பகவன் புத்தர் எவற்றை போதித்தார்

தமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்
Wednesday, July 26, 2017
பகவன் புத்தர் எவற்றைப் போதித்தார்
 “பகவன் புத்தர் எவற்றைப் போதித்தார்” பாபா சாகிப் அவர்களின் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலில் பகுதி (நூல்) 3. ஜூலை 16 அன்று என்னுரை

அகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை. பின் இங்கு பௌத்த தொல்லியல் ஆய்வுகள் என்ற தலைப்பின் நோக்கம் பௌத்த தடயங்கள் பாதுகாப்பதில் தொல்லியல் துறை, அரசு, வரலாற்று அறிஞர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் தம் முன்னோர்களின் வரலாற்று தடயங்களை தமக்கு பின் வரும் தலைமுறை அறிந்துக்கொள்ள பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்கள் எல்லோரையும் விட பௌத்தர்கள் கூடுதல் பொறுப்புமிக்கவராக இருக்கவேண்டும் என்ற ஒற்றை இலக்கு தான்.

தமிழகத்தில் 200 இடங்களில் 600க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. 1863லிருந்து 2011வரை 132 இடங்களில் சிறிதும் பெரிதுமாக அகழாய்வுகள் நடைபெற்றுள்ளது. தொல்லியல் துறை Tamilnadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act 1966 சட்டத்தின் கீழ் தொன்மையான கோவில்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், மலை படுக்கைகள், சிற்பங்கள் மற்றும் கோட்டைகளை பாதுகாத்து வருகின்றது. இச்சட்டத்தின் கீழ் 88 நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப் படுகின்றன. இதில் ஒன்று கூட பௌத்த தளமோ, சிலையோ இல்லை, பெரும்பாலும் பல சிவன் கோவில்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. கஞ்சிவரத்தில் இரு ஜைன கோவில்கள் மற்றும் மதுரையில் உள்ள தீர்த்தங்கரர் சிலைகள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகமே பௌத்த தளமாகயிருந்தது, பௌத்த சமய அடையாளங்கள் இந்த பாதுகாப்பு சட்டத்தின் படி ஏன் ஒன்றுகூட பாதுகாக்கப்படவில்லை? 

இந்த அக்கறையின்மையினால் தான் பகவன் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதும், களவாடப்படுவதும், களவாடப்பட்ட சிலைகளை காவல் துறையில்  பதிவு செய்தும் மீட்கப்படாமையும், தடயங்கள் அழிக்கப்படுவதும், மறைக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணமாக இருக்கிறது. 

தமிழகமே  பௌத்த தளமாகயிருந்தது 

01. ஆண் பெண் என பாலின வேறுபாடோ, பிறப்பு வேற்றுமையோ பாராமல் மக்கள் அனைவரும் சமம் என்றுரைத்தது பௌத்தம். பகவன் புத்தரின் போதனைகள் ஒழுக்கமும் அறிவும் நிறைந்தவையாக இருந்தது, மக்கள் மொழியில் கற்பிக்கப்பட்டது. உயிரினங்கள் பலியிடுதலை தடுத்தது. சங்கங்கள் அமைத்து கல்வி, மருத்துவம் அளித்தது.

02. இன்று தமிழர்கள் பின்பற்றும் பல சடங்குகள் பௌத்தம் சார்ந்தவையே. ஆனால் அவற்றில்  அறிவுக்கு பொருந்தாத இழிவான பல கற்பனை கதைகளை கற்பித்து திருத்தியமைக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது என்றுரைக்கிறார் பண்டித அயோத்திதாசர். எடுத்துக்காட்டாக  மர வழிபாடு, கோவிலில் தலைமுடி மழிப்பு, மஞ்சள் ஆடை உடுத்துவது, பௌர்ணமி வழிபாடு, தீபாவளி, கார்த்திகை தீபம், காமாட்சியம்மன் விளக்கு, பாத சேவை, மஞ்சள் உடுத்தி கரகம் எடுத்தல், ஆயுத பூஜை 

03. உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதுகாத்து வைத்து இருக்கின்ற திரிபீடகத்திற்கு உரை எழுதிய 12 பௌத்த அறிஞர்களில் ஒன்பது அறிஞர்கள் தமிழர்கள் என்றுரைக்கிறார் வண. பிக்கு போதிபால.

04. இன்று உலகம் முழுவதும் தமிழ் பரவியிருக்க காரணம் கடல்வணிகம் தான். உலகமுழுவதும் உள்ள கடலோடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு தமிழ் பௌத்தம் தான். கடல் தெய்வம் என்று அழைக்கப்படும் மணிமேகலையை தாய்லாந்தில் மணிமேகலை என்றும் பிற நாடுகளில் தாரா தேவி என்றும் வழிபடப்படுகின்றனர் என்றுரைக்கிறார் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள்.

05. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பின்பற்றும் தியானம் மற்றும் பயிலும் தற்காப்பு கலையை கற்று கொடுத்தவர் காஞ்சிவரத்தில் பிறந்த வண. போதி தருமன். அவரை தமிழராகவே இங்கு கற்பிக்கப்படுகிறதே தவிர பௌத்தராக கற்பிக்கப்படுவதில்லை.            

06. தர்க்கவியலின் தந்தை என்று அழைக்கப்படும் திக்நாதர் (தின்னாகர்) செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்க பெருமாள் கோவில் என்ற ஊரில் பிறந்த பௌத்த அறிஞர். நூற்றுக்கும் மேற்பட்ட தர்க்கம் (விவாதங்களை) எழுதியவர்

07. வட இந்தியாவில் புகழ்பெற்று விளங்கிய நாளந்தா  பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக வண.தருமபால ஆசிரியர் இருந்திருக்கிறார்.  இது போன்று பல சிறப்புகளை தந்தது தமிழ் பௌத்தம்

A காவிரிப்பூம்பட்டினம்

விரிவஞ்சி இங்கு காவிரிப்பூம்பட்டினம் மற்றும் காஞ்சிவரம் ஆகிய இரு இடங்களை எடுத்துக்கொள்ளப்படுகிறது. புகழ் பெற்ற சிறந்த துறைமுகம், வணிக முக்கியம் மற்றும் பௌத்தம் தழைத்தோங்கிய இடமாக இருந்த காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை மூலம் அறிந்துகொள்ளலாம். தமிழகத்தின் முதல் பிக்கு என அறியப்படும் வண.அறவணடிகள் தமிழகத்தின் முதல் பிக்குணி என்று அறியப்பட்டும் மணிமேகலையும் வாழந்த இடம்.

அறிஞர் T. ராமச்சந்திரன் மற்றும் ஐயப்பன்

மால்யா, ஜாவா போன்ற கிழக்கத்திய நாடுகளுக்கு செல்வதற்கு இந்தியாவிலிருந்த முதல் துறைமுகம் நாகப்பட்டினம் தான். எனவே பௌத்தத்தை கிழக்கத்திய நாடுகளுக்கு கொண்டுசெல்ல பிக்குகளுக்கும், பௌத்த அறிஞர்களும் இங்கு வந்து தங்கியிருந்து சென்றனர்.  

தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்

பண்டைய காலத்தில் இருந்த இரண்டு வணிக வழி தடங்கல் கடல் வழி (Maritime) மற்றும் நில வழி (Overland). பகவன் புத்தர் பிறந்த பண்டைய இந்தியாவில் இருந்து இந்தியா முழுவதும் மற்றும் மற்ற ஆசிய நாடுகளுக்கு செல்ல இவ்விரண்டு வணிக வழி தடங்கல் பௌத்தர்களுக்கு முதன்மையான வணிக வழி தடமாக இருந்தது. 

இந்த பண்டைய இணைப்பு வழிகள் பௌத்த சமயத்தையும், பண்பாடு மற்றும் கலை செல்வாக்கினை கண்டங்களுக்கும் அதற்கப்பாலும் கொண்டுசெல்ல வைத்தது. நாகப்பட்டினத்தில் ஏராளமான வெண்கல சிலை கிடைத்தது குறிப்பிடுவது என்னவென்றால் நாகப்பட்டினம் பௌத்த மையம் மட்டுமல்ல உருவாக்கப்பட்ட புத்தரின் வெண்கல சிலைகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மையமாக திகழ்ந்துள்ளது.  

தமிழக கடற்கரையில் இருந்து ஆந்திரா, ஒரிசா, பெங்கோல் வரை 127 பௌத்த விகாரங்கள் இருந்ததாகத் தொல்லியல் துறை தகவல் ஒன்றை அளிக்கிறார்.

கடல் வணிகத்தில் சிறப்பு பெற்றிருந்த இடமாதலால் வெள்ளையன் இருப்பு என்ற இடத்தில் அழகாய்வு செய்தபொழுது ரோமானிய நாணயமும்  வாணகிரி என்ற இடத்தில் மட்பாண்டங்களும் கிடைத்தது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் அகழாய்வுகள்  

இந்திய தொல்லியல் துறையினரால்  காவிரிப்பூம்பட்டினத்தில் 1962-67, 1970-71, 1972-73 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு தொல்லியல் துறையினரால் 1994-95, 1997-98 பூம்புகாரிலும், 2007-08 செம்பியன் கண்டியூரிலும், 2008 ட்ரங்க்பார்  (Tranqebar) அகழாய்வு நடத்தப்பட்டது.

வானோக்கி நின்ற புத்த விகார் அழிப்பும் கண்டெடுத்த சிலையை கொடையாக அளித்து தடயங்கள் மறைப்பும் 

01.  அன்பு பொன்னோவியம்

பதினெட்டாம் நூற்றாண்டு இடைக்காலம் 1867 வரை வானோக்கி நின்ற புத்த விகார் தலைவாசல் ஆங்கிலேயரால் இடித்து தள்ளப்பட்டதை தமிழர் கண்டஉண்மை சம்பவமாகும். இங்கிருந்த விகாரையில் பௌத்தர்கள் வணங்கி வந்த பொன்னாலான புத்தர் சிலையை எடுத்து சென்று ஸ்ரீரங்கம் கோவில் கட்டுமான பணிக்கு பயன்படுத்தினார்கள். (நூல்- உணவில் ஒளிந்திருக்கும் சாதி) 

02. அறிஞர் T. ராமச்சந்திரன்

1867ம் ஆண்டுவரை நாகப்பட்டினத்தில் புதுவெளி கோபுரம் (அ) சீனா கோபுரம் (ஆ) ஜெயின் பகோடா என்று அழைக்கப்படும் பௌத்த விகாரை இடித்து கிறித்துவ தேவாலயம் கட்ட அரசு அனுமதியளித்தது. 

இவ்விகார் அருகில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இலுப்பை மரத்தின் அடியில் 3 அடிக்கு கீழ் 5 புத்தர் சிலைகள் கண்டெடுக்கப் பட்டது. நாகப்பட்டினத்தில் கண்டறியப்பட்ட முதல் புத்தர் சிலைகள் இச்சிலைகள் தான். இந்த 5 புத்தர் சிலைகளில் 4 சிலைகள் வெண்கலத்தால் (Bronze) ஆனது  ஒரு சிலை பீங்கான் பொருள் கலவையினால்(Porcelain) ஆனது. இந்த 5 புத்தர் சிலைகளில் ஒரு சிலையின் பீடத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. 

புத்த விகார் மீது புதிதாக கட்டப்பட்ட கிறித்துவ தேவாலயத்தை காணவந்த சென்னை கவர்னர் நேப்பியர் பிரபுவிற்கு 1868ல் கொடையாக ஒரு சிலையை அளிக்கப்பட்டுவிட்டது. மேலும் நான்கு சிலைகளை 1871ல் பிரான்ஸ்க்கு கொடையாக அளிக்கப்பட்டுவிட்டது. 

03. கோவை இளஞ்சேரன் – தமிழ் பல்கலைக்கழகப் பதிவு துறை

நகருக்கு வெளியே அதாவது நாகர்கள் வாழ்ந்த பட்டினத்திற்கு வெளியே கோபுரம் கட்டப்பட்டதால் வெளிக்கோபுரம் எனப்பெயர் பெற்றது. ஏற்கனவே இருந்த ஒளி தரும் வெளிக்கோபுரம் பழுது அடைந்ததால் புதிதாக கட்டப்பட்ட வெளிக்கோபுரம், புதுவெளி கோபுரம் என்று அழைக்கப்பட்டது. புதுவெளி கோபுரம் கலங்கரை விளக்கமாக கட்டப்பட்டதன்று. ஆனால் கலங்கரை விளக்கமாக பயன்பட்டது. 

சீனர்களின் வருகளை பெரியதாகியதால், சீன மன்னனும் இரண்டாம் நரசிம்ம வர்மா பல்லவனும் (700-728) வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். சீன மன்னன் வேண்டியதற்கு இணங்க இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன் இந்த கோபுரத்தை கட்டினான். எனவே இக்கோபுரம் புதுவெளி கோபுரம்,  சீன  பகோடா (China Pagoda), மல்லன் கோபுரம் என்று அழைக்கப் பட்டது.  கி. பி 8 ஆம் நூற்றாண்டைசேர்ந்த கோபுரம்.

அரசின் குறிப்புப்படி 1846 கோபுரத்தின் புகைப்படமும் வரைபடமும் உருவாக்கப்பட்டன. ஆங்கில அரசு 11-10- 1858 கோபுரத்தின் நிலையை பற்றிய விபரத்தின் அறிக்கையை தஞ்சை ஆட்சியாளர் காப்பன் ஏஃப் ஒக்சு என்பவருக்கு எழுதியது 

01. ஐந்து அடுக்கு மாடங்களை கொண்டது புதுவெளி கோபுரம். 68 அடி உயரமுள்ளது. 41 சதுர அடி பரப்பளவு கொண்டது.  செங்களாலும் மண்ணாலும் கட்டப்பட்டது 

02. கூரையின் சுற்று பக்கங்களில் அமைந்த பிதுக்கம் சிற்ப வேலைப்பாடுகள் உடையது. இதில் இருந்து ஒரு புத்தர் சிலையும் கிடைத்தது.

03.இதன் ஐந்தாவது மாடம் சிதைவுற்று இடிபாடு அடைந்ததால், இடிந்து விழுந்து பேராபத்து நேராமல் இருக்க வேண்டி அதனை இடித்து விட்டனர். பின்னர் நான்காவது மாடம் சிதைவுற்றது. இக்கோபுரத்தின் பின்புறத்தில் இயேசு சபையினர் (Jesus Society) ஒரு தொழுகை அறை அமைத்து இருந்தனர். அதற்க்கு இது இடைஊறு எனக்கருதி நான்காவது மாடத்தை இடித்து விட்டனர். எஞ்சிய மூன்று மாடம் 50 அடி உயரம். இதனை சுற்றி மண் பாதுகாப்பு அமைக்க காப்டன் ஒக்சு திட்டமிட்டு உருவாக்க 400 செலவாகும் என்று அதற்க்கு இசைவு வேண்டி 19/04/1859 ல் அறிக்கை அனுப்பினார்

04. அதற்கு இசைவு கிடைத்தும் செயல்படவில்லை. காரணம்

௦1 இயேசு சபையார் இதனை இடித்து விட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் அனுப்பினர். அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் 01 கோபுரம் பாதுகாப்பாக இல்லை

02.  பின் உள்ள தொழுகை அறைக்கு வெளிச்சமும் காற்றோட்டமும் இல்லை

03. இந்த நிலத்தை வாங்க வேண்டியுள்ளது

04   கோபுரத்தை இடித்து எடுப்பதால் கிடக்கும் செங்கல் கட்ட இருக்கும் கல்லூரிக்கு பயன்படும். (நூல் நாகப்பட்டினம்)       

ஆகழ்வாராய்வில் கண்டறியப்பட்ட புத்த விகார், புத்த பீடைகை மற்றும் சிலைகள்  

1963-64ஆம் ஆண்டு மேலையூர் என்னும் பகுதியில் பல்லவனீச்சுரம் என்னும் கோவிலுக்கு அருகாமையில் புத்தவிகார் கண்டு பிடிக்கப்பட்டது. பகவன் புத்தரை வழிபடுவதற்கும், பிக்குகள் தங்குவதற்கும் ஏற்ற வகையில் அறைகள் கட்டப்பட்டிருந்தது, இவ்விகாரையின் ஒரு அறையில் ஓர் சிறிய வெண்கல புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது, மற்றோரு அறையில் சலவைக்கல்லால் ஆனா பகவன் புத்தரின் பாத பீடிகை எனப்படும் புத்த பாதமும் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாத பீடிகை நாகார்ஜூனா கொண்டவை ஒத்து இருக்கிறது

புத்த பீடைகை

கோவை இளஞ்சேரன் – தமிழ் பல்கலைக்கழகப் பதிவு துறை

சுமத்ரா தீவு சிரி விஜய மன்னன் சிரி விசய சூளாமணி வர்மன் நாகையில் வணிகத்தொடர்பு கொண்டிருந்தான். அவன் புத்த விகாரை ஒன்றை எழுப்ப விரும்பினான். இடையில் அவன் புகழும் எய்தவே அவன் மகன் சிரி விசய யோத்துங்க வர்மன் அப்பள்ளியை நிறைவேற்றி அதற்க்கு தம் தந்தை நினைவாக சூளாமணி விகாரை என்று பெயரிட்டான். விகார் கட்டுமான பணிகள் சோழ அரசன் இராஜராஜ I (985-1016) காலத்தில் துவங்கியது. ஆனால் அவரது மகன் இராஜேந்திர I (1012-1044) காலத்தில் நிறைவடைந்தது.   இரண்டு செப்பேடுகள் இங்கு கிடைத்தது, இலெய்டன் செப்பேடு என்றே அழைக்கின்றனர்.  காரணம் இலெய்டன் என்பது அயர்லாந்து நாட்டினுள் உள்ள ஒரு நகரம். நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஆணை மங்கலம் செப்பேடுகளை எடுத்து சென்று இலெய்டனில் வைத்திருந்தனர். பல ஆண்டுகள் அங்கு இருந்ததால் இலெய்டன் செப்பேடு என்று அழைக்கப்பட்டது. சிறிய செப்பேடு : தமிழ் எழுத்தில் உள்ளது. ஒன்பது அலகு நிலம் கொடை யளிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது 

பெரிய  செப்பேடு 

தமிழ் மற்றும் வடமொழியில் உள்ளது. அரசன் ஆனைமங்கலம் என்ற கிராமத்தை உயரமான புத்த விகாருக்கு அளித்ததை குறிப்பிடுகிறது.

சத்திரிய சிகாமணி வளநாட்டின் பட்டினக் கூற்றத்தில்
உலகத்திற்கு திலகம் போன்ற நாகப்பட்டினத்தில் தன்
உயரத்திற்கு பொன் மலையையும் சிறிதாக காட்டி
தன் அழகினால் வியப்படையச்  செய்கின்ற சூளாமணி   விகாரை  

மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட வெண்கல சிலைகள், இஸ்துபா, விளக்கு மற்றும் மணிகள் 350

1910 ஆண்டு நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஒரு சில சிலைகளும் 1926 ஆம் ஆண்டு வெளிப்பாளையம் என்ற இடத்திலிருந்தும் 1934 ஆம் ஆண்டு நாணயக்கார தெரு என்ற இடத்திலிருந்தும் ஏராளமான சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டது. அதாவது 1856லிருந்து புத்தர், அவலோகித்தர், மைத்ரே, தாராதேவி, ஜம்பாலா, வசுதாரா, ஆனந்தா சிலைகள் மற்றும் இஸ்துபா, விளக்கு மணி ஆகிய பொருட்கள் என மொத்தம் 350 வெண்கலங்கள் மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது.

இதில் 70 சிலைகள், 3 இஸ்துபா, 1 விளக்கு 1 மணி என மொத்தம் 75 வெண்கலன்களை மட்டும் சென்னை அருங்காட்சியகத்தில் வைத்து விட்டு மற்ற சிலைகளை இந்தியா முழுவதும் உள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பபட்டுவிட்டது.  புத்தர் சிலையின் ஒளிப்படங்கள் சில கீழ் இணைத்து இருக்கிறேன்.

(*வெளியே பாளையம் – நகருக்கு வெளியே அதாவது பட்டின நகருக்கு வெளியே அமைந்த பாளையம். பாளையம்  என்றால் போர் வீரர்கள் வாழும் இடம். வெளிப்பாளையம்  என்றால் நகருக்கு வெளியே போர் வீரர்கள் வாழும் இடம்)

 நாகபட்டின புத்தர் சிலைகள் சென்னை அருங்காட்சியகத்தில் 

முன்பு மும்பையில் உள்ள இளவரசர் வேல்ஸ் அருங்காட்சியம் என்று அழைக்கப்பட்ட அருங்காட்சியகம் இன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஆலய அருங்காட்சியம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நாகபட்டின புத்தர் சிலையின் ஒளிப்படம்

                              நாகபட்டின புத்தர் சிலை ப்ரூக்ளின் அருங்காட்சியகம்(Brooklyn Museum)  அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA) 

பதிரி திட்டா 

பதிரி திட்டா என்பது பாலி மொழி சொல். பதிரி என்றல் இலந்தை.  திட்டா என்றால் மேட்டு நிலம். பதிரி திட்டா என்றால் இலந்தை மரங்கள் நிறைந்த மேட்டு நிலம் என்று பொருள்.  இந்த பதிரி திட்டா விகார் அசோகா மன்னனால் நிறுவப்பட்டது. இங்கு தம்ம பாலா தங்கிருந்தார். நாகை வரலாற்றுக்கு கிடைத்த முதல் வரலாற்று தடம் இந்த பதிரி திட்டா. சீன அறிஞர் இந்த விகாரையை தாம் கண்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிரி திட்டா தமிழகத்தில் முதன் முதலில் தோன்றிய விகார் என்பதால் இதனை ஆதிவிகார் என்று சிறப்பித்து கூறப்பட்டது. கி மு 265-270ல் கட்டப்பட்டிருக்கலாம். கி. மு 3 ஆம் நூற்றாண்டு  (கோவை இளன்சேரன் – தமிழ் பல்கலைக்கழகப் பதிவு துறை)

இன்னும் கண்டறியாப்பட்டதா புத்த விகார்களும் சிலைகளும் 

தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி

01.  கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னனின் உறவினன் மகேந்திரன் இலங்கைக்கு செல்வதற்கு முன் ஏழு புத்த விகார்களை நாகப்பட்டினத்தில் காட்டினார் என்று மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்த விகாரையின் தலைவராக இருந்தவர் தான் அறவணடிகள்.

02. கணதாசர் காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரை காட்டினார். இந்த விகாரையில்  ஆச்சாரிய புத்த தத்த மகா தேரர் அபிதம்மவதாரம் மற்றும் மதுராத்த விலாசினீ என்னும் நூலை இயற்றினார்.  

03.நாகப்பட்டினம் நாகநகரம் என்றும் கூறப்படுகிறது. நாகர்கள் வாழ்ந்த இடம். நாகர்கள் முன் முதலில் குடியேறிய மண் தமிழ் மண். கி. பி 5 ஆம் நூற்றாண்டில் நாகமன்னனின் துணையுடன் கசபதேவர் நாகனான விகாரை கட்டினார். 

B காஞ்சீவரம்
காஞ்சீவரத்தின் சிறப்பு

சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங்

கி.பி 639 ஆம் ஆண்டில் பல்லவர் காலத்தில் காஞ்சி நகருக்கு பயணம் வந்த சீன அறிஞர் குறிப்பிடுவது காஞ்சி நகரத்தில் நூற்றுக்கணக்கான பௌத்த சங்கங்களும், 10,000 புத்த பிக்குகளும் இருந்தனர். ஸ்தவீரா என்ற புத்த சக்கர போதனைகளைப் படித்துக்கொண்டு இருந்தனர். அசோகரும் மகேந்திரரும் கட்டிய விகாரங்களும் தூபிகளும் இடிந்து கிடந்ததைக்கிறதென்று குறிப்பிடுகிறார்.

முனைவர் G. சேதுராமன் (பௌத்தக் கலை வரலாறு)

தென்னிந்திய வரலாற்றில் காஞ்சீவரம் அளவிற்கு எந்த ஒரு நகரமும் சிறந்த பௌத்த மையமாக திகழவில்லை. இன்றும் உலகமுழுவதும் அறியப்படும் இடமாக காஞ்சீவரம் உள்ளது. புகழ்பெற்ற  நாகார்ஜுனர் மகாயானத்தை காஞ்சியில் அறிமுகப்படுத்தினார்

வரலாற்று ஆசிரியர் இராஜமாணிக்கம் 

பல்லவ மன்னர் சமண சமயம், சைவம் மற்றும் வைணவத்திற்கு ஆதரவு காட்டினார், கோவில்கள் அமைத்தனர் என்பதற்கு சான்றுகள் கிடைக்கிறது ஆனால் அவர்கள் பௌத்தத்தை ஆதரித்தனர் என்பதற்கு சான்றுகள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதனால் பல்லவர் காலத்தில் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டது என்றுரைக்கிறார் வரலாற்று ஆசிரியர் இராஜமாணிக்கம் பல்லவ பேரரசர் என்ற நூலில். அவர்களின் கருத்திற்கு மறுப்பு

அறிஞர் டி .ஏ. கோபிநாத் ராவ்:

1915 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பல்லவ காலத்து புத்த சிலையை கண்டுபிடித்தார். அச்சிலை 7’ 10” உயரம் (7 அடி 10 அகலம்). கி பி 7ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இச்சிலை தற்பொழுது சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.

தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன் 

1990-91 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள குன்றில் (Draupathi Bath) அகழாய்வு மேற்கொண்டபொழுது மூன்று அடி உயரமுள்ள தலையில்லா பல்லவ காலத்து புத்த சிலையை கண்டுபிடித்தார். Dr D தயாளன் அவர்கள் கண்டுபிடித்த சிலையை 21/03/2016 அன்று மகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு சென்று பார்த்தேன். தொல்லியல் துறை படம் எடுக்க அனுமதிக்கவில்லை

தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி

கி பி 720 ஆம் ஆண்டு நரசிம்ம போத்த வர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகப்பட்டினத்தில் ஒரு விகார் கட்டப்பட்டது.காஞ்சிவாரத்தில் பல்லாவரம் அடுத்த கணிக்கிலுப்பை என்ற கிராமத்தில் ஒரு புத்தர் சிலையும் தம்ம சக்கரமும் உள்ளது. இங்கிருந்த புத்தர் சிலையை அழித்து அங்கே விநாயர் கோவில் கட்டப்பட்டது. இங்கு கட்டப்பட்ட இருந்த புத்தர் கோவில் பல்லவர் காலத்தை சேர்ந்தது.          

பீகாருக்கு காஞ்சியின்  கொடை 

1930ஆம் ஆண்டு கயா மாவட்டத்தில் உள்ள குர்கிஹார் என்ற ஒரு மலை கிராமம் இக்கிராமத்திலிருந்து 226 வெண்கல தொல் பொருள்களும் 5 பிற பொருள்களும் வெளி கொண்டுவந்து உலகறிய செய்யப்பட்டது. அவைகள் புத்தர், அவலோகித்தர், லோகநாதர், தாரா தேவி, மணி, குவி மாடம், பீடம். இவைகள் அனைத்தும் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை.

பெரும்பாலும் வெண்கலத்தால் ஆனவை. 231ல் 93ல் நாகரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த குறிப்பில் இருந்து கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொடையாக அளிக்கப்பட்ட வெண்கல சிலைகளும், பீடங்களும், மணிகளும் தெரிய வந்திருக்கிறது. அதன் விவரங்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி.

#கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள்நூற்றாண்டுகொடை விவரம்
1அம்ருதவர்மன்11நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை
2புத்தவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
3தர்மவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
4தூதசிம்மன்10நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை
5பிரபாகரசிம்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை மற்றும் நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை
6மஞ்சுஸ்ரீ வர்மன்11அமர்ந்த நிலையில் உள்ள அவலோகித்தர் சிலை & நின்ற நிலையில் உள்ள அவலோகித்தர் சிலை
7வீரியவர்மன்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகள் இரண்டு
8புத்தவர்மன்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை & மணி
9புத்த ஞானர்10பீடம்
10சுகசுகர்10பீடம்
11விரோசன சிம்ம ஸ்தவிரர்10பீடம்
12நாகேந்திரவர்மன்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
13சந்திரவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
14ரகுலவர்மன்10அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
15வீரவர்மர்9அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை
16அவலோகித சிம்மர்10பீடம்
17புத்தவர்மன் (கந்த குடி3 மணிகள்

பல்லவ மன்னன் 

புத்தவர்மன் பல்லவ இளவரசன் வண.போதி தருமன் எனப் பல்லவ அரச குடும்பத்தினர் பௌத்தத்தில் இருக்கின்றனர். பௌத்தத்தை மிக கீழ்த்தரமாக இழிவாக எழுதிய மகேந்திர வர்மா பல்லவன் காலத்திலே பௌத்தம் செழித்தோங்கி இருந்தது என்பதை அவரால் மறுக்க முடியவில்லை. காஞ்சிவரத்தில் உள்ள பல்லவ மேடு என்பது பாலி மேடு என்பதன் மருவு. ஆதாரம் இன்றும் மக்கள் பாலி மேடு என்று அழைக்கின்றனர்   

காஞ்சிவரத்தில் அகழாய்வுகள்

01. பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் 

காஞ்சி காமகோடி மடவளாகத்தில் 1962-63ல் அகழ்வாய்வு செய்தபோது கி.பி 2ஆம் நூற்றாண்டை சார்ந்த சாதவாகன மன்னன் ‘ருத்ர சதர்கனி ‘ என்பவரின் காசு கிடைத்துள்ளது. சாதவாகனர் (பௌத்தர்கள்) காசுகள் கண்டறியப்பட்டிருப்பது. 

02. சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்பொருள்ஆய்வுத்துறை

சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் 1969-70 ஆம் ஆண்டுகளில் காமாட்சியம்மன் கோவிலின் அருகிலும், எகாம்பரேஸ்வர் கோயில் அருகிலும், ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்திலும் அகழாய்வு செய்தனர். அத்துறையினரே மீண்டும் 1970-71 ஆம் ஆண்டுகளில் காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் அகழாய்வு செய்தனர்.

1969-70ஆம் ஆண்டு “புதலதிச” என்ற பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள சாம்பல் நிறப் பானை ஓடு அகழாய்வில் கண்டெடுத்தனர். இந்த எழுத்துகள் கி.பி ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைபில் காணப்படுகின்றது. “புதலதிச” என்பது ஒரு பௌத்த பிக்குவின் பெயராக இருத்தல் வேண்டும் எனக் கூறப்படுகிறது.

1970-71ஆம் ஆண்டு பௌத்த ஸ்தூபி கட்டிடப்பகுதியை கண்டுபிடித்தனர். இந்த விகார் அசோகா மன்னர் காட்டியது இல்லை கி.பி 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை அரசாண்ட கிள்ளி வளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி காட்டியது என்றும் வரலாற்று அறிஞர்களிடியே இருவித கருத்து உள்ளது. மேலும் இளங்கிள்ளி தருமத வனம் ‘ என்னும் ஒரு பூந்தோட்டம் அமைத்து ஒரு புத்த பீடிகை அமைத்தார் என்று மணிமேகலையினால் அறியப்படுகிறது. 

காஞ்சியில் காமாட்சிக் கோட்டத்தில் உள்ள அன்ன பூரணியம்மன் சன்னதி முன்னர் மணிமேகலையின் கோவிலாக இருந்ததாகும் என்றும், தருமராசர்   என்ற புத்தருக்கு கட்டிய கோயில் பின் தருமன் கோயிலாயிற்று  என்றும் சிந்தாதேவி, தாரா தேவி ஆகிய பெண் தெய்வங்களின் கோயில்கள் அம்மன் கோயில்களாயின என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி.

03. காஞ்சிவரம் ஏனாத்தூர் ஸ்ரீசந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிசிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வுக்குழு 2008-09 ம் ஆண்டு புத்தகரத்தில் அகழாய்வு மேற்கொண்டது. காஞ்சிவரம் புத்தகரத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும் இடையே உள்ள இடத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். இங்கு சிலையின் உடைந்த தொடைப்பகுதி கிடைத்தது. இங்குள்ள ஒரு பெருமாள் கோவிலில் ¾ அடி உயர ஒரு புத்தர் சிலை உள்ளது. கட்டவாக்கம்  என்ற இடத்தில் 2001-02 அகழாய்வு செய்த பொழுது பௌத்த கட்டிட அமைப்பு மற்றும் திரிரத்தினம் கிடைத்தது.     

விரிவாக படிக்க 
01. A China Pagoda at Nagapattinam on Tamil Coastal by Prof Himanshu Prabha Ray
02. Archaeological Sites and Evidence of Maritime Buddhism in South India by Dr.D.Dayalan

03. The Nagapattinam and Other Buddhist Bronze Statues by T.N.Ramachandran

04. Role of Trade and Tamil Traders in Promoting Buddhism by Dr.D.Dayalan

05. 
நாகப்பட்டினம் – கோவை இளஞ்சேரன்

https://www.elambodhi.com/2017/07/

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply