‘கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி’ ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி
2017-10-10
நேர்காணல் :- ஆர்.ராம்
ஐக்கிய இடதுசாரி முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் புதிய அரசியலமைப்பு உரு வாக்க செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள முக்கியஸ்தருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- புதிய அரசியலமைப்புக்கான வழி நடத் தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் நாட்டின் தன்மையானது ஏகிய ராஜ்ய என்று சிங் கள மொழி யிலும் தமிழில் ஒருமித்த நாடு என்றும் ஆங்கிலத் திலும் இதேசொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட் டுள்ளமையானது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி யுள்ளதே?
பதில்:- இதுவொரு முக்கியமான விடயமாகும். நான் ஏகிய ராஜ்ய என்ற சொற்பதத்தினை பயன்படுத்தும் போது பல தமிழ் ஊடகங்கள் ஒற்றை ஆட்சி என்றே பயன்படுத்தியுள்ளன. இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஏகிய ராஜ்ய என்ற சொற்பதத்தினை ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் தான் நான் கருத்துக்களை முன்வைக்கின்றேன்.
இந்த விடயம் சம்பந்தமாக நாம் நீண்ட கலந்துரையாடல்களை செய்தோம். தமிழ் தரப்பிலுள்ள சில கடும்போக்குவாத தரப்புகள் ஏகிய ராஜ்ய என்பதற்கு ஒற்றை ஆட்சி என்ற சொற்பதத்தினை இடைக்கால அறிக்கையிலும் தொடர்ச்சியாக பேணுவதற்கு விருப்பம் வெளியிட்டார்கள். காரணம் அதில் ஒரு நாடு என்று எங்கும் கூறப்படவில்லை. ஆகவே தான் அவர்கள் அதனை விரும்பினார்கள்.
அதாவது ஒற்றை ஆட்சி என்பது வன் கவர்மண்ட் (one government) என்றே பொருள்படுகின்றது. ஆகவே ஒற்றை ஆட்சி என்பதில் ஒரு நாடு என்ற பொருள்கோடலை செய்யமுடியாது. அந்த அடிப்படையில் தான் ஒருமித்த நாடு என்ற சொற்பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
நாம் இந்த விடயம் தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொண்ட தமிழ்தரப்பின் விசேட நிபுணர்கள் ஏகிய ராஜ்ய என்பதற்கு ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தினை பயன்படுத்த முடியும் என்றே பரிந்துரைத்தனர்.
ஏகிய ராஜ்ய என்பதற்கு ஒருமித்த நாடு என்பதனை விடவும் மிகச் சிறந்த சொற்பதம் காணப்படுகின்றது என யாராவது கூறுவார்களாயின் அது தொடர்பில் நாம் பரிசீலனை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
அதேநேரம் உதாரணமொன்றையும் குறிப்பிட விரும்புகின்றேன். பிரித்தானிய இராஜ்ஜியம் ஒற்றை ஆட்சியை (unitary state) கொண்டதாகும். ஆனால் அதன் கீழ் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து போன்றவை பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. அதியுச்ச அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.
ஆகவே யுனிற்றரி ஸ்ரேட் (unitary state) என்ற சொற்பதமானது ஒரு நாடாக இருப்பதற்கான காப்பீட்டை முழுமையானதாக கொண்டதல்ல. அந்த அடிப்படையில் தான் இடைக்கால அறிக்கையில் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதற்கான வரைவிலக்கணங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஏகிய ராஜ்ய என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு எனும் பொருளாகும். அத்துடன் அரசியலமைப்புக்கான திருத்தம் அல்லது நீக்கம் அல்லது மாற்றீடு அரசியலமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதமாக பாராளுமன்றத்தாலும் இலங்கை மக்களாலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்றுள்ளது.
அத்துடன் நாட்டின் இறைமையானது மக்களுக்குரியதாக இருப்பதோடு பாரதீனப்படுத்த முடியாததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருத்தல் வேண்டும். அந்தவகையில் பிரிந்து செல்லுதலை தடுக்கும் வகையிலேயே விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனை தவறாக அர்த்தப்படுத்த அடிப்படைவாத தரப்புகள் பிரயத்தனம் செய்கின்றன.
கேள்வி:- முன்னாள் நீதியரசரும் தற்போதைய வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ் வரன் இடைக்கால அறிக்கையை முழுமையாக நிரா கரித்துள்ளதோடு சிங்களத்தில் ஏக்சத் ரட்ட என்றும் ஆங்கிலத்தில் யுனைட்டட் கன்ரி (united country) என்றும் தமிழில் ஐக்கிய இலங்கை என்றும் பயன் படுத்த முடியும் என்றும் பரிந்துரை செய்துள்ளாரே?
பதில்:- விக்கினேஸ்வரன் எம் அனைவரினதும் கௌரவம் மிக்கவராக இருந்தார். அவர் கொழும்பில் இருக்கும் போது ஒரு கடும்போக்காளர்களாக செயற்படவில்லை. ஆனால் தற்போது அவர் மாற்றமடைந்து விட்டார். அவர் கடும்போக்குவாத சிறைப்பிடிக்குள் இருக்கின்றார். அத்துடன் விக்கினேஸ்வரன் பிரபல்யமாகுவதற்கான கூற்றுக்களையே அண்மைக்காலமாக முன்வைக்கின்றார்.
விக்கினேஸ்வரனைப் பொறுத்தவரையில் அரசியலமைப்பு செயற்பாடுகளை அவர் விரும்பவில்லை. அச்செயற்பாடுகள் நடைபெறாதிருக்க வேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடாக இருக்கின்றது. அரசியலமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது இடைநிறுத்தி நாட்டில் கடும்போக்குவாத தீயை மூட்டிவாறு இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றார். வடக்கில் அவர் அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதேநேரம் தெற்கிலும் கடும்போக்குவாதிகள் தீ மூட்டிகொண்டிருக்கின்றார்கள்.
மேலும் அவருடைய சொற்பிரயோகங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. யுனைட்டட் கன்ரி (united country) என வரும்போது வேறுபட்ட இராஜ்ஜியங்கள் ஒன்றினைகின்றன என்றே பொருள் கோடல் செய்யப்படும். அது தெற்கில் அதனை ஏற்றுக்கொள்வதென்பது மிகவும் கடினமாக விடயமாகும். ஆகவே விக்கினேஸ்வரன் ஏற்கமுடியாத யோசனைகளையே முன்வைக்கின்றார்.
கேள்வி:- இடைக்கால அறிக்கையானது தமது நீண்டகால கோரிக்கையான சமஷ்டி, சுய நிர்ணய உரிமை போன்ற அடிப்படை அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்புகள் கடுமையாக விமர்சிக்கின் றனவே?
பதில்:- தமிழ் தலைவர்களுக்கு ஒரு விடயத்தினை நான் கூற விரும்புகின்றேன். சொற்பிரயோகங்கள், வாசகங்களை தூக்கி பிடித்துகொண்டிருப்பது தற்போதைய நிலைமையில் பொருத்தமற்றதொன்றாகும்.
சுயநிர்ணய உரிமை என்ற சொற்பதத்தினை நேரடியாக பயன்படுத்தினால் தெற் கில் உள்ள மக்களை கடும்போக்காளர்கள் குழப்பியடித்து எதிர்ப்பு கோஷத்தை வலுப்படுத்திவிடுவார்கள்.
மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கி அவற்றை வலுவூட்டுவதானது அதாவது தமது செயற்பாடுகளை தாமே கையாளக்கூடிய வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்வது சுயநிர்ணய உரிமைக்கே சமனாக அமைகின்றது. இதனை விடுத்து நேரடியாக சுயநிர்ணய உரிமை என்ற சொற்பதத்தினை பயன்படுத்துமிடத்து பிரிந்து சென்று வேறு இராஜ்ஜியம் உருவாகப்போகின்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தும்.
அதிகாரப்பகிர்வு விடயத்தில் முப்பது வருடங்கள் எமக்கு அனுபவம் உள்ளது. ஆகவே அதிகாரப்பகிர்வு விடயத்தினை அர்த்தபுர்ஷ்டியாக்குவதற்காக செயற்படவேண்டும். தற்போது தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்றே கூறுகின்றார்கள்.
தெற்கில் உள்ள சுதந்திரக் கட்சியின் நான்கு முதலமைச்சர்களும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர்களும் இடைக்கால அறிக்கையில் முன்மொழிவுகளைச் செய்துள்ளார்கள். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தமது பகுதிகளை மேம்படுத்த முடியும் என்ற சிந்தனை அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று தான் தெற்கில் உள்ள கடும்போக்காளர்கள் வாசகங்களை தூக்கிப் பிடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். வடக்கில் உள்ளவர்களும் இவ்வாறு இருப்பார்களேயானால் இந்தப்பணியை செய்து முடிக்க முடியாதவொரு நிலைமையே ஏற்படும் அபாயமுள்ளது.
கேள்வி:- வழிநடத்தல் குழுவில் பங்கேற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொற்பிரயோகங்களில் அதியுச்ச விட்டுக்கொடுப்பைச் செய்திருக்கின்றார். ஆனால் அதற்கு ஈடான நெகிழ்வுப்போக்கினை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தென்னிலங்கை தலைமைகள் காட்டவில்லை.
பதில்:- கூட்டமைப்பினர் சமஷ்டி அடிப்படையிலான பிராந்தியங்களின் கூட்டு என்ற விடயத்தினை கோரியிருக்கின்றார்கள். அத்துடன் பிரதான அறிக்கையில் உள்ள விடயங்களை பிரதான கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றபோது அதனை தாமும் ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர் ஏகிய ரஜ்ய பாதுகாக்கப்படும் என்று கூறுவது உண்மைதான். ஏகிய ராஜ்ய என்பது பிரிக்கமுடியாத ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் தான் அவர் கள் அவ்வாறு குறிப்பிடுகின்றனர். மேலும் ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனியான முன்மொழிவில் தமிழிலும், சிங்களத்திலும் ஏகிய ராஜ்ய என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர யுனிற்றரி ஸ்ரேட் என்பது நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் ஏகிய ராஜ்ய என்பதன் அர்த்தப்படுத்தலை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகவே உள்ளடக்கத்தினையே பார்க்க வேண்டும்.
கேள்வி:- தென்னிலங்கை தளம்பலை தடுப்ப தற்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கு முகங்கொடுப்பதற் காகவும் ஒற்றை ஆட்சி பாதுகாக்கப்படும், பௌத்தம் முன்மையானது என்று திரும்பத்திரும்பக் கூறுவ தானது கூட்டமைப்பினுள்ளும் தமிழ் மக்கள் மத் தியிலும் சம்பந்தனுக்கு கடுமையான நெருக்கடிக ளையல்லவா ஏற்படுத்தியிருக்கின்றது?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருப்பவர்களில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான அணியினர் தமது முதன்மை தன்மையான பிரபல்யத்தினையே விரும்புகின்றார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் தேசியப் பட்டியல் விடயத்தில் கூட்டமைப்புடன் கோபத்தில் இருக்கின்றார். ஆகவே எதிர்ப்புகளை விடுகின்றார்.
அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும். பிரச்சினைகள் ஏற்படாது என்று அமைதியாக இருக்க முடியாது. சிறு குழுவினர் தவறான நிலைப்பாட்டில் இருப்பார்களாயின் அவர்களுக்குரிய தெளிவுபடுத்தல்களை செய்யவேண்டியது கூட்டமைப்பின் பொறுப்பாகும்.
கூட்டமைப்பிற்கு இத்தனை காலமும் இந்த விடயத்தினை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால் தற்போது இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் அனைத்து தரப்பினருக்கும் தெளிவுபடுத்தும் பாரிய கடப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் தெற்கிலும் இதுபோன்ற பாரிய தெளிவுபடுத்தும் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. முன் னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் வெண்டாமரை இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அரசியலமைப்பு செயற்பாடுகளுக்கு பாரிய பிரசாரம் அளித்தது. அனைத்து தலைவர்களும் ஒரு மேடைக்கு வந்தார்கள்.
அதுபோன்று தற்போதும் தெற்கில் உள்ள பிரதான கட்சிகள் இரண்டும் விரைவாக ஒன்றிணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பிரதான கட்சிகள் இணைந்து இந்தப் பணியைச் செய்ய வேண்டும். அதில் தாமதங்களும் குறைபாடுகளும் உள்ளன.
நாம் தனித்தனி நபர்களாக பிரசாரங்களை முன்னெடுக்கின்றோம். ஆனால் அது போதாது. பிரதான கட்சிகளும் இந்த விடயத்தினை முழு மனதோடு ஏற்று செய்ய வேண்டியுள்ளது.
கேள்வி:- உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை கட்டமைப்புகள் காணப்படுகின்றபோது இடைக்கால அறிக்கையில் இரண்டாவது மந்திரி சபை அல்லது செனட் சபை முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கப்போகும் நன்மை என்ன?
பதில்:– மாகாணங்களுக்கு அல்லது பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ள உலக நாடுகளில் இரண்டாவது மந்திரி சபை காணப்படுகின்றது. அதிகாரங்கள் பகிரங்கப்பட்ட பின்னர் மாகாணங்கள் அல்லது பிராந்தியங்கள் தமக்கு வேண்டியதைச் செய்து கொண்டு செல்ல முடியும் என்று விட்டு விடமுடியாது.
ஆகவே தான் மத்திய அரசாங்கத்துடன் மீண்டும் அதிகாரங்கள் தொடர்பான இணைப்பைக் கொண்டிருக்கும் வகையில் இரண்டாவது மந்திரி சபை பயன்படுத்தப்படுகின்றது. இது மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களின் கட்டமைப்பு அல்ல. இது மத்திய அரசாங்கத்தின் கட்டமைப்பாகும். ஆகவே மாகாணங்கள் அல்லது பிராந்தியங்கள் மத்திய அரசாங்கத்துடன் மீண்டும் நேரடியாக தொடர்புபடுகின்றன.
பாராளுமன்றத்தில் அவசரமாக சட்டங்களை நிறைவேற்றுவதற்கு செக் வைக்கும் கட்டமைப்பாகவும் காணப்படுகின்றது. அதவாது சட்ட மூலங்கள் தொடர்பில் இரண்டாவது மந்திரி சபை தமது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதேநேரம் அரசியலமைப்பு தொடர்பான திருத்தங்களின்போது இரண்டாவது மந்திரி சபையின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அனுமதி அவசியம். தற்போதுவரையில் இரண்டாவது மந்திரி சபையா அல்லது செனட் சபையா என்று பெயர் சொல்லப்படப்போகின்றது என்பது தீர்மானிக்கப்படவில்லை.
கேள்வி:- இரண்டாவது மந்திரி சபையிலும் பெரும்பான்மை பிரதிநிதித்துவங்களே அதிகமாக காணப் படப்போவதால் சிறுபான்மை சமூகத்திற்கு நன்மை கள் கிடைக்கும் என எவ்வாறு எதிர்பார்க்க முடி யும்?
பதில்:- இந்த கட்டமைப்பில் 55 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் 10 பேர் பாராளுமன்றத்தினை சேர்ந்தவர்கள். ஏனைய 45 பேரும் 9 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். இவர்கள் வடக்கு கிழக்கில் மலையகத்தில் சிறுபான்மை பிரதிநிதிகளே அதிகமிருப்பார்கள்.
ஏனைய மாகாணங்களிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இடம்பெறலாம். அத்துடன் அதிகாரங்களை பகிர்வதற்கு விரும்பும் மாகாண சபை பிரதிநிதித்துவங்களே இங்கு காணப்படும். ஆகவே பெரும்பான்மையானவர்களால் மட்டும் முடிவுகள் எடுக்கப்படும் என கொள்ள முடியாது.
கேள்வி:- அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டினை நீங்கள் கொண்டிருக்கின்ற நிலையில் புதிய அரசியலமைப்பில் மாகாணங்க ளுக்கான அதிகாரங்கள் 13 ஆவது திருத்தச்சட் டத்தில் குறிப்பிட்டவற்றை விடவும் மேலதிகமாக இருக்குமா?
பதில்:- நிச்சயமாக 13ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை மையப்படுத்திய அவற்றை வலுவூட்டுவதாகவே அமையும். ஆகவே அது நிச்சயம் 13பிளஸ் ஆகும்.
உதாரணமாக கூறுவதாயின் தேசியகொள்கைகளை உருவாக்குகின்றபோது மாகாணங்கள் தொடர்புபடவேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களின் பிரகாரம் சுற்றறிக்கைகள் ஊடாக எதிர்காலத்தில் தேசிய கொள்கைகளை உருவாக்க முடியாது.
அதிகாரங்கள் பகிர்வு தொடர்பாக பாராளுமன்றம் சட்டத்தினை இயற்றினால் அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாகாணசபைகளுக்கே காணப்படும் என்ற முன்மொழிவும் காணப்படுகின்றது. தற்போதைய நிலையில் அவ்வாறில்லை.
கேள்வி:- வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாக இரண்டு வேறுபட்ட முன்மொழிவுகள் இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பில் உள்ளன. இந்த விடயம் புதிய அரசியலமைப்பில் எவ்வாறு அமை யப்போகின்றது?
பதில்:- வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த விடயம் சம்பந்தமாக நீண்ட கலந்துரையாடல் அவசியமாகின்றது. இடைக்கால அறிக்கையில் பொதுவாகவுள்ள பிரதான விடயங்களுடனேயே நான் இசைகின்றேன். மேலும் இந்த விடயத்தில் குறித்த இரண்டு பிரதேசங்களிலும் உள்ள மக்களின் விருப்பினை வெவ்வேறாக அறிய வேண்டும். அவ்வாறில்லாது சட்டமியற்ற முடியாது.
தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் மாகாணங்கள் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் சட்டமியற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிராகரம் சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் ஒரு வருடத்திற்கே அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தது. தொடர்ந்திருக்க வேண்டுமாயின் 1988 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக அந்த பிரதேசத்தில் மக்கள் வாக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
தற்போதைய நிலையில் மாகாணங்கள் இணைப்பு குறித்து சட்டம் இல்லை. பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்றப்பட வேண்டும். அவ்வாறு இயற்றப்படாது விட்டால் என்றுமே அது சாத்தியமாகப்போவதில்லை. ஆனால் அவ்வாறான சட்டம் இயற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மாகாணங்களிலோ அல்லது அந்த மாகாண மக்களே இணைய வேண்டும் என்று எத்தனை யோசனைகள் முன்வைத்தாலும் பயனில்லை. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கேள்வி:- ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறைமை நீக்கம் சம்பந்தமாக வெவ் வேறு நிலைப்பாடுகள் பிரதான கட்சிகளுக்குள் காணப்படுகின்றதே?
பதில்:- இடைக்கால அறிக்கையின் பிரகாரம்சுதந்திரக்கட்சி மட்டுமே வேறுபட்ட நிலைப்
பாட்டில் உள்ளது. ஏனைய கட்சிகள் நிறை வேற்று அதிகாரத்தினை நீக்கவேண்டும். பாராளுமன்றம் வலுவாக்கப்படவேண்டும் என்றே கூறுகின்றன.
70ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர் வின் போது உரையாற்றிய ஜனாதிபதி பாராளுமன்றத்தினை வலுப்படுத்த வேண்டும் என்றே கூறுகின்றார். ஆகவே ஜனாதிபதி மைத்திரிபாலவின் நிலைப்பாடு மாறுபடவில்லை என்பதே எனது நம்பிக்கையாகவுள்ளது.
ஜனாதிபதிக்கு தற்போதுள்ள மாகாண சபைகள் தொடர்பான அதிகாரங்கள் போன்று விசேட அதிகாரங்கள் அளிப்பது தொடர் பாக மேலும் கலந்துரையாடல்களை செய்ய முடியும். அதேநேரம் ஜனாதிபதி பிரதமரு டன் ஆலோசித்து தீர்மானங்களை மேற்கொள்வ தென்ற ஏற்பாடும் சிறந்த தொன்றாகும்.
கேள்வி:- இடைக்கால அறிக்கையில் பின்னிணைப்பாகவுள்ள கட்சிகளின் தனிப்பட்ட முன்மொழிவுகள் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கின்றன. இடைக்கால அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப் படவுள்ளது. சிவில் அமைப்புகள், மக்களுடன் கலந்துரையாடல்கள் அவசியமாகின்றன இச்சவால்களுக்கு முகங்கொடுத்து அடுத்த இரண்டரை வருடங்களுக் குள் நிறைவு செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்று எவ்வளவு தூரம் நம்பு கின்றீர்கள்?
பதில்:- இரண்டரை வருடங்கள் வரையில் பொறுத்திருக்க முடியாது. மேலும் காலதாம தப்படுத்தப்படும் பட்சத்தில் தேர்தல் காலம் வந்துவிடும். அச்சமயத்தில் இந்த விடயம்வேறு கூறுகளால் சீர்குலைந்து விடும். ஆகவே அடுத்த வருடத்திற்குள் இப்ப ணியை நிறைவு செய்ய வேண்டும். அதனை செய்து முடிக்க முடியும். அதற்கான உணர்வு எனக்கு மட்டுமன்றி அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
http://tnaseiithy.com/interviews/wiki-into-extimist-s-prison-jayampathy-wickramaratne-chevavi
Leave a Reply
You must be logged in to post a comment.