சம்மந்தன் சாணக்கியரா? நக்கீரன் பதில்!
தற்போது தமிழ் மக்களுக்கு தலமை தாங்கும், கட்சியான தமிழரசுக்கட்சியும்,அதன் தலமையும் தமிழ் மக்களை தோல்வி அரசியலுக்குள்ளும்,தாழ்வுமனப்பான்மைக்குள்ளும் தொடர்ந்து வைத்திருந்து,நல்லாட்சி அரசிடம் சோரம்போகும் அரசியலை தொடர்ந்தவண்ணம் இருக்கிறது,அந்த கட்சி தனது இயலாமையையும், புத்திசாதுரியமற்ற தவறான அரசியல் முடிவுகளையும் மறைப்பதற்கு,கடந்தகால த்தில் விடுதலைப்புலிகளின் தவறுகளையும்,முள்ளிவாய்க்காலையும் முடிந்த முடிவாக காட்டி, அந்த போர்வைக்குள் மறைந்துகொண்டு அரசியல் செய்கிறது,விடுதலைப்புலிகள் இயக்கமும்,தமிழ் மக்களும் தமது தியாகத்தினூடாக உருவாக்கிய தமிழர் பேரம்பேசும் அரசியலை,சரணாகதி அரசியலாக்கிய பெருமை சம்மந்தனையும்,சுமந்திரனையும்,தமிழரசுக்கட்சியையும் சாரும்,எனவே தமது சரணாகதி அரசியலை மறைப்பதற்கு அவ்வப்போது சுமந்திரனை வைத்து தமிழ் மக்கள் அனைவரையும் முட்டாள்களாக மட்டம் தட்டுகிறது அதனூடாக தமிழ் மக்களை தாழ்வுமனப்பான்மைக்குள் வைத்திருக்க முயற்சி செய்கிறது.
2009ம் ஆண்டு மே மாதம் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்படும்போது,தமிழரிகளிடம் ஆயுதபலம் இருக்கவில்லையே தவிர,மாறாக அதைதவிர்த்து சகலதையும் விடுதலைப்புலிகள் உருவாக்கியே வைத்திருந்தார்கள்,பலமான சனநாயக சக்தியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு இருந்தது,விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பு பலமான கிளைகளுடன் எதுவித சேதாரமும் இன்றி உயிர்ப்புடன் இருந்தது,அத்துடன் முள்ளிவாய்க்கால் அவலத்தால் ஏற்பட்ட,மிகப்பெரிய சர்வதேச ரீதியான தார்மீக அனுதாபமும்,அரசியல் ஆதரவும் தமிழ் மக்களுக்கு உருவாகி இருந்தது,எனவே தமிழ் மக்கள் ஒரு பலமான அரசியல் ஆதரவு தளத்திலேயே இருந்தார்கள்,ஆதரவற்ற அநாதைகளாக இருக்கவில்லை,
பதில்: சம்பந்தன் முட்டாளாக இருந்திருந்தால் வி.புலிகள் ஏன் அவரை ததேகூ இன் தலைவராக நியமித்தார்கள்? வி.புலிகள் படு முட்டாள்க்களா? வி.புலிகள் காலத்தில் உலகின் எந்தவொரு நாடும் எமக்கு ஆதரவாக இருந்ததில்லை. பக்கத்து நாடான இந்தியா எதிரி நாடாக இருந்து வி.புலிகளின் இராணுவ தோல்விக்கு சிறிலங்காவுக்கு புலனாய்வு, கண்காணிப்பு, பயிற்சி வழங்கியது!
(2) சம்மந்தன் மட்டும் ஒரு சரியான,திறமையான,சாணக்கியத் தலைவராக இருந்திருந்தால் 2009ம் ஆண்டு மே மாதம் உருவாகிய சர்வதேச தமிழர் சார்பு அரசியலை,திறமையாக கையாண்டும்,புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் தனது தலைமைக்குகீழ் ஒருங்கிணத்துதமிழர் அரசியலை மிகவும் சக்திவாய்ந்த பேரம்பேசும் அரசியலாக மாற்றி,தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை செய்து தனது சாணக்கியத்தை நிருபித்திருப்பார்.
பதில்: ” 2009ம் ஆண்டு மே மாதம் உருவாகிய சர்வதேச தமிழர் சார்பு அரசியலை………..” இதை யார் உமக்குச் சொன்னது? 2009 ஆம் ஆண்டு ஐநாமஉ பேரவையில் சுவிஸ்லாந்தும் கனடாவும் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவு இல்லாத காரணத்தால் அது கைவிடப்பட்டது. மாறாக பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிய சிறிலங்காவைப் பாராட்டி இந்தியா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பல நாடுகள் ஆதரவு அளித்ததால் அது நிறைவேறியது.
(3) ஆனால் சம்மந்தனோ தமிழ் மக்கள் சார்பாக உருவாகிய சகல சாதகமான அரசியல் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு போட்டுடைத்துவிட்டு,அதற்கு விடுதலைப்புலிகள்மீது குற்றம் சுமத்துவதோடு,தமிழ் மக்களையும் தாழ்வு மனப்பான்மைக்குள் வைத்திருப்பதற்கு பெயர் சாணக்கியமா? என தமிழரசுக்கட்சியினர் சிந்திக்கவேண்டும், சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துபவனே சாணக்கியன்,சந்தர்பத்தை தவறவிட் நிற்கும் ஒரு தலைவர் எந்தவகையில் சாணக்கியர் என எனக்குத்தெரியவில்லை.
பதில்: உமக்குத் தெரியவில்லை என்பதால் சம்பந்தன் சாணக்கியன் அல்ல என்று பொருள் அல்ல. 2011 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் திரு சம்பந்தன் தலைமையில் ததேகூ தலைவர்கள் அமெரிக்க அயலுறுவு அமைச்சோடு 3 நாட்கள் தொடர்ந்து பேசினார்கள். அதன் விளைவாக 2012, 2013 மற்றும் 2014 களில் அமெரிக்கா சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐநாமஉ பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. 2014 ஆம் ஆண்டுத் தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. இந்தத் தீர்மானங்கள்தான் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்கு சிறிலங்கா பொறுப்புக் கூற வேண்டும், விசாரணை செய்ய வேண்டும் எனக் கேட்டன. 2015 ஒக்தோபர் 1 இல் நிறைவேற்றப்பட்ட காட்டமான தீர்மானம் சிறிலங்கா அரசாலும் முன்மொழியப்பட்டது. இவை சம்மந்தனின் சாணக்கிய அரசியலுக்கு கிடைத்த வெற்றியாகக் கொள்ளலாம்.
(4) அதேநேரம் சம்மந்தனோ அவரது இதுவரைகால அரசியல் வாழ்வில் தமிழ் மக்களுக்கு சார்பாக,குறிப்பிடும்படியாக எதையும் செய்யவுமில்லை,உருவாக்கவுமில்லை,மாறாக தமிழ் மக்களும்,விடுதலைப்புலிகளும் தமது ஒப்பற்ற தியாகத்தால் உருவாக்கிய அரசியல் திரட்சியையும்,தமிழர் ஒற்றுமையையும் தக்கவைத்திருக்கவும் தெரியவில்லை,ஒற்றுமையாக இருந்த தமிழர் அரசியல் பலத்தை அவரது தூரநோக்கற்ற வெகுளித்தனமான தனமான செயற்பாட்டால் சிதைத்து,தமிழ் மக்களை கோபத்திற்கும்,விரக்திக்கும் தள்ளிவிட்ட மிக மோசமான ஒரு தலைவராக ,சம்மந்தன் தமிழர் வரலாற்றில் இடம்பெறுவதை யாராலும் தடுக்கமுடியாது,தனது வாழ்வின் இறுதி தருணத்தில் இருக்கும் சம்மந்தன்,தமிழர்களுக்கு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் துரோகிப்பட்டத்துடன் தனது அரசியல் வாழ்வையும்,தனது புவிவாழ்வையும் சம்மந்தன் நிறைவுசெய்யப்போகிறார்,மேலும் தமிழ் மக்கள் இனிமேலும் இந்த தமிழரசுக்கட்சியினரையும் சம்மந்தன்,சுமந்திரனையும் நம்பிக்கொண்டிருப்பது சரியான பாதையா என சுயவிமர்சனம் செய்யவேண்டிய தருணமிதுவாகும்,
பதில்: தமிழ்மக்கள் 2009 இல் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள், 2010 மற்றும் 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள், 2012 இல் நடந்த கிழக்க மாகாணத் தேர்தல், 2013 இல் நடந்த வட மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றில் ததேகூ யை பெரும்பான்மை மக்கள் ஆதரித்தார்கள். மக்கள் மடையர்களல்ல என்பதை தமிழ்மதி புரிந்து கொள்ள வேண்டும்.
(5) அத்துடன் தமிழ் அரசியல் பரப்பில் ஒரு மாற்று அணி உருவாக்கத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்கவேண்டிய தவிர்க்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்,அதேநேரம் உருவாகும் மாற்று அணி எத்தகைய வேலைத்திட்டத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை மாற்றை உருவாக்க நினைப்பவர்கள் தமிழ் மக்களுக்கு முன்வைக்கவேண்டும்,தற்போதைய அரசியல் சூழலில் தமிழரசுக்கட்சிக்கெதிராக ஒரு மாற்று தேவையே,அதே நேரம் அந்த மாற்று இன்னுமொரு தமிழரசுக்கட்சியாக உருவாக்கம்பெறுவதையும்,செயற்படுவதையும் தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்,தமிழரசுக்கட்சிக்கெதிராக நாம் மாற்று அணியின் தேவையைப்பற்றி பேசும்போதே,சம்மந்தனின் அரசியல் சாணக்கியம் தமிழ் மக்களிடத்தில் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதையே காட்டுகிறது,
பதில்: ததேகூ இன் சாணக்கிய அரசியல் நகர்வுகளால் இன்று வட கிழக்கில் சனநாயகத்துக்கான வெளி அதிகரித்துள்ளது. வெள்ளை வான் இல்லை. கிறீஸ் பூதம் இல்லை. தாண்டிக்குளத்தில் பாஸ் இல்லை, இராணுவத்தின் பிடியில் இருந்த தனியார் காணிகளில் மூன்றில் ஒரு பங்கு (சம்பூரில் நூற்றுக்கு நூறு விழுக்காடு) விடுவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனோர் பற்றி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஓரு புதிய அரசியல் யாப்பு வரையும் முயற்சி நடைபெறுகிறது. ஆட்சியில் பல குறைகள் இருந்தாலும் இலங்கை ஒரு சனநாயக நாடு. தேர்தல் மூலம் ஆட்சிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக மாற்றுத் தலைமையை தாராளமாக உருவாக்கலாம். கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். ஆனால் நீங்கள் மலைபோல நம்பியிருந்த விக்னேஸ்வரன் சம்பந்தன் உயிரோடு இருக்கும வரை மாற்றுத் தலைமை தேவையில்லை என்று உம்மைப் போன்றவர்களது தலையில் குண்டைப் போட்டுள்ளார். அவரை விட்டால் அரசியல் பரப்பில் ஒரு மாற்று அணியை உருவாக்குவது ஊமையன் கண்ட கனவாக இருக்கும்! கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கூட ஒருத்தனையும் காணோம்!
(5) எனவே சம்மந்தன் சாணக்கியரா?முட்டாளா? என்பதை தமிழ் மக்கள் முடிவுசெய்வார்கள்.
பதில்: மக்கள் சரியாகத்தான் முடிவு செய்வார்கள். மக்களது அரசியல் புரிதலில் எங்களுக்கு அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது. கடந்த காலத்தில் சரியாகவே முடிவு எடுத்தார்கள். இராஜபக்சாவுக்கு எதிராகப் போட்டியிட்ட சரத் பொன்சேகா, மயித்திரிபால சிறிசேனா இருவருக்கும் எதிராக ததேகூ கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரண்டு கையாலும் வாக்களித்தார்கள்.
தமிழ்மதி தன்னை பெரிய அரசியல் சிந்தனையாளன் என நினைப்பது போல தெரிகிறது. ஆனாபடியால்தான் இப்படியான முட்டாள்த்தனமான கேள்வியைக் கேட்கிறார்.
நக்கீரன்
Leave a Reply
You must be logged in to post a comment.