கீழடியில் 3-ம் கட்ட அகழாய்வில் 1800 பொருட்கள் கண்டெடுப்பு: தங்க அணிகலன்கள், தமிழ் பிராமி மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன

கீழடியில் 3-ம் கட்ட அகழாய்வில் 1800 பொருட்கள் கண்டெடுப்பு: தங்க அணிகலன்கள், தமிழ் பிராமி மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன

தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய மட்பாண்ட ஓடு

கீழடியில் நடைபெற்ற மூன்றாம்கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறு, பழைய மட்பாண்டங்கள்.

இந்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட்டம், கீழடியில் தாமதமாக தொடங்கப்பட்டு, 3 மாதமே நடைபெற்ற 3  ஆம் கட்ட அகழாய்வில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் தங்கத்தால் ஆன அணிகலன்கள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள், மட்பாண்ட உறை கிணறுகள் கிடைத்துள்ளன.

கீழடி அருகே பள்ளிச்சந்தை புதூர் திடலில் உள்ள அகழாய்வு முகாமில் பெங்களூரு பிரிவு தொல்லியல் கண்காணிப்பாளர் பி.எஸ்.ஸ்ரீராமன் நேற்று கூறியதாவது:

கீழடியில் 2 ஆண்டுகளாக மேற்கொண்ட அகழாய்வில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய, வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடங்கள் உள்ளிட்ட 5,300 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன.

மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கீழடியில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மே 27-ம் தேதி பெங்களூரு அகழாய்வு ஆறாம் பிரிவு சார்பில், கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின.

1800 தொல் பொருட்கள்

ஏற்கெனவே கிடைத்த கட்டிட எச்சங்களின் தொடர்ச்சியை கண்டறியும் வகையில், வடபுறத்தில் 400 சதுர மீட்டர் பரப்பளவில் குழிகள் தோண்டப்பட்டன. மே முதல் செப்டம்பர் வரையிலான காலம் குறைவாக இருந்ததாலும், தொடர்ச்சியாக மழை பெய்ததாலும் திட்டமிட்டபடி முடிக்க இயலாமல் 400 சமீ பரப்பளவில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுவரை சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் 1500-க்கும் மேலாக கண்ணாடி மணிகள், பளிங்கு, சூது பவளம், பச்சைக் கல் மற்றும் சுடுமண் மணிகளாகும். மேலும், தந்தத்தால் ஆன சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.

தங்கத்தால் ஆன பழங்கால அணிகலன்கள்

இணையதளத்தில் பதிவேற்றம்

மேலும், பதினான்கு தமிழ்பிராமி எழுத்துகளுடன் கூடிய பானையோடுகள் கிடைத்துள்ளன. இதில், ஒளிய(ன்) என்ற பெயருள்ள மட்பாண்ட ஓடு, ஓரிரு எழுத்துக்களுடய ஓடுகள் கிடைத்துள்ளன. இதில் ‘……ணிஇய் கிதுவரன் வேய்இய்’ என்ற 12 எழுத்துகளுடைய ஓடும் கிடைத்துள்ளது.

சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், ஐந்து தங்கத்தால் ஆன ஓரிரு அணிகலன்கள், சுடுமண் உருவ பொம்மைகள் கிடைத்துள்ளன.

ஆவணப்படுத்தப் பட்டுள்ள அனைத்து தொல்பொருட்களும் National Mission on Monuments and Antiquities என்ற அமைப்பின் அதிகாரபூர்வ

பல வகையான கண்ணாடி மணிகள்.

இணையதளமான http://nmma.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனுப்பப்படும். மேலும், கரிம பகுப்பாய்வுக்கும் அனுப்பி இவற்றின் காலம் கணக்கிடப்படும்.

நான்காம் கட்ட அகழாய்வு

வரும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடையும். நான்காம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறையின் மூலமாக வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்து இந்தியத் தொல்லியல் துறை நான்காம் கட்ட அகழாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.(http://tamil.thehindu.com/tamilnadu/article19707205.ece)

About VELUPPILLAI 3320 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply