எரிந்து கருகும் உயிர்கள்… எதற்குக் கொண்டாட்டம் முதல்வரே?
‘‘பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’’
மதுரையை எரித்துவிட்டுக் கண்ணகி கேட்டாள். ‘‘இந்த ஊரில் பெண்கள் இருக்கிறார்களா… கணவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்களா… இந்த ஊரில் சான்றோர்களும் இருக்கிறார்களா… பிறர் பெற்ற பிள்ளையைத் தன் பிள்ளையாய் எடுத்து வளர்க்கும் சான்றோர்களும் இருக்கிறார்களா… இந்த ஊரில் தெய்வம் இருக்கிறதா… தவறே செய்யாத என் கணவனைக் கொன்று அறம் தவறிக் குற்றமிழைத்த பாண்டிய மன்னனின் ஊரில் தெய்வமும் இருக்கிறதா?’’
கைபிடித்த மனையாளையும் பால் வாசம் மறக்காதா பச்சைக் குழந்தைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தாரை வார்த்து, தன்னையும் கொளுத்திக்கொண்ட இசக்கிமுத்து கேட்கிறார்… ‘அரசும் உண்டுகொல்? அரசும் உண்டுகொல்? நிர்வாகம் உண்டுகொல்? நிர்வாகம் உண்டுகொல்? இரக்கமும் உண்டுகொல்? இரக்கமும் உண்டுகொல்?’
இசக்கிமுத்து கேட்கிறார். ஆனால், அது யார் காதுகளுக்கும் கேட்காது. இசக்கிமுத்து ஏழை. ‘மேட்டர்’ முடிக்க அவரால் பணம் தர முடியாது. ‘பணம் இல்லையா… ஏன் உயிர்வாழ்கிறாய்? செத்துப் போ!’ அரசு வழங்கிய தீர்ப்பு இது. தன்னைத்தானே எரித்துக்கொண்டு, உயிரோடு இருப்பவர்கள் முகத்தில் அவமானக் கரியைப் பூசியிருக்கிறது இசக்கிமுத்து குடும்பம்.
எழுத முடியவில்லை. எழுதுகோல் எரிகிறது. தாள் எரிகிறது. எடப்பாடி அரசுக்கோ, அதன் மாட்சிமை தாங்கிய அமைச்சர் பெருமக்களுக்கோ, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துக்கோ, நாட்டு மக்களைக் காப்பாற்ற அவதாரம் எடுத்திருக்கும் காவல் துறைக்கோ, இசக்கிமுத்து எரியும்போது பட்ட வேதனை, சுப்புலட்சுமியின் உடலைத் தீ சுட்டபோது பட்ட துன்பம் புரியுமா? நெருப்பு சுடும் என்றே உணரத் தெரியாத வயதில் நீர்க்குளிப்பு போல தீக்குளிப்பை எதிர்கொண்டு மதி சரண்யா அலறிய அலறல், அட்சய பரணிகா கதறிய கதறல் உங்கள் மனச்சாட்சியை உலுக்கவில்லையா?
‘கடன் வாங்கினான்; கட்ட முடியவில்லை; தீக்குளித்தான்’ – என்கிறது ஒரு குரல். இது எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதா? ‘தேர்வில் அதிக மார்க் வாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொண்டாள்’ – என்றதே அனிதாவின் மரணத்தின்போது, இதே குரல். டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராடியபோது, ‘வாங்கிய கடனைக் கட்டமுடியாதவனுக்கு என்ன போராட்டம்?’ என்றது இதே குரல். அரசும், அதிகாரமும், ஆணவமும், உயர்வர்க்கமும் எப்போதும் ஒரே மாதிரிதான் யோசிக்கும். அய்யாக்கண்ணுவாக இருந்தாலும், அனிதாவாக இருந்தாலும், இசக்கிமுத்து குடும்பமாக இருந்தாலும், ‘அடித்தட்டு மக்கள் சாகக் கடவது’ என்பது விதிக்கப்பட்டது.
இந்திய தேசத்தின் கடன்களின் கடவுளாம் விஜய் மல்லையாவின் தாடி முடியைக்கூடத் தொட முடியவில்லை. சுப்புலட்சுமியும் மதி சரண்யாவும் அட்சய பரணிகாவும் கொளுத்திக்கொண்டு சாகிறார்கள். தமிழ்நாட்டு விவசாயி இந்தத் தேசத்தின் தலைநகரில் அம்மணமாக ஓடத் துணிகிறார் என்றால் இது யாருக்கான அரசாங்கம்? யாருக்கான நிர்வாகம்? யாருக்கான சட்டம்?
‘கந்துவட்டி வசூலித்தால் குற்றம். கட்டாயப்படுத்தினால் சிறை’ – இப்படி கந்துவட்டிக்கு எதிராகச் சட்டமும் இருக்கிறது. கந்துவட்டியும் இருக்கிறது என்றால் தப்பு இசக்கிமுத்து குடும்பத்தின்மீதா… இந்த அரசாங்கத்தின்மீதா? சட்டத்தை அமல்படுத்துவது யார்? காவல்துறை. காசுக்காகக் கந்துவட்டிக்காரர்களின் பின்னால் சுற்றி ஏவல்துறையாக அதை மாற்றிவிட்ட மனிதர்கள் அதில் பலர் இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணக் கூடிய யோக்கியர்கள் மட்டுமே இன்னமும் மிச்சமிருக்கிறார்கள். அந்தத் துறை எப்படி சட்டத்தைக் காப்பாற்றும்?
ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கடன்வாங்கி, 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வரை வட்டி கட்டியிருக்கிறார் இசக்கிமுத்து. அசலை யாரால் ஒழுங்காகத் திருப்பித் தர முடியாதோ அவர்களுக்குத்தான் வட்டிக்குப் பணம் தரப்படும். ஒழுங்காக அசலைக் கொடுத்துவிட்டால் வட்டிக்காரனுக்கு லாபம் எங்கிருந்து கிடைக்கும்? எனவே இசக்கிமுத்து போன்ற இளிச்சவாயர்களே கந்துவட்டிக் கும்பலின் இலக்கு. ‘அசலைத் தர வேண்டாம்; வட்டிமட்டும் தந்தால் போதும்’ என்றே தாராளமாய்ச் சொல்வார்கள். வட்டி தராவிட்டால் மிரட்டுவார்கள். ஆள்வைத்து விரட்டுவார்கள். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழக்கே பதிவு செய்யாமல், அநாமதேய போன் போட்டு ஏட்டய்யா பேசுவார். வட்டிப்பணம் பயத்தில் வந்துவிடும். வட்டிப்பணத் தில் பாதி போலீஸுக்குப் போய்விடும். பணம் கொடுத்தவன் ஒருவன். வட்டி கட்டுபவன் ஒருவன். கல்லா கட்டுபவன் மற்றொருவன் எனக் கந்துவட்டிச் சட்டம் இந்த நாட்டில் காப்பாற்றப்பட்டு வருகிறது.
ஒரு முறை அல்ல, ஐந்து முறை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் மனு கொடுத்துள்ளார் இசக்கிமுத்து. குறை தீர்க்கப்படவில்லை. திங்கள்கிழமைதோறும் கலெக்டர் நடத்தும் சடங்கு அது. அந்த மனு, அதே காவல்நிலையத்துக்குப் போயிருக்கும். அதே ஆள் கைக்கே போயிருக்கும். யாரைக் குற்றம் சாட்டுகிறார்களோ, அவர்கள் கைக்கே மனு போய்ச் சேருவது மாதிரியான கேவலம்தான் மனுநீதி நாள். அது மனு அநீதி நாள்.
100 கிலோ மீட்டர் தூரத்தில் நான்கு உயிர்கள் கொதித்துக் கொண்டிருக்கும்போது கொண்டாட்ட விழாவில் இருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா நடத்துவது தவறல்ல. கொண்டாடப்பட வேண்டியவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்தவரை அதில் மாற்றுக்கருத்தில்லை.
எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் நடத்துவது மட்டுமே தன்னுடைய ஒரே வேலை என்று முதல்வர் நினைக்க முடியுமா?
இசக்கிமுத்து குடும்பம் செய்ததை வழக்கமான தற்கொலை முயற்சி என்று ஒதுக்கி விடுவீர்கள் என்றால்… கடந்த நான்கு மாத காலமாக டெங்கு காய்ச்சல் பரவி, படுத்தி எடுக்கிறதே… பதறியதா இந்த அரசாங்கம்? அரசு கணக்குப்படி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளார்கள். அரசு கணக்கு எப்போதும் பொய்க்கணக்காகத்தான் இருக்கும். பாதிப்பும் மரணமும் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். முதல்வரின் செயல்பாட்டில் இது ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
எடப்பாடிக்குத் திருநெல்வேலி தூரம். சேலம் சொந்த மாவட்டம். இசக்கிமுத்து தீக்குளித்த அதே நாளில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயற்சி செய்து, நல்லவேளையாக காப்பாற்றப் பட்டுள்ளார்கள். சேலம் அருகே உள்ள சின்னசீரகாபாடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. அம்மா கமலா, மனைவி மஞ்சு, தம்பி கணபதி, தம்பி மனைவி கார்த்திகா ஆகியோரோடு வந்தார் கோபி. ஐந்து பேரும் மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றிக்கொண்டனர். பாதுகாப்புக்கு நின்றவர்கள் தீக்குச்சியைப் பற்ற வைக்கவிடாமல் தடுத்து விட்டனர். என்ன காரணம் தெரியுமா?
ஆறுமாத காலமாக தங்களது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து, கேட்டுக் கேட்டு… நொந்து நொந்து… இருட்டில் வெந்து வெந்து போய் மண்ணெண்ணெயுடன் கிளம்பியிருக்கிறார்கள். வாழவந்த வீட்டில் கக்கூஸ் இல்லை என்பதால் நொந்து போன பெண்ணின் கதை ‘ஜோக்கர்’ என்றால்… வாழவந்த வீட்டில் மின்சாரம் இல்லாமல் நொந்து போன பெண்களை வைத்து ‘தீக்குளிப்பு’ எனப் படம் எடுத்தால் முதலமைச்சருக்குப் பெருமையாகுமா?
இதே திருநெல்வேலி, சேலம் சோகங்கள் நடந்த தினத்தில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சிவகாசி விழாவில் இருந்தார்கள். அவர்கள் பேசி முடித்து தேசிய கீதம் பாடப்பட்டதும் இரண்டு பெண்கள் திடீரென கோஷமிட்டபடி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டார்கள். நல்லவேளை உயிர் காப்பாற்றப்பட்டது. தன் கணவரைச் சட்டவிரோதமாக போலீஸார் சிறை வைத்திருப்பதாக அந்தப்பெண் கூறுகிறார். இந்தக் காட்சியைப் பார்த்தும் பார்க்காமலும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சென்றதாக நமது நிருபர் கூறுகிறார்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் – என்றான் ஆசான் வள்ளுவன்.
இவர்களுக்கு இதன் ‘பொருள்’ புரியாது. அதையும் சொல்லி விடுவோம். ‘பிச்சை எடுத்தும் வாழ வேண்டும் எனத்தக்க நிலையில் அமைந்த ஆட்சி ஒழியுமாக!’
அட்டைப் படம்: எல்.ராஜேந்திரன்
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், ஈ.ஜெ.நந்தகுமார்
Leave a Reply
You must be logged in to post a comment.