பௌத்த சமயம் என்று எதை அழைக்கிறோம்?

பௌத்த சமயம் என்று எதை அழைக்கிறோம்?

அரச வம்சத்தைச் சார்ந்த சித்தார்த்தர் என்பவர் தவத்தினை ஆற்றி ஞானம் பெற்று, புத்தர் என்று வழங்கப்பட்டார். புத்தர் மக்களுக்கு அறிவுறுத்திய அறவுரைகள் பௌத்த நெறியாயிற்று. அந்நெறியைப் பின்பற்றியோர் பௌத்தர் எனப்பட்டனர். அவர்தம் சமயம் பௌத்த சமயம் என வழங்கப்படலாயிற்று. பௌத்த சமயம் வடக்கே தோன்றி வளர்ந்ததாயினும் இந்தியாவின்பல்வேறு இடங்களிலும் பரவி, சிறப்புப் பெற்றது. இந்தியாவில் மட்டுமன்றி இந்தியாவிற்கு வெளியிலும் பரவிய பெருமையை உடையது அது.

 


5.1.1 அசோகரின் பங்களிப்பு

 பௌத்த சமயம் பல்வேறு இடங்களில் வேரூன்ற முக்கியக் காரணமாக அமைந்தவர் அசோக மன்னர். வடக்கே தோன்றிய பௌத்த சமயம்இந்தியாவின் பல இடங்களிலும் பரவத் தொடங்கியது. தென்னிந்தியப் பகுதிகளிலும் அது வேரூன்றத் துவங்கியது. அது யார் காலத்தில் நிகழ்ந்தது? மௌரிய மன்னர்களுள் சிறந்தவராகிய அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் நிகழ்ந்தது என வரலாறு குறிப்பிடுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இந்தியா முழுமையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்ட சிறப்புக்குரியவர் அசோகர். புத்தரின் அறநெறிகளில் மனத்தைப் பறிகொடுத்த அசோகர் பௌத்த சமயத்தைத் தழுவிய மாமன்னராவர். அவர் பௌத்த சமயத்தைச் சார்ந்ததோடு இந்தியாவிலும் அதற்கு அப்பாற்பட்ட நாடுகளிலும் பௌத்த சமயத்தைப் பரவச் செய்த பெருமைக்கும் உரியவர். அசோகரின் கல்வெட்டுச் சாசனமும் இச்செய்தியை உறுதி செய்கிறது. தமிழகத்தில் பௌத்த சமயம் கால்கொள்ளவும் அசோகமன்னரின் செயல்பாடுகளே காரணம் என்பதை அவர்தம் கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.


பௌத்த சமய மாநாடு

பாடலிபுரத்தில் (அசோக மன்னர் ஆட்சி செய்த மௌரியப் பேரரசின் தலைநகரம் பாடலிபுரம்) அசோக மாமன்னரின் ஆதரவில் (மூன்றாவது) பௌத்த மாநாடு நடந்தது. அது மொக்கல புத்திஸ்ஸ என்னும் பௌத்தத் துறவியின் தலைமையில் நடந்தது என்று இலங்கை நூல்களாகிய தீபவம்சம், மகாவம்சம் ஆகியவை குறிப்பிடுகின்றன. அம்மாநாடு ஒன்பது திங்கள் (திங்கள் என்பது மாதத்தைக் குறிக்கும்) நடந்தது என்றும் அவை குறிப்பிடுகின்றன.


 

5.1.2 மகிந்தரின் சமயப்பணி

அசோகர் பௌத்த சமயத்தைப் பரப்பப் பல்வேறு நாடுகளுக்குப் பல பௌத்தத் துறவிகளை அனுப்பிய செய்தியைப் பார்த்தோம். அவ்வாறுஅனுப்பப்பட்டவர்களுள் அசோக மன்னரின் மகனாகிய மகிந்தர் என்பவர் இதே நோக்கத்திற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இதை மேற்கூறிய தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்கள் குறிக்கின்றன. மகிந்தர் அசோகரின்தம்பி என்று இந்திய நூல்கள் கூறுகின்றன. உறவுமுறை எப்படியிருந்தாலும் பௌத்த சமயத்தைப் பரப்ப மகிந்தர் அசோகரால்அனுப்பப்பட்டார் என்பது உறுதியாகிறது.

மகிந்தருடன் ஐந்து பிக்குகள் (பிக்கு என்பது பௌத்தத் துறவியைக் குறிக்கும்) இலங்கைக்குச் சென்று பௌத்த சமயத்தைப் பரவச் செய்ததாகவும் இலங்கை நூல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கைக்குச் சென்ற பிக்குகளில் ஒருவர் சாமனர சமணர். இவர் அசோக மாமன்னரின் பெண்வயிற்றுப் பேரன் என்று வரலாறு குறிப்பிடுகிறது. இவ்வாறு மதத்தைப் பரப்ப இலங்கைக்குச் சென்ற பிக்குகள் எப்பொழுது சென்றார்கள் என்ற வினா நம்முள் எழுவது இயல்பே. கி.மு.250-இல் இலங்கைக்குச் சென்றதாக ஆய்வாளர் கணிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான் பௌத்த சமயம் வந்திருக்க வேண்டுமென்றும் ஆய்வாளர் குறிப்பிடுவர்.


 

5.1.3 அரிட்டரின் பணி

மகிந்தர் இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்பியபோதுஇலங்கை அரசரின் மாமனாராகிய அரிட்டர் என்பவர் பௌத்த சமயத்தைத் தழுவியதோடு பௌத்தத் துறவியாகவும் மாறினார். இலங்கையில் பௌத்த சமயம் பரவ அரிட்டர் மகிந்தருக்குப் பெருமளவு உதவினார் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. பின்னர் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்து பௌத்த சமயத்தைப் பரப்பியிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இப்படிக் குறிப்பிடச் சான்று ஏதேனும் இருக்கவேண்டுமல்லவா? தமிழகத்தில் மதுரை மாநகரம் பழம்பெரும் மூதுராகும். அங்குச் சில குகைகள் காணப்படுகின்றன. அவை பௌத்தத் துறவிகள் படுத்து உறங்குவதற்காகப் பாறையில் செதுக்கப்பட்ட படுக்கைகளாகும். அவற்றுக்குக் கீழ் சில எழுத்துகள் காணப்படுகின்றன. குகைகள் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட குகைகள் போலவே உள்ளன. குகைகளில் காணப்படும் எழுத்துகள் அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்துகளை ஒத்திருப்பதால் அவை கி.மு.3-ஆம்    நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஆராய்ச்சி வல்லுநர் கூறுகின்றனர். தவிர, பாண்டிய நாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டா பட்டி என்னும் கிராமத்துக்ருகில் உள்ளது. இந்தப் பெயர் மகிந்தருக்கு உதவியாக இருந்த அரிட்டர் என்னும் துறவியை நினைவூட்டுகிறது. ஒருவேளை அவர் தம் சீடர்களுடன் அங்கு வாழ்ந்திருக்கக் கூடும். அதனால் அந்த ஊர் அரிட்டாபட்டி என்று வழங்கியிருக்கலாம் என்பர்.


 

5.1.4 தமிழகத்தில் பௌத்தம்

 

பௌத்த சமயம் உலகெங்கும் பரவக் காரணமாக இருந்தது சங்கம் என்று குறிப்பிடப்படும் பௌத்த பிக்குகளின் கூட்டம் ஆகும். இக்கூட்டத்தின் உறுப்பினர்கள் தேரர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மக்களிடையே சென்று பௌத்த நெறிகளைப் பரப்புவதில் மிகுந்த வெற்றி பெற்றனர். தமிழகத்திலும் இத்தகைய பௌத்தத் துறவியரால் பௌத்த சமய நெறிகள் மக்களிடையே பரப்பப்பட்டன.

 

பௌத்தத் துறவியர் பணி

தமிழகத்திற்கு வந்த பௌத்தத் துறவிகள் மக்களோடு நெருங்கிப் பழகித் தங்களின் உறவை நெருக்கமாக்கிக் கொண்டனர். அவர்தம் மொழியைக் கற்று, அவர்களோடு உறவாடினர். தவிர, தமிழகத்தில் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று, பௌத்த விகாரங்களையும் பௌத்தப் பள்ளிகளையும் நிறுவும் பணியை மேற்கொண்டனர்.

கல்வி மருத்துவப் பணிகள்

பௌத்த மடங்களில் துறவிகள் மருத்துவம் பயின்றதோடுமக்களுக்கு இலவசமாக மருந்தும் கொடுத்து உதவினர். பௌத்தப்பள்ளிகளில் கல்வி கற்பித்து வந்தனர். பௌத்த மடங்களில்பயில்வோர்க்கு புத்தரின் அறநெறிகள், புத்த ஜாதகக் கதைகள், புத்த சரித்திரம் ஆகியவற்றையும் கற்பித்தனர். புத்தரின் அற நெறிகள் திரிபிடகம் என வழங்கப்பட்டது. அவை புத்தரின் சீடர்களால் எழுதி வைக்கப்பட்டிருந்தன. மூன்று கூடைகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டதால், அவை திரிபிடகங்கள் என்று அழைக்கப்பட்டன. புத்த ஜாதகக் கதைகள் என்பது புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய கதைகளைக் குறிக்கும். புத்த சரித்திரம் புத்தரின் வரலாற்றைக் கூறுவது.

 

உண்டி கொடுக்கும் பணி

மேற்கூறியவற்றைத் தவிர, குருடர், செவிடர், முடவர்முதலானோர்க்கும் ஏழை எளியவர்க்கும் உணவு கொடுத்து உதவும்அறச்சாலைகளையும் அமைத்தனர். அதற்கு அரசர், செல்வர் முதலானோர் உதவியையும் பெற்றனர்.

வயிற்றுப் பசியைப் போக்க உணவையும் உடல்நோயைத் தீர்க்க மருந்தையும் அளிப்பவர்கள் யாராயினும் அவர்கள் மக்களின் மனங்களில் இடம்பெறுவது இயல்புதானே? தம் மனங்களில் இடம் பெறுவோர் கூறுகிற மொழிகளை மக்கள் மதிப்பதும் அவற்றைப் பின்பற்ற நினைப்பதும் மனித இயல்பல்லவா? அதனால் பௌத்தத் துறவியர்தம் செயல்பாடுகள் மக்களை வெகுவாய் ஈர்த்ததில் வியப்பேதுமில்லை. ஏராளமானோர் பௌத்த நெறிகளைப் பின்பற்றிப் பௌத்தர்களாயினர்.


 

இலக்கியப்பணி

பௌத்தத் துறவியர் ஆங்காங்கே சென்று மக்களுக்குப் புத்தரின் அறவுரைகளை விளக்கியதோடு அந்தந்த இடத்தின் மக்கள் பேசும் மொழியில் இலக்கியங்களைப் படைத்து பௌத்த நெறி ஆழமாகத் தன் சுவடுகளைப் பதிக்க இலக்கிய இலக்கணங்களையும் படைத்தனர். அதன் காரணமாக, பௌத்த சமயம் மேலோங்கியபோது மொழியும் வளம் பெற்றது; புதிய புதிய இலக்கிய வடிவங்களைக் கண்டது.


5.1.5 பௌத்த சமயம் தன் செல்வாக்கை இழந்தமை

இந்திய மண்ணில் தோன்றி வளர்ந்த பௌத்த சமயம்செல்வாக்குடன் இந்தியாவில் மட்டுமன்றி வேறு பல நாடுகளிலும்பரவியிருந்த பெருமைக்குரியது. அத்தகைய சமயம் தமிழக மண்ணில்வளமோடு வாழ்ந்தமைக்கு வரலாற்றில் சான்றுகள் பல உள்ளன. ஆயினும் அப்படிப்பட்ட சமயம் தன் செல்வாக்கை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்ததின் காரணம் என்ன? வைதிக மதம், சமண மதம், ஆசீவகம் ஆகியன பௌத்த சமயத்தோடு போட்டியிட்டதோடு முரண்பட்டும் நின்றன. ஒன்றையொன்று வீழ்த்த முயன்றன. சண்டைகளும் பிணக்குகளும் பெருகின.

 

வைதிக மதத்தின் செயல்பாடு

வைதிக மதம் கி.பி. நான்காவது அல்லது ஐந்தாவதுநூற்றாண்டுக்குப் பின்னர் பல மாறுதல்களை ஏற்றுக் கொண்டது.பௌத்தர்களின் அடிப்படை அறமாகிய கொல்லாமையை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.     அதுவரை யாகத்தில் உயிர்க்கொலையை அனுமதித்திருந்த வைதிக மதம் அதனை விலக்கிக்கொண்டது. பின்னர் புத்துயிர் பெற்று, பக்தி இயக்கத்தை மேற்கொண்டது. பக்தி இயக்கம் இனிய இசையாலும் இறைவன் நாமத்தைப் பன்முறை கூறுவதாலும் இறைவனை அடையமுடியுமென்றும் அத்துடன் மண்ணில் நல்லவண்ணம் வாழஅனைத்தையும் பெறமுடியுமென்றும் காட்டியதால் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் வைதிகமதம் செல்வாக்குப் பெற்று மேலோங்கவும் மற்றவை தம் செல்வாக்கை இழக்கவும் நேர்ந்தன.

 

புறப்பகையும் அகப்பகையும்

புறப்பகையாக சமணம், வைதிக மதங்கள் அமைய, அகப் பகையாகப் பௌத்த சமயத்தில் தோன்றிய பெரும் உட்பிரிவுகள் அமைந்துவிட்டன.  அப்பிரிவுகள் ஹீனயானம், மகாயானம் என்றழைக்கப்பட்டன. அவை தமக்குள்ளேயே போரிட்டுக் கொண்டதால் வலிமை குன்றிப் போயின. அதனால் புறப்பகையாக அமைந்த சமண, வைதிக மதங்களுடன் போரிடவோ போட்டியிடவோ இயலாமல் செல்வாக்கை இழந்தது பௌத்த சமயம்.

http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l54.htm

 

About editor 3118 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply