பழனிச்சாமி – பன்னீர்ச்செல்வம் அதிமுக அரசு நித்திய கண்டம் பூரண ஆயுள் போல தள்ளாடிக்

பழனிச்சாமி – பன்னீர்ச்செல்வம் அதிமுக அரசு நித்திய கண்டம் பூரண ஆயுள் போல தள்ளாடிக் கொண்டிருக்கிறது!

நக்கீரன்

மிழக முதல் அமைச்சர்கள், அமைச்சர்கள், சட்ட சபை உறுப்பினர்களை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. பொதுவாக முதல் அமைச்சரைக் கவிழ்க்க ஏனைய அமைச்சர்கள் சூழ்ச்சி செய்வதும் உதவிக்கு அடியாட்களை அமர்த்துவதும் முதல்  அமைச்சரைத் தீர்த்துக் கட்டிவிட்டு இன்னொரு அமைச்சர் ஆட்சியைப் பிடிப்பதும் திரைப்படக் கதைகளில் இடம் பெறும்.

ஆனால் இன்று தமிழ்நாட்டு அரசியலில் திரைப்படங்களில் இதுவரை பார்க்காத திகில் காட்சிகள், திடீர்த் திருப்பங்கள்,  கழுத்தறுப்புக்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் வேலி பாயாமல் இருப்பதற்கு  உல்லாச நட்சத்திரக் ஹோட்டல்களில் அடைத்து வைப்பது போன்ற காட்சிகள் நாளும் பொழுதும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.Image result for மோடி ஷா

தமிழக அரசியலில் கொள்கை, கோட்பாடு, நேர்மை எதுவுமே  கிடையவே கிடையாது. அண்ணா சொன்னது போல பதவி தோளில் போடும் துண்டு கொள்கை நாம் இடையில் கட்டிக் கொள்ளும் வேட்டி  என்பது போல்  யாரும் நடப்பதில்லை.  தமிழக அரசியல் பதவி  என்ற மூன்றெழுத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது.

சில மாதங்களாக எடப்பாடி பழனிச்சாமியும்   ஒ.பி. பன்னீச்செல்வமும்  கீரியும் பாம்பும் போல இருந்தார்கள். அதிமுக வை இரண்டாக உடைத்து தனித்தனிப் பெயரில் தனித்தனி கட்சிகளாக பிரிந்து மல்லுக் கட்டினார்கள். அதிமுக இன்  இரட்டை  இலைச் சின்னம் முடக்கப்பட்டது.  ஒரேயொரு ஒற்றுமை. பழனிச்சாமி கட்சிக்கு அதிமுக அம்மா அணி என்று பெயர். பன்னீர்ச்செல்வத்தின் கட்சிக்க அதிமுக புரட்சித் தலைவி அணி என்று பெயர்.Image result for தமிழ்நாடு எடப்பாடி பன்னீர்ச்செல்வம்

இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணையப்  போவதாக செய்திகள் வரும். பின்னர் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்பார்கள். இணைப்புப் பற்றிய பேச்சுவார்த்தைகள் யார் யாருக்கு அமைச்சர் பதவிகள் என்பதைச் சுற்றியே இருக்கும். அதில் உடன்பாடு காண்பதில்தான் இழுபறி. ஜெயலலிதா டிசெம்பர் 05,2016 இல் இறந்த போது  முதலமைச்சர் பதவியைப் பிடிக்கப் பத்துப்பேர் கனவு கண்டார்களாம்.

சில நாட்களுக்கு முன்னர் பன்னீர்ச்செல்வம்  முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சி ஊழல் ஆட்சி என்று சாடினார்.   அப்படிச் சொன்ன பன்னீர்ச்செல்வம் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர்  பதவிகளைப் பெற்றுக் கொண்டு பழனிச்சாமியின் ஆட்சியில் சேர்ந்து கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த  இருவருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

மீன் எப்படி தண்ணீர் இல்லாமல் வாழ முடியாதோ அதே போல் தமிழக அரசியல்வாதிகள் பதவிகள் இல்லாமல் வாழ முடியாது. ஒரு வாட்டி சட்ட சபை உறுப்பினராக இருந்தால் போதும். அடுத்து  எப்போது அமைச்சராகலாம் என்ற கனவிலேயே  அவர் இருப்பார்.

அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவது. கைப்பற்றிய பின்னர் தொடர்ந்து  பதவியை தக்க வைக்க எல்லாவிதமான  முயற்சிகளையும் மேற்  கொள்வது.

கொஞ்சக் காலத்துக்கு முன்னர் நடிகர் ரஜனி தனது இரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கள் என்ன சொன்னார்கள்? “தலைவா! இப்படி எத்தனை நாள்கள் அதிகாரம், பதவி இல்லாமல் காலத்தைக் கழிப்பது. அரசியலில் குதிக்கிற முடிவை சீக்கிரம் எடுங்க தலைவா” என்று இரசிகர்கள் வெளிப்படையாக தங்களது  ஆசையை வெளியிட்டார்கள்.

அதிமுக, திமுக போன்ற கட்சிகளில்  மாவட்டச் செயலாளர் பதவிக்கே  பலத்தை போட்டி இருக்கிறது. காரணம் மாவட்டச் செயலாளராக வந்தால் பணம் கொட்டோ கொட்டோ என்று கொட்டத் தொடங்கிவிடும்.  மாவட்டத்தில்  நடக்கிற அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்தகாரர்கள் கேள்வித் தொகையில் 45 விழுக்காட்டை அமைச்சர் தொடங்கி வட்டச் செயலாளர் வரை  பங்கு பிரித்துக் கொள்வார்கள். ஒரு பள்ளிக்கூடத்தை அல்லது மருத்துவமனையை கட்ட ஒரு கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஒப்பந்தகாரர்  அதில் 45 இலட்சத்தை அமைச்சர் முதல் கொண்டு வட்டச் செயலாளர் வரை பிரித்துக் கொடுத்துவிட்டு மிகுதி 55 இலட்சத்தில்தான் கட்டிடத்தைக் கட்டி முடிப்பார். கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கு இதுதான் காரணம். இது ஒரு எழுதாத வேதம்.Image result for டிடிவி தினகரன்

மூன்றாகப் பிரிந்த அதிமுக அணிகளில் இரண்டு ஒன்றாக வந்தாலும்  தினகரன் தலைமையிலான அதிமுக  அணிக்கும்  ஒன்றாக இணைந்த  பழனிச்சாமி – பன்னீர்ச் செல்வம் அணிக்கும் இடையில் குத்து வெட்டு தொடர்கிறது.

சசிகலா நடராசனால் துணைச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட டி.டி.வி.  தினகரன் தனக்கு 21 சட்ட சபை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறார். இவரது அணியைச் சார்ந்த 19 சட்ட சபை உறுப்பினர்கள் ஆளுநர் வித்தியாசாகர்    ராவைக் கண்டு பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக மனுக் கொடுத்தார்கள். இதனால் சட்ட சபையில் பழனிச்சாமி – பன்னீர்ச்செல்வம் அணி பெரும்பான்மையை இழந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

மொத்தம் 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாட்டுச் சட்டசபையில் 2011 மே மாதம் நடந்த தேர்தலில் அதிமுக க்கு 134 இருக்கைகள் கிடைத்தன. ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து இந்த எண்ணிக்கை 133 ஆகக் குறைந்துள்ளது. இதில் தினகரன் ஆதரவாளர்கள் 21 பேரையும்  கழித்தால் அதிமுக இல் பழனிச்சாமி – பன்னீர்ச்செல்வத்தின் அணிக்கு 112 சட்டமன்ற சபை உறுப்பினர்களது ஆதரவு மட்டுமே உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்ட சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.

எதிர்க்கட்சியான  திமுக  சட்டசபையக் கூட்டுமாறு கேட்டும் ஆளுநர் சட்ட சபையைக் கூட்ட மறுத்து வருகிறார்.  அதற்கு மத்திய அரசின் தலையீடுதான் காரணம். இன்று பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் உள்ள  29 மாநிலங்களில் 13 மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது. பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய  ஜனதா தளத்தோடு சேர்ந்து அரசு அமைத்துள்ளது.

தமிழகத்தில் பாஜக இன்  செல்வாக்கு  மிகக் குறைவாக  இருக்கிறது. 2014 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  7 தொகுதிகளில்  தனித்துப் போட்டியிட்ட  பாஜக ஒரேயொரு தொகுதியில் மட்டும் வென்றது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் (மே 2016) ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி வைத்து 234 தொகுதிகளிலும் (பாஜக – 141)  தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. மொத்தம் 12,28,693 (2.86 விழுக்காடு)  வாக்குகளே அந்தக் கூட்டணிக்குக் கிடைத்தது.

எனவே  குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பது போல  பாஜக தமிழ்நாட்டில் நிலவும் குழப்பமான அரசியலை வைத்துக் காலூன்ற முயல்கிறது. பழனிச்சாமி – பன்னீர்ச்செல்வம் அணிகளை இணைத்து வைத்தது   பிரதமர் மோடி,   பாஜக  தலைவர்  அமித் ஷா  மற்றும்  மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள் எனக்  கூறப்படுகிறது. இருந்தும் தமிழ்நாட்டில் பாஜக  ஆட்சியைப் பிடிப்பது அடுத்த  நூற்றாண்டில் கூட  சாத்தியம் இல்லை.

பாஜக இன் அடிப்படைக் கோட்பாடு இநதுத்துவம் அல்லது இந்துத்துவா. இந்தக் கோட்பாடு  வினாயக் தாமோதர் சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட கருத்தியல் ஆகும். இந்துத்துவம் என்பது எந்தவொரு சமரசமும் இன்றி இந்துக்களின் நலன் அவர்களின் வழிப்பாட்டு,பண்பாட்டு பாரம்பரிய உரிமைகளை பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் வரையறுக்கப்பட்ட ஒரு கோட்பாடாகும். இந்து என்பதும், இந்துத்துவா என்பதும் ஒன்றல்ல. அடிப்படையில் வேறுவேறானவை. இந்து என்பது சாதாரண மத உணர்வாகும். இந்துத்துவா என்பது மத அடிப்படைவாத அரசியலாகும். இது முதலாளித்துவ அரசியல் கோட்பாடாகவே முன்வைக்கப்படுகிறது.

பெரியார், அண்ணா பிறந்த   நாட்டில் இந்துத்துவா கோட்பாடு வேர்விட முடியாது. வேத காலத்திலேயே விமானம் விட்டவர்கள் நாம்’, ‘புராண காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை வைத்தியம் செய்தவர்கள்  நாம்’ என்ற பொய்களை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இருக்கிற தலையிடிகள் போதாதென்று  நீட் உருவில் பெரிய தலையிடி உருவாகியுள்ளது. அனிதா (17) என்பவர் ஒரு தலித் மாணவி.  அவரது பிறப்பிடம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம். அவரது தந்தை  சுமை தூக்கும் கூலித் தொழிலாளி. அந்தக் குடும்பம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த குடும்பம். அனிதா பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தனது தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் மாத்திரம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பின்தங்கிய  நிலையில் இருந்தும் படிப்பில்  திறமையுள்ள இளம் மாணவி.  பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 1200 க்கு 1176 மதிப்பெண் பெற்றார். மருத்துவராக வரவேண்டும் என்று கனாக் கண்டார். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடியவர்.  ஆனால் நீட் தேர்தலில்  அவர் எடுத்த புள்ளிகள் 720 க்கு 86 புள்ளிகளே. இதனால் தனக்கு  மருத்துவம் படிக்க இடம் கிடைக்காது  என்ற விரக்தியில் இந்த மாதம் முதலாம் நாள் ீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தமிழகத்தில் நீட்,  பாஜக, தமிழக அரசு  மூன்றுக்கும் எதிராக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டங்களைத்  தொர்ச்சியாக  நடத்தி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இருக்கிற தலையிடிகள் போதாதென்று நீட் உருவில் பெரிய தலையிடி உருவாகியுள்ளது.Image result for dalit anitha

நீட் என்றால் என்ன? National Eligibility – cum -Entrance Test  என்பதன் சுருக்கமே நீட் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தேர்வு இந்திய மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தமிழிலும் எழுதலாம். இந்தத் தேர்வை ஓர் ஆண்டுக்கு தள்ளிவைக்குமாறு  தமிழக அரசு ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியது. அதற்கு மத்திய அரசின் மூன்று அமைச்சர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். இருந்தும் திடீரென  மத்திய அரசு  அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டது. கடந்த ஆண்டு மத்திய அரசு தமிழகத்துக்கு விதி விலக்கு அளித்திருந்தது.

தமிழகத்தில் எக்கச்சக்கமான தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நடிகர் விஜயகாந்தின்  மச்சானுக்கு ஒரு  மருத்துவக் கல்லூரி  இருக்கிறது. பாமக தலைவர் மருத்துவர் இராமதாசுக்கு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. ஆனால் அவற்றில் சேர இலட்சக் கணக்கில் பணம் தேவைப்படுகிறது. Psg, meenakshi, SRM  மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கு கோடி கணக்கில் பணம் வேண்டும். கோவை PSG College இல்  அன்பளிப்பாக  மட்டுமே  75 லட்சம்  வாங்குகிறார்கள்.  Meenakshi College இல் 60 லட்சம், SRM சொல்லவே வேண்டாம். தமிழ்நாட்டில் கல்வி  அதிக வருவாய் ஈட்டும்  வியாபாரமாக்கப் பட்டுள்ளது.

பழனிச்சாமி – பன்னீர்ச்செல்வம் அரசு நித்திய கண்டம் பூரண ஆயுள் என்று சொல்வார்களே? அது போல தள்ளாடிக் கொண்டு  இருக்கிறது.  எந்த நேரமும் அரசு கவிழலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது.  அனித்தாவின் இறுதிச் சடங்கில் எல்லாக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.  தினகரனும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம் இருவரும் போகவேயில்லை.  பயம் காரணமாக இருக்கலாம்.

இப்போது தினகரன் நீட்   தேர்வு முறையை இரத்து செய்யக்  கோரி செப்தெம்பர் 09 ஆம் நாள்  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இன்னொரு புறம் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்  முரசொலியின் பவள விழாவை பிரமாதமாகக் கொண்டாடி வருகிறார்.  இதில் வைகோ, திருமாவளவன், கமலகாசன், ரஜனி,  இடதுசாரி கம்யூனிட் கட்சிகள் உட்பட 21 கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. இது அடுத்த தேர்தலுக்கு திமுக ஒரு  மெகா கூட்டணியை உருவாக்க முயன்று வருவதைக் காட்டுகிறது. எப்போதெல்லாம் அதிமுக இரண்டாக பிளவுபடுகிறதோ அப்போதெல்லாம் திமுக தேர்தலில் வெற்றிபெற்று  வந்திருக்கிறது. அந்த வரலாறு திரும்பக் கூடும். (15-09-2017)

 

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply