கொக்குளாய் , கொக்குத்தொடுவாய் , கருநாட்டக்கேணி  போன்ற  எல்லைக் கிராமங்களில்   அபிவிருத்தி இல்லை 

 கொக்குளாய் , கொக்குத்தொடுவாய் , கருநாட்டக்கேணி  போன்ற  எல்லைக் கிராமங்களில்   அபிவிருத்தி இல்லை 

தயாளன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக திகழும் கொக்குளாய் , கொக்குத்தொடுவாய் , கருநாட்டக்கேணி போன்ற கிராமங்களில் 1983ம் ஆண்டிற்கு முன்னர் சுமார் 3 ஆயிரம் தமழக் குடும்பங்கள் வாழ்ந்த நிலையில் போர் முடிந்த 8 ஆண்டில் கடந்துவிட்ட பின்னரும் அப்பகுதியின் அபிவிருத்தியில் எவருமே கண்டுகொல்லவில்லை.

குறிப்பாக மாகாணத்தின் எல்லைப் பகுதியாகவும் மறுபகுதியினால் சிங்களக்குடியேற்றம் விரட்டும் கிராமங்களாகவும் திகழும் இப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இன்றும் போரை ஒத்த நெருக்கடிகளையே எதிர்கொள்கின்றனர் . தமிழர்கள் பிரதேசத்தை காக்க வேண்டும் , வடக்கும் கிழக்கும் இணைக்க வேண்டும் என உரக்க குரல்கொடுப்போர் இந்த மக்களின் அவலத்திற்கு வாய்மூடி மௌனிகளாகவே உள்ளனர். அல்லது கைகட்டி வேடிக்கை பார்த்து அதன் பொறுப்பை அடுத்தவர் பக்கம் திருப்புகின்றனர்.

இக் கிராமங்களில் வாழும் மக்கள் இன்று மரக்கறி முதல் சில்லறைப் பொருட்கள் வரையில் கொள்வனவு செய்வதற்கே 38 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் எமக்கு ஓர் நிரந்தர பொதுச் சந்தை அமைத்து தரவேண்டும் என நீண்டகாலம் முன்வைக்கும் கோரிக்கை எவராலும் கண்டுகொள்ளப்படவில்லை.

இது குறித்து கொக்குளாய் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் நடனசபாபதி விபரம் தெரிவிக்கையில் ,

முல்லைத்தீவு மாவட்டத்தில் மரக்கறி முதல் சில்லறைப் பொருட்கள் வரையில் கொள்வனவிற்காக 38 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் எமக்கு ஓர் நிரந்தர பொதுச் சந்தை அமைத்து தரவேண்டும். அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசமான கொக்குளாய் , கொக்குத்தொடுவாய் , கருநாட்டக்கேணி போன்ற கிராமங்களில் இன்று சுமார் 860ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். அதாவது கொக்குளாயில் 300 குடும்பங்களும் , கறுநாட்டக்கேணியில் 160 குடும்பங்களும் வாழும் அதேநேரம் கொக்குத்தொடுவாயில் 400 குடும்பங்கள் வாழ்கின்றனர்.

ஆனாலும் இந்த மக்களிற்கு இன்று வரையில் ஓர் நிரந்தர சந்தை கிடையாது . அதேபோன்று ஓர் நிரந்தர பல்பொருள் வாணிபம் கிடையாது. இதனால் வாரத்திற்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ தொழிலை விட்டு 38 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து முல்லைத்தீவு நகர சந்தையில் கொள்வனவு செய்து பின்னர் பேரூந்துகளில் அவற்றினை எடுத்து வரவேண்டிய நிலமையே கானப்படுகின்றது. இதனால் ஒரு நாள் பணிகள் தாமதமடைவதோடு எஞ்சிய நாட்களில் வாடிய மரக்கறிகளையே உண்ணும் நிலமையே கானப்படுகின்றது.

இதன் காரணமாக எமது கிராமத்திற்கு ஓர் அங்காடி அமைத்து தருமாறு நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றோம். அது மட்டுமன்றி அதனை அமைப்பதற்கு பொருத்தமான இடம் தேடப்பட்டது. அதன்போதும் எமது சொந்த நிலத்தையே வழங்கவும் முன் வந்தோம். இருப்பினும் இன்றுவரையில் ஓர் பொது அங்காடி அமைப்பதற்கான எந்த நடவடிக்கையுமே இடம்பெறவில்லை.

இதனால் குறித்த கிராம மக்களினதும் இம்மாவட்ட எல்லைப்பகுதிகளினதும் முக்கியத்துவம் கருதி இதனை அமைத்துத் தருவதற்கு ஆவண செய்து தரவேண்டும் . இதேவேளை இவ்கு ஓர் பொது அங்காடி அமைக்கும்போது இந்தக் கிரமத்தோடு அண்மையில் உள்ள கிராம மக்களும் நன்மை அடைய முடியும். ஆனால் பசியோடு இருப்பவரை ஒதுக்கிவிட்டு பசியற்றவனின் கையில் உணவை வழங்குவதோ போன்று மக்களே இல்லாத கிராமங்களில் கட்டப்பட்ட அங்காடிகள் இன்று கால் நடைகள் படுத்துறங்கும் கூடாரமாக காட்சியளிக்கின்றன.எனவே எமது கிராமங்களின் முக்கியத்துவம் கருதி இப்பகுதியில் ஓர் பொதுச் சந்தையுடன் கூடிய வணிக நிலையம் ஒன்றினை அமைக்க வட மாகாண சபை முன்வர வேண்டும் . இதேவேளை கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கென இருந்த நிலத்தை நாம் வழங்கிய நிலையில் அதற்கு சுற்று வேலி மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் காத்துக்கிடக்கின்றது. என்கின்றார்.

இதேவேளை இப்பகுதி மக களின் வாழ்வாதாரத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவிலங்கம் வெளியில் உள்ள 66 ஏக்கர் வயல்ப் பிரதேசத்தில் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியாதவாறு சிங்கள மக்கள் ஆயிரக் கணக்கான பண்றிகளை வளர்ப்பதாக விவசாய அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதாவது மாவட்டத்தின் தமிழர் பிரதேசமான முகத்துவாரத்தில் அத்துமீறி வசிக்கும் சுமார் 100 ற்கும் மேற்பட்ட தென்னிலங்கையர்கள் தமது வாழ்வாதாரமாக அதிக பண்றிகளை வளர்க்கின்றனர். அவ்வாறு வளர்க்கும் பண்றிகளை ஓர் பாதுகாப்பான முறைகளில் வளர்ப்பது கிடையாது. அவற்றினை திறந்த வளர்ப்பதனால் அவை பகல் இரவு அன்றி எவ்வேளைகளிலும் மக்கள் நடமாட்டப் பகுதிகளிற்குள்ளும் வாழ் விடங்கள் நோக்கியும் படை எடுக்கின்றன. இந்த வகைப் பண்றிகள் வளர்ப்பு இனத்தைச் சேர்ந்தமையால் மக்கள் நடமாட்டத்திற்கோ அல்லது நாய்களிற்கோ அஞ்சுவது கிடையாது.

இவற்றின் காரணமாக 24 மணிநேரமும் காவல் இருக்கவேண்டிய நிலமையில் உள்ளோம். காட்டுப் பண்றிகள் எனில் இரவுவேளைகள் மட்டுமே நடமாடும் . அவையும் மனித நடமாட்டம் அல்லது நாய்களின் நடமாட்டத்தை கண்டால் அகன்றுவிடும் .

ஆனால் இங்கே சிங்களவர்கள் வளர்க்கும் பண்றிகளை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதனால் வயல்நிலங களும் விதைக்க முடியவில்லை எனக் கவலை தெரிவிக்கின்றனர். இதேநேரப் இங்கே வாழும் அநேகரின் பூர்வீக நிலங்கள் முகத்துவாரம் பகுதியில் கானப்படும் உறுதிக்காணிகள் ஆகும் அவற்றை ஆக்கிரமித்தே தற்போது பல தென்னிலங்கையர்கள் கொட்டகை அமைத்து குடியிருப்பதோடு அப்பகுதியை தமக்கே நிரந்தரமாக வழங கவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் அப்பகுதிகளின் உறுதியை மட்டும் தினம் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர் தமிழ் மக்கள்.Image result for கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முகத்துவாரம் பகுதியில் தமிழ் மக்களின் உறுதிக் காணிகளில் நீண்டகாலமாக அடாத்தாக குடியிருக்கும் சிங்கள மக்களிற்கு அப்பகுதியை சுவீகரித்து வழங்குமாறு அண்மையில் பிரதேச செயலாளரை வட மாகாண ஆளுநர் பணித்திருந்தார் இது தொடர்பில் அப்பகுதி காணியின் உரிமையாளரான பௌலின் அலன்ரிட்மன் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

முல்லைத்தீவில் அறுதி உறுதிக்காணியை கையகப்படுத்தி தாம் விரும்பிய ஒருவருக்கு வழங்குமாறு கூறும் எதேச்சை அதிகாரம் வட மாகாண ஆளுநருக்கு எந்தச் சட்ட ஏற்பாடு வழங்குகின்றது என வட மாகாண ஆளுநர் தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் அப் பகுதியானது நாம் 100 ஆண்டுகளாக வாழ்ந்த சொந்த நிலம் எனது தந்தையாருக்கு 1957ம் ஆண்டு அவரது மாமியாரால் உறுதி முடித்து வழங்கப்பட்டது. அந்த உறுதி இன்றும் எனது கைவசம் உண்டு. 1957ம் ஆண்டிற்கு முன்பு தந்தையின் மாமியாரது பெயரில் நீண்டகால உறுதி உண்டு அவ்வாறு 100 வருடங்களிற்கும் மேற்பட்ட எமது பூர்வீக நிலங்கள் அவை.

இது மட்டுமன்றி அப்பகுதி ஒன்றும் தாம் கையகப்படுத்திய நிலமோ அல்லது அரசினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர நிலமோ கிடையாது. அனைத்தும் இறுதிக் காணிகள். இந்த நிலையில் இந்த நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக 1983ம் ஆண்டு அங்கிருந்து நாம் இடம்பெயரவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டு அங்கே வலிந்து குடியேற்றப்பட்டவர்களே தென்னிலங்கை மக்கள் . அதன் பின்னர் 1990 , 1994 , சமாதான காலத்தில் எமது நிலங்களை சென்று பார்வையிட்டு கண்ணீர் வடித்தோம்.

இதன் பின்னர் 2000ம் ஆம் ஆண்டு போரின்போது அப்பகுதிகள் புலிகள் வசம் வீழ்ந்த நிலையில் மீண்டும் அப்பகுதியில் குடியமர்ந்தோம். ஆனால் 2009இறுதிப் போரின் பின்னர் அப்பகுதிகளை அபகரித்த இராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களை மீளக்புடியமர அனுமதிக்க முன்னரே தென்னிலங்கையரை அங்கே கொண்டுவந்து இறக்கி விட்டு எம்மையும் தென்னிலங்கை மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் சுமார் 30 தமிழ் மக்களிற்குச் சொந்தமான உறுதிக்காணிகள் உண்டு . அவை அனைத்தும் இன்று தென்னிலங்கையரின் பிடியிலேயே உள்ளது. இவ்வாறு எமது நிலத்தில் குடியிருப்போர் அப்பகுதியில் தமக்கு நிரந்தர வீட்டுத் திட்டம் வேண்டும் என கோருகின்றனர். இதனால் அப்பகுதியில் வீடு வழங்க எமது சம்மத்ம் கோரப்பட்டது. அதற்கு நாம் மறுத்து விட்டோம். இதனால் ஆளுநர் ஊடாக அப்பகுதியை பெற முயன்று இம் மாதம் ஆரம்பத்தில் ஆளுநர் பிரதேச செயலாளரை அழைத்து அப்பகுதியை சுவீகரித்து தென்னிலங்கையருக்கு வழங்குமாறு பணித்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இவ்வாறு கோழி அடை காப்பதுபோல் இத்தனை ஆண்டுகளாக நாம் இத்தனை இடப்பெயர்விலும் உறுதியை பாதுகாத்து வைந்திருந்து சட்டம் கைகொடுக்கும் சகலரையும் ஒரே பார்வையில் பார்க்கும் என நம்பியிருக்க ஆளுநர் ஒருவரே சட்டத்தை மதியாது எதேச்சையாக இவ்வாறு உத்தரவிட முடியுமா என்பதை அறியும் அளவிற்கு நாம் சட்டம் அறிந்தவர்களும் கிடையாது. ஆனால் சட்டப்படி எமது நிலம் எமக்கு கிடைக்கவே இந்த ஆளுநர் பாடுபட்டிருப்பாரானால் அவர் மாகாண ஆளுநராக பார்க்கப்படுவார். அல்லது இந்த மாகாணத்தில் உள்ள ஓர் இனத்திற்கு மட்டுமே ஆளுநரா? என்ற சந்தேகம் எழுகின்றது.

எனது குடும்பத்தில் எனக்கு 4 பிள்ளைகள் எம் வசம் பிறிதொரு பகுதியில் கால் ஏக்கர் நிலம் மட்டுமே இருந்த்து. அதில் ஓர் வீட்டை அமைத்து குடியிருந்தவேளை எனது சகோதரி குடும்பமும் நிலம் இன்றித் தவித்தமையால் இந்த கால் ஏக்கரின் அரைவாசியை வழங்கி அவர் வீட்டினை அமைத்துள்ளார். தற்போது எனது இரு பெண் பிள்ளைகள் வளர்ந்துள்ளனர். அவர்களின் எதிர்கால வாழ்விற்கு என்னிடம் ஒரு பிடி மண் கிடையாது . ஆனால் இந்த உறுதி மட்டுமே உண்டு.

இந்த நிலையில் எமது மண்ணை பறித்து வழங்க ஆளுநர் முயல்வது பல சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது. குறைந்த பட்சம் அப்பகுதி நில உரிமைநாளர்களான எம்மையும் அழைத்து அப்பகுதியின் நிலவரத்தின் உண்மையை அறிந்து எமக்கும் ஓர் நிவாரணத்தை அளிக்க முன் வந்திருந்தால் நாமும் அவை தொடர்பில் ஆராய்ந்திருப்போம். இதேநேரம்அங்கே எம்மை மீறி எந்த நடவடிக்கை இடல்பெற்றாலும் நாம் எமது உயிர் உள்ளவரை அனுமதிக்கப்போவது கிடையாது. என்கின்றார். இவரைப்போலவே ஏனையோரின் மன நிலையும் உள்ளது.

இந்த நிலையில் அவலங்களை மட்டுமே சுமந்து வாழும் இப்பகுதி மக்களின் துயரைத் துடைக்கும் பணிக்கு யார் பொறுப்பு குறிப்பாக பண்றிகளின் தொல்லை தொடர்பில் சுகாதாரத் திணைக்களத்தினரிடம் கேட்டால் நாம் அதனால் எழும் பிரச்சணைகள் தொடர்பிலும் அதன்மூலம் தொற்று வருத்தம் ஏதும் ஏற்படுகின்றதா என்பதனை மட்டுமே பார்வையிடமுடியும் என்கின்றனர். பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டால் எமது பொதுச் சுகாதார உத்தியோகத்தர் கண்காணிக்கின்றார். சுகாதார முறமையும் வளர்ப்பு முறையும் அறிவுறுத்தப்படுகின்றது என்கின்றனர். ஆனால் இங்கே எந்த முறமையும் பின்பற்றப்படுவதாக தெரியவே இல்லை.

இவ்வாறே இவர்களின் வாழ்வாதாரம் , பொதுத்தேவை , சந்தை என்பவற்றிற்கும் இன்றுவரை தீர்வு மட்டும் கண்டறியப்படவில்லை. மாறாக இவை தொடர்பில் நாம் இன்றும் பேசுகின்றோம் , ஆராய்கின்றோம் , மதிப்பிடுகின்றோம் எனில் அந்த மக்கள் எவ்வாறு வாழ்வது எல்லைகளை எப்படிப்பேண முடியும். முதலில் அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும் கூக்குரல் இடுபவர்களும் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply