“அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்கள்: பார்க்க மறுப்பவர்களை விட வேறு யாரும் குருடாக இருக்க முடியாது”

“அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்கள்: பார்க்க மறுப்பவர்களை விட வேறு யாரும் குருடாக இருக்க முடியாது”

ஜாவிட் யூசுவ்

கடந்த 15,  ஒக்தோபர் 2017 இல் வெளிவந்த சண்டே ரைம்ஸ் இதளில் டேவிட் யூசுவ் ” அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்கள்: பார்க்க மறுப்பவர்களை விட வேறு யாரும் குருடாக இருக்க முடியாத” என்ற தலைப்பில்  ஜாவிட் யூசுவ் சண்டே ரைம்ஸ் ஏட்டில் ஒரு கட்டுரை (http://www.sundaytimes.lk/171015/news/opposing-constitutional-reforms-a-case-of-none-as-blind-as-those-who-refuse-to-see-264089.html) எழுதியுள்ளார்.

அதில் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்துக்கு எதிராக எழுப்பப்படும் முக்கிய குற்றச்சாட்டுக்கள் சிலவற்றுக்கு விடையிறுத்தியுள்ளார். அதன் தமிழாகத்தை இப்போது பார்ப்போம்.

(1) நாட்டைப் பலவீனமாக்கிய ஒரு ஆயுத மோதலுக்குப் பின்னர் ஒரு அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தை மேற்கொள்வது ஒரு நாட்டுக்கு உணர்சியும்  களிப்பூட்டும் அளிப்பதாக இருக்கும். அரசியல் யாப்புச்  சீர்திருத்தம் நாடு எதிர்நோக்கும்  அடிப்படைச் சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அது மட்டுமல்ல, அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தேசத்தைக் கட்டியெழுப்பும் அடுத்த கட்டம் பற்றிய பயணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். சிறிலங்காவில் பேரளவு வாழும் ஓரங்கட்டப்பட்ட ஏழை மக்களின் எதிர்பார்ப்புக்கு ஊக்கம் அளிக்கவேண்டும்.

துரதிட்டவசமாக  அரசியல் யாப்புச் சீர்திருத்தம் பற்றி இப்போது இடம்பெறும்  விவாதம் (அதனை அப்படி அழைக்க முடியுமானால்) அப்படியான நம்பிக்கையையும்  வாக்குறுதிகளையும் பிரதிபலித்துக் காட்டுவதாக இல்லை.  இப்போது நடைபெறும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் பற்றித் தூற்றுபவர்கள் ஒன்றில் குழப்பமாக உள்ளார்கள் அல்லது வேண்டும் என்றே அதனைத் திரித்துக் கூறுகிறார்கள். அதன் மூலம் மக்கள் மத்தியில்  பாதுகாப்பின்மையை உருவாக்கி ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

சனநாயக  ஆட்சி முறையில்  ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவது  முறையான இலக்கானாலும்  அதனைச் செய்பவர்கள் குறுகிய அரசியல் இலக்குகளுக்கு அப்பால் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது தேசிய நலத்துக்கு   அவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கலாம். அது நாட்டுக்கு  நன்மையான  செயலாகவும் இருக்கும்.   துன்பம் என்னவென்றால்  இந்த அரசியல் யாப்பு உருவாக்கத்தைத் திரித்து மக்களை ஏமாற்ற முயலுபவர்களில் வழக்குரைஞர்கள்,  அரசியல் விமர்சகர்கள் மற்றும் அறிவாளிகள் (intellectuals) அடங்குவர். பொதுவாக இவர்களிடம் ஒருவர் தொழில்சார்ந்த வினைத்திறன் மற்றும் எதார்த்தத்தை  (professionalism and objectivity) எதிர்பார்ப்பார்கள்.

கீழ்க்கண்ட கண்டனங்கள் சிலவற்றை ஆராயும் போது  அரசியல் சூழ்நிலைக்கு மேலாக தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாத ஒரு  பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. 

இவர்கள் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு பல ஆண்டுகளாக அது  அனைத்துத் தரப்பினராலும் கலந்தாலோசிக்கப்பட்டு வந்தது என்பதை மறந்து விடுகிறார்கள். 1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியல் யாப்புச் சீர்திருத்தத்துக்கு ஆதரவு கேட்டு அதற்கான ஆணையைப் பெற்றிருந்தார். இந்த நடைமுறைக்கு பேராசிரியர்  ஜிஎல் பீரீஸ்  முன்னிலை வகித்தார். ஆனால் இன்று இவர் ஐக்கிய எதிரணியின் பேச்சாளராக  இருக்கிறார். இது   இன்றைய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக  அவரது  முன்னைய நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறானது.

(2) புதிய அரசியல் யாப்பு ஒரு மரணப் பொறியாகும்

இதனை முதலில் தெளிவாகச் சொன்னவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சா ஆவர். சில மாதங்களுக்கு முன்னர் மல்வத்தை மகாநாயக்க தேரர் அவர்களைக் கண்டு இந்த நிலைப்பாட்டை ஏற்குமாறு செய்ய முனைந்தார். ஆனால் மல்வத்தை மகாநாயக்க தேரரை அவ்வளவு சுலபமாக  ஏமாற்ற முடியாது.  மகாநாயக்க தேரர் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரைப் பார்த்துக் கேட்டார் ‘அப்படியொரு வரைவு இன்னும் தயாரிக்கப்படவில்லை அப்படியிருக்க அப்படியான முடிவுக்கு எப்படி வரமுடியும்’ எனக் கேட்டார். 

இன்று கூட அரசியல் யாப்புச் சீர்திருத்தத்துக்கு எதிரான பலவகையான திரிப்பாளர்கள் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை அரசியல் யாப்பின் வரைவு எனக் குறிப்பிடுகிறார்கள். உண்மை அப்படி இல்லை. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கலந்துரையாடுவதற்கு தயாரிக்கப்பட்ட ஆவணம் மட்டுமே. அது மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் மூன்று நாள்கள் விவாதிக்கப்படும்.  எனவே அந்த இடைக்கால அறிக்கை அரசியல் யாப்பின் வரைவை எட்டிவிட்டது என்று சொல்ல முடியாது. வழிகாட்டல் குழுவே தனது அறிக்கையை “அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டுக் குழு அதனது கொள்கைகளையும் உருவாக்கங்களையும் 2016 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்திலிருந்து 2017 ஆம் ஆண்டு செப்தெம்பர் வரைக்குமான காலப் பகுதியில் 73 தடவைகள் சந்தித்து  ஆழ்ந்து ஆராய்ந்ததை பிரதிபலிந்திருந்தது.” 

(3) எல்லாக் கட்சிகளும்  சமர்ப்பித்த  முன்மொழிதல்கள் இடைக்கால அறிக்கையில் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிதல்கள் எதனையும்  சமர்ப்பிக்கவில்லை. அதன் தார்ப்பரியம் என்னவென்றால்  உண்மையில் இடைக்கால அறிக்கை என்பது ஐதேக இன் அறிக்கையே.

வழிநடத்தல் குழு அறிக்கையில் பின்னிணைப்பாக தரப்பட்டவை  அந்தந்த  கட்சிகள்  முன்மொழிவுகள் அல்ல, அவை “அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்ட  வெறுமனே கொள்கைகளும் உருவாக்கங்களும் மட்டுமே.”   உண்மையில் முன்மொழிவுகள் என்று சொல்லப்படுபவை வழிகாட்டுக் குழு  அறிக்கையின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட  “அவதானிப்புக்கள் மற்றும்  குறிப்புகள்” மட்டுமே.  அது அறிக்கை தயாரிப்புக்கு முற்பட்டது அல்ல.

இதிலிருந்து ஒருவர் ஊகிக்கக் கூடியது என்னவென்றால் ஐதேக “அவதானிப்புக்கள் மற்றும்  குறிப்புகள்”  எதனையும் கொடுக்காமல்  விட்டதற்கு என்ன காரணம் என்றால் அந்தக் கட்சிக்கு “அவதானிப்புக்கள் மற்றும்  குறிப்புகள்” கொடுப்பதற்கு எதுவும் இல்லாமல் இருந்ததுதான். இது ஐதேக  இன் அறிக்கை என்று சொல்வதற்கு முற்றிலும்  வேறானது.

(4) அரசியல் யாப்பு சீர்திருத்தம் என்பது சனாதிபதி மயித்திரிபால சிறிசேனாவை அகற்றிவிட்டு இரணில் விக்கிரமசிங்கி அவர்களை அரச தலைவராக்க   முன்னேற்பாட்டின்படி செய்யப்பட்டதாகும்.

மீண்டும் இது உண்மைகளைத் திரிப்பதாகும்.  சனாதிபதி மயித்திரிபால மற்றும் ஐதேக  தெளிவாக விளங்கிக் கொண்டதும் ஏற்றுக்கொண்டதும்  என்னவெனில் நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி  பற்றிய எந்த அரசியல்  சீர்திருத்தமும் இப்போது பதவியிலுள்ளவரது பதவிக் காலம் முடிந்த பின்னர் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பதாகும்.

நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறை  ஒழிக்கப்பட் டு  நாடாளுமன்ற முறை அரசாங்கம் நிறுப்பட்டால்  உண்மையாகவே மகிந்த இராசபக்சா கூடப் பிரதமர் பதவிக்கு போட்டி போட முடியும்.

(5) இந்த அரசியல் யாப்பு சீர்திருத்தம் சடுதியாக துரிதப்படுத்தப் படுவதற்குக் காரணம் மயித்திரிபாலாவுக்குப் பதில் இரணில் விக்கிரமசிங்கியை அந்த இடத்தில் அமர்த்தி அரசாங்கத்தைக் கைக்கொள்வதே.

மீண்டும் இது  உண்மையல்ல.  இந்த செய்முறை  வேகப்படுத்தப்படவோ அல்லது  விரைவுபடுத்தப்படவோ இல்லை.  வழிநடத்தல் குழுவின் அறிக்கை கடந்த டிசெம்பர் 2016 இல்  ஆயத்தமாக இருந்தது. அது பின்தள்ளப்பட்டதற்குக் காரணம்  சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த  வழிகாட்டக் குழு உறுப்பினர்கள் தங்கள் அவதானிப்புகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டார்கள். உண்மையில் அரசை ஆதரிக்கிற சிவில் சமூகங்கள்  அரசியல் அமைப்பு செய்முறை காலத்தை எடுப்பதாகவும் அது வேளையோடு செய்து முடித்திருக்க வேண்டும் எனச் சொல்லுகின்றன.

உண்மை என்னவென்றால் இரணில் விக்கிரமசிங்கிக்கு எதிராக காழ்ப்புணர்ச்சி  வைத்திருப்பவர்கள்  சரியாக சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக எல்லாவற்றுக்கும் அவரே காரணம்  எனக் கூறி அவரை வெறுக்கிறார்கள்.

(6) சிறிலங்காவுக்கு உரிய ஒரு அரசியல் யாப்பு ஏற்கனவே வெளிநாட்டில் வரையப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டு காங்கிரஸ் அவை உறுப்பினர் ஒருவரது அறிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது.

இந்தச் செய்தி  தான் ஐக்கிய அமெரிக்காவுக்குப் போன போது தனக்குச் சொல்லப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியைச் (இராஜபக்சா) சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரால் சொல்லப்பட்ட இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இருந்தும் அந்தச் செய்தி அந்த காங்கிரஸ் உறுப்பினரால் சொல்லப்பட்டிருந்தாலும் அது உண்மையாக இருக்கலாம் என எடுத்துக் கொள்ளமுடியாது. அது நல்ல உற்சாகத்தில் சொன்ன  வெறும் பகட்டுமொழியாக இருக்கலாம். ஏன் ஐஎஸ்ஐஎஸ் கூட லாஸ் வாகஸ்  இசை அரங்குக்கு வந்திருந்த இரசிகர்கள் மீது  ‘தனி ஓநாய்’     துப்பாக்கித் தாக்குதல்  நடத்தியதற்கான பொறுப்பைக் கோரியிருந்தது. 

எனினும் அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக தவறான அறிக்கைகள் விடப்பட்டாலும்  வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தக்கபடி பயன்படுத்தப்படுமாயின் கட்சிகளுக்கு இடையில்  வேற்றுமைகளைக் குறைத்து மையச் சிக்கல்கள் பற்றி   கருத்து ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பலாம். அதுமட்டும் அல்லாது  ஆட்சிமுறையை மேம்படுத்தலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  இடைக்கால அறிக்கை பற்றி  வழிகாட்டல் குழுவுக்கு தெரிவித்த  தனது கருத்துக்கள்,  அதே நேரம் அரசியல் அதிகாரப் பகிர்வு பற்றிய  தனது   விருப்பு நிலைப்பாட்டை  தெளிவாக சொல்லிக் கொண்டு, பின்வருமாறு  சொன்னது:

“ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தொருமிப்பை  அடைவதற்கான நலன்கருதி (வழிநடத்தல் குழுவின்) இடைக்கால அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள  முக்கிய கோட்பாடுகள் இரண்டு பிரதான கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்குமாயின், அவற்றுடனான  இணக்கத்தைப் பரிசீலிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணியமாக உள்ளது.”

எனவே தீர்வுக்கான திறவுகோல் யாதெனில் இந்த இரண்டு முக்கிய கட்சிகளுக்கு இடையில் முக்கிய சிக்கல்கள் பற்றிக் கருத்தொருமிப்பை  எய்துவதாகும்.  இது தொடர்பாக எஸ்எல்எவ்பி இன் கவனிப்புக்கள் மிகவும் முற்போக்காக இருக்கின்றன. அவை மேலும் விவாதிப்பதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக எஸ்எல்எவ்பி 13ஏ சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் மேலவை ஒன்றை உருவாக்கவும்  ஒத்துக் கொண்டுள்ளது.    அவர்கள்  அரசாங்கத்தின் மூன்றாவது  படியாக உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கும் முன்மொழிவோடு ஒத்துப் போகிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமைய ஒழிக்க முனைவதையே  எஸ்எல்எவ்பி ஆல் ஏற்றுக் கொள்ளமுடியாது  இருக்கிறது.  நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையை விடாது வைத்திருக்க  வேண்டும் என்கிறது. ஆனால் இது மக்களுக்கு சனாதிபதி சிறிசேனா  கொடுத்த வாக்குறுதிக்கு  முரணாக இருக்கிறது. நல்லகாலமாக இராஜித சேனரத்தின நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையை நீக்கப்படும் என்ற வாக்குறுதியில்  சனாதிபதி ஈடுபாட்டோடு இருப்பதாக மக்களுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார்.

மேலும் ஒரு நேர்மறையான அம்சம் என்னவென்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 க்குள் மட்டுப்படுத்த வேண்டும் என எஸ்எல்எவ்பி  யோசனை சொல்லியுள்ளது. ஓர் அமைச்சர்களுக்குரிய பொறுப்புக்கள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை அரசியல் யாப்பில்  கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும்.

அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றிய கலந்துரையாடல்கள்  அரசின் எண்ணப்பாட்டுகளுக்கு மாறாகத் திசை திருப்பப்பட்டு ஆரவாரமாக மாறாமல் இருப்பதற்கு  அரசும் கை கொடுக்கலாம். நாடாளுமன்றத்தில் வழிகாட்டல்  குழுவின் இடைக்கால அறிக்கை பற்றிய  விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்கு முன்னர் அரசு தனது தொடக்க உரையில் பல ஐயங்களைப் போக்கலாம்.

 முதலாவதாக இப்போதுள்ள அரசியல் யாப்பின் உறுப்புரை 9  மாற்றப்பட  வேண்டிய அவசியமில்லை  என்பதை விளக்க வேண்டும். பவுத்த மதத்துக்கு  முதன்மை இடம் வழங்கப்படுதல் வேண்டும் என்ற உறுப்புரை 9   உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் எந்தச் சிக்கலும் எழவில்லை. எனவே  கிட்டத்தட்ட ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சிறிலங்காவின் கொள்கை  தொடரலாம்.

ஒற்றையாட்சி பற்றி அரசு தொடக்கத்திலேயே விளக்கம் கொடுக்க வேண்டும். கூட்டு எதிர்க்கட்சிதான் இதுபற்றி உரத்துப் பேசினாலும்  ‘ஒருமித்த நாடு’ என்ற  தமிழ்ச் சொல் ஏகிய இராஜ்ஜிய என்ற சொல்லின் சரியான மொழிபெயர்பாக இல்லை. இப்போது அரசியல் யாப்பில் மூன்று மொழிகளிலும் உள்ள சொற்களை வைத்திருக்க வேண்டும். ஒற்றையாட்சிக்கு இடைக்கால அறிக்கையில கொடுக்கப்பட்டுள்ள வரையறையை  விளக்க வேண்டும்.  வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை பின்வருமாறு இருக்கிறது.

“சிறிலங்கா சுதந்திரமான, இறைமை மற்றும் சுயாதீனமான  ஒற்றையாட்சிக் குடியரசாகும். சிறிலங்கா (இலங்கை) அரசியல் யாப்பில் குறிப்பிட்டவாறு மத்திய மற்றும் மாகாணம் இரண்டின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ‘ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு” எனும் குடியரசாகும். 

இந்த உறுப்புரையில் ஏகிய இராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளாகும். அத்துடன் அரசியலமைப்புக்கான  திருத்தம் அல்லது நீக்கம் அல்லது மாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாக நாடாளுமன்றத்தினாலும் இலங்கை மக்களாலும்  மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

வரும் நாள்க்களில்  எல்லாக் குடிமக்களும் தாங்கள் விரும்பும்  குறிக்கோள்களான கண்ணியம் மற்றும் தன்மானம் ஆகிய வற்றை உள்ளடக்கிய ஒரு சனநாயக    சமூகத்தில் வாழக் கூடியதாக இருக்க வேண்டும். இது எங்களது அரசியல்வாதகளும் மற்றும் குடிமக்களும் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளும் மனப்பான்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவைதான் எம்முன் உள்ள  பணியாகும். அதற்கு மாறாக அரசியல் அமைப்புச் சீர்திருத்தம்  தொடர்பாக அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நகர்வுக்கும் பின்னால் சதியிருப்பதாக எண்ணுவது தவறாகும். (தமிழாக்கம்-  நக்கீரன்)


About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply