பவுத்தம்

புரட்சி / அத்தியாயம் 6

buddhaமதம் தொடர்பான சமூகவியல் துறையின் தந்தை என்று கருதப்படும் மாக்ஸ் வெபர் பௌத்தத்தை கீழ்வருமாறு மதிப்பிடுகிறார். ‘பௌத்தத்தை ஒரு சமூக இயக்கம் என்று சொல்லமுடியாது. அரசியல்ரீதியாகவோ சமூகரீதியாகவோ பௌத்தத்துக்கு எந்தவித லட்சியங்களும் இல்லை. … வேற்றுலகைச் சேர்ந்த ஒரு மதம் என்றுதான் பௌத்தத்தை அழைக்கமுடியும்.’

மார்க்சிய வரலாற்றாசிரியரான டி.டி. கோசாம்பி இந்த வாதத்தை மறுக்கிறார். ‘மாக்ஸ் வெபர் போன்றவர்கள் பௌத்த மூலநூல்களை ஆழ்ந்து கற்கவில்லை என்பது தெரிகிறது. ஆரம்ப கால பௌத்தம் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட பொருளாதார, அரசியல் தத்துவங்களை உள்ளடக்கியிருந்தது’ என்கிறார் கோசாம்பி. பௌத்தம் என்பது துறவிகளுக்கான மதம், அதைச் சாமானியர்கள் புரிந்துகொள்ளமுடியாது என்னும் வாதத்தையும் கோசாம்பி மறுக்கிறார். புத்தர் ஒரு தலைசிறந்த அரசியல் முற்போக்காளர் என்கிறார் சி.எஃப். கொப்பென். பௌத்தத்தில் கடவுள் என்பது இல்லை என்பதால் அனைத்து மதங்களையும் கடுமையாக விமரிசித்த கார்ல் மார்க்ஸ் பௌத்தத்தை மட்டும் தொடாமல் விட்டுவிட்டார் என்று சுட்டிக்காட்டுகிறார் ட்ரெவார் லிங்.

பௌத்தம் என்பது ஒரு சமூகத் தேவையை ஒட்டி மலர்ந்த கொள்கை என்கிறார் எம்.என். ராய். இதைப் பற்றி மேலதிகம் பார்ப்பதற்கு முன்னால் புத்தர் வாழ்ந்த காலகட்டம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. புத்தர் யாரை எதிர்த்து அல்லது யாரை ஆதரித்து தன் கொள்கைகளை வடிவமைத்துக்கொண்டார் என்பதை முதலில் நாம் புரிந்துகொண்டாகவேண்டும். தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் அறிமுகம் இது. ‘அக்காலத்தில் வடகிழக்கு இந்தியாவில் கொடிய அடக்குமுறை காணப்பட்டது. குறிப்பாக மகதம், கோசலம் ஆகிய நாடுகளில் பழங்குடி சமுதாயம் அழிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் பேராசை, வெறித்தனமான காம இச்சை, கீழ்த்தரமான பேராசை, பொதுச் சொத்துகளைச் சூறையாடுதல், வரிப்பளு, ஊதாரித்தனம், அச்சுறுத்திப் பணம் பறித்தல் போன்றவை மக்களின் வாழ்க்கையில் சொல்லொணாத் துயரைத் தோற்றுவித்தன… மல்லர்கள், வஜ்ஜிகள், சாக்கியர்கள் போன்றோர் இன்னமும் பழங்குடியினரின் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். புத்தர் சாக்கிய மரபைச் சேர்ந்தவர். அவர் தனது பழங்குடிப் பெருமையை எப்போதும் மறக்கவில்லை.’

புத்தர் தன்னை ஒரு பழங்குடியினராகவே அடையாளம் கண்டார் என்பதையும் தனது மரபின்மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது என்பதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். சுதந்தரம், சமத்துவம் போன்ற கொள்கைகள்மீது பற்றுள்ளவர்களாக பழங்குடிகள் இருந்தனர். ஆனால் அந்தக் கொள்கைகள் ஆளும் அரசுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாயின. நிலத்துக்கான தேவைகள் பெருகியபோது இன்று நடப்பதைப் போலவே அன்றும் பழங்குடிகள்மீது அரசு போர் தொடுத்தது. தேவிபிரசாத் தொடர்கிறார். ‘அரசை விரிவுபடுத்த வனத்தை அழிப்பதைப் போலப் பரந்துபட்ட அளவிலிருந்த பழங்குடிகளை அழித்தனர். அரசுகள் பழங்குடியினரை அடிமைப்படுத்தவும், அழிக்கவும் முற்பட்டன. புத்தர் காலத்தில் வாழ்ந்த கோசல மன்னன் விதூதபன் சாக்கியர்களைக் கொடூரமாகக் கொன்று குவிந்தான். புத்தருடைய உறவினர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இதே கதிக்கு ஆளாயினர். ’

வாழும் மக்களை விரட்டியடித்து நிலத்தை ஆக்கிரமிக்கும் அரசாங்கத்தின் பேராசை புத்தரை உலுக்கியெடுத்திருக்கவேண்டும். பேராசை கொண்டவர்களை அந்த ஆசையே அழித்தொழிக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ‘ஒரு மன்னன் உலகிலுள்ள ராஜ்ஜியங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டாலும், கடலுக்கு அப்பாலுள்ள நிலத்தையும் அபகரிக்கவேண்டுமென்ற ஆசை அவனுக்கு வரும்.’ என்றார் புத்தர்.

புதிய வரிகள், அடிமைத்தனம், அச்சுறுத்திப் பணம் பறித்தல், அடமானம் வைத்தல், வட்டி, ஊதாரித்தனம் போன்ற பழக்கங்கள் அப்போது நிலவிவந்தன என்பது புத்த ஜாதகக் கதைகள்மூலம் தெரியவருகின்றன. ‘புத்தரே இவை அனைத்தையும் கண்டார். ஆனால் என்ன செய்யமுடியும்? அவரால் கடவுளை நம்பமுடியவில்லை. தன்னைச் சுற்றிக் காணப்படும் துன்பங்களுக்குப் பிரார்த்தனைகளும் யக்ஞங்களும் எவ்வித பலனையும் அளிக்காது என்று புத்தர் கருதினார்.’ என்கிறார் தேவிபிரசாத். தம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை நேரடியாகக் கண்டு அவற்றின் தன்மைகளைப் புரிந்துகொண்டு வினையாற்றுவதே புத்தரின் அணுகுமுறையாக இருந்தது. பிரச்னைகள் யதார்த்தமானவை. நம் கண்முன் நிகழ்பவை. அவற்றுக்கு அசாதாரணமான வழிகளில் தீர்வு கண்டுவிடமுடியாது என்று புத்தர் நினைத்தார். ‘புத்தர் முன்வைத்த கடவுள் மறுப்பு அல்லது நாத்திகவாத கருத்துகளை அஸ்வகோஷர் எடுத்துச் சொல்கிறார். துறவறம் பூண்டு உடலை வருத்திக்கொள்வது வேதனையைத் தரும், தேவையற்றது, பலனளிக்காதது என்கிறார் புத்தர். உபநிஷத்தையும் மோட்ச நம்பிக்கைகளையும் புத்தர் புறம் தள்ளினார்.’

அந்த வகையில், புத்தர் ஒரு யதார்த்தவாதியாகவும் பகுத்தறிவுவாதியாகவும் திகழ்ந்தார். தன்னால் நேரடியாகக் கண்டு, கேட்டு, உணர முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே அவர் எதிர்வினை புரிந்தார். பிரபஞ்சப் பொருள்களின் தோற்றம் குறித்த தத்துவார்த்த ஆய்வுகளையும் இறப்புக்குப் பிறகான காலகட்டம் குறித்தும் கவலைப்படுவது தேவையற்றது என்றார் புத்தர். தனது உடலில் பாய்ந்திருக்கும் அம்பு எங்கிருந்து வந்தது என்றோ அதை யார் செய்தது என்றோ ஆராய்ந்து கொண்டிருப்பது மடத்தனம். உடனே அதனைப் பிடுங்கி எறிய வேண்டியதுதான் புத்திசாலித்தனம் என்றார் புத்தர். வாழ்க்கைக்குத் தொடர்பற்ற தத்துவார்த்த கேள்விகள் கேட்கப்பட்டபோது புத்தர் மௌனம் சாதித்தார். அவரைப் பாதித்த அம்சம் ஒன்றுதான். எங்கு நோக்கிலும் துன்பங்கள் காணப்படுவது ஏன்?

உலகிலுள்ள பிரச்னைகள் மெய்யானவை என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா. இதற்கு தீர்வு என்ன? ‘வரலாற்றுரீதியான வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டி மனித உற்பத்திச் சக்தியைப் பிரம்மாண்டமான அளவுக்குப் பெருக்கி, அனைவருக்கும் அனைத்தையும் அளிக்கவேண்டும். இதுதான் தீர்வு. ஆனால் உற்பத்திச் சக்தி பெருகி, அதன் காரணமாக சுரண்டலும் அதிகரித்து, துயரம் தாங்கொணா நிலைமைக்கு வளர்ந்ததுதான் புத்தர்காலச் சூழல்.’

சுரண்டலை ஒழித்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும்படிச் செய்யவேண்டும் என்னும் புரட்சிகரமானத் தீர்வை புத்தர் முன்வைக்கவில்லை. அவர் சற்றே அடக்கத்துடன் தனிநபர் சிந்தனை சார்ந்து ஒரு யோசனையை முன்வைத்தார். ‘உள்ளத்தில் உருவாகும் போதைகளான ஆசைகளை அடக்கவேண்டும்.’ ஏன் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவில்லை என்னும் கார்ல் மார்க்ஸின் புரட்சிகரமான கேள்வியை புத்தரால் எழுப்பமுடியாமல் போனதற்காக அவரைக் குற்றம் சொல்லமுடியாது.

புத்தர் உலகைத் தார்மிகரீதியில் மாற்றியமைக்க விரும்பினார். நம்பிக்கை, உறுதி, நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற மதிப்புகளை மீட்டெடுக்க விரும்பினார். தன் காலத்தில் இத்தகைய மதிப்புகள் காலில் போட்டு மிதிக்கப்படுவதை அவர் கண்டார். அடிப்படை ஒழுக்கம் இல்லாத, பகுத்தறிவு தொலைத்த ஒரு சமூகத்தை அவர் வெறுத்தார். அதே சமயம் சமூக மாற்றங்களை உடனடியாகக் கொண்டுவருவதில் உள்ள சிரமங்களையும் அவர் அறிந்திருந்தார். ஒரே நாளில் அனைத்தையும் புரட்டிப்போட்டுவிடமுடியும் என்று அவர் நம்பவில்லை. தீமைகள் நிறைந்த சமூகத்தில் இருந்து வெளியேறி சங்கங்களில் மக்கள் வாழவேண்டும் என்று புத்தர் கட்டளையிட்டார்.

இந்தச் சங்கங்கள் எந்த வகையில் சமூகத்தில் இருந்து மாறுபட்டிருந்தன? ஏன் அங்கே மக்கள் வாழவேண்டும் என்று புத்தர் விரும்பினார்? தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா பதிலளிக்கிறார். ‘பிட்சுக்கள் வாழும் சங்கங்களில் நிலைமைகள் வேறாக இருந்தன. அது பழங்குடியினரின் கூட்டு வாழ்க்கை போல் இருந்தது. அந்தச் சங்கங்களில் தனிச்சொத்து இல்லை. முழு அளவில் சமத்துவமும், ஜனநாயகமும் நிலவின. இவற்றில் பழங்காலச் சமுதாயத்தின் பெருமையைக் கொண்டுவரமுடியும் என்றார் புத்தர். இச்சங்கங்கள் வர்க்க சமுதாயத்துக்குள் வர்க்கமற்ற சமுதாயமாக, இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைõயின் ஆன்மாவாகவும் இருந்தன.’

முதலாளித்துவச் சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் சாத்தியமில்லை, எனவே நமக்கான சமூகத்தை நாமே கட்டியமைத்துக்கொள்ளலாம் என்றார் கார்ல் மார்க்ஸ். வர்க்கச் சுரண்டலை ஒழித்து, உற்பத்திக் கருவிகளைப் பொதுவில் ஆக்கி பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலைநாட்டவேண்டியதன் அவசியத்தை மார்க்சியம் பின்வரும் காலங்களில் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியது. புத்தர் தன் காலத்துச் சமூகச் சிக்கல்களுக்கு மாற்றாகச் சங்கங்களை சுட்டிக்காட்டினார். மார்க்ஸைப் போலவே புத்தர் தனிச்சொத்துரிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். பௌத்த சங்கங்களில் தனிச்சொத்துரிமை மறுக்கப்பட்டது.

தனிச்சொத்துரிமையை புத்தர் ஏன் தீவிரமாக எதிர்த்தார் என்பதை பௌத்தக் கோட்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட ஸ்ட்செர்பார்ஸ்கி (Stcherbatsky விளக்குகிறார். ‘தனிநபர் ஒருவர் எங்கு உள்ளாரோ அங்கு அவருக்குச் சொத்து உள்ளது. எங்கு நான் இருக்கிறேனோ அங்கு என்னுடையதும் இருக்கிறது. எங்குத் தனிச்சொத்து இருக்கிறதோ, அங்கு அதன்மீது ஏதோ ஒரு வடிவில் கட்டாயம் பாசம் வரும். தனிச்சொத்தின் மீதான இந்த ஈடுபாடே அனைத்து தீமைகளுக்கும் மூலவேராகும். ஒவ்வொரு தனித்த செயல்பாடுகளுக்கும், சமூக அநீதிக்கும் மூலகாரணமாகும்… தனிநபர் இல்லாதபோது தனிநபர்ச் சொத்துரிமை எவ்வாறு இருக்கமுடியும்? எனவே தனிநபர்ச் சொத்துரிமையை, சாதாரண சொத்துகளை மட்டுமல்ல, குடும்பம், வீடு போன்றவற்றையும் என்றென்றைக்கும் யார் ஒருவர் கைவிடுகிறாரோ அவரே உண்மையான பௌத்தராக இருப்பார். உலக மதங்களின் வரலாற்றில் (கிறிஸ்தவம், இஸ்லாம் போன்றவற்றில்) சொத்துரிமை மறுப்பு மற்றும் அவற்றைக் கைவிட வலியுறுத்தும் கோட்பாடுகளை ஆங்காங்கே நாம் காணலாம். ஆனால், பௌத்தம் இப்பிரச்னையைத் தீவிரமாக அணுகியது.’

தனிச்சொத்துரிமை குறித்த புத்தரின் கருத்தாக்கத்தை நீட்டித்தால் புரட்சிகரமான தத்துவம் ஒன்றும் நமக்கும் கிடைக்கும். அதை தேவிபிரசாத் வார்த்தைகளில் கேட்போம். ‘மனிதனின் விடுதலைக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக வர்க்கச் சுரண்டலில் இருந்து விடுதலை பெற உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையை ஒழிப்பதுதான் அடிப்படையான முன் நிபந்தனை. எனவே, சமுதாயத்தின் வர்க்கக் கூட்டமைப்பைத் தூக்கியெறிவது ஒன்றே சரியான வழி.’ புத்தர் தனிச்சொத்துரிமையை நிராகரிக்க மட்டுமே சொல்கிறார். சொத்துரிமை கொண்டிருக்கும் சமூகத்தைத் தூக்கியெறிந்துவிடச் சொல்லவில்லை. இருந்தாலும், புத்தரின் அணுகுமுறை தனிச்சொத்துரிமையைக் கொண்டிருப்பதன் முட்டாள்தனத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அந்த வகையில், அவர் காலத்தில் அது ஒரு புரட்சிகரமான கொள்கை. தேவிபிரசாத் தொடர்கிறார். ‘தனிச்சொத்துரிமையை ஒழிப்பது என்ற புத்தரின் கோரிக்கை சமுதாயத்தில் தனிப்பட்ட சில பகுதிகளில் மட்டும் உள்ளவற்றை ஒழிப்பதாகும். இது வரலாற்றுரீதியாகப் பக்குவமடையாத நிலை. தனிச்சொத்துடைமையை சமுதாயத்திலிருந்து அறவே ஒழிக்கக்கூடிய நிலைமை அங்கு வரவில்லை.’

செல்வம் எப்படிச் சேர்கிறது? போர்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் துன்மார்க்கத்தின்மூலம் என்கிறார் புத்தர். இந்த வழிகளில் மட்டுமே செல்வம் சேர்கிறது என்று இன்றைய தேதியில் கொள்ளமுடியாது என்றபோதும் பெரும்செல்வம் சேர்வதற்கு இவையே பிரதான வழிகள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இன்று உலகின் வளர்ந்த நாடுகள் எப்படி வளர்ச்சியடைந்தன என்பதையும் ஏழைமை நாடுகள் ஏன் அவ்வாறு இருக்கின்றன என்பதையும் வரலாற்று நோக்கில் ஆராய்ந்தால் இரண்டுக்கும் இடையிலான தொடர்பும் வேறுபாடும் புரியவரும். உதாரணத்துக்கு, ஆப்பிரிக்கா அடிமை நாடாகவும் பின்தங்கிய இருண்ட கண்டமாகவும் இருந்ததற்கு ஆப்பிரிக்கா மட்டுமேவா காரணம்?

இதைத் தொடர்ந்து புத்தர் வந்தடைந்த முடிவு புரட்சிகரமானது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் போலவே செல்வத்துக்கும் ஒரு முடிவு வரும். அனைத்தையும் போல் செல்வமும் மறைந்துவிடும். இதைத் தடுக்கமுடியாது. எனவே, நிலையற்ற இந்த செல்வத்தைத் தேடி வாழ்வை வீணாக்கவேண்டாம், சொத்துகளைக் குவித்துக்கொள்ளும் பொருட்டு போரிட்டுச் சாகவேண்டாம் என்றார் புத்தர். புத்தர் தனியுடைமையை நிராகரிப்பது என்பது ஆன்மாவையும் தனிப்பட்ட சொத்துரிமையையும் நிராகரிப்பது என்ற முடிவின் விளைவு என்கிறார் ஸ்ட்செர்பார்ஸ்கி.

குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலில் எங்கெல்ஸ் கீழ்வருமாறு எழுதுகிறார். ‘கேவலம் சொத்து தேடும் வாழ்க்கை மனித குலத்தின் இறுதியான தலைவிதி அல்ல. நாகரிகம் தொடங்கியதிலிருந்து கழிந்திருக்கிற காலம் இருக்கிறதே, அது சென்ற காலத்திலிருந்து மனிதன் வாழ்ந்திருந்த காலத்தில் ஒரு சிறு பகுதியே ஆகும். பின்னால் வரப்போகும் யுகங்களின் ஒரு சிறு பகுதியே ஆகும். சமுதாயத்தின் மறைவு என்பது சொத்தையே குறிக்கோளாகவும் இலக்காகவும் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையின் முடிவுதான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை சுயநாசத்துக்குரிய அம்சங்களைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறது.’

புத்தர் தன் காலச்சூழலுக்கு ஏற்றவாறு இதைச் சொன்னார். ‘சாதாரண சொத்து மனித குலத்தின் இறுதி லட்சியமாக இருக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட நிலைமையில் அது தோன்றுவதும் எதிர்காலத்தில் அது உதிர்வதும் தவிர்க்கவியலாதது.’

 (அடுத்த பகுதி – புத்தர் : ஒரு போராளியின் கதை)


மந்திரவாதி, சூனியக்காரர்

போதிதர்மர் / அத்தியாயம் 8

மன்னன் வே சினத்துடன் வெளியேற, புன்னகையுடன் போதிதர்மர் மேற்கு திசை நோக்கிப் புறப்பட்டார். யாங்ஸி நதியைக் கடந்து புத்த பிக்குகளுக்கு திருப்தியாகத் திகழ்ந்த லியோயாங் என்ற இடத்துக்குச் செல்வதுதான் அவரது நோக்கம்.

யாங்ஸி நதி தென் சீனாவையே செழிப்பாக வைத்திருக்க உதவும் பெரும் நதி. இன்றும் கூட அது அப்படித்தான்.

அந்த நதியைக் கடக்க பல படகுகள் இருந்தன. அப்படி ஒரு படகில் ஏற போதிதர்மர் காலடி எடுத்து வைத்தார்.  அதற்குள் அங்கிருந்தவர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.   இறுதியில், போதிதர்மர் அப்படகில் ஏறவில்லை என்று சொல்லப்படுகிறது.

மக்கள் பேசியதனைத்தும் போதிதர்மர் காதிலும் விழுந்தது. படகில் ஏறப்போனவர் படகிலிருந்து தன் காலை கீழிறக்கினார். நேராகச் சென்று அங்கிருந்த புல் ஒன்றை முறித்தார். புல் என்றால் நம்மூர் அருகம்புல் இல்லை. அது சீனப் புல். சோளத்தட்டை அளவில் இருக்கும். அதனை ஆற்றில் மிதக்கவிட்டார். பிறகு, அந்தப் புல்லின் உதவியுடன் யாங்ஸி ஆற்றை மின்னல் வேகத்தில் கடந்தார். படகில் இருந்தவர்கள் அனைவரும் அந்தக் காட்சியை வாய்பிளந்து பார்த்தனர்.

காம்பே போன்றவர்கள் உண்மையில் அது புல் இல்லை என்றும், புல் போல் ஒடுக்கமான படகு என்றும் கூறுகின்றனர். தான்லின் போன்ற சீன ஆசிரியர்கள் ‘புல் போன்ற படகைத்தான் ’புல் என உருவகப்படுத்திக் கூறியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

அதுநாள்வரை பைத்தியக்காரராகவும் முரடராகவும் சீனர்களால் கருதப்பட்ட போதிதர்மர், இந்த நிகழ்வுக்குப் பின்னர் மந்திரவாதியாகவும் சூனியக்காரராகவும் பார்க்கப்பட்டார். இப்படியாக, லியோயாங் சென்றடைந்த போதிதர்மர் அங்கும் அழையா விருந்தாளியாகவே பார்க்கப்பட்டார். இனவெறி அங்கும் தலைவிரித்தாடியது.

இதன்பிறகு, தீவிரமாக யோசித்த போதிதர்மர் அங்கிருந்து சாங் மலை வழியே ஹெனான் மாநிலத்தில் இருந்த ஷாவோலின் மடத்துக்குச் செல்ல முடிவு கட்டினார். ஏனென்றால் ஷாவோலினில்தான் இந்தியாவிலிருந்து சீனா செல்லும் புத்தபிக்குகள் பெரும்பாலும் தங்குவர். அதனால் அங்கு இனத்துவேஷம் இருக்காது என போதிதர்மர் எண்ணியிருக்கலாம்.

சுற்றிலும் மலைகள், அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ஷாவொலின் மடம் கம்பீரமாக அமைந்திருந்தது. போதிதர்மர் அதன் கதவுகளையும் தட்டினார். ஆனால் இவருக்கு முன்பாக இவரது புகழ் அங்கும் பரவியிருந்தது. குதர்க்கவாதியான அவரை உள்ளே விட்டால் மற்ற பிக்குகளின் தியானநிலை பாதிப்படையும் என்றும் கூறி போதிதர்மரை மடத்துக்கு உள்ளேவிட மறுத்துவிட்டனர்.

போதிதர்மர் எள்ளளவும் கலங்கவில்லை. ஷாவோலின் மடம் மலைப் பிரதேசத்தில் இருந்ததால் பல்வேறு மலைக் குகைகள் இருந்தன. அவர் கண்ணில் அங்கிருந்த குகையொன்று பட்டது. இறைவன் படைத்த இப்பரந்த உலகில் எனக்கா இடமில்லை எனக் கருதி அதே குகையில் தஞ்சமடைந்தார். உள்ளே சென்றவர் குகையின் ஒரு பக்கச் சுவற்றை வெறித்துப் பார்த்தவண்ணம் அமர்ந்தார்.

மகான்கள் வாழ்க்கையில் இதுபோன்ற தொடர் துன்பங்கள் என்பது இயல்பே. அத்துன்பத்திலும் அவர்கள் தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றனரா என்பதை இறைவன் சோதிப்பான் என்பர். சமணர் நெறியை விட்டொதுங்கிய புத்தரும், ரோமானியர்களால் துரத்தப்பட்ட ஏசுவும், விண் ஏற்றத்துக்கு முன் முஹம்மது நபியும், சார்புநிலைக் கோட்பாட்டை வெளிப்படுத்திய நிலையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும், கம்யூனிச சித்தாந்தத்தை முன்வைத்த நிலையில் கார்ல் மார்க்ஸும் இவ்வகையான தொடர் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஆனால், இச்சோதனைகளின் இறுதியில் அவர்களுக்கு கிடைத்தது என்னவோ மகத்தான வெற்றிதான். போதிதர்மருக்கும் வெற்றி கிட்டியது. அதுவும் மாபெரும் வெற்றி.

குகைக்குள் சென்றமர்ந்த போதிதர்மர் அதன் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி, நாட்கள், வாரங்கள், மாதங்களாக இடத்தை விட்டு நகராமல் அங்குமிங்கும் அசையாமல் அப்படியே வீற்றிருந்தார்.

போதிதர்மரை மடத்துக்குள் வரவிடாமல் விரட்டிய தினத்தன்று பார்த்ததுதான்; அதன்பிறகு பிக்குகள் யாரும் அவரைப் பார்க்கவில்லை. மற்றபடி மக்களின் கண்களிலும் அவர் தென்படவில்லை என்பதால் சீனா முழுவதும் போதிதர்மர் இறந்துவிட்டதாகவும், இந்தியாவுக்கே திரும்பிவிட்டதாகவும், பித்துப் பிடித்து வடக்கு மாகாணங்களில் அலைவதாகவும் விதவிதமான வதந்திகள் பரவின.

ஷாவோலின் மடத்தில் பாலுக்காக சில ஆடுகள் வளர்க்கப்பட்டன. ஒருநாள் மடத்திலிருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஒரு மாணவன் கிளம்பினான். ஒவ்வொரு பகுதியாக மேய்ந்து கொண்டே வருகையில், தற்செயலாக அந்த ஆடுகள் போதிதர்மர் இருந்த குகை நோக்கி வந்தன. மாணவன் வெளியில் நின்றிருக்க ஒரு சில ஆடுகள் மட்டும் நீர் தேடி அந்தக் குகைக்குள் சென்றன. சில குகைகளுக்குள் சுனை இருப்பது வழக்கம். உள்ளே சென்ற ஆடுகள் மிரண்டு போய் வெளியே ஓடிவந்தன.

ஆடுகள் மிரளும் அளவுக்கு குகையினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய உள்ளே நுழைந்த மாணவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. உள்ளே சுவற்றை வெறித்த நிலையில் போதிதர்மர் அசைவின்றி அமர்ந்திருந்தார்.

மடத்துக்குச் சென்றபிறகும் போதிதர்மர் நினைவாகவே கிடந்த மாணவன் ஷாவோலினில் இருந்து கொஞ்சம் உணவும் நீரும் எடுத்துக்கொண்டு குகைக்குச்சென்றான். போதிதர்மர் முன் அதனை வைத்துவிட்டு சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் அசைவின்றி இருந்தார்.

ஷாவோலின் பிக்குகளிடம் இந்தச் செய்தியைச் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. மாணவன் எதையோ கண்டு மிரண்டுபோய் இருக்கிறான் என்றும் போதிதர்மர் இறந்துவிட்டிருப்பார் என்றும் சொன்னார்கள். ஆனாலும் மாணவன் விடாப்பிடியாகக் கூறியதால், சென்று பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று மாணவனுடன் புறப்பட்டு குகைக்குச் சென்றார்கள்.

அனைவரும் போதிதர்மரைப் பார்த்தார்கள். வியந்தார்கள். ஒரு மனிதன் இப்படி மாதக்கணக்கில், உணவு தண்ணீர் இல்லாமல் தவமிருக்க முடியுமா என்று எண்ணி அவர் மேல் மதிப்பு கொண்டார்கள். அன்றிலிருந்து ஷாவோலின் மடத்தில் வசித்த பிக்குக்கள் அவர் தவத்துக்கு இடையூறோ அபாயமோ ஏதும் நேராமல் காவல் புரிய ஆரம்பித்தனர்.

போதிதர்மர் குகையில் இருந்ததை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கும் வேறு பல கதைகளும் உண்டு. ஆனால், மேற்கூறிய இக்கதையைதான் ஷாவோலின் பிக்குகள் நம்புகின்றனர்.

‘போதிதர்மர் ஒரே இடத்தில் பல மாதங்களாக அசைவேதும் இன்றி தவம் கிடக்கிறார்’ என்ற செய்தி மளமளவெனப் பரவியது. பைத்தியக்காரர், சூனியக்காரர், முரடர் எனக் கூறி அவரை ஒதுக்கிய மக்களுக்கு அவர் ஊண், உறக்கம் இன்றி தவமிருப்பது அதிசயமாகத் தெரிந்தது. ஒரு பிக்குக்கு இது சாத்தியமான செயலா என்று எண்ணி வியப்பில் ஆழ்ந்தனர். அவர் புகழ் சீனதேசம் முழுவதும் வெகுவிரைவில் பரவியது.

இந்நிலையில் போதிதர்மரின் புகழ் பரவக் காரணமாக இருந்த ஒரு நிகழ்வு ஷாவோலினில் இன்றும் நினைவு கூரப்படுகிறது.

போதிதர்மர் இப்படி அசாத்தியத் தவமிருக்கும் செய்தி, அவரை விரட்டியடித்த ‘வே’ மன்னனையும் சென்றடைந்தது. அடடா இத்தகைய தவசீலரை நாம் அறியாமையால் தவறவிட்டு விட்டோமே என மனம் நொந்தான். எப்படியாவது போதிதர்மரை அரண்மனைக்குக் கவர்ந்து வந்துவிட வேண்டும் என எண்ணினான்.

அவரது தளபதி தன் சேனையை அழைத்துக்கொண்டு ஷாவோலின் வந்தான். போதிதர்மர் குகைக்கு காவலாக இருந்த பிக்குகளையும் மக்களையும் அங்கிருந்து விரட்டிவிட்டு, தன் படைகளுடன் உள்ளே புகுந்தான் . மக்களும் பிக்குகளும் என்ன நிகழப்போகிறதோ என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

உள்ளே நுழைந்த தளபதி தியானத்தில் அசையாதிருந்த போதிதர்மரை அழைத்துப் பார்த்தான், பதிலில்லை. தவத்தைக் கலைக்க எண்ணி அசைத்துப் பார்த்தான். முடியவில்லை. வேறுவழியில்லாமல் போதிதர்மரை குண்டுக்கட்டாகத் தூக்க முயற்சித்தான். போதிதர்மர் யானைக்கனம் கனத்தார். ஓர் அங்குலம்கூட அசைக்கமுடியவில்லை. பின்னர், குதிரையில் கயிற்றைக் கட்டி இழுத்துப் பார்த்தான். கயிறு அறுபட்டு குதிரைகளும் அவனும் விழுந்தனரே தவிர, போதிதர்மரை நகர்த்த முடியவில்லை. இன்னும் என்னென்னமோ செய்து பார்த்தான். எதுவும் பலன் அளித்ததாகத் தெரியவில்லை. தொங்கிய முகத்துடன் அரண்மனைக்கே திரும்பினான். அனைத்தையும் கேட்ட மன்னனுக்கு முகம் தொங்கிப்போனது.

இந்த நிகழ்வு சீனாவின் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டு போதிதர்மர் புகழை எங்கெங்கும் எதிரொலித்தது. போதிதர்மர் இருந்த ஷாவோலின் குகைப் பிரதேசம் சுற்றுலாத் தலம்போல் நிரம்பி வழிந்தது. பிக்குகளுக்கு விழி பிதுங்கியது. எப்பொழுதுதான் போதிதர்மர் எழுந்திருப்பார் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது.

இந்த நிகழ்வு போதிதர்மரை ஏதோ மாயாவி போல் காண்பிக்கிறது, இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நவீன வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், சீனர்கள் விடுவதாக இல்லை. பௌத்தத்தின் ‘சீ’ எனப்படும் சக்தியால் இது சாத்தியமே என்கின்றனர்.

காலம் அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. போதிதர்மர் அவர் போக்கில் அசைவின்றி அமர்ந்திருந்தார். குகைக்குள் புகுந்த போதிதர்மர், சுவற்றை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து ஓர் ஆண்டு இரு ஆண்டல்ல ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தன.

ஒன்பது ஆண்டுகள் போதிதர்மர் அசையாமல் அமர்ந்திருந்தார் என்பது சீனர்களின் கருத்து. ஆனால், இன்றைய நவீன வரலாற்று அறிஞர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இது சீனர்களின் கட்டுக்கதை என்கின்றனர். போதிதர்மர் அவ்வப்போது உணவுக்காகவும் பிற கடமைகளுக்காகவும் நிச்சயம் எழுந்திருக்கவேண்டும், ஒரே இடத்தில் ஒன்பது வருடம் அமர்வதெல்லாம் இயலாத காரியம் என்கின்றனர். ஆனால் சீனர்களின் போதிதர்ம புராணம் இப்படித்தான் என்கின்றது. சரி கதைக்கு வருவோம்.

இந்த நேரத்தில்தான் சீன கிராமம் ஒன்றில் வாழ்ந்து வந்த டாஸூ ஹூய்கீ (Dazu Huike) என்பவனுக்கு போதிதர்மர் பற்றித் தெரியவந்தது.  சிறு வயதில் இருந்தே தானும் புத்தபிக்குவாகி விழிப்படைய வேண்டும் என்று அவனுக்கு ஆசையிருந்தது. ஆனால், அவன் ஏழையாகவும், தீண்டத்தகாதவனாகவும் இருந்ததால் அவனது ஆசை நிறைவேறவில்லை. பிக்குகளும் பௌத்தப் பள்ளிகளும் அவனை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது அவனுக்கு, ‘நாம் ஏன் போதிதர்மரிடம் சென்று சீடனாகக் கூடாது’ என்று யோசனை எழுந்தது. அதன்படியே புறப்பட்டான். அவன் கிளம்பும் பொழுதே சீனாவில் பனிக்காலமும் ஆரம்பமாகியிருந்தது.

சில மாதப் பயணத்துக்குப் பிறகு ஹூய்கீ ஷாவோலினில் போதிதர்மர் இருந்த குகையை அடைந்தான். அவனுக்கு முன்பே அங்கு பலர் தாங்களும் போதிதர்மரின் சீடனாக வேண்டும் எனும் ஆசையில் அலைமோதினர். அவர்களுடன் சேர்ந்து ஹூய்கீயும் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு போதிதர்மரிடம் வேண்டினான். மன்றாடினான். வழக்கம்போல் போதிதர்மரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. சுவற்றை வெறித்த நிலைதான். இதனால் கோபம்கொண்ட ஹூய்கீ போதிதர்மர் தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்வரை அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை எனும் சூளுரையுடன் அக்குகை வாசலிலேயே அமர்ந்தான்.

சீனத்தில் வடதுருவப் பனி அதிகமாக வீசும் காலமும் தொடங்கியது. இந்த வட துருவப்பனி ஆர்டிக்கிலிருந்து ரஷ்யா, சைபீரியா ஊடாக சீனத்தை வந்தடையும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் அங்கே பனி கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டத் தொடங்கிவிடும்.

குகை வாசலிலேயே காத்திருந்த ஹூய்கீ அவ்வாறு வீசிய பனியில் விரைத்துக் கட்டையானான். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் ஷாவோலின் மடத்து பிக்குக்கள் அவனைக் காப்பாற்றினர். அந்த நிலையிலும்கூட போதிதர்மர் எழவில்லை. இதனால், பொறுமை இழந்த ஹூய்கீ எழுந்தான். குருவுக்கு எனது காணிக்கை என்று ஓங்கிச் சொன்னபடி, தனது வலக்கையை வெட்டி இடக்கையில் ஏந்தியவனாக போதிதர்மர் முன் சென்று மண்டியிட்டான்.

பாறையிலும் ஈரம் கசிந்தது. போதிதர்மர் தன் ஒன்பது வருட தவத்தை முடித்துக்கொண்டு கண்விழித்தார். ஹூய்கீயைத் தன் மாணவனாக ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், ஷாவோலின் மடத்துக்குள் பிக்குகளால் வலியவந்து அழைத்துச் செல்லப்பட்டார். ‘தாங்கள் சொல்வதையே இனி நாங்கள் செய்வோம். எங்களுக்கு பௌத்தத்தை பெரிய மனது வைத்து உபதேசியுங்கள். தியானத்தை கற்றுத்தாருங்கள்’ என அவர்கள் போதிதர்மரிடம் மன்றாடினர்.

ஷாவோலின் மடத்துக்குள் காலடி வைத்ததும் போதிதர்மர் தனது முதல் ஆணையை பிறப்பித்தார். சம்பிரதாயங்களும் சடங்குகளும் புத்த மதத்துக்கு விரோதமானவை. விட்டொழியுங்கள்.

மேலும், கௌதமர் கண்ட பௌத்தம் புனித நூல்களைத் தாண்டியது என்றும் தேடலாலும் தியானத்தாலும் மெய்யறிதலாலும் அறியப்பட வேண்டியது என்றும் பிக்குகளுக்கு அவர் புரியவைத்தார். பிறகு, பௌதத்தின் தீபமாக, உயிராகக் கருதப்பட்ட தியானத்தை சீனர்களுக்கு அறிமுகப்படுத்த ஆயத்தமானார். அதற்கு முதல் தடையாக சீனர்களின் உடல் இருந்ததைக் கவனித்தார். நோஞ்சான்களாகக் காணப்பட்ட ஷாவோலின் பிக்குகளுக்கு தேகப்பயிற்சியிலிருந்து தன் பாடத்தைத் தொடங்கினார்.

போதிதர்மர் அறிமுகப்படுத்திய இந்த தேகப் பயிற்சிக்கு யிங் ஜிங் (Yijin Jing) என்று பெயர். இதுதான் இன்றைய யிங் ஜிங் குங்ஃபூவுக்கு முன்னோடி என ஷாவோலின் மடத்தில் கூறப்படுகிறது.

இப்படி சீனாவுக்குள் தேகப்பயிற்சியாக அறிமுகமாகி தற்காப்புக் கலையாக வளர்ந்தது தமிழகத்துக் களரி என்னும் கருத்தும் உள்ளது. அதேபோல், ஹூய்கீயின் வெட்டுப்பட்ட கையை போதிதர்மர் தான் கற்ற மருத்துவமுறையை வைத்து மீண்டும் பொருத்தினார் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதாவது பழந்தமிழர் மருத்துவ முறையை போதிதர்மர் பயன்படுத்தி சீனாவில் அதைப் பிரபலப்படுத்தினார் என்கிறார்கள். இதன் மூலம் வர்மப்புள்ளிகளை வைத்து மருத்துவம் பார்க்கும் பழந்தமிழர்முறைதான் சீனத்தில் அக்குபஞ்சர் என பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும் என்ற கருத்தும் உருவாகிறது.


போதிதர்மர் / அத்தியாயம் 9

ஷாவோலின் மடத்திலேயே தங்கிய போதிதர்மர் தான் கொண்டுவந்த தியான ஆன்மத்தை சீனர்களிடத்தில் சிறிது சிறிதாக எத்திவைத்தார். எத்திவைத்தல் என்றால், மனத்தில் இருப்பனவற்றை புத்தகமாக எழுதி, புத்தகத்திலிருந்து பிறர் மனத்துக்கு ஏற்றுவதல்ல. நேரடியாக மனத்திலிருந்து மனத்துக்கு. அதுதான் போதிதர்மர் கண்டுணர்ந்த வழிமுறை. அதுதான் ஜென்.

சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் போதிதர்மர் தன் முதன்மைச் சீடர்கள் எனக் கருதிய நால்வரை அழைத்தார். தனது ஆன்மீக வாரிசை (அதாவது 29ஆம் பௌத்த தலைவர்) அறிவிக்கப்போகிறார் என்று அறிந்து ஷாவோலினே கலகலப்படைந்தது.

ஒருவர் முகம் மற்றவருக்குத் தெரியாத காரிருள் இரவு. சீடர்கள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராக ஷாவோலின் மடத்தின் மத்திய அறையை அடைந்தனர். போதிதர்மர் அவர்களுக்கு முன்பாகவே அங்கு காத்திருந்தார்.

‘நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்க இருக்கிறேன்.’

‘கேளுங்கள் குருவே!’

‘நீங்கள் என்னிடமிருந்து இத்தனை வருடங்களாக என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று ஒருவர் பின் ஒருவராகக் கூறுங்கள்?’ என்றார்.

முதல் மாணவன் தாவ்ஃபூ (Dàofū) கூறினார். ‘புனித நூல்களால் புத்த மதத்தை மட்டுமே அறிய முடியும்; அதனால் நாம் புனித நூல்களை மட்டும் கற்று அத்துடன் கட்டுண்டு விடக்கூடாது. அதேசமயம் இந்நூல்களை விடுத்து எதுவும் செய்யவும் கூடாது.’

‘இதுதான் நீ அறிந்திருக்கிறாய் என்றால், நீ புத்த மதத்தின் தொடக்கத்தை மட்டுமே கற்றுள்ளாய், என் தோலைக்கூட கடக்கவில்லை. இன்னும் நீ கடக்க வேண்டிய பாதை அதிகம்.’

இரண்டாவதாக, தாரணி (Dharani) எனும் பிக்குணி தொடர்ந்தார். ‘தங்களது போதனைகள் எங்களை புத்தரது நிலத்துக்கே அழைத்துச் சென்றது. புத்தரை நேரில் கண்டு அவர் எப்படி விழிப்படைந்தார் என்று படிப்படியாக அவரிடமே கற்றதைப்போல் இருந்தது. அதனை தரிசித்ததே விழிப்படைந்த நிலையை எங்களுக்கு நல்கியது.’

‘நீ பரவாயில்லை, என் தசையை அடைந்துவிட்டாய், அடுத்து?’

‘நீர், நிலம், குளிர், வெப்பம், வானம், பூமி என நாம் பார்ப்பவை அனைத்தும் வெறுமையின் ரூபங்கள். பார்த்தல், தொடுதல், கேட்டல் என நாம் உணர்பவை அனைத்தும் மாயை. உண்மையில் ‘இருப்பு’ என்பதே இல்லை. நீங்கள், நான் என அனைவரும், அனைத்தும் மாயத் தோற்றங்களே, பிம்பங்களே. அழிந்து போகக் கூடியவர்களே’ என்று முடித்தார் மூன்றாம் சீடர் தாவ்யூ (Dàoyù).

‘மிக்க நன்று, நீ என் எலும்புகளை அடைந்துவிட்டாய்!’ என்று கூறி போதிதர்மர் அடுத்து தன் விருப்பத்துக்குரிய சீடன் ஹூய்கீ என்ன கூறப்போகிறான் என்று பார்த்தார்.

ஹூய்கீயிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. எழுந்துநின்றான். கைகூப்பினான். நேரே சென்று போதிதர்மரின் காலில் விழுந்தான். அவ்வளவு தான்.

போதிதர்மர் நெகிழ்ந்தே போனார். ‘நீ என் ஆன்மாவை அடைந்துவிட்டாய், நான் எடுத்துவந்த ஆன்மா தற்போது உன்னிடம்’ என்று கூறி தன் உடைகளையும், பிச்சைப் பாத்திரத்தையும், லங்கவர்த்தன சூத்திரத்தையும் ஹூய்கீயிடம் அளித்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.

ஹூய்கீயின் இச்செயலுக்கு பொருள் என்ன? போதிதர்மரின் செயலுக்கும் வார்த்தைக்கும் என்ன அர்த்தம்?

‘எல்லாம் அறிந்தவன் அறிவிக்கமாட்டான்; அறிவிப்பவன் எல்லாம் அறியமாட்டான்’ என்ற போதிதர்மரின் போதனைக்கு ஏற்றவாறு, ‘நான் அறிந்தவன். அதனை தங்களிடம் நிரூபித்து நற்சான்றிதழ் பெற எனக்கு விருப்பமில்லை’, என்று தன் செய்கையால் தெரிவித்திருக்கிறான் ஹூய்கீ.

போதிதர்மரும் அதனை அறிந்து. ‘நீயே, எனக்குப்பின் என் பணியைத் தொடர்வதற்குத் தகுதி வாய்ந்தவன்’ என்று தெரிவிக்கும் விதமாக தன் உடைகளையும், திருவோட்டையும் ஹூய்கீவிடம் கைமாற்றினார். தான் சீனா சென்ற நோக்கத்தையும் பூர்த்தி செய்தார்.

இவ்வாறாக, ஹூய்கி ஜென்னின் இரண்டாம் குரு (மாஸ்டர்) ஆனார்.

இந்த நிகழ்வில் இருந்து பெறப்படும் கருத்துகளே போதிதர்மர் தோற்றுவித்த ஜென் புத்தமதத்தின் அடிப்படைத் தத்துவங்கள். புத்தரைப்போல் பிரபஞ்ச விழிப்படைய மறை நூல்களின் மூலம் கற்கும் அறிவைவிட அனுபவத்தால் கற்கும் அறிவே முக்கியம். அனுபவம் என்றால் புத்தர் பட்டுணர்ந்த அதே அனுபவம். இதனை செந்தமிழில் ‘பட்டறிவு’ என்பர்.

புத்தர் பெற்ற இந்தப் பட்டறிவை வார்த்தைகளால் ஒருவர் அறிய முடியாது. அதனை ‘ஜென்’ மூலமே அறியலாம். ஜென் என்றால் என்ன?

சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் வெளிநாட்டுப் பெயர்களை உச்சரிப்பதில் ஆரம்பத்தில் இருந்தே சிக்கல். அதனால் தான் போதிதர்மரை சீனர்கள் ‘தாமோ’ என்றும் ஜப்பானியர்கள் ‘தருமா’ என்றும் தங்களுக்கேற்றார் போல் பெயர் வைத்து அழைக்கின்றனர். அதே போல் ‘ஜென்’ என்பதும் ‘சான்’ என்பதும் ‘தியானம்’ என்ற சொல்லின் திரிபே.

சமஸ்கிருத சொல்லான ‘தியானத்துக்கு’, பாலி மொழியில் ‘ஜான்’ என்று பெயர், அதுவே சீன மொழியில் ‘சான்’ என்றானது. ஜப்பானிய மொழியில் ‘ஜென்’ என்றானது. இவ்வற்றுள் இன்று துலங்கிவிட்ட பெயர் ’ஜென்’ என்பதே. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் போதிதர்மர் சீனா எடுத்துச் சென்ற தியானம் கிட்டத்தட்ட ஜென் ஆனது. ஜென் புத்தமதத்தின் தனிப் பிரிவாக உருமாறியது. செக்ஸ் சாமியார் எனச் செல்லமாக அழைக்கப்படும் ஓஷோ ரஜ்னீஷை உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவரும் ஜென் பிரிவு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தத்தால் ஈர்க்கப்பட்டவர்தான். அவர் ஏன் அந்தப் பட்டப் பெயரை பெற்றார் என்றால், கலவியிலும் தியானம் செய்ய முடியும் (அதாவது கலவியிலும் ஜென் சாத்தியம்) என ஆராய்ந்து அறிவித்ததால்தான்.

போதிதர்மர் தாம் வந்த நோக்கம் நிறைவடைந்தது என்று உணர்ந்தார்.

ஆனால் அதற்குப் பின் நடந்த நிகழ்வுகள்?

எப்போதுமே தலைமைப் பதவி என்பது அமைதிக்கு உரித்தானதல்ல என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான ரத்தச் சான்றுகள் இருக்கின்றன. ஷாவலின் பதவியும் அப்படித்தான் ஆனது. போதிதர்மர் இருந்தவரை அந்த நாற்காலி ‘பளிச்’சென்றுதான் பிரகாசமாக இருந்தது. எப்போது அவரை விட்டு ஹூய்கி கைக்கு மாறியதோ. அன்றே அதற்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது.

ஹூய்கிக்கு எப்படி போதிதர்மர் தன் பதவியைத் தரலாம்? அவன் நம்மைவிட எதில் சிறந்துவிட்டான்? ஒழுங்காக அவனுக்கு தியானம்கூட செய்ய வராது. அனாதை. பரதேசி. நம்மைவிடக் கீழான தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன். காலில் விழுந்து பாசாங்கு செய்து போதிதர்மரை ஒருவாறு கவிழ்த்துவிட்டான், சதிகாரன். அவன் எப்படியிருந்தாலும், முற்றும் அறிந்த போதிதர்மருக்கு எங்கே சென்றது புத்தி? அவருக்கு நாம் அப்படி என்ன துரோகம் செய்தோம்? அவர் உண்ணும் சோற்றில் மண்ணையா அள்ளிப்போட்டோம். சரி, இதுவரை மண்ணை அள்ளிப்போடவில்லை. திறமையான உண்மைச் சீடர்களை உணர்ந்துகொள்ள முடியாத அவரது சோற்றில் இனி நஞ்சைக் கலந்தாலும் தப்பில்லை.

ஷாவோலினில் சிலரது மனம் மேற்படி சிந்திக்கத் தொடங்கியது. அது செயல்படுத்தவும் பட்டது. ஆனாலும் எப்படியோ போதிதர்மர் அதிலிருந்து தப்பினார். மீண்டும் ஒருமுறை நஞ்சேற்றம், மீண்டும் போதிதர்மர் தப்புதல். மீண்டும் ஒருமுறை நஞ்சேற்றம். இப்படி மாற்றி மாற்றி செய்துகொண்டே இருந்தால் ஒரு சாமானியன்கூட விழித்துவிடுவான். ஆனானப்பட்ட போதிதர்மருக்குத் தெரியாதா என்ன? இறுதியில் ஒரு நாள் அவர் தமக்கு உணவில் இடப்பட்ட நஞ்சை மனம் விரும்பி உண்டார். சுயவிருப்பத்துடன் இறந்தார்.

இப்படி மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் ஃபிடல் காஸ்ட்ரோவின் ‘தப்புதல்’ படலத்தை விஞ்சியிருப்பார். விதியை வெல்ல யாரால் இயலும்?

போதிதர்மரின் மரணம் குறித்து இன்னும் சில கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், பெரும்பாலான நூல் ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்து இதுதான்.

போதிதர்மர் இறந்த பிறகு ஹுய்கீ தானாகவே ஷாவோலினை விட்டு வெளியேறினார். சீனா, ஜப்பான் என தேசம் தேசமாக தியானத்தை எடுத்துச்சென்றார். போதிதர்மருக்குப் பின் ஜென் பௌத்த பிரிவின் இரண்டாம் உபதேசராக சீனம் முழுவதுமே அவரை ஏற்றுக்கொண்டது. ஆனால், ஷாவோலின் மட்டும் தனிப் பாதையில் பிரவேசித்துக் கொண்டிருந்தது.

போதிதர்மர் இறந்து மூன்று வருடங்கள் ஓடியிருந்தன.

பமிர் மலைச்சாரல், இதமான காற்றும், அதன் ஈரப்பதமும் அதனை கடந்து செல்பவர்களை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. வெளிநாட்டிலிருந்து சாங் யுங் என்ற அரச தூதுவன் தன் வேலையை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கிட்டத்தட்ட மூன்று வருட காலத்துக்குப் பின் தனது தாயகமான ஷாவோலின் நோக்கி வந்துகொண்டிருந்தான். அப்போது தூரத்தில் யாரோ ஒரு துறவி மெதுவாக நடந்து வருவதைக் கண்டான்.

‘யார் அவர், காலில் செருப்பில்லை. ஆனால் கைத்தடியில் செருப்பொன்று தொங்குகிறது. இந்தியத் துறவிபோல் தெரிகிறார். யார் இது? அட,  நம் போதிதர்மர்!’ என வியந்து யுங் அவரை நோக்கி விரைந்தான். யுங்குக்கு போதிதர்மர் இறந்தது அதுவரை தெரியாது. ‘மாஸ்டர் கொஞ்சம் நில்லுங்கள். நானும் உங்களுடன் வருகிறேன்’ என்று கூவிக்கொண்டே யுங் அவர் பின்னாலேயே ஓடினான். அவர் விலகிச் சென்றார். அவன் விடவில்லை. துரத்திக் கொண்டே பின்னால் சென்றான். ஓரிடத்தில் அவரும் நின்றார்.

‘மாஸ்டர், காலில் காலணி ஏதும் அணியாமல், ஒரே ஒரு செருப்பை தடியில் கட்டித் தொங்கவிட்டபடி எங்கே செல்கிறீர்கள்?’ என்று வினவினான் யுங்.

‘தற்போது நீ எங்கே செல்கிறாய்?‘’

‘ஷாவோலினுக்கு…‘’

‘ஷாவோலினில் நீ அதை அறிவாய், செல்’, என்று சொல்லிவிட்டு போதிதர்மர் நடந்து கொண்டே இருந்தார்.

சரி, போதிதர்மர் ஏதாவது அவசர வேலையாகச் சென்றுகொண்டிருப்பார் என எண்ணி யுங் அவரை வணங்கிவிட்டுக் கிளம்பினான். சில மணி நேரங்களில் யுங், ஷாவோலின் அடைந்தான். தன் வீட்டுக்குச் சென்று இளைப்பாறிவிட்டு கடைத்தெருவுக்கு வந்தவன், தனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வழியில் தான் போதிதர்மரைப் பார்த்த விவரத்தைப் பகிர்ந்துகொண்டான்.

‘பமிர் மலை நோக்கிச் சென்ற போதிதர்மர் எதற்காக ஒருகால் செருப்பை தன் கைத்தடியில் கட்டித் தொங்கவிட்டிருந்தாரோ தெரியவில்லை’ என்று அவன் சொல்ல, நண்பர்கள் யுங்கை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘போடா பைத்தியக்காரா போதிதர்மர் இறந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. கனவேதும் கண்டாயா என்ன?’ என்று கேலி செய்தனர்.

யுங் அதிர்ச்சியிடைந்தான். ‘என்ன போதிதர்மர் இறந்து விட்டாரா. இல்லை, இல்லை உண்மையிலேயே நான் அவரைப் பார்த்தேன்’ என்று யுங் சத்தியம் செய்தான்.

அப்பக்கம் வந்த ஒற்றர்கள் மூலம் இது மன்னன் காதுக்குச் சென்று சேர்ந்தது.

மன்னன் யுங்கை அழைத்து விசாரித்தான். யுங் தான் கண்டவற்றை அப்படியே சொன்னான். அவன் பேச்சை நம்பாமல் கோபமடைந்த மன்னன், போதிதர்மர் விஷயத்தில் பொய் கூறிய குற்றத்துக்காக யுங்கை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். இப்போதும் யுங் மனம் திருந்தி தான் சொன்னது பொய்தானென்று ஒப்புக்கொண்டால் விடுதலை அடையலாம் என ஒரு வாய்ப்பும் அளித்தான்.

யுங் மனம் கலங்கவில்லை. தான் உண்மையிலேயே போதிதர்மரைக் கண்ணாரக் கண்டதாக உறுதியாகக் கூறினான். யுங் பொய் கூறுபவனல்ல என்றும் நேர்மைக்குப் பெயர் பெற்றவன் என்றும் மன்னனுக்கும் தெரியும் என்பதால், யுங்குக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஷாவோலின் மட பிக்குகளிடம் விசாரணை நடத்த விரும்பினான்.

பிக்குகள் அனைவரும் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

‘பிக்குகளே, போதிதர்மரைக் கண்டதாக யுங் என்பவர் சத்தியம் செய்து கூறுகிறார். தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்றான் மன்னன்.

குலை நடுங்கிப் போனது ஷாவோலின் மட பிக்குகளுக்கு. தாங்கள் போதிதர்மரை நஞ்சிட்டுக் கொன்ற விஷயம் எதுவும் யுங்குக்குத் தெரிந்து விட்டதோ? மழுப்ப ஆயத்தமாகினர்.

‘போதிதர்மரது உயிர் பிரிந்த பின்னர் நாங்களல்லவா, அவரது உடலை அவர் ஒன்பதாண்டுகள் தவமிருந்த குகைக்குள் நல்லடக்கம் செய்தோம்‘

‘இல்லை, யுங் கூறுவதை வைத்துப் பார்த்தால் அவன் உண்மை உரைப்பதாகவே தெரிகிறது. அவன் ஏன் அவசியமின்றி நம்மிடம் பொய் சொல்ல வேண்டும்.’ என்றான் மன்னன்.

‘மன்னா, தங்களுக்கே சந்தேகம் வந்தபின் பேசிப் பயனில்லை, வாருங்கள் அவரது சமாதியை உடைத்துக் காண்பிக்கிறோம்’ என்றனர் ஷாவோலின் பிக்குகள்.

‘தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; மக்கள் அவ்வாறு சந்தேகிக்கின்றனர். மன்னன் மக்கள் பிரதிநிதி அல்லவா? நம் மதத்தில் சமாதியை உடைப்பதற்கு இடமிருந்தால், அவ்வாறே செய்து மக்கள் சந்தேகத்தை தீர்த்துவிடுவோம்.’ என்றான் மன்னன்.

‘இடம் உள்ளது, வாருங்கள் செல்வோம்.’ பிக்குக்கள் ஆவேசமாக குகை நோக்கிப் புறப்பட்டனர். மக்கள் பின்தொடர்ந்தனர்.

போதிதர்மரது நெடுந்துயில் அறை திறக்கப்பட்டது. இல்லை உடைக்கப்பட்டது. நம்மூர் கோவில்களின் கருவறை திறப்பைப் போல.

உள்ளே உடலும் இல்லை, எலும்பும் இல்லை, துணியும் இல்லை. உள்ளே ஒரே ஒரு செருப்பு மட்டுமே அனாதையாகக் கிடந்தது. மிரண்டு போன பிக்குகள் சிரம் தாழ்த்தி வணங்கி மண்டியிட்டனர்.

மாஸ்டர் தாமோ (போதிதர்மர்), தாயகம் திரும்பி விட்டார் என்று உணர்ந்துகொண்டனர்.

இதன் பின்னர் ஷாவொலின் மட பிக்குகள் மனம் திருந்தி ஒன்றுகூடி ஹுய்கீயை அழைத்து வந்து மடத்தை அவர் பொறுப்பிலேயே ஒப்படைத்தனர்.

இதுவரை பார்த்தவை அனைத்தும் போதிதர்மரின் மரணத்தைப் பற்றி சீனர்கள் கூறும் கருத்தாகும். இதுவே பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் கருத்தும்கூட. அதன்படி போதிதர்மர் சாகவில்லை. தாயகம் திரும்பிச் சென்றுவிட்டார்.

இவை போக போதிதர்மரின் இறப்பைப் பற்றி வேறு சில கருத்துகளும் நிலவுகின்றன. போதிதர்மர், சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தபோதே இறந்துவிட்டார் என்பது சிலரது நம்பிக்கை.

ஜப்பானியர்களின் கூற்றுப்படி போதிதர்மர் அமர்ந்திருந்தபோதே மறைந்துவிட்டார். இங்கு மறைந்துவிட்டார் என்றால் மரித்துவிட்டார் என்று பொருள் இல்லை. அப்படியே மாயமாக மறைந்துவிட்டார் என்று பொருள். இரு நூல்களை அங்கு விட்டுவிட்டு மாயமாக மறைந்தார். அவை உடற்பயிற்சி பற்றி விளக்கும் ‘யி ஜின் ஜிங் (Yi Jin Jing)’ மற்றும் தியானத்தை விளக்கும் ‘க்ஷி சூய் ஜிங் (Xi Sui Jing)’ ஆகியன. யி ஜின் ஜிங்கே பின்னர் தோன்றிய யிங் ஜிங் குங்ஃபூவுக்கு அடிப்படை நூலாம். ‘க்ஷி சூய் ஜிங்’ கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாம்.

இவைபோக பமிர் மலை வழியே சென்ற போதிதர்மர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டதாகவும், போகிற வழியில் வியட்னாம், கம்போடியா, மலேசியா ஆகிய தேசங்களுக்குச் சென்றதாகவும், அவர் இறக்கவே இல்லை என்றும், ஒவ்வொரு நூற்றாண்டும் அவதரிப்பதாகவும் பல கதைகள் உலவுகின்றன.

இந்த சீன, ஜப்பானிய, பிற கூற்றுக்களின் முடிவில் நமக்குத் தெரியவரும் செய்தி. ‘போதிதர்மர் இன்றும் வாழ்கிறார்.’

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மகாத்மா காந்தி, ஆபிரஹாம் லிங்கன், நெப்போலியன், சே குவேரா, நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், எம்.ஜி.ஆர், பிரபாகரன் போன்ற பெரும் புள்ளிகளின் மரணத்தை மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் தலைவரைப் பிரிந்த நிலையை சாமானிய மக்கள் விரும்பவதில்லை என்பதே யதார்த்தமான உண்மை.

அதனால் தங்கள் தலைவன் வாழ்கிறான் என பிறரை நம்ப வைக்க சில கதைகளை இவர்கள் தோற்றுவிப்பதும் வழக்கம். இதனை legend என்றழைப்பர். புனைக்கதைகள் முற்றிலும் கற்பனையாகவும் இராது, முற்றிலும் உண்மையாகவும் இராது; சிறிதளவு உண்மையை வைத்துக்கொண்டு கற்பனையால் புனையப்படுபவை என்று கொள்ளலாம்.

இவ்வாறு புனையப்பட்ட கதைகளின் ஆயுட்காலம் இறந்த நபரைப் பொருத்து வேறுபடும். சில ஒருசில நாட்கள், சில ஓரிரு மாதங்கள், சில ஓரிரு ஆண்டுகள், சில முடிவற்றவை. இம்முடிவற்ற புனைக்கதைகள் புராணக் கதைகள் எனப்படுகின்றன. புராணத்துக்கு பாரதத்தில் எந்தப் பஞ்சமும் இல்லை. அந்த அளவுக்கு பெருந்தலைவர்கள் நிரம்பி வழிந்த பூமி இது.

போதிதர்மர் மீதிருந்த அபரிமிதமான அன்பு, கண்மூடித்தனமான அன்பு மக்களை பல்வேறு புனைகதைகள் புனையத் தூண்டியது. அதுவும் குருட்டுத்தனமான கட்டுக்கதைகள், நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மேலும் பல.

போதிதர்மரை ஆதிமுதல் அலசத் தொடங்கிய நாம் அந்தமாகிய இப்புனைவுகளையும் கொஞ்சம் பார்ப்போம். புனைவுகளில் சீனர்களை லட்சம் மடங்கு மிஞ்சுகின்றனர் ஜப்பானியர்கள்.


About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply