“நாங்கள் தொட்டு பூஜை செய்த சாமிக்குத் தீட்டு ஆகிவிட்டதாம்!”

“நாங்கள் தொட்டு பூஜை செய்த சாமிக்குத் தீட்டு ஆகிவிட்டதாம்!”

சி.மீனாட்சி சுந்தரம்
 சி.மீனாட்சி சுந்தரம்
 வி.ஶ்ரீனிவாசுலு

பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் வேதனை

மூக நீதிக்கான முதல் தடத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது கேரளா. பிராமணர் அல்லாத 36 அர்ச்சகர்களை நியமித்து இந்தியாவையே திகைக்க வைத்திருக்கிறது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. இவர்களில் ஆறு பேர் தலித் அர்ச்சகர்கள். யது கிருஷ்ணா என்பவர் மணப்புரம் சிவன் கோயிலில் அர்ச்சகராகப் பொறுப்பேற்று, முதல் தலித் அர்ச்சகர் ஆகியிருக்கிறார்.

இந்த மாற்றம் பெரியார் பிறந்த மண்ணான தமிழகத்தில் 2006-லேயே போடப்பட்டது. ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை அப்போதைய தி.மு.க அரசு கொண்டுவந்தது. தமிழகம் முழுவதும் சைவ, வைணவ மரபுகளின் அடிப்படையில் ஆறு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர் என நான்கு சைவப் பயிற்சி மையங்களும், ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் இரண்டு வைணவப் பயிற்சி மையங்களும் செயல்பட்டன.

இங்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சங்கத் தலைவராக இருக்கும் ரங்கநாதனிடம் பேசினோம். ‘‘தி.மு.க அரசால் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது பல இடங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ‘மற்ற சாதிக்காரர்கள் சாமி சிலையைத் தொட்டால் தீட்டுபட்டுவிடும்’ எனச் சொல்லி மதுரையைச் சேர்ந்த ஆதிசிவாச்சாரியார் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை வாங்கினார்கள். தென்னிந்திய கோயில் பிராமணர் சங்கமும் எங்களுக்கு எதிராக செயல்பட்டது.

ஆனாலும், சில சட்டதிட்டங்களுடன் இந்தப் பயிற்சி மையங்களைத் தமிழக அரசு நடத்தியது. நான் உள்பட 40 பேர் திருவண்ணாமலை மையத்தில் பயிற்சி பெற்றோம். எங்கள் மையத்தில் அனைத்து சமூகத்தினரும் கலந்திருந்தனர். யாருக்கும் வேறுபாடே பார்க்கப்படவில்லை. பட்டியல் சமூகத்தினரும் அர்ச்சகர்களாகப் பயிற்சி பெற்று வந்தார்கள். குடுமியுடன் ருத்திராட்சம் அணிந்து அர்ச்சகர் கோலத்துக்கு மாறினோம், வேதங்கள், மந்திரங்கள், பூஜை மரபு, தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள் என அனைத்தையும் சொல்லிக்கொடுத்தார்கள்.

சைவ மரபுப்படியான பாடங்களைப் பேரா.சொக்கப்பன் என்பவரும், ஆகம முறைகளை ராமகிருஷ்ண ஜீவா என்பவரும் எடுத்தனர். பாடங்களைத் தொடங்கும்போதே அங்குள்ள பிராமணர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் கேட்டால், தொடக்கத்தில் எங்களுக்கு ஆகம வகுப்புகளை எடுக்க பிராமணர்கள் யாரும் முன்வரவில்லை. மாணவர்கள் நாங்கள் பேசித்தான் ராமகிருஷ்ண ஜீவா எங்களுக்கு ஆகம வகுப்புகளை எடுத்தார். பின்னர்தான் சமஸ்கிருத முறைப்படி மந்திரங்களைக் கற்றோம். வகுப்புகளை ஆரம்பித்த கொஞ்சநாளிலேயே ராமகிருஷ்ண ஜீவாவைக் கடுமையாகத் தாக்கிவிட்டனர். மருத்துவமனையில் இருந்தவரை மீண்டும் சமாதானம் செய்து, ‘நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம்’ எனக்கூறி பாடம் எடுக்க அழைத்து வந்தோம். பூஜை செய்து பழகுவதற்கு, சுவாமி சிலை பெறுவதற்குக்கூட நாங்கள் போராட வேண்டியிருந்தது.

உச்ச நீதிமன்ற வழக்கால் தேர்வு தள்ளிப்போனது. பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் தலையிட்டு, 2009-ல் எங்களுக்குச் சான்றிதழ்களை வாங்கித்தந்தார்கள். வழக்குக்காக ஒன்றிணைந்த நாங்கள் இன்று சங்கமாக மாறி நிற்கிறோம். தமிழகம் முழுவதும் இந்த அரசு மையங்களில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 240 பேர். அதில், முழுவதும் படித்து முடித்து வெளியே வந்தவர்கள் 207 பேர். ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார். இப்போது 206 பேர் சேர்ந்து போராடி வருகிறோம்.

இதுவரை எங்களில் ஒருவருக்குக்கூட அரசுப் பணி ஆணை தரவில்லை. கிடைத்த வேலைகளைச் செய்து வருகிறோம். உள்ளூர் கோயில்களில் அர்ச்சகர்களாக வேலை செய்தோம். வெளி பூஜைகளுக்குச் செல்வோம். ‘நீங்கள் ஐயரா’ என்ற கேள்விக்குப் பதில் சொல்வதுதான் சற்று சிரமமாக இருக்கும். ‘எங்களுக்கு அரசுப் பணியாணை வழங்கவேண்டும்’ எனத் தொடர் போராட்டங்கள் நடத்தினோம். நிறைய முறை கைது செய்யப்பட்டோம். பெரிய கோயில்களில் எங்களை நியமிக்காததற்கு ஆகம விதிகளைக் காரணம் காட்டினார்கள். ‘ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆகமவிதிப்படி பூஜைகள் நடத்தப்பட வேண்டும். அந்தக் குறிப்பிட்ட விதிகளில் உங்களுக்குப் பயிற்சி இல்லை’ எனக் கூறி ஒதுக்கினார்கள்.

ஒருகட்டத்தில் ‘நாங்கள் இத்தனை மந்திரங்களையும், வேதங்களையும் படித்தது வீணோ’ என்று தோன்றியது. எல்லாம் வெறுத்துப்போய்விட்டது. பெரியார் சிலைக்கு முன்னரே என்னுடைய ருத்திராட்ச மாலையை அறுத்து, என் அர்ச்சகர் கோலத்தைக் கலைத்துவிட்டேன். இப்போது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனராக வேலை செய்துவருகிறேன். உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக ஆதிசிவாச்சாரியார் சங்கம் தொடுத்த வழக்கில் இப்போது எங்கள் சங்கத்தின் சார்பாக நானும் இணைந்து வழக்கைத் தொடர்ந்து வருகிறேன். தீண்டாமையை ஒழிக்காமல் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கினால்… இதோ எங்கள் நிலைமைதான் அனைவருக்கும். இதில் கொடுமை என்னவென்றால், நாங்கள் தொட்டு பூஜை செய்த சாமி சிலைகளெல்லாம் தீட்டு ஆகிவிட்டதாகச் சொல்லி, அவற்றை யாருமே தொடாமல் திருவண்ணாமலையில் அனாதையாகப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் அகில உலக செயல் தலைவரும், கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையில் நிர்வாக அறங்காவலருமான எஸ்.வேதாந்தத்திடம் பேசினோம். ‘‘எதுவுமே இயல்பாக வர வேண்டும். திணிக்கக்கூடாது. இந்து சமுதாயம் பல மாற்றங்களை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால், அரசாங்கத்தின் திணிப்புகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 500, 1,000 வருடப் பழமையான கோயில்களில் அந்தந்த ஆகம முறைப்படி பூஜைகள் நடந்துவருகின்றன. அது அவர்களின் உரிமை. அதை எப்படி மாற்ற முடியும்? தமிழகத்தைப் பொறுத்தவரைப் பிராமணர்கள் அல்லாத அர்ச்சகர்கள்தான் அதிகம். பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்களைச் சேர்த்தே ஒரு லட்சம்தான். ஆனால், ஆறு லட்சத்துக்கும் அதிகமான பூசாரிகள் இருக்கிறார்களே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இங்கிருக்கும் பரமாச்சாரியார் ஒருவருக்கு திருவாச்சியூரில் உள்ள காளிதான் குலதெய்வம். காளிக்குப் பூஜை செய்பவர்களில் பிராமணர்களா அதிகம் இருக்கிறார்கள்? கிராம தேவதைக் கோயில்களில் பிராமணர்களின் கை கீழே இருக்கும், பூஜை செய்யும் பிராமணர் இல்லாத மற்ற சமூக பூசாரியின் கை மேலே இருக்கும். அந்தக் கருவறைக்குள் பிராமணர்களால் நுழைய முடியாது. அது அந்தந்தக் கோயில்களின் வழிமுறை அல்லவா? அதுபோலத்தான் இதுவும். 63 நாயன்மார்களில் பிராமணர்களா அதிகம்?, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் தலித் சமூகம்… இவர்களையெல்லாம் நாங்கள் வணங்காமல் விட்டுவிட்டோமா? வேறு சமூகங்களிலிருந்து அர்ச்சகராக வருபவர்கள்கூட பெரிய கோயில்களைத்தான் கேட்கிறார்கள். பூஜை செய்யப்படாத எத்தனையோ கோயில்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. அங்கு ஏன் போவதில்லை? சைவத்துக்குள்ளேயே எவ்வளவு பிரிவுகள் உள்ளன என்பதை இவர்கள் அறிவார்களா?

ஒரு சில வேத பண்டிதர்கள், ‘பிராமணர்களுக்கு மட்டும்தான் வேதம் சொல்லிக்கொடுப்போம்’ என்கிறார்கள். அது உண்மைதான். ஆனால், ‘எல்லாரும் அப்படித்தான்’ எனப் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. வேதத்தை வகுத்துக் கொடுத்த வேத வியாசரே பிராமணன் இல்லை. பிராமணர் இல்லாத பல பேர் ஆரிய சமாஜில் வந்து வேதம் கற்கிறார்கள். ராமகிருஷ்ண மடத்தில் வேதம் கற்பிக்கிறார்கள். வேதம் எல்லாருக்கும் பொதுவானது. நாங்கள் நடத்தும் 15 பள்ளிகளில் அனைத்து சமூகத்தினருக்கும் வேதம் சொல்லிக்கொடுக்கிறோம். சந்தேகம் இருந்தால், எங்களைக் குறை சொல்கிறவர்களின் குழந்தைகளை அனுப்பச் சொல்லுங்கள். நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம்.

முறையாக வேதம் படித்தவர்கள், பூஜை மந்திரங்களையும் விதிமுறைகளையும் கற்ற மற்ற சமூகத்தினர் தாராளமாக அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம். அவர்கள் பூஜை செய்யலாம். அந்த அர்ச்சகர்களுக்கு நாங்கள் எதிரிகள் இல்லை. அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் நாங்கள் செய்யத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், சில முக்கியக் கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்குப் போட்டியாக, பயிற்சி பெற்ற அர்ச்சகர்களைக் கொண்டுபோய் நிறுத்தி பிரச்னை கிளப்புகிறார்கள். அது சரியல்ல. அதனால்தான் நீதிமன்றம் வரை போகவேண்டியிருக்கிறது’’ என்றார் அவர்.

‘விதியே… விதியே… தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய்…’ என ஏக்கத்துடன் பாரதி பாடியதுதான் நினைவுக்கு வருகிறது.

– சி.மீனாட்சி சுந்தரம்
படம்: வி.ஸ்ரீனிவாசுலுன

http://www.vikatan.com/juniorvikatan/2017-oct-22/society/135514-dalit-priest-in-kerala.html


 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply