Debate On Interim Report MA Sumanthiran speech

அரசியல் யாப்பு இடைக்கால அறிக்கை குறித்த எம்.ஏ.சுமந்திரனின் நாடாளுமன்ற உரை

October 31, 2017

அரசியலமைப்பு சபையில் 30-10-2017 திங்கட்கிழமை புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில்,

சரித்திரபூர்வமான கலந்துரையாடலொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்தடவையாக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் பங்கேற்றுள்ளன. பாராளுமன்ற அரசியல் கட்சிகளின் ஏகோபித்த விடயங்களும், தனிப்பட்ட முன்மொழிவுகளையும் உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையானது அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அறிக்கையின் ‘இ’ பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை தெளிவாக கூறியுள்ளது. இந்த நாட்டில் பிரதான விடயமாக இருப்பது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாகும். தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றை முன்வைக்கின்ற ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்க்கட்சியில் உள்ள தரப்புக்கள் எதிர்த்து வந்தமையே கடந்த கால கட்டத்தில் இடம்பெற்று வந்த வரலாறாகும்.

தற்போது இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தேசிய அரசாங்கமாக இணைந்துள்ளன. ஆகவே இதுவொரு வரலற்றுச்சந்தர்ப்பமாகும். அதனை சரியான வகையில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அiனைவருக்கும் உள்ளது.

எதிர்க்காதது ஏன்?

2015ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்போம், புதிய தேர்தல் முறைமையொன்றை ஏற்படுத்துவோம், தேசியப் பிரச்சினைக்கான தீர்வு திட்டமொன்றை வழங்குவோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் ஆகிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதற்கான இந்த நாட்டில் உள்ள 91சதவீதமான மக்கள் ஆணைவழங்கியுள்ளார்.

அந்த ஆணைக்கு அமைவாகவே பாராளுமன்றத்தினை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி அத்தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டு ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்படும் தீர்மனத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

தற்போது இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அதற்கு எதிராக பகிரங்க குரல்கள் எழுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இங்குள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அத்தீர்மானம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டபோது எதிர்ப்பினை வெளியிட்டிருக்க முடியும். ஆகக்குறைந்தது வாக்கெடுப்பினைக் கோரியிருக்கலாம். ஆனால் அனைவரும் அதற்கு முழுமையான ஆதரவு வெளியிடுவதாக தெரிவித்தனர்.

இத்தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்னரான நாளொன்றில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தினை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என்று ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் அதுகுறித்து அவர் ஒருவார்த்தை கூட வெளியிடவில்லை.

மக்களின் ஆணைக்கு அமையவே பாராளுமன்றத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம் தற்போதுள்ள அரசியலமைப்பில் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான வரையறைகள் காணப்படுகின்றன. அரசியலமைப்பின் உறுப்புரை 74மற்றும் 75ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள அந்த ஏற்பாடுகளுக்கு அமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாரையும் புறக்கணிக்கவில்லை

வழிநடத்தல் குழுவின் அங்கத்தவராக இருந்தவர் என்ற அடிப்படையில் முக்கிய சில விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன். புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையை உருவாக்கும் செயற்பாட்டின்போது உபகுழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் இருவர் தமது கருத்துக்கள் உள்வாங்கப்படாதிருப்பதாக வழிநடத்தல் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

நாமல் ராஜபக்ஷ மற்றம் ஷெஹான் சேமசிங்க ஆகிய எம்.பி. க்கள் இவ்வாறு கவனத்திற்கு கொண்டு வந்ததும் அவர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்குரிய கால அவகாசம் வழங்கப்பட்டது. அதுபோன்று கெஹலிய ரம்புக்வெல எம்.பிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதையடுத்து அவர் முன்மொழிவைச் செய்தபோதும் பின்னர் தினேஷ் குணவர்த்தன அதனை மீளப்பெற்றுக்கொண்டு விட்டார்.

தற்போது இடைக்கால அறிக்கைக்கு எதிராக குரலெழுப்பும் உறுப்பினர்கள் அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 20 சதவீதமான பங்களிப்பினை செய்துள்ளார்கள். அத்துடன் இடைக்கால அறிக்கையிலும் அவர்களது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆகவே புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் பங்களிப்புக்கள் கணிசமானவையாக இருக்கின்றன.

மகிந்த சொன்னதையே நாம் செய்கின்றோம்

2015ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை சபைக்கு ஆற்றுப்படுத்தும் அதேநேரம் அந்த விஞ்ஞாபனத்தில், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பானது பலதடவைகள் திருத்தப்பட்டுள்ளது. ஆகவே பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தொட்டம் தொட்டமாக இதே அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளமுடியாது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எமது ஆட்சி அமைந்து ஒருவருட காலத்தினுள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று உள்ளது.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயத்தினையே நாம் தற்போது முன்னெடுக்கின்றோம். அவ்வாறான நிலையில் அதனை எவ்வாறு அவருடைய அணியினர் எதிர்க்க முடியும்?

பௌத்தத்திற்கு எதிர்ப்பில்லை

நாங்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். அனைத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகவுள்ளது. இருப்பினும் பெரும்பான்மையான பௌத்த மதத்தினை பின்பற்றும் மக்கள் பௌத்த மத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் அல்லது தற்போதுள்ளமையைப்போன்றே புதிய அரசியலமைப்பிலும் அமையவேண்டும் என்று விரும்புவார்களாயின் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. அதனால் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் ஏனைய மதங்களுக்கான உரிய அங்கீகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

சமஷ்டியை முன்மொழிந்தவர்கள் பெரும்பான்மையினரே

இலங்கை அரசு சமஷ்டி அரசாக இருக்க வேண்டும் என்று நாம் கோருகின்றோம். இதனால் நாடு பிரிவடைந்து செல்லப்போகின்றது என்று பிரசாரம் மேற்கொள்பவர்கள் ஒரு விடயத்தினை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது.

இந்த நாட்டில் சமஷ்டி என்ற விடயத்தினை முன்னிலைப்படுத்தியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே ஆவார். இவர் 1926ஆம் ஆண்டு சமஷ்டி அரசு முறைமையை வலியுறுத்தி ஆறு கடிதங்களை எழுதியுள்ளார்.

இதற்கு பின்னர் 1944ஆம் ஆண்டு கம்னியூஸ்ட் கட்சியாது சமஷ்டி அரசு முறைமையை வலியுறுத்தியது. பீற்றர்கெனமன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக டொனமூர் ஆணைக்குழுவில் இந்த நாடு மூன்று அலகுகளாக இருக்கவேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்து இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் கண்டியத் தலைவர்கள் இரண்டு தடவைகள் சமஷ்டி தொடர்பிலான விடயத்தினை முன்வைத்துள்ளனர். இம்பீரியர் ஆணைக்குழுவிலும் சமஷ்டி முறையை பற்றி வலியுறுத்தியுள்ளது.

ஆகவே தமிழர்கள் பிரிந்து செல்வதற்காகவே சமஷ்டியைக் கோருகின்றார்கள் என்பது தவறான அர்த்தப்படுத்தலாகும். தமிழர்களுக்கு முன்னதாக பெரும்பான்மையானவர்களே சமஷ்டி விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்கள்.

ஆகவே சமஷ்டி என்பது பிரிந்து செல்லும் விடயம் அல்ல. இலங்கை நாடு ஒரு நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அனைவரும் ஐக்கியமாகவும் சமத்துவமாகவும் நடத்தப்படும் சூழல் ஏற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அது அரசியலமைப்பு ரீதியாக தீர்மானிக்கப்பட வேண்டும்.

இரண்டாந்தரப் பிரஜைகள் அல்ல

இந்த நாட்டின் இறைமையானது ஒரு பெரும்பான்மையை மையப்படுத்தியதாக இருக்க கூடாது. இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரும் இறைமையைப் பயன்படுத்தக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நாடு ஒன்றாக இருக்கும் அதேநேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் எமது மக்களும் பங்காளர்களாக வேண்டும்.

முக்கியமாக அதிகாரங்களை ஒரு தரப்பினரே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்ற நிலையில் மற்றைய தரப்பினர் எவ்வாறு அவர்களுக்கு தாங்களும் சமமானவர்கள் என்ற மனநிலைமை ஏற்படும். ஆகவே அதிகாரங்கள் பகிரப்பட்டு அனைவரும் சமத்துவமானவர்கள் என்ற மனநிலைமை உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

விசேடமாக தமிழ் மக்கள் தாங்கள் இரண்டாம் தரப்பிரஜைகள் அல்ல. தாங்கள் இலங்கையர்கள் என்ற நிலைமை தோற்றுவிக்கப்படவேண்டியுள்ளது. தற்போது கனடா:, லண்டன் என பல இடங்களில் வாழும் தமிழ் மக்கள் தங்களை கனடா தமிழர்கள், லண்டனர் தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். அவர்கள் தாங்களை இலங்கையர்கள் என்று அழைப்பதும் இல்லை அடையாளப்படுவதுமில்லை.

ஆகவே நான் ஒரு இலங்கையன். நான் நாட்டினுள் சமமமாக நடத்தப்படுகின்றேன். ஆட்சி அதிகாரத்தில் நான் புறக்கணிக்கப்படவில்லை என்ற நிலைமை உருவாக வேண்டும். அதற்காக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியுள்ளன. தமிழ் மக்கள் ஆட்சிக் கட்டமைப்பில் பங்கேற்றிகின்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.

அதிகாரங்கள் பகிர்வும் மகிந்தவின் நிலைப்பாடும்

13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாணசபை முறைமையை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று முதலமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர்கள் வலியுறுத்துகின்றார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனியே இக்கோரிக்கையை விடுக்கவில்லை. ஏனைய 7 மாகாண சபைகளும் இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளன.

அவ்வாறிருக்கையில் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக புறக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட குழுவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஈடுபட்டிருந்தார். ஆனால் தற்போது அவர் மாகாண சபைகளுக்கான தேர்தல் பிற்போடப்படுவதாக குற்றம் சாட்டுகின்றார். போராட்டங்களை நடத்துகின்றார். இது வேடிக்கையாகவல்லவா இருக்கின்றது?

அதேநேரம் இந்தியாவுக்குச் சென்றபோதும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்திலும் 13ஆம் திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதோடு அதற்கும் அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதனைவிடவும் அவரால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட போதும் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்கின்றார்.

அவ்வாறானவர் தற்போது ஒருமித்த நாடு என்ற சொற்பிரயோகத்தினை பயன்படுத்தியால் நாடு பிளவடையப்போவதாக கூறுகின்றார். ஏகிய ராஜ்ய என்றால் ஒருமித்த நாடு அல்லது ஒரு நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பிளவடையமுடியாத பிரிக்கமுடியாத நாடு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் இதனை எதிர்ப்பவர்கள் ஒரு காலத்தில் எதற்கு இணங்கினார்கள் என்று தெரியுமா?

தற்போதைய இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலும் பார்க்க எவ்வளவோ தூரத்தில் காணப்படுகின்ற பிராந்தியங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டபட்ட சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அச்சட்ட மூலத்திற்கான அனுமதி பெறப்பட்டபோது மகிந்த ராஜபக்ஷவும் ஆதரவளித்துள்ளார். இதனை புரிந்துகொள்வேண்டும்.

எமது மக்கள் ஏற்க வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்ற கட்சியாகும். எமது மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக எம்மால் செயற்படமுடியாது. தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்றே எமது மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள்.

அவர்களின் உரிமைகளை அபிலாஷைகளை மறுக்கின்ற விடயத்தினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் திருப்தியடைக்கூடிய தீர்வொன்று கிடைக்கப்பெறும் சமயத்தில் நாம் அதனைப் பெற்றுக்கொண்டு எமது மக்கள் முன்னால் செல்வோம். அதற்கு அவர்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இங்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றபோதும் பொதுவான விடயங்களில் பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான பணியில் இடைவெளியில் நாம் நிற்கின்றோம். இதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். எதிர்காலத்தினையும் எதிர்கால சந்தியினரையும் கருத்திற்கொண்டு நாம் செயற்பட வேண்டும்.

எதிர்கால சந்ததியினரை துன்பகரமான நிலைமைக்கு தள்ளிவிடக்கூடாது. பிரதான கட்சிகள் இரண்டும் பொது இணக்கப்பாட்டிற்கு வரும் விடயங்களை ஏற்றுக்கொள்ளமுடியுமென்றால் நிச்சயமாக ஆதரவளிப்போம். தற்போதைய வாய்ப்பினை நழுவ விடக்கூடாது என்றார்.

About editor 3045 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply