இராசி வட்டம் (சக்கரம்) சோதிடர்களின் மகுடி!
நக்கீரன்
மனிதர்களுக்கு உடல்நலக் குறைவு, தொழிலைத் தொடங்கும் போது அல்லது செய்கிற தொழிலில் பின்னடைவு ஏற்படும் போது கோள்கள், நட்சத்திரங்கள் பற்றிய நினைப்பு வருகிறது. அப்படிப்பட்டவர்கள் ‘கிரகம் சரியில்லை. எதற்கும் குறிப்பைச் சாத்திரியாரிடம் காட்டுவோம்’ என சாதகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சோதிடர்களிடம் ஓடுகிறார்கள்.
திருமணத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பொருத்தம் பார்க்காமல் திருமணம் இல்லை என்ற மூட நம்பிக்கை ஒரு நோய் போல் தமிழ்ச் சமுதாயத்தில் ஆழப் புரையோடிப் போய்விட்டது.
திருமணப் பேச்சு தொடங்கும் போதோ அல்லது முன்னரோ ஆண் அல்லது பெண் இவர்களது நட்சத்திரங்கள் என்ன என்று கேட்கிறார்கள். வானியலை விட்டுவிடுவோம் சோதிடத்தைப் பற்றியே எந்த அறிவும் இல்லாதவர்கள் ஆண் அல்லது பெண்ணின் நட்சத்திரம் என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் பொருத்தம் நட்சத்திரத்தை மட்டும் பார்த்துச் சொல்வதில்லை. அல்லது இராசியை மட்டும் வைத்துப் பார்ப்பதில்லை.
திருமணப் பொருத்தம் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், இராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. திருமணப் பொருத்தங்களின் எண்ணிக்கை 21 என காலமிர்தம் என்னும் சோதிட நூல் கூறுகிறது. ஆனால் இன்று பத்து அல்லது பன்னிரண்டு பொருத்தங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்யலாம் என சோதிடர் சொல்லுவார். இல்லையென்றால் சாதகம் பொருந்தவில்லை எனவே திருமணம் செய்யக்கூடாது எனச் சோதிடர் சொல்வார். சாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான் என்ன?
மேற்கொண்டு எழுதுமுன் சோதிடத்தின் அடிப்படை என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.
கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (ஓரை வட்டம் எனப்படும். ஆங்கிலத்தில் (Zodiac) எனப்படுகிறது. இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 8 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(அ) இராசிச் சக்கரத்தின் (Zodiac) இருபுறமும் காணப்படும் 12 இராசிகள்.
(ஆ) இராசிச் சக்கரத்தைப் பிரிப்பதால் வரும் 12 இராசி வீடுகள்.
(இ) இராசிச் சக்கரத்தை வலம் வரும் 9 கோள்கள்.
(ஈ) இராசிச் சக்கரத்தின் பின்புலத்தில் காணப்படும் 27 நட்சத்திரங்கள்.
பன்னிரண்டு இராசி மண்டலங்களும் (விண்மீன் கூட்டங்கள – Constellations) இராசிச் சக்கரத்தின் இருபுறமும் 8 பாகை எல்லைக்குள் காணப்படும் நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்று செயற்கையாக இணைத்துப் பெறப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களாகும். பன்னிரண்டு வீடுகளும் (Houses) 360 பாகை கொண்ட கற்பனையான இராசிச் சக்கரத்தைச் செயற்கையாக 12 ஆல் பிரிப்பதால் பெறப்படுகிறது. முதலாவது வீடு (இலக்கினம்) தலையைக் குறிப்பதாகவும் அதற்கு அடுத்த 2 ஆவது வீடு முகம் கண்கள் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் இப்படியே வரிசையாக உடல் உறுப்புக்களை கீழ்நோக்கி 12 வீடுகளுக்கும் ஒதுக்குகிறார்கள். .
இந்த இராசி சக்கரத்தில் காணப்படும் இராசிகளுக்குரிய சின்னங்களுக்கும் (மேடம், இடபம் …..) வானத்தில் காணப்படும் இராசி மண்டலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சோதிடர்கள் சொல்கிறார்கள். விண்வெளியில் தொலை தூரத்தில் நட்சத்திரங்கள் இருப்பது உண்மை. ஆனால் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட பெயர்களும், சின்னங்களும் செயற்கையாக மனிதனால் கொடுக்கப்பட்டவை ஆகும்.
இராசிச் சக்கரமும் ஞாயிறு செல்லுமாப்போல் தோன்றும் ஒரு கற்பனை வட்டமே! ஆதி மனிதன் விண்ணில் ஞாயிறு செல்லும் பாதையை (இராசி வட்டத்தை) அண்ணாந்து பார்த்த போது சில விண்மீன் தொகுதிகள் அல்லது கூட்டங்கள் அவனது கண்களுக்கு மேடம் (ஆடு) இடபம் (எருது) மிதுனம் (ஆண் பெண் உருவம்) கடகம் (நண்டு) சிம்மம் (சிங்கம்) கன்னி (பெண்) துலாம் (தராசு) விருச்சிகம் (நட்டுவக்காலி) தனுசு (வில்) மகரம் (கடற்குதிரை) கும்பம் (குடம்) மீனம் (இரட்டைமீன்) போன்று காட்சியளித்தன. எனவே இராசி என்பது வான வீதியில் மனிதன் தன் ஊனக் கண்ணால் பார்த்த விண்மீன் தொகுதிகளுக்கு அவன் கொடுத்த கற்பனை உருவமாகும். கிரேக்கமொழியில் Zodiac என்ற சொல்லுக்கு விலங்குகள் என்பது பொருளாகும். இதனால்தான் இந்தியர்களது கண்ணுக்கு இடபமாகவும் விருச்சிகமாகவும் (நட்டுவக்காலி) தோன்றிய இராசிகள் சீனர்களது கண்ணுக்கு முறையே எலியாகவும் பாம்பாகவும் தோன்றியிருக்கிறது!
சோதிடத்தி்ல் இராசி சக்கரம் என்ற ஒரு பொறிமுறை இருக்கிறது. இதற்குள்தான் இந்த சோதிடர்கள் 12 வீடுகள், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு இராசி என 12 இராசிகள், ஒன்பது கோள்கள் (கிரகங்கள்) ஒரு இராசிக்கு இரண்டே கால் நட்சத்திரங்கள் என்ற கணக்கில் 27 நட்சத்திரங்கள் (108 பாதங்கள்) ஆகியவற்றை அடைத்துவிடுகிறார்கள். ஒவ்வொரு இராசிக்கும் ஒன்பது கோள்களில் நிழல் கோள்களான இராகு கேதுவை நீக்கிவிட்டு எஞ்சியவற்றை இராசிகளுக்கு ஒதுக்கி விட்டார்கள். எப்படி ஏழு கோள்களை 12 இராசி வீட்டுக்குள் அடைப்பது? இந்தச் சிக்கலைத் தீர்க்க சோதிடர்களுக்கு வழியா தெரியாது? ஞாயிறு (சூரியன்) சந்திரன் இரண்டுக்கும் தலைக்கு ஒவ்வொன்றாக ஒதுக்கிவிட்டு மிகுதி 5 கோள்களை தலைக்கு இரண்டு இரண்டாக ஒதுக்கியுள்ளார்கள். இவ்வாறு 7 கோள்களையும் 12 இராசி வீடுகளுக்குள் அடைத்துப் போட்டார்கள்.
ஒரு குழந்தை பிறக்கும் போது அண்ட வெளியில் காணப்படும் கோள்கள், இராசிகள், நட்சத்திரங்களை படம் பிடிக்கிற காட்சிதான் இந்த இராசி சக்கரம் என்கிறார்கள். இதனைத்தான் சாதகம் என்றும் சொல்கிறார்கள். பனை ஓலையில் வட்டம் கீற முடியாது. எனவே சாதகத்தை சதுர வடிவில் கீறி வைத்துள்ளார்கள். குழந்தை பிறக்கும் போது இந்த விண் உடலிகளில் (Heavenly bodies) இருந்து புறப்படும் காந்த அலைகள் அந்தக் குழந்தையில் பதிந்துவிடுகிறது. அதன் பின் அந்தக் குழந்தையின் இன்பம் துன்பம், உயர்வு தாழ்வு, கல்வி செல்வம், நோய் நொடி, திருமணம், குழந்தைப் பாக்கியம் ஆகிய எல்லாவற்றுக்கும் காரணியாக அமைந்து விடுகிறது. அதாவது சோதிடம் என்பது இந்த இராசி சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும், கோள்களினால் தோசம் இருப்பின் அதற்குப் பரிகாரம் காண விழையும் ஒரு சாத்திரமாகும்.
இராசிகளையும், கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆண் பெண் அலி என்றும் பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் என்றும் ஆட்சி உச்சம், பகை நட்பு, சமம் நீச்சம், ஆரோகணம், அவரோகணம், பாதங்கள் என்றும் அதி தேவதைகள் என்றும் மனம்போன போக்கில் எந்த விதிக்கட்டுப்பாடுமின்றி (Arbitrary) பிரித்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக ஒவ்வொரு நட்சத்திரத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் குணாதிசியங்கள் கற்பிக்கப்படுகின்றன. இரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் பிறர் புத்திமதி கேட்பவர், தனது காலில் நின்று பெருமைப்பட வாழ ஆசைப்படுபவர், பின்புறம் மச்சம் உள்ளவர் எனப்படுகிறது. (ஜோதிட அமுதம் பக்கம் 50)
மேலும் பெண்ணுக்கு ஆகாத சில நட்சத்திரங்கள் இருக்கின்றன. சில முதல்தர தோசம். சில இரண்டாம் தர தோசம். தோசம் உள்ள நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு (1) குழந்தை பாக்கியம் இல்லாமை (2) கணவர் முதலில் மரணம் அடைவார், (3) கணவன் – மனைவி பிரிவு ஊண்டாகும் (4) கர்ப்பமாக உள்ள சமயத்தில் கணவனுக்கு மாரகம் காட்டும் என சோதிடம் பயமுறுத்துகிறது.
அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு இந்த விளக்கம் மூடநம்பிக்கையாகத் தெரியும். ஆனால் சோதிடம் அறிவியல் அல்ல என்பது சோதிடர்களுக்குத் தெரியும். தெரிந்தும் அதனை நம்பச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். கேட்டால் நம்பிக்கைதான் உலகம் என்று தத்துவம் வேறு பேசுகிறார்கள்.
சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சோதிடம் கோடிகள் புரளும் தொழிலாகத் தோற்றம் பெற்றுள்ளது. செய்தித்தாள்களில் அன்றாட இராசி பலன்களைத் தாங்கிவராத செய்தித்தாளே இல்லை எனலாம்.
“நமது வாழ்வை நிர்ணயிப்பதே கிரகங்களும் அவற்றின் இயக்கங்களும் தான். நமது விதி, கடந்த கால வாழ்க்கை, எதிர்காலம் எல்லாமே கிரகங்களின் கையில் தான் உள்ளது. நீங்கள் சில தகவல்களைத் தந்தால் போதும் உங்களின் சாதகத்தை கன கச்சிதமாக கணித்துச் சொல்லிவிட முடியும். உங்கள் சாதகத்தை கணிக்க வேண்டுமா? எங்கள் சோதிடர் தயாராக இருக்கிறார்.
நீங்கள் தர வேண்டிய விவரங்கள் என்ன? எங்கள் சோதிடருக்கு 3 விவரங்களைத் தந்தால் போதும்.
1. உங்கள் பிறந்த தேதி (நாள், மாதம், ஆண்டு)
2. நீங்கள் பிறந்த நேரம்
3. நீங்கள் பிறந்த இடம்
கட்டணம்: 35 அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ. 1680!” இது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு வார ஏட்டின் சோதிடப் பகுதியில் வந்த தகவல்.
விண் வெளியில் வான் உடலிகளின் (Heavenly Bodies) கோளங்களின் ஒட்டங்கள் அவற்றின் நகர்வுகள் இரண்டும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும் அவற்றின் செயற்பாடுகளிலும் மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட சாத்திரத்தின் அடிப்படையாகும்.
கோள்கள்
சூரியன் (ஞாயிறு Sun)
சந்திரன் (திங்கள் Moon)
செவ்வாய் (Mars)
புதன் (அறிவன் Mercury)
குரு (வியாழன் Jupiter)
சுக்கிரன் (வெள்ளி Venus)
சனி (காரி Saturn)
இராகு (நிழற்கோள்)
கேது (நிழற்கோள்)
இராசிகள்
மேடம் (மேஷம்)
இடபம் (ரிஷபம்)
மிதுனம்
கர்க்கடகம் (கடகம்)
சிங்கம் (சிம்மம்)
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனு (தனுசு)
மகரம்
கும்பம்
- மீனம்
நட்சத்திரங்கள்
அசுவனி தொடங்கி இரேவதி ஈறாகவுள்ள 27 நட்சத்த்திரங்கள்.

ஞாயிற்றின் தோற்றப்பாதை (ecliptic) முழுவதுமாக (360 பாகை) 131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூறு செய்யப்பட்டுள்ளது. அசுவினி ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூறாகும். இரேவதி’ கடைக்கூறாகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 3 1⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு பாதம் எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மேடம் இராசி சக்கரத்தில் முதற் கூறாகும், மீனம் கடைக்கூறாகும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் உள்ள சில காரகப் பலன்களைப் போலவே. ஜெனன இலக்கினம் முதல் விரைய இடம் வரையிலுள்ள துவாதச பாவங்கள் என்று சொல்லப்படும் 12 இராசி இல்லங்களுக்கும் சில காரகப் பலன்கள் உள்ளனவாம்.
சரி. இந்த சோதிட நம்பிக்கை பற்றி இன்றைய அறிவியல் அல்லது வானியல் என்ன சொல்கிறது? அதனை அடுத்த முறை பார்ப்போம். (தொடரும்)
பிரபஞ்சம் என்பது வட சொல் – தூயதமிழில் பேரண்டம் என்றும் ஆங்கிலத்தில் Universe என்றும் அழைக்கப்படுகிறது.
கோடிக்கணக்கான கண்சிமிட்டும் விண்மீன்கள் (Stars) நமது புவிக்கோளின் மிக அண்மையிலுள்ள ஒரு விண்மீன் ஆகிய சூரியன் (Sun) சூரியனைச் சுற்றி ஓடும் கோள்கள் (planets) கோள்களைச் சுற்றி யோடும் துணைக்கோள்கள் அல்லது நிலாக்கள் (Sattelites or Moon) செவ்வாய் (Mars) கோளுக்கும், வியாழன் (Jupiter) கோளுக்கும் இடையில் சுற்றி ஓடும் குறுங்கோள்கள் (Asteroides) சூரியனைச் சுற்றி வரும் வால்மீன்கள் (Comets) விண்மீன்களுக்கு இடையில் காணப்படும் ஆவிமுகில் நெபுலாக்கள் (Nebulal) முதலான விண் உடலிகள் (Celestial Bodies) உள்ளடக்கிய வானகம்தான் பேரண்டம் என்பது. கோடிக்கணக்கான விண்மீன்களின் ஒரு தொகுதி தான் அண்டம் (Galaxy) எனப்படுவது.
கோடிக்கணக்கான விண்மீன்களின் ஒரு தொகுதிதான் பால்மண்டலம் எனப்படுகிறது. இவ்வாறான பால்மண்டலம் அனைத்தின் ஒட்டு மொத்த கூட்டமைப்புத்தான் அண்டம். சற்றேறத்தாழ, 10 ஆயிரம் கோடி விண்மீன் கூட்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றுபோல் சுழன்று வரும் ஓர் அண்டப்பகுதியில் நம் சூரிய குடும்பம் (Solar system) இடம் பெற்றுள்ளது.
இந்தப் பால்மண்டலம் பால்வழி அல்லது பால் வீதி (Milky Way) என அழைக்கப்படுகிறது.
இந்த பால்மண்டலம் அதன் மய்யத்தை அச்சு (Axis) ஆகக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது. ஞாயிறும் அதன் கோள்களும் இந்தப் பால்மண்டலத்தை ஏறத்தாழ மணிக்கு 864,000 கிமீ வேகத்தில் சுற்றிவருகிறது! இவ்வாறு ஒருமுறை சுற்றிவர 25 கோடி ஆண்டுகள் ஆகின்றன.!
அண்டம் ஒரு ‘பன்’ அல் லது ‘ரொட்டி’ அல்லது கைக் கடிகாரம் போன்று உள்ளது. (The general shape of out glalctic system is that of a bun or of a biscuit, or a watch (Hand Book of Every day Seience)
நீளம், அகலம், உயரம் என் னும் அண்டவெளியின் மூன்று அளவுகளும்; காலம் எனப்படும் ஓர் அளவும், ஆக மொத்தம் நான்கு அளவீடுகள் கொண்ட ஒரு நாள் அளவீட்டுக்கால வெளித்தொடர் நிகழ்ச்சியே (Four dimentional space – Time conntinum) இப்பேரண்டம் ஆகும்.
வான மண்டிலப் பொருள்களின் திணிவுக்கு (Mass) ஏற்ப கால வெளிப்புலம் என்னும் பேரண்டவெளி வளைந்து விடுகிறது. ஈர்ப்புலத்தில் (Gravitation Field) நேர்க்கோடு (Straight Line) என்பதே கிடையாது.
புவியின் உருண்டையான நிலப்பரப்பின் மேல் ஒரு மண்புழு ஊர்ந்து செல்வதாக வைத்துக் கொள்வோம் புறப்பட்ட ஓர் இடத்திலிருந்து மேலும் கீழுமாக அல்லது வலம் இடம் ஆக அது ஊர்ந்து செல்லும் போது, அதற்கு புவி எல்லையற்றதாக முடிவே இல்லாததாகப் போய்க் கொண்டிருப்பதாக நினைக்கும்.
இவ் அண்டத்துக்கு எல்லை அல்லது முடிவு அற்றது என்றே நியூட்டன் உட்பட பெரும்பாலான அறிவியலாளர்கள் எண்ணினர். பேரறிஞர் அயின்ஸ்தீன் இவ் அண்டத்தில் நேர்க்கோடு என்பதே கிடையாது. எல்லாம் வட்டங்களே என்கிறார்.
இவ் அண்டத்துக்கு எல்லை இருக்கிறது என்று ஏன் கருத முடியாது? அப்படி எல்லை உள்ளதாகக் கருதினால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற பயங்கரக் கேள்விக்கு விடை கூற வேண்டு வந்துவிடும்!
இவ் அண்டத்தின் ஆரம் 35,000,000,000, ஒளி ஆண்டுகள் (336 கோடி கோடி கிமீ ) ஆகும். ஆரத்தின் தொலைவை வைத்துக் கொண்டு அண்டத்தின் விட்டம், சற்றளவு, புறப்பரப்பு இவற்றைக் கணக்கிடலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.