எம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து நீக்கிய அந்த ‘ஜனநாயக’ உரை இதுதான்!

எம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து நீக்கிய அந்த ‘ஜனநாயக’ உரை இதுதான்!

 எஸ்.கிருபாகரன்
மிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான்  தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட பின் அடுத்த ஒருவார காலத்துக்குள் அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். இன்று அக்கட்சி தொடங்கப்பட்ட 46-வது ஆண்டு தினம்.

எம்.ஜி.ஆர்

அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’  நாடகத்தில் நடிப்பதற்காக  அண்ணாவை சந்திக்க வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் அவர் மீது பெரும் காதல்கொண்டார். அண்ணாவின் அழைப்பை ஏற்று 1953-ம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார். 60 களின் மத்தியில் அண்ணாவின் காலத்திலேயே கருணாநிதிக்கும் அவருக்கும் முரண்பாடுகள் உருவானதாகச் சொல்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். அண்ணா மறைவுக்குப்பின் இந்த பிணக்கு முற்றியே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் – கருணாநிதி என்ற திரையுலக பங்காளிகளுக்கிடையே எழுந்த மோதலின் பின்னணியாக  அரசியல், தனிப்பட்ட பிரச்னை என சுமார் அரை டஜன் காரணங்கள் ஒளிந்திருந்தன என்கிறார்கள். இந்த காரணங்களினால் மோதல் முற்றிய நிலையில்தான் எம்.ஜி.ஆர் நீக்கம் என்கிற தமிழக அரசியல் வரலாற்றின் முக்கியமான நிகழ்வு நடந்தது. 1971 சட்டமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் – கருணாநிதி என்ற இருநண்பர்கள் தங்களுக்குள் இருந்த பகையை வெளிப்படுத்திக்கொள்ளாமல் ஒரே அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட்டாலும் அவர்களுக்கிடையேயான முரண்களை பத்திரிகைகள் அவ்வப்போது எழுதியேவந்தன.

எம்.ஜி.ஆர்இந்த நிலையில்தான் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதன்முறையாக எம்.ஜி.ஆர், கருணாநிதிக்கு எதிரான ஒரு உரையை நிகழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் அது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதே தினத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக சொந்தக்கட்சியின் தலைவர்கள் மீதே எம்.ஜி.ஆர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் பேச்சை கருணாநிதிக்கு உளவுத்துறை அனுப்பிவைத்தது. கோபம் கொண்டார் கருணாநிதி…. 8.10.1972 அன்று எம்.ஜி.ஆர் பேசிய அந்தப்பேச்சின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் திராவிட இயக்கத்தில் அ.தி.மு.க என்ற புதிய கட்சி உதயமானது. அரசியலில் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் அரங்கேறின. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்தப்பேச்சு இதுதான்….

“திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.

‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!

உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்துக்கு உரியவர்கள்!

முன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர்

அப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தது பழக்கம்! ஆனால், யாரை என்றே தெரியவில்லை.
கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக்கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.

கடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.
கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.

ஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்கவேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.

எம்.ஜி.ஆர்

இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்துகொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?

கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கல், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?

எம்.ஜி.ஆர்

ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு!

இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.

மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/105222-this-is-why-mgr-suspended-from-dmk-in-october-10th-1972.html#vuukle_div

 

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply