நிலைமாறும் உலகில்: தமிழர்கள்

நிலைமாறும் உலகில்: தமிழர்கள் – லோகன் பரமசாமி

ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்று வரும் குண்டு தாக்குதல்கள். பொதுமக்கள் மனங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருவதாக பொதுசன விவாதங்கள் எடுத்து காட்டுகின்றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக வந்தவர்களுக்கு புகலிடம் கொடுத்தோம், அவர்கள் எம்மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது ஒரு விவாதம்.

நாங்கள் உலக நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடுவதை கைவிட வேண்டும் என்பது இன்னொரு விவாதம், அல்லது காலனித்துவ பின்காலவாதம் என விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அண்மையில் இடம்பெற்ற மான்செஸ்ரர் குண்டுவெடிப்பும், லண்டன் குண்டு வெடிப்பும் கூட அதேவகையான விவாதங்களை மீண்டும் எழுப்பி உள்ளது. அது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியமையானது, இதேபோன்ற  மனோநிலை ஐரோப்பிய நாட்டு மக்கள் மத்தியில் உருவாக்கி வருவதாக சில அறிக்கைகள் ஏற்கனவே கூறி உள்ளன.

சகிப்புத்தன்மையற்ற நிலை, தாராளவாத எதிர்ப்புத்தன்மை, தேசியவாதம், இனவாதம், என்பன எழுச்சி நிலையை அடைந்திருப்பதாக ஐரோப்பாவின் அடிப்படை சனநாயக பெறுமதிக்கு சவால் விடுவதாக பார்வை ஒன்று உள்ளது.

இந்த எழுச்சி 1990களுக்கு முன்பு இருந்ததைப்போல இரும்புத்திரைகளினாலும், பீரங்கிகளாலும், எல்லைகளில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளாலும் உருவானதல்ல. இது உட்சேர்பதும், வெளியேறுவதுவும் என்ற மனப்பிரமையால் உருவான மூடிய அரசு கொள்கை சமுதாயத்திற்கும், திறந்த அரசு கொள்கை சமுதாயத்திற்கும் இடையிலான வேற்றுமைகளின் பால் பட்டதாக பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய வெளியேற்றத்தால் உருவானது என்பதிலும் பார்க்க, இந்த தேசியவாத வேற்றுமை உருவாக முக்கியமான ஒரு காரணி 1990ஆம் ஆண்டுகளுக்கு பின்னர், காலாகாலம் வடஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இடம்பெற்ற மனிதப்புலம்பெயர்வு தான் என்பது கூட்டு மொத்த முடிவுகளாக தெரிகிறது.

புலம்பெயர்ந்த சமூகத்தினர் ஐரோப்பிய நாடுகளின் அரசியல், சமூக வாழ்வில் முக்கிய செல்வாக்கு செலுத்துவது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.

தமிழர் சமுதாயமும் இதில் அடக்கம் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது. இந்தவகையில் நிலைமாறும் உலகில் தமிழர்களின் நிலையை அளவிட்டுப் பார்ப்பது முக்கியமானதாகும்.

இங்கே தமிழினம் மூன்று பகுதிகளாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று பிரிவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த நிலையில், இருந்தாலும், தமிழ்நாட்டுத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்ற வகையில் தமிழர்களது இன்றைய வாழ்வு உள்ளது. அதற்கு ஏற்ப இந்த கட்டுரையும் சர்வதேச நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எடுகோள்களாக கருத்தில் கொண்டு இந்த மாற்றங்களுடன் தமிழ் மக்கள் எவ்வாறு தொடர்புற்று உள்ளனர் என்பது குறித்து ஆராயப்படுகிறது

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இன்று ஒரு திடமான தலைமைத்துவம் அற்ற நிலையில் உள்ளனர். இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே நோர்வேயில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் இதை கூறி இருந்தார்.

சினிமாத்துறை அரசியலை மீண்டும் ஆக்கிரமித்து விடும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற ஐயம் பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு ஒன்று மட்டுமே கடந்த 50 ஆண்டுகளாக எந்த தேசிய கட்சிகளாலும் ஆட்சியைக் கைப்பற்றி விட முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையை முறியடிப்பதில் அவ்வப்போது தேசியக் கட்சிகள் பெரும் பிரயத்தனம் செய்து வருகின்றன.

அவ்வப்போது தேசியக் கட்சிகள்,  மாநிலக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து  தமது செல்வாக்கைப் பலப்படுத்திக் கொள்வதில் முக்கிய குறியாக இருந்து வருகின்றன. தமிழ்நாடு மாநிலம் அகில இந்திய அளவில் மிகவும் பலம்வாய்ந்த ஒரு மாநிலமாகும். புலம்பெயர் மக்களின் பெரும்பலத்துடன் கட்டியமைக்கப்பட்டு பல்வேறு அனைத்துலக நிறுவனங்களின் அனுசரணையுடன் பிரதமர் மோடி அவர்களால் வளர்க்கப்பட்ட குஜராத் மாநிலத்துடன் சரிநிகர் சமமான போட்டியில் இன்று வரை தமிழ்நாடு நிற்கிறது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் கற்றோ நிறுவனத்தின் அறிக்கையில் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு குஜாராத்துடன் மிகநெருக்கமான போட்டியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மறைந்த ஜெயலலிதா அம்மையாரின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மிகவும் அரசியல் பலம்வாய்ந்ததாகவும், பிரதமர் மோடி அவர்களின் வெளிநாட்டு கொள்கைகளில் கூட செல்வாக்கு செலுத்தக் கூடிய பலத்தையும் கொண்டிருந்தது. அந்த நிலைமை இப்பொழுது மாறிப்போய் பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகி விட்டது.

தற்போது தமிழ்நாட்டு தலைமைத்துவம் மத்திய அரசை அனுசரித்து செல்லும் போக்கினால் தமிழ்மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததை பல்வேறு சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்திரா காங்கிரஸ் அரசுடன் கூட்டுச் சேர்ந்த திமுக, 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளை கண்டிக்க முடியாது போனதால் ஆட்சியை இழந்தது.

palanichamy

மீண்டும் இப்பொழுது தமிழ்நாட்டில் உறுதியான தலைமைத்துவம் அற்ற நிலை, மத்திய பாஜக அரசுடன் அனுசரித்துப் போகக்கூடிய  அதிமுக தலைமை, மக்களின் பல்வேறு வேண்டுகோள்களையும் நிவர்த்தி செய்ய முடியாத நிலையில், போராட்டங்கள் எழுவதற்கு காரணமாக அமைந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய ஊடகங்களும் சில தமிழ்நாட்டு ஊடகங்களும் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்குள் கொண்டு வருவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றன. மேம்பட்ட சினிமா நட்சத்திரத்தை தூண்டிவிட்டு புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க வைப்பதன் மூலம், தேசியவாத கட்சிகளை பிளவுபட வைக்க முனைவதுடன் மத்தியுடன் இணைந்து போகும் மாநில அரசை உருவாக்குவதும் திட்டமாக இருக்கலாம்.

தமிழ்நாட்டின் பலம் தனித்துவமானது. இந்த மாநிலத்தை ஜனநாயக முறையில் கைப்பற்றும் தலைமைத்துவம், மத்திய அரசின் கைப்பாவை அரசாக இருக்க முடியாது. தமிழ்நாட்டின் தலைமைக்கு எந்த தலைவர் வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நடந்து கொள்ள வேண்டிய நிலை இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதாயின் மத்திய அரசின் தென்பிராந்தியம் குறித்த நடவடிக்கைகளுக்கு எதிரான போக்கை கொண்டிருக்க வேண்டிய நிலை உண்டு.

இதற்கு மாறாக மத்திய அரசின் போக்கிற்கு ஏற்ப செயற்படும் தமிழ் மாநில அரசாங்கம் சிறிலங்கா குறித்த தீர்மானங்களிலும், நிலத்தடி எரிவாயு அகழ்வுத் திட்டதிலும் அல்லது தமிழக மீனவர் பிரச்சினைகளிலும் எந்தவித சமூக நலன்களும் பாராமல் ,கவலையும் இன்றி செயற்படக் கூடிய நிலையே இன்று உள்ளது. இதனால் தேசியவாதமும், தற்காப்புவாதமும் தமிழ்நாட்டில் தலைதூக்கி உள்ளது எனலாம். நியாயமான ஒரு கொள்கையை மத்திய அரசு எடுக்காதுவிடின் தமிழ்நாட்டில் தேசியவாதம் தலைதூக்குவதை தவிர்க்க முடியாது

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தேசியவாதமும் தற்காப்பு பொருளாதாரவாதமும் தலைதூக்கி வரும் இந்த காலகட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் அவர்களின் போக்கில் பெரிய பிழை இருப்பதாக தெரியவில்லை. இதர தமிழ் நாட்டு மாநில கட்சிகளும் சீமானுடையவாதங்களை தமது நலன்களுக்கு ஏற்றவகையில் மாற்றி அமைத்து பேசி வருகின்றன என்பதை பல்வேறு இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.

மேலும் இன்று பாதுகாப்பும், தீவிரவாதமும் ,முக்கிய பேசுப்பொருளாக சர்வதேசமெங்கும் காணப்படுகிறது. ஒவ்வொரு அதிகாரமும் தமிழர்களை தீவிரவாதத்தின் பால் தள்ளி விடுவதில் முக்கிய பங்கு ஆற்றி உள்ளன அல்லது எத்தனித்துள்ளன. தமிழர் சமுதாயம் தீவிரவாதப் போக்கை கொண்ட ஒரு சமுதாயம் எனும் மனவிம்பத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு சக்திகளும் செயற்படுகின்றன என்பது வெளிப்படையாக தெரிகிறது.

Narendra-Modi

தமிழ் மக்களிடம் நியாயதன்மையும் ஜனநாயக பலமும் இயற்கையாகவே உள்ளது. ஆனால் சூழ்ச்சிகளின் மூலமும் ஒற்றுமையை குலைப்பதன் மூலமுமே ஒவ்வொரு தமிழர் எழுச்சிகளிலும், அதிகாரம், நியாயத்தின் பெறுமானத்தை வெல்லும் நிலை காணப்படுகிறது. இவை அனைத்தையும் தாங்கி கொண்டு செயற்படும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மிகவும் போற்றத்தக்கவர்களே.

போராட்டங்கள் பொதுவாக அரச கொள்கையில் ஏற்படும் நம்பிக்கையீனம் காரணமாகவே எழுகின்றன. நிலத்தடி எரிவாயு விவகாரம், ஊழல் மோசடிகள், ஈழத்தமிழர் விவகாரம் என மக்கள் அரசு மேல் கொண்ட நம்பிக்கையீனங்கள் நீண்டு கொண்டே போகிறது. ஈழத்தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் தமிழ் நாடு, சிறிலங்கா மீதான இந்திய வெளியுறவு கொள்கையின் பிரதான தரப்பாக  பார்க்கப்படுகிறது.

தமிழ்த் தேசியம், ஈழத்தமிழர்  விவகாரத்தைப் பொறுத்தவரையில் புவியியல், சமூக, பண்பாடு, மொழி ஆகியனவற்றுடன் தமிழ்நாட்டுடன் இணை பிரியாத வரலாற்று சான்றாக நோக்கப்படுகிறது,

மேலும் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த காலங்களில் இடம்பெயர்ந்து மேலை நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் செல்வாக்கு செலுத்தும் தரப்பாக மாறி உள்ளனர். இன்று இந்திய மத்திய அரசும், கொழும்பும் நெருங்கிய உறவை வைத்து கொள்கின்றன என்றால், அதற்கு காரணம் தமிழர் தரப்பு அரசியல் எல்லைகளை கடந்த உறவை வளர்த்து கொள்ளக் கூடாது என்பதை நோக்கமாக கொண்டதே.

இந்திய இறையாண்மையும் சிறிலங்கா இறையாண்மையும் மொழி, பண்பாடு, புவியியல், வரலாற்றை ஒன்றாக கொண்ட ஒரு சமுதாயத்தை பிரித்து வைத்திருப்பதை இங்கே காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல் திரிபுபடுத்தப்பட்ட தேசிய அரசு வரலாற்றை இரு அரசுகளும் உருவாக்கி தமிழ் சமூகத்தினுள் திணிக்க முயற்சிக்கின்றன. ஈழத்தில் ஏற்பட்ட யுத்த நிலை எவ்வாறு தமிழ்நாட்டில் தாக்கத்தை விளைவித்ததோ அதேபோல தமிழ்நாட்டின் பொருளாதார சமூக வாழ்வு ஈழத்தில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் ஈழப்போராட்டம், தமிழ் நாட்டையும் புலம்பெயர் சமுதாயத்தையும், ஈழத்தமிழர்களையும் பாரிய அளவில் ஒன்று சேர்த்து இருக்கிறது. உதாரணமாக தைப்பொங்கல், தீபாவளி ஆகியவற்றிற்கும் அப்பால் மாவீரர் நாள், மே -18 படு கொலைகள் நாள் ஆகியன மிகவும் உணர்வுடன் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களும் நிகழ்வுகளும் நடந்தேறிவிட்ட பின்பும் அரசுகளின் இறையாண்மைக்கு அப்பாற்பட்ட முறையில் ஆண்டுதோறும் இடம்பெறும் இந்த நிகழ்வுகள் புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் விரும்பத்தகாதவை ஆகும்.

இது ஒருமித்த தமிழ்த் தேசிய உணர்வை உருவாக்கவல்லது. இந்த நிலையை திசைதிருப்பும் வல்லமை பெற்ற தலைவர் ஒருவரை தெரிந்தெடுப்பது ஒன்றே தமிழ் நாட்டின் மீது இந்திய மத்திய அரசின் நடவடிக்கையாக இருக்க முடியும்.

நிலை மாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள் குறித்தும் ஈழத்தமிழர்கள் குறித்தும் தொடர்ந்து காணலாம்.

– லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

* கட்டுரையாளருக்கு கருத்துக்களை நேரடியாக அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி – loganparamasamy@yahoo.co.uk

 http://www.puthinappalakai.net/2017/06/12/news/23897

 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply