“அறம்” செய்ய விரும்பு – தமிழ்த் திரையுலகமே!

விவரங்கள்

யார் யாரெல்லாமோ வஞ்சித்தது இந்த இயக்குனரைத்தானா? படம் பார்க்கத் தொடங்கியதிலிருந்து இப்போது வரைக்கும் இந்த கேள்வி துரத்திக்கொண்டே இருக்கிறது.

அறம் = அற்புதம். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் இரசிகர்களின் உயிரோட்டமான வெளிப்படுத்தல்கள். கைதட்டல், உச் கொட்டல், விசும்பல் என படம் முடியும்வரை திரையரங்கம் உயிர்ப்போடு இருந்தது.

“சபாஷ்…” இயக்குனர் கோபி நைனார் அவர்களே!

aram nayantara

லாரி தண்ணீரை மக்களின் தேவைக்கு விநியோகிக்கும் அதிகாரம் இல்லாத கலெக்டர் (கலெக்டர் என்றால் ‘மாவட்ட ஆட்சியர்’ என்று பொருள்…?) ஆழ்குழாய் கிணறுக்காகத் தோண்டிய குழிக்குள் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற சொந்த முயற்சி எடுக்கிறார். எப்படி எடுக்கலாம்? என்று கேட்டு அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் அதிகார வர்க்கத்தின் மக்கள்விரோதப் போக்குதான் படம்.

பிரச்சினை என்னவென்றால், இப்படி குழிகளுக்குள் விழுகிறவர்களை மீட்க இந்தியாவில் நவீன கருவிகள் இல்லை. கயிறு, கம்பி போன்ற கதைக்குதவாதப் பொருட்களே உள்ளன. கயிற்றைப் பொருத்தமட்டில் உள்ளிருக்கும் குழந்தைக்கு அது தன்னைக் காப்பதற்கான கருவி என்று கண்டுணரும் பக்குவம் இருக்க வேண்டும். அப்படி பக்குவமிருக்கிற குழந்தையும் மயக்கமடையாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் போச்சு.

கம்பி என்பது அதன் கொக்கி உடலின் எந்த பாகத்தில் மாட்டுகிறதோ அதைப் பொறுத்துதான் உயிருடன் மீட்பதற்கான உத்தரவாதமும்.

சரி, உசிலம்பட்டி அருகேயுள்ள கிராமத்து இளைஞர் இதற்கான ரோபோ கருவி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறாராம். அது ஏன் இந்தியாவிற்கானதாக மாறவில்லை? படம் இந்தியாவின் அறிவியல் கொள்கையை கேள்விக்குட்படுத்துகிறது.

இரசியா இன்றைக்கு பெரிய வல்லரசாக இருக்கலாம். ஆனால், புரட்சி நடந்த புதிதில் அங்கு மக்களுக்கான எந்த கண்டுபிடிப்புகளும் இல்லை. இன்றைக்கு அது உயர்ந்து நிற்பதற்கான காரணம் புரட்சியின் மூலம் உருவான அரசு, முன்முயற்சிகளை ஊக்குவித்து புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதுதான்.

உடனடியாக மருத்துவர் போகமுடியாத ஒரு தீவில் பிரசவ வலியால் துடிக்கும் ஒருவருக்கு அங்கிருக்கும் வானொலி நிலையத்தின் உதவியோடு பேறு காலம் பார்க்கும் கதை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கக் கூடும். (இந்த இரசிய கதையை சங்கர் கொஞ்சம் உல்டா பண்ணியிருப்பார்) உயிரோடு விளையாடுவதுதான். ஆனால் முயற்சிக்காமல் உயிரிழப்புகளை வேடிக்கைப் பார்ப்பதைவிட முயற்சித்து காப்பாற்ற முடிந்தால் சிறப்பு என்பதே மக்கள் நலன் பேணும் அரசுகளின் கொள்கை.

எதற்கு வீண் சிரமம்? உயிரிழப்புகள் இயல்பானதுதானே? எனது கடமை உயிரிழப்புகளைத் தவிர்ப்பதல்ல; மாறாக, இழப்பீடுகளுக்குப் பணத்தை கொடுத்து பிரச்சினையைத் தீர்ப்பதுதான் என்ற அலட்சியம் அதிகார வர்க்க அரசின் கொள்கை.

இதை மிகத் தெளிவாக படமாக்கியிருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் காட்டூர் (இது இயக்குனரின் சொந்த ஊர்) என்பது அடிப்படை வசதிகள் எட்டாத தொலைதூரத்திலிருக்கும் ஒரு கிராமம். குடிநீருக்கே டூ வீலர எடுத்துட்டு பல மைல் போகணும். அங்கிருக்கும் கவிதையான எளிய குடும்பம்தான் சிறுமி மகாலட்சுமி உடையது. கபடி ஆட்டக்காரனாக இருந்து சோத்துக்கு பெயிண்டராக மாறிய அப்பா ராமச்சந்திரன் துரைராஜ், பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்கும் அம்மா சுனு லட்சுமி, கோச் இல்லாத இயல்பான நீச்சல் வீரனான அண்ணன் காக்கா முட்டை ரமேஷ்.

அந்த ஊர் கவுன்சிலர் மூடாமல் விட்டுவைத்திருந்த ஆழ்குழாய்க் குழியில் சிறுமி மகாலட்சுமி விழுந்துவிட அவளை உயிரோடு மீட்க களமிறங்குகிறார் கலெக்டர் நயன்தாரா.

குழிக்குள் விழுந்த குழந்தையை மீட்க அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத இந்தியாதான் உலக வல்லரசுகளுக்கு ஈடாக ராக்கெட் விட்டுக் கொண்டிருக்கிறது என்கிற முரண்பாட்டை கதை எளிதாக மக்களுக்கு உணர்த்துகிறது.

வாய்ப்பு கிடைக்கும்போது சிக்சர் அடிப்பதில் கில்லாடி நயன் என்பது தெரியும். ஆனால், இந்த படம் அப்படியில்லை. இவ்வளவு சவாலான கேரக்டரை விரும்பி, ஏற்று நடித்திருப்பதற்கே அவரைப் பாராட்ட வேண்டும். முழுக்க முழுக்க அரசியல். அதிலும் அவருக்கு நடப்பு அரசியலையும் அரசியல்வாதிகளையும் கடுமையாக விமர்சிக்கும் பாத்திரம். “…முதலில் மூடவேண்டியது இந்த அரசியல்வாதிகளான பாதாளச் சாக்கடைகளைத்தான்..” என்பது போன்ற வசனங்கள். இதுபோன்ற பாத்திரங்களை ஏற்கிற முன்னணி கதாநாயகர்களே பல நெருக்கடிகளை சந்திக்கும்போது, தயக்கமில்லாமல் இதை ஏற்றிருகிக்கிறார் என்றால் அவருக்கு இந்த கதையின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. விளாசியிருக்கிறார்.

நடிப்பில் யாரும் குறை வைக்கவில்லை. ஆனால், இதில் நடித்திருக்கும் பலரும் பல்வேறு படங்களில் சொதப்பியவர்கள்தான். வேல ராமமூர்த்தி இருக்கிறார். ஒருசில படமே நடித்திருந்தாலும் அவரது நடிப்பில் கொஞ்சம் மிகை தெரியும். இதில் அப்படியில்லை என்றால் இயக்குனர் எல்லாரையும் செம்மையாக செதுக்கியிருக்கிறார் என்று பொருள்.

கிராமத்து எளிய மக்களையும் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் காட்சிப்படுத்துவதில் அப்படியொரு இயல்பு. வெவ்வேறு வகையான மக்களை வெளிபடுத்துகிற விதமாக வசனம், உடை, பாவனை என எல்லாமும் கச்சிதம்.

இயக்குனர் வித்தைக்காரர். இவரது இரண்டு கதைகளை ஏற்கனவே திருடியிருக்கிறார்கள். திருடியவர்கள் தமது செல்வாக்கால் அதை மூடி மறைத்துவிட்டனர். அதில் ஒருவர் பெரிய புரட்சிக்காரரும் கூட. திருடர்கள் பிரபலங்களாக இருந்ததால் இவர் (கோபி நைனார்) பொய் சொல்கிறாரோ என்று பலரும் சந்தேகித்தனர். “இவ்வளவு அழகான திறமைசாலி பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று உணர்த்திவிட்டார் இயக்குனர்.

படத்தின் கதையைப் போலவே இசையும் (ஜிப்ரான்), ஒளிப்பதிவும் (ஓம் பிரகாஷ்) அவ்வளவு கச்சிதம். சூப்பர் நண்பர்களே!

‘நினைத்த மாதிரி படம் எடுத்துவிட முடியாது’ என்று சினிமாவில் சொதப்புகிற முற்போக்காளர்கள் சொல்வார்கள். “இல்லை, மிகத் தெளிவாக எடுக்கலாம்” என்று மெய்ப்பித்திருக்கிறார் கோபி நைனார். ஆகவே நாம், தமிழ்த் திரையுலகமே “அறம்” போல் படம் செய்ய விரும்பு என உற்சாகமாக குரல் கொடுக்கலாம்!

– திருப்பூர் குணா

http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/34151-2017-11-14-02-08-29?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29

 


 

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply