முல்லைத்தீவு மாவடத்தின் 71 விழுக்காடு மத்திய அரசின் கட்டுப்பாட்டில்!
நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு ஏற்பட்ட அதிகரித்த வெப்பம் காரணமாக கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விடவும் இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலத்தில் மட்டும் பாம்புக் கடிக்கு இலக்கானோர் தொகை அதிகரித்தே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் இந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாகவும் பொருளாதாரத்தில் இலங்கையிலேயே அதிக பின்னடைவைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டமானது அதிகளவு பக்கப் பாதிப்புக்களையும் எதிர்கொண்டு வருகின்றது.
வடக்கே அதிக காடுகளையும் குறிப்பிட்டளவு வயல்களையும், கடல் வளத்தையும் கொண்டதோர் மாவட்டமே முல்லைத்தீவு மாவட்டம். இந்த மாவட்டம் மிகவும் வறுமையான மாவட்டமாகவே தொடர்ந்தும் திகழ்வதற்கு அந்த மாவட்டத்தின் 71 வீதமான நிலப்பரப்பு இன்றுவரை மத்திய அரசின் கீழ் உள்ளதே மிகப்பெரும் காரணமாக சொல்லப்படும் நிலையில் சுமார் 90 ஆயிரம் மக்கள் வாழும் மாவட்டத்தில் தொடர் இழப்புக்கள் என்பது ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே காணப்படும்.
இதேவேளை இந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சகல தரப்பினருமே பாதிப்புக்களை எதிர்கொண்டனர். அதில் விவசாயிகளில் விவசாய நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட அதே நேரம் இந்த வறட்சிக்கு மீனவர்கள்கூடத் தப்பவில்லை. குறிப்பாக வறட்சிக்காலத்தில் நீர் வற்றல் ஏற்படும்போது கடல்நீர் உப்புத்தன்மை அதிகரித்து உவர் அடைவதன் காரணமாக வட்டுவாகல் பகுதியிலே இலட்சக் கணக்கான மீன்கள் இறந்தன.
இதேபோன்று மற்றுமோர் பாதிப்பாக மீனவர் , விவசாயிகள் என்றதற்கப்பால் சிறியவர், முதியவர் என பலரும் பாம்புக் கடிக்கு இலக்காகினர். இந்த ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் பாம்புக்கடிக்கு இலக்காவோர் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. அதாவது 2016ஆம் ஆண்டின் முழுமையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவினையும் உள்ளடக்கிய வகையில் 81 பேர் மட்டுமே பாம்புக்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றனர். ஆனால் இந்த ஆண்டின் முதல் 8 மாதம் வரையான காலப்பகுதிக்குள் மட்டும் 106 பேர் பாம்புக்கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். இருப்பினும் இவர்கள் உடனுக்குடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டமையினால் அத்தனைபேருமே உயிர் சேதம் இன்றி காப்பாற்றப்பட்டனர்.
இவ்வாறு பாம்புக் கடி இந்த ஆண்டில் சடுதியாக அதிகரித்தமைக்கான காரணமாம் வெப்பமே பிரதான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. அதிக வெப்பம் காரணமாக நிலச் சூடு தாங்காது பாம்புகள் பொந்தில் இருந்து வெளியில் வந்து குடியிருப்புக்கள் நோக்கி படையெடுத்ததன் காரணமாகவே இந்நிலமை ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதேநேரம் தற்போது ஆரம்பித்துள்ள மழையின் காரணமாக நிலமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாம்புக்கடி ஒருபுறம் அதிகரித்த அதேவேளை இம் மாவட்டத்தில் வன விலங்குகளின் தாக்கமும் இந்த ஆண்டு அதிகரித்திருந்தமை வைத்தியசாலை தரவுகளின் பிரகாரம் உறுதி செய்யப்படுகின்றது. ஏனெனில் முல்லைத்தீவு மாவட்டம் அதிக வனப்பகுதி என்பதனால் காட்டு உயிரினங்களின் நடமாட்டம் காணப்படுவது வழமையாகினும் அது இந்த ஆண்டு சற்றே அதிகரித்தே காணப்பட்டது. அதாவது இந்த ஆண்டின் இதுவரைக்குமான காலப்பகுதியில் 32 பேர் வன விலங்குகளின் தாக்குதலால் படு காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறு காட் உயிரினங்களின் தாக்குதல் அதிகரித்தமையும் வறட்சியின் காரணமாக இருக்கலாம் என்றே கூறப்படுகின்றது. இதேவேளை குறித்த எண்ணிக்கையில் நாய்க்கடிக்கு இலக்காவோர் தொகை உள்ளடக்கப்படவில்லை எனவும் கண்டறியப்படுகின்றது.
இவ்வாறு யுத்தம் முழுமையாகப் பாதித்த ஒருமாவட்டத்தில் தொடரும் அவலங்களின் பட்டியலில் தற்போது இந்த அவலங்களும் தொடர்கதையாகவே உள்ளமை கவலையளிக்கும் விடயமாகவே உள்ளது. அதே நேரம் இவ்வாறான பல தாக்கத்திற்கும் இழப்புகளிற்கும் முக்கிய காரணமாக இந்த மாவட்டத்திற்கான வசதி வாய்ப்புக்கள் இன்மையே பிரதான காரணம் என பலமுறை சுட்டிக்காட்டப்பட்டபோதிலும் அவை இதுவரை முழுமை பெறாமையே இவ்வாறான பாதிப்புக்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதில் குறிப்பாக வீட்டுவசதிகள், உட்கட்டுமான அபிவிருத்திகள் போதாமை மோன்றவற்றுடன் யாணைக்கான பாதுகாப்பு வேலியின்மை ஓர் முக்கிய காரணம் என்றே தற்போதும் அந்த மாவட்ட மக்கள் திடமாக நம்புகின்றனர்.
எனவே யுத்த அழிவில் இருந்து மீண்டு வரத் துடிக்கும் ஓர் மாவட்டத்தினை இன்னமும் அதிலிருந்து முழுமையாக மீளாத நிலையில் இவ்வாறான பாதிப்புக்களை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என அம் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றும் தவறானது என்று எண்ணவே முடியாது. எனவே இதனை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இவ்வாறான அநாவசிய இழப்புக்களில் இருந்து இந்த மாவட்ட மக்களை பாதுகாக்க உரிய வழிவகைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.