எண்ணம்… சொல்… செயல்..!
எபிமெனிடஸ் என்கிற கிரேக்க அறிஞர் இருந்தார். அவருக்கு கிழக்கத்திய ஞானம் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நீண்ட தீர்த்தயாத்திரை மேற்கொண்டார். புத்தரைச் சந்திக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதேபோல், இறுதியாக புத்தரைச் சென்றடைந்தார்.
‘நான் ஒரு கேள்வி கேட்பதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன். உலகத்திலேயே சிறந்த கேள்வி எது? சிறந்த பதில் எது?’ என்று புத்தரிடம் கேட்டார் எபிமெனிடஸ்.
அதற்கு புத்தர், ‘நீங்கள் கேட்டதுதான் மிகச் சிறந்த கேள்வி; இதற்கு நான் சொன்னதுதான் மிகச் சிறந்த பதில்’ என்று குறிப்பிட்டார். சாதகமற்ற சூழலையும் சாதகமாக மாற்றிக் கொள்வதுதான் ஞானிகளின் சிறப்பு. புத்தரின் தந்தை சுத்தோதனருக்கு தொத்தோதனர், சக்கோதனர், சுக்லோதனர், அமிதோதனர் என நான்கு சகோதரர்கள். அமிதோதனரின் மகன் பெயர் ஆனந்தர். அவரும் துறவை மேற்கொண்டு, புத்தருடன் வாழ்ந்தார்.
ஆனந்தர் ஒருநாள் நீர் பருக ஆற்றுக்குச் சென்றார். அங்கே, பிராக்ரதி என்கிற பெண், குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளிடம் பருக நீர் கேட்டபோது, தான் தாழ்ந்த சாதி என்று சொல்லி, நீர் தர மறுத்தாள்.
‘நான் நீரைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். உன் சாதியைப் பற்றிக் கவலைப்படவில்லை” என்றார் ஆனந்தர். அதன்பின் அந்தப் பெண், தன் குடத்திலிருந்து அவருக்கு நீர் அளித்தாள்.
பின்னர் வீட்டுக்குத் திரும்பிய அந்தப் பெண், தன் தாய் மாதங்கியிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி, ‘நான் மணம் செய்துகொண்டால், ஆனந்தரையே மணப்பேன்’ என்றாள்.
மாதங்கி ஆனந்தர் பற்றி விசாரித்து அறிந்து, துறவியோடு திருமணம் நடக்க சாத்தியமில்லை என்றாள். ஆனால், பிராக்ரதியோ, ‘தாயே! உங்களுக்குத்தான் வசியக்கலை தெரியுமே! என் நோக்கத்தை அடைய நீங்கள் ஏன் அதைப் பயன்படுத்தக் கூடாது?’ என்று வற்புறுத்தினாள்.
மாதங்கி ஆனந்தரை விருந்துண்ண அழைத்தாள். அப்போது திருமணம் பற்றிப் பேச்செடுத்தாள். ஆனந்தரோ, தாம் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று தீர்மானமாகக் கூறிவிட்டார். ‘நீங்கள் என் மகளைத் திருமணம் செய்து கொள்ளவில்லையாயின், அவள் தற்கொலை செய்து கொள்வாள். தங்கள்மீது அவள் அத்தனை பற்று கொண்டுள்ளாள்’ என்றாள் மாதங்கி. ‘மன்னிக்கவும். என்னால் ஏதும் செய்ய இயலாது’ என்று உறுதிபடச் சொன்னார் ஆனந்தர். மாதங்கி உள்ளே சென்று தன் மகளிடம், ஆனந்தர் மணக்க மறுத்த விவரத்தைக் கூறினாள்.
அந்தப் பெண் அழுதாள். ‘தாயே! உன் வசியக்கலை என்ன ஆயிற்று?’ என்று கேட்டாள். ‘ததாகதருக்கு எதிராக என் வசியக்கலையைப் பயன்படுத்தி வெல்ல முடியாது’ என்றாள் மாதங்கி.
பின்பு அவள், தனது வசியக்கலையைப் பயன்படுத்தி ஆனந்தரின் உடைகளில் தீப்பற்றச் செய்தாள். அப்போதும் ஆனந்தர் மசியவில்லை. திரும்பி வந்த அவர், புத்தரிடம் நடந்தவற்றை விவரித்தார்.
மறுநாள் அந்தப் பெண், ஆனந்தரைத் தேடி ஜேத வனத்துக்கு வந்தாள். அது மட்டுமல்ல, அவர் எங்கு சென்றாலும் அவரைப் பின்தொடர்ந்தாள் அந்தப் பெண். இதையும் ஆனந்தர் புத்தரிடம் தெரிவித்தார்.
புத்தர் அந்தப் பெண்ணை அழைத்துக் காரணம் கேட்டபோது, ‘ஆனந்தர் மணமாகாதவர் எனக் கேள்விப்பட்டேன். நானும் திருமணமாகாதவள்தான். அவரை நான் மணக்க விரும்புகிறேன்’ என்றாள் அவள்.
புத்தர், ‘ஆனந்தர் ஒரு பிக்கு. அவர் தலையில் முடியே இல்லை. நீயும் உன் தலையை முழுமையாக மழித்துக்கொண்டால், என்ன செய்யவேண்டுமோ அதை நான் செய்வேன்’ என்று சொன்னார். அவள் தன் தாயிடம் சென்று, இதைச் சொன்னாள்.
மாதங்கி கோபத்துடன், ‘நீ அப்படிச் செய்யக்கூடாது! ஆனந்தரைப் போன்ற ஒரு பிக்குவை மணப்பதில் ஏன் அவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்? அவரைவிடச் சிறந்த மனிதருக்கு உன்னைத் திருமணம் செய்துவைக்கிறேன்’ என்றாள்.
ஆனந்தரோடு மணம் அல்லது மரணம் என்பதில் உறுதியாக இருந்தாள் பிராக்ரதி. வேறு வழியின்றி, முடியை மழித்துக்கொள்ள மகளுக்குச் சம்மதம் தெரிவித்தாள் மாதங்கி. பிராக்ரதி மீண்டும் புத்தரிடம் சென்றாள்.
புத்தர் அவளிடம், ‘ஆனந்தரின் உடலில் எந்தப் பகுதியை நீ நேசிக்கிறாய்? எதை நீ போற்றுகிறாய்?’ என்று கேட்டார்.
‘நான் அவருடைய நாசியை நேசிக்கிறேன்; வாயை நேசிக்கிறேன்; செவியை நேசிக்கிறேன்; குரலை நேசிக்கிறேன்; நடையை நேசிக்கிறேன்’ என்றாள் பிராக்ரதி.
‘அவருடைய கண்கள் கண்ணீரின் இருப்பிடம்; நாசி, தூசியின் இருப்பிடம்; வாய் உமிழ்நீரின் இருப்பிடம்; செவி, அழுக்கின் இருப்பிடம்; அவருடைய உடலோ மலம், சிறுநீர் ஆகியவற்றின் பாத்திரம்’ என்றார் புத்தர்.
பிராக்ரதி ஆழ்ந்து யோசித்தாள். ஆனந்தரை மணந்துகொள்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதை அறிந்தாள். ‘அறியாமை காரணமாக நான் ஆனந்தரைப் பின்தொடர்ந்தேன். இப்போது என் மனம் தெளிவுற்றது. விபத்துக்குள்ளான பிறகு, கடலில் நீந்தி மறு கரையைச் சேர்ந்துவிட்ட ஒரு மாலுமியைப்போல் நான் இப்போது இருக்கிறேன். காப்போர் இல்லாத மூதாட்டிக்குக் காப்பு கிடைத்ததுபோல் உள்ளேன். பார்வை பெற்ற குருடி போல உணர்கிறேன். புத்தர் தம் மெய்யறிவுரைகளால் உறக்கத்தினின்று என்னை எழுப்பிவிட்டார்’ என்றாள். பிறகு, பிராக்ரதி பிக்குணியாக மாறினாள்.
இதுபோன்ற ஒரு சம்பவம், குருநானக் வாழ்விலும் நடந்தது. நானக் ஹரித்துவார் சென்றார். அங்கே கங்கைக் கரையில் நின்றுகொண்டு, பலரின் செய்கைகளைக் கவனித்தார். அவர்கள் தங்கள் கைகளை இணைத்து ஆற்றுக்குள் விட்டு, தண்ணீரை எடுத்து இடப் பக்கமாகத் தெளித்துக் கொண்டிருந்தார்கள். ‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’ என்று அந்த யாத்ரீகர்களைக் கேட்டதற்கு, ‘சொர்க்கத்தில் இருக்கும் எங்கள் முன்னோர்களைச் சென்று இந்தப் புனித நீர் அடைய வேண்டும். அதற்காகத்தான் சூரியன் உதிக்கும் கிழக்குப் பக்கமாகத் தண்ணீரை அள்ளி வீசுகிறோம்’ என்றார்கள்.
குருநானக் உடனே தண்ணீரில் இறங்கி, தன் இரு கைகளையும் சேர்த்து தண்ணீரை அள்ளி மேற்கு நோக்கி வீசத் தொடங்கினார். ‘அவர் ஏன் இப்படி எதிர்மறையாகச் செய்கிறார்?’ என்று எல்லோரும் வியந்தார்கள். அவரிடம் கேட்டதற்கு, ‘பஞ்சாபில் இருக்கும் என் பண்ணைக்கு நீர் பாய்ச்சுவதற்காக இப்படிச் செய்கிறேன்’ என்றார் அவர்.
‘உங்களுக்கென்ன பைத்தியமா? அவ்வளவு தொலைவில் இருக்கும் பண்ணைக்கு இந்த நீர் எப்படிப் போய்ச் சேரும்?’ என்று கேலியாகக் கேட்டார்கள் அவர்கள்.
‘நீங்கள் கிழக்கு நோக்கி வீசும் நீர், சொர்க்கத்திலிருக்கும் உங்கள் முன்னோர்களின் ஆவியை அடையுமானால், அதைவிட அருகில் இருக்கும் என் பண்ணையை இந்த நீர் அடையாதா என்ன?’ என்று கேட்டார் குருநானக்.
ஒருமுறை குருநானக், முல்தான் என்கிற பகுதிக்குச் சென்றார். அப்போது அங்கே ‘பிர்’ என்கிற ஞானிகள் வசித்து வந்தார்கள். நானக் வருவதை அறிந்ததும், அவர்கள் ஒரு குவளையில் விளிம்பு வரை பாலை நிரப்பி அவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதன் பொருள், ‘இந்த நகரம் ஏற்கெனவே புனித மனிதர்களால் நிரம்பி வழிகிறது. இங்கே இன்னொருவருக்கு இடமில்லை’ என்பதுதான். குருநானக் அந்தப் பாலில் ஒரு மல்லிகை மலரை வைத்துத் திருப்பி அனுப்பினார். அந்த மலர், பால் துளியும் கீழே வழியாமல் மிதந்தது. அதற்குப் பொருள், ‘நான் இந்த நகரத்தில் பூவைப்போல இருப்பேன்; என்னால் உங்களுக்கு எந்தக் குறையும் நேரிடாது’ என்பதுதான்.
இந்தச் செய்திக்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘பாத்திரத்தில் வைக்கப்பட்ட பால் திரிந்துவிடுவதைப்போல, உங்கள் அறிவு நாளடைவில் திரிந்துவிடலாம்; ஆனால், எங்கள் ஞானம் மல்லிகை மலர்போல எல்லாத் திசைகளிலும் பரவி, எப்போதும் வாழ்ந்திருக்கும்’ என்பதுதான் அது.
‘நீல மலைகளுக்கு அப்பால்’ என்கிற புத்தகத்தில் பார்சிகளின் வரவைப் பற்றி ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவை நோக்கி அவர்கள் வந்தார்கள். எல்லா மார்க்கங்களுக்கும் இடம் அளிப்பதாக, இந்தியா எப்போதும் இருந்துவந்திருக்கிறது. அவர்கள் வந்தபோது, வடமேற்கு மாகாணத்தைச் சார்ந்த ஒரு மன்னர், ”எங்கள் இடம் ஏற்கெனவே நிரம்பியிருக்கிறது; உங்களுக்கு இடமில்லை’ என்ற பொருளில் ஒரு குவளை நிறைய பாலை அனுப்பினாராம். உடனே பார்சிகளின் மூத்த குரு, அந்தப் பாலில் சர்க்கரையைக் கலந்து திருப்பி அனுப்பினாராம். அதன் பொருள், ‘நாங்கள் உங்கள் இருப்பில் இனிப்பைச் சேர்க்கவே வந்திருக்கிறோம்’ என்பதுதான். பாலைச் சுவைத்துப் பார்த்த மன்னன், அவர்களை அனுமதித்தான்.
மகத்தான மனிதர்கள் கோபப்பட்டு சொற்களை உதிர்ப்பதில்லை. அவர்கள் எடுத்த எடுப்பில் எதற்கும் மறுப்பு சொல்வதுமில்லை; எதிர்த்துப் பேசுவதுமில்லை; யாருடைய செய்கையையும் முட்டாள்தனம் என்று கடிந்துகொள்வதும் இல்லை. அவ்வாறு செய்வது எதிர் விளைவையே ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் அவர்கள் பிரச்னையைப் பக்குவமாகக் கையாளுகிறார்கள். ஒருவரை அவர் வழியிலேயே சென்று திருத்துவதுதான் சரி என்று நினைக்கிறார்கள்.
‘ஆயிரம் எண்ணங்களைவிட ஒரு சொல் மேலானது’ என்றார் புத்தர். ஒருவரைப் பற்றி நம் மனத்துக்குள் எவ்வளவு இரக்கப்பட்டாலும் அதை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் எதிராளிக்கு அது ஆறுதலை அளிக்காது. மாறாக, ஒரே ஒரு சொல்லை இனிமையாக உதிர்த்தால், அது காயம்பட்டவருக்கு வலியை மட்டுப்படுத்தும். ‘ஆயிரம் சொற்களைவிட ஒரு செய்கை மேலானது’ என்றும் புத்தர் சொன்னார். காரணம், செய்கைகளின் மூலமாகத்தான் பெரிய உண்மைகளை விளங்கச் செய்யமுடியும். சொற்கள் செய்யாததை செயல்கள் செய்யும். ஆம்… ஆயிரம் ஆறுதல் சொற்களை உதிர்ப்பவனைவிட காயத்துக்கு மருந்து தடவுபவனே மகத்தானவன்.
Leave a Reply
You must be logged in to post a comment.