Political Column 2007 (5)

ஒரே நேரத்தில் பல எதிரிகளோடு மோதும் இராசபக்சே!

ஸ்ரீலங்கா அரசியலுக்கும் ஒரு திரைப்படக் கதைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. திரைக்கதையில் என்னென்ன “மாசாலா” உண்டோ அத்தனையும் ஸ்ரீலங்கா அரசியலிலும் உண்டு.

சட்டை கசங்காமல் சண்டை செய்யும் கதாநாயகன், சதி செய்யும் வில்லன், சிரிக்க வைக்கும் கோமாளி, அடியாட்கள் என எல்லா நடிகர்களும் ஸ்ரீலங்கா அரசியலில் இருக்கிறார்கள். யார் கதாநாயகன் யார் வில்லன் என்பதில் கொஞ்சம் மயக்கம் இருக்கலாம். மற்றப்படி குழப்பம் இல்லை.

தமிழ் இலக்கியத்தில் நிலையாமை பற்றிப் பாடப்பெற்ற பாடல்களுக்குப் பஞ்சமே இல்லை.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வரா

என்று எல்லோரும் தமிழனின் உலகளாவிய விரிந்த பார்வைக்கு மேற்கோள் காட்டும் கணியன் பூங்குன்றனாரின் பாடல் அடிப்படையில் நிலையாமை பற்றியதுதான். முழுப் பாடலையும் படிப்பவர்களுக்கு அது புரியும்.

குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்தோரூர் நண்ணினும் நண்ணுவர்
………………………………..

ஒரு காலத்தில் பட்டுக் குடையின் கீழ் யானையில் அமர்ந்து ஊர்வலம் போனவர்கள் அவற்றை எல்லாம் இழந்து கால் நடையில் அயலூர் போதல் கூடும்.

அமைச்சர்கள் மங்கள சமரவீரா, அனுரா பண்டாரநாயக்கா, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகிய மூவரது பதவிகள் பறிக்கப்பட்ட பின்னர் அவர்கள் திடீரென்று அரசியல் அநாதைகளாகிப் போய்விட்டார்கள்.

பின்னே இருக்காதா என்ன? ஓர் அமைச்சரது மதாச் சம்பளம் ரூபா 65,000. இதைவிட வேலையாட்கள் (10) உதவியாளர்கள் (15) பாதுகாப்புப் படை (25) சொகுசு வண்டிகள் (10) இலவச தொலைபேசி, இலவச எரிபொருள், இலவச வீடு, நாடாளுமன்ற அமர்வுகளின் போது மேலதிக ஊதியம் என ஒரு நீண்ட பட்டியல் உண்டு.

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தது போல அனுரா, சமரவீரா, ஸ்ரீபதி ஆகியோரது அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் அவர்களது பாதுகாப்புப் படையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் உத்தியோக மாளிகைகள் இருந்தும் துரத்தப்படுவார்கள்.

மாடு ஏறி மிதித்ததோடு நில்லாமல் குழியும் தோண்டி அவர்களை புதைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த மூன்று அமைச்சர்களும் தன்;னைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டினார்கள் என ஆட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே குற்றம் சுமத்தியுள்ளார்.

யாரோடு சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார்கள் என்பதை இராசபக்சே வெளிப்படையாகச் சொல்லவில்லை. வி.புலிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார்கள் என்று மறைமுகமாகச் சொல்கிறார் போலும்!

இப்போது எது நடந்தாலும் அல்லது நடக்காவிட்டாலும் பழியை வி. புலிகள் தலையில் போடும் தந்திரத்தை இராசபக்சே அரசு பின்பற்றுகிறது!

கொழும்பில் மூன்று சிங்கள ஊடகவியலாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் கிளிநொச்சிக்குக் சென்று வி.புலிகளிடம் 10 நாள் ஆயுதப் பயிற்சி பெற்றார்கள் என்றும் பெருந்தொகையான ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்றும் பல இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தார்கள் என்றும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்கள் என்றும் இராசபக்சே அரசு சொல்கிறது. சொல்வதோடு நில்லாமல் வீடியோவில் படம் எடுத்து அதைத் தொலைக்காட்சியில் போட்டுக்காட்டுகிறது!

இரண்டு கிழமைகளுக்கு (சனவரி 27, 2007) முன்னர் அதியுச்ச பாதுகாப்பு வலையத்துக்குள் இருக்கும் கொழும்புத் துறைமுகத்துக்குள் ஊடுருவி தற்கொலைத் தாக்குதல் நடாத்த முயன்ற வி.புலிகளது 3 படகுகளைத் தாக்கி அழித்துவிட்டதாக கடற்படை வெற்றிக் களிப்போடு அறிவித்தது. ஒன்பது புலிகளைக் கைது செய்து விட்டதாகவும் கடற்படை கூறியது.

பின்னர் பார்த்தால் கடற்படையால் அழிக்கப்பட்ட படகுகள் முன்னைக்கரையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்குச் சொந்தமானது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் எட்டுப்பேர் சிங்களவர். ஒருவர் தமிழர். முன்னைக்கரை சிங்களவர்களும் தமிழர்களும் கலந்து வாழும் கரையோர மீனவக் கிராமம். சுதந்திரக் கட்சிப் பிரமுகர்களது செல்வாக்கால் 6 பேரை காவல்துறை விடுதலை செய்தது. மிகுதிப் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். வி. புலிகளிடம் இருந்து 10 இலட்சம் ரூபா வாங்கிக் கொண்டு அவர்களுக்கு கடலில் வழிகாட்டினார்கள் என அந்த மீனவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் நடந்த ஆட்சித்தலைவர் தேர்தலில் இராசபக்சேயின் வெற்றிக்குப் பாடுபட்டவர்களில் மங்கள சமரவீர முக்கியமானவர். அடுத்த இடத்தில் இருந்தவர் ஸ்ரீபதி சூரியராச்சி. அவர்கள் மீதுதான் ஆட்சித்தலைவரைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டு வீசப்பட்டுள்ளது!

அதாவது இரண்டாம் மூன்றாம் கதாநாயகர்கள் இன்று முதல்தர வில்லன்கள் ஆக மாறிவிட்டார்கள்!

இதைக் காலத்தின் கோலம் என்பதா? விதியின் சிரிப்பு என்பதா?

அனுரா பண்டாரநாயக்காவின் நிலைதான் மிகவும் பரிதாபம். அவரிடம் இருந்த சுற்றுலா அமைச்சை இராசபச்சே பறித்து விட்டு உப்புச் சப்பில்லாத பாரம்பரிய அமைச்சை ஒதுக்கி இருந்தார். இந்த அமைச்சு அரும்பொருட் காட்சியகம், யாழ்ப்பாண நூல்நிலையம், அரைகுகைற ஆடையில் காட்சிதரும் தேவலோகப் பெண்களைச் சித்திரிக்கும் சிகிரியா கோட்டை ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருக்கும்.

நாடாளுமன்றத்தில் பேசிய அனுரா பண்டாரநாயக்கா தனக்கும் மங்கல சமரவீராவுக்கும் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதனை இராசபக்சேக்கு அருகில் இருப்பவர்களே செய்தார்கள் எனவும் குற்றம் சாட்டினார். தனக்கே இந்தக் கதி என்றால் சாதாரண மக்களின் கதி என்ன என்று வினாவவும் செய்தார்!

நாட்டில் தமிழர்கள் கொலை, கொள்ளை, கடத்தல், சிறை, சித்திரவதை போன்றவற்றுக்கு ஆளாகிவருவதையிட்டு மவுனம் சாதித்த அனுரா பண்டாரநாயக்கா கத்தி தனது கழுத்துக்கு வரும் போது அலறுவது வேடிக்கை கலந்த வினோதமாகும்! தலையிடியும் வயிற்றுக் குத்தும் அவரவருக்கும் வந்தால்தான் தெரியும்!

தனது மகனுக்கு ஏற்பட்ட மானக்கேட்டைப் பார்த்துவிட்டு கொறகல வளவுக் கல்லறையில் தூங்கும் தந்தை பண்டாரநாயக்கா தாய் ஸ்ரீமாவோ இருவரும் நெளிந்திருப்பர் என்பதில் அய்யமில்லை!

அமெரிக்காவில் கென்னடி குடும்பம், இந்தியாவில் நேரு குடும்பம் போல் ஸ்ரீலங்காவில் மாலை மரியாதையோடு வாழ்ந்த குடும்பம் பண்டாரநாயக்கா குடும்பம்.

தந்தை சொலமன் பண்டாரநாயக்கா பிரதமர். தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமர். அக்கா ஆட்சித்தலைவர். இவ்வளவு பின்புலம் இருந்தும் அவை பயனற்றுப் போய்விட்டன.

உண்மை என்னவென்றால் சுதந்திரக் கட்சியும் ஆட்சி அதிகாரமும் பண்டாரநாயக்கா குடும்பத்தை விட்டு இராசபக்சே குடும்பத்துக்குப் போய்விட்டது. இன்று சுயதயியமளந ர்ழடனiபெ (Pசiஎயவந) டுiஅவைநன நிறுவனத்தின் கையில்தான் ஆட்சிக் கயிறு இருக்கிறது.

மகிந்த இராசபக்சேயின் இராணுவ ஆலோசகர் பசில் இராசபக்சே கலந்து கொள்ளும் அரசு தொடர்பான கூட்டங்களும் வைபவங்களும் அவர் தலைமையிலே நடைபெறுகிறது. அமைச்சர்கள் வாய் பொத்தி வளைந்தபடி அவர்கள் பக்கத்தில் கைகட்டி நிற்கிறார்கள்!

அமைச்சுகள் தொடர்பான கேள்விகள் (வுநனெநசள) அனைத்திலும் பசில் இராசபக்சே மற்றும் கோதபாய இராசபக்சே இருவரும் நேரடியாகத் தலையிடுகிறார்கள்!

எப்படி ஞாயிறைச் சுற்றிக் கோள்கள் பாதை பிசகாமல் வலம் வருகின்றனவோ அதே போல் அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், கால் அமைச்சர்கள் நிறைவேற்று அதிகாரங்கள் படைத்த ஆட்சித் தலைவர் மகிந்தா இராசபக்சேயைச் சுற்றி வலம் வருகிறார்கள்!

இராசபக்சேயின் சர்வாதிகாரப் போக்கை உள்ளுர விரும்பாவிட்டாலும் கொளுத்த சம்பளம் மற்றும் சலுகைகளை அனுபவிக்கும் அமைச்சர்கள் தங்கள் பதவிகளைப் பறிகொடுத்து அரசியல் தற்கொலை செய்து கொள்ள ஒருப்படமாட்டார்கள். குறிப்பாக கரு ஜெயசூரியா, ஜி.எல். பீரிஸ், றாவ் ஹக்கீம் போன்ற பதவி மோகம் பிடித்த அரசியல்வாதிகள் நிச்சயம் அரசியல் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.

இராசபக்சே பதவிக்கு வந்த பின்னர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். வாய்க்கு வந்தபடி கதைக்கிறார்.

அய்க்கிய கட்சியில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுத்ததால் இரணில் விக்கிரமசிங்கா கடுப்போடு இருக்கிறார். இராசபக்சேயோடு உறவும் இல்லை உடன்பாடும் இல்லை என்று கூறிவிட்டார்.

இனச் சிக்கல் தீர வேண்டும் என்றால் தென் இலங்கைச் சிங்களக் கட்சிகளுக்கு இடையில் கருத்தொற்றுமை தேவை. அந்தக் கருத்தொற்றுமை இன்று இல்லாது போய்விட்டது.

ஜாதிக விமுக்தி பெரமுன இராசபக்சேயோடு ஆன உறவை ஏறக்குறைய முறித்துக் கொண்டுவிட்டது. மூன்று அமைச்சர்களது பதவிகள் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

அலரிமாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 40 விடயங்களை 40 மணித்துளிகளில் இராசபக்சே ‘பைசல்’ செய்து விட்டார்.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று மூத்த தலைவர்கள் (அனுரா பண்டாரநாயக்கா – முத்த துணைத் தலைவர், மங்கள சமரவீர – பொருளாளர்) எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முதல் – அதாவது எண்ணி 67 நாள்களுக்குள் – இராசபக்சேயின் அரசைக் கவிழ்க்கவும், இராசபக்சே உடன்பிறப்புக்கள் மூவரையும் கொலை செய்யவும் திட்டம் தீட்டியுள்ளார்கள் என இராசபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.

மவ்பீம (Mawbima) என்ற சிங்கள வார செய்தித்தாளிலும் இறகண்ட (Irahanda) என்ற சோதிட சஞ்சிகையிலும்; “ஒரு மூத்த அரசியல் தலைவர் கொல்லப்படுவதைத் தடுப்பது கடினம்” என எதிர்கூறல் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி இராசபக்சே சுதந்திரக் கட்சியின் செயல்குழுக் கூட்டத்தில் பேசியுள்ளார். மூன்று அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்த நடவடிக்கைக்கு இந்தக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மவ்பீம வார ஏடு மங்கள சமரவீராவின் தீவிர ஆதரவாளரும் கொழும்புத் துறைமுக அதிகாரசபையின் தலைவருமான அலெசுக்கு ( வுசையn Pஊ யுடடநள)  சொந்தமானது. அலெசும் அவரது பதவியில் இருந்து தூக்கப்பட்டு விட்டார்! அவரைக் கைது செய்யவும் அவருக்கும் வி.புலிகளுக்கும் உள்ள தொடர்பை விசாரிக்கவும் காவல்துறைக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராசபக்சேயின் ஆட்டம் இவற்றோடு நின்று விடவில்லை. பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவுக்கும் – வி.புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் கைச்சாத்தான போர் நிறுத்த உடன்படிக்கையை இராசபக்சே கிழித்து எறிய வேண்டும் என்று ஜாதிக உறுமய கட்சி நாளை முதல் (திங்கள்கிழமை) கொழும்பில் உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடக்க இருக்கிறது.

இதை எதிர்பார்ப்பது போல் “போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது தவறு” என இராசபக்சே திருவாய் மலர்ந்துள்ளார்.

இனச் சிக்கல் தீர வேண்டும் என்றால் தென் இலங்கை சிங்களக் கட்சிகளுக்கு இடையில் கருத்தொற்றுமை தேவை. அய்க்கிய தேசியக் கட்சியில் இருந்து தாவியவர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுத்து அழகு பார்த்ததால் அந்தக் கருத்தொற்றுமை இன்று இல்லாது போய்விட்டது.

பிபிசி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் “இலங்கை இனப்பிரச்சினையை நீண்ட கால அளவில் நோக்கும் போது அதனை இராணுவ அடிப்படையில் தீர்க்க நான் விரும்பவில்லை. அரசியல் தீர்வு ஒன்றைக் காணவே விளைகிறேன். விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்த முன்வரவேண்டும். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் வி.புலிகள் சண்டையில் ஈடுபடுவார்களானால், இலங்கை இராணுவம் தற்பாதுகாப்புக்காக நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் ”  இராசபக்சே கூறியுள்ளார்.

வி.புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கமாட்டார்கள் என்பது இராசபக்சேக்குத் தெரியும். அதனால்தான் இராணுவத் தீர்வில் அவர் குறியாக உள்ளார். அண்மைக் காலத்தில் சிங்கள இராணுவம் வி.புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைக் கைப்பற்றியது இராசபக்சேக்கு இராணுவத் தீர்வில் உள்ள நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

லெனின் ஒருமுறை கூறியுள்ளதை இங்கு நினைவு கூருவது நல்லது. உனக்கு நான்கு எதிரிகள் இருந்தால் மூன்று எதிரிகளோடு சேர்ந்து நாலாவது எதிரியைத் தீர்த்துக் கட்டு. பின்னர் இரண்டு எதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது எதிரியை விழுத்தி விடு. பின்னர் எஞ்சியுள்ள இரண்டு எதிரிகளில் ஒருவனோடு சேர்ந்து மற்றவனை ஒழித்துக் கட்டு.

கடைசி எதிரியை என்ன செய்வது? “உன்னால் அவனை வெல்ல முடியாவிட்டால் நீ ஒரு கம்யூனிஸ்டே அல்ல!”

லெனின் கூற்றுக்கு மாறாக இராசபக்சே ஒரே நேரத்தில் பல போர் முனைகளைத் திறந்து பல எதிரிகளோடு மோதுகிறார். இதில் அவர் சந்திக்கப் போவது வெற்றியா தோல்வியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (பரபரப்பு – பெப்ரவரி 14, 2007)


இனச் சிக்கலுக்கு இணைப்பாட்சி மூலம் தீர்வு காணும் நேப்பாளம்

பத்து ஆண்டுகளாக நேப்பாளத்தில் இடம்பெற்று வந்த மாவோ கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் சென்ற ஆண்டு முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு அமைதி உடன்படிக்கையை மாவோ தீவிரவாதிகளோடு பிரதமர் கொய்ரால் தலைமையிலான அரசு செய்து கொண்டது. அதன் கீழ் மாவோக்கள் தங்களது சமாந்தர அரசைக் கலைத்துவிட்டு தங்கள் ஆயுதங்களை அய்க்கிய நாடுகள் அவைப் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்து விட்டு  அரசோடு சேர்ந்து ஆட்சி நடத்த ஒப்புக்கொண்டனர்.

மாவோக்கள் கையளித்த அதேயளவு ஆயுதங்களை அரச படையினரும் தங்கள்  முகாம்களில் அய்யன்னாவின் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ; படையினர் முகாம்களுக்குள் முடக்கப்படுவர்.

330 இருக்கைகள் கொண்ட இடைக்கால நாடாளுமன்றத்தில் 73 இருக்கைகள் மாவோக்களுக்கும் மேலும் 10 இருக்கைகள் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டன. இந்த இடைக்கால நாடாளுமன்றம் கடந்த சனவரி 15 இல் கூடியது.

நாடாளுமன்றம் நேப்பாள மன்னரின் அதிகாரங்களை முற்றாகப் பறித்துவிட்டது. புதிய யாப்பு இயற்றப்படும் போது நேபாளம் ஒரு குடியரசு என அறிவிக்கப்படும் என நிச்சயமாக நம்பலாம்.

மாவோ தலைவர் பிரசந்தா நாடாளுமன்றத்தில் இடம்பெறவில்லை. அரசியல் நிருணய அவைக்கான தேர்தல் எதிர்வரும் யூன் மாதத்தில் நடைபெற இருக்கிறது.

மாவோக்களை ஆட்சியில் பங்கேற்க வைத்ததன் மூலம் 14,000 பேர்களது உயிர்களைப் பலியெடுத்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக நேப்பாள மக்கள் மன மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை.
தென் நேப்பாளத்தின் தாழ்வு நிலப்பகுதியில் வாழும் மாதேசிகள் என்ற பூர்வீக குடிமக்கள் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் போதிய இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தங்களுக்கு தங்களது மக்கள் பலத்துக்கு ஏற்ப அதிக இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டுமென்று கேட்டு கடந்த 3 கிழமைகளாக போராடி வருகிறார்கள்.

கடந்த சனவரி 16 நாள் தலைநகர் கத்மன்டில் மாதேசி ஆர்ப்பாட்டக்காரர்கள் இடைக்கால யாப்புப் படிகளை கொளுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 27 பேரை காவல்துறை கைது செய்தது. இந்தக் கைதுகளை அடுத்து போராட்டம் மேலும் வலுவடைந்தது.

சனவரி 19 ஆம் நாள் நேப்பாளத்தின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது மாவோ போராளி ஒருவர் சுட்டதில் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டார்கள்.

மூன்று கிழமைகள் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 19 பேர் கொல்லப்பட்டார்கள். இதில் ஒரு காவல்துறையினரும் அடங்குவர்.

நேப்பாள அரசு ஆர்ப்பாட்டத்தை அடக்க இந்தியாவை அண்மித்துள்ள நகரங்களிலும் ஊர்களிலும் ஊரடங்க உத்தரவு பிறப்பித்தது.
மதேசிகளது இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முக்கிய காரணம் பெரும்பான்மை நேப்பாளிகளுக்கும் மாதேசிக்களுக்கும் இடையிலான (தேசிய) அடையாளச் சிக்கல்தான்.

பெரும்பான்மை நேப்பாளிகளுக்கும் மாதேசிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த கசப்புணர்வு, விரக்தி, இனப்பாகுபாடு போராட்டம் வெடிக்க வழிகோலி உள்ளது.

“மாதேசிகள் நேப்பாளத்தவர் என்ற வரையறைக்குள் ஏற்கப்படவில்லை” என மாதேசிகள்த  குறைபடுகிறார்கள். இந்தியாவின் வட எல்லைக்கு அருகில் இருப்பதும் இந்தியாவின் எல்லையைத் தாண்டி மணவுறவு உட்பட வணிக உறவுகளை மாதேசிகள் வைத்திருப்பதும் அவர்கள் மலைகளில் வாழும் பகதேஸ் மக்களை விட மட்டமானவர்கள் என எண்ண வைத்துள்ளது. பகதேஸ் மக்கள் மாதேசிகளை இந்தியாவோடு தொடர்பு படுத்திப் பார்க்கிறார்கள். நேப்பாளத்தின் சமுதாய, அரசியல், பண்பாடு, பொருளாதாரத் துறைகளில் பகதேஸ் மக்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதனால் மாதேசிகள் இரண்டாம்தர குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சராசரி மாதேசியின் நிறம் கருப்பு ஆகும். அவர்களது பாண்பாடும் வித்தியாசமானது. நேப்பாள மொழியை அவர்களால் சரளமாகப் பேச முடியாது. அந்த மொழியைப் பேசும் போது அவர்களது உச்சரிப்பு வேறுபடுகிறது.
மாதேசி மக்கள் உரிமை மன்றம் மற்றும் இரண்டு சிறிய குழுக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடித்த போது மாவோ கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தா ஆர்ப்பாட்டம் நடத்தும் கட்சிகளுக்குத் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

வலுத்து வரும் ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக பிரதமர் கொய்ரால அமைச்சர் மட்ட குழுவொன்றை அமைத்து மாதேசிகளது தலைவர்களோடு பேசி வருகிறார்கள்.

மாதேசிகளது முக்கிய கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக நேப்பாள பிரதமர் கொய்ரால அரசியல் யாப்பைத் திருத்தி ஒரு இணைப்பாட்சி அரசியல் திட்டத்தை கொண்டுவர சம்மதித்துள்ளார். அத்தோடு மாதேசிகளுக்கு நாடாளுமன்றத்தில் கூடுதல் பிரதிநித்துவம் அளிக்கவும் வாக்குறுதி அளித்துள்ளார்.  மாதேசிகள் தங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கைவிட வேண்டும் என வானொலி மூலம் பிரதமர் கொய்ராலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாதேசி மக்கள் மன்றம் (Madhesi Janadhikar Forum (MJF)  தலைவர் கோயிராலவின் பேச்சு நம்பிக்கை தருவதாகச் சொல்லிப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க ஆர்ப்பாட்டத்தை 10 நாள்களுக்கு ஒத்திப் போடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுவதற்கு இசைவாக 17 பேரது இறப்புக்குக் காரணமாக இருந்த உள்துறை அமைச்சர் கிருஷ்ணா பிரசாத் சித்தவுலா தமது பதவியை விட்டு விலக வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

எதிர்வரும் யூன் மாதத்தில் கூட இருக்கும் அரசியல் நிருணய அவை மதேசிகளது கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் என்று பிரதமர் கொய்ராலா கொடுத்த வாக்குறுதி கண்டன ஆர்ப்பாட்டங்களை தணிய வைக்கத் தவறிவிட்டது.

இருநூற்று இருபத்து மூன்று இலட்சம் மக்கள் தொகை கொண்ட நேப்பாளத்தில் மாதேசிகளது எண்ணிக்கை 110 (47 விழுகடகாடு) இலட்சமாகும். மாதேசிகளுக்கு படையிலும் காவல்துறையிலும் போதுமான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பது மாதேசிகளின் குற்றச்சாட்டாகும். மாதேசிகள் தற்போதுள்ள அரசு கட்டுமானம் (state structure) தங்களைப் பாகுபடுத்தி ஓரங்கட்டிவிட்டதாகக் குறைப்படுகிறார்கள்.

இதற்கிடையில் நேப்பாள மாவோ கம்யூனிஸ்ட் கட்சியைப் பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டு வைத்திருக்கும் அமெரிக்கா அவர்கள் பங்குபற்றும் நேப்பாள அரசுக்கு பொருளாதார உதவிகளை நல்க முன்வந்துள்ளது.

பிரதமர் கொய்ராலா நேற்றும் (புதன்கிழமை) நேப்பாளத்தை ஒரு இணைப்பாட்சி அரசாக மாற்றி மாதேசிகளுக்கு நாடாளுமன்றத்தில் அதிகளவு பிரதிநித்துவம் கொடுக்கப் போவதாக தொலைக்காட்சியில் தோன்றி வாக்குறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையில் மாதேசிகள் பெரும்பான்மையாக வாழும் நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இருபது கிளர்ச்சிக்காரர்களும் ஒரு காவல் அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயப்பட்டுள்ளார்கள். தலைநகர் காட்மண்டுவுக்குப் போகும் சாலைகள் தடைபட்டுள்ளன.

இன்று உலகில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர்கள் அல்லது அதையொத்த போர்கள் இனமொழி சார்ந்த போர்களாகவே விளங்குகின்றன.

(1) உருசியா எதிர்கொள்ளும் செச்சீனியா விடுதலைப் போர்.
(2) இந்தியாவின் பாதிப் படைபலத்தை முடக்கி வைத்திருக்கும் கஷ்மீர் விடுதலைப் போர்.
(3) பாகிஸ்தானுக்குத் தலையிடியாக இருக்கும் பலுஸ்தித்தான் விடுதலைப் போர்.
(4) செஞ்சீனாவின் வட- மேற்குப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களது தனிநாட்டுக்கான போர்.
(5)ஸ்ரீலங்கா முகம்கொடுக்கும் தமிழீழ மக்களது ஆயுதப் போர்.

இவையாவும் இன மொழி சார்ந்த போராட்டங்களாகும்.

ஒவ்வொரு நாட்டினது ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் அந்த நாட்டின் முடிசூடா மன்னன் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அந்த எண்ணம் பட்டுப் போகும்போதுதான் போர்கள் வெடிக்கின்றன!

ஆட்சியில் இருப்போர் “குடிமக்கள் சொன்னபடி” ஆட்;சி செய்ய வேண்டும். செங்கோல் எக்காரணம் கொண்டும் வளையக் கூடாது. சட்டத்தின் கீழ் எல்லோரும் சமம் என்ற நிலை இருக்க வேண்டும். ஆண்டான் அடிமை என்ற பேதம் இருக்கக் கூடாது. அப்படியான மக்கள் ஆட்சி மலரும் போது நாட்டில் அமைதி ஏற்படும். நாடு செழிக்கும். நாட்டு மக்கள் எல்லா இன்பங்களும் பெற்று வாழ்வர். இதை ஏன் ஆள்வோர் சிந்திப்பதில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

உள்நாட்டுப் போரை பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்த நேப்பாள அரசியல் தலைவர்கள் அடுத்ததாக மாதேசிகளது சுயாட்சிக் கோரிக்கையையும் அரசியல் சாணக்கியத்தோடும் அரசியல் இராஜதந்திரத்தோடும் தீர்த்து வைத்து நேப்பாளத்தை மக்களாட்சிப் பாதையில் இட்டுச் செல்வார்கள் என நம்புகிறோம். (உலகத்தமிழர் – பெப்ரவரி 9-15, 2007)


போரை வேகமாக முடுக்கி விடப் போகும் மகிந்தா இராசபக்சே!

சேடி இல்லாத இராசகுமாரி
சோடி இல்லாத மாடப்புறா
மோடி செய்யாத வேதாந்தி
உலகில் இருக்க முடியாது

இந்தச் உரையாடல் அண்ணா கதை உரையாடல் எழுதி வெளிவந்து வெற்றிக் கொடி நாட்டிய வேலைக்காரி திரைப்படத்தில் (1948) இடம்பெற்றிருந்தது. இவற்றோடு பதவி விரும்பாத அரசியல்வாதியைக் காணமுடியாது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இன்னொரு திரைப்படம் பெயர் இராசகுமாரி. கலைஞர் கருணாநிதிதான் கதை உரையாடலை எழுதியிருந்தார். ஆனால் அவரது பெயர் திரையில் வரவில்லை.

அதிலே தளபதி ஒருவன் தான் ஆட்சியைப் பிடித்தால் யார் யாருக்கெல்லாம் என்னென்ன அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டுவார்.

அந்தப் பட்டியலில் ஒருவன் விடுபட்டுப் போவான். தனக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று அவன் கேட்பான்.

“நான் போகச் சொன்னால் போகிறேன்! வரச் சொன்னால் வருகிறேன்! எனக்கு அமைச்சர் பதவி இல்லையா?”

“ஓ அப்படியா? போகச் சொன்னால் போகிறாய்! வரச்சொன்னால் வருகிறாய்! சரி நீதான் போக்குவரத்து அமைச்சர்!” என்பான் தளபதி!

அய்க்கிய தேசியக் கட்சியில் இருந்து 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு ஒரே பாய்ச்சலில் தாவி இருக்கிறார்கள். இது உயரப் பாய்ச்சல் அல்ல. நீளப் பாய்ச்சல்!

இவர்களில் 10 பேருக்கு முழு அமைச்சர் பதவிகளும் எஞ்சிய 8 பேருக்கு அரைமந்திரி அல்லது கால் மந்திரிப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கரு ஜெயசூரியா தலைமையில் கட்சி தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மகிந்தா இராசபக்சேயுடன் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு செய்துகொண்டு அதன் அடிப்படையில்தான் சேருகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் உள்வீட்டு இரகசியம் அறிந்தவர்கள் அவர்கள் நிபந்தனையற்ற முறையில் சரணாகதி அடைந்துள்ளார்கள் என்கிறார்கள்.

ஏற்கனவே 6 அதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிப் பக்கம் தாவி அமைச்சர்களாகக் கொலு வீற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் ஒருவர் ஹேகலிய ரம்புக்வெல. நல்ல கோமாளி. இவர்தான் இன்றைய நவீன இட்லர் இராசபக்சேயின் பரப்புரை அமைச்சர்! கோபல்ஸ்சின் மறுவார்ப்பு!

இப்படியான அரசியல் கோமாளித்தனம் பற்றியோ அரசியல்வாதிகளின் பதவி மோகம் பற்றியோ சிங்கள வாக்காளர்கள் கவலைப் படுவதாகவோ துக்கப்படுவதாகவோ இல்லை!

விட்டேனா பார் என்று கட்சி தாவுதலில் முன்னர் கோப்பை வாங்கி சாதனைபடைத்த ராவ் ஹக்கீம் தனது சகாக்கள் 5 பேருடன் ஆளும்கட்சியில் சங்கமமாகி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் 1977 ஆம் ஆண்டுவரை தமிழர்களுக்கு முதிசமாக இருந்து வந்த தபால் தந்தி அமைச்சர் பதவிதான் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இனி குமாரசூரியர் பாணியில் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை போன்ற இடங்களில் உப – அஞ்சல் நிலையங்களைத் திறக்கலாம்!

ஹக்கீமைப் பொறுத்தளவில் அவர் அமைச்சர் பதவி வகிக்காது அரசியல் செய்ய முடியாது. முஸ்லிம் காங்கிரசின் அரசியல் சந்தர்ப்பவாத அரசியல். சலுகைகளுக்குhக எச்சில் இலைக்காக கையேந்தி நிற்கும் அரசியல். அதிலும் முஸ்லிம் காங்கிரசில் இருந்து ஏற்கனவே சிலர் அமைச்சர் பதவிக்காகக் கட்சிக்குத் துரோகம் செய்து விட்டு ஆளும் கட்சியில் சேர்ந்து அமைச்சர்களாகி விட்ட நிலையில் ஹக்கீம் அமைச்சர் பதவியின்றி அரசியல் நடத்துவது இயலாத காரியம்!

ஒன்றை நாம் கவனிக்கலாம். தமிழ் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எலும்புத் துண்டுகள்தான் வீசப்பட்டுள்ளன! வழக்கம் போல கொளுத்த அமைச்சுக்களை சிங்களவர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டுள்ளார்கள்!

ஆறுமுகம் தொண்டமானுக்கு ஒன்றுக்கும் உதவாத Minister of Youth Empowerment and Socio-economic Development  என்ற அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது! இந்த அமைச்சுக்கு கட்டிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலிகமாக அது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகத்தில்தான் இயங்குகிறது. கடனில் மூழ்கி இருக்கும் காங்கிரசுக்கு வாடகை மூலம் வருவாய் தேடவே இந்தச் சிறப்பு ஏற்பாடு!

இதில் மேலும் பரிதாபத்துக்குரியவர் பி. சந்திரசேகரன். கடந்த ஆட்சித் தலைவர் தேர்தலில் அதேக வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு வி.புலிகள் ஆதரளிக்க வேண்டும் என்று வரம் கேட்டு கிளிநொச்சிக்கு யாத்திரை போனவர்! இவருக்கும் பெயருக்கு  Minister of Community Devlopment and Social Inequity  Eradication   என்ற எலும்புத்துண்டு வழங்கப்பட்டுள்ளது.

வேடிக்கை என்னவென்றால் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் பி. சந்திரசேகரன் அமைச்சர்களாக அமைச்சரவையில் இருந்தாலும் அப்பாவி மலையகத் தமிழர்கள் அய்யத்தின் பேரில் வகை தொகையின்றிக் கைது செய்யப்பட்டு பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்!

அய்க்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 18ப் பேரது கட்சித் தாவுதல்களுக்குப் பின்னர் ஆளும் கட்சியின் உறுப்பினர் பலம் நாடாளுமன்றத்தில் 113 ஆக உயர்ந்துள்ளது!

இவர்களில் 52 பேருக்கு முழு அமைச்சர் பதவியும் 33 பேருக்கு அமைச்சரவையில் சேராத அமைச்சர் பதவியும் 19 பேருக்கு அரை மந்திரிப் பதவியும் வழங்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் உள்ள 113 ஆளும் கட்சி உறுப்பினர்களில் 104 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன!
முன்னாள் சுதந்திரக் கட்சி அமைச்சரும் பின்னர் அய்க்கிய தேசியக்கட்சிக்குத் தாவிய மாத்தறை மாவட்ட மகிந்தா விஜயசேகராவுக்கும் கடைசி நேரத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது!

இது ஒரு உலக மகா மகா சாதனை என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது!

கட்சி தாவியவர்களில் இரட்டைத் தாவல் செய்தவர்கள் பட்டியலில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் மகிந்தா விஜயசேகரா குறிப்பிடத்தக்கவர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அதேக இல் இருந்து பாய்ந்தவர்கள் தங்களது குத்துக்கரணத்துக்கு தேசிய சிக்கலுக்கு தீர்வு காண்பது, நல்லாட்சி போன்றவைதான் காரணம் என்று சொல்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் நேற்றுவரை அதேக இல் உட்கட்சி சனநாயகம், சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியவர்கள்! ஆனால் அரசியல் நோக்கர்கள் இவர்கள் அமைச்சர்களாக இருந்த போது செய்த ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பவே இந்தக் கட்சித் தாவல் செய்தார்கள் என்கிறார்கள்.

சிலர் இன்னும் 5 அல்லது 11 ஆண்டுகள் அரசியல் வனவாசம் செய்ய விரும்பாமல் அதேக இல் இருந்து பாய்ந்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

உரோம் பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல அதேகட்சித் தலைவர் நாட்டில் இல்லை. அவர் நேப்பாளம் இந்தியா என்று சுற்றுலா போய் இருக்கிறார்!

கட்சிக்குள் போர்க்கொடி தூக்கிய எதிர்ப்பாளர்களை இரணில் விக்கிரமசிங்கி கட்சியை விட்டுத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. கடைசி மணித்துளி மட்டும் அவர்களோடு சமரசம் பேசிக் கொண்டிருந்தார்! இதன் மூலம் இரணில் விக்கிரமசிங்கி ஒரு கையாலாகாத கட்சித் தலைவர் என்பதைப் பலமாக எண்பித்துள்ளார்.

அமைச்சரவையில் நடந்த மாறுதல் காரணமாக சுதந்திரக் கட்சியில் இரண்டாவது இடத்தில் இருப்பவரும் மகிந்தா இராசபக்சேயின் வெற்றியின் சூத்திரதாரியாக இருந்தவருமான மங்கள சமரவீரா தனது வெளியுறவு அமைச்சர் பதவியை பறிகொடுத்துள்ளார். பறிகொடுத்தார் என்பது நாகரிகம் கருதிச் சொல்லப்பட்டது. வெளியுறவு அமைச்சர் பதவியை அவரிடம் இருந்து மகிந்த இராசபக்சே பறித்துப் போட்டார் என்பதே சரி!

மகிந்தா இராசபக்சே அத்தோடு நிற்கவில்லை. அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா அவர்களிடம் இருந்த சுற்றுலா அமைச்சைப் பறித்து விட்டு உப்புச் சப்பில்லாத தேசிய பாரம்பரிய அமைச்சைக் கொடுத்துள்ளார். இதைவிட ஒரு அவமானம், தலைக்குனிவு அரசியலில் ஏகபோக அதிகாரம் வகித்த பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்டிருப்பதை அவர்களது அரசியல் எதிரிகளும் விரும்பமாட்டார்கள்!

இலண்டனில் இருக்கும் சந்திரிகா குமாரதுங்கா தனது சுற்றுலா அமைச்சுப் பதவியைப் பறிகொடுத்த இளவல் அனுராவைத் தொலைபேசியில் அழைத்து ஆற்றுப்படுத்தியுள்ளார்.

யார் எதைச் சொன்னாலும் அரசியல் அதிகாரம் பண்டாரநாயக்க குடும்பத்தில் இருந்து பறிபோய்விட்டது. அது இப்போது இராசபக்சே குடும்பத்தின் கைக்குப் போய்விட்டது. இப்போது நடைபெறுவது Rajapakse Holding (Private) Limited அரசு! அடுத்த 24 ஆண்டுகளுக்கு இராசபக்சா உடன்பிறப்புக்களே ஆட்சியில் இருப்பார்கள் என கோதபாய இராசபக்சே சூளுரைத்துள்ளார்!

அதேகட்சியின் அதிருப்தியாளர்கள் கட்சி தாவியதால் அதேகட்சி – சுதந்திரக்கட்சி புரிந்துணர்வு உடன்பாடு கிழித்தெறியப்பட்டு விட்டது. இதனால் இனச் சிக்கலுக்கு தீர்வு காணவேண்டும் என்றால் தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடையே ஒத்துணர்வு இருக்க வேண்டும் என்ற கோட்பாடு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

மகிந்த இராசபக்சே அதேகட்சியின் அதிருப்தியாளர்களை சேர்த்துக் கொண்டதற்குக் ஜாதிக விமுக்தி பெரமுன தனது ஆதரவை விலக்கிக் கொண்டது காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இதில் உண்மையில்லை. அதேக – சுதந்திரக் கட்சி உடன்பாட்டின் படி இராசபக்சே அரசுக்கு 63 உறுப்பினர்களது ஆதரவு இருந்திருக்கும். அரசியல் யாப்பைத் திருத்த வேண்டிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்னை கூட இருந்திருக்கும்.

இராசபக்சே அரசு வட – கிழக்கு மாகாணங்களை சட்ட அடிப்படையில் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாடாளுமன்றத்தில் அதேக ஆதரவு வழங்கும் என்று இரணில் விக்கிரமசிங்கி கொடுத்த வாக்குறுதியை அலட்சியம் செய்துவிட்டார். இது அவரது கடும் சிங்கள பேரினவாதப் போக்கைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்தியா உட்பட இணைத் தலைமை நாடுகள் வட- கிழக்குப் பிரிக்கப்பட்டதற்கு தமது அதிருப்தியைத் தெரிவித்தன. அதனை இராசபக்சே சட்டை செய்யவில்லை.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஆதரவு தனக்கு இருப்பதாக இராசபக்சே நம்புகிறார். அவரது நம்பிக்கையில் பொருள் இருக்கிறது. சம்பூரை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்த போது இந்த நாடுகள் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு மவுனியாகி விட்டன.

அமெரிக்கா வி.புலிகளது ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகவே பார்க்கிறது. பயங்கரவாதத்தை உலகளாவிய அளவில் ஒழிப்பதே தனது கொள்கை கோட்பாடு என்பதை ஒளிவு மறைவின்றிச் சொல்லி வருகிறது.

கடந்த நொவெம்பர் மாதம் 21 ஆம் நாள் இணைத் தலைமை நாடுகளது மாநாட்டைத் தொடர்ந்த வோஷிங்டனில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய நிக்கலஸ் பேர்ன்ஸ் பின்வருமாறு கூறியிருந்தார்.

“We support the government. We have a good relationship with the government. We believe the government has a right to try to protect the territorial integrity and sovereignty of the country. The government has a right to protect the stability and security in the country. We meet often with the government at the highest levels and consider the government to be a friend to our country.
We also believe that the Tamil Tigers, the LTTE, is a terrorist group responsible for massive bloodshed in the country and we hold the Tamil Tigers responsible for much of what has gone wrong in the country. We are not neutral in this respect. I’m talking about the United States Government now. “

“ஸ்ரீலங்கா அரசிற்கும் வி. புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் நாங்கள் நடுநிலமையாளர்கள் அல்ல. எங்களது ஆதரவு ஸ்ரீலங்கா அரசுக்கே உண்டு. அரசோடு எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. ஸ்ரீலங்கா அரசுக்குத் தனது ஆட்புல ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதுகாக்கும் உரிமை உண்டு என்பதை நம்புகிறோம். நாங்கள் அடிக்கடி உயர்மட்ட அரச அதிகாரிகளோடு சந்தித்துப் பேசுகிறோம். ஸ்ரீலங்கா அரசு அமெரிக்கா நாட்டினது நட்பு நாடு என நினைக்கிறோம்.”
உலக ஒழுங்கில் இன்று அமெரிக்கா வைத்ததே சட்டம். பேசுவதே வேதம். இந்தியா, உருசியா, சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவின் சட்டப் பைக்குள் இருக்கின்றன.

இந்த நாடுகள் எல்லாம் ஸ்ரீலங்காவில் நாளும் பொழுதும் நடந்தேறும் மனிதவுரிமை மீறல்களைக் கண்டும் காணதவாறு நடந்து கொள்கின்றன. குண்டு வீச்சு, எறிகணை வீச்சு, ஆட்கடத்தல், காணாமல் போதல், கப்பம், கைது, சிறைவாசம், கொருளாதாரத் தடை ஆகியவற்றை இட்டு பயங்கர மவுனம் சாதிக்கின்றன.

அமெரிக்கா ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுக்கும் இராணுவ தளபாட உதவிகள், பயிற்சிகள், நிதிக் கொடுப்பனவு போன்றவையே மகிந்தா இராசபக்சேயை இனச் சிக்கலுக்கு ஒரு இராணுவத் தீர்வை தேட வைத்திருக்கிறது.

சம்பூர் மீதான சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்களின் யோசனையே காரணமாகும். திருகோணமலைத் துறைமுகத்தைப் பாதுகாப்போடு வைத்திருக்க வேண்டும் என்றால் சம்பூரை ஸ்ரீலங்கா இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என யோசனை அவர்களால்தான் வழங்கப்பட்டது.

இராசபக்சேக்கு இனச் சிக்கலை அரசியல் அடிப்படையில் தீர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. கட்சி தாவியவர்களுக்கு அமைச்சர் பதவிகளை அள்ளி வீசியதன் மூலம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை உறுதி செய்து கொண்டுள்ள மகிந்த இராசபக்சே இனி வி.புலிகளுக்கு எதிரான போரை வேகத்தோடு முடுக்கி விடுவார் என நிச்சயம் நம்பலாம்.
இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் கிழக்கிலும் வடக்கிலும் வி.புலிகளை அழித்து விட்டு தமிழர்கள் மீது ஒருதலைப் பட்சமான அதிகார அமைதித் தீர்வைத்  (னுiஉவயவநன pநயஉந) திணிப்பதே அவரது கனவாகும். (பரபரப்பு – 30-01-2007)


தமிழர்களை இலங்கைச் சிவப்பு இந்தியர் ஆக மாற்றுவதே இராசபக்சேயின் இறுதிக் குறிக்கோள்!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் வரவு – செலவு திட்டம் தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மா.க. ஈழவேந்தன் “அடுத்த வரவு-செலவுத் திட்ட விவாதம் திருமலையில நடைபெறும்” என்று சூளுரைத்தார்.

“கோணமா மலை எங்கள் மலை அதனைத் தலைபோனாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்ற முழக்கத்தை கடந்த அரைநூற்றாண்டு காலமாக முழங்கி வருபவர்களில் ஈழவேந்தனும் ஒருவர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் திருமலை பறிபோகாது காப்பாற்றப்பட வேண்டும் என ஓயாது ஒழியாது தந்தை செல்வநாயகம் காலம் முதல் பேசி வருபவர்.

ஈழவேந்தன் என்ன முகூர்த்தத்தில் திருவாய்மலர்ந்தாரோ “அடுத்த வரவு – செலவுத் திட்ட விவாதம் திருமலையில” என்று சொல்லி அவர் வாய் மூடுமுன் ஆட்சித் தலைவர் மகிந்த இராசபக்சே வட – கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து அவற்றுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கி, தனித்தனி ஆளுநர்களையும் செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

அது மட்டுமல்ல திருகோணமலை மாவட்டத்தைத் தனி அலகாகப்பிரித்து அதனைத் திருமலை அதிபரின் (ஓய்வுபெற்ற இராணுவ தளபதி இரஞ்சித் சில்வா)  நேரடி ஆட்சிக்குள் கொண்டு வந்துள்ளார். இந்தப் பிரிவினை சனவரி 01, 2007 இல் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. குறித்த நாளில் அரச ஊழியர்கள் அனைவரும் ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தைப் பாடிப் பணியைத் தொடங்கி இருக்கிறார்கள்.

வட – கிழக்க மாகாணங்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டது ஸ்ரீலங்காவின் யாப்புக்கு முரணானது, செல்லுபடியாகாதது, சட்டத்துக்கு முரணானது என சிங்களவர்களை மட்டும் கொண்ட உச்ச நீதிமன்றம் சென்ற ஒக்தோபர் 16, 2006 தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு தமிழர்களது தாயகக் கோட்பாட்டுக்கு விழுந்த பலத்த அடியாகும். அத்தோடு சிங்களவர்கள் மேலாண்மை செலுத்தும் ஸ்ரீலங்காவின் நீதித்துறையிடம் இருந்து தமிழர்களுக்கு நீதி கிடையாது என்பது மீண்டும் ஒருமுறை எண்பிக்கப் பட்டுள்ளது.

வட-கிழக்கு இணைப்புக்கு இந்தியா மற்றும் இணைத்தலைமை நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன. ஆனால் அதைப்பற்றி மகிந்த இராசபக்சே கிஞ்சித்தும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

வட – கிழக்கு இணைப்பு 1987 யூலை 29 இல் அன்றைய ஆட்சித்தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் அன்றைய இந்தியப் பிரதமர் இராசீவ் காந்திக்கும் இடையில் கொழும்பில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் பந்தி 1.4 பின்வருமாறு கூறுகிறது.

“The Northern and the Eastern provinces have been areas of historical habitation of Sri Lankan Tamil speaking peoples, who have at all times hitherto lived together in this territory with other ethnic groups.”

“ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடமாக வட – கிழக்கு மாகாணங்கள் விளங்கி வந்திருக்கிறது. அங்கு  தமிழ்ப் பேசும் மக்கள் ஏனைய இனக் குழுக்களோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.”

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் கீழ் கிழக்கு மாகாண மக்கள் இணைந்த வட -கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பதைக் கண்டறிய 1988 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு நேரடிப்பு வாக்கெடுப்பு நடத்ததப்படும். எனக் கூறப்பட்டது. அன்று தொட்டு 2005 ஆண்டு வரை இந்த வாக்கெடுப்பு ஆட்சித்தலைவரால் அவசர காலச்சட்டத்தின் கீழ் ஒத்திப்போடப்பட்டு வந்தது.

இந்திய – இலங்கை உடன்பாடு வட- கிழக்கு இணைப்பை தற்காலிகமாக இணைத்தாலும் அந்த இணைப்பை எதிர்க்கப்போவதாக அன்றைய ஆட்சித்தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அறிவித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் எழுதப்பட்ட உடன்பாடு இந்தியா வி. புலிகளது ஆயுதங்களைக் களைவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தது. அதனால் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தற்காலிக வட- கிழக்கு இணைப்பை அரசியல் தந்திர அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருந்தார்.

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு சிங்கள – பவுத்த இனவாத சக்திகளுக்கு பெருந்தீனி போட்டதாக அமைந்து விட்டது.
கிழக்கு மாகாணத்தை அரச ஆதரவு குடியேற்றத்திட்டங்கள் மூலம் ஒரு சிங்கள பெரும்பான்மை மாகாணமாக மாற்றுவதே டி.எஸ். சேனநாயக்க காலம் தொடடு ஒரு எழுதாத சட்டமாக இருந்து வந்திருக்கிறது. அதில் சிங்கள அரசு பாரிய வெற்றியையும் கண்டிருக்கிறது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னரும் அதற்குப் பின்னரும் வடகிழக்கு மாகாணத்தில் ஆறுகள், குளங்கள் இரண்டையும் அண்டிய பகுதியில் திட்டமிட்ட பாரிய சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கட்சி வேறுபாடின்றி அரச இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வந்தன.

(1) கல்ஓயா (பட்டிப்பளை) மற்றும்  கந்தளாய் குடியேற்றத் திட்டம் டி.எஸ.; சேனநாயக்கா காலத்தில் (1947 – 1952) நிறைவேறியது.

(2) அல்லை குடியேற்றத் திட்டம் டி.எஸ். சேனநாயக்கா ஃ டட்லி சேனநாயக்கா காலத்தில் (1947 – 1953) உருவாக்கப்பட்டது.

(4) பதவியா (பாவற்குளம்) குடியேற்றத் திட்டம் ளுறுசுனு பண்டாரநாயக்கா காலத்திலும் (1956 – 1959) மொறவேவா (முதலிக்குளம்)

(4) குடியேற்றத்திட்டம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்திலும் (1960 – 65) நிறைவேற்றப்பட்டது.

(5) மகாடிவுலுவேவா (விளாத்திக்குளம்) மற்றும் வெலி ஓயா (மணல் ஆறு)  குடியேற்றத் திட்டம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாஃ காமினி திசநாயக்காஃ ஜெயவர்த்தனாஃ ஆர். பிரேமதாசா காலத்தில் (1977-1987) உருவாக்கப்பட்டன.

காமினி திசநாயக்கா காணி அபிவிருத்தி மற்றும் மகாவலி விரிவாக்கத் திட்ட அமைச்சராக இருந்தபோது தொடக்கி முடிக்கப்பட்ட மணல் ஆறு குடியேற்றம் (1987) காரணமாக வட – கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான தரைவழித் தொடர்பு வெட்டுப்பட்டது தெரிந்ததே.

சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் (திருகோணமலை, மட்டக்களப்பு, 1961 இல் உருவாக்கப்பட்ட அம்பாரை மாவட்டம்) ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றம்  தமிழர்கள் தேய்ந்த கதையையும் சிங்களவர் பெருகிய கதையையும் சொல்கிறது.

அட்டவணை
கிழக்கு மாகாண மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் ( 1881-1981) 

சிங்களவர்  தமிழர்  முஸ்லிம்கள்
ஆண்டு எண்ணிக்கை விழுக்காடு எண்ணிக்கை விழுக்காடு எண்ணிக்கை

விழுக்காடு

1881

5947

4.50 75408 61.35 43001 30.65
1891 7512 4.75 87701 61.55 51206

30.75

1901 8778 4.70 96296 57.50 62448 33.15

1911

6909 3.75 101181 56.20 70409

36.00

1921

8744 4.50 103551 53.50 75992

39.40

1946 23456 8.40 146059 52.30 109024

39.10

1953 46470 13.10 167898 47.30 135322

34.00

1963 109690 20.10 246120 45.10 185750

34.00

1971 148572 20.70 315560 43.90 248567

34.60

1981 243358 24.90 409451 41.90 315201

32.20

 

1881 ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981 ஆம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881 ஆம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981 இல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிங்கள இராணுவம் எறிகணை மற்றும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தி மாவிலாறு மற்றும் சம்பூர் ஆகிய கிராமங்களை பாரிய படையெடுப்பின் மூலம் கைப்பற்றியது.

இந்த இராணுவ ஆக்கிரமிப்புக் காரணமாக சுமார் 45,000 தமிழ்மக்கள் மூதார் கிழக்கில் இருந்து வெருகல் ஆற்றுக்கப்பால் துரத்தப்பட்டார்கள். மக்கள் வாகரை, கதிரவெளி, வாழைச்சேனை பகுதிகளுக்கு உடுத்த உடையோடு இடம் பெயர்ந்தார்கள். இந்த இடப் பெயர்வால் திருகோணமலையில் வாழ்ந்து வந்த தமிழ்மக்களது தொகை வெகுவாகக் குறைந்துள்ளது. மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீண்டும் மூதூரில் குடிவைக்கப்பட்டார்கள். இழப்பீடும் வழங்கப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட இல்லங்கள் திருத்திக் கொடுக்கப்பட்டன. ஆனால் மாவிலாறு, சம்பூர், ஈச்சிலம்பற்றை போன்ற கிராமங்களில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை. அவர்கள் பசியால் மெலிந்து பட்டினியால் வாடி ஏதிலிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

மகிந்த இராசபக்சேயின் இனவாத அரசியல் வெற்றியடையுமேயானால் யாழ்ப்பாணம் இல்லாத வட மாகாணமும், திருகோணமலை, அம்பாரை இல்லாத கிழக்கு மாகாணமும் தமிழர்களது கையில் இருக்கும் ஒரு நிலைமை உருவாகும்.
வட – கிழக்கு மாகாணத்துக்கு வரதராசப்பெருமாளை முதலமைச்சராக முடிசூட்டி அழகு பார்த்த அதே பாணியில் யாழ்ப்பாணத்திற்கு டக்லஸ் தேவானந்தாவும் மட்டக்களப்புக்கு கருணாவும் முடி சூட்டப்படலாம்!

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மோகன் விஜயவிக்கிரம ஓய்வு பெற்ற இராணுவ தளபதி ஆவார். வடக்கு மாகாணத்துக்கு ஒரு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை அதற்கும் அவரே ஆளுநராக இருந்து வருவார். வடக்கு மாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற சந்திரா பெர்னாந்து நியமிக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக திருகோணலை உட்பட வட- கிழக்கு மாகாணங்களுக்கு ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகளை நியமித்ததன் மூலம் தமிழர் தாயகத்தில் இராணுவ ஆட்சி முற்றாகத் திணி;க்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் தமிழர் தாயகத்தை கூறுபடுத்தி சிங்களமயப் படுத்தப்படுவதைத் துரிதப்படுத்தும்.

கிழக்கு மாகாணத்தை தமிழர்களது கட்டுப்பாட்டில் இருந்து பிடுங்கி சிங்களக் குடியேற்றத்தின் மூலம் அதனை சிங்கள பெரும்பான்மை மாகாணமாக மாற்றுவதே இராசபக்சேயின் நோக்கமாகும்.

ஏற்கனவே திருகோணமலைக்கு முன்னாள் சிங்கள இராணுவத்தினர் சாரி சாரியாகக் கொண்டு செல்லப்பட்டு குடியேற்றப்பட்டு வருகிறார்கள். எண்பது முன்னாள் படைவீரர்களைக் கொண்ட முதல் பிரிவினர் கடந்த டிசெம்பர் மாதம் இராணுவ பாதுகாப்போடு திருகோணமலை கொண்டு செல்லப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர்.

வட – கிழக்கு மாகாணங்களில் சிங்களக் குடியேற்றத்தின் மூலம் தமிழர்களது எண்ணிக்கை பலத்தைக் குறைப்பதில் ஜாதிக விமுக்தி பெரமுன, ஹெல உருமய போன்ற தீவிர பவுத்த இனவாத அமைப்புக்களும் ஈடுபட்டுள்ளன.

சென்ற சனவரி 3 ஆம் நாள் சிங்கள இராணுவ தளபதி சரத் பொன்சேகா வெலிக்கந்தை (பொலனறுவ) இராணுவத்தின் 23 படைப்பிரிவின் தளபதிகளோடு ஒரு மாநாடு நடத்தினார். இந்தச் சந்திப்பில் கிழக்கில்; இருந்து வி. புலிகளை இரண்டொரு மாதத்தில் துரத்திவிடுவதற்கான இராணுவ யுக்திகள் மற்றும் தந்திரங்கள் பற்றி சரத் பொன்சேகா விளக்கினார்.
கிழக்கில் இருந்து வி. புலிகளை விரட்டிய பின்னர் வடக்கில் இருந்தும் வி. புலிகளை துரத்திவிடப் போவதாக சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.

சென்ற சனவரி 02 ஆம் நாள் கண்டி தலதா மாளிகைக்கு தனது குடும்பத்துடன் சென்று வழிபட்ட சரத் பொன்சேகா மல்வத்தை மகாநாயக்க தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். அவரிடமும் வி.புலிகளை ஒழித்துக் கட்டும் தனது திட்டத்தைச் சொன்னார். பின்னர் கதிர்காமம் சென்று கதிர்காமக் கந்தனையும் குடும்பத்தோடு வழிபட்டார். கதிர்காமக் கந்தன் அவருக்கு அருள்பாலித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை.

புத்தாண்டுக்கு முதல்நாள் செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பொன்சேகா வாகரையையும் கதிரவெளியையும் ஒரு மாதத்தில் கைப்பற்றப் போவதாகச் சொன்னார். மழையும் சீரற்ற கால நிலையுமே தாக்குதல் திட்டத்தைத் தாமதப்படுத்துவதாகவும் பயிற்சி பெற்ற வி.புலிகளின் எண்ணிக்கை 800 தான் இருக்குமென்றும் எஞ்சியவர்களது எண்ணிக்கை 2,000 மேல் இருக்காதென்றும் சொன்னார். இந்த ஆண்டு (2007) முடியு முன்னர் வி. புலிகள் கிழக்கிலும் வடக்கிலும் தோற்கடிக்கப் படுவர் எனச் சொன்னார்.
வி. புலிகளுக்கு எதிரான தாக்குதல் தாமதப்படுவதற்கு அரச தரப்பில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அது பல்குழல் பீரங்கிகள், குண்டுகள் மற்றும் இராணுவ தளபாடங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்து சேர்வதற்கு காத்திருக்கிறார்களாம். ஸ்ரீலங்கா 200 மில்லியன் டொலர் பெறுமதியான தாங்கிகள், பலவகையான குண்டுகள், ஆளில்லாத விமானங்கள் (ருயுஏள) கவச வாகனங்கள் போன்றவற்றை அடுத்த 18 மாதங்களில் கொள்வனவு செய்யக் கட்டளைகளை அனுப்பியிருக்கிறது.

வி. புலிகளை 2007 முடிவதற்குள் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் மறைமுக ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மகிந்த இராசபக்சேயின் ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தியா அவ்வப்போது மனிதவுரிமை மீறல்கள் பற்றிக் கவலை தெரிவிப்பதும் இனச் சிக்கலுக்கு இராணுவ தீர்வு சரிப்பட்டு வராது அரசியல் தீர்வே சரியான வழி என அறிக்கைகள் விடுவதும் தமிழ்நாடு அரசியல்வாதிகளைத் திருப்திப் படுத்துவதற்கு மட்டுமே என்றும் அது எந்தவகையிலும் ஸ்ரீலங்காவின் கைகளைக் கட்டிப் போடுவதற்கு அல்ல என்றும் அதே ஆலோசகர்கள் நினைக்கிறார்கள்.

கொலை ஆயுதங்கள் வழங்கப்பட மாட்டாது ஆனால் அந்தக் கொலைக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது பற்றி ஸ்ரீலங்கா இராணுவத்துக்குப் பயிற்சி தாராளமாக வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் வைத்து செய்தியாளர்களுக்குச் சொன்னதை அந்த ஆலோசகர்கள் சுட்டிக்  காட்டுகிறார்கள்!

கிழக்கைத் தங்கள் பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்திய தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஸ்ரீலங்கா அரசு இரண்டு கைகளையும் ஏந்தி வரவேற்கிறது. இந்தியாவிற்கு எண்ணெய் குதங்களைக் குத்தகைக்குக் கொடுத்த ஸ்ரீலங்கா அரசு இப்போது திருகோணமலையில் ஒரு மின் அனல் நிலையம் நிறுவுவதற்கும் உடன்பாடு செய்துள்ளது.

மகிந்த இராசபக்சேயின் இறுதிக் குறிக்கோள்; தமிழர்களை இலங்கைச் சிவப்பு இந்தியர் ஆக மாற்றி அவர்களை அருங்காட்சிப் பொருளாக குறிப்பிட்ட ஒதுக்குப் பகுதிகளில் (சநளநசஎநள) வைப்பதே ஆகும். அதனைச் செய்து முடிப்பதற்கு இதுவே சமயம் என்றும் அதனை நழுவ விடக்கூடாதென்றும் மகிந்த இராசபக்சேயும் அவரது ஆலோசகர்களும் நம்புகிறார்கள். இப்படியான கருத்தைத் தெரிவித்திருப்பவர் இந்திய அரசின் முன்னாள் அமைச்சரவை செயலர் பி. இராமன் ஆவார். இப்போது இவர் ஐளெவவைரவந ழக வுழிiஉயட ளுவரனநைள என்ற ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். இவர் ஒரு தீpவிர புலி எதிர்ப்பாளர். சிறிது காலத்துக்கு முன்னர் இவர் எழுதிய கட்டுரையின் தலைப்பு  “ஐனெயைஇ ளுசi டுயமெய நெநன வழ னநளவசழல டுவுவுநு’ள யசைஇ யெஎல”  (விடுதலைப் புலிகளின் வான் மற்றும் கடற்படை இரண்டையும் இந்தியாவும் ஸ்ரீலங்காவும் சேர்ந்து அழிக்க வேண்டும்) என்பதாகும்! (பரபரப்பு – சனவரி 9-01-2007)


தெற்கு வாழ்கிறது! வடகிழக்கு சாகிறது!

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தினள் நோய்தனில் வருந்த அடிமைசாக
மாஈPரம் போகுமென்று விதைகொண்டு ஓட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந்தீண்டப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப்
பாவிமகன் படுந்துயரம் பார்க்க ஒண்ணாதே!

பாவிமகன் ஒருவன் தன் பசு கன்றை ஈன, விடாமற் பெய்த மழையால் அவ்வீடு இடிந்துவிழ, தன் மனைவி மகப்பேறு வேதனையில் துடிக்க, அடிமை இறந்துபோக, நாளை ஈரம் காய்ந்துவிடும் என்று விதைக்க விதையைக் கொண்டு விரைந்து நிலத்தை நோக்கிச் செல்ல, செல்லும் வழியில் கடன்காரர் வழிமறித்துத் தாங்கள் கொடுத்த கடனைத் திரும்பிக் கேட்க, அப்பொழுது ஓர் உறவினன் உயிர்துறந்த செய்தி தாங்கிய மரண ஓலையை நீpட்ட, அப்பொழுது நீக்கமுடியாத விருந்தினர்வர, அவர்களை அனுப்பியதும் தன் காலில் நச்சுப்பாம்பு ஒன்று கடிக்க, அப்பாம்பின் நஞ்சு ஏறி மயங்குந்தருணத்தில் பாவாணர் தாங்கள் யாத்த செய்யுள்களைப் பாடி, அவற்றிற்குச் சன்மானம் கேட்க, பாம்பு கடித்தவன் இவ்வாறடையும் துன்பம் பார்க்க ஒண்ணாது. எவராலும் பொறுக்கவும் முடியாது.

இப்படி அடுக்கடுக்கா ஒருவனுக்கு அவலங்கள் துன்பங்கள் துயரங்கள் மலைபோல் வருமா என்று நேற்றுவரை நாம் அய்யப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று எம் கண்முன்னே வாகரையிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் இந்த அவலங்கள் துன்பங்கள் துயரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்த மக்களுக்கு இன்று வாழ்க்கையே பெரிய போராட்டமாகி விட்டது.

இதை எழுதும் போது (ஞாயிறு இரவு) தமிழ்ச்சோலை வானொலியில் வாகரையில் வாழும் இல்லை செத்துக் கொண்டிருக்கும் ஒரு தாயார் தானும் தன் குடும்பமும் அயலும் படும் சொல்லொணாத் துன்பங்களை வார்த்தைகள் மூலம் இறக்கி வைத்தார். மேலே குண்டுமழை, அதிலிருந்து தப்ப நிலத்துக்கு அடியில் பதுங்கு குழியில் வாழ்க்கை, உண்ண உணவில்லை, உடுக்கத் துiணியில்லை, இருக்க இடமில்லை, பள்ளியில்லை, படிப்பில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் பாடலில் அவன் பட்டபாட்டை விட மோசமான வாழ்க்கை!

எனக்குப் பாவ புண்ணியத்தில் நம்பிக்கை இல்லை. ஊழில் நம்பிக்கை இல்லை. ஆனால் தமிழினம் கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் சொல்லணாத் துன்பங்களைப் பார்க்கும் போது தமிழினம் ஒரு பாவம் செய்த இனமாக இருக்கலாம் என எண்ண வேண்டியுள்ளது.

கடந்த டிசெம்பர் 27 ஆம் நாள் இங்குள்ள அஜக்ஸ் (Ajax) புறநகரில் சுனாமி இரண்டாவது ஆண்டு நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டது. அந்த நினைவு நிகழ்ச்சியை கனடிய தமிழ்க் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்தது. அதில் நானும் கலந்து கொண்டு பேசினேன்.

“எல்லோரும் சுனாமி 1 பற்றிப் பேசினார்கள் நான் சுனாமி 2 பற்றிப் பேச ஆசைப்படுகிறேன்” என்ற முத்தாய்ப்போடு எனது பேச்சைத் தொடங்கினேன்.

2002 பெப்ரவரி 23 இல் போர்நிறுத்த உடன்படிக்கை அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கி தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இருவருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக நடந்து வந்த கொடிய போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்மக்கள் இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கை காரணமாக சிறிது மூச்சுவிட முடிந்தது. தொலைந்து போன தங்கள் வாழ்க்கையை மீள் கட்டியெழுப்ப மக்கள் இந்தப் போர்நிறுத்த காலத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கையில் எஞ்சியிருந்த நகைநட்டுகளை விற்றோ அடகுவைத்தோ அதில் கிடைத்த  பணத்தைக் கொண்டு கடற்தொழில், கமத்தொழில் போன்றவற்றைத் தொடங்கினார்கள். வெளிநாட்டு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களால் ஆன உதவியை நல்கின.

இந்தக் கட்டத்தில்தான் டிசெம்பர் 26 ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஆழிப்பேரலையின் ஊழிக் கூத்து அரங்கேறியது. பதினெட்டு மீட்டர் உயரம் உள்ள அலைகள் கரையோரம் வாழ்ந்த  மக்களை இழுத்து விழுங்கியது.

இந்த ஊழிக் கூத்தில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 1,700,000 மக்கள் வீடுவாசல்களை இழந்தார்கள். இந்தோனிசியாவை அடுத்து இலங்கையில்தான் சுனாமியால் அதிகளவு உயிர் உடமை அழிவுகள் ஏற்பட்டன. 35,000 மக்கள் கொல்லப்பட்டார்கள். 120,000 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 516,150 மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.
சுனாமியின் போது அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் 60,280 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. இவர்களில் 43,382 குடும்பங்கள் இன்னமும் தற்காலிக தரிப்பிடங்களில் வாழ்கிறார்கள். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 16,433 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. இவர்களில் 11,641 குடும்பங்கள் இன்னமும் இடைத்தங்கு முகாம்களில் வாழ்கிறார்கள்.

சுனாமி மீள்கட்டமைப்புக்கு வெளிநாடுகள் தாராளமாகக் வழங்கிய நிதியுதவியை ஒரு பொதுக் கட்டமைப்பு மூலம் வட – கிழக்குக்கு பிரித்துக் கொடுக்கும் நிருவாகத் திட்டம் பலத்த இழுபறியின் பின்னர் ஸ்ரீலங்கா அரசுக்கும் வி.புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் நூறு விழுக்காடு சிங்களவர்களை நீதிபதிகளாகக் கொண்ட ஸ்ரீலங்கா உச்சநீதிமன்றத்தினால் சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

வி.புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்தவித நிதியுதவியும் வழங்கப்படவில்லை. அல்லது மிகச் சிறிய அளவிலான உதவியே வழங்கப்பட்டது. இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தின் பாரிய படையெடுப்புக்கள் காரணமாக சுனாமி 2 க்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். உயிர் உடமை என பாரிய அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரம் சுனாமியால் தெற்கில் ஏற்பட்ட அழிவுகள் துரிதகெதியில் சீரமைக்கப் பட்டுள்ளது.சுனாமியால் அழிந்து போன பாணந்துறை ஸ்ரீ சுமங்கல பள்ளிக்கூடத்தை உரூபா 329 மில்லியன் செலவில் முழுமையாக மீள்கட்டப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியை யப்பான் வழங்கியது.

பழைய பள்ளிக்கூடம் 3,200 மாணவர்களையும் 80 வகுப்பறைகளையும் கொண்டிருந்தது. இப்போது அது 7 ஏக்கர் நிலப்பரப்பில் 4,000 மாணவர்களையும் 100 வகுப்பறைகளையும் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல கொழும்பில் காணப்படும் நவீன பள்ளிக்கூடம் போல உள்ளரங்கு, ஆய்வுகூடம், டிஜிட்ரல் நூல்நிலையம், பன்முக ஊடக மையம் கொண்டதாக உள்ளது.

உரூபா 500 மில்லியன் செலவில் சுனாமியில் அள்ளுப்பட்டுப் போன அக்ரால பாலம் மீள் கட்டப்பட்டுள்ளது. உரூபா 600 மில்லியன் செலவில் காலி மீன்பிடித்துறைமுகம் மீள்கட்டப்பட்டுள்ளது. உரூபா 103 மில்லியன் செலவில் ஒரு பனிக்கட்டித் தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது.
மேலும் காலி, அம்பாந்தோட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டஇரத்கம உட்பட 6 காவல்நிலையங்கள் மீள்கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான நிதியையும் யப்பானே கொடுத்து உதவியுள்ளது.

அமைதிப்பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டால் மட்டுமே சுனாமி மீள்கட்டமைப்புக்கு யப்பான் உதவும் என்று சிறப்புத் தூதுவர் யசூசி அசாக்கி திருவாய்மலர்ந்தார். இப்போது சுனாமி மீள்கட்டமைப்புக்கு நிதியுதவி செய்தது மட்டுமல்லாமல் அதையும் தெற்குக்கே யப்பான் வழங்கியுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதில் ஸ்ரீலங்கா அரசு இனவாதக் கண்களோடு நடந்து கொள்கிறது. இதையிட்டு இணைத்தலைமை நாடுகள் தலையை மணலுக்குள் புதைத்துக் கொண்டிருக்கின்றன. ஜெர்மனி நாடு மட்டும் ஸ்ரீலங்காவில் அதிகரித்துள்ள வன்முறையையும் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களையும் காரணம் காட்டி அந்த நாட்டிற்கான சகல நிதியுதவிகளையும நிறுத்தியுள்ளது. அதோடு நிற்காமல் ஏனைய நாடுகளும் ஸ்ரீலங்காவிற்கான நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. அய்ரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த தலைமைப் பதவியை ஜெர்மனி வகிக்க  இருக்கிறது.
மீள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு முகவர் மையம் கட்டவேண்டிய 114,069 நிரந்தர வீடுகளில் 63,489 வீடுகளையே அது கட்டி முடித்திருக்கிறது. 47,859 வீடுகள் மீள்கட்டமைப்பு அல்லது திருத்த வேலை செய்யப்படுகிறது. இதற்கான நிதியுதவி அரச சார்பற்ற நிறுவனங்கள், உலக வங்கி போன்றவற்றால் வழங்கப்படுகிறது. ஒரு வீடு முழுதாக திருத்தியமைக்க உரூபா 250,000 யும் அரைவாசி திருத்தியமைக்க உரூபா 100,000 யும் வழங்கப்பட்டது.

கேயர் (CARE) நிறுவனம் புது வீடுகள் கட்டுவதில் தெற்கில் 90 விழுக்காட்டை நிறைவு செய்துள்ளதாகச் சொல்கிறது. ஆனால் வடக்கில் இந்த விழுக்காடு 10 மட்டுமே!

இருந்தும் தொண்டர் நிறுவனங்கள் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றன என்று இனவாதம் பேசும் ஜேவிபி மற்றும் ஹெல உறுமய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

வடக்கில் 18 பள்ளி;கள் மட்டும் மீள் கட்டப்பட்டுள்ளன. அரைவாசி சேதப்பட்ட 255 பள்ளிக்கூடங்களில் 38 மட்டுமே திருத்தப்பட்டுள்ளன. இதனால் 30 விழுக்காடு மாணவர்களுக்கு பள்ளிக்கூட வசதிகள் இல்லை. கல்வி திணைக்கள அதிகாரி ஒருவரது கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் 25 பள்ளிகளும் முல்லைத்தீவில் 13 பள்ளிகளும் பாதுகாப்புக் காரணமாக கட்டுமானப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் பெரியநிலாவணை என்ற முகாம் இருக்கிறது. அம்பாரை மாவட்டத்தில் மிக அதிகமான அழிவைச் சந்தித்த பகுதி இதுவாகும். இரண்டு ஆண்டுகள் கழிந்தும் தற்காலிக உறைவிடங்களிலே இந்த மீனவக் குடும்பங்கள் தங்கியிருக்கிறார்கள். கொடுத்த பணத்துக்கு அத்திவாரத்தைப் போட்டுவிட்டு மிகுதிப் பணத்துக்கு காத்திருக்கிறார்கள்.
கல்முனைக்கு வடக்கே 40 கிமீ தொலைவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திரைமடு மீள்குடியிருப்பு கிராமத்தில் 1,067 பேரைக் கொண்ட 367 குடும்பங்கள் குடியிருத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வீட்டுக்கு சுமார் 12 பேர் கொண்;ட 3 குடும்பங்கள் என குடியிருத்தப்பட்டுள்ளனர்.

இடைத்தங்கு முகாம்கள் தகரம் அல்லது தென்னோலையால் வேயப்படுவதால் மழை பெய்யும் போது இவை ஒழுகுகின்றன. கழிப்பறை தட்டுப்பாடு நிலவுகின்றது. இருக்கும் கழிப்பறைகளும் மழை பெய்யும்போது நிரம்பி வழிகின்றன. இந்தச் சீர்கேடுகளால் தோல் மற்றும் தண்ணீர் தொடர்பான நோய்கள் பெருகியுள்ளன.

சென்ற ஆகஸ்ட் மாதம் சிங்கள இராணுவம் சம்பூரை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து சுமார் 45,000 மக்கள் தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள். நொவெம்பர் மாதத்தில் சிங்களப் படையினர் கதிரவெளி – வாகரைப் பகுதி மீது பாரிய எறிகணை வீச்சுத்தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் நடத்தின. அதில் பலர் கொல்லப்பட்டார்கள். மக்கள் பதுங்கு குழிகளில் பதுங்கினார்கள். சாவில் இருந்து தப்ப  அந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்தார்கள். இந்த மக்களுக்கு உணவு மருந்து வசதிகள் கொடுக்க செஞ்சிலுவை, யூஎன்சிஆர் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு ஸ்ரீலங்கா அரசு தடைவிதித்துள்ளது.

குண்டுத் தாக்குதலுக்கும் உணவுத் தடைக்கும் உள்ளாக்கப்பட்ட 40,000 மக்கள் தங்கள்  உயிரைக் காப்பாற்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். கடந்த ஆண்டு குண்டு வீச்சு, கடத்தல், பொருளாதாரத்தடை போன்ற அரச பயங்கரவாதத்துக்கு 3,000 மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள்!

சுனாமியால் அழியுண்ட வீடுகளில் இன்னும் 11,710 வீடுகள் மீள்கட்டப்படவில்லை. அம்பாரை மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 27,810 வீடுகள் அழியுண்டன. அங்கு இன்னும் 2,826 வீடுகள் கட்டிமுடிக்கப்படவில்லை. திருகோணமலையில் 3,130 மற்றும் முல்லைத்தீவில் 1,393 வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை.

இப்போது உங்கள் பார்வையைத் தென்பகுதிக்குத் திருப்புங்கள். அங்கே அழியுண்ட வீடுகளை விட கூடுதலான வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை – 2,942
காலி                          –    935
மாத்தறை                 – 1,052
களுத்துறை              – 1,608

இந்த நான்கு மாவட்டங்களிலும் 100 விழுக்காட்டுக்கு அதிகமாக வீடுகளைக் கட்டி அரசு சாதனை படைத்துள்ளது. அம்பாந்தோட்டையில் 200 விழுக்காடு அதிகமாம்.

இதே நேரத்தில் மிக அதிகமாக அழிவுண்ட அம்பாரை (27,810) மற்றும் மட்டக்களப்பு (22,523) மாவட்டம் இரண்டிலும் ஏற்படுத்திய சாதனை முறையே 39 மற்றும் 52 விழுக்காடாகும்.

என்ன காரணம்? உங்களுக்குத் தெரிந்த காரணந்தான். அகப்பை பிடிப்பவள் நம்மாள் என்றால் அடிப்பந்தியில் இருந்தால் என்ன நுனிப்பந்தியில் இருந்தால் என்ன? அய்க்கிய நாடுகள் நடத்திய ஆய்வு இந்தப் பாகுபாட்டுக்கு அரசியல் செல்வாக்குக் காரணம் என்று கூறுகிறது.

வாகரையைப் பொறுத்தளவில் மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான். கட ந்த 6 மாதங்களில் ஆகக் கூடிய உயிர் இழப்புக்கள் இங்குதான் ஏற்பட்டிருக்கிறது. வாகரை மருத்துவமனை செல்தாக்குதலினால் பலத்த சேதம் அடைந்தது.

ஒரு ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் 3,000 குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேலானவர்கள் தாங்கள் தங்கள் சொந்த வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள் எனச் சொன்னார்கள்.; மேலும் 1,034 குடும்பங்கள் (52.6 விழுக்காடு) போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 857 (87.0 விழுக்காடு) வடக்கைச் சேர்ந்தவர்கள். 176 (18.9 விழுக்காடு) கிழக்கைச் சேர்ந்தவர்கள். ஒரேயொரு குடும்பம் மட்டும் காலியைச் சேர்ந்தது. ஒருமுறைக்கு மேல் இடம்பெயர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் 87 விழுக்காடு, திருகோணமலை 57.3 விழுக்காடு, மட்டக்களப்பு 23.4 விழுக்காடு. காலி 13.7 விழுக்காடு. அம்பாரை 10.0 விழுக்காடு.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமி 1 இல் உயிர்தப்பிய தமிழ்மக்கள் இப்போது ஸ்ரீலங்கா அரசு  செயற்கையாக உருவாக்கிய சுனாமி 2 ஆல் தாக்கப்பட்டுச் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தெற்கு வாழ்கிறது! வடகிழக்குச் சாகிறது! எம் மக்களது விடிவு எப்போ?


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply