முல்லைத்தீவு மாவட்டத்தில் 614 ஏக்கர் நிலத்துக்கு அனுமதிப் பத்மிரம் வழங்கச் சம்மதம்
தயாளன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பிரதேசத்தில் மீள் குடியமர்ந்த 164 குடும்பங்களின் 614 ஏக்கர் மானாவாரி வயல் காணி மற்றும் 800 ஏக்கர் வயல்நிலங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினருடனான கலந்துரையாடல் நவம்பர் 9ம் திகதி இடம்பெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பிரதேசத்தில் மீள் குடியமர்ந்த 164 குடும்பங்களின் 614 ஏக்கர் மானாவாரி வயல் காணிப் பிணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மீண்டும் தமக்கே வழங்க வேண்டும் என நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் மகாவலி இராஜாங்க அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தில் 614 ஏக்கருக்கும் தீர்வாக அனுமதிப் பத்மிரம் வழங்க சம்மதம் வழங்கியதோடு 835 ஏக்கர் தொடர்பில் தீர்வையெட்டும் வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலாளர் உள்ளிட்ட சகலதரப்பும் அமைச்சர் தலமையில் கலந்துரையாடலுற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த கலந்துரையாடல் நீண்ட காலமாக தடைப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 9ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்.
கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கொக்குத்தொடுவாய் மத்தி ஆகிய கிராம அலுவலர் பிரிவிலுள்ள மக்களுக்குச் சொந்தமான எரிஞ்சகாடு, குஞ்சுக்கால் வெளி, வெள்ளைக் கல்லடி போன்ற மானாவரி வயல்வெளிகளும், அடையகறுத்தான், தொண்டகண்டகுளம், பூமடுகண்டல், உந்தராயன்குளம், ஆமையான்குளம், கூமாவடிகண்டல் வெளி போன்ற நீர்ப்பாசன வயல் வெளிகளும் 1952 மற்றும் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் குறித்த மக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட வயல் காணிகளாகும். அதன்பின்பு 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் அனைத்து மக்களும் இடம்பெயர்ந்தனர்.
இந்தவேளையில் 1988.04.15 மற்றும் 2007. 03.09 ஆம் திகதிய வர்த்தமானிப் பிரசுரத்தில் குறித்த பிரதேசம் ‘மகாவலி ‘‘ஸி’’ வலயம் என பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது. இடப்பெயர்வின் பின் மீண்டும் 2011ஆம் ஆண்டு தமது பிரதேசங்களில் மக்கள் மீள் குடியமர்ந் துள்ளனர்.
எனினும் இவ்வாறான தொடர்ச்சியான இடப்பெயர்வின் காரணமாக குறித்த மக்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களும் தொலைக்கப்பட்டுள்ளன.
ஆனால் தற்பொழுது 614 ஏக்கர் மானாவாரி வயல் காணிகளுக்கச் சொந்தமான 164 குடும்பங்களுக்கு 2013/01 சுற்று நிருபத்துக்கமைய தொலைந்த உத்தரவுப்பத்திரங்களுக்குப் பதிலாக புதிய உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்படாதுள்ளன.
ஆயன்குளம், முந்திரிகைக்குளம், மறிச்சுக்கட்டுக்குளம் போன்ற குளங்களின் கீழுள்ள 225 தமிழ் மக்களுக்குச் சொந்தமான 835 ஏக்கர் நீர்ப்பாசன வயல்காணிகள் இந்தப்பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. முன்னர் வழங்கப்பட்ட இந்தக் காணிகளுக்குச் சொந்தமான தமிழ்மக்கள் தமது வாழ்வாதாரத்துக்கான காணிகளை இழந்த நிலையில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள்.
எனவே 2013/01 சுற்றுநிருபத்துக்கமை வாக உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்படாத 164 குடும்பங்களின் 614 ஏக்கர் மானாவாரி வயல்காணிகளுக்கான உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்படவேண்டும்.
தற்போது சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள 225 குடும்பங்க ளின் 835 ஏக்கர் நீர்ப்பாசன வயல்காணிகள் மீளவும் முன்னர் வழங்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கப்பட முடியாது எனவும் அதற்குப் பதிலாளக அதிகார சபையின் கீழ் உள்ள மாற்றுக்காணிகளே வழங்க முடியும் என வெலிஓயாவில் உள்ள மகாவலி அதிகார சபைநின் இணைப்பு அலுவலக அதிகாரி அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.