சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே!
தமிழ் இலக்கியப் பேச்சாளர்கள் மேடைகளில் பேசும் போது இந்த பாடல் வரியை மேற்கோளாகக் காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே மேற்கோள் காட்டி விட்டு வேறு கருத்துக்களைப் பேசுவார்கள். அதேபோல், இப்படிப் பேசுபவர்களில் ஒருவராவது இந்தப் பழந்தமிழ்ப் பாடலை முழுமையாகப் படித்திருப்பார்களா? அப்படியே படித்திருந்தாலும் அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்திருப்பார்களா என்று வினா எழுப்பிச் சிந்திக்க வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ஏனெனில் அண்மையில் மறைந்த அவர்கள் கூட இந்த வரியை மேற்கோள் காட்டிப் பேசியதாகவும் அவர் தமிழில் புலமை பெற்றவராக இருந்ததாகவும் தொலைக் காட்சிச் செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் அவரே கூட இந்தப் பாடலை முழுமையாகப் படித்து யாருக்கும் பொருள் உரைத்ததாகத் தெரியவில்லை. ஒரு அறிவாளி மற்றொரு அறிவாளியோ அல்லது சிந்தனையாளனோ அளிக்கும் கட்டுரை அல்லது பாடலின் ஒரு வரியை மட்டுமே படித்து மேற்கோள் காட்டிப் பேசினால் மற்ற அறிவாளிகள் ஏற்றுக் கொள்வார்களா? அது பகுத்தறிவுக்கோ, அறிவியல் முறைக்கோ உகந்ததா? ஆனாலும், அனைவரும் இதே முறையிலேயே தமிழர்களது உயர்ந்த சிந்தனைகளை இருட்டடிப்புச் செய்து வருகின்றனர். அல்லது இருட்டடிப்புச் செய்வதற்குத் துணை போகின்றார்கள்.
கணியன் பூங்குன்றனார் எழுதிய இந்தப் பாடலின் முழுப் பொருளை சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம். இந்தப் பாடல் தமிழர் மதத்தையும், அறிவியலையும் முழுமையாக நமக்குத் தெரிவிக்கின்றது. இப் பாடலையும், இதன் பொருளையும் கீழே தருகின்றோம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறம்: 192)
பொருள்
இந்தப் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
உயிர் பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். இங்கே புலவர் விதிவழிதான் எல்லாம் நடக்கும் என்ற கருத்தைப் புறந்தள்ளி எல்லாம் இயற்கை வழி நடக்கும் என்கிறார். அதனை அறிவால் தெளிந்ததாகச் சொல்கிறார். சாதல் புதுமை இல்லை. வாழ்தல் இன்பமென்று மகிழ்ச்சி அடையக் கூடாது என்கிறார்.
சாதல் புதுமை இல்லை. அது இயற்கை. இந்த உண்மையை புத்தர் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு செவிவழிக் கதை எண்பிக்கிறது.
சாவு என்பது இயற்கை. மனிதனின் கடைசித் தோல்வி. தோன்றிய பொருள் யாவும் அழிந்தே ஆக வேண்டும் என்பது நியதி. மணிமேகலையில் நாகர்களின் தலைவனுக்கு சாதுவன் கூறும் அறுவுரைகளிலும் நிலையாமைக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
“பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்” (மணி 16 86-89)
விசாகை தன மாமன்மகள் தருமதத்தனுக்குக் கூறும் அறிவுரையில்,
“இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது”
என உணர்த்துகின்றாள்.
காதறுந்த ஊசியும் வராது காண் கடை வழிக்கே என்கிறார் பட்டினத்தடிகள்.
காலங்கள் இரண்டுதான் உண்டு. அவை இறந்த காலம் மற்றும் எதிர்காலம். நிகழ்காலம் என்றொன்றில்லை. இப்படிப் போதித்தவர் இந்திய தத்துவ ஞானிகளில் சிறந்தவர்களில் ஒருவரான புத்தர். அவரது வாழ்க்கையில் ஒரு முறை ஓர் ஊருக்குப் போயிருந்தார். அந்த ஊரில் வாழ்ந்த ஏழைத் தாயின் ஒரேயொரு ஆருயிர் புதல்வன் இறந்துவிட்டான். புத்தரது வருகையை அறிந்து கொண்ட அந்தத் தாய் புத்தரிடம் ஓடோடிச் சென்று இறந்த தன் மகனை எழுப்பித் தரவேண்டும் என வினயமாக முறையிட்டாள். உலகத்தில் இறப்பு என்பது இயற்கையானது. எனவே அதற்கு வருந்துவது அஞ்ஞானம். அந்த அஞ்ஞானத்தைப் போக்கி அத்தாயின் கவலையைப் போக்க புத்தர் நினைத்தார். அந்தத் தாயைப் பார்த்து ‘ தாயே….! உன் வேதனை அறிவோம் சரி உன் மகனை நான் திருப்பி தருகிறேன் அனால் அதற்கு நீ இறப்பே இல்லாத வீட்டில் இருந்து ஒரு பிடி கடுகு கொண்டு வர வேண்டும் என்றார்!
தாயே! நின் மனக்கவலை – ஒழிந்திடத்
தக்கநல் மருந்தளிப்பேன்;
சேயினை எழுப்பிடுவேன் – விளையாடித்
திரியவும் செய்திடுவேன். 217
நாவிய கடுகுவேண்டும் – அதுவுமோர்
நாவுரி தானும் வேண்டும்;
சாவினை அறியாத – வீட்டினில்
தந்ததா யிருக்கவேண்டும்! 218
நாவுரி – நாழியுரி என்பதன் சுருக்கம்.
நாழி + உரி – ஒன்றரைப்படி.
அந்த தாயும் தன் மகன் திருப்பி கிடைக்க வேண்டி ஒவ்வொரு வீடாக ஏறியிறங்கினாள். ஒரு வீடு கூட இறப்பற்ற வீடாக இல்லதை அறிந்து மனம்வெ கலங்கினார். மீண்டும் புத்தரிடம் சென்றார்!
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் ஒரு நாள் இறக்கர்தான் போகிறார்கள். இனிப் பிறக்கப் போகிறவர்களும் இறக்கத்தன் போகிறார்க. அது நிச்சயம். வெறும் கையுடன் நின்ற அவரை கண்டு ‘பார்த்தாயா தாயே இழப்பற்ற வீடு ஏது? இறப்பற்ற மனிதர் தான் ஏது? என்றார்……. அந்த தாயும் பிறரும் தன்னை போல் வாழ்வில் இழப்பை சந்திக்கிறார்கள் என்று உணர்ந்து மனம் தேறினார்!
பூங்குன்றன் தொடங்கி ஒளவையார் வரை, வள்ளுவன் தொடங்கி சாத்தனார் வரை, அதிவீரராமன் தொடங்கி திருமூலர் வரை வாழ்க்கை நிலையாமை பற்றிச் சொல்லி உயிரோடு இருக்கும் போது அறம் செய்க என்றார்கள். அறத்தினால் வருவதே இன்பம் என்றார்கள். மற்றெல்லாம் வெறும் புகழ்ச்சிக்காகச் செய்யப்படும் ஆரவாரம் என்றார்கள். அறம் ஒன்றே போகும் வழிக்கு உற்ற துணையாகும் என்றார்கள்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள் – 36)
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.