ஒரு  இனிமையான  இசை மாலைப் பொழுது!

ஒரு  இனிமையான  இசை மாலைப் பொழுது!

திருமகள்   

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு இசை நிகழ்ச்சியை இரண்டரை மணித்தியாலங்கள் உட்கார்ந்து அலுப்புத் தட்டாமல் சுவைக்க முடிந்தது. பிரியங்கா கிருஷ்ணதாசன், அபிராமி கிருஷ்ணதாசன்  சகோதரிகளது இசை அரங்கேற்றம் சீன பண்பாட்டு மையத்தில் கடந்த ஓகஸ்ட் 15 இல் அரங்கேறியது.

 இவர்கள் கலைமாமணி குலநாயகி விவேகானந்தனின் மாணவிகள். கலைமாமணி குலநாயகி விவேகாந்தனின் உடன் பிறப்பு கலைமாமணி பூஷணி கல்யாணராமன் அவர்களிடமும் இசை பயின்றுள்ளார்கள். சென்னையில் வாழும் அவர் இந்த இசை அரங்கேற்றத்துக்கு முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். எனவே குடும்பமே கர்நாடக இசைப் பின்னணியை கொண்டிருக்கிறது.

பெரும்பாலான பெற்றோர்கள் இசை ல்லது நடனம் சோறு போடுமா என்ற நினைப்பில் ங்கள் பிள்ளைகளுக்கு இசை கற்றுக் கொடுப்பதில்லை. நிச்சயமாக அரங்கேற்றம் காணுமளவிற்கு இசை கற்க வாய்ப்பளிப்பதில்லை. இரண்டொரு ஆண்டு பயிற்சிக்குப் பிறகு நிற்பாட்டிப் போடுவார்கள். ஆனால் பிரியங்கா, அபிராமி கோதரிகளது  பெற்றோர்கள் திரு கிருஷ்னதாசன், திருமதி பாமினி கிருஷ்ணதாசன்  இதற்கு விதி விலக்கு. நேரம், பொருள் இரண்டையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகள் கர்நாடக இசையை தக்க ஆசிரியையிடம் முறையாகப்   படிக்க வைத்து அரங்கேற்றமும் செய்துள்ளார்கள்.

இந்த இசை அரங்கேற்றத்துக்கு  வாழ்த்துச் செய்தி அனுப்பிய தமிழிசை கலாமன்றத் தலைவர் தம்பையா ஸ்ரீபதியும்  இதனைக் குறிப்பிட்டிருந்தார். “இந்த இரண்டு பெண்களையும் மேடைக்குக் கைப்பிடித்து வந்த பெற்றோர்கள் பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியவர்கள். அவர்களது ஆர்வம் எமது இனத்தின் கலை வளர்ச்சிக்குச் செய்யும் பங்களிப்பாகும்.”

விழா மங்கல விளக்கேற்றல், வினாயகர் பூசை, தமிழ்மொழி வாழ்த்து, ஓ கனடா, அகவணக்கம் ஆகியவற்றோடு  தொடங்கியது.  தமிழ்மொழி வாழ்த்துப் பாடிய ஆரணி குலமுருகன் கணீரென்ற குரலில் அழகாகப் பாடினார். பத்தாம் வகுப்புப் படிக்கும் ஆரணி இசையை முறையாக தனது மாமிகளான ஆசிரியை குலநாயகி,  ஆசிரியை  பூஷணி இருவரிடமும் கற்று வருகிறார்.

வழக்கம் போல பிரியங்காவும் அபிராமியும்  தொடக்கத்தில் பாடிய கீர்த்தனைகள் தெலுங்கில் இருந்தன. வேதவினாயக என்ற ஒரு சொல்தான் எனக்கு விளங்கியது. இப்படி தமிழிசை இருக்க தெலுங்கில் கீர்த்தனங்கள் பாடும் மரபு தமிழகத்தில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. 

பொதுவாக தங்களுக்குத் தெலுங்குப் பாட்டுக்களிலும் ஞானம் உண்டென்று காட்டிக் கொண்டால் மட்டுமே தாங்கள் இலக்கணப்படி இசை (சங்கீதம்)  பயின்றவர்கள் என்று மற்றவர்கள் எண்ணிக் கொள்வார்கள் என்ற தாழ்வுச் சிக்கல்  பல இசை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அது காரணமாகவே தெலுங்கு மொழிக்கு இவர்கள் முதன்மை இடம் வழங்குகிறார்கள் என நினைக்கிறோம். ஒரு நூறாண்டுக்கு முன்னர் வாழ்ந்த மகாகவி பாரதியாருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கிறது.

‘எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ. எந்த “வித்துவான்” வந்தாலும் “வாதாபி கணபதிம்’ “ராமநீ ஸமான மெவரு” “மரியாத காதுரா’ “வரமு லொஸாகி” ……. ஐயையோ ஐயைய இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால் திரும்பத் திரும்பத் திரும்ப இந்த ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்த துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.” இது பாரதியார் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. (பாரதியார் கட்டுரைகள்)

இசைக்கு மொழியில்லை என்று சமாதானம் சொல்பவர்கள் இருக்கிறார்கள். மொழிக்கு இசையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்மொழிக்கு இசை வேண்டும். இழவு வீட்டில் பாடும் ஒப்பாரி கூட இராகத்தோடுதான் இருக்கும். இசையே தமிழ் ஆகும், தமிழே இசையாகும்.  ஆரியர் வருமுன்பே, கிமு 2000 ஆண்டுகட்கு முன்னரே, குமரி  நாட்டில் நீடித்து வழங்கிய தலைச்சங்கத் தமிழ் முத்தமிழாயிருந்தது.

தெலுங்கில் பாடும் போது பொதுவாக அவையோர் முகட்டைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.  பின்னர்  தமிழில் பாடும் போதுதான் பாடலின் பொருளை விளங்கிக் கொண்டு  அவையோர் அதனை சுவைதது  கையொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் என மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுவார். பொருள் அறிந்து சொல்லுவார் என்று சொல்லவில்லை. பொருள் உணர்ந்து சொல்லுவார் என்கிறார். பொருளை உணர வேண்டும்.

1985 இல் வெளிவந்த சிந்துபைரவி என்ற திரைப்படத்தில் சங்கீத வித்துவானாக வரும் நடிகர் சிவகுமார் மேடையில்  தெலுங்கில் பாடுவதும் அவரை இடைமறித்த சுகாசினி “நான் உங்கள் ரசிகை என்று கூறிக்கொண்டு, “நீங்கள் ஏன் தெலுங்குப் பாட்டுகளையே பாடுகிறீர்கள்? எல்லோருக்கும் புரியும்படி ஏன் தமிழில் பாடக்கூடாது?’ என்று கேட்கிறாள்.

உனக்கு சங்கீதம் தெரியுமா? பாடத்தெரியுமா?” என்றுஜே.கே.பி கேலியாகக் கேட்க, பாடறியேன், படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன் என்று பாட ஆரம்பித்து, அற்புதமாகப் பாடி, “மரி மரி நின்னே என்று முடிப்பார்.  பாடலை  வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைக்க  கே.எஸ். சித்திரா குரல் கொடுத்திருப்பார்.

சுகாசினி தமிழில் பாடி பெரிய கைதட்டல் வாங்குவதை  இயக்குநர்  பாலச்சந்தர் அழகாகக் காட்சிப் படுத்தியிருப்பார். சிந்துபைரவிதான்  தமிழிசைக்கு முதன் முதலில் இடம்  கொடுத்த திரைப்படம். அதற்குக் கிடைத்த வரவேற்பு தமிழிசைக்குக் கிடைத்த ஒப்புதல் ஆகும். தெலுங்கில் சங்கராபரணம் என்ற திரைப்படம் முழுக்க முழுக்க கர்நாடக இசைக்காக ஓடிய படம். எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மற்றும் கே.எஸ். சித்திரா இருவரும் இனிமையான குரலில் பாடியிருப்பார்கள்.

ன்னொரு  காரணம் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என வருணிக்கப்படும் தியாகராஜர்  (1767-1847) முத்துசுவாமி தீட்சகர் (1776-1835) சியாமா சாஸ்திரிகள் (1762-1827) அவர்கள் இசையுலகில் செலுத்திய  செல்வாக்காகும்.

இவர்கள் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் இயற்றிய ஆயிரக்கணக்கான கீர்த்தகைள்  இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. தியாகராஜர்  நினைவாக அவர் வாழ்ந்து மறைந்த திருவையாற்றில் ஆண்டு தோறும்  இசை விழா கொண்டாடப்படுகிறது.

இம் மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோரின் முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் ஆயிரக்கணக்கான  புகழ்பெற்ற தமிழ் இசைப்பாடல்களை தமிழில் பாடியுள்ளார்கள். ஆனால் மும்மூர்த்திகளுக்கு கிடைத்த புகழ் ஆதி மும்மூர்த்திகளுக்குக் கிடைக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

கி பி 16 ஆம் நூற்றாண்டளவில் சிறப்பு பெற்ற   கர்நாடக இசை  தமிழிசையின் மறுவடிவம் என்றும் கூறப்படுகிறது. மொகமதியர் தென்னாட்டிற்கு வந்தபோது திராவிட நாட்டில் தமிழரசர் வலிகுன்றிக் கருநாடக மன்னர்கள் தமிழகத்தை ஆண்டதால், திராவிட நாட்டைக் கருநாடகம் (கர்நாட்டக்) என்றும் திரவிட இசையாகிய தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றும் அழைத்தனர். கருநாடகம் என்னும் சொல்லும் கருநடம் (கன்னடம்) என்னும்  மொழியும் தமிழின் திரிபே.

கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ராகம் என்பது அராகம் என்னும் தமிழ்ச்சொல்லிலின் திரிபு ஆகும்.

இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் உருவாக்கப்படுகின்றன.

நாதம் அல்லது ஒலி என்ற சொல்லுக்கு இசை மேதைகள்   “நா” என்று சொன்னால் பிராணன் அல்லது உயிர், “த” என்றால் அக்னியென்றும் கூறியிருக்கிறார்கள். இவையிரண்டும் சேரும்போது ஏற்படும் ஒலியே “நாதம்” எனப்படும். இந்த நாதமே “ஓம்” எனும் ஓங்கார மந்திரமானதென்று கூறுகிறார்கள். சிவபெருமானின் முகங்களிலிருந்து தோன்றியவையே சப்தஸ்வரங்கள் என்ற ஐதீகமும் உண்டு. இசையை  குருமுகமாய் கேட்டு, அறிந்து பழகும் மரபு தொன்று தொட்டு இருந்து வருகிறது.

தமிழிசை எவ்வளவு தொன்மையானது என்பதற்கு தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் சான்று பகருகின்றன. இசைக்கு இலக்கண நூல்கள் இருந்ததை தொல்காப்பியம் ‘நரம்பின்மறை’ எனக் குறிக்கிறது.  மறை என்றால் நூல்.

அளபு இறந்து இசைத்தலும்  ஒற்று இசை  நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.  (தொல். எழுத்து 33)

இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும் ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் பொருள்.

உலகிலேயே முதன்முதல் இலக்கிய முறையாய்ப் பண்படுத்தப் பெற்றதும் இசை நாடகம் முதலிய பல அருங்கலை நூல்களெழுந்தது தமிழ் மொழியேயாகும்!

தமிழிசை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம்   போன்ற நூல்களிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. செம்மொழியில் ஏழிசை என குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே  ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.  சுரம் தாளம் பாணி என்பவையும் தமிழ்ச்சொற்களே.

தமிழிசையை வளர்த்த பெருமை கிபி 6 ஆம்  நூற்றாண்டில் தொடங்கி  10 ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய  சைவசமய மறுமலர்ச்சிக் காலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி பழந்தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தனர்,

சிலம்பு அரங்கேற்றுக் காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை  அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன. ஆம்பல் பண், காஞ்சிப் பண், காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழகத்தில் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரு இசைகளிருந்ததாக (ராகம்) சிலப்பதிகாரம் கூறுகிறது. பிங்கலந்தையில் 103 தாய்ப்பண்களும் (மேளகர்த்தா இராகங்கள்) பன்னீராயிரம் பண்களும் குறிப்பிடப்படுகின்றன. ஆபிரகாம் பண்டிதர்  எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் நூலில் ஒவ்வொரு பாலைக்கும்(இராகத்திற்கும்) பிறக்கும் பண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த இசை அரங்கேற்றத்தில் இடைவெளி விடப்படவில்லை. தமிழ்பாடல்கள் பாடப்பட்ட போது அவை நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தது. குறையேதும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடலை சுருதி பிசகாது சகோதரிகள் பாடினார்கள். இந்தப்பாடல் இடம்பெறாத கர்நாடக இசை மேடை கிடையாது என்று சொல்லலாம். இந்தப் பாடலை எழுதியவர்  இராஜகோபாலாச்சாரியார். தமிழறிஞர் மீ.ப. சோமசுந்தரம் மீ.ப.சோமு அவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967 இல் ‘கல்கி’ இதழில்  வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு இசை வடிவம் அமைத்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை பாரதரத்தினா எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களால் 1979/80 இல்  பாடப் பெற்றது. பின்னர்  இசையுலகில் மிகவும் புகழடைந்தது.

ஓகஸ்ட் 15 இந்தியத் திருநாட்டின்  சுதந்திர நாள ஆகும்.  மகாகவி பாரதியார் இயற்றிய ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்ற பாடலைப் அகாகப் பாடினார்கள். அன்றைய சிறப்பு விருந்தினர்களில் ஒருவருமான தம்பையா ஸ்ரீபதி அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க இந்தப் பாடல் பாடப்பட்டது என்பதை அவரே பேசும் போது சொன்னார். நான்கு நாள்களில் பாடலை நெட்டுருப்பண்ணி தாளத்தோடு  இரண்டு சகோதரிகளும் பாடினார்கள் என்பதை நம்பமுடியவில்லை.

இசைமேடை களைகட்ட வேண்டும் என்றால் பாரதியார் பாடல்களைப் பாட வேண்டும். பாரதியாரின் ஆசைமுகம் மறந்து போச்சே இதையாரிடம் சொல்வேனடி தோழி!   நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில் நினைவு முகம் மறக்கலாமோ…….. என்ற பாடலை இருவரும் நேர்த்தியாகப் பாடினார்கள். இசையுலகில்  புகழோடு விளங்கிய சூலமங்கலம் சகோதரிகளை நினைவு படுத்தினார்கள்.

பாட்டிசைக்கு மெருகூட்டியவர்கள் பக்க வாத்தியக் கலைஞர்கள்.  வயலின் வாசித்த கணேஷ் பிரசாத், தண்ணுமை (மிருதங்கம்) வாசித்த தில்லி சாயிராம், கடம் வாசித்த மயூரன் தனஞ்செயன், தப்ளா வாசித்த யஞ்சன் இராஜ்மோகன் மற்றும் தம்புரா வாசித்த ஆரணி குலமுருகன் எல்லோரும் தங்கள் தங்கள் வித்துவத்தை காட்டினார்கள். தண்ணுமை வாசித்த தில்லி சாயிராம் வெளியூர்காரர்  என்பதை அவரது வாசிப்பில் இருந்து  எளிதாகக் கண்டு பிடிக்க முடிந்தது.

சிறப்பு விருந்தினர் திரு சிவஞானம்  சிவபாலன் (வேல்ஸ்) இசை ஆசிரியை கலைமாமணி  குலமோகன் விவேகானந்தன், இசை ஆசிரியை பூஷணி கல்யாணராமன் ஆகியோருக்கும்  பக்க வாத்தியக் கலைஞர்கள் எல்லோருக்கும் பொன்னாடை போர்த்தி ெறுமதிமிக்கப் பரிசுகள் வழங்கி மதிப்பளித்தார். 

சிறப்பு விருந்தினர்கள்  திரு லோகன் கணபதி (மார்க்கம் மாநகர சபை உறுப்பினர்) திரு லோகேந்திரலிங்கம்   முதன்மை ஆசிரியர் உதயன்,  தமிழிசைக் கலா மன்றத் தலைவர் திரு தம்பையா ஸ்ரீபதி ஆகியோர் உரையாற்றினார்கள்.

மேடையில் பேசிய  எல்லோரும் இப்படியான இசை அரங்கேற்றங்கள் எமது இனத்தின்  அடையாளத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும்  கையளிக்க துணை செய்யும் எனப் பேசினார்கள். ஆனால் இரண்டொருவர் தவிர எஞ்சிய எல்லோரும் ஆங்கிலத்திலேயே வெளுத்து வாங்கினார்கள். நன்றியுரை கூட ஆங்கிலத்தில்தான் இருந்தது.  அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் முற்றிலும் ஆங்கில மொழியில்.  இப்படியே போனால் அடுத்த தலைமுறையின் வீட்டு மொழியே ஆங்கிலமாக மாறிவிடக் கூடும்!

நிகழ்ச்சியை அழகான தமிழில் இரத்தினச் சுருக்கமாக இரமணன் சந்திரசேகரமூர்த்தி  தொகுத்து வளங்கினார். முத்தமிழில் ஒன்றான இசை பற்றிய ஞானம் கொஞ்சம் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும்.

இனிமையான இசைக்கு நம்மை மயக்கும் சக்தி மட்டுமல்ல பல்வேறு நோய்களை குணமாக்கி காக்கும் சக்தியும் உள்ளதாம். 

மொத்தத்தில் அன்றைய மாலை எல்லோருக்கும்  இனிமையான  இசைக் கச்சேரியைக் கேட்டு மகிழ்ந்த  ஒரு  மாலைப் பொழுதாக  அமைந்திருந்தது. சகோதரிகள் பிரியங்கா, அபிராமி இருவரது இசைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.    

About editor 3120 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply