மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் கை கோர்க்கிறார்கள்!

தேர்தலில் போட்டியிட்டு   மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் கை கோர்க்கிறார்கள்!

நக்கீரன்

சுரேஸ்  பிறேமச்சந்திரன் தமிழ்  அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில்  இனிப் போட்டியிட மாட்டாராம். பொதுச் சின்னத்தில் போட்டியிடப் போகிறாராம்.     இந்த அறிவிப்பை இப்போது வெளியிட்டாலும் மனதளவில் அவர் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எப்போதோ  எடுத்துவிட்டார். இன்னும்  சொல்லப் போனால்  2015 இல் நடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக, குறிப்பாக  இரா. சம்பந்தன் ஐயா மற்றும் எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக வேலை செய்தார். இருவரையும்  எப்படியும் அரசியல் அரங்கல் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்  அல்லது ஓரங்கட்டப்பட வேண்டும் என மெத்தப் பாடுபட்டார்.

சுரேஸ்  பிறேமச்சந்திரன்  தமிழரசுக் கட்சியுடன் இனியும் சேர்ந்திருப்பது தமிழருக்குச் செய்யும் துரோகம் அதனால் வெளியேறுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.  இனிமேல் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட மாட்டேன் என அவர் சொல்வது தமிழ்  அரசுக் கட்சிக்கு  பலவிதத்தில் நன்மையாக இருக்கக் கூடும்.   ஆனால் அவர் தனது முடிவுக்குச் சொல்லும் காரணங்கள்  அபத்தமானது. தமிழரசுக் கட்சி இடைச் செருக்கலாம். தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ மற்றும் இபிஎல்ஆர்எவ் கட்சி ஆகியவைதான் ஆதியில் இருந்து வந்த கட்சிகளாம். பிறேமச்சந்திரன் எப்போதும் தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று வாதாடுபவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டணி. அது ஓர் அரசியல் கட்சியாக இயங்க முடியாது. காரணம் கொள்கை, கோட்பாட்டில் ஒத்த கருத்துள்ளவர்களே ஓர் அரசியல் கட்சியில் இடம் பெறலாம். அப்படியில்லை ஆயின்  கட்சியை இயக்க முடியாது. மன்னார் கத்தோலிக்க பரிபாலகரின் கருசனை புரிகிறது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது நல்ல கோட்பாடு. ஆனால் அரசியலில் அது வெறும் ஆசையாகவே இருக்க முடியும். நடைமுறையில் அது சாத்தியமில்லை. கணவன் – மனைவுக்கு இடையே மனத்தளவில் ஒற்றுமை வேண்டும். ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்ட வேண்டும்.  இல்லாவிட்டால் குடும்பம் நடத்த முடியாது.

ததேகூ இல் தமிழ் அரசுக் கட்சிதான் முக்கிய பங்காளிக் கட்சி. 2015 இல் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தல் முடிவைப் பார்த்தாலே அது எளிதில் விளங்கும். முதல் ஐந்து இடத்தில் வந்தவர்களில் 4 பேர் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள். ஆறாவதாக வந்தவரும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்தான்.

பிறேமச்சந்திரன்,  புதிதாகக் களம் இறங்கிய சுமந்திரன்  தனக்குப் போட்டியாக இருப்பார்  என நினைத்தார். மேலும் உறுப்பினர் தொகை 9 இல் இருந்து ஏழாகக் குறைந்துவிட்டது.  அதனால்   சுமந்திரன் மீது மிக மோசமான  திரைமறைப்  பரப்புரைகளில் ஈடுபட்டதோடு அவரது கொடும்பாவியை எரிப்பதிலும் முன்நின்றார்.   இருந்தும் சுமந்திரன்  58,043 வாக்குகள் பெற்று  மூன்றாவது இடத்துக்கு  வந்திருந்தார்.  அதே சமயம் பிறேமச்சந்திரன் வெறுமனே  29,906 வாக்குகளையும்  இவரது கட்சியில் போட்டியிட்ட இன்னொரு வேட்பாளர் 15,408 வாக்குகளைப் பெற்று முறையே 7 ஆவது 9 ஆவது இடத்துக்குத்  தள்ளப்பட்டார்னகள்.  அதாவது  இபிஎல்ஆர்எவ் கட்சியைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 45,314 (11.09 விழுக்காடு) மட்டுமே. தமிழ் அரசுக் கட்சியின் ஆறு வேட்பாளர்கள்  பெற்ற வாக்குகள் 288,890 (70.70 விழுக்காடு) ஆகும்.

2015 நாடாளுமன்றத்  தேர்தல் முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராவதற்கான கனவில் இருந்த சுரேஸ் பிறேமச்சந்திரனுக்குப்  பலத்த பின்னடைவாகும். சம்பந்தன்  மற்றும் சுமந்திரன் இருவருக்கும்  வெட்டிய குழியில் அவரே விழுந்து போனார்.

இப்போது  அவர் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டித் தனித்தோ  கூட்டாகவோ பிறேமச்சந்திரன்   போட்டியிட  விரும்புகிறார். அப்படித் தனித்துப் போட்டியிட விரும்பினால்  அல்லது கூட்டணி வைத்துப் போட்டியிட விரும்பினால் அப்படிச் செய்ய அவருக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்கிறார் ததேகூ இன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  மா.ஏ. சுமந்திரன்.

மேலும் தமிழ் அரசுக் கட்சி இடைச் செருகல் கட்சி,  தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் வெளியேறிய பின்னர்தான்  தமிழரசுக் கட்சியும் புளட்டும் சேர்ந்து கொண்டன என பிறேமச்சந்திரன் திருவாய்மலர்கிறார்.    தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை முன்னணி (ரெலோ) இபிஎல்ஆர்எவ் (சுரேஸ் அணி)  தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆகிய நான்கு கட்சியுமே தொன்று தொட்டு ததேகூ இல் இருந்து வருவதாக வாதிக்கிறார்.

உண்மை என்னவென்றால் தமிழரசுக் கட்சி 1976 இல்   தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழ்க் காங்கிரஸ், தமிழ் அரசுக் கட்சி, இலங்கை இந்திய காங்கிரஸ்) உருவாக்கப்பட்ட போது தனது செயற்பாடுகளைக் குறைத்துக் கொண்டது. இருந்தும் 1977 இல்  நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்புத் தொகுதியில் காசி ஆனந்தன் போட்டியிட்டார்.   அதே தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவர் குமார் பொன்னம்பலம் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களோடு  தொகுதி ஒதுக்கீட்டில் முரண்பட்டுக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து வெளியேறித் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில்  தனித்துப் போட்டியிட்டுத் தோற்றார். பருத்தித்துறை, வட்டுக்கோட்டைத் தொகுதிகளில் போட்டியிறுமாறு அவரைக் கேட்டபோது யாழ்ப்பாணத் தொகுதியை விட வேறு தொகுதி எதையும் ஏற்றுக்கொள்ள அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். தேர்தல் முடிவுகள் வந்தபோது பருத்தித்துறை மற்றும் வட்டுக்கோட்டைத் தொகுதிகள் இரண்டிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியே வென்றது.

ஒக்தோபர்  20, 2001 இல்   நான்கு கட்சிகள் இணைந்து  ததேகூ  உருவாக்கப்பட்டது.  தமிழர் விடுதலைக் கூட்டணி,  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப் – சுரேஸ் அணி) தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியனவே அந்த நான்கு கட்சிகளாகும்.

2001 இல் நடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏனைய கட்சிகளும் (ரெலோ. தமிழ்க் காங்கிரஸ் மற்றும் இபிஎல்ஆர்எவ் (சுரேஸ்)  உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன.

இதன் பின்னர் வீ.ஆனந்தசங்கரி  விடுதலைப் புலிகளைத்  தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அதன் சின்னத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறினார். இதனால் 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது.  ததேகூ  தமிழ்க் காங்கிரசின்  சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கஜேந்திரகுமார் முன்வைத்த யோசனை வி.புலிகளால் நிராகரிக்கப்பட்டது.   2010 மார்ச் மாதம்  தமிழ்க் காங்கிரஸ் கட்சி,  ததேகூ  இல் இருந்து தன்னிச்சையாக வெளியேறியது.

2001 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும்  அதற்குப்  பின்னர் 2009 (உள்ளூராட்சி சபைகள்)   2010 (நாடாளுமன்றம்) 2012 (கிழக்கு மாகாணசபை)   2013 (வட மாகாணசபை)  2015 (நாடாளுமன்றம்) ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில்  தமிழ் அரசுக் கட்சியின்  வீட்டுச் சின்னத்திலேயே ததேகூ போட்டியிட்டது. 2001 இல்  நடந்த தேர்தலில் 3.88% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 15 இடங்களை ததேகூ  கைப்பற்றியது.

யூன் 5,  2002  இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்  திரு  மு.சிவசிதம்பரம் காலமானார். அதனை அடுத்து வீ.ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி (2003) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (2010)  ஆகிய கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து விலகின.  ஆனால் தமிழரசுக் கட்சி   இரா. சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பில்  சேர்ந்து இயங்கியது.  ஏனைய கட்சிகள் 2004 ஆம் ஆண்டு தொட்டு  தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயேதேர்தல்களில் போட்டியிட்டன.

2013 ஆம் ஆண்டில்   வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டன. 2013 செப்தெம்பர் 21 இல் நடந்த வட மாகாண சபைத் தேர்தலில் பின்வரும் கட்சிகள் போட்டியிட்டன.

(1) இலங்கைத் தமிழரசுக் கட்சி

(2) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ் – சுரேஸ் அணி)

(3) தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)

(4) தமிழர் விடுதலைக் கூட்டணி

(5) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)

கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களான பசுபதி அரியரத்தினம் – 27264 வாக்குகளும் தம்பிராசா குருகுலராசா – 26427 வாக்குகளும் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை – 26132 வாக்குகளும் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இதே மாவட்டத்தில் போட்டியிட்ட வீ.  ஆனந்தசங்கரி  2896 வாக்குகள் மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.

ம.ஆ. சுமந்திரனின் கூற்றுப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட போது அந்த கூட்டமைப்பிற்காக எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே  ஒப்பமிட்டு  இருந்ததாகத்  தெரிவித்துள்ளார். இது சரியானால்  தமிழரசுக்கட்சி, புளட், ஈபிஎல்ஆர்எவ் கட்சி  தொடக்கத்தில்  இருந்திருக்கவில்லை. அதேபோன்று  தொடக்கத்தில்  இருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி 2010 இல் வெளியேறியது.   எனவே  தமிழீழ விடுதலை இயக்கம் ஒன்றே  அன்று தொடக்கம்  இன்றுவரை  ததேகூ இல் தொடர்ந்து இருநது  வரும்  ஒரே  அமைப்பு ஆகும்.

இப்போதல்ல, நீண்ட காலமாகவே சுரேஸ் பிறேமச்சந்திரன்  தமிழ் அரசுக் கட்சியோடு மல்லுப் பிடித்துக் கொண்டு வந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் திரு சம்பந்தன், திரு சுமந்திரன் இருவரையும் தோற்கடிக்க அல்லது ஓரங்கட்ட அந்தக் கட்சியின் தலைவர் புலம்பெயர் கட்சி ஆதரவாளர்களிடம் நிதி திரட்டினார். சரியாகவோ பிழையாகவோ ததேகூ இன் தலைவர் என்ற பதவிக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ஒருமையில் விழிப்பது, கதிரையைத் தூக்கிக் கொண்டு அடிக்கப் போவது வன்முறை அரசியலுக்குச் சரியாக இருக்கலாம் ஆனால் மக்களாட்சி முறைமையில் அது பிழை. 

எல்லோரையும் சகட்டுமேனிக்கு எடுத்தெறிந்து பேசுவது அவருக்குக் கை வந்த கலை. அரசியலமைப்பு வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவந்தவுடன் அந்த அறிக்கையில் இணைப்பாட்சி இல்லை, வட – கிழக்கு இணைப்பில்லை என்று ஒரேயடியாக கண்டனம் வெளியிட்டார். முதலில் அந்த இடைக்கால அறிக்கை பற்றிய விளக்கத்தை சம்பந்தனிடமும் சுமந்திரனிடமும் கேட்டிருக்க  வேண்டும். அவர்கள் இருவரும் வழிகாட்டுக் குழு உறுப்பினர்கள். அதைவிடுத்து தான்தோன்றித்தனமாக  எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசுவது,  அறிக்கை விடுவது அழகல்ல. அறமும் அல்ல.

கடந்த 14, ஒக்தோபர் மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஆட்சித் தலைவர் சிறிசேனாவோடு பேசும் போது  பிறேமச்சந்திரன் (ஆங்கிலத்தில்) கடுமையான தொனியில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலச் சீறிச் சினந்து  பேசினார். அவரைப் போலவே சிவாஜிலிங்கம் சிங்களத்தில் விளாசித்தள்ளினார்.  இருவரும் தகுதி அறிந்து பேசவில்லை. சிவாஜிலிங்கத்தைக் கண்டித்த கஜேந்திரகுமார் அவரைப் போல அல்லது அவரை விடக் கேவலாமாக நடந்து கொண்ட பிறேமச்சந்திரனைக்  கண்டிக்கவில்லை.

பிறேமச்சந்திரன் ததேகூ இல் இருந்து வெளியேறமாட்டேன் ஆனால் தமிழ் அரசுக் கட்சியின்  வீட்டுச் சின்னத்தில்  இனிமேல் போட்டியிட மாட்டேன் என்கிறார்.  பொதுச் சின்னத்தில் போட்டியிடப் போகிறாராம்.  தமிழரசுக் கட்சியுடன் இனியும் சேர்ந்திருப்பது தமிழருக்குச் செய்யும் துரோகம் அதனால் வெளியேறுகிறேன் என்கிறார்.    போட்டியிடுவதும் போட்டியிடாது விடுவதும் அவரது விருப்பம். அரசியல் தற்கொலை செய்யப் போகிறேன் என்ன பந்தயம் என்று சொல்லும் ஒருவரை தடுக்கக் கூடாது. வில்லங்கப்படுத்தக் கூடாது. விட்டுவிட வேண்டும்.

சுரேஸ் பிறேமச்சந்திரன்      இந்த அறிவிப்பை இப்போது வெளியிட்டாலும் மேலே கூறியவாறு  மனதளவில் அவர் தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில்  போட்டியிடுவதில்லை என்ற முடிவை  எப்போதோ  எடுத்துவிட்டார்.

2015 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்  சுரேஸ் பிறேமச்சந்திரன்  ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நண்பர்கள் எழுதியதாகச் சொல்லப்பட்டாலும் பிறேமச்சந்திரனின் மின்னஞ்சல் முகவரியில்தான் இது அனுப்பப்பட்டிருந்தது. அதில்,

“இப்போதுள்ள நிலைமையில் சம்பந்தனும் சுமந்திரனும்  மற்றவர்களைக் கலந்தாலோசிக்க வேண்டிய தேவையின்றி  தாங்களே முடிவு எடுக்கிறார்கள். அவர்களது கொள்கைகள் ஏமாற்றத்தை அளிக்கிறது. அவர்கள் சிங்களத் தலைவர்களாலும் அவர்களது இராணுவத்தாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையை ஏற்கனவே கைவிட்டுவிட்டார்கள் போல் தெரிகிறது.  மேலும் சம்பந்தனும் சுமந்திரனும் வட கிழக்கில் வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு விட்டாதாகவும் (எனக்குப்)  படுகிறது.

சுமந்திரன் கொள்கை வகுக்கும்  பாணியைத்  தடுக்கு முகமாக (அவர் தனது  எண்ணப்படி முடிவு எடுக்கிறார். எடுத்தபின்னர் மற்றவர்களுக்குச் தெரியப்படுத்துகிறார்)  பிறேமச்சந்திரனை ஆதரிக்கப்  போதுமான  நா.உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும். அதன் மூலம் போதியளவு அவரது கைகளைப் பலப்படுத்தி சம்பந்தனும் சுமந்திரனும் அவர்களை கலந்தாலோசிக்க கட்டாயப் படுத்தப்படுவார்கள்.  அவ்வாறு செய்ய  5 உறுப்பினர்கள் போதுமானது என நினைக்கிறோம்.

சுமந்திரனின் தனிப்போக்கை (idiosyncratic) தடுத்து நிறுத்த  எமக்கிருக்கும் ஒரே சனநாயக வழி இதுதான்.

பிறேமச்சந்திரனின் கொள்கைள் சர்வதேச விசாரணையையும்  வட கிழக்கு தமிழ்மக்களிடையே  நேரடி வாக்கெடுப்பையும்   ஆதரிப்பதால் அவரை நாம் ஆதரிக்கிறோம். அவர் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆகியோரது கொள்கைகளுக்கு எதிராக பேசிவருவதால் அவர் எமது ஆதரவுக்கும் உதவிக்கும் தகுதிபடைத்தவர் ஆவர். அவருக்கு நிதியளிக்க இந்த இணையதள முகவரிக்குப் போகவும் : https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=7SQUE7C2HLK22

As it stands right now, Sumanthiran and Sampanthan make their own decisions without needing to consult other TNA partners or even the Tamil people. Their policies are disappointing.  It is as though they have already given up on promoting an international investigation of the war crimes committed by Sinhala leaders and their army. Sumanthiran and Sampanthan also seem to have given up on self-determination of Tamils in the northeast.

To inhibit Sumanthiran’s way of enacting policy (he does things according to his own judgment, and lets the rest of us find out about them later) we hope to put enough MPs who support Premachandran into positions where they can strengthen him enough that Sumanthiran and Sampanthan must consult him. We think 5 seats will be enough to strengthen Premachandran.

This is the only democratic way to stop Sumanthiran’s idiosyncratic way of doing things.

Since Suresh’s policies favor both an international investigation and a referendum among the northeastern Tamils, we support him. He has spoken out in opposition to Sumanthiran and Sampanthan’s policies, and so we are even more convinced that he deserves our help and support.

To Donate to Premachandran go to: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=7SQUE7C2HLK22

சுரேஸ் பிறேமச்சந்திரன் தன்னை 22 கரட் சனநாயகவாதியாகவும் திரு சுமந்திரன் ஒரு  வல்லமைபடைத்த  சர்வாதிகாரியாகவும் சித்தரிக்கிறார்.  ஆனால் உண்மையில் யார் சனநாயகவாதி? யார் சர்வாதிகாரி?

(1) 2013 இல் வட மாகாண சபைத் தேர்தலில்  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து  இபிஎல்ஆர்எவ் கட்சி சார்பில்  இருவர் தெரிவு செய்யப்பட்டனர். திரு பொ. ஐங்கரநேசன் 22,268 வாக்குகள் பெற்று 8 ஆவது இடத்தைப் பிடித்தார். இவர் வேளாண்மைத்துறைப்  பட்டதாரி.  பிறேமச்சந்திரனின் உடன்பிறப்பு திரு கந்தையா சர்வேஸ்வரன் 14,761 வாக்குகள் பெற்று 13 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அப்படியிருந்தும் இபிஎல்ஆர்எவ் கட்சித் தலைவர் பிறேமச்சந்திரன் தனது உடன்பிறப்பைத்தான் அமைச்சர் பதவிக்குப் பரிந்துரை செய்தார்!  இது எப்படிப்பட்ட சனநாயகம்?  தண்ணீரைவிடக்  குருதி  தடிப்பானது என்பதை இது காட்டவில்லையா?

(2) 2015 இல் நடந்த தேர்தலில் 29,906 வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் ஏழாவது இடத்தில் வந்தார். அப்படியிருக்கும் போது   6 ஆவது இடத்துக்கு (42,925) வந்த தமி்ழரசுக் கட்சி வேட்பாளர் அருந்தவபாலனை  ஒதுக்கிவிட்டு,  ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில்  தனக்கு தேசியப் பட்டியல் நா.உறுப்பினர் பதவி வேண்டும் என்றார். பதவி மறுக்கப்பட்டதும் அந்த முடிவு வெட்கக் கேடானது எனப் புலம்பினார். எது   வெட்கக் கேடு? ஏழாவது   இடத்துக்கு தள்ளப்பட்ட பின்னரும் தனக்குத்தான் தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப் படவேண்டும் என்று அடம் பிடித்தது  வெட்கக்கேடு இல்லையா?

(3) இந்தப் பழம் புளிக்கும் என்று சொன்ன  நரிபோல தேர்தலில் படு தோல்வி அடைந்த சுரேஸ்  பிறேமச்சந்திரன் ” நாங்கள் தோற்கவில்லை. திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் பெற்றிருப்பதாகக்  கூறப்பட்ட வாக்குகளைக் காட்டிலும் அதிகளவு வாக்குகளையே பெற்றோம். ஆனால் அது சிலருக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் யார் எல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்கள்? என்பன போன்ற தகவல்களை நாங்கள் பெற்றிருக்கின்றோம்” என தேர்தல் நடந்து முடிந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் செய்தியாளர்களை அழைத்து  பிறேமச்சந்திரன் புலம்பியிருந்தார். வாக்கு எண்ணிக்கை  வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் அரச ஊழியர்களால் எண்ணப்படுகிறது. அதில் மோசடிசெய்யத் துளியும் இடம் இல்லை. ஒருவேளை மோசடி நடந்திருந்தால் மறுமுறை வாக்கு எண்ணப்பட வேண்டும் என்று பிறேமச்சந்திரன் தேர்தல் உதவி ஆணையாளரிடம் கேட்டிருக்க வேண்டும். இது தொடர்பாகப்  பின்னர் சர்ச்சை எழுந்த போது யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு வேதநாயகம் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்தது என்ற குற்றச்சாட்டை முற்றாக நிராகரிதிருந்தார்.

(4) பிறேமச்சந்திரன் ததேகூ இல் இருந்தாலும் அதன் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதில்லை. தான் நினைத்தவாறே நடந்து கொள்கிறார். 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் அவர் சிறிசேனாவை ஆதரித்துப் பரப்புரை செய்யவில்லை. இந்தியாவுக்கு ஓடிவிட்டார். தேர்தல் நடப்பதற்கு முதல் நாள் நாடு திரும்பிய பிறேமச்சந்திரன் வாக்களித்துவிட்டு வெளியே வந்தார். அவரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டார்கள்.   அவர் தான் வேண்டா வெறுப்பாக சிறிசேனாவுக்கு வாக்களித்து விட்டு வருவதாகச் செய்தியாளர்களிடம் சொன்னார். ஒருவேளை அவர் இராஜபக்சா வெல்ல வேண்டும் என்று உள்ளூர விரும்பினார் போலும்.  இராஜபச்சா மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த போது அந்த அமைச்சின் ஆலோசகராக பிறேமச்சந்திரன் இருந்தார்  என்பது தெரிந்ததே.

(5) தமிழ் மக்கள் பேரவையில் யாரும் வந்து சேரலாம் என கூவி அழைக்கும் பிறேமச்சந்திரன் இபிஎல்ஆர்எவ் (வரதர் அணி) ததேகூ இல் சேர முன்வந்த போது அதனை மூர்க்கத்தனமாக எதிர்த்தார்!

(6) கடந்து ஆண்டு (2016)  வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அதனை ஆதரிப்பது என ததேகூ முடிவு செய்தது. ஆனால் அவரது கட்சியைச் சார்ந்த சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்த்துக் கொண்டார். இருந்தும் அதே கட்சியைச் சேர்ந்த  இன்னொரு நா.உறுப்பினர் மருத்துவர் சிவமோகன் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்! இதனால் மருத்துவர் சிவமோகன் பட்டபாடு சொல்லி மாளாது. இபிஎல்ஆர்எவ் குண்டர்களின் பயமுறுத்தல் காரணமாக அவர்  தமிழ்நாட்டுக்கு  ஓடிப் போய் சிறிது காலம் இருந்துவிட்டு நாடு திரும்பினார்.  இப்போது அவர் இபிஎல்ஆர்எவ் கட்சியில் இல்லை.

(7) தன்னை ஒரு அரசியல் ஞானி என பிறேமச்சந்திரன்  நினைக்கிறார். மற்றவர்கள் மீது எப்போதும்  குற்றம் குறை  சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிக்கிருக்கிறார். சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியில் இடையில்தான் வந்து சேர்ந்தவராம். திரு சம்பந்தன்தான் கூட்டி வந்தாராம். இருக்கட்டுமே. இது தமிழ் அரசுக் கட்சி சம்மந்தப்பட்ட விடயம். அதில் ஏன் பிறேமச்சந்திரன் மூக்கை நுழைக்கிறார்? மருத்துவர் சிவமோகனும் இடையில்தான் இபிஎல்ஆர்எவ் கட்சியில் வந்து சேர்ந்தார். இது பற்றி தமிழ் அரசுக் கட்சி ஏதாவது சொன்னதா? இல்லையே! உண்மையில் அவர் மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என நடந்து கொள்கிறார்.

(8) திரு சம்பந்தனை கிழவன் என அர்ச்சிக்கிறார். அவரது தம்பி சர்வேஸ்வரனும் அண்ணன் அடிதொட்டு திரு சம்பந்தனை கிழவன் என ஏழனம் செய்கிறார். ஏதோ இவர்கள் என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேயர் என நினைக்கிறார்கள் போலும். ததேகூ நடத்தும் நாடாளுமன்றக்  கூட்டங்களில் சிவசக்தி ஆனந்தன் திரு சம்பந்தனைத் தாக்கக்  கதிரை தூக்குகிறார்.

(9) 2013, 2014, 2015 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்  தீர்மானங்களைக்  கொண்டு வந்து நிறைவேற்றியது.   ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் அமெரிக்க நாட்டின் கொடியையும்   பிரித்தானிய தமிழர் ஒன்றியம், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை  இரண்டும் கூட்டுச்  சேர்ந்து எரித்தன. அதில் ததேகூ சேர்ந்த பிறேமச்சந்திரனும் கலந்து கொண்டார். இப்படி எல்லாம் செய்துவிட்டு “சம்பந்தர் எங்கே போகின்றார்” என்று அப்போது கேட்டார்.

(10) சென்ற மாதம் வழிகாட்டல் குழுவில் இருந்து சம்பந்தரும் சுமந்திரனும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி அறிவித்தல் விடுத்தார். அவருக்கு இராஜதந்திரம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது. அது அவரது அகராதியில் இல்லாத சொல். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதுதான் அவரது பாணி.

ஒருவர் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றால் பணிவு வேண்டும். பணிவுடமை குடியின் பெருமையைக் காட்டும் என்கிறார் வள்ளுவர்.

ஆனால் கெடு குடி சொல் கேளாது என்பது போல இப்போது பிறேமச்சந்திரனும் கஜேந்திரகுமாரும்  கை கோர்த்து கூட்டு  அரசியல் தற்கொலைக்கு அணியம் ஆகிறார்கள். கஜேந்திரகுமார்  புலிகளின் மிச்சங்களின் யோசனையைக் கேட்டு ததேகூ இல் இருந்து எந்தக் காரணமும் சொல்லாமல் வெளியேறிய போது அவரைப் போக வேண்டாம் என்று தடுத்தவர்களில்  பிறேமச்சந்திரன் முக்கியமானவர். கஜேந்திரகுமாரின் முட்டாள்த்தனமான முடிவால் அவர் இன்று அரசியல் பாலைவனத்தில் பயணிக்கிறார்.  அவர் மட்டும் தொடர்ந்து ததேகூ இல் இருந்திருந்தால் இன்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்திருக்கலாம். இப்போது அவரது வழியில் பிறேமச்சந்திரன் பயணிக்க முடிவு செய்து விட்டார். திருக்குறளில் உட்பகை என்றொரு அதிகாரம் (89) இருக்கிறது.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.          (திருக்குறள் – 890)

இதன் பொருள் மன  ஒற்றுமை இல்லாதவருடன் சேர்ந்து வாழும்  வாழ்வு ஒரு இருண்ட குடிசையில்  நாக பாம்புடன் சேர்ந்து வாழ்வது போன்றது.

ததேகூ இல் உள்ள எந்தக் கட்சியாவது  வெளியேறித்  தனித்து போட்டியிட விரும்பினால்  அந்தக் கட்சிக்கு பரிபூரண சுதந்திரம்  உண்டு என்கிறார் சுமந்திரன். ஒரு சனநாயக அமைப்பில் (ததேகூ) இருக்கும் எந்தக்  கட்சியும் அதன் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையேல் வெளியேற வேண்டும். உள்ளிருந்து கொண்டு குடைச்சல் கொடுக்கக் கூடாது.

இன்று உள்ளூராட்சி சபைகளின்  தேர்தலில்  புதிய கூட்டணி வைத்துப் போட்டியிட  மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறேமச்சந்திரனும் கஜேந்திரகுமாரும்   கை கோர்க்கிறார்கள்!

இந்த முடிவு  இரண்டு பேரும் கூட்டாக  அரசியல் தற்கொலை செய்ய மெத்த  வசதியாக இருக்கும்!

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply