந்தது. ‘ஆம், உலகை வெல்லத் தேவை அமைதி, போர் அல்ல!’ தெளிவடைந்தார் அசோக மாமன்னர். அமைதி வேண்டி புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார் அசோகர். பௌத்தத்துக்கு ஆற்றும் முதல் தொண்டாக புத்த பிக்குக்கள் சங்கத்தைக் கூட்டினார். வாய் மொழியில் இருந்த புத்த நூல்கள் அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டன. காலம் காலமாக மனப்பாடம் செய்து வைக்கப்பட்டிருந்த கருத்துகள் ஏட்டில் பொறிக்கப்பட்டன. பின்னர், மக்களிடத்தில் புத்தரின் கருத்துகளைக் கொண்டு செல்லும் பொருட்டு உலகின் நாலாப்புறமும் புத்தபிக்குகளை அனுப்பி வைத்தார். தவிர தனது மகன் மஹிந்தரையும், மகள் சங்கமித்திரையையும்கூட பௌத்தமதத் தொண்டுக்கு அர்ப்பணித்தார். இவ்வாறு தென்திசை நோக்கி வந்த மஹிந்தராலேயே தமிழ் நாட்டுக்கு பௌத்தம் அறிமுகமானது. பெரும்பான்மை வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்து இது.
ஆனால், இலங்கை புத்த மத நூலான மஹாவம்சம், மஹிந்தர் தமிழகத்தின் வழியாக அல்லாமல் இலங்கைக்கு நேரடியாக பறக்கும் தட்டில் பறந்து வந்ததாகக் கூறுகிறது. இலங்கைக்கு அவர் தமிழகம் வழியே மட்டுமே செல்ல வாய்ப்புண்டு என்பது சிந்திக்க தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனாலும் மகாவம்சம் இப்படிச் சொல்வதற்குக் காரணம் அக்காலத்தில் தமிழ் மன்னர்களுடன் சிங்களவர்கள் கொண்டிருந்த பகைமையின் விளைவாகக்கூட இருக்கலாம்.
இப்படியாக அசோகர் மூலமாக உலகெங்கும் அனுப்பிவைக்கப்பட்ட ஏராளமான புத்தத் துறவிகளுள் ஒருவரான மசிம் ஸ்தவீரா (Massim Sthavira) என்ற பிக்கு மூலமாகத்தான் பௌத்த மதம் சீனத்தை சென்றடைந்தது என்பது மேற்கத்திய ஆசிரியர்களின் கருத்து. அதே நேரம், சீன ஆசிரியர்களின் கருத்துபடி Fayuan Zhulin என்பவர்தான் சீனாவுக்கு பௌத்தத்தை எடுத்து வந்தார். இங்கு நமக்குத் தேவை பௌத்தம் அசோகர் காலத்திலேயே சீனாவுக்கு கடத்தப்பட்டு விட்டது என்பதே.
இப்படியாக, பௌத்தம் சீனத்துக்கு போய்ச் சேரும் முன்பே சீனாவில் கன்ஃபூஷியசின் தத்துவமும் மூதாதையர் வழிபாட்டு முறையும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. அன்றிருந்த நிலையில் பௌத்தம் உடனடியாக சீனர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சைவத்துக்கும் அசைவத்துக்கும் வேறுபாடு தெரியாத சீனர்களுக்கு பௌத்தம் சொல்லும் புலால் உண்ணாமை என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடவுளை வணங்குபவர்களிடம் கடவுள் விமரிசனமற்ற பௌத்தம் தடுமாறியது. இதனால் அவர்களுக்கு ஏற்றாற்போல் தன்னை தகவமைத்துக்கொண்டு பல காலம் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை பௌத்தத்துக்கு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் கடந்தன. கி.பி முதல் நூற்றாண்டில் ஹான் வம்சத்து மன்னன் மிங் ஆட்சிக்கு வந்தான். ஒரு நாள் மிங்கின் கனவில் ஒரு மனிதர் தோன்றி பிரகாசித்தார். முகம் சந்திரனைக் காட்டிலும் பல மடங்கு ஜொலித்தது. மிங்கின் அரண்மனையின் முன் நின்று அவனைப் பார்த்து புன்னகை சிந்தினார். விடிந்தவுடன், அரசன் தனது சபையோரிடம் தான் கண்ட கனவைக் கூறி அதற்கான விளக்கம் கேட்க, அமைச்சர்களும் ஜோதிடர்களும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். ‘அவர் இந்தியாவைச் சார்ந்த கௌதம புத்தராகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் தான் தற்போதைக்கு மிகவும் விழிப்படைந்தவராக பேசப்படுகிறார்’ என்று அரசனிடம் பதிலளித்தனர். விரைவில் இதுபற்றி இந்திய பௌத்த பிக்குகளுக்கு தகவல் பறந்தது.
இறுதியில், தன்னையும் தனது மக்களையும் பௌத்தத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லியே புத்தர் தன் கனவில் வந்தார் என்கிற முடிவுக்கு வந்த மன்னன் மிங் பௌத்தத்தை ஏற்றான்.
சீனாவில் பௌத்த மதத்தின் பொற்காலம் தொடங்கியது. மிகத் துரிதமாக மக்களைச் சென்றடையவும் ஆரம்பித்தது. சீனாவுக்கேற்றாற் போல் பௌத்தத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. அதற்கு தேராவாதம் அசைந்து கொடுக்காவிட்டாலும் மஹாயானம் தலையசைத்தது. மடமடவென புத்த விஹாரங்கள் எழுப்பப்பட்டன. பாளி மொழியிலிருந்து பௌத்த சமய நூல்களை சீன மொழிக்கு மொழிபெயர்க்க இந்திய பிக்குகள் இறக்குமதி செய்யப்பட்டனர். சீன, இந்திய பிக்குகளின் கைவண்ணத்தில் எழுந்த நூல்கள் சீன காகித்தில் எழுதி பத்திரப்படுத்தப்பட்டன.
புதிதாக பௌத்தத்தை ஏற்ற சீனா எப்படி இருக்கிறது என்று காண சீனாவுக்கு இந்திய பிக்குகள் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருவதும், பௌத்தத்தை பிரதானமாகக்கொண்ட இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு சீன மாணவர்கள் வந்து பாடம் கற்றுச் செல்வதும் இயல்பாயின. அன்றிலிருந்து இந்தியாவிலிருந்து சீனாவுக்கும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கும் பௌத்த பிக்குகளும் மாணவர்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.
அப்படி இந்தியாவுக்கு வருகை புரிந்த சீன மாணவர்களுக்கு எடுத்துக்காட்டு யுவாங் சுவாங் என்ற பௌத்த மாணவர். கி.பி. 600 வாக்கில் சீனாவிலிருந்து புத்தர் பிறந்த இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார் யுவான் சுவாங். இவரது குறிப்புகளின்படி தஞ்சையிலும் மதுரையிலும் காஞ்சிபுரத்திலும் அசோகர் கட்டிய பல புத்த மடங்கள் இருந்தனவாம். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அசோகர் காலத்து ஸ்தூபிகளும் காணப்பட்டனவாம். மேலும், மஹிந்தர் தங்கியிருந்தாகக் கூறப்பட்ட மடம் இவர் பார்க்கும்பொழுது சிதிலமடைந்த நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
அதேபோல், இந்தியாவில் இருந்து சீனா சென்ற பிக்குகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் நம் போதிதர்மர். தொடக்கத்தில் சீனாவில் பௌத்தம் பரவியபோது, சீனர்கள் பெயரளவிலேயே பௌத்தர்களாக இருந்தனர். சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவர்கள் வாழ்கையை ஆக்கிரமித்திருந்தன. புனித நூல்களைப் பட்டு இழைகொண்டு எழுதி தங்கப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அதற்கு தினமும் பூப்போட்டு வணங்கினர். வருடத்தில் என்றாவது ஒருநாள் அதனை வெளியில் எடுத்து தூசு தட்டி வாசித்துவிட்டு அதனால் தங்களுக்கு நன்மை கிட்டும் எனும் மயக்கத்தில் இருந்தனர்.
புத்தரின் சிலை, வீட்டுக்கு வீடு கடவுள் சிலை போல் இருந்தது. புத்தர் சொல்லித்தராத வகையில் அந்த சிலையை புத்தராக எண்ணி தினமும் போற்றிப் பிராத்தனை செய்து வந்தனர்.
ஆனால், புத்தமதச் சடங்குகளையும் புனித நூல்களையும் போற்றிய அளவுக்கு புத்தரின் தேடலை அவர்கள் போற்றவில்லை. தியானத்தை மேலோட்டமாக புரிந்துகொண்டிருந்தனர். அது மகான்களுக்கான வேலை என முடிவுகட்டினர். தங்களுக்கு தியானம் அவசியமில்லை எனக் கருதினர்.
மொத்தத்தில், புத்த மதத்தின் உடலை மட்டும் தரிசித்து வந்த சீனர்களுக்கு அதன் உயிர் எனக் கருதப்பட்ட தியானத்தைக் கடத்திச் செல்ல அப்போதைக்கு ஆளில்லை. இந்தக் குறை சீனாவில் இருந்த பிக்குகளுக்கும் இந்தியாவில் இருந்த பிக்குகளுக்கும் பெருங்கவலை அளித்தது. இந்த நிலையில்தான் ப்ரஜ்னதாராவின் கண்களில் சிக்கினார் போதிதர்மர். சீனர்களுக்கு பௌதத்தின் உயிரான தியானத்தை, தேடலை, மெய்யறிதலை கொண்டுசேர்க்க சரியான நபர் போதிதர்மர்தான் எனும் முடிவுக்கு வந்தார். போதிதர்மரும் எந்த மறுப்பும் சொல்லாமல் புறப்பட்டார்.
ஆக, போதிதர்மர் சீனா சென்றது பௌதத்தின் ஆன்மாவாகிய தியானத்தை சீனர்கள் மத்தியில் ஏற்றி வைக்கத்தானே தவிர, தமிழர் தற்காப்புக் கலையையும் மருத்துவத்தையும் பரப்புவதற்கு அல்ல. போதி தர்மர் ஒரு தமிழனாகச் சென்றார் என்று கூறுவதைவிட பௌத்தனாக அங்கு சென்றார் என்பதே பொருத்தம். அதைவிட பௌத்தத்தின் 28ஆம் சமயத் தலைவராக சென்றார் என்பது மிக மிகப் பொருத்தமானது.
போதிதர்மர் எப்படி, எந்த வழியில் சீனா சென்றார் என்பது பல முடிச்சுகளைக் கொண்ட ஒரு கேள்வி.
புத்தர் : ஒரு சிந்தனையாளரின் கதை
போதிதர்மர் வாழ்கிறார்புரட்சி / அத்தியாயம் 6
மதம் தொடர்பான சமூகவியல் துறையின் தந்தை என்று கருதப்படும் மாக்ஸ் வெபர் பௌத்தத்தை கீழ்வருமாறு மதிப்பிடுகிறார். ‘பௌத்தத்தை ஒரு சமூக இயக்கம் என்று சொல்லமுடியாது. அரசியல்ரீதியாகவோ சமூகரீதியாகவோ பௌத்தத்துக்கு எந்தவித லட்சியங்களும் இல்லை. … வேற்றுலகைச் சேர்ந்த ஒரு மதம் என்றுதான் பௌத்தத்தை அழைக்கமுடியும்.’
மார்க்சிய வரலாற்றாசிரியரான டி.டி. கோசாம்பி இந்த வாதத்தை மறுக்கிறார். ‘மாக்ஸ் வெபர் போன்றவர்கள் பௌத்த மூலநூல்களை ஆழ்ந்து கற்கவில்லை என்பது தெரிகிறது. ஆரம்ப கால பௌத்தம் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட பொருளாதார, அரசியல் தத்துவங்களை உள்ளடக்கியிருந்தது’ என்கிறார் கோசாம்பி. பௌத்தம் என்பது துறவிகளுக்கான மதம், அதைச் சாமானியர்கள் புரிந்துகொள்ளமுடியாது என்னும் வாதத்தையும் கோசாம்பி மறுக்கிறார். புத்தர் ஒரு தலைசிறந்த அரசியல் முற்போக்காளர் என்கிறார் சி.எஃப். கொப்பென். பௌத்தத்தில் கடவுள் என்பது இல்லை என்பதால் அனைத்து மதங்களையும் கடுமையாக விமரிசித்த கார்ல் மார்க்ஸ் பௌத்தத்தை மட்டும் தொடாமல் விட்டுவிட்டார் என்று சுட்டிக்காட்டுகிறார் ட்ரெவார் லிங்.
பௌத்தம் என்பது ஒரு சமூகத் தேவையை ஒட்டி மலர்ந்த கொள்கை என்கிறார் எம்.என். ராய். இதைப் பற்றி மேலதிகம் பார்ப்பதற்கு முன்னால் புத்தர் வாழ்ந்த காலகட்டம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. புத்தர் யாரை எதிர்த்து அல்லது யாரை ஆதரித்து தன் கொள்கைகளை வடிவமைத்துக்கொண்டார் என்பதை முதலில் நாம் புரிந்துகொண்டாகவேண்டும். தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் அறிமுகம் இது. ‘அக்காலத்தில் வடகிழக்கு இந்தியாவில் கொடிய அடக்குமுறை காணப்பட்டது. குறிப்பாக மகதம், கோசலம் ஆகிய நாடுகளில் பழங்குடி சமுதாயம் அழிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் பேராசை, வெறித்தனமான காம இச்சை, கீழ்த்தரமான பேராசை, பொதுச் சொத்துகளைச் சூறையாடுதல், வரிப்பளு, ஊதாரித்தனம், அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்றவை மக்களின் வாழ்க்கையில் சொல்லொணாத் துயரைத் தோற்றுவித்தன… மல்லர்கள், வஜ்ஜிகள், சாக்கியர்கள் போன்றோர் இன்னமும் பழங்குடியினரின் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். புத்தர் சாக்கிய மரபைச் சேர்ந்தவர். அவர் தனது பழங்குடிப் பெருமையை எப்போதும் மறக்கவில்லை.’
புத்தர் தன்னை ஒரு பழங்குடியினராகவே அடையாளம் கண்டார் என்பதையும் தனது மரபின்மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது என்பதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். சுதந்தரம், சமத்துவம் போன்ற கொள்கைகள்மீது பற்றுள்ளவர்களாக பழங்குடிகள் இருந்தனர். ஆனால் அந்தக் கொள்கைகள் ஆளும் அரசுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாயின. நிலத்துக்கான தேவைகள் பெருகியபோது இன்று நடப்பதைப் போலவே அன்றும் பழங்குடிகள்மீது அரசு போர் தொடுத்தது. தேவிபிரசாத் தொடர்கிறார். ‘அரசை விரிவுபடுத்த வனத்தை அழிப்பதைப் போலப் பரந்துபட்ட அளவிலிருந்த பழங்குடிகளை அழித்தனர். அரசுகள் பழங்குடியினரை அடிமைப்படுத்தவும், அழிக்கவும் முற்பட்டன. புத்தர் காலத்தில் வாழ்ந்த கோசல மன்னன் விதூதபன் சாக்கியர்களைக் கொடூரமாகக் கொன்று குவிந்தான். புத்தருடைய உறவினர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இதே கதிக்கு ஆளாயினர். ’
வாழும் மக்களை விரட்டியடித்து நிலத்தை ஆக்கிரமிக்கும் அரசாங்கத்தின் பேராசை புத்தரை உலுக்கியெடுத்திருக்கவேண்டும். பேராசை கொண்டவர்களை அந்த ஆசையே அழித்தொழிக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ‘ஒரு மன்னன் உலகிலுள்ள ராஜ்ஜியங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டாலும், கடலுக்கு அப்பாலுள்ள நிலத்தையும் அபகரிக்கவேண்டுமென்ற ஆசை அவனுக்கு வரும்.’ என்றார் புத்தர்.
புதிய வரிகள், அடிமைத்தனம், அச்சுறுத்திப் பணம் பறித்தல், அடமானம் வைத்தல், வட்டி, ஊதாரித்தனம் போன்ற பழக்கங்கள் அப்போது நிலவிவந்தன என்பது புத்த ஜாதகக் கதைகள்மூலம் தெரியவருகின்றன. ‘புத்தரே இவை அனைத்தையும் கண்டார். ஆனால் என்ன செய்யமுடியும்? அவரால் கடவுளை நம்பமுடியவில்லை. தன்னைச் சுற்றிக் காணப்படும் துன்பங்களுக்குப் பிரார்த்தனைகளும் யக்ஞங்களும் எவ்வித பலனையும் அளிக்காது என்று புத்தர் கருதினார்.’ என்கிறார் தேவிபிரசாத். தம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை நேரடியாகக் கண்டு அவற்றின் தன்மைகளைப் புரிந்துகொண்டு வினையாற்றுவதே புத்தரின் அணுகுமுறையாக இருந்தது. பிரச்னைகள் யதார்த்தமானவை. நம் கண்முன் நிகழ்பவை. அவற்றுக்கு அசாதாரணமான வழிகளில் தீர்வு கண்டுவிடமுடியாது என்று புத்தர் நினைத்தார். ‘புத்தர் முன்வைத்த கடவுள் மறுப்பு அல்லது நாத்திகவாத கருத்துகளை அஸ்வகோஷர் எடுத்துச் சொல்கிறார். துறவறம் பூண்டு உடலை வருத்திக்கொள்வது வேதனையைத் தரும், தேவையற்றது, பலனளிக்காதது என்கிறார் புத்தர். உபநிஷத்தையும் மோட்ச நம்பிக்கைகளையும் புத்தர் புறம் தள்ளினார்.’
அந்த வகையில், புத்தர் ஒரு யதார்த்தவாதியாகவும் பகுத்தறிவுவாதியாகவும் திகழ்ந்தார். தன்னால் நேரடியாகக் கண்டு, கேட்டு, உணர முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே அவர் எதிர்வினை புரிந்தார். பிரபஞ்சப் பொருள்களின் தோற்றம் குறித்த தத்துவார்த்த ஆய்வுகளையும் இறப்புக்குப் பிறகான காலகட்டம் குறித்தும் கவலைப்படுவது தேவையற்றது என்றார் புத்தர். தனது உடலில் பாய்ந்திருக்கும் அம்பு எங்கிருந்து வந்தது என்றோ அதை யார் செய்தது என்றோ ஆராய்ந்து கொண்டிருப்பது மடத்தனம். உடனே அதனைப் பிடுங்கி எறிய வேண்டியதுதான் புத்திசாலித்தனம் என்றார் புத்தர். வாழ்க்கைக்குத் தொடர்பற்ற தத்துவார்த்த கேள்விகள் கேட்கப்பட்டபோது புத்தர் மௌனம் சாதித்தார். அவரைப் பாதித்த அம்சம் ஒன்றுதான். எங்கு நோக்கிலும் துன்பங்கள் காணப்படுவது ஏன்?
உலகிலுள்ள பிரச்னைகள் மெய்யானவை என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. இதற்கு தீர்வு என்ன? ‘வரலாற்றுரீதியான வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டி மனித உற்பத்திச் சக்தியைப் பிரம்மாண்டமான அளவுக்குப் பெருக்கி, அனைவருக்கும் அனைத்தையும் அளிக்கவேண்டும். இதுதான் தீர்வு. ஆனால் உற்பத்திச் சக்தி பெருகி, அதன் காரணமாக சுரண்டலும் அதிகரித்து, துயரம் தாங்கொணா நிலைமைக்கு வளர்ந்ததுதான் புத்தர்காலச் சூழல்.’
சுரண்டலை ஒழித்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும் என்னும் புரட்சிகரமானத் தீர்வை புத்தர் முன்வைக்கவில்லை. அவர் சற்றே அடக்கத்துடன் தனிநபர் சிந்தனை சார்ந்து ஒரு யோசனையை முன்வைத்தார். ‘உள்ளத்தில் உருவாகும் போதைகளான ஆசைகளை அடக்கவேண்டும்.’ ஏன் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவில்லை என்னும் கார்ல் மார்க்ஸின் புரட்சிகரமான கேள்வியை புத்தரால் எழுப்பமுடியாமல் போனதற்காக அவரைக் குற்றம் சொல்லமுடியாது.
புத்தர் உலகைத் தார்மிகரீதியில் மாற்றியமைக்க விரும்பினார். நம்பிக்கை, உறுதி, நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற மதிப்புகளை மீட்டெடுக்க விரும்பினார். தன் காலத்தில் இத்தகைய மதிப்புகள் காலில் போட்டு மிதிக்கப்படுவதை அவர் கண்டார். அடிப்படை ஒழுக்கம் இல்லாத, பகுத்தறிவு தொலைத்த ஒரு சமூகத்தை அவர் வெறுத்தார். அதே சமயம் சமூக மாற்றங்களை உடனடியாகக் கொண்டுவருவதில் உள்ள சிரமங்களையும் அவர் அறிந்திருந்தார். ஒரே நாளில் அனைத்தையும் புரட்டிப்போட்டுவிடமுடியும் என்று அவர் நம்பவில்லை. தீமைகள் நிறைந்த சமூகத்தில் இருந்து வெளியேறி சங்கங்களில் மக்கள் வாழவேண்டும் என்று புத்தர் கட்டளையிட்டார்.
இந்தச் சங்கங்கள் எந்த வகையில் சமூகத்தில் இருந்து மாறுபட்டிருந்தன? ஏன் அங்கே மக்கள் வாழவேண்டும் என்று புத்தர் விரும்பினார்? தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா பதிலளிக்கிறார். ‘பிட்சுக்கள் வாழும் சங்கங்களில் நிலைமைகள் வேறாக இருந்தன. அது பழங்குடியினரின் கூட்டு வாழ்க்கை போல் இருந்தது. அந்தச் சங்கங்களில் தனிச்சொத்து இல்லை. முழு அளவில் சமத்துவமும், ஜனநாயகமும் நிலவின. இவற்றில் பழங்காலச் சமுதாயத்தின் பெருமையைக் கொண்டுவரமுடியும் என்றார் புத்தர். இச்சங்கங்கள் வர்க்க சமுதாயத்துக்குள் வர்க்கமற்ற சமுதாயமாக, இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைõயின் ஆன்மாவாகவும் இருந்தன.’
முதலாளித்துவச் சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் சாத்தியமில்லை, எனவே நமக்கான சமூகத்தை நாமே கட்டியமைத்துக்கொள்ளலாம் என்றார் கார்ல் மார்க்ஸ். வர்க்கச் சுரண்டலை ஒழித்து, உற்பத்திக் கருவிகளைப் பொதுவில் ஆக்கி பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டவேண்டியதன் அவசியத்தை மார்க்சியம் பின்வரும் காலங்களில் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியது. புத்தர் தன் காலத்துச் சமூகச் சிக்கல்களுக்கு மாற்றாகச் சங்கங்களை சுட்டிக்காட்டினார். மார்க்ஸைப் போலவே புத்தர் தனிச்சொத்துரிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பௌத்த சங்கங்களில் தனிச்சொத்துரிமை மறுக்கப்பட்டது.
தனிச்சொத்துரிமையை புத்தர் ஏன் தீவிரமாக எதிர்த்தார் என்பதை பௌத்தக் கோட்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட ஸ்ட்செர்பார்ஸ்கி (Stcherbatsky விளக்குகிறார். ‘தனிநபர் ஒருவர் எங்கு உள்ளாரோ அங்கு அவருக்குச் சொத்து உள்ளது. எங்கு நான் இருக்கிறேனோ அங்கு என்னுடையதும் இருக்கிறது. எங்குத் தனிச்சொத்து இருக்கிறதோ, அங்கு அதன்மீது ஏதோ ஒரு வடிவில் கட்டாயம் பாசம் வரும். தனிச்சொத்தின் மீதான இந்த ஈடுபாடே அனைத்து தீமைகளுக்கும் மூலவேராகும். ஒவ்வொரு தனித்த செயல்பாடுகளுக்கும், சமூக அநீதிக்கும் மூலகாரணமாகும்… தனிநபர் இல்லாதபோது தனிநபர்ச் சொத்துரிமை எவ்வாறு இருக்கமுடியும்? எனவே தனிநபர்ச் சொத்துரிமையை, சாதாரண சொத்துகளை மட்டுமல்ல, குடும்பம், வீடு போன்றவற்றையும் என்றென்றைக்கும் யார் ஒருவர் கைவிடுகிறாரோ அவரே உண்மையான பௌத்தராக இருப்பார். உலக மதங்களின் வரலாற்றில் (கிறிஸ்தவம், இஸ்லாம் போன்றவற்றில்) சொத்துரிமை மறுப்பு மற்றும் அவற்றைக் கைவிட வலியுறுத்தும் கோட்பாடுகளை ஆங்காங்கே நாம் காணலாம். ஆனால், பௌத்தம் இப்பிரச்னையைத் தீவிரமாக அணுகியது.’
தனிச்சொத்துரிமை குறித்த புத்தரின் கருத்தாக்கத்தை நீட்டித்தால் புரட்சிகரமான தத்துவம் ஒன்றும் நமக்கும் கிடைக்கும். அதை தேவிபிரசாத் வார்த்தைகளில் கேட்போம். ‘மனிதனின் விடுதலைக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக வர்க்கச் சுரண்டலில் இருந்து விடுதலை பெற உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையை ஒழிப்பதுதான் அடிப்படையான முன் நிபந்தனை. எனவே, சமுதாயத்தின் வர்க்கக் கூட்டமைப்பைத் தூக்கியெறிவது ஒன்றே சரியான வழி.’ புத்தர் தனிச்சொத்துரிமையை நிராகரிக்க மட்டுமே சொல்கிறார். சொத்துரிமை கொண்டிருக்கும் சமூகத்தைத் தூக்கியெறிந்துவிடச் சொல்லவில்லை. இருந்தாலும், புத்தரின் அணுகுமுறை தனிச்சொத்துரிமையைக் கொண்டிருப்பதன் முட்டாள்தனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அந்த வகையில், அவர் காலத்தில் அது ஒரு புரட்சிகரமான கொள்கை. தேவிபிரசாத் தொடர்கிறார். ‘தனிச்சொத்துரிமையை ஒழிப்பது என்ற புத்தரின் கோரிக்கை சமுதாயத்தில் தனிப்பட்ட சில பகுதிகளில் மட்டும் உள்ளவற்றை ஒழிப்பதாகும். இது வரலாற்றுரீதியாகப் பக்குவமடையாத நிலை. தனிச்சொத்துடைமையை சமுதாயத்திலிருந்து அறவே ஒழிக்கக்கூடிய நிலைமை அங்கு வரவில்லை.’
செல்வம் எப்படிச் சேர்கிறது? போர்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் துன்மார்க்கத்தின்மூலம் என்கிறார் புத்தர். இந்த வழிகளில் மட்டுமே செல்வம் சேர்கிறது என்று இன்றைய தேதியில் கொள்ளமுடியாது என்றபோதும் பெரும்செல்வம் சேர்வதற்கு இவையே பிரதான வழிகள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இன்று உலகின் வளர்ந்த நாடுகள் எப்படி வளர்ச்சியடைந்தன என்பதையும் ஏழைமை நாடுகள் ஏன் அவ்வாறு இருக்கின்றன என்பதையும் வரலாற்று நோக்கில் ஆராய்ந்தால் இரண்டுக்கும் இடையிலான தொடர்பும் வேறுபாடும் புரியவரும். உதாரணத்துக்கு, ஆப்பிரிக்கா அடிமை நாடாகவும் பின்தங்கிய இருண்ட கண்டமாகவும் இருந்ததற்கு ஆப்பிரிக்கா மட்டுமேவா காரணம்?
இதைத் தொடர்ந்து புத்தர் வந்தடைந்த முடிவு புரட்சிகரமானது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் போலவே செல்வத்துக்கும் ஒரு முடிவு வரும். அனைத்தையும் போல் செல்வமும் மறைந்துவிடும். இதைத் தடுக்கமுடியாது. எனவே, நிலையற்ற இந்த செல்வத்தைத் தேடி வாழ்வை வீணாக்கவேண்டாம், சொத்துகளைக் குவித்துக்கொள்ளும் பொருட்டு போரிட்டுச் சாகவேண்டாம் என்றார் புத்தர். புத்தர் தனியுடைமையை நிராகரிப்பது என்பது ஆன்மாவையும் தனிப்பட்ட சொத்துரிமையையும் நிராகரிப்பது என்ற முடிவின் விளைவு என்கிறார் ஸ்ட்செர்பார்ஸ்கி.
குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலில் எங்கெல்ஸ் கீழ்வருமாறு எழுதுகிறார். ‘கேவலம் சொத்து தேடும் வாழ்க்கை மனித குலத்தின் இறுதியான தலைவிதி அல்ல. நாகரிகம் தொடங்கியதிலிருந்து கழிந்திருக்கிற காலம் இருக்கிறதே, அது சென்ற காலத்திலிருந்து மனிதன் வாழ்ந்திருந்த காலத்தில் ஒரு சிறு பகுதியே ஆகும். பின்னால் வரப்போகும் யுகங்களின் ஒரு சிறு பகுதியே ஆகும். சமுதாயத்தின் மறைவு என்பது சொத்தையே குறிக்கோளாகவும் இலக்காகவும் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையின் முடிவுதான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை சுயநாசத்துக்குரிய அம்சங்களைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறது.’
புத்தர் தன் காலச்சூழலுக்கு ஏற்றவாறு இதைச் சொன்னார். ‘சாதாரண சொத்து மனித குலத்தின் இறுதி லட்சியமாக இருக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட நிலைமையில் அது தோன்றுவதும் எதிர்காலத்தில் அது உதிர்வதும் தவிர்க்கவியலாதது.’
(அடுத்த பகுதி – புத்தர் : ஒரு போராளியின் கதை)
போதிதர்மர் / அத்தியாயம் 8
மன்னன் வே சினத்துடன் வெளியேற, புன்னகையுடன் போதிதர்மர் மேற்கு திசை நோக்கிப் புறப்பட்டார். யாங்ஸி நதியைக் கடந்து புத்த பிக்குகளுக்கு திருப்தியாகத் திகழ்ந்த லியோயாங் என்ற இடத்துக்குச் செல்வதுதான் அவரது நோக்கம்.
யாங்ஸி நதி தென் சீனாவையே செழிப்பாக வைத்திருக்க உதவும் பெரும் நதி. இன்றும் கூட அது அப்படித்தான்.
அந்த நதியைக் கடக்க பல படகுகள் இருந்தன. அப்படி ஒரு படகில் ஏற போதிதர்மர் காலடி எடுத்து வைத்தார். அதற்குள் அங்கிருந்தவர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இறுதியில், போதிதர்மர் அப்படகில் ஏறவில்லை என்று சொல்லப்படுகிறது.
மக்கள் பேசியதனைத்தும் போதிதர்மர் காதிலும் விழுந்தது. படகில் ஏறப்போனவர் படகிலிருந்து தன் காலை கீழிறக்கினார். நேராகச் சென்று அங்கிருந்த புல் ஒன்றை முறித்தார். புல் என்றால் நம்மூர் அருகம்புல் இல்லை. அது சீனப் புல். சோளத்தட்டை அளவில் இருக்கும். அதனை ஆற்றில் மிதக்கவிட்டார். பிறகு, அந்தப் புல்லின் உதவியுடன் யாங்ஸி ஆற்றை மின்னல் வேகத்தில் கடந்தார். படகில் இருந்தவர்கள் அனைவரும் அந்தக் காட்சியை வாய்பிளந்து பார்த்தனர்.
காம்பே போன்றவர்கள் உண்மையில் அது புல் இல்லை என்றும், புல் போல் ஒடுக்கமான படகு என்றும் கூறுகின்றனர். தான்லின் போன்ற சீன ஆசிரியர்கள் ‘புல் போன்ற படகைத்தான் ’புல் என உருவகப்படுத்திக் கூறியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
அதுநாள்வரை பைத்தியக்காரராகவும் முரடராகவும் சீனர்களால் கருதப்பட்ட போதிதர்மர், இந்த நிகழ்வுக்குப் பின்னர் மந்திரவாதியாகவும் சூனியக்காரராகவும் பார்க்கப்பட்டார். இப்படியாக, லியோயாங் சென்றடைந்த போதிதர்மர் அங்கும் அழையா விருந்தாளியாகவே பார்க்கப்பட்டார். இனவெறி அங்கும் தலைவிரித்தாடியது.
இதன்பிறகு, தீவிரமாக யோசித்த போதிதர்மர் அங்கிருந்து சாங் மலை வழியே ஹெனான் மாநிலத்தில் இருந்த ஷாவோலின் மடத்துக்குச் செல்ல முடிவு கட்டினார். ஏனென்றால் ஷாவோலினில்தான் இந்தியாவிலிருந்து சீனா செல்லும் புத்தபிக்குகள் பெரும்பாலும் தங்குவர். அதனால் அங்கு இனத்துவேஷம் இருக்காது என போதிதர்மர் எண்ணியிருக்கலாம்.
சுற்றிலும் மலைகள், அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ஷாவொலின் மடம் கம்பீரமாக அமைந்திருந்தது. போதிதர்மர் அதன் கதவுகளையும் தட்டினார். ஆனால் இவருக்கு முன்பாக இவரது புகழ் அங்கும் பரவியிருந்தது. குதர்க்கவாதியான அவரை உள்ளே விட்டால் மற்ற பிக்குகளின் தியானநிலை பாதிப்படையும் என்றும் கூறி போதிதர்மரை மடத்துக்கு உள்ளேவிட மறுத்துவிட்டனர்.
போதிதர்மர் எள்ளளவும் கலங்கவில்லை. ஷாவோலின் மடம் மலைப் பிரதேசத்தில் இருந்ததால் பல்வேறு மலைக் குகைகள் இருந்தன. அவர் கண்ணில் அங்கிருந்த குகையொன்று பட்டது. இறைவன் படைத்த இப்பரந்த உலகில் எனக்கா இடமில்லை எனக் கருதி அதே குகையில் தஞ்சமடைந்தார். உள்ளே சென்றவர் குகையின் ஒரு பக்கச் சுவற்றை வெறித்துப் பார்த்தவண்ணம் அமர்ந்தார்.
மகான்கள் வாழ்க்கையில் இதுபோன்ற தொடர் துன்பங்கள் என்பது இயல்பே. அத்துன்பத்திலும் அவர்கள் தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றனரா என்பதை இறைவன் சோதிப்பான் என்பர். சமணர் நெறியை விட்டொதுங்கிய புத்தரும், ரோமானியர்களால் துரத்தப்பட்ட ஏசுவும், விண் ஏற்றத்துக்கு முன் முஹம்மது நபியும், சார்புநிலைக் கோட்பாட்டை வெளிப்படுத்திய நிலையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும், கம்யூனிச சித்தாந்தத்தை முன்வைத்த நிலையில் கார்ல் மார்க்ஸும் இவ்வகையான தொடர் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால், இச்சோதனைகளின் இறுதியில் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ மகத்தான வெற்றிதான். போதிதர்மருக்கும் வெற்றி கிட்டியது. அதுவும் மாபெரும் வெற்றி.
குகைக்குள் சென்றமர்ந்த போதிதர்மர் அதன் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி, நாட்கள், வாரங்கள், மாதங்களாக இடத்தை விட்டு நகராமல் அங்குமிங்கும் அசையாமல் அப்படியே வீற்றிருந்தார்.
போதிதர்மரை மடத்துக்குள் வரவிடாமல் விரட்டிய தினத்தன்று பார்த்ததுதான்; அதன்பிறகு பிக்குகள் யாரும் அவரைப் பார்க்கவில்லை. மற்றபடி மக்களின் கண்களிலும் அவர் தென்படவில்லை என்பதால் சீனா முழுவதும் போதிதர்மர் இறந்துவிட்டதாகவும், இந்தியாவுக்கே திரும்பிவிட்டதாகவும், பித்துப் பிடித்து வடக்கு மாகாணங்களில் அலைவதாகவும் விதவிதமான வதந்திகள் பரவின.
ஷாவோலின் மடத்தில் பாலுக்காக சில ஆடுகள் வளர்க்கப்பட்டன. ஒருநாள் மடத்திலிருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஒரு மாணவன் கிளம்பினான். ஒவ்வொரு பகுதியாக மேய்ந்து கொண்டே வருகையில், தற்செயலாக அந்த ஆடுகள் போதிதர்மர் இருந்த குகை நோக்கி வந்தன. மாணவன் வெளியில் நின்றிருக்க ஒரு சில ஆடுகள் மட்டும் நீர் தேடி அந்தக் குகைக்குள் சென்றன. சில குகைகளுக்குள் சுனை இருப்பது வழக்கம். உள்ளே சென்ற ஆடுகள் மிரண்டு போய் வெளியே ஓடிவந்தன.
ஆடுகள் மிரளும் அளவுக்கு குகையினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய உள்ளே நுழைந்த மாணவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. உள்ளே சுவற்றை வெறித்த நிலையில் போதிதர்மர் அசைவின்றி அமர்ந்திருந்தார்.
மடத்துக்குச் சென்றபிறகும் போதிதர்மர் நினைவாகவே கிடந்த மாணவன் ஷாவோலினில் இருந்து கொஞ்சம் உணவும் நீரும் எடுத்துக்கொண்டு குகைக்குச்சென்றான். போதிதர்மர் முன் அதனை வைத்துவிட்டு சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் அசைவின்றி இருந்தார்.
ஷாவோலின் பிக்குகளிடம் இந்தச் செய்தியைச் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. மாணவன் எதையோ கண்டு மிரண்டுபோய் இருக்கிறான் என்றும் போதிதர்மர் இறந்துவிட்டிருப்பார் என்றும் சொன்னார்கள். ஆனாலும் மாணவன் விடாப்பிடியாகக் கூறியதால், சென்று பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று மாணவனுடன் புறப்பட்டு குகைக்குச் சென்றார்கள்.
அனைவரும் போதிதர்மரைப் பார்த்தார்கள். வியந்தார்கள். ஒரு மனிதன் இப்படி மாதக்கணக்கில், உணவு தண்ணீர் இல்லாமல் தவமிருக்க முடியுமா என்று எண்ணி அவர் மேல் மதிப்பு கொண்டார்கள். அன்றிலிருந்து ஷாவோலின் மடத்தில் வசித்த பிக்குக்கள் அவர் தவத்துக்கு இடையூறோ அபாயமோ ஏதும் நேராமல் காவல் புரிய ஆரம்பித்தனர்.
போதிதர்மர் குகையில் இருந்ததை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கும் வேறு பல கதைகளும் உண்டு. ஆனால், மேற்கூறிய இக்கதையைதான் ஷாவோலின் பிக்குகள் நம்புகின்றனர்.
‘போதிதர்மர் ஒரே இடத்தில் பல மாதங்களாக அசைவேதும் இன்றி தவம் கிடக்கிறார்’ என்ற செய்தி மளமளவெனப் பரவியது. பைத்தியக்காரர், சூனியக்காரர், முரடர் எனக் கூறி அவரை ஒதுக்கிய மக்களுக்கு அவர் ஊண், உறக்கம் இன்றி தவமிருப்பது அதிசயமாகத் தெரிந்தது. ஒரு பிக்குக்கு இது சாத்தியமான செயலா என்று எண்ணி வியப்பில் ஆழ்ந்தனர். அவர் புகழ் சீனதேசம் முழுவதும் வெகுவிரைவில் பரவியது.
இந்நிலையில் போதிதர்மரின் புகழ் பரவக் காரணமாக இருந்த ஒரு நிகழ்வு ஷாவோலினில் இன்றும் நினைவு கூரப்படுகிறது.
போதிதர்மர் இப்படி அசாத்தியத் தவமிருக்கும் செய்தி, அவரை விரட்டியடித்த ‘வே’ மன்னனையும் சென்றடைந்தது. அடடா இத்தகைய தவசீலரை நாம் அறியாமையால் தவறவிட்டு விட்டோமே என மனம் நொந்தான். எப்படியாவது போதிதர்மரை அரண்மனைக்குக் கவர்ந்து வந்துவிட வேண்டும் என எண்ணினான்.
அவரது தளபதி தன் சேனையை அழைத்துக்கொண்டு ஷாவோலின் வந்தான். போதிதர்மர் குகைக்கு காவலாக இருந்த பிக்குகளையும் மக்களையும் அங்கிருந்து விரட்டிவிட்டு, தன் படைகளுடன் உள்ளே புகுந்தான் . மக்களும் பிக்குகளும் என்ன நிகழப்போகிறதோ என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்த தளபதி தியானத்தில் அசையாதிருந்த போதிதர்மரை அழைத்துப் பார்த்தான், பதிலில்லை. தவத்தைக் கலைக்க எண்ணி அசைத்துப் பார்த்தான். முடியவில்லை. வேறுவழியில்லாமல் போதிதர்மரை குண்டுக்கட்டாகத் தூக்க முயற்சித்தான். போதிதர்மர் யானைக்கனம் கனத்தார். ஓர் அங்குலம்கூட அசைக்கமுடியவில்லை. பின்னர், குதிரையில் கயிற்றைக் கட்டி இழுத்துப் பார்த்தான். கயிறு அறுபட்டு குதிரைகளும் அவனும் விழுந்தனரே தவிர, போதிதர்மரை நகர்த்த முடியவில்லை. இன்னும் என்னென்னமோ செய்து பார்த்தான். எதுவும் பலன் அளித்ததாகத் தெரியவில்லை. தொங்கிய முகத்துடன் அரண்மனைக்கே திரும்பினான். அனைத்தையும் கேட்ட மன்னனுக்கு முகம் தொங்கிப்போனது.
இந்த நிகழ்வு சீனாவின் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டு போதிதர்மர் புகழை எங்கெங்கும் எதிரொலித்தது. போதிதர்மர் இருந்த ஷாவோலின் குகைப் பிரதேசம் சுற்றுலாத் தலம்போல் நிரம்பி வழிந்தது. பிக்குகளுக்கு விழி பிதுங்கியது. எப்பொழுதுதான் போதிதர்மர் எழுந்திருப்பார் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது.
இந்த நிகழ்வு போதிதர்மரை ஏதோ மாயாவி போல் காண்பிக்கிறது, இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நவீன வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், சீனர்கள் விடுவதாக இல்லை. பௌத்தத்தின் ‘சீ’ எனப்படும் சக்தியால் இது சாத்தியமே என்கின்றனர்.
காலம் அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. போதிதர்மர் அவர் போக்கில் அசைவின்றி அமர்ந்திருந்தார். குகைக்குள் புகுந்த போதிதர்மர், சுவற்றை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து ஓர் ஆண்டு இரு ஆண்டல்ல ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தன.
ஒன்பது ஆண்டுகள் போதிதர்மர் அசையாமல் அமர்ந்திருந்தார் என்பது சீனர்களின் கருத்து. ஆனால், இன்றைய நவீன வரலாற்று அறிஞர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இது சீனர்களின் கட்டுக்கதை என்கின்றனர். போதிதர்மர் அவ்வப்போது உணவுக்காகவும் பிற கடமைகளுக்காகவும் நிச்சயம் எழுந்திருக்கவேண்டும், ஒரே இடத்தில் ஒன்பது வருடம் அமர்வதெல்லாம் இயலாத காரியம் என்கின்றனர். ஆனால் சீனர்களின் போதிதர்ம புராணம் இப்படித்தான் என்கின்றது. சரி கதைக்கு வருவோம்.
இந்த நேரத்தில்தான் சீன கிராமம் ஒன்றில் வாழ்ந்து வந்த டாஸூ ஹூய்கீ (Dazu Huike) என்பவனுக்கு போதிதர்மர் பற்றித் தெரியவந்தது. சிறு வயதில் இருந்தே தானும் புத்தபிக்குவாகி விழிப்படைய வேண்டும் என்று அவனுக்கு ஆசையிருந்தது. ஆனால், அவன் ஏழையாகவும், தீண்டத்தகாதவனாகவும் இருந்ததால் அவனது ஆசை நிறைவேறவில்லை. பிக்குகளும் பௌத்தப் பள்ளிகளும் அவனை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது அவனுக்கு, ‘நாம் ஏன் போதிதர்மரிடம் சென்று சீடனாகக் கூடாது’ என்று யோசனை எழுந்தது. அதன்படியே புறப்பட்டான். அவன் கிளம்பும் பொழுதே சீனாவில் பனிக்காலமும் ஆரம்பமாகியிருந்தது.
சில மாதப் பயணத்துக்குப் பிறகு ஹூய்கீ ஷாவோலினில் போதிதர்மர் இருந்த குகையை அடைந்தான். அவனுக்கு முன்பே அங்கு பலர் தாங்களும் போதிதர்மரின் சீடனாக வேண்டும் எனும் ஆசையில் அலைமோதினர். அவர்களுடன் சேர்ந்து ஹூய்கீயும் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு போதிதர்மரிடம் வேண்டினான். மன்றாடினான். வழக்கம்போல் போதிதர்மரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. சுவற்றை வெறித்த நிலைதான். இதனால் கோபம்கொண்ட ஹூய்கீ போதிதர்மர் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்வரை அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை எனும் சூளுரையுடன் அக்குகை வாசலிலேயே அமர்ந்தான்.
சீனத்தில் வடதுருவப் பனி அதிகமாக வீசும் காலமும் தொடங்கியது. இந்த வட துருவப்பனி ஆர்டிக்கிலிருந்து ரஷ்யா, சைபீரியா ஊடாக சீனத்தை வந்தடையும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் அங்கே பனி கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டத் தொடங்கிவிடும்.
குகை வாசலிலேயே காத்திருந்த ஹூய்கீ அவ்வாறு வீசிய பனியில் விரைத்துக் கட்டையானான். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் ஷாவோலின் மடத்து பிக்குக்கள் அவனைக் காப்பாற்றினர். அந்த நிலையிலும்கூட போதிதர்மர் எழவில்லை. இதனால், பொறுமை இழந்த ஹூய்கீ எழுந்தான். குருவுக்கு எனது காணிக்கை என்று ஓங்கிச் சொன்னபடி, தனது வலக்கையை வெட்டி இடக்கையில் ஏந்தியவனாக போதிதர்மர் முன் சென்று மண்டியிட்டான்.
பாறையிலும் ஈரம் கசிந்தது. போதிதர்மர் தன் ஒன்பது வருட தவத்தை முடித்துக்கொண்டு கண்விழித்தார். ஹூய்கீயைத் தன் மாணவனாக ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், ஷாவோலின் மடத்துக்குள் பிக்குகளால் வலியவந்து அழைத்துச் செல்லப்பட்டார். ‘தாங்கள் சொல்வதையே இனி நாங்கள் செய்வோம். எங்களுக்கு பௌத்தத்தை பெரிய மனது வைத்து உபதேசியுங்கள். தியானத்தை கற்றுத்தாருங்கள்’ என அவர்கள் போதிதர்மரிடம் மன்றாடினர்.
ஷாவோலின் மடத்துக்குள் காலடி வைத்ததும் போதிதர்மர் தனது முதல் ஆணையை பிறப்பித்தார். சம்பிரதாயங்களும் சடங்குகளும் புத்த மதத்துக்கு விரோதமானவை. விட்டொழியுங்கள்.
மேலும், கௌதமர் கண்ட பௌத்தம் புனித நூல்களைத் தாண்டியது என்றும் தேடலாலும் தியானத்தாலும் மெய்யறிதலாலும் அறியப்பட வேண்டியது என்றும் பிக்குகளுக்கு அவர் புரியவைத்தார். பிறகு, பௌதத்தின் தீபமாக, உயிராகக் கருதப்பட்ட தியானத்தை சீனர்களுக்கு அறிமுகப்படுத்த ஆயத்தமானார். அதற்கு முதல் தடையாக சீனர்களின் உடல் இருந்ததைக் கவனித்தார். நோஞ்சான்களாகக் காணப்பட்ட ஷாவோலின் பிக்குகளுக்கு தேகப்பயிற்சியிலிருந்து தன் பாடத்தைத் தொடங்கினார்.
போதிதர்மர் அறிமுகப்படுத்திய இந்த தேகப் பயிற்சிக்கு யிங் ஜிங் (Yijin Jing) என்று பெயர். இதுதான் இன்றைய யிங் ஜிங் குங்ஃபூவுக்கு முன்னோடி என ஷாவோலின் மடத்தில் கூறப்படுகிறது.
இப்படி சீனாவுக்குள் தேகப்பயிற்சியாக அறிமுகமாகி தற்காப்புக் கலையாக வளர்ந்தது தமிழகத்துக் களரி என்னும் கருத்தும் உள்ளது. அதேபோல், ஹூய்கீயின் வெட்டுப்பட்ட கையை போதிதர்மர் தான் கற்ற மருத்துவமுறையை வைத்து மீண்டும் பொருத்தினார் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதாவது பழந்தமிழர் மருத்துவ முறையை போதிதர்மர் பயன்படுத்தி சீனாவில் அதைப் பிரபலப்படுத்தினார் என்கிறார்கள். இதன் மூலம் வர்மப்புள்ளிகளை வைத்து மருத்துவம் பார்க்கும் பழந்தமிழர்முறைதான் சீனத்தில் அக்குபஞ்சர் என பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் என்ற கருத்தும் உருவாகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.