அசத்தும் மழைநீர்ச் சேமிப்பு! – 50 நாள்கள்… 8 முறை மழை… 50 ஆயிரம் லிட்டர்!

அசத்தும் மழைநீர்ச் சேமிப்பு! – 50 நாள்கள்… 8 முறை மழை… 50 ஆயிரம் லிட்டர்!

கு.ராமகிருஷ்ணன் – படங்கள்: ம.அரவிந்த்

‘தண்ணீரைப் பூமியில் தேடாதே… வானத்தில் தேடு’ என்று, தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாம் தவறாமல் சொல்வார் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார். ஆனாலும் மழைநீர்ச் சேகரிப்பு குறித்துப் போதிய விழிப்பு உணர்வு நம்மிடம் இல்லை என்பதே உண்மை. ஆனால், நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மழைநீர்ச் சேமிப்பில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். மழைநீரின் வரத்துப் பாதையில் வரிசையாக நீர் நிலைகளை உருவாக்கி, அந்த நீரின் மூலம் நிலத்தடி நீரைச் செறிவூட்டிக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்துப் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்புகூட மழை பெய்யும்போது வீடுகளில் முற்றம், தாழ்வாரப் பகுதிகளில் அண்டா போன்ற பாத்திரங்களில் மழைநீரைப் பிடித்துச் சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தது. கான்கிரீட் கட்டடங்களில் குடியிருக்கத் தொடங்கிய பிறகுதான் இப்பழக்கம் மறைந்துபோனது. அதோடு ஊர்ப் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் பழக்கம் போய், வீட்டுக்கு வீடு ஆழ்துளைக் கிணறு அமைத்த பிறகு, தண்ணீர்ச் சேமிப்பு குறித்த சிந்தனையே இல்லாமல் போய்விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக நிலவும் கடுமையான வறட்சியின் மூலம், இயற்கை நமக்குப் பாடம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ‘தண்ணீர் சேமிப்புக்கு ஒரே மாற்று வழி மழைநீர்ச் சேகரிப்புதான்’ என்று பல ஆண்டுகளாகவே நீரியல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தாயுமானவன் தன்னுடைய வீட்டில் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி மழைநீரைச் சேகரித்து வருகிறார். பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் எல்லாம் வற்றிப்போன நிலையில், தான் சேமித்து வைத்த தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி வறட்சியைச் சமாளித்து வருகிறார் இவர்.

வேதாரண்யம் தாலூகா, தகட்டூர் கிராமத்தில்தான் தாயுமானவனின் வீடு உள்ளது. இவருடைய வீட்டில் அமைத்துள்ள மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பைப் பலரும் பார்வையிட்டுச் செல்கிறார்கள். ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றபோது, தான் சேமித்து வைத்திருந்த மழைநீரில் மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், மழைநீர்ச் சேகரிப்பு குறித்த விஷயங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

“நாங்க விவசாயக் குடும்பம். ஆறு ஏக்கர் நிலத்துல விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். தனியா வியாபாரமும் இருக்கு. எங்க பகுதியில கொஞ்ச வருஷமாவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கிணறு, போர்வெல் எல்லாமே வத்திப் போச்சு. போர்வெல்லை ஆழப்படுத்தி இன்னும் ஆழத்துல இருந்து தண்ணீர் எடுத்தா, உப்புத் தண்ணிதான் கிடைக்கும். அதனால, குடிக்கிறதுக்கு, புழக்கத்துக்குனு எதுக்குமே தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாததால ஊராட்சி நிர்வாகத்தாலயும் தண்ணீர் விநியோகம் செய்ய முடியல.

இதுக்கு ஏதாவது மாத்து வழி செய்யணும்னுதான் 3 லட்ச ரூபாய் செலவு செஞ்சு, இந்த மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை உருவாக்கினேன். இதைக் கட்டுறதுக்கே 8 ஆயிரம் ரூபாய்க்குத் தண்ணீர் வாங்கியிருக்கேன்.

சின்ன வயசுல ஒருமுறை கோடியக்கரைக்குப் போனப்போ, அங்க வெள்ளைக்காரங்க காலத்துல அமைச்ச மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டியைப் பார்த்தேன். அப்போ இருந்தே எனக்கு மழைநீர்ச் சேகரிப்புல ஆசை வந்துடுச்சு. ‘பசுமை விகடன்’லயும் மழைநீர்ச் சேகரிப்பு பத்தின சில செய்திகளைப் படிச்சிருக்கேன். அதுக்கப்புறம் ஒரு நெருக்கடியான சூழல் உருவானதும், நான் ஆசைப்பட்ட மாதிரி மழைநீர்ச் சேமிப்பு நிலையத்தை அமைச்சுட்டேன்” என்ற தாயுமானவன் தனது மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை நம்மிடம் காட்டியபடி மேலும் பேசத் தொடங்கினார்.

“எங்க பகுதியில் கடந்த 50 நாள்ல 8 முறை மழை பெஞ்சது. ரொம்பப் பெரிய அளவு மழைனு சொல்லிட முடியாது. ஆனாலும், அது மூலமாவே 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைச்சிருக்கு. எங்க குடும்பத்துல மொத்தம் 6 பேர் இருக்கோம். இரண்டு மாடுகள் இருக்கு. கடந்த 50 நாள்கள்ல குடிக்க, துவைக்க, குளிக்க, மாடு குளிப்பாட்டனு எல்லாத் தேவைக்கும் இந்தத் தண்ணீரைத்தான் பயன்படுத்திட்டிருக்கோம். இப்போ 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர்த் தொட்டியில இருக்கு. தொட்டியோட மொத்தக் கொள்ளளவு 65 ஆயிரம் லிட்டர். சாதாரண அளவு மழை பெஞ்சாலே போதும், எங்களுக்கு வருஷம் முழுக்கத் தண்ணீர் கிடைச்சுடும். இனி, எங்களுக்குத் தண்ணீர்ப் பிரச்னையே இல்லை” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு: தாயுமானவன், செல்போன்: 96985 82103.


‘‘இப்படித்தான் மழை நீரைச் சேகரித்தேன்!’’

“எங்க வீட்டோட மொட்டைமாடி 2,000 சதுர அடி. தனியா 300 சதுர அடியில் ஓட்டுக் கட்டடம் இருக்கு. தரையில காலி இடம் 200 சதுர அடி. ஆக, மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 2,500 சதுர அடி. மொட்டை மாடியில விழக்கூடிய மழைத் தண்ணீரைக் குழாய் மூலமா கீழே கொண்டு வர்றோம். அதேமாதிரி ஓட்டுக் கட்டடத்துல இருந்து வர்ற தண்ணீர், திறந்த வெளியில் கிடைக்கிற தண்ணீர் எல்லாமே குழாய் வழியா ஓர் இடத்துல வந்து சேரும். அந்தத் தண்ணீரை 100 அடி தூரம் குழாய் மூலமாகக்கொண்டு போய் மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டியில் விடுறோம்.

மழைத் தண்ணீர் விழுற பகுதிகளை எப்பவும் சுத்தமா வெச்சிருப்போம். அதோட குழாய் முனையில வடிகட்டறதுக்காக வலை கட்டி இருக்கிறோம். கொஞ்சம் நஞ்சம் இருக்குற தூசு தும்புகளும் இதுல தேங்கிடும்.

மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டி 24 அடி நீளம், 11 அடி அகலம், 10 அடி உயரம் கொண்ட சிமென்ட் தொட்டி. அதோட நடுப்பகுதியில் 11 அடி நீளம் 10 அடி அகலம் 3 அடி உயரம் கொண்ட வடிகட்டுற அமைப்பு இருக்கு. குழாய் மூலம் வர்ற மழைநீர், இந்த வடிகட்டும் அமைப்புலதான் விழும். அதுல 1 டன் மணல், 750 கிலோ கூழாங்கல், 250 கிலோ வேலிக்கருவை கரித்துண்டுகள், 750 கிலோ சிறு ஜல்லி, 750 கிலோ பெரு ஜல்லினு அடுக்கடுக்காகப் போட்டிருக்கோம். கீழே சல்லடை இருக்கும். இதுமூலமா வடிகட்டப்பட்டுச் சுத்தமான தண்ணீர்த் தொட்டியில் நிரம்பும். அதுல இருந்து குழாய் மூலமா தண்ணீரை வெளியில எடுத்துப் பயன்படுத்துறோம். தொட்டியைக் கான்கிரீட், வாட்டர் புரூஃப் சிமென்டெல்லாம் பயன்படுத்தி தரமா கட்டியிருக்கிறோம். இது நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு உழைக்கும். ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை வடிகட்டுற அமைப்புல இருக்குற பொருள்களை மட்டும் தண்ணியில அலசி மறுபடியும் போடணும்” என்கிறார் தாயுமானவன்.

http://www.vikatan.com/pasumaivikatan/2017-sep-10/current-affairs/133878-magnificent-rainwater-harvesting.html

About editor 3016 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply