பெனசிர் புட்டோவின் படுகொலையை அடுத்து ஆட்டம் கண்டிருக்கும் பாகிஸ்தான்
இராவல்பிண்டி: நகரில் இன்று (வியாழக்கிழமை) நடந்த மனித தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அரசியல் படுகொலை பாகிஸ்தானில் பதட்டத்தையும் உலகளாவிய அளவில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முழுவதும் பரவலாகக் கலவரம் வெடித்துள்ளது. கராச்சி, பெஷாவார், இராவல்பிண்டி போன்ற நகரங்களில் மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில நாள்கள் இருக்கும் நிலையில் நாட்டில் குழப்ப நிலை உருவாகியுள்ளது. நிலைமையைச் சமாளிக்க முஷ்ராவ் மீண்டும் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் சனவரி 8 இல் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்று தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் இராவல்பிண்டியில் மாபெரும் பேரணியை பெனாசிர் நடத்தினார். பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது. இது தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ளது. பேரணியில் பல்லாயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர். இதையொட்டி இராவல்பிண்டி நகரில் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பாகிஸ்தானில் பல நகர்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என உள்துறை அமைசசு ஏற்கனவே எச்சரிக்கை செய்து இருந்தது.
மேடையில் பேசி முடித்துவிட்டு பெனாசிர் ஊர்தியில் புறப்பட்டபோது அவர் மீது துப்பாக்கச் சூடு நடந்தது. இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது. அதைத் தொடர்ந்து தற்கொலைக் குண்டுதாரி சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க வைத்தான். படுகாயம் அடைந்த பெனசிர் புட்டோ உடனடியாக இராவல்பிண்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் மேலும் 25 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மருத்துவமனை முன் கூடிய பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டனர். “முஷாரப் நாய், முஷாரப்பைக் கொல்’ என்று முழக்கங்களை எழுப்பினர். இது பெனாசிர் புட்டோவின் கொலைக்குப் பின்னால் இராணுவத்தின் கைவரிசை அல்லது முஷாரபின் திட்டமிட்ட். சதி அல்லது இரண்டும் இருப்பதாக மக்கள் கட்சித் தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஒருமுறை தற்கொலைத் தாக்குதலில் இருந்து தப்பிய பெனாசிர் புட்டோவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புக் கொடுத்திருக்க வேண்டும். கொடுக்கத் தவறியதே இந்தச் சாவுக்குக் காரணம் என அவரது ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள்.
இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் 40 தற்கொலைத் தாக்குதல் நடந்தேறியுள்ளன. அதில் 770 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு முழுதும் பாகிஸ்தான் பற்றிய செய்திகள் உலகெங்கும் தலைப்புச் செய்திகளாக வெளி வந்தன. கடந்த கிழமை முஸ்லிம்களது முக்கிய சமய நாளான ஈட் இல் விழாவின் போது பெஷாவாரில் உள்ள ஒரு மசூதியில் தொழுது கொண்டிருந்த மக்களைக் குறிவைத்து ஒரு தற்கொலைக் குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 54 பேர் பலியானார்கள்.
பர்வேஸ் முஷாரப் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து தனது கணவர் ஆசிப் சர்தாரியுடன் இலண்டனில் பெனாசிர் தஞ்சம் புகுந்தார். எட்டு ஆண்டுகள் கழித்து; பர்வேஸ் முஷாரப்வோடு செய்து கொண்ட ஒரு உடன்படிக்கையை அடுத்து கடந்த ஒக்தோபர் 19 ஆம் நாள் நாடு திரும்பினார். கராச்சி நகர் வானூர்தி நிலையத்தில் இருந்து அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் பிரமாண்டமான பேரணியாகச் சென்றார். அப்போது மனித வெடிகுண்டுத் தாக்குல் நடத்தப்பட்டதில் 140 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இருந்து பெனசிர் உயிர் தப்பினார். இம்முறை அவர் பக்கம் அதிட்டம் இருக்கவில்லை.
பெனாசிர் புட்டோவின் படுகொலை அடுத்த மாதம் சனவரி 8 ஆம் நாள் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலைக் கேள்விக்குறிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்தப் படுகொலைக்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை. முன்பு தன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிக்குப் பின்னால் பாகிஸ்தானின் உளவுத்துறையில் இருக்கும் சில சக்திகள் இருந்ததாக பெனாசீர் புட்டோ குற்றம் சாட்டி இருந்தார். அல் கெயிடா உட்பட இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து தனக்குக் கொலைப் பயமுறுத்தல் வந்துள்ளதாகவும் பெனாசிர் புட்டோ தெரிவித்திருந்தார்.
பெனாசிருக்கு பாகிஸ்தானின் பழமைவாதிகளும் அல் கெயிடா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் அவரைக் கடுமையாக எதிரத்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் இராணுவத்திலும் அவருக்கு எதிரிகள் அதிகம் இருந்தார்கள்.
நாடு திரும்பிய பெனாசிர் புட்டோ முஷ்ராப் அவசரகாலத்தைப் பிரகடனப்படு;த்தி உச்ச நீதிமன்ற நீதிபதிகளது பதவிகளைப் பறித்து அவர்களை வீட்டுக் காவலில் வைத்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். மக்களாட்சிப் படுகொலை என்று அதனை வருணித்தார். தனது அரசியல் நிலைப்பாட்டைக் கைவிடாத பெனாசிர் தொடர்ந்து அரசுக்கு எதிரான பேராட்டங்களை பேரணிகளை நடத்தி வந்தார்.
பெனாசிர் புட்டோ ஒரு புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை சுல்பிகார் அலி புட்டோ (Zulfikar Ali Butto) 1979 ஆம் ஆண்டு அப்போது ஆட்சித்தலைவராக இருந்த இராணுவ தளபதி ணுயை ரட-ர்யங ஆல் தூக்கில் போடப்பட்டார். அப்போது அவரது அகவை 51 ஆகும்.
54 அகவை நிறைந்த பெனாசிர் ஒக்ஸ்வோட் மற்றும் ஹாவாட் பல்கலைக் கழகங்களில் படித்தவர். ஒரு முஸ்லிம் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் அவருக்குண்டு. பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருமுறை இருந்திருக்கிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
——————————————————————————————————-
பரபரப்பான கடந்த 6 மாதங்கள்!
யூலை 3 : இஸ்லாமாபாத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த சிவப்பு மசூதியில் இராணுவம் புகுந்து தாக்குதல். நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
யூலை 20 : அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது பற்றி பெனாசிரும், அதிபர் முஷாரப்பும் அபுதாபியில் இரகசிய உடன்பாடு.
ஒக்தோபர் 18 – எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் திரும்பினார் பெனாசிர். வரவேற்பு ஊர்வலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல். 139 பேர் பலி.
ஒக்தோபர் 31 – முஷாரப் அவசரகால நெருக்கடியை நடைமுறைப்படுத்த செய்யத் திட்டமிடுவதாக் பெனாசிர் குற்றம் சாட்டினார்.
நொவெம்பர் 3 : பாகிஸ்தானில் அவசரகால நெருக்டி அறிவித்தல்.
நொவெம்பர் 7 : அவசரகாலத்தை எதிர்த்து பேரணி நடத்தப்போவதாக பெனசிர் அறிவிப்பு.
நொவெம்பர் 9 : பெனாசிருக்கு வீட்டுக்காவல்.
நொவெம்பர் 12 : சனவரியில் பொதுத்தேர்தல் என முஷாரப் அறிவித்தார்.
நொவெம்பர் 13 : முஷாரப் பதவி விலக பெனசிர் வலியுறுத்தல்.
நொவெம்பர் 16 – மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார் முஷாரப்.
நொவெம்பர் 26 : பெனாசிர் வேட்பு மனு தாக்கல்.
டிசெம்பர் 27 : பரப்புரைப் பேரணியில் பெனாசிர் சுட்டுக்கொலை.
————————————————————————————————————–
பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதை ஆட்சியில் இருந்து முஷ்ராவால் கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிவ் கடுமையாகக் கண்டித்துள்ளர். “பெனாசிரின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டது. நாட்டு மக்களின் சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். இது சோதனை மிகுந்த காலம். முஷ்ராவை பதவியில் இருந்து இறக்கும் வரை போராட்டம் தொடரும்” எனச் சூளுரைத்தார்.
பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டதற்கு அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ், உருசியாவின் ஆட்சித் தலைவர் புட்டின், இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் போன்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்க அதிபர் புஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதை ஆட்சித்தலைவர் முஷாரப் கடுமையாகக் கண்டித்துள்ளார். “இதுபோன்ற சூழ்நிலையில், நாட்டு மக்கள் உணர்ச்சி வசப்படாமல் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான எனது நடவடிக்கை தொடரும்” என்றார். மேலும் 3 நாள் தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்காசியாவின் அணுசக்தி நாடான பாகிஸ்தானில் பெனாசிர் புட்டோவின் சாவு அரசியல் உறுதியின்மையை உருவாக்கியுள்ளது. 1947 ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டம் துண்டாடப் பட்ட பின்னர் அதன் எதிர்காலம் இப்போது மங்கலாகக் காணப்படுகிறது.
ஆட்சியை இராணுவப் புரட்சி மூலம் கைப்பற்றிய முஷ்ராவ் அதைத் தக்க வைக்க அரும்பாடு படுகிறார். இப்போது தனது பதவியைக் காப்பாற்ற முஷ்ராவ் பாகிஸ்தான் இராணுவத்தையே நம்பி இருக்கிறார். இராணுவம் புரட்சி மூலம் அவரை அகற்றினால் ஒழிய அவரது பதவிக்கு ஆபத்து இருப்பதாக யாரும் நினைக்க முடியாது. சனவரி 8 ஆம் நாள் நடக்கும் தேர்தலில் அவரது முஸ்லிம் லீக் வெல்லக் கூடிய சாத்தியம் நிறைய இருக்கிறது.
ஆனால் அரசியலில் எதனையும் அறுதியிட்டு எதிர் கூறிவிட முடியாது. இராக்கின் ஆட்சித் தலைவர் தனது அரசு கவிழ்க்கப்பட்டு தானும் கொல்லப்படுவார் எனக் கனவிலும் எண்ணி இருந்திருக்க மாட்டார். அவரது சாவு முஷ்ராவ் உட்பட எல்லாச் சர்வாதிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கிறது.
அண்மையில் உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதியையும் வேறு சிலரையும் பதவியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு அவர்களது இடங்களைத் தனது அடிவருடிகளைக் கொண்டு நிரப்பிய பின்னரே 42 நாள் நீடித்த அவசரகால நிலைமையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இந்த மக்களாட்சி படுகொலையை அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம், கனடா போன்ற மக்களாட்சி நாடுகள் கண்டுகொள்ளவும் இல்லை கண்டிக்கவும் இல்லை. இந்த நாடுகள் தங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டுவிட்டன. இப்போது மட்டுமல்ல 1999 ஆம் ஆண்டு பெர்விஸ் முஷ்ராவ் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய போது தொடக்கத்தில் ஆதரவு தெரிவிக்கப் பஞ்சிப்பட்ட அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த போது தனது இராணுவ நலன் கருதி முஷ்ராவை இறுகத் தழுவிக் கொண்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் இராணுவ ஒத்துழைப்புக்குக் கைமாறாக நிதியுதவியும் இராணுவ ஆயுத தளபாட உதவிகளையும் அமெரிக்கா தாராளமாகச் செய்தது.
அமெரிக்கா தலிபான் மற்றும் அல் கெயிடா தீவிரவாகிகளுக்கு எதிரான போரை விட மேற்காசியா மற்றும் மத்தியா ஆசியாவின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இரான் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முஷ்ராவ் தனது கைப்பாவை என நினைக்கிறது. அந்த நினைப்புக்கு ஏற்ப முஷ்ராவ் நன்றாக நடித்து அமெரிக்காவை ஏமாற்றுகிறார். அந்த நடிப்பை நமபி செப்தெம்பர் 11, 2001 க்குப் பின்னர் அமெரிக்கா பத்து பில்லியன் பெறுமதியுடைய இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை பாகிஸ்தானுக்கு வாரி வழங்கியுள்ளது. அமெரிக்கவிற்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த புதன் கிழமை 300 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் சட்டத்தில் புஷ் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.
ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் பெனாசிர் புட்டோவின் படுகொலைக்கு அமெரிக்கா குறைந்த பட்சம் தார்மீகப் பொறுப்பை ஆவது ஏற்றுக் கொள்ள வேண்டும். பெனாசிர் புட்டோவின் படுகொலை மேலும் பல கொலைகளுக்கு வழிவகுக்கக் கூடும்.
மொத்தத்தில் 16 கோடி மக்கள் வாழும் பாகிஸ்தானின் மக்களாட்சி முறைமையும் அரசியல் உறுதிப்பாடும் பெனசிர் புட்டோவின் படுகொலையை அடுத்து ஆட்டம் கண்டுள்ளது. (உலகத்தமிழர் – டிசெம்பர் 21, 2007)
கொசோவோவின் சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டை போடும் உருசியா
நக்கீரன்
டிசெம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில நாள்களே மிஞ்சி இருக்கின்றன. முன்னர் அறிவித்தபடி டிசெம்பர் 10 க்குள் கொசோவோ தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி எதையும் செய்யவில்லை.
மேற்குலக நாடுகளுக்கும் – உருசியாவிற்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக கொசோவோ அல்பேனியர் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தை மேலும் மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். மூன்று மாதங்கள் முடிவதற்குள் கொசோவோ தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனத்தை செய்யுமா? இதுதான் இன்று உலகத்தின் தலைநகர்களில் கேட்கப்படும் கேள்வி ஆகும்.
1998 – 1999 காலப் பகுதியில் சேர்பிய குடியரசுத் தலைவர் ஸ்லோபோடன் மிலோசிவிக் (Slobodan and Milosovic ) கொசோவோ மீது அடக்குமுறையைக் கையாண்டு இனச் சுத்திகரிப்பை செய்து முடித்தார். அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான கொசோவோ அல்பேனியர்கள் இடம் பெயர்ந்தார்கள். அப்போது நேட்டோ அதில் தலையிட்டு சேர்பியா மீது குண்டுத் தாக்குதலை நடத்தியது. சேர்பிய இராணுவம் கொசோவோவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கொசோவோவில் நேட்டோ – அய்யன்னா கூட்டு ஆட்சி நிறுவப்பட்டது. சேர்பிய நிலப்பரப்பில் கொசோவோ 15 விழுக்காடு கொண்டுள்ளது.
சேர்பியா கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம் மற்றும் உருசியா ஆகிய நாடுகளோhடு பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் அந்தப் பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை. அதன் காலக் கெடுவும் (டிசெம்பர் 10, 2007) முடிந்துவிட்டது.
சேர்பிய அரசுக்கும் கொசோவோ அல்பேனியர்களுக்கும் இடையில் அவுஸ்றியாவில் நடந்த பேச்சு வார்த்தைகள் இணக்கம் காணாது தோல்வியில் முடிந்துள்ளது.
சொசோவோ பற்றி ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு அய்யன்னா விதித்திருந்த காலக் கெடுவும் முடிந்து விட்டது.
சேர்பியா கொசோவோவுக்கு “ர்ழபெ முழபெ” மாதிரி ஒரு அரசியல் தீர்வை முன்வைத்தது. அதன் கீழ் கொசோவோ சுயாட்சி பெற்ற அதே நேரம் சேர்பிய நாட்டின் ஒரு சுயாட்சி அரசாக விளங்கும். ஆனால் இந்த யோசனையை கொசோவோ அல்பேனியர் நிராகரித்து விட்டார்கள்.
தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்வது எளிதான செயல் அல்ல. உலக நாடுகள் அதனை அங்கீகரிக்க வேண்டும். குறிப்பாக அய்யன்னாவின் ஒப்புதல் வேண்டும்.
அய்யன்னாவின் ஒப்புதல் இல்லாமல் நாடுகள் இருக்க முடியாதா? முடியும். 23 மில்லியன் மக்கள் வாழும் தாய்வான் நாட்டை அய்யன்னா அங்கீகரிக்கவில்லை. உலக நாடுகளில் 25 நாடுகள் மட்டுமே அதனை அங்கீகரித்துள்ளன. தாய்வானோடு நல்ல உறவை வைத்துக் கொண்டுள்ள அமெரிக்கா கூட அதனை அங்கீகரிக்கவில்லை. இருந்தும் தாய்வான் 122 நாடுகளோடு உத்தியோகப் பற்றற்ற முறையில் இராசதந்திர உறவுகளை வைத்துள்ளது.
ஒரு நாடு அங்கீகாரம் பெறுவதற்குக் குறைந்தது பத்து அளவைகள் (criteria) தேவைப்படுகின்றன. நிலப்பரப்பு, குடிகள், இறைமை, பொருளாதார கட்டுமானம், கல்விக்கூடங்கள், போக்குவரத்து, காவல்துறை, வெளிநாட்டு அங்கீகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தாய்வானைப் பொறுத்தளவில் அது ஒரு நடைமுறை அரசாக (de facto) மட்டும் இயங்குகிறது.
கொசோவோ தன்னிச்சையாகச் சுதந்திரப் பிரகடனம் செய்தால் அது சங்கிலிக் கோர்வை போன்ற எதிர்விளைவுகளை – போல்கன் பகுதியில் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் – உருவாக்கும் என உருசிய நாட்டு வெளியுறவு அமைச்சர் SergeI Lavrov
மேற்குலக நாடுகளை எச்சரித்துள்ளார். கொசோவோ நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பு அவையில் உருசியாதான் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாகப் பயமுறுத்தி தடை செய்து வருகிறது.
கொசோவோ தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்தால் அதையிட்டு பின்னர் கவலைப்பட வேண்டும் என்று சேர்பியாவும் எச்சரித்துள்ளது. பதினெட்டு இலக்கம் மக்கள் வாழும் கொசோவோ நான்கு பக்கமும் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது.
சேர்பியா கொசோவோ சுதந்திரத்தை அங்கீகரிக்கும் நாடுகளில் இருந்து தனது தூதுவர்களைத் திருப்பி அழைக்கப் போவதாக மிரட்டுகிறது. மின்னாற்றல் வழங்கலையும் வெட்டிவிடப் போவதாகச் சொல்கிறது.
கொசோவோ தனது மின்னாற்றல் தேவையில் 40 விழுக்காட்டை சேர்பியாவிடம் இருந்து தற்போது பெறுகிறது.
சேர்பியா இன்னும் சில படிகள் மேலே சென்று கொசோவோ மாகாணத்தோடு இருக்கும் தனது எல்லைகளை மூடிவிடலாம்.
ஆனால் சேர்பியா அப்படிச் செய்யும் பட்சத்தில் அது கொசோவோவில் வாழும் சேர்பிய சிறுபான்மையினரையும் பாதிக்கும்.
அய்ரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தளவில் சொசோவோ சுதந்திரத்தை ஒரு மனதாக ஆதரிக்கும் நிலையில் இல்லை. இசுப்பானியா, சைப்பிரஸ், கிரேக்கம் மற்றும் சிலோவக்கியா போன்ற நாடுகள் கொசோவோ சுதந்திரப் பிரகடனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
வரலாற்றில் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் வெற்றிபெற்றதாக பதிவு இல்லை என்று இசுப்பானியாவின் வெளியுறவு அமைச்சர் Miguel Angel Moratinos கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொசோவோ ஒரே பார்வையில்
மக்கள் தொகை – 18 இலக்கம்
தலைநகர் – Pristina
ஆட்சித்தலைவர் – Fatmir Sejdiu
தலைமை அமைச்சர் – Agim Ceku (முன்னாள் கொசோவோ விடுதலைப் படைத் தளபதி)
மொழி – அல்பேனியன், சேர்பியன்
சமயம் – இஸ்லாம், கிறித்தவம்
தொலைக்காட்சி – Kosovo Radio & Television (RTK) – public, TV21 – private, KohaVision (KTV) – private
வானொலி – Kosovo Radio-Television (RTK) – public, Radio 21 – private, Radio Dukagjini – private
இயற்கை வளம் – கரி, ஈயம், துத்தநாகம் (zinc) வெள்ளி, குறோமியம்
————————————————————————————————————————-
ஆனால் காலப்போக்கில் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே கொசோவோ சுதந்திரம் தொடர்பாக ஒருமனதான முடிவு எடுக்கப்படலாம்.
உலக வல்லரசான அமெரிக்கா சொசோவோ ஒரு தனிநாடாக உருவாகுவதை முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரம் கொசோவோவில் வாழும் சேர்பிய சிறுபான்மை மக்களுக்கு அரசியல் திட்டத்தில் போதிய சட்ட பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறது.
கொசோவோ தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்வதைத் தவிர்த்து தன்னோடும் அய்ரோப்பிய ஒன்றியத்தோடும் ஒத்துப் போகுமாறு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
இதற்கிடையில் சேர்பியா கொசோவோ சுதந்திரப் பிரகடனம் செய்யும் பட்சத்தில் அது சட்டப்படி செல்லுபடியாகுமா? இல்லையா? என பன்னாட்டு நீதி மன்றத்தை (International Court of Justice) அணுகி அதன் கருத்தைப் பெறப் போவதாக அறிவித்துள்ளது.
கொசோவோ 1999 ஆம் ஆண்டு தொடக்கம் அய்யன்னாவின் பாதுகாப்புக்குள் இருந்து வருகிறது. சொந்தமான அரச இயந்திரம் – பாதி அய்யன்னா பாதி கொசோவோ – இயங்குகிறது. வெளிநாடுகளில் பயணம் செய்வதற்கு அய்யன்னா “பயண ஆவணங்களை” வழங்கி வருகிறது. ஆனால் அவற்றை சேர்பியா கண்டுகொள்வதில்லை.
கொசோவோ நிலப்பரப்பை சேர்பியா தன்னோடு வைத்துக் கொள்ள முயன்றாலும் நடைமுறையில் கொசோவோ சேர்பியாவின் ஒரு உறுப்பாக இன்று இல்லை. சேர்பிய படை 1999 ஆம் ஆண்டே வலுக்கட்டாயமாக நேட்டோ படையால் வெளியேற்றப்பட்டு விட்டது. அப்போது நடந்த சண்டையில் 10,000 அல்பேனியர்கள் இறந்தார்கள். எட்டு இலக்கம் மக்கள் தங்கள் வீடு வாசல்களை கைவிட்டு ஓடினார்கள்.
கொசோவோ, தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்வதை அய்யன்னாவின் தீர்மானம் 1244 தடுக்கவில்லை என வாதாடுகிறது. சேர்பியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டை (territorial integrity) தீர்மானத்தில் முகவுரையில்தான் (preamble) கூறப்பட்டுள்ளது. முகவுரையில் கூறப்படும் வாசகத்துக்கு சட்ட வலுவு கிடையாது என கொசோவோ சொல்கிறது.
கொசோவோ சேர்பியாவின் பிடியில் இருந்து வெகு தொலைவு சென்று விட்டது. கொசோவோவில் வாழும் அல்பேனியர்கள் மீண்டும் சேர்பியாவின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழமுடியாது என்ற முடிவில் இறுக்கமாக இருக்கிறார்கள். ஒரு தாராள தன்னாட்சி அரசியல் அமைப்பின் கீழும் சேர்பியரின் கட்டுப்பாட்டில் கொசொவோ மக்கள் வாழச் சம்மதிப்பார்களா என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது இருக்கிறது (It is impossible to imagine them accepting a return to Serbian control even under the most generous form of autonomy) என கொசோவோ தலைவர்கள் சொல்கிறார்கள்.
கொசோவோ சுதந்திரத்தைத் தள்ளிக் கொண்டே போனால் அது அல்பேனிய முஸ்லிம்களுக்கும் சேர்பிய புராதன கிறித்தவர்களுக்கும் இடையில் மீண்டும் ஒரு இன மோதலை உருவாக்கலாம் என மேற்குலக நாடுகள் அஞ்சுகின்றன.
பொருளாதாரத்தில் மீண்டும் தலை நிமிர்ந்து வரும் உருசியா உலக அரங்கில் தனது நாட்டாண்மையைக் காட்டிக் கொள்ள விரும்புகிறது. தனது பழைய வல்லரசு பதவியைப் பிடிக்க நினைக்கிறது. அதன் வெளிப்பாடே கொசோவோ சுதந்திரத்துக்கு அது போடும் முட்டுக்கட்டை ஆகும். இவற்றால் அமெரிக்க – உருசிய உறவு முன்போல் இல்லாமல் இறங்குமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. கொசோவோ சுதந்திரம் உருசியாவின் தயவின்றி நிறைவேறுவது கடினம் என்பதே இன்றைய நிலைப்பாடாகும். (உலகத்தமிழர் – டிசெம்பர் 21, 2007)
எரித்தியாவின் வீரம் செறிந்த விடுதலைப் போர்
நக்கீரன்
(தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் எரித்தியாவின் போராட்டத்துக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையை இந்தக் கட்டுரை விளக்குகிறது)
அய்க்கிய நாடுகள் அமைப்பு 1945 ஆம் ஆண்டு 54 உறுப்பினர்களோடு தொடக்கப்பட்டது. அதன் பட்டயம் யூன் 26, 1945 இல் கைச்சாத்திடப்பட்டு ஒக்தோபர் 24, 1945 அன்று நடைமுறைக்கு வந்தது. உலகில் அய்க்கிய நாடுகள் அமைப்பு ஒன்றே போர் அல்லது அமைதி இரண்டையும் மேற்கொள்ள அதிகாரம் படைத்த அமைப்பாகும்.
இன்று அய்யன்னாவின் உறுப்பினர் தொகை 192 ஆக உயர்ந்துள்ளது. சென்ற 16 ஆண்டுகளில் மட்டும் 34 நாடுகள் புதிதாகச் சேர்ந்துள்ளன! இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் முன்னைய சோவியத் ஒன்றியம் மற்றும் யூகோசிலாவியா குடியரசைத் சேர்ந்தவை.
எரித்தியா 1993 மே 23 இல் அய்யன்னாவில் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டது. எத்தியோப்பியாவின் பிடியில் இருந்து எரித்தியா விடுதலை பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் தாங்கி குருதி சிந்திப் போராடியது. சுதந்திரத்துக்கு அந்த நாடு உச்ச விலை கொடுத்துள்ளது.
1885 ஆண்டுக்கு முன்னர் இப்போது எரித்திரியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு உள்ளுர் போர்ச் சண்டியர்களால் அல்லது செங்கடல் பகுதியில் செல்வாக்குச் செலுத்திய பன்னாட்டு சக்திகளால் ஆளப்பட்டு வந்தது. 1890 ஆம் ஆண்டு மே மாதத்தில் இத்தாலி செங்கடலில் உள்ள தனது வௌ;வேறு நிலப்பரப்பை ஒருங்கிணைத்து எரித்தியா என்ற பெயரில் ஒரு கொலனித்துவ நாட்டை உருவாக்கியது.
1896 இல் இத்தாலி அண்டை நாடான எத்தியோப்பியா மீது படையெடுக்க எரித்தியாவை ஒரு களமாகப் பயன்படுத்தியது. ஆனால் இத்தாலி மேற்கொண்ட தாக்குதலை எத்தியோப்பியா வெற்றிகரமாக முறியடித்தது. இத்தாலிப் படை தோல்வியைத் தழுவியது. அடுத்த 40 ஆண்டுகள் இந்தத் தோல்வி இத்தாலியின் மனதில் ஒரு ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. 1936 இல் இத்தாலி மீண்டும் எரித்தியாவின் துணையோடு எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எரித்தியாவும் சேர்ந்து கொண்டதால் இம்முறை இத்தாலி போரில் வெற்றிவாகை சூடியது. இதனைத் தொடர்ந்து அபிசீனியா (அய்ரோப்பியர்கள் எரித்தியாவை இப்படித்தான் அழைத்தார்கள்) எரித்தியா மற்றும் சோமாலிலாந்து மூன்றும் சேர்ந்து இத்தாலியின் கிழக்கு ஆபிரிக்கா (Italian East Africa (AOI)
இரண்டாவது உலகப் போரை அடுத்து இத்தாலியின் கொலனித்துவம் முடிவுக்கு வந்தது. பிரித்தானியா எத்தியோப்பியாவில் இருந்து இத்தாலியை வெளியேற்றியது. வெளியேற்றிய பின்னர் மீண்டும் மன்னர் ஹெயிலி செலாஸ்சியை (Haile Selassie) எத்தியோப்பாவின் அரியணையில் ஏற்றியது. இத்தாலி சரண் அடைந்ததைத் தொடர்ந்து எத்தியோப்பியா பிரித்தானியாவின் இராணுவ ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது.
1952 இல் அய்யன்னா அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எரித்திரியாவையும் எத்தோப்பியாவையும் ஒரு இணைப்பாட்சிக்குள் கொண்டுவந்தது. எரித்தியாவின் சுதந்திர நாட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் எரித்தியாவுக்கு ஓரளவு உள்ளக சுயாட்சியும் சில மக்களாட்சி உரிமைகளும் வழங்கப்பட்டன.
ஆனால் இணைப்பாட்சி நடைமுறைப் படுத்தப்பட்ட போது எரித்தியாவின் உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன அல்லது மீறப்பட்டன.
எரித்திரியாவின் சுதந்திரப் போராட்டம்
1962 இல் மன்னர் ஹேயிலி செலாஸ்சி எரித்திரியா நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அதனை எத்தியோப்பியாவோடு வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டார். இது எரித்திரியர்களது சுதந்திரத்துக்கான போரைத் தொடக்கி வைத்தது. 1974 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஹேயிலி செலாஸ்சி அரியணையில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும் சுதந்திரத்துக்கான எரித்தியாவின் போராட்டம் தொடர்ந்தது.
மார்க்ஸ்சிஸ்ட் சார்பான எத்தியோப்பிய அரசின் இராணுவ ஆட்சி படைத்தளபதி மென்ஜிஸ்ட்டு ஹேயிலி மரியம் (Mengistu Haaile Mariam) தலைமையில் இயங்கியது.
1960 களில் எரித்தியாவின் விடுதலைப் போராட்டம் எரித்தியன் விடுதலை முன்னணி (Eritrean Liberation Front) தலைமையில் நடந்தது. 1970 இல் இந்த முன்னணியில் இருந்து சிலர் பிரிந்து சென்று எரித்தியன் மக்கள் விடுதலை முன்னணி (Eritrean நுசவைசநயn People’s Liberation Front (EPLF) என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
1970 ஆம் ஆண்டு கடைசிப் பகுதியில் இபிஎல்எவ் எத்தியோப்பிய நாட்டுக்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு இடையில் முதல் இடத்தைப் பிடித்தது. அதன் தலைவராக இசியாஸ் அவ்வேர்கி (Isiyas Afwerki) செயல்பட்டார். இபிஎல்எவ் எத்தியோப்பிய படைகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை எத்தியோப்பிய படைக்கு எதிராகப் பயன்படுத்தியது.
1977 இல் இபிஎல்எவ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் “இபிஎல்எவ் மட்டுமே எரித்திய மக்களின் ஏகப்பிரதிநிதி ஆவர். அந்த அமைப்பே எரித்திய மக்களின் சார்பில் பேசவல்ல சட்டபூர்வமான அமைப்பு” என அறிவித்தது.
கிழக்கு ஆபிரிக்காவில் பனிப் போர்
1977 இல் எத்தியோப்பிய படையை எரித்தியாவில் இருந்து விரட்டும் நிலையில் இபிஎல்எவ் இருந்தது. ஆனால், அதே ஆண்டு எத்தியோப்பியாவுக்கு சோவியத் போர்த் தளபாடங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் வான்வழியாக கொண்டு சென்று குவித்தது. இதனால் எத்தியோப்பிய படைகள் பின்வாங்குவதை விடுத்து முன்னேறி இபிஎல்எவ் படையணிகளை புதருக்குள் தள்ளியது.
1978 மற்றும் 1986 காலப் பகுதியில் எத்தியோப்பிய அரச படைகள் எட்டுமுறை பாரிய படையெடுப்பை இபிஎல்எவ் க்கு எதிராக மேற்கொண்டது. அத்தனை படையெடுப்புக்களும் இறுதியில் படு தோல்வியில் முடிந்தன. இபிஎல்எவ் மரபுவழி தாக்குதலையும் கெரில்லா தாக்குதலையும் எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக சமகாலத்தில் மேற்கொண்டது.
1978 மே மாதத்தில் எரித்தியாவின் தென்பகுதியில் நிலைகொண்டிருந்த எரித்தியாவின் புரட்சிப் படைகளை அழித்தொழிக்கு முகமாக 100,000 ஆயிரம் எத்தியோப்பிய படை எதிர்த்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது. இபிஎல்எவ் மற்றும் இஎல்எவ் படைகள் மூர்க்கத்தக்கமாக எதிர்த்துப் போராடிய போதும் போர்த்தந்திரமாக பின்வாங்கின. எத்தியோப்பிய படைகள் நகரங்களையும் ஊர்களையும் மீளக் கைப்பற்றியது. எத்தியோப்பிய தாக்குதலில் இஎல்எவ் இயக்கம் பலத்த இழப்புக்கு ஆளானது. அதன் தலைவர்கள் அண்டைநாடான சுடானுக்கு ஓடித் தப்பினார்கள்.
————————————————————————————————————-
ஒரே பார்iவியல் எரித்தியா
நிலப்பரப்பு – 121,320 சதுர கிமீ (46,842 சதுர மைல்)
தலைநகர் – அஸ்மாரா (முன்னர் அஸ்மீரா)
மக்கள் தொகை – 4,786,994 (மேலும் 5 இலட்சம் மக்கள் சுடானில் ஏதிலிகளாக
வாழ்கிறார்கள்)
இனங்கள் – ஒன்பது இனக் குழுக்கள் (Tigrinya, Tigray, Bilen, Afar, Saho, Kunama, Nara, Hidareb and Rashaida)
சமயம் – பாதிப்பேர் கொப்ரிக் கிறித்தவர். எஞ்சியவர்களில் முஸ்லிம் பெரும்பான்மையினர்.
மொத்த உள்ளுர் உற்பத்தி – 4,472,000,000 அ.டொலர்
நாணயம் – நக்வா (Nakfa)
————————————————————————————————————-
1982 இல் எத்தியோப்பியா 6 ஆவது முறையாக எரித்தியாவுக்கு எதிராகப் பாரிய படையெடுப்பை மேற்கொண்டது. எத்தியோப்பிய படையில் 120,000 ஆயிரம் படையினர் இருந்தனர். இந்தப் படையெடுப்புக்கு சிவப்பு நட்சத்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது. இபிஎல்எவ் நடத்திய எதிர்த்தாக்குதலில் 40,000 ஆயிரம் எத்தியோப்பிய படையினர் கொல்லப்பட்டனர். பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 1984 மே மாதத்தில் இபிஎல்எவ் கொமான்டோ படையணி அஸ்மேரா (Asmera) விமான தளத்தைத் தாக்கி இரண்டு சோவியத் ஐஐ-38 கடல் வேவுவிமானங்களை அழித்தது.
1986 இல் அஸ்மேரா விமான தளத்தை இபிஎல்எவ் கொமான்டோ அணி மீண்டும் ஊடுருவித் தாக்கியது. இத்தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டன. ஆயுதக் களஞ்சியங்களும் எரிபொருள் குதங்களும் எரியூட்டப்பட்டன.
1988 இல் இபிஎல்எவ் எரித்தியாவின் வடகிழக்கே அவபெட் (Afabet) என்ற நகரில் அமைந்துள்ள எத்தியோப்பிய படையின் தலைமையகத்தைத் தாக்கிக் கைபற்றியது. அதே சமயம் ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்கள் எத்தியோப்பாவிற்குள் ஊடுருவி தாக்கிக் கொண்டிருந்தார்கள்.
1980 கடைசியில் எத்தியோப்பிய ஆட்சித்தலைவர் மெங்ஜிஸ்டுக்கு (Mengistu) அதனோடான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு உடன்பாடு புதிப்பிக்க மாட்டாது என சோவியத் அறிவித்தது. இந்த அறிவித்தல் எத்தியோப்பிய படையினரது மனவுறுதியை மிகவும் பாதித்தது. இதனைச் சாதகமாக வைத்துக்கொண்டு இபிஎல்எவ் மற்றும் ஆயுதக் குழுக்கள் எத்தியோப்பிய படைகளின் நிலைகளை நோக்கி முன்னேறின.
1991 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இபிஎல்எவ் படை எத்தியோப்பிய அரச படைகளுக்கு எதிரான பாரிய தாக்குதலை மேற்கொண்டது. செங்கடலின் ஓரமாக ஊடறுத்து நகர்ந்த இபிஎல்எவ் படைகள் ஏசெப் (Aseb) நகரின் வாயிலை அடைந்தது. ஏப்ரில் கடைசியில் இபிஎல்எவ் படைகள் அஸ்மேரா, ஏசெப் மற்றும் கேரன் (Keren) நீஙகலாக முழு எரித்தியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
1991 மே 24 இல் அஸ்மேராவில் இரண்டாவது புரட்சிப் படையைச் சேர்ந்த 120,000 எத்தியோப்பிய படையினர் இபிஎல்எவ் படையிடம் சரண் அடைந்தார்கள்.
பேச்சு வார்த்தை
எரித்தியா – எத்தியோப்பியா இரண்டுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கு அமெரிக்கா அனுசரணை வழங்கியது. 1991 மே மாதம் மெங்ஜிஸ்து அரசு கவிண்டது. மே நடுவில் மெங்ஜிஸ்து ஆட்சிப் பொறுப்பை ஒரு காப்பந்து அரசிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டோடி சிம்பாவே (Zimbawe) நாட்டில் அரசியல் புகலிடம் கோரினார்.
மே மாதக் கடைசியில் இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையில் இலண்டனில் பேச்சுவார்த்தை நடந்தது. இபிஎல்எவ் உட்பட நான்கு போராளிக் அமைப்புக்கள் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றின.
எத்தியோப்பிய படைகளைக் களத்தில் புறமுதுகு கண்ட இபிஎல்எவ் தமது தாயகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மே 1991 இல் இபிஎல்எவ் சுதந்திரம் பற்றி ஒரு நேரடி வாக்கெடுப்பு எடுத்து ஒரு நிரந்தர அரசை அமைக்கும் வரை நாட்டை ஆள எரித்திய இடைக்கால அரசை (Provisisional Government of Eritrea) நிறுவியது. அரசுத்தலைவராக இபிஎல்எவ் தலைவர் இசையாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார். இபிஎல்எவ் இன் மத்திய குழு சட்டசபையாக மாறியது.
அமெரிக்க ஆதரவு
யூலை 1-5, 1991 ஆம் ஆண்டு ஒரு உயர்மட்ட அமெரிக்க குழுவொன்று எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபா (Addis Ababa) போய்ச் சேர்ந்தது. அங்கு இத்தியோப்பியாவில் ஒரு இடைக்கால அரசை நிறுவு முகமாகக் கூட்டப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டது. இபிஎல்எவ் இந்த மாநாட்டில் ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டது. இடைக்கால அரசோடு எரித்திய – எத்தியோப்பிய இடையியலான உறவு பற்றிப் பேச்சு வார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் எரித்திய சுதந்திரம் பற்றி மக்களிடம் ஒரு நேரடி வாக்கெடுப்பு நடத்துவதற்கு எத்தியோப்பியா ஒப்புக் கொண்டது.
ஒரு காலத்தில் இபிஎல்எவ் போராளிகள் மார்க்சீச சித்தாந்தத்தை கைக்கொணடிருந்தாலும் மெங்ஜிஸ்துக்கு சோவியத் கொடுத்த ஆதரவு அவர்கள் சோவியத்திடம் உதவி கேட்பதற்குத் தடையாக இருந்தது. மேலும் சோவியத் ஒன்றியத்திலும் அதன் கிழக்கு அய்ரோப்பிய நேச நாடுகளிலும் பொதுவுடமை ஆட்சி முடிவுக்கு வந்தது அத்தகைய ஆட்சி முறை எரித்தியாவிலும் தோல்வியில் முடியும் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்தியது.
எரித்தியாவுக்கு சுதந்தரம்
1993 ஏப்ரில் 23-25 நாள்களில் நடந்த நேரடி வாக்கெடுப்பில் எரித்தியா எத்தியோப்பிய நாட்டில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாறவேண்டும் என்பதற்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்கள். சுதந்திரமான இந்த நேரடி வாக்கெடுப்பு அய்யன்னா கண்காணிப்பில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து எரித்திய தலைவர்கள் எரித்தியாவின் சுதந்திரத்தை ஏப்ரில் 27 இல் பிரகடனப்படுத்தினார்கள். எரித்திய மக்கள் அந்த சுதந்திரத்தை மே 24 இல் அதிகாரபூர்வமாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். (உலகத்தமிழர் – நொவெம்பர் 23,2007)
பிரர்த்திக்கும் உதடுகளைவிட கொடுக்கும் கை புனிதமானது!
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது ஒப்புக்குச் சொல்லும் வார்த்தைகள் அல்ல. ஒரு உலகறிந்த இராசதந்திரியை நாம் இழந்துவிட்டோம். சிறந்த சிந்தனையாளனை இழந்து விட்டோம். எந்த நெருக்கடிக்குள்ளும் சிரித்த முகத்தோடும் மயக்கும் புன்னகையோடும் வலம் வந்த ஒரு மானிடனை இழந்து விட்டோம்.
தமிழீழத் தேசியத தலைவர் பிரபாகரன் தான் வளர்த்தெடுத்த ஒரு நல்ல தம்பியை இழந்து விட்டார்.
உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். கோடான கோடி மக்கள் பிறந்து பின்னர் இறக்கிறார்கள். இந்தக் கோடான கோடி மக்களில் உலகம் ஒரு சிலரைத்தான் நினைவில் வைத்திருக்கிறது. எஞ்சியவர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள்.
சித்தர்களும் முக்தர்களும் மரணம் இயற்கை என்றார்கள். பிறப்பு எப்படி இயற்கையோ அதே போல் பிறந்தவை யாவும் இறப்பதும் இயற்கை என்றார்கள்.
ஞானிகளும் யோகிகளும் சித்தர், முக்தர், ஞானிகள், முனிவர்கள் எல்லோரும் சாவை புறங்காண எதையெதையோ செய்து பார்த்தார்கள். மூச்சை அடக்கிப் பார்த்தார்கள். மோனத்தில் இருந்து பார்த்தார்கள். காயகல்ப்பம் உண்டு பார்த்தார்கள். ஆனால் சாவை வெல்ல முடியவில்லை.
“புத்தன், யேசு, முகமதுநபி, இராமன், சங்கரர், இராமநுஜர் எல்லோருமே மாண்டு போனார்கள். நான் மட்டும் பார் மீது சாகாதிருப்பேன்” என்று பாரதி முழங்கினார்.
“காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! – என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்”
என்று காலனுடன் பாரதியார்வீரம் பேசினார்.
நொந்த புண்ணைக் குத்துவதால் பயனொன்றில்லை
நோ யாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்!
பார்மீது நான் சகா திருப்பேன், காண்பீர்! (பாரதியார் சுயசரிதை)
ஆனால் ‘மரணத்தை வெல்வது எப்படி?’ என்று உபாயம் சொன்ன மகாகவி பாரதி கூட அந்த மரணத்தை வெல்ல முடியவில்லை! தனது முப்பத்தொன்பதாவது அகவையில் அந்தக் காலன் என்ற பாபி அவரைக் கூட்டிச் சென்றான்.
சாவு மனிதனுக்கு உலகம் தொடங்கிய காலம் தொட்டே ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்தப் புதிரை யாரும் இன்னும் அவிழ்த்த பாடாக இல்லை. மரணத்தின் பின் (மறு) பிறப்பு உண்டா? உண்டு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் மறுபிறப்பு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்.
கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா,
இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லைஇல்லை இல்லையே! (சித்தர் பாடல்கள்)
எது எப்படியோ இறந்தவர் யாரும் மீண்டு வந்து இந்தக் கேள்விக்கு இதுவரை விடை சொல்லவில்லை!
மனிதன், உலகம், அண்டம், கடவுள் இவற்றுக்கு இடையில் உள்ள உறவை விளக்க எழுந்த வேதாந்தங்களும் சித்தாந்தங்களும் இந்தச் சிக்கலான முடிச்சை அவிழ்க்க மனிதனால் எழுதப் பட்டவையே. மனிதனை நம்ப வைக்க அவை கடவுளால் அருளப்பட்டன எனப் புனைந்துரைத்தார்கள். கடவுளால் அருளப்பட்டிருந்தால் ஒரு சமயம், ஒரு கடவுள், ஒரு வேதம், ஒரு சித்தாந்தம் மட்டுமே இருந்திருக்கும்.
மனிதர்களை விட்டுவிடுவோம். ஒரு போர் வீரனுக்கு எப்படியான சாவு நேர வேண்டும்? வள்ளுவர் அதற்கு விடை அளிக்கிறார்.
புரந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின், சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. (அதிகாரம் 78 படைச்செருக்கு (குறள் 780)
தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து அரசன் கண்கள் நீர்பெருகப் போரில் உயிர்நீக்கப் பெற்றால் அந்கச் சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளும் தகுதியுடையது என்பது இக் குறளின் பொருளாகும்.
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் திருவள்ளுவர் சொல்லும் சாவை இரந்து பெற்றுள்ளார். அதற்கு தேசியத் தலைவர் மாண்புமிகு பிரபாகரன் தமிழ்ச்செல்வனது சாவுக்கு இரங்கி வெளியிட்ட இரங்கலுரை சான்றாக அமைந்துள்ளது.
“தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன்.
இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.
தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.
“நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.”
“எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன்” என்ற வார்த்தைகள் தேசியத் தலைவர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீது வைத்திருந்த ஆழமான அன்பையும் பாசத்தையும் பறைசாற்றுகிறது. பதினேழாவது அகவையில் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தமிழ்ச்செல்வன் 23 ஆண்டுகள் தலைவரின் அரவணைப்பில் இருந்தார்.
இயக்கம் என்ற பல்கலைக் கழகத்தில் புடம் போடப்பட்டு வார்த்து எடுக்கப்பட்டார். தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக தமிழீழ மக்களது மனங்களை மட்டும் அல்ல உலகளாவிய தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட வீரனாகவும் இராசதந்திரியாகவும் தமிழ்ச்செல்வன் விளங்கினார்.
பேச்சு மேடையில் அவர் புன்னகை பூத்த முகத்துடன் வீற்றிருந்த காட்சியைப் பார்த்துப் பூரிப்படைந்தோம். பெருமைப்பட்டோம்.
வீரச் சாவைத் தழுவிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் புகழ் உடல் உரிய மதிப்போடு புதை குழியில் விதைக்கப்பட்டு விட்டது. மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். கவிஞர்கள் சொற்பூக்கள் தொடுத்து பாமாலை கட்டினார்கள். வீரவணக்கக் கூட்டங்களில் மக்கள் கடல் அலையெனத் திரண்டு தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் இவை மட்டும் போதுமா?
தமிழினம் இனவெறி பிடித்த ஒரு சிங்கள – பவுத்த ஆட்சியின் கீழ் அகப்பட்டுத் தவிக்கிறது.
எமது மக்கள் சொல்லொணாத் துன்பங்களையும் இன்னல்களையும் இடர்களையும் நாளும் பொழுதும் சந்தித்துக் கொண்டு இருக்கிறர்கள்.
தென் தமிழீழத்தில் இடம்பெயர்ந்த 300,0000 இலட்சம் மக்களில் பாதிப்பேர் இன்னும் மீள் குடியமர்த்தப்படவில்லை. குறிப்பாக மூதுர் கிழக்கில் உள்ள சம்பூர், தோப்பூர், பாட்டாளிபுரம், நல்லூர் போன்ற 12 ஊர்களைச் சேர்ந்த சுமார் 14,000 மக்கள் மீள் குடியமர்த்தப்படாமல் மரங்களின் கீழும் வீதி ஓரங்களிலும் தற்காலிக கொட்டில்களில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஊர்கள் சிங்களப் படையால் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணக் குடாநாடு திறந்தவெளி சிறைச்சாலையாக சிங்கள இராணுவத்தினால் மாற்றப்பட்டுள்ளது. உயிரைக் காப்பாற்ற மக்களே முன்வந்து தங்களை சிறைச்சாலையில் அடைக்குமாறு நீதிமன்றங்களை நாடி ஓடுகிறார்கள்.
“வட-கிழக்கில் நாளாந்தம் 5 பேர் கொல்லப்படுகிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள். கடந்த சனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை இலங்கையில் 14 மனிதவுரிமை மற்றும் சமய தொண்டர்கள் காணமல் போயுள்ளார்கள். இதே காலப்பகுதியில் 662 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 540 பேர் காணமல் போயுள்ளார்கள். 25 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார்கள். 43 குழந்தைகள் காணாமல் போயுள்ளார்கள்” இவ்வாறு சட்டம் மற்றும் அவை Law and Society (LST) என்ற அமைப்பு மனிதவுரிமை மீறல்களை விசாரணை செய்யும் ஆட்சித்தலைவர் ஆணையத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.
எனவே எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழ்மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் தங்களது மனித வளத்தையும் பொருள்வளத்தையும் திருவிழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் வீணாக்காமல் எங்கள் மக்களை சிங்கள – பவுத்த இனவாத கொடிய அரசின் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற ஒருமுகப் படுத்த வேண்டும்.
விடுதலை என்பது சும்மா கொண்டு வந்து தருவதற்கு அது சுக்குமல்ல மிளகுமல்ல என்பதை நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
தாயகக் கனவுகளை நெஞ்சினில் ஏந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது தோழர்களும் எங்கள் நெஞ்சில் கடலும் காற்றும் வானும் மதியும் உள்ளவரை நீடித்து நிலைத்து இருக்கும்.
இந்த மாவீரர்களுக்கு நாம் எழுப்பப் கூடிய மிகப் பெரிய நினைவாலயம் அவர்கள் கண்ட தமிழழீழக் கனவை நினைவாக்குவதுதான். அதைச் செய்து முடிக்க நாங்கள் ஒவ்வொருவரும் சூளுரைப்போம்! (உலகத்தமிழர் – நொவெம்பர் 09, 2007)
சீன வல்லரசின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் திபேத்தின் எதிர்காலம் என்ன?
உலகில் பாவப்பட்ட இனங்களின் பட்டியலைத் யாராவது தயாரித்தால் அதில் திபேத்தியர்கள்தான் முதலிடத்தைப் பிடித்துக் கொள்வார்கள்.
1949 ஆம் ஆண்டு மாசே துங்கின் தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சி சீனாவில் வெற்றி வாகை சூடியது. அதன் மூலம் 1927 ஆம் ஆண்டு முதல் தளபதி சியாங் காய் சேக் (Chiang Kai – shek ) தலைமையிலான அமெரிக்க சார்பு வலதுசாரிக் கட்சியான சீன தேசியக் கட்சிக்கும் உருசிய சார்பு சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மெரிக்காவின் செல்லப்பிள்ளையான சியாங் காய் சேக் சீனாவைக் கைவிட்டு தாய்வானுக்கு ஓடித் தப்பினார். அடுத்த ஆண்டு (1950) செஞ்சீனாவின் படைகள் திபெத் மீது படையெடுத்து அதனை எதிர்ப்பின்றி எளிதில் கைப்பற்றிக் கொண்டது. அன்றிலிருந்து இன்றுவரை திபெத் சீன நாட்டின் இரும்புப் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
திபேத்தை உடும்புப் பிடிக்குள் வைத்திருப்பதற்கு செஞ்சட்டைக் காரர்கள் சொல்லும் காரணம் “திபேத் சீனாவின் ஒரு பகுதியாக பல நூற்றாண்டு காலம் இருந்தது” என்பதுதான். ஆனால் உண்மை அதுவல்ல. வரலாற்றின்படி திபேத் சுதந்திர நாடாகப் பல நூற்றாண்டு காலம் இருந்திருக்கிறது.
சீனா திபேத் மீது படையெடுத்துத் தனது கட்டுப்பாட்டில் அதனைக் கொண்டு வந்தபோது உலகின் எந்தவொரு நாடும் சீனாவைத் தட்டிக் கேட்கவில்லை. அண்டை நாடான இந்தியா சரி, உலக வல்லரசுகளில் (அன்று) ஒன்றான அமெரிக்கா சரி, பிரித்தானியா சரி எல்லா நாடுகளும் வாலைக் கால்களுக்கு இடையில் சுருட்டி வைத்துக் கொண்டு விட்டன. என்ன காரணம்?
சீனாவும் ஒரு சண்டியன் என்பதே காரணமாகும். அமெரிக்கா போன்ற வல்லரசு தன்னைவிடப் பலம் குறைந்த அல்லது இளைத்த நாடுகளைப் பார்த்துத்தான் சண்டைக்குப் போகிறது.
மேலும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் வி.புலிகள், ஹமாஸ் போன்ற விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளன. கேட்டால் சிக்கல் எதுவாக இருந்தாலும் அதில் நியாயம் இருந்தாலும் ஆயுதம் எடுத்துப் போராட எந்தவொரு இனத்துக்கும் உரிமை இல்லை என்கின்றன. ஆயுதம் எடுத்துப் போராடுகிறவர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள். அதில் நல்ல பயங்கரவாதிகள் கெட்ட பயங்கரவாதிகள் என்ற பாகுபாடு இல்லை என்கின்றன.
எல்லாவற்றையும் அமைதி வழியில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். “வி.புலிகள் வன்முறையைப் பேச்சிலும் செயலிலும் கைவிட்டு மக்களாட்சிக்குத் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பினால் மட்டுமே அவர்களைப் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்குவது பற்றி அமெரிக்கா ஆலோசிக்கும்” என அமெரிக்க இராசதந்திரிகள் ஓயாது ஒழியாது பேசி வருகிறார்கள். ஒரு வாதத்துக்கு ஒரு கணம் அதனை ஒப்புக்கொள்ளுவோம்.
திபேத் நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கடந்த 57 ஆண்டுகளாக அகிம்சை வழியில் தனது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டு வருகிறார். ஆயிரக்கணக்கான திபேத்தியர்கள் அகதிகளாக இந்தியா, நேப்பாளம் போன்ற அண்டை நாடுகளில் வாழ்கிறார்கள். கனடாவிற்கு 5,000; திபேத்தியர்கள் குடியேறி உள்ளார்கள். ஆனால் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் அகிம்சைப் போராட்டம் வெற்றிபெறவில்லை. வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் இந்தக் கணம் வரை இல்லை.
ஒரு கோடி திபேத் நாட்டு மக்கள் இனத்தால் மதத்தால் மொழியால் பண்பாட்டால் வேறுபட்டவர்கள். ஒரு காலத்தில் சீனாவின் ஆட்சியின் கீழ் அந்த நாடு சிக்குண்டிருந்தாலும் இன்று மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தினால் வேறுபட்ட அந்த மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது?
ஆயுதத்தைத் தூக்காதே வன்முறை வழியைக் கைவிடு என்று சொல்லும் அமெரிக்கா போன்ற வல்லரசு திபேத்தின் விடுதலைக்கு ஏன் உருப்படியாக ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடவில்லை?
அமெரிக்கா சீனாவை எதிர்க்காதது மட்டுமல்ல அதோடு உறவை வளர்த்துக் கொள்ளவும் முதலீடு செய்யவும் வாணிகத்தை விருத்தி செய்யவும் ஒற்றைக் காலில் நிற்கிறது!
அமெரிக்கா தனது வணிக நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. கடந்த ஆண்டு வானூர்தி தயாரிப்பு நிறுவனமான போயிங் (Boeing Company) குழுமத்தோடு சீனாவிற்கு எண்பது 737 ரக வானூர்திகளை விற்க ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றின் பெறுமதி 460 கோடி (யுகூ4.6 டிடைடழைn) அமெரிக்க டொலர்களாகும்! அதற்கு முன்னர் எழுபது அதே ரக 737 போயிங் வானூர்திகளை விற்பதற்கு ஒப்பந்தம் எழுதப்பட்டது. ஆக மொத்தம் 150 வானூர்திகளை போயிங் குழுமம் சீனாவுக்கு விற்றுவிட்டது.
அடுத்த சில ஆண்டுகளில் போயிங் நிறுவனம் சீனாவிற்கு 1970 கோடி அ. டொலர் பெறுமதியான மொத்தம் 2,400 வானூர்திகளை விற்கலாம் என எதிர்பார்க்கிறது.
சீனா 85ஈ000 கோடி (850 பில்லியன்) கோடி பெறுமதியான அமெரிக்க திறைச்சேரி துண்டுகளில் ( வுசநயளரசல டீடைடள) முதலீடு செய்துள்ளது.
இதிலிருந்து சீனாவுடன் வாணிகமா? திபேத்தின் சுதந்திரமா? என வந்தால் அமெரிக்காவின் தெரிவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இப்போது தலாய் லாமா கனடாவுக்கு 3 நாள் பயணத்தை மேற்கொண்டு இங்கு வந்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஒக்தோபர் 28, 2007) கனடாவுக்கு வருகை தந்த திபேத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவைக் கனடிய பிரதமர் ஸ்ரீபன் ஹார்ப்பர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 40 மணித்துளிகள் நீடித்தது. கனடா நாட்டின் பிரதமர் ஒருவர் தலாய் லாமாவைச் அரச மரியாதையோடு சந்தித்துப் பேசியது இதுவே முதல் தடவை ஆகும். இதற்கு முன் இருந்த பிரதமர்கள் எவரும் தலாய் லாமாவை அரச மரியாதையோடு சந்திக்கவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் போல் மாட்டினை தலாய் லாமா சந்தித்தார். ஆனால் அந்தச் சந்திப்பு அரசியல் பக்கசார்பற்ற நடுநிலை நிலப்பரப்பில் இடம் பெற்றது. அந்த இடம் ஒட்டாவா உரோமன் கத்தோலிக்க ஆயரது இல்லமாகும்.
சீனா, பிரதமர் ஹார்ப்பர் தலாய் லாமாவை அரசமுறையில் சந்தித்ததை இரசிக்கவில்லை. ஒட்டாவாவில் உள்ள சீன தூதரகம் ஒரு எச்சரிக்கை அறிக்கையை விட்டது. “சீனாவின் உள்நாட்டு அலுவல்களில் தலையிடுவதை நிறுத்துங்கள். கனடா – சீனா உறவை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கைகளை எடுங்கள்” என திங்கள் மாலை நடந்த செய்தியாளர் மாநாட்டில் சீன தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார். சீனா தலாய் லாமாவை பிரிவினை கோரும் ஒரு அரசியல்வாதி என்றும் துரோகி என்றும் வசை பாடுகிறது.
ஆப்கானிஸ்தான் உள்றாட்டுப் போரில் கனடா வகிக்கும் பங்கைப் பற்றிக் கேட்ட போது தலாய் லாமா “அமைதியான வழியில் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதுதான் சரியான வழி” என்று விடை அளித்தார். “வன்முறையைப் பயன்படுத்தல் எதிர்மறை வன்முறையை உருவாக்கும். அதனால் சில சமயம் சிக்கல் இன்னும் மோசம் அடையலாம்” என்றார்.
14 ஆவது தலாய் லாமாவின் இயற் பெயர் தென்சின் கையாட்றோ (Temzom Gyatro) ஆகும். அவருக்கு அகவை 72. அவர் திபேத்தில் 1935 ஆம் ஆண்டு ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாயாருக்கு 16 பிள்ளைகள். அதில் ஏழு மட்டும் தப்பின. 13 ஆவது தலாய் லாமா 1933 ஆம் ஆண்டு மறைந்த போது திபேத் நாட்டின் வழக்கப்படி அவரது வாரிசைத் தேடி ஊர் ஊராகப் புத்த தேரர்கள் சென்றபோது அப்போது 3 அகவை நிறைந்த கையாட்றோவை 14 ஆவது தலாய் லாமாவாக தெரிவு செய்தனர். ஆண்டுக் கணக்கான பயிற்சிக்குப் பின்னர் அவரது 15 ஆவது அகவையில் திபேத்தின் 60 இலட்சம் மக்களின் ஆட்சித் தலைவராக அறிவிக்கப் பட்டார்.
1959 ஆம் ஆண்டு சீனாவின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட கிளர்ச்சி தோல்விகண்டதை அடுத்து தலாய் லாமா இந்தியாவுக்குத் தப்பி ஓடி அரசியல் அடைக்கலம் கேட்டார். இன்று இந்தியாவில் ஒரு இலட்சம் திபேத்தியர் ஏதிலிகளாக வாழ்கிறார்கள்.
1966-76 ஆண்டு சீனாவை உலுக்கிய பண்பாட்டுப் புரட்சியின் போது திபேத்தில் இருந்த பவுத்த விகாரைகள் வெறிபிடித்த செஞ்சட்டை காவலர்களால் (Red Guards) தகர்க்கப்பட்டன.
“திபேத்தில் பரத்தன்மை (விபசாரம்) சூதாட்டம், மதுபானக் கடைகள் ஆகியவற்றை சீன அரசு ஊக்குவிக்கிறது. இதனால் திபேத் மக்களது சமூக அளவுகள், தார்மீக விழுமியங்கள் சீரழிக்கப்படுகின்றன. சுருங்கச் சொன்னால் சீனா திபேத்தில் பண்பாட்டுப் படுகொலை ஒன்றை அரங்கேற்றி வருகிறது. இவை யாவும் திபேத்தின் நாகரிகத்தை அழிப்பதோடு சீனாவின் இனவாத மற்றும் பண்பாட்டு அகந்தையை பறைசாற்றுவதாக உள்ளது” எனத் தலாய் லாமா சீனா மீது குற்றம் சாட்டுகிறார்.
தலாய் லாமா சீனாவின் தலைவர் மா சே துங்கை இருமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார். இரண்டாவது தடமை தலாய் லாமா மாவோவைச் சந்தித்த போது “மதம் மக்களது அபின்” என்ற கார்ல் மார்க்சின் பொன்மொழியை அவருக்கு நினைவூட்டினார். அதைக் கேட்ட தலாய் லாமா மிகவும் சங்கடப்பட்டுப் போனார்.
தலாய் லாமா பெரும்பாலும் வெளிநாடுகளில் பயணம் செய்து திபேத்தின் தன்னாட்சி உரிமைக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவர் கனடா நாட்டின் கவுரவ குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா வந்து இறங்கிய அன்றே தலாய் லாமா ஒட்டாவா பொதுமக்கள் மையத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் பேசினார். அண்ணளவாக 8,000 மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
“நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சி, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, வெற்றிகரமான வாழ்க்கையை விரும்புகிறோம்” எனத் தலாய் லாமா அறிவுரை வழங்கினார். எல்லா உயிரினங்களிடமும் கருணை காட்டுங்கள் என்ற செய்தியைச் சொன்னார். புத்தர் சொன்ன போதனையும் இது.
அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைபற்றியும் விமர்ச்சிக்க தலாய் லாமா தவறவில்லை. இராக் போர் பற்றி தனக்கு “மனத்தடங்கல்” இருப்பதாகச் சொன்னார்.
தலாய் லாமா ரொறன்ரோ றோஜர்ஸ் மையத்தில் நடந்த கூட்டத்தில் புதன்கிழமை பேசினார். தோராயமாக 10,000 மக்கள் கலந்து கொண்டார்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிக்கும் தலாய் லாமா ஒரு மணித்தியாலம் பேசினார். கனடிய திபேத்தியர் அவரிடம் ஆசி பெற ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்றார்கள்.
கனடிய CTV தொலைக்காட்சியில் தோன்றிய தலாய் லாமா 2008 இல் சீனாவில் நடக்கும் ஒலிப்பிக்ஸ் போட்டியின் போது கனடா திபேத் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சீனா ஒரு முக்கிய பொருளாதார மையமாக உருவாகி வருகிறது. சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வாணிகம் துரித கதியில் வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே கனடா தலாய் லாமாவுக்கு அரசியல் தளத்தில் ஆதரவு நல்காமல் இராசதந்திர மட்டத்தில் ஆதரவு வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் நினைக்கிறார்கள். அதாவது களக்கூத்தாடி கயிற்றில் நடப்பது போல நடக்க கனடா முயற்சி செய்யும்.
கனாடா வருமுன் அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ் அவர்களை தலாய் லாமா வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். அமெரிக்கப் பேரவை ( American Congress) அவருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பேரவைத் தங்கப் பதக்கம் (Congressional Gold Medal ) அளித்து மேன்மைப் படுத்தியது. இந்த மாதிரியான தங்கப் பதக்கத்தைப் பெறும் 146 ஆவது மனிதர் தலாய் லாமா ஆவார். இந்தத் தங்கப் பதக்கம் சீனாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
யாரும் எதிர்பாராத விதமாக ஆட்சித் தலைவர் புஷ் தலாய் லாமாவோடு தனிப்பட்ட சிறப்பு சந்திப்பை (ஒக்தோபர் 16) வைத்துக் கொண்டார் என்பதும் கவனத்துக்குரியது.
அய்ம்பது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் திபேத் சிக்கலை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்த்து வைக்குமாற ஆட்சித் தலைவர் புஷ் அவர்களும் அமெரிக்க பேரவையும் முன்னரைவிட காட்டமாக சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால் சீனாவோ தலாய் லாமாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா திரைமறைவில் கொடுத்து வரும் ஆதரவு திபேத்தை சீனாவிடம் இருந்து பிரிக்கும் சூழ்ச்சி எனக் குற்றம் சாட்டுகிறது. திபேத்தியர்களது தன்னாட்சி உரிமையை சீனா முற்றாக மறுக்கிறது. அது அவர்களுக்குத் தேவையில்லை எனச் சீனா சொல்கிறது. திபேத் மக்கள் சீன ஆட்சியின் கீழ் “மகிழ்ச்சி” ஆக வாழ்கிறார்கள் நாடு நவீனப்படுத்தப்படுகிறது என்று சீனா சொல்கிறது.
பவுத்த துறவியான தலாய் லாமா உலகம் போற்றும் தலைவராக வலம் வருகிறார். ஒரு உண்மையான பவுத்த தேரர் என்ற முறையில் தலாய் லாமா மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். அவரிடம் ஒரு முறை ஒரு மதபோதகர் “மதசார்பின்மைக் கொள்கை மதத்தின் எதிரி” என்று சொன்னார். தலாய் லாமா அதனை ஏற்க மறுத்தார். மதசார்பின்மைக் கொள்கை எல்லா மதங்களையும் மதிக்கிறது. எந்தவொரு மதமும் பிறிதொரு மதம்மேல் மேலாண்மை செலுத்துவதை மதசார்பின்மைக் கொள்கை ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்.
கனடா பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்து 16 ஆவது பெனடிக் பாப்பாண்டவரை (Pope Benedict XVI) எதிர்வரும் டிசெம்பர் மாதம் சந்திக்க இருக்கிறார்.
தலாய் லாமா செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்புக் கொடுக்கப்படுவது உண்மைதான். அவர் அகிம்சையின் சிறப்புப் பற்றி மணிக்கணக்கில் பேசுவது சரிதான். ஆனால் இந்த வரவேற்பு உபசாரம் வாய்ப் பேச்சு எல்லாம் திபேத்தை சீனாவின் கோரப் பிடியில் இருந்து விடுவிக்க உதவுமா? அதாவது ஏட்டுச் சுரைக்காய் கறிசமைக்க உதவுமா?
தலாய் லாமாவுக்கு 72 அகவை நடக்கிறது. அவருக்குப் பின் யார் அவரது வாரிசு என்பது அவருக்கே தெரியாது. சீன திபேத்தின்; இனவாரி மக்கள் தொகையை மாற்றி அமைப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. திபேத்தில் இன்று திபேத்தியர்களைவிட சீனர்களே அதிகமாக வாழ்கிறார்கள். இதனால் திபேத்தியரது வாழ்க்கை முறை பலத்த மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. அரசியல் அதிகாரம் சீனர்களது பிடிக்குள் போய் விட்டது.
சீனா வல்லரசின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் திபேத்தின் எதிர்காலம் என்ன? (உலகத்தமிழர் – நொவெம்பர் 02,2007)
மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சிப் பிரதமர் டால்ரன் மக்கின்ரி சாதனை
நக்கீரன்
தேர்தலில் வென்றால் கொண்டாட்டம். தோற்றால் திண்டாட்டம். அதுதான் பொது விதி. ஒன்ராறியோ தேர்தல் அதற்கு விதி விலக்கல்ல. வென்றவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கத் தோற்றவர்கள் சோகக் கடலில் மூழ்கிப் போயிருக்கிறார்கள்!
தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் தொடக்கத்தில் லிபரல் கட்சிக்கும் முற்போக்கு பழைமைவாதக் கட்சிக்கும் இடையில் ஆதரவு விழுக்காடு மிக நெருக்கமாக இருக்கிறது எனத் தெரிவித்தன. தேர்தல் பரப்புரை சூடுபிடித்த போது இந்த நெருக்கம் குறைந்து இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது.
கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தவாறே லிபரல் கட்சி 107 தொகுதிகளில் போட்டியிட்டு 71 தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளது. வாக்காளப் பெருமக்கள் ஆட்சி அதிகாரத்தை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு லிபரல் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்துள்ளார்கள். வாக்களிப்பு முடிந்த அடுத்த ஒரு மணிக்குள் வெளிவந்த முடிவுகள் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறது என்பதைக் கட்டியம் கூறின. கடந்த 70 ஆண்டுகளில் லிபரல் கட்சித் தலைவர் ஒருவர் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றிவாகை சூடியிருப்பது இதுவே முதல் தடவை. இதற்கு முன்னர் Mitch Hepburn என்பவர் 1937 ஆம் ஆண்டு அடுத்தடுத்து இருமுறை வென்று சாதனை படைத்தார். கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளும் வெற்றிபெற்ற இருக்கைகளும் பின்வருமாறு.
2007 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் முடிவுகள்,
கட்சி |
கட்சித் தலைவர் |
வேட்பாளர் எண்ணிக்கை |
|||||||
2003 |
2007 | %; 2003 | % 2007 |
% மாற்றம் |
|||||
லிபரல் | டால்ற்ரன் மக்கென்சி |
107 |
67 | 71 | 46.4 | 42.20 |
-4.20 |
||
முற்போக்கு பழைமை வாதக் கட்சி | யோன் ரோறி |
107 |
26 | 26 | 34.6 | 31.60 |
-5.00 |
||
புதிய மக்களாட்சிக் கட்சி | ஹோவாட் கம்ரன் |
107 |
10 | 10 | 14.7 | 16.89 |
+2.19 |
||
பசுமை | பிராங் டி ஜொங் |
107 |
– | – | 2.8 | 8.00 |
+5.20 |
லிபரல் கட்சிக்கு விழுந்த வாக்கு விழுக்காடு 4.20 மூ ஆகக் குறைந்தாலும் அதன் இருக்கை எண்ணிக்கை நான்கால் கூடியுள்ளது. பழைமைவாதக் கட்சிக்கு விழுந்த வாக்கு விழுக்காடு 5.00 மூ குறைந்தாலும் சென்ற முறை கிடைத்த அதே எண்ணிக்கை இருக்கைகள் இம்முறையும் கிடைத்துள்ளது. புதிய மக்களாட்சிக் கட்சி அதன் வாக்கு விழுக்காட்டை 2.19 % அதிகரித்த போதும் அதன் இருக்கை எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை. பசுமைக் கட்சி தனது வாக்கு விழுக்காட்டை மும்மடங்கு அதிகரித்திருந்த போதும் அதற்கு ஒரு இருக்கை கூடக் கிடைக்கவில்லை.
இந்தக் குளறுபடிக்குக் காரணம் தற்போது நடைமுறையில் உள்ள கம்பத்தை முதலில் ஓடி முடிப்பவருக்கே (First – Past – the Post ) வெற்றி என்ற தேர்தல் முறையாகும்.
தற்போது உள்ள கம்பத்தை முதலில் ஓடி முடிக்கும் ((First – Past – The Post ) தேர்தல் முறையா? அல்லது ஒத்தளவு கலப்பு உறுப்பினர் (Mixed Member Proportional (MMP) தேர்தல் முறையா? இதில் எதற்கு உங்களது ஆதரவு என்பதற்கு நடந்த நேரடி வாக்கெடுப்பில் மாற்றுத் தேர்தல் முறையைப் புறக்கணித்து இப்போதுள்ள தேர்தல் முறை தொடரவேண்டும் எனப் பெரும்பான்மை வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையை மாற்றியமைக்க நேரடி வாக்கெடுப்பில் 60 விழுக்காடு வாக்காளர்களது ஆதரவு தேவைப்பட்டது. மேலும் மொத்தத் தொகுதிகளில் (107) 60 விழுக்காடு தொகுதிகளின் ஆதரவும் தேவைப்பட்டது. நேரடித் தேர்தல் முடிவு பின்வருமாறு.
கம்பத்தை முதலில் ஓடி முடிக்கும் (FPTP) தேர்தல் முறை |
ஒத்தளவு கலப்புறுப்பினர் (MMP) தேர்தல் முறை | |||
வாக்கு % |
63.4 |
36.6 |
||
தொகுதிகள் |
101 |
6 |
||
பழைமைவாதக் கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதியில் தோற்றுப் போனார். இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு லிபரல் கட்சித் தலைவர் டேவிட் பீட்ரசன் இதேபோல் தோற்றுப் போனார். எனவே கட்சியின் தலைவர் ஒருவர் தேர்தலில் தோற்றுப் போனது இது இரண்டாவது தடவை. யோன் ரோறி டொன் வலி மேற்குத் (Don Valley West) தொகுதியில் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கத்லீன் வைன்னே (Kathleen Wynne) அவர்களால் தோற்கடிக்கப்பட்டார். இவர் லிபரல் கட்சி ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தவர்.
ரோறியின் பழைய தொகுதி Dufferin – Peel – Wellington – Grey ஆகும். ரொறன்ரோவை மையப்படுத்தி அரசியல் செய்யவே அவர் டொன் வலி மேற்குத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார்.
புதிய மக்களாட்சிக் கட்சித் தலைவர் ஹாவார்ட் ஹம்ரன் தனது சொந்தத் தொகுதியில் (Kenora – Saint River) மிக இலகுவாக வெற்றிபெற்றார். அவர் இந்தத் தொகுதியில் முதன்முறையாக 1987 இல் வெற்றிபெற்றார். இவரும் கட்சித் தலைமையைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
தொழிலாளர்களது குறைந்த பட்ச கூலி 8.00 டொலரில் இருந்து 10.00 டொலாராக அதிகரிக்கப்படும் நல்வாழ்வுத் திட்ட வரி குறைக்கப்படும் என்ற புதிய மக்களாட்சிக் கட்சி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் விலை போகவில்லை. இது மிகவும் வியப்பாக இருக்கிறது. பத்து டொலருக்குக் குறைய யாரும் கூலி பெறவில்லையா?
கடந்த 1999 மற்றும் 2003 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் புதிய மக்களாட்சிக் கட்சி அரசமுறை எதிர்க்கட்சி பதவி பறிக்கப்பட்டது. இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர்தான் எதிர்க்கட்சி தராதரத்தைப் பெற முடிந்தது. இம்முறையும் 10 இருக்கைகளே கிடைத்துள்ளது. இந்தப் பின்னணியில் ஹாவாட் ஹம்ரன் எவ்வளவு காலத்துக்கு கட்சித் தலைவராக தாக்குப் பிடிப்பார் என்பது கேள்விக் குறியாகும்.
சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை லிபரல் கட்சி காற்றில் பறக்க விட்டிருந்தது. அதனை ஆயுதமாகத் தூக்கிய பழைமைவாதக் கட்சியும் புதிய மக்களாட்சிக் கட்சியும் லிபரல் கட்சித் தலைவரை வறுத்து எடுத்தன. ஆனால் அது வாக்காளர் மத்தியில் எடுபடவில்லை. பெருந்தன்மையோடு லிபரல் கட்சித் தலைவரை மன்னித்துவிட்டார்கள்.
பழைமைவாதக் கட்சியின் தோல்விக்கு யோன் ரோறி கத்தோலிக்க சமயப் பள்ளிகளுக்கு பொதுநிதியிலிருந்து பணம் ஒதுக்குவது போல ஏனைய யூத, இஸ்லாம், இந்து மதப் பள்ளிகளுக்கும் கொடுக்கப்படும் என அறிவித்தது முதன்மைக் காரணம் என்று சொல்லப்படுகிறது. சமய அடிப்படையில் நிதி வழங்கும் கொள்கைக்கு கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. பல வேட்பாளர்கள் எதிர்ப்பை வெளிப்படையாக செய்தித்தாள்களுக்குக் கொடுத்த நேர்காணல் மூலம் தெரிவித்திருந்தார்கள்.
எதிர்ப்பைச் சமாளிக்க தேர்தலுக்கு 9 நாள்கள் இருக்க நாடாளுமன்றத்தில் கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என யோன் ரோறி மாற்றி வாசித்தும் பலன் கிடைக்கவில்லை.
மதத்தையும் அரசியலையும் கலக்காதிருப்பதே எல்லோருக்கும் நல்லது. கலந்தால் இங்கேயும் தலிபான்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம். இன்னும் சொல்லப்போனால் கத்தோலிக்கப் பள்ளிகளுக்கு நிதி வழங்குவது நிறுத்தப்பட்டு அவற்றையும் பொதுக் கல்வித் திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும்.
யோன் ரோறியின் தாராளத்துக்கு யூதர்களது அழுத்தம் காரணம் என்று சொல்லப்படுகிறது. சமயப் பள்ளிகளுக்கு அரசு பணம் ஒதுக்கினால் யூத மதத்தவரே அதிகமாகப் பயன் பெற்றிருப்பர்.
பழைமைவாதக் கட்சித் தலைவர் தேர்தலில் மண்ணைக் கவ்வினாலும் தான் கட்சித் தலைவர் பதவியில் நீடிக்கப் போவதாக சூளுரைத்துள்ளார். இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியவில்லை.
இந்தத் தேர்தலில் நான்கு தமிழர்கள் போட்டியிட்டார்கள். ஒருவர் பழைமைவாதக் கட்சியிலும் மூவர் புதிய மக்களாட்சிக் கட்சியிலும் போட்டியிட்டார்கள். ஸ்காபரோ மத்தியிலும் ஸ்காபரோ கில்வுட் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது.
ஸ்காபரோ கில்வுட்
வேட்பாளர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
Best, Margarett |
லிபரல் |
14413 |
42.5 |
Grant, Gary |
பழமைவாதம் |
9484 |
28.0 |
சாண் நீதன் |
புதிய மக்களாட்சி |
7442 |
21.9 |
Kitchen, Glenn |
பசுமை |
1812 |
5.3 |
ஸ்காபரோ மத்தி
வேட்பாளர் |
கட்சி |
வாக்குகள் |
வாக்குகள் |
Duguid, Brad |
லிபரல் |
17750 |
53.70 |
அப்பாத்துரை, சாமி |
பழைமைவாதம் |
8314 |
25.10 |
Mathurin, Kathleen |
புதிய மக்களாட்சி |
4375 |
13.29 |
Strachan, Andrew |
பசுமை |
1830 |
5.50 |
தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை வாக்காளர்கள் கட்சி அடிப்படையிலேயே வாக்களித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் தமிழ் வாக்காளர்களது எண்ணிக்கை இந்தத் தொகுதிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற அளவு பலம் வாய்ந்ததாக இருக்கவில்லை. ரொறன்ரோவும் ரொறன்ரோ பெருநகரமும் நடுவண் நாடாளுமன்றத் தேர்தலின் போது சரி மாகாண நாடாளுமன்றத் தேர்தலின் போது சரி லிபரல் கட்சியின் கோட்டையாகவே விளங்குகின்றன. இந்தத் தேர்தலில் ரொறன்ரோ நகரத்தில் 19 லிபரல், 4 புதிய மக்களாட்சிக் கட்சி, 1 பழைமைவாதக் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள். ரொறன்ரோ பெருநகரப் பகுதியில் (PTA) 15 லிபரல், 5 பழைமைவாதக் கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
நடுவண் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடந்தால் இதே பாணியில் மக்கள் வாக்களிப்பார்கள் என நம்பலாம். எனவே இந்தத் தேர்தல் முடிவு பிரதமர் ளுவநிhநn ர்யசிநச க்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 8.4 மில்லியன் (84 இலட்சம்) வாக்காளர்களில் 52.6 விழுக்காட்டினரே வாக்களித்திருக்கிறார்கள். இந்த விழுக்காடு 2003 இல் நடந்த தேர்தலில் விழுந்த வாக்கு விழுக்காட்டை (56.9) விடக் குறைவானது. ஏன் 1923 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விழுந்த வாக்கு (54.7) விழுக்காட்டைவிடக் குறைவானது. இவ்வளவிற்கும் இம்முறை நடந்த தேர்தலில் வாக்களிப்பை ஊக்குவிக்கு முகமாகத் தேர்தல் சட்டத்தில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
(1) தேர்தல் நடக்கும் நாள் முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது.
(2) முன்வாக்களிபுக்கு ஒதுக்கப்பட்ட காலமும் நேரமும் நீடிக்கப்பட்டது.
(3) வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
(4) வாக்களிப்பு நாளன்று வழக்கமான நேரத்துக்கும் மேலாக ஒரு மணித்தியாலம் நீடிக்கப்பட்டது.
ஒரு விதத்தில் பார்த்தால் தேர்தலில் வென்ற லிபரல் கட்சிக்கு விடைத்த வாக்கு விழுக்காட்டை (42.20) விட தேர்தலைப் புறக்கணித்த வாக்காளர்களது விழுக்காடு அதிகமானது! இது மக்களாட்சி முறையின் நலத்துக்கு உகந்தது அல்ல.
ஒன்ரேறியோ மாகாணத்தில் லிபரல் கட்சியும் பழைமைவாதக் கட்சியுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. 1990 இல் புதிய மக்களாட்சிக் கட்சி பொப் றே தலைமையில் வெறுமனே 37.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் அது மூன்றாம் இடத்தையே நிரந்தரமாகப் பிடித்து வைத்திருக்கிறது. பொப் றே தனது ஆட்சிக் காலத்தில் (1990 – 1995) புதிய மக்களாட்சிக் கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்தார் என்பது உண்மையே.
ஆனால் 17 ஆண்டுகள் கழிந்தும் அதை மனதில் வைத்து வாக்காளர்கள் அந்தக் கட்சியைப் பழி வாங்குகிறார்கள் என்று சொல்ல முடியாது.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய மக்களாட்சிக் கட்சியின் தலைமை, கொள்கை, கோட்பாடு ஆகியவற்றில் நலமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். பழைமைவாதக் கட்சியும் அது ஒரு பணக்காரர்களது கட்சி, ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாத கட்சி என்ற படிமத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அந்தக் கட்சி நிரந்தரமாக எதிர்க்கட்சி வரிசையிலேயே நீடித்து இருக்க வேண்டி வரும்.
நடுவண் நாடாளுமன்றத்துக்கு மொத்தம் 308 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். இவர்களில் 106 உறுப்பினர்கள் ஒன்ரேறியோ மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை ஒன்ரேறியோ மாகாணமே தீர்மானிக்கிறது. (உலகத்தமிழர் – ஒக்தோபர் 13, 2007)
Leave a Reply
You must be logged in to post a comment.