மணிமேகலையில் பௌத்தப் பக்திநெறி 

அறவழிப்பட்ட பக்தியைப் ‘பக்திநெறி’ என இங்கு பொருள்கொள்ளப்படுகிறது. வெறும் பக்தி எல்லாம் பக்திநெறி எனும் பெயரில் அழைக்கத்தக்கன அல்ல. பக்தி என்பது அகவயப்பட்டது; நெறி என்பது புறவயப் பட்டது. முன்னது சிந்தனை; பின்னது செயல். உணர்வு, எண்ணம், சிந்தனை, கருத்து, கொள்கை, கோட்பாடு, மெய்யியல் என முறைவழிப்படூஉம் எல்லாம் செயல் வழிப்படூஉம் என ஆகும்போதுதான் அவை ‘நெறி’ எனப் பெயர் பெறும் தகுதியைப் பெறுகின்றன. இல்லை யெனில், அவை வெறுமனே அகவயப்பட்டவையாகவே இருந்துவிடும். ஆனாலும் கூட, அகவயப்பட்ட எந்த ஒன்றும் புறவயப்படாமல் இருந்துவிடாது. ஏனெனில், புறத்தின் – பொருளின் – நிகழ்வின் தாக்கத்தால்தான் அகம் உணர்வைப் பெறுகிறது; எண்ணத்தை வளர்க்கிறது; சிந்தனையைப் பெருக்குகிறது; கருத்துக்களை உருவாக்கு கிறது; கொள்கைகளை வடிவமைக்கிறது; கோட்பாடுகளைத்  தகவமைக்கிறது; மெய்யியலை வளர்க்கிறது. இந்த நோக்கு நிலையில், “புறமில்லாமல் அகமில்லை;  அகமில்லாமல் புறமில்லை” எனும் தருக்க இயைபை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, ‘பக்தி’ என்ற உணர்வெண்ணச் சிந்தனைக் கருத்துக் கொள்கைக் கோட்பாட்டு மெய்யியல் ‘நெறி’ என்ற செயல்வடிவுக்கு வந்தே தீரும். இங்கு நெறி எனப் படுவது அறநெறியேயாகும். இத்தகைய இயங்கியல் நெறிப்படி, மணிமேகலை எனும் காப்பியப் பனுவலில் இடம்பெற்றுள்ள பௌத்தப் பக்திநெறிக் கூறுகளை வெளிக்கொணர இக் கட்டுரை முயல்கிறது.

பக்திநெறி

‘பக்திநெறி’ என்பது மெய்யியலுக்கும் செயலி யலுக்கும் உயிரிழைத் தருக்க இயைபைக் கொண்டது. ‘பக்தி’ என்பது பற்றுதல் ; ‘நெறி’ என்பது பின்பற்றுதல். ‘பக்திநெறி’ என்பது பற்றிப் பின்பற்றுதல் என்பதாகிறது.

பௌத்தப் பக்திநெறி

இந்துமதம் உட்பட எல்லா மதங்களுமே இறைவனை முன்னிட்டு பக்தியை வளர்க்கின்றன. பௌத்தமோ, செயன்மையை முன்னிட்டு பக்தியை வளர்க்கிறது. இந்தச் செயன்மை புத்தனை முன்னிட்டு அல்ல என்பது பௌத்தப் புரிதல். இது தொடக்க கால நிலை. ஆனால், காலப் போக்கில் புத்தனை வழிபடுதல் என்ற நிலைக்குப் பௌத்தமும் வந்து சேர்ந்துவிட்டது.

இன்னும் சில செய்திகளை இந்த இடத்தில் தெரிந்துகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

1. உலகில் அறிவை முன்னிறுத்திய முதல் மதம் பௌத்தம்

“புத்தம் சரணம் கச்சாமி –

அறிவைப் பின்பற்றுவதென உறுதிஏற்கிறேன்

தம்மம் சரணம் கச்சாமி –

நெறியைப் பின்பற்றுவதென உறுதி ஏற்கிறேன்

சங்கம் சரணம் கச்சாமி –

சங்கத்தைப் பின்பற்றுவதென உறுதி ஏற்கிறேன்”

2) எந்த ஓர் இடத்திலும், ‘கடவுள் உண்டா’

எனும் வினாவுக்குப் புத்தர் விடைபகன்றாரில்லை. இதன் உட்கிடை, “இல்லாத கடவுளைச் சிந்திப்பது வீண்வேலை” என்பதாகும்.

3) “மனிதரை வெளியிலே உள்ள யாரும  (External Agencies)  முன்னேற்ற முடியாது. மனிதன் தன்னாலேதான் உயரவேண்டும். தன் முயற்சியும் தன்னொழுக்கமும் மனித முயற்சிக்கு அடிப்படையாகும் என்றும் மனப் பண்பாடுதான் வாழ்க்கையின் இலட்சியம் என்றும் வழிகாட்டியவா புத்தர்பிரான்” (கந்தசாமி., சோ.ந.1977 :1).

ஆனாலும், பௌத்தமும் பிற சமய நடவடிக்கை களை ஒத்த சில நடைமுறைகளைப் பின்பற்றத்தான் செய்தது. ஒரே ஒரு சிறப்புக் கூறு பௌத்தத்துக்கு உண்டு. அது பக்தியை நெறிப்பட்ட நிலையில் நடைமுறைப் படுத்தியதுதான் அச் சிறப்புக் கூறாகும்.

எல்லாச் சமயங்களும் பக்தியில் தொடங்கி நெறியை வந்தடைந்தன வந்தடையவில்லை. பௌத்தமோ நெறியில் தொடங்கி பக்திக்கு வந்தடைந்துள்ளது. எனவே, பொருத்த மான தருக்க இயைபைக் கொண்டதாகப் பௌத்தப் பக்திநெறி விளங்குகிறது. இத்தகைய பக்திநெறியை மணிமேகலை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.

ஹீனயானத்தில் பௌத்தப் பக்திநெறி

புத்தரே கடவுளை ஏற்றுக்கொள்ளாததால் புத்தரது காலம்வரை கடவுள் பக்தி போன்ற பான்மை இடம் பெறாமல் பார்த்துக் கொண்டார். எனவே, புத்தர் வரையறுத்தபடி,

“புத்தம் சரணம் கச்சாமி” என்பதே நீடித்து வந்தது. புத்தரது காலத்துக்குப் பிறகு அவரது போதனைகள் சீடர்களால் தொகுக்கப்பட்ட பின்பு,

“புத்தர் சரணம் கச்சாமி” என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது.

புத்தர் தோன்றும்முன் அறம் மங்கிக்கிடந்த சமூகத்தில் புத்தர் தோன்றிய பின்பு அறநெறி செழித்து வளரத் தொடங்கியது. மனிதர்களை நால்வர்ண வழிப் பாகுபாட்டுள்ளும் மனிதரில் ஒரு பகுதியினரை மனிதராகவே கொள்ளாமல் ‘பஞ்சமர்’ என்ற இழி பாகுபாட்டுக்குள்ளும் வைத்திருந்த சமூகத்தில், ‘அனைவரும் மனிதரே’ என்ற பொதுநிலையில் வைத்துப் போற்றிய சமயமாகப் பௌத்தம் ஒளிர்ந்தது; மிளிர்ந்தது. இந்திய மனிதருள் பெரும்பான்மை அல்லது ஒன்றைப் பெரும்பான்மை என்ற நிலையிலிருந்த பஞ்சமர், பௌத்தத்தைக் கொண்டாடி ஏற்றனர்.

பஞ்சமரை மனிதராகக்கூட ஏற்காத பிராமணீய இந்துமதச் சனாதனச் சகதிக்குள்ளிருந்து மீட்டெடுத்துச் சமத்துவமாக நடத்தியது பௌத்த சங்கம். பௌத்தத்தை அடித்தட்டு மக்கள் அனைவரும் கொண்டாடினர். அவர்களது ஏற்புயர்வுநிலைக் கொண்டாட்டத்தின் செயல்வடிவமாகப் புத்தரை ஒரு இரட்சகர் – மீட்பர் என்ற நிலையில் வைத்துப் பார்த்ததன் விளைவே புத்தரைக் கடவுள்நிலையில் வைத்துப் பக்திப் பரவசத்துடன் போற்றவைத்தது. இத்தகைய பின்னணியில் உருவானதே ஹீனயான பௌத்தப் பக்திநெறி.

மகாயானத்தில் பௌத்தப் பக்திநெறி

உலகம் கடவுளால் படைக்கப்பட்டது; இயக்கப் படுகிறது என்ற பல்வேறு மதங்களும் சொல்லிவருவது என்பது நம்பிக்கை சார்ந்தது. உலகம் கடவுளால் படைக்கப்படவில்லை; ஆனால் உலகின் சமத்துவப் பண்பாட்டு நடைமுறை புத்தரால் படைக்கப்பட்டது என்று பௌத்தம் சொல்லி வருவது என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. இத்தகைய அணுகுமுறையில், ஹீனயானத்தை விட மகாயானம் செழித்து நின்றது. புத்தரைக் கடவுள் நிலையில் வைத்துப் பார்க்கத் தொடங்கிய ஹீனயானப் பார்வையைக் கடந்து புத்தரைக் கடவுளாகவே வைத்துப்பார்க்கும் பார்வையை மகாயானம் தொடங்கி வைத்தது.

பௌத்த பக்திப் பாசுரங்கள்

மணிமேகலையில் சில பகுதிகள் புத்தரின் பாசுரங் களாக அமைந்துள்ளன. வைணவ நெறிக்குரிய பிரபத்தி (சரணாகதம்) கொள்கை மகாயான பௌத்தத்தில் சிறப்பிடம் பெற்றது (கந்தசாமி.,சோ.ந.1977 :10).

பாசுரம் – 1

“எங்கோ னியல்குண னேதமில் குணப்பொருள்

……………………………

தகைபா ராட்டுதல் அல்லது யாவதும்

மிகை நாவில்லேன்” (5 : 71-79)

பாசுரம் – 2

“புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்

………………………………..

ஆயிர வாரத் தாழியந் திருந்தடி

நாவா யிரமிலே னேத்துவ தெவனென்”         (5: 98-105)

பாசுரம் – 3

“இளவள ஞாயிறு தோன்றிய தென்ன

……………………………….

பூமிசை யேற்றினேன் புலம்பறு கென்றே”    (10: 11-15)

பாசுரம் – 4

“மாரணை வெல்லும் வீர நின்னடி

……………………………………

உரகர் துயர மொழிப்போய் நின்னடி”             (11 : 61-70)

பாசுரம் – 1 புத்தரை வணங்க வேண்டியதன் காரணங்களை எடுத்துரைக்கிறது.

பாசுரம் – 2 புத்தரைப் புகழ அவரை என்னென்ன பெயர்களிலெல்லாம் விளக்கலாம் என்பதைக் கூறுகிறது.

பாசுரம் – 3 ஞாயிறால் இவ்வுலகம் விளக்கமுறுவது போல் புத்த ஞாயிற்றொளி திகழ்கிறது என்பதை விதந்தோதுகிறது.

பாசுரம் – 4 எத்தகைய பயனுறு புதுமை, புரட்சி களையெல்லாம் புத்தர் செய்தருளினார் என்பதை யெல்லாம் எடுத்துரைப்பதோடு அவன் திருப்பாதங்களை எவ்வாறெல்லாம் வாயாரப் பாடிப் போற்றலாம் எனப் பட்டியலிடுகிறது.

இப் பாசுரங்கள் அனைத்தும் புத்தரைக் கடவுளாகப் பாவித்து சேவித்து கூவித் துதிப்பது என்ற பக்திப் பரவச நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன.

புத்தரின் புனிதத் தலங்கள்

காவிரிப்பூம்பட்டினம், இந்திர விகாரம், புத்தர் கோயில் (புலவோன் கோவில், மணி. 19 : 5), மணிபல்லவம், இரத்தினத் தீவம் (11:21), இலங்காத் தீவம் (28:107), கிழக்கிந்தியத் தீவுகள் – நாகபுரம் (25: 1-6), வஞ்சி, காஞ்சி, மதுரை, பாதபங்கயமலை ஆகிய புத்தரின் புனிதத் தலங்களாகத் திகழ்கின்றன. இந்தத் தலங்களிலெல்லாம் பௌத்தத் தெய்வங்களுக்குக்

கூட்டு வழிபாடு நிகழ்த்தப்படுகின்றன. இங்கு சென்று வழிபட்டு வருவதைப் பெறும் பேறாகவும் அவ்விடங் களைப் புண்ணியம் பெறும் இடமாகவும் கருதுகின்றனர். இத்தகைய நடவடிக்கை பக்தியின் ஒரு பகுதி வெளிப்பாடாகும். புத்த பீடிகை வணக்கங்களும் மலர்தூவி வழிபடும் வழிபாட்டு முறையும் பக்தி நடவடிக்கையாகும்.

நம்பிக்கைகள்

பக்தியின் பிரிக்கஇயலாத பண்பு நம்பிக்கை. நரகம், சொர்க்கம், லோகங்கள், பேய் உலகு, அசுரர் உலகு, தேவரின் அறுவகை உலகு என்ற நம்பிக்கைகள் மகாயான பௌத்தத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

புத்தர் எடுத்த பிறவிகள்

புத்தர் எடுத்த விலங்குப் பிறவிகள் – முயல், குரங்கு, களிறு, மான், நாய், நாகம், தவளை, மீன், மரத்திலுறையுங் கடவுள், பன்றி, மடங்கல், சேவல் ஆகியன.

புத்தர் எடுத்த மனிதப் பிறவிகள் – துறவி 83 முறை, அந்தணன் 0 24, அரசன் – 58, கள்வன் -2, சூதன் -1, வெறியாடுபவன் -1 ஆகியன. (கந்தசாமி.,சோ.ந. 1977 : 101 – 102).

எல்லா உயிர்களிலும் புத்தர் இருக்கிறார்; எல்லா உயிர்களாகவும் புத்தர் இருக்கிறார்; எல்லா உயிர் களுக்காகவும் புத்தர் இருக்கிறார் என்ற பக்தி நம்பிக் கையை இவை விதைக்கின்றன. மனிதப் பிறவிகளில் துறவியாக 83 முறை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப் படுவது புத்தரைக் கடவுளாகக் கொண்டாடினாலும் புத்தரின் துறவுநெறியின் மேன்மைக்குக் கட்டியங் கூறுகிறது.

பௌத்தச் சிறுதெய்வங்கள்

பௌத்த வாழ்வியலின் முன்மாதிரிகளாக பௌத்த தெய்வங்கள் விளங்குகின்றன. ஹீனயான பௌத்தத்தில் இல்லாத இந்தத் தெய்வ உருவாக்கங்கள் மகாயான பௌத்தத்தால் உருவாக்கப்பட்டவை. மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் உட்பட பல தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன.

பெண் தெய்வங்களாவன

மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சாம்பாபதி, மணிமேகலை, சிந்தாதேவி, கந்திற்பாவை, கண்ணகி ஆகியோர்.

ஆண் தெய்வங்களாவன

புத்தன், இந்திரன், சாத்தன், தருமராசன், அறவண அடிகள், புண்ணியராசன், சங்க தருமன், கோவலன், மாரன் ஆகியோர்.

பெண் தெய்வங்களில் மணிமேகலா தெய்வம் கடற் தெய்வமாக வழங்கப்படுகிறது. அதிலும் கடல்திசை காட்டும் தெய்வமாக இயங்குகிறது. மணிமேகலைக் காப்பியத்தினதும் பௌத்த சமயத்தினதுமான முதன்மை நோக்கம் பசி ஒழிப்பே. இந்தப் பசி ஒழிப்புக்கு உரிய அமுதசுரபியை மணிமேகலைக்குச் சொன்னது இந்த மணிமேகலா தெய்வமே. கடலில் தத்தளிப்போருக்குத் திசைகாட்டுவதுபோலப் பசியில் துன்புறுவோர்க்கு உணவுதந்து பசியமர்த்தும் கலங்கரை விளக்கமாக மணிமேகலை தானே விளங்குகிறாள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ்ச் சமூகம் கண்ணகியை எவ்வாறு இன்றும் கொண்டாடி வருகிறதோ அவ்வாறே மணிமேகலையையும் தெய்வமாகக் கொண்டாடி வருகிறது என்பது கண்கூடு. தமிழகத்தில் பரவலாகவும் வணிகப் பகுதிகளாலும் மிகுதியாகவும் இடம்பெற்றுள்ள ‘அன்னபூரணி’ வழிபாடு மணிமேகலை வழிபாடேயாகும். அன்னம் – உணவு, பூரணம்  – நிறைவு. அன்னத்தை அமுதசுரபியில் பூரணமாய்ப் பெற்றிருந்தவள் என்பதால் மணிமேகலை, அன்னபூரணி யானார். இன்றும் தமிழகத்தில் திகழ்ந்துவரும் அன்ன தான நடவடிக்கைகளில் முன்னோடி மணிமேகலையே ஆவாள்.

முடிவுகளாக…

அன்னபூரணி வழிபாடாக இன்றும் நீடித்திருக்கும் பௌத்தப் பக்திநெறி பிற மதங்களைப்போல் வழிபட்டு விட்டு எவ்வாறேனும் வாழலாம் என விட்டுவிடுவ தில்லை பௌத்தம். பிற மதங்களில் உள்ள பக்தி நடவடிக் கைகளை உட்செறித்துக் கொண்டபோதிலும் அற நெறியைப் பற்றியழுகுவதும் சமத்துவம் பேணுவது மான போக்குகளிலும் பௌத்தத்திற்கு நிகரான வேறொரு மதம் உலகில் இல்லை எனலாம்.

பக்தி நடவடிக்கைகளில் மூழ்கியுள்ள இந்து மக்களை மீட்டெடுக்கும் நடைமுறை உத்தியாகவும் பௌத்தப் பக்திநெறி திகழ்கிறது எனலாம்.

ஆய்வு நெறி நூல்கள்

1.            கந்தசாமி.,சோ.ந. பௌத்தம், டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன், மேல்நிலை மெய்யுணர்வு கல்வி நிலையம், சென்னை, 1977.

2.            மாதவன்.,சு, தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும், செம்மொழி, தஞ்சாவூர், 2008.

3.            மாதவன்.,சு, தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பௌத்த வழக்காறுகள், செம்மொழி கருத்தரங்கம், திராவிட பல்கலைக் கழகம், குப்பம், 2014.

About editor 3042 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply