வாருங்கள் சோதிட ஆசான்களே!

வாருங்கள் சோதிட ஆசான்களே!
(திருமகள்)

அதோ வாரும் பிள்ளாய்
சோதிட ஆசான்களே!
சோதிட சிகாமணிகளே!
சோதிட சக்கரவர்த்திகளே!
சோதிட மேதைகளே!
சோதிட கலைக்கோக்களே!
சோதிட இரத்தினங்களே!
தாந்திர நிபுணர்களே !
எல்லோரும் வாருங்கள்!

போடி இராதாகிருஷ்ண சோதிடரே
பட்டுக்கோட்டை சாமிநாத சோதிடரே
நீங்களும் வாருங்கள்!

அட்டமி நவமி, இராகு காலம் யம கண்டம் பார்த்து வாருங்கள்!

உங்கள் வரவு நல்வரவாக இருக்கட்டும்!

கிருஷ்ணா, கவுசிகன், முதுவிரலாறினி போன்ற சோதிடச் சக்கரவர்த்திகளே!
நீங்களும் வாருங்கள்!

சிவராத்திரி நாளைக் கணிப்பதில் உங்களுக்குள் குடுமிப் பிடிச் சண்டை நடந்ததை நான் பெரிய விடயமாக எண்ணவில்லை.

சிவராத்திரி 21 இல் என்றால் என்ன? 22 இல் என்றால் என்ன?

இதென்ன தேர்தலா வெற்றி தோல்வி பார்ப்பதற்கு?

முட்டையை நீள் பக்கம் உடைத்தால் என்ன? அகலப் பக்கம் உடைத்தால் என்ன?
குடிமுழுகியா போய்விடும்? முட்டையை உடைத்தால் சரிதானே!

பாவம் கவுசிகர். மற்ற எல்லோரும் சேர்ந்து அவரது காலை வாரினார்கள். கவுசிகர் என்ன செய்வார்? அவர் காலை முன்பே ஆகமம் எழுதியவர்கள் வாரி விட்டார்கள்!

இதில் வேடிக்கை என்னவென்றால் இருபகுதியினருமே ஆகமத்தை மேற்கோள் காட்டி தத்தம் கணிப்பை நியாயப்படுத்தியதுதான். இதுபற்றி பின்னர் விரிவாக எழுத இருக்கிறேன். முதலில் தமிழ்நாட்டுச் சோதிட ஆசான்களைச் சந்திக்க விரும்புகிறேன்.

தோதிடர்களை திருமகள் சந்தித்து கொஞ்சக் காலம் ஆகிவிட்டது. அவர்களாகப் பார்த்து அவர்கள் தங்கள் தொழிலை விட்டபாடில்லை. ஊரை ஏமாற்றிப் பிழைக்கலாம் என்ற அவர்கள் கணிப்பில் மாற்றம் இல்லை. அவர்களது யோக காலம். அவர்களுக்குத் தோதாக இழித்தவாய்த் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்குமட்டும் சோதிடர்களது காட்டில் இல்லை வீட்டில் ஒரே மழைதான் போங்கள்!

தேர்தல் திருவிழாக் காலம் என்றால் உங்களுக்கு ஒரே கொண்டாட்டம். புற்றீசல்போல் கிளம்பி விடுவீர்கள். கடையை விரிக்க வேண்டியதுதான் தாமதம் உங்கள் சரக்கு ஓகோ ஓகோ னன்று போணியாகிவிடும்.

நான் முந்தி நீ முந்தி என்று அரசியல் கட்சிக்காரர்களும், பத்திரிகையாளர்களும் உங்களை சுற்றி வந்துகொண்டே இருப்பார்கள். பலன் கேட்க அவர்களும் பணம் வாங்க நீங்களும் தயாராகிவிடுகிறீர்கள். உங்கள் பலன் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகின்றன.

அது சரி உங்களுக்கு கலைஞர், டாக்டர், முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் கருணாநிதி மீது அப்படி என்ன கோபம்? மகா மகா கோபம்?

கலைஞரைத் தண்டிக்க விரும்பினால் வேறு விதத்தில் தண்டித்திருக்கலாமே?

இப்படி நம்பவைத்து மோசம் செய்து விட்டீர்களே?

பலன் சொல்லி அவர் கழுத்தை அறுத்து விட்டீர்களே?

இது நியாயமா? தர்மமா? முறையா? அடுக்குமா?

—————————————————————-

” ஐகோரி யோகத்தால் எதிரிகள் சரண் -கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வருவார்”
———————————————————

முதலில் போடி சோதிடர் ராதாகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் “குருபகவான் 2ம் இடமான குடும்பஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணிகள்தான் முழுமையாக வெற்றி பெறும்”
என்று கணித்துச் சொன்னீர்களே?

உங்கள் “துல்லியமான” ஆரூடம் என்னவாயிற்று?

உங்களுக்கு அல்லது நீங்கள் நம்பும் கிரகங்களுக்கு புத்தி இருந்தால் “அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணிதான் முழுமையாக வெற்றி பெறும்” என்று சொல்லியிருப்பீர்களா? அதற்குப் பதில் கொஞ்சம் தக்கு வைத்து திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்று கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் சொல்லியிருக்கலாம் அல்லவா?

ஒரு முட்டாள்கூட “அனைத்து இடங்களிலும், அதாவது 234 சட்டசபைத் தொகுதிகள், ஒரு நாடாளுமன்றத் தொகுதி மொத்தம் 235 இடங்களிலும் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும்” என்று சொல்லியிருக்க மாட்டான்.

அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிவாகை சூடும் என்று சொல்லி நீங்கள் படுமுட்டாள் பட்டம் வாங்கியிருக்கிறீர்கள்!

ஏன் இப்படி வீணாகத் தெருவில் போகிற சனியனை விலைக்கு வாங்குகிறீர்கள்?

இதோ நீங்கள் சொல்லிய தேர்தல் ஆரூடம். திமுக சார்பான தினகரன் (மார்ச்சு 7ம் நாள்) நாளேட்டில் வந்தது. முழுதையும் “நாம்நாடு” வாசகர்களுக்காக அப்படியே தருகிறேன்.

“ஐகோரி யோகத்தால் எதிரிகள் சரண் -கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வருவார்” (வளரும்)


‘சனிப் பெயர்ச்சி கருணாநிதிக்கு அமோக வெற்றியைக் கொடுக்கும்’
(திருமகள்)
(2)

ஐகோரி யோகத்தால் எதிரிகள் சரண் -கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வருவார்

போடி. மார்ச். 6. கருணாநிதி கஜகேசரி யோகம் பெற்று இருப்பதால் எதிரிகள் சரண் அடைவர்கள். மறுபடியும் கருணாநிதி ஆட்சி அமைப்பார்எனப் போடி சோதிடர் கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அதற்கான வேலைகள் ஆயத்தம் அடைய தேர்தல் ஆணையம் முழு மூச்சில் ஈடுபடுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சோதிடர்கள் அவரவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் சோதிடர்கள் அடுத்த முறையும் முதல்வராக கருணாநிதிக்குத்தான் அதிக மான வாய்ப்பு இருக்கிறது என திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கலைஞர் கருணாநிதியின் ஜெனன கால சாதகப்படி கிரகங்கள் அனைத்துமே அவருக்கு சாதகமாகவேதான் அமைந்துள்ளது எனப் போடியைச் சேர்ந்த பிரபல சோதிடர் எம். இராதாகிருஷ்ணன் தினகரன் நிருபரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

“இது கலைஞர் கருணாநிதியின் பிறந்த நேரப்படி உள்ள ஜெனன சாதகம். இவர் 3-6-1924ம் ஆண்டு பிறந்தவர். ஜாதகவிதிப்படி வருகின்ற வைகாசி மாதம் 20ம் தேதி முதல் குரு பகவான் 2ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் திமுகவின் கூட்டணி கட்சிகள்தான் முழுமையாக வெற்றி பெறும்.

கஜகேசரியோகம்

“இதனால் இவரின் ஜாதகத்தில் குருவிற்கு எதிர் சந்திரன் இருப்பதால் கஜகேசரி யோகம் பெற்றிருப்பதனால் இவரை எதிர்த்து போட்டியிடக் கூடியவர்கள் எல்லோரும் அப்படியே தோல்வி அடையக் கூடிய நிலையே ஏற்படும். இதனால் இவருக்கு வரும் எதிரிகள் யாவரும் சிங்கத்தை கண்டு பயப்படும் யானையைப் போல் எதிரிகள் யாசித்து யோசித்து நேசித்து பூசித்து கைகூப்பி வணங்கி தாள் நிற்பார்கள்.

மேலும் இவர் 5-வது தடவையாக சிம்மாசனத்தில் அமரும் பாக்கியம் கிடைத்தாலும் வருகின்ற 11-04-2001-ம் தேதி சனிப் பெயர்ச்சி இவருக்கு ஒரு ஆண்டு அமோக வெற்றியைக் கொடுக்கும்.”

“எதிரிகள் யாசித்து யோசித்து நேசித்து பூசித்து….” சோதிடருக்கு எதுகை மோனை கைவந்தளவுக்கு சோதிடக் கலை கைவராதது சோகமான செய்தி.

சோதிடரின் ஆரூடம் “இந்தப் புளுகு கந்தபுராணத்துக் கடைசி ஒற்றையிலும் இல்லை” என்ற பழமொழியைதத்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவருகின்றது. பாவம் கலைஞர். தேர்தலில் படுதோல்வி அடைந்ததினால் சட்டசபைக்கு போகப் பயந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகனிடம் கொடுத்துவிட்டு ஒவ்வொருநாளும் அறிவாலயத்தில் உள்ள “முரசொலி” அலுவலக்கத்திற்குச் சென்று அவரது காலை வாரிவிட்ட “ உடன்பிறப்புக்களுக்கு” மடல் எழுதி தனது வயிற்றெரிச்சலைப் பகிர்ந்து கொள்கிறார்!

”தமிழன் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்க முன்பே நாகரிகம் படைத்தவனாக, அறிவுத்தெளிவு உள்ளவனாக இருந்திருக்கிறான். நான் அன்றைக்கு இருந்த தமிழனைச் சொல்கிறேன். இன்றைக்கு இருக்கிற தமிழனைச் சொல்லவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நல்லது எது? கெட்டது எது? என்று அன்றைக்கு இருந்த தமிழனுக்க நன்றாகவே தெரிந்திருந்தது.

ஆனால் இன்றைய தமிழன் இரவலைத்தான் அதிகமாக நேசிக்கிறான். இங்கிருப்பதை அவன் அதிகமாக விரும்புவதில்லை. எங்கிருந்தோ வந்ததைத்தான் அதிகமாக நேசிக்கிறான். எங்கிருந்து வந்தவர்கள் காலிலே விழுகிறான். கன்னத்தலும் போட்டுக்கொள்கிறான். அப்படி தமிழனுடைய தன்மானம் இன்றைக்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது.”

“எங்கிருந்தோ வந்ததை” என்று கலைஞர் கருணாநிதி ஏக வசனத்தில் குறிப்பிடுவது முதல்வர் ஜெயலலிதாவை என்பதை சொல்லத் தேவையில்லை. ஜெயலலிதா கன்னடக்காரி, தமிழ்நாட்டுக்கு அரிதாரம் பூசி நடிக்க வந்தவர் என்பதைத்தான் கருணாநிதி சுற்றி வழைத்துச் சொல்கிறார். கருணாநிதிக்கு தேர்தலில் மண்கவ்வும்போதுதான் தமிழனுடைய தன்மானம்பற்றிய ஞானம் பிறக்கும். பதவி நாற்காலியில் இருக்கு மட்டும் அந்த உணர்வு சுட்டுப்போட்டாலும் அவருக்கு வராது.

அரைக்கோடித் தமிழர்கள் கூப்பிடு தொலைவில் குண்டடி பட்டும் செல்லடி பட்டும் செத்து மடிந்தார்களே. அதையிட்டு கலைஞர் கருணாநிதி கடுகளவுதானும் கவலைப் பட்டதுண்டா? தமிழச்சிகளின் கற்பு சிங்களக் காடையர்களால் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டதே அதையிட்டுகலைஞர் கருணாநிதி நெற்றிக் கண்ணைத் திறக்க வேண்டாம் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டதுண்டா? தமிழீழத் தமிழரை விட்டு விடுவோம். அவர்கள் எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் வகைதொகையின்றி கொந்தளிக்கும் கடலில் சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினார்களே? அப்போது கோட்டையில் குடியிருந்த கலைஞரின் தமிழ்மானமும் தன்மானமும்என்னாயிற்று?

சரி இப்போது பிரபல சோதிடர் இராதாகிருஷ்ணனின் ஆரூடத்துக்கு, அவர் கணித்து ‘அச்சொட்டாகச்’ சொல்லிய கணிப்புபைப் பார்ப்போம்.

“வருகின்ற 11-04-2001-ம் தேதி சனிப் பெயர்ச்சி இவருக்கு ஒரு ஆண்டு அமோக வெற்றியைக் கொடுக்கும்” என்பதோடு போடி சோதடர் நின்றுவிட வில்லை. மேலும் அவர் கலைஞர் கருணாநிதியை இந்திரன் சந்திரன், சரித்திர நாயகன், அடுத்த முதல்வர் என்று புளுகுவதைப் படியுங்கள்.

“இந்த சரித்திர நாயகர் கடக லக்கினத்தில் பிறந்து கடல் சூழ்ந்த (?) தடாக தமிழ்நாட்டை ஆயுள் முழுவதும் ஆளப் போவது இந்த தமிழின் உருவமே! தமிழின் தத்துவமே! தமிழ் தாயின் தவப் புதல்வர் கலைஞர் கருணாநிதிதான் அடுத்த முதல்வர் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கிறேன்.”

வழக்கமாக சோதிடர்கள் தக்கு வைத்துத்தான் சோதிடம் சொல்வார்கள். அப்படியும் நடக்கலாம் இப்படியும் நடக்கலாம் நடக்காமலும் போகலாம்என்று பூசிமெழுகுவது அவர்கள் வாடிக்கை. ஆனால் போடி சோதிடர் அப்படி இப்படி என்று தக்கு வைத்துச் சொல்லவில்லை. வெட்டொன்றுதுண்டிரண்டு என்றவாறு “கலைஞர் கருணாநிதிதான் அடுத்த முதல்வர் என்பதை திட்ட வட்டமாகத் தெரிவிக்கிறேன்” என்று அடித்துச் சொன்னார். (வளரும்)


‘சோதிடம் பொய்த்ததுமட்டுமல்ல மரத்தாலை விழுந்த கருணாநிதியை மாடு ஏறி மிதித்தது”;
(திருமகள்)
(3)

பாவம் போடி சோதிடர். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. வெட்கப்பட்டு எங்கேயாவது தலைமறைவாகி இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அல்லது கடையை விரித்தேன் கொள்வாரில்லை என்று சொல்லி தொழிலைக் கைவிட்டு விட்டார் என்றும் நான் எண்ணவில்லை. சோதிடர்களுக்கு அந்தளவு தூரம் ரோச மானம் இருந்தால் நாட்டில் இன்று ஒரு சோதிடரும் அகப்பட மாட்டார்கள்.

அவர்களிடம் ஏமாற இருக்கவே இருக்கிறார்கள் இழித்தவாய்த் தமிழர்கள் ( கொஞ்சம் நாகரிகமாகச் சொன்னால் ‘புன்னகை மன்னர்கள்’). அவர்கள் சோதிடர்களைப் பார்க்க ஜாதகமும் கையுமாக ‘கியூ’ வரிசையில் நிற்க்கும்போது அவர்கள் ஏன் தொழிலுக்கு முழுக்குப் போட வேண்டும்?

போடி சோதிடர் சொன்ன ஆரூடம் நூற்றுக்கு நூறு விழுக்காடு பொய்த்து விட்டதும் அல்லாமல் மரத்தாலே இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல தேர்தலில் தோற்ற முதல்வர் கருணாநிதியை மாடு (ஜெயலலிதா) ஏறி மிதித்தது. கருணாநிதி ஊழல் குற்றச்சாட்டில் நள்ளிரவில் அவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுளைந்த தமிழ்நாடு போலீசார் அவரை உடுத்த உடையில் கைது செய்து அடித்து, இழுத்து, மிதித்து, துவைத்து குண்டுக்கட்டாகக் கட்டிக் கொண்டுபோய் சென்னை சிறைச்சாலையில் அடைத்தார்கள்.

“முன்னாள் முதல்வர் கருணாநிதி மருத்துவ சிகிட்சை கேட்டு சிறை முன்பு ஒரு பிச்சைக்காரரைப் போல நிலத்தில் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளார். இவர் நடத்திய போராட்டத்தை உலகம் முழுவதும் உள்ளவர்கள் டி.வி. மூலம் பார்த்து இருப்பார்கள். என் உத்தரவை அமுல்படுத்தாதது ஏன்? மனிதாபிமானம் கூட உங்களுக்கு இல்லையா?

78 வயதான அவருக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பதில் கூறுவது. முதியவரான அவரது உடல்நிலையை பார்த்தால் உள்ளம் உருகுமே. ஏன் உங்கள் உள்ளம் உருகவில்லை. உங்கள் மனது சதையால் ஆனதா? இல்லை களிமண்ணால் ஆனதா? இதற்கு காரணம் யார்? இவரை சித்திரவதை செய்தால் உங்களுக்கு அப்படி என்ன அற்ப சந்தோஷம் கிடைக்கிறது. உங்களுக்கு யார் இப்படி உத்தரவு போட்டது” என அவருக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் சென்னை நீதிபதி அசோக்குமார் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

சோதிடர்கள் மட்டும் முதல்வர் கருணாநிதியை ஏமாற்றவில்லை. கருணாநிதி கைது செய்தபின் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது தயவால்அரசியல் வாழ்வு பெற்றவர்கள், அமைச்சர் ஆனவர்கள், எப்பொழுதும் கண்ணைக் காப்பாற்றும் இமைபோல் அவர் அருகில் இருந்து அவரைக் காப்பாற்றுவதாக வேடம் போட்ட உத்தமர்கள், பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள், அவர் முயற்சியால் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றப் பதவிபெற்ற கனவான்கள்……

கல்வியாளர்கள், அவர் தயவால் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி பெற்றவர்கள், அவர் பிறந்தநாளில் பக்கம் பக்கமாக எதுகை மோனையைப் பெய்து வாழ்த்துக் கவிதைபாடிய கவிஞர்கள், நீதான் தமிழ்! நீ இல்லாவிட்டால் தமிழ் இல்லை! அண்ணா முத்தமிழ் அறிஞர் நீங்களோ ஐந்தமிழ் அறிஞர்! என்று துதிபாடியவர்கள். துந்துமி முழக்கியவர்கள், வானளாவ இந்திரன் சந்திரன் எனப் புகழ்ந்து எழுதிய தமிழ் எழுத்தாளர்கள், செய்தியாளர்கள், மேடைப் பேச்சாளர்கள்……….

பிறந்த நாளில் வாழ்த்துச் சொல்லவந்த கூட்டம், இலட்சக்கணக்கில் உண்டியலில் பணம் போட்ட கூட்டம், அவரது தயவால் தொழிற்சாலைகள் நிறுவ அனுமதிச் சீட்டுப் பெற்ற தொழிலதிபர்கள் கூட்டம், மது உற்பத்தியாளர்கள் கூட்டம், மதுக்கடை வணிகர்கள் கூட்டம்….

அவரால் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற கூட்டம், கலைமாமணிப் பட்டம் பெற்ற கூட்டம், தகுதியில்லாமல் இருந்தும் அவர் தயவால் பல்கலைக் கழகங்களில் கவுரவப் பட்டம் பெற்ற கூட்டம், மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற சுயநலப் பெற்றோர்களின் கூட்டம்……..

இவர்களில் யாராவது முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட முதல் இரண்டு நாட்களும் சிறைச்சாலைக்கு முன் கவலை தோய்ந்த முகத்துடன், அவரைக் காணத் தவம் கிடப்பார்கள், சத்தியாக்கிரகப் போராட்டம் நடாத்துவார்கள், பட்டினிப் போராட்டம் நடாத்துவார்கள் எனப் பார்த்தால் மருந்துக்கும் யாரும் இல்லை. பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள், புகைப்படக்காரர்கள், நிருபர்கள், முதல்வர் கருணாநிதியின் மனைவி பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இவர்களைத் தவிரமற்றவர்கள் மாயமாய் மறைந்து விட்டார்கள்!

எல்லாம் “அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள் போல்” அனைவரும் பறந்து விட்டனர்! ஜெயலலிதா அரசு தங்கள் பதவிகளைப் பறித்துவிடுமோ, தொழில் பாதிக்கப்படுமோ, சொத்துச் சுகங்களை இழக்க வேண்டி வருமோ என்ற பயம் அவர்களுக்கு!

உண்மையில் முதல்வர் கருணாநிதிக்குப் பதில் போடி சோதிடரைத்தான் தமிழ்நாடு போலீசார் கைது செய்து சிறைக்குள் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் கோவில் கோவிலாக சுற்றித் திரிந்து அர்ச்சனை, அபிஷேகம், பூசை, யாகம் என்று நாளும் பொழுதும் செய்து வரும் ஜெயலலிதாவின் ஆட்சியில் அப்படி நடக்க வாய்ப்பில்லை. குருவாயூர் கோவிலுக்கு நேர்த்திக் கடனாக யானைக் குட்டி ஒன்றை தானம் செய்ய கேரளத்துக்கு பயணம் மேற்கொண்ட ஜெயலலிதா ஒரே நாளில் 25 இலட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறாhர். இதில் குருவாயூர் கோவிலுக்கு மட்டும் ரூபா 14 இலட்சம் செலவு. தானம் கொடுத்த யானைப் பராமரிப்புக்கு ஆண்டொன்றுக்கு ஒன்றேகால் இலட்சம் செலவு.

குருவாயூர் கோவிலில் உள்ள ‘நாராயணகுலங்கர பகவதி’ என்ற சிலைமுன் பக்தர்கள் சிரித்து கைதட்டி வழிபடுவது வழக்கமாம். அதன்படி ஜெயலலிதாவும் சசிகலாவும் கைதட்டி சிரித்து வழிபட்டனர். பிறகு 50 பவுண் தங்கவாள் பரிசு வழங்கினார். பத்து கிராம் தங்க மாலையும் வழங்கினார். இப்படியே கொட்டிகாவி லம்மா, பகவதி கோவில்கள் இரண்டிற்கும் தங்கவாள் பரிசு வழங்கினார். மேலகாவு பகவதிக்கு கோவிலுக்கு 50பவுண் தங்கசூலம் வழங்கினார். மம்மியூர் அப்பன் கோவிலுக்கு ஒரு கிலோ வெள்ளி கும்பம் வழங்கினார்.

அமெரிக்க நாட்டு சனாதிபதி கூட இப்படி தேவாலயங்களுக்கு ‘தானம்’ செய்வதில்லை. யாத்திரை போவதில்லை. ஆனால் பசியாலும் பட்டினியாலும் வாடி வதங்கி, வறுமையின் கொடுமை தாங்காது பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்யும் குடும்பங்கள்பற்றி நாட்தவறாது செய்திகள் வரும் தமிழ்நாட்டின் முதல்வர் ஒரே நாளில் அர்ச்சனை ஆராதனை என 25 இலட்சம் செலவு செய்திருக்கிறார்! அப்புறம் தமிழ்நாடு உய்வது எப்போது?

 


‘திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வார் என்ற ஆரூடம் பொய்த்தது!
(திருமகள்)
(4)
 

இதோ போடி சோதிடரைத் தொடர்ந்து ”சட்டசபைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும், கிரக மாற்றங்களை வைத்து பிரபல சோதிடர் கணிப்பு” என்ற தலைப்பில் 60 ஆண்டு கால அரசியல் மாற்றங்களையும், அதோடு கிரக மாற்றங்களையும் இணைத்துப் பார்த்து பிரபல சோதிடரும், அரசியல் பிரமுகருமான பட்டுக்கோட்டைசாமிநாதன் கூறிய ஆரூடத்தை அதே தினகரன் நாளேடு பெப்ரவரி 23 ஆம் நாளன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

“அகில இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் நடந்துள்ள நிகழ்வுகள், மாற்றங்களை உற்று நோக்கும்போது சில ராசிகளில் சனி வரும்போது மாற்றங்களும் ஒரே மாதிரி அமைந்திருப்பதை காணமுடிகிறது.

1967 இல் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது மீனத்தில் சனி இருந்தது. மீண்டும் 1971 இல் ரிஷபத்தில் சனி இருந்தபோது தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்றது.

இப்போது 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2001 இல் ரிஷபத்திற்கு சனி திரும்பி வந்திருக்கிறது. 1971 ஆம் ஆண்டு தேர்தலைப் போல இந்த தேர்தலில் அபரிமிதமான வெற்றியை தி.மு.க. பெறும்.

வேறு பல நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இது நடக்கப் போவது உறுதி என்பதை புரிந்து கொள்ள முடியும்.

1947 முதல் 1967 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. இதில் விருச்சிக ராசியை விட்டு தனுசு ராசிக்கு சனி வந்தபோது ராசாசி முதல்வரானார். மகர ராசிக்கு சனி வந்தபோது பக்தவச்சலம் முதல்வரானார். மகரத்தில் சனியிருந்த போது அவரது ஆட்சிக்கு எதிரா க பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

எம்.ஜி.ஆர். ஆட்சி

1977 தொடங்கி 1988 வரையில் அதாவது கடகம் முதல் விருச்சிகம் வரை சனி இருந்த கால கட்டத்தில் எம.;ஜி.ஆர். ஆட்சியில் இருந்தார். தனுசு ராசிக்கு சனி நுளைந்ததும் 1989 இல் கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.

1991 இல் மகர ராசிக்கு சனி வந்தபொது ஜெயலலிதா முதல்வரானார். எப்படி 1962 முதல் 1967 வரை மகர ராசியில் சனி இருந்த கால கட்டத்தில் அவரது ஆட்சி மக்களின் வெறுப்புக்கு இலக்காகி பல்வேறு குற்றச்சாட்டுகளை சந்தித்து மக்களால் தூக்கி எறியப் பட்டதோ அதேபோல மகர ராசியில் சனி இருந்த கால கட்டத்தில்தான் ஜெயலலிதா ஆட்சியும் குற்றச்சாட்டுக்கு இலக்காகி மக்களால் தூக்கி எறியப்பட்டது.

ஜெ. நினைப்பு

1967 முதல் 1971 வரையி லான காலத்தில் மேட ராசியில் சனியிருந்தபொது நாகர்கோவில் எம்.பி. தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றார். அவரது கட்சிக்கு செல்வாக்கு உயர்ந்து விட்டதாக பேசப்பட்டது.

இப்போது 1997 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த பார்லிமெணட் தேர்தல்களில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. பூஜ்யத்திலிருந்து மீண்டு ஒரு சில எம்பி தொகுதிகளில் வெற்றி பெற்றதை வைத்து செல்வாக்கு உயர்ந்து விட்டதாக ஜெயலலிதா நினைக்கிறார். அவருக்கு வேண்டியவர்கள் வதந்திகளையும் பரப்பி விட்டிருக்கிறார்கள்.

கனவு கோட்டை கலையும்

ஆனால் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் வாசம் செய்கிற சனிக்கிரகம் உருவாக்கியருக்கிற நிகழ்வுகளை ஒப்பீடு செய்தால் ஜெயலலிதாவின் கனவு கோட்டை தகர்க்கப்படுவது உறுதி.

இப்போது மீனம் முதல் கடகம் வரையிலான சுற்று நடந்து கொண்டிருக்கிறது. முன்பு 1971 இல் ரிஷபத்தில் சனி இருந்தபோதுதான் திமுக அமேகா வெற்றி பெற்றது. 2001ல் மீண்டும் ரிஷபத்திற்கு சனிக் கிரகம் வந்துள்ளது. திமுகவே அமோக வெற்றி பெறப் போகிறது.

தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவின் கனவுக் கோட்டை தகருவதற்குப் பதில் கலைஞர் கருணாநிதியின் கனவுக் கோட்டையைத்தான் கலைத்து விட்டது.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6.2 கோடி. இதில் வாக்காளர் தொகை 4.5 கோடி. வாக்களித்தவர்கள் தொகை சுமார் 2.7 கோடி. அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 1 கோடி 40 இலட்சம். திமுக கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் 1 கோடி 8 இலட்சம். அதிமுக கூட்டணி வென்ற தொகுதிகள் 196. திமுக கூட்டணி வென்ற தொகுதிகள் 37.

ஒரு கோடியே 40 இலட்சம் வாக்காளர்கள் கிரகங்கள், ராசிகள் இவற்றையும் மீறி கலைஞருக்கும்; அவரது கட்சிக்கும் எதிராகப் போட்டு தேர்தலில் மண்கவ்வ வைத்துள்ளார்கள். கிரகங்களும், இராசிகளும் வாக்காளர் மனதை கலைஞர் சார்பாக மாற்றும் என்று சோதிடம் சொல்வது எவ்வளவு பேதமை? பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கோள்களுக்கு தமிழ்நாட்டுத் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கிற ‘சக்தி’ இருக்கிறதா?தேர்தல் முடிவுகள் ‘இல்லை’ என்ற பதிலை அல்லவா துல்லியமாகச் சொல்லிவிட்டன!

கலைஞர் கருணாநிதிக்கு எதிராக எத்தனை கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் மீண்டும் அவர்தான் முதல்வராக வருவார், திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வார் என்று திண்டுக்கல் ஏட்டு உலக சோதிடர் கருப்பையா சொன்ன சோதிடமும் பொய்த்துவிட்டது.

கருப்பையா சோதிடர் என்ன சாமானிய சோதிடரா? அவரது புகழ் கொஞ்ச நெஞ்சமா? பெருமை இலேசுப்பட்டதா? இதைக் கொஞ்சம் கேளுங்கள்.

உலக சோதிட மார்த்தாண்ட பூபதி, விஸ்வசோதிஸ்ச வாசஸ்பதி, உலக வாஸ்து சாம்ராட், உலக நட்சத்திர மூர்த்தி மற்றும் அமெரிக்கா-இந்திய பல்கலைக் கழகங்கள் இணைந்து வழங்கிய டாக்டர் பட்டங்கள் பெற்றவர். (முற்றும்)


ஒக்தோபர் 04, 2008

ரொறன்ரோ

செய்தி அறிக்கை

படிப்பறிவில்லா சோதிடர்கள்

படிப்பறிவில்லா சோதிடர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிகளைப் பசியால் வாடும் எமது உறவுகளுக்குக் கொடுங்கள்!
வன்னியில் எமது உறவுகள் உண்ண உணவின்றிஇ உடுக்க உடையின்றிஇ படுத்துறங்க உறைவிடமின்றி வானவே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுளிருக்கும் பாம்பென உயிர்க்கும் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள். வானத்தில் இருந்து குண்டுமழை வேறு பொழிகிறது. இடம்பெயர்ந்த உறவுகளுக்கு உதவப் புலம்பெயர்ந்த உறவுகள் தொடர் இசை நிகழ்ச்சிகள் நடத்தியும் உண்ணாநோன்பு இருந்தும் நிதி திரட்டி வருகிறார்கள்.

மறுபுறம் எந்தச் சிக்கல் கிடைத்தாலும் அதற்குள் மூக்கை நுழைத்துத் தங்கள் சுரண்டல் தொழிலை நடத்தும் ஒரு கொள்ளைக்காரக் கூட்டம் தமிழ்நாட்டில் இருந்து அறிவியல் கண்டுபிடித்த வானூர்தியில் பறந்து வந்து ரொறன்ரோவில் கடை விரித்துள்ளது.
இவர்கள் கனடிய தமிழர்கள் சிலரது பலவீனங்களைப் பணமாக்கும் நோக்கில் தங்களைத் தாங்களே சாத்திரிகள்இ பண்டிதர்கள்இ சாமியார்கள்இ ரிஷிகள் எனச் சொல்லிக் கொண்டு தங்களின் பித்தலாட்டத்தைப் பணமாக்க கனடாவில்தான் அதிகளவு இளித்தவாயர்கள் இருக்கிறார்கள் எனக் கணக்குப் போட்டு இங்கு படையெடுக்கிறார்கள்.

ஏமாளித் தமிழர்களிடம் இருந்து தோஷ பரிகாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் டொலர்களைக் கறந்து விடுகிறார்கள். இவர்கள் கிழமை தோறும் இந்திய ரூபாயில் பல இலட்சங்களை உண்டியல் மூலம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நடத்தும் முகநாடிஇ கைரேகைஇ சாதகம்இ எண்சாத்திரம் என்ற மோசடிகளுக்கு இங்குள்ள அங்காடி உரிமையாளர்கள் அறைகளைக் கொடுத்து உதவுகிறார்கள். சோதிடர்களின் வருவாயில் இவர்களுக்கும் ஒரு பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது.
மனிதன் திங்களில் கால் பதித்து 40 ஆண்டுகள் கழிந்து விட்டன. செவ்வாய்இ புதன்இ வியாழன்இ சனி போன்ற கோள்களை ஆராய விண்கலங்கள் ஏவப்பட்டு வருகின்றன. செவ்வாயில் மனிதனை இறக்க நாசா திட்டமிட்டு வருகிறது. புவியில் உள்ள மக்கள் தொகை சிக்கலைச் சமாளிக்க திங்களில் மனிதர்களைக் குடியேற்றும் திட்டம் கூட ஆராயப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் இன்னும் முகநாடி, கைரேகைஇ சோதிடம், காண்டம்இ அருள்வாக்குச் சொல்லி ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கும் இந்த அறிவிலிகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் 9 கோள்கள் 12 இராசிகள்இ 27 நட்சத்திர்ங்கள் 12 வீடுகளில் எந்தெந்த வீடுகளில் நிற்கிறது எனக் கணக்கிட்டு சோதிடர்கள் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இந்தக் கோள்களில் இராகுஇ கேது கற்பனைக் கோள்கள். சந்திரன் துணைக் கோள். சூரியன் கோளல்ல – அது ஒரு நட்சத்திரம். இவை உயிரற்ற சடப் பொருட்கள். செவ்வாய்இ வியாழன், சனி, இராகு – கேது பாப கோள்கள் என்றும் சந்திரன், சூரியன்இ,புதன்இ வெள்ளி ஆகிய கோள்கள் சுப கோள்கள் என்றும் சொல்வதற்கு அறிவியல் அடிப்படை இல்லை. இது எந்த விதிக்கட்டின்றி (arbitray) அனுமானத்தில் சொல்லப்படுவது ஆகும்.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் கோடிக்கணக்கான கற்கள் தொலைவில் உள்ள கோள்கள்இ பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் சஞ்சரிக்கும் இராசி வீடுகளைப் பொறுத்து அக்குழந்தையின் எதிர்காலமும் குணநலமும் கல்வி மற்றும் தொழில்இ மனைவிஇ மக்கள் எல்லாம் அமைகிறது என்பது வெறும் கட்டுக் கதை. இன்றைய அறிவியல் உலகம் அதனை ஏற்றுக்கொள்ளாது. சிலரது சாதகத்தையும் அந்த சாதகத்திற்குரியவர்களின் அகவைஇ தொழில்இ குணநலன்கள்இ ஆளுமை மற்றும் இயல்புகள் பற்றிய விபரங்களைக் கொடுத்து எந்தச் சாதகம் யாருடையது என்று கண்டு பிடிக்கச் சொன்னபோது சோதிடர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

திருமணப் பொருத்தம்இ வணிக முன்னேற்றம்இ கல்விஇ வேலை வாய்ப்புஇ கணவன் – மனைவி ஒற்றுமை, மனைப் பொருத்தம், தோச நீக்கம், சாதக பலன்இ கைரேகை பார்த்தல்இ காண்டம் வாசித்தல்இ,நினைத்த காரியம் சொல்லல்,     இறந்தகாலம், நிகழ்காலம்இ எதிர்காலம் என முக்காலத்துக்கும் பலன் சொல்லல் போன்றவற்றுக்குப் பரிகாரம் கண்டு அவற்றைத் தீர்த்து வைக்கத் தங்களால் முடியுமென்று இந்தச் சோதிடர்கள் முழுப் பக்க விளம்பரம் செய்கிறார்கள்.

இவற்றை எல்லாம் இவர்களால் தீர்த்து வைக்க முடியுமென்பது உண்மையானால் ஏன் முதலில் இவர்கள் தங்கள் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வளமாக வாழாமல் இங்கு ஓடி வருகிறார்கள்?

பார்ப்பன வீடுகளில் மட்டும் இருந்து வந்த சோதிடம் இன்று தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் குடி கொண்டுவிட்டது. குழந்தை பிறந்தது முதல் பெயர் சூட்டுவது, பூப்பு நீராட்டுவதுஇ திருமணம் செய்வது, தொழில் தொடங்குவது, வீடு வாங்குவது, குடி புகுவது, வேலை தேடுவது, மருத்துவம் பார்ப்பது வரை சோதிடர்களைத் தேடித் தமிழர்கள் அலைகிறார்கள்.

புவி உருண்டை வடிவானது. அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஞாயிறையும் சுற்றி வருகிறது. ஞாயிறு சோதிடம் சொல்வது போல் ஒரு கோள் அல்ல. அது கோடான கோடி பால் மண்டலங்களில் காணப்படும் கோடான கோடி நட்சத்திரங்களில் ஒன்று என்று தெரியாதவர்களால்தான் சோதிட சாத்திரம் இயற்றப்பட்டது. இன்றும் ஞாயிறு பூமியைச் சுற்றுகிறது என்ற பிழையான அடிப்படையில்தான் சாதகம் கணிக்கப்படுகிறது.

ஏதோ குருட்டாம் போக்கில் சொல்லி காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக சில நேரங்களில் சில எதிர்வுகூறல் சரிவருவதை வைத்துக் கொண்டு முகநாடிஇ கைரேகைஇ சாதகம்இ எண்சாத்திரம் உண்மை என மூடர்கள் நம்பிவிடுகிறார்கள்.
இதனால் தொடர்ந்து சோதிடர்களின் காட்டில் பணமழை பெய்கிறது. இந்த மூடத்தனத்தைக் கண்டிக்கவோ அதன் பொய்மையை அம்பலப்படுத்தவோ இங்குள்ள ஊடகங்கள்இ படித்தோர் முன்வருவதில்லை. மாறாக சோதிடரத்தினங்களின் விளம்பரங்களை வெளியிட்டு பணம் சம்பாதிப்பதிலேயே கண்ணாக இருக்கிறார்கள். கனடா உலகத் தமிழர்இ கனடிய தமிழ் வானொலி, தமிழ்த்தொலைக் காட்சி போன்றவை விதிவிலக்காக இருப்பது உண்மைதான். ஆனால் இவை கூட இந்த மூடநம்பிக்கையை உடைத்தெறிய முன்வருவதில்லை. “சும்மா இருப்பதே சுகம்” எனப் பாராமுகமாக இருந்துவிடுகிறார்கள்.

சோதிடம், கைரேகை பார்ப்பவனையும் சாதக பலன் சொல்பவனையும் பாமர மக்கள் நம்புகிறார்கள் என்றால் படித்தவர்களும் நம்புகிறார்கள் என்பதுதான் பெரிய சோகம்! இதனால் சோதிடம்இ கைரேகைஇ சாதகம், பஞ்சாங்கம்இ மதச் சடங்குகள் போன்ற மூடத்தனங்களால் தமிழினம் சீரழிகிறது.

தமிழ்மக்கள் சோதிடம்இ கைரேகைஇ மூடபக்தி போன்ற மூடநம்பிக்களில் இருந்து விடுபட வேண்டும். உங்கள் எதிர்காலத்தை நீங்களே கையில் எடுத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதை உறுதியாக நம்புங்கள்.

படிப்பறிவில்லா சோதிடர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிகளைப் பசியால் வாடும் எமது உறவுகளுக்குக் கொடுங்கள்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

-30-


யூலை 09, 2006

ரொறன்ரோ

செய்தி அறிக்கை

சோதிடம் ஒரு புரட்டு! சோதிடர்களை நம்பி ஏமாறாதீர்கள்!

மனிதன் திங்களில் கால் பதித்து 38 ஆண்டுகள் கழிந்து விட்டன. செவ்வாய், புதன், வியாழன், சனி போன்ற கோள்களை ஆராய விண்கலங்கள் ஏவப்பட்டு வருகின்றன. அடுத்து செவ்வாயில் மனிதனை இறக்க நாசா  திட்டமிட்டு வருகிறது. புவியில் உள்ள மக்கள்தொகை சிக்கலைச் சமாளிக்க திங்களில் மனிதர்களை குடியேற்றும் திட்டம் கூட ஆராயப்பட்டு வருகிறது. ஆனால் தமிழன் மட்டும் இன்னும் சோதிடம், காண்டம், கைரேகை, அருள்வாக்குச் சொல்லி ஊரை ஏமாற்றி வயிறு வளர்ச்கும் சோம்பேறிக் கூட்டத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.
ஒரு குழந்தை நல்ல இலக்கினத்தில் நல்ல இராசியில் நல்ல நட்சத்திரத்தில் பிறந்தால் அக் குழந்தையின் வாழ்வு சிறப்பாக அமையும் என்றும் அவ்வாறு அல்லாது கெட்ட இலக்கினத்தில், கெட்ட இராசியில், கெட்ட நட்சத்திரத்தில் பிறந்தால் வாழ்வு சிறப்பாக அமையாது என்றும் எந்த விதிக்கட்டின்றி (arbitrary) அனுமானத்தில் கண்டு பிடிக்கப்பட்டதுதான் சோதிடம் ஆகும்.

இடைக் காலத்தில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் அரண்மனையில் இராசகுருவாக இருந்த சோதிடர்கள் சாதகத்தைக் காட்டி மன்னருக்கு தோசம் இருக்கிறது அதை நீக்க யாகம் செய்ய வேண்டும் புரோகிதர்களுக்குத் தானம் கொடுக்க வேண்டும் என்று கூறிக் கருவூலத்தை கொள்ளையடித்தார்கள். பொன்தானம் கோதானம் பூதானம் கொடுத்த சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் மறைந்து போயின!

கனடிய தமிழர்களின் பலவீனங்களைப் பணமாக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் இருந்து தங்களைத் தாங்களே சாத்திரிகள், பண்டிதர்கள், சாமியார்கள், ரிஷிகள் எனச் சொல்லிக் கொண்டு கனடாவிற்குப் படையெடுத்து வருகிறார்கள். தங்களின் பித்தலாட்டத்தை பணமாக்க கனடாவில்தான் அதிகளவு இளித்தவாயர்கள் இருக்கிறார்கள் என அவர்கள் கணக்குப் போடுவதே இந்தப் படையெடுப்புக்குக் காரணமாகும். முன்னைவிடப் புதுப் புது தொழில் நுட்பத்தோடு சோதிடர்கள் கடைவிரிக்கிறார்கள். கடைவிரிக்க இங்குள்ள சில அங்காடிகள் மற்றும் கோயில்கள் ஒத்துழைப்பு நல்குகின்றன.

விவேகானந்தர் போன்ற தூய துறவிகள் உடுத்திய காவி இன்று புரட்டுக்களை மறைக்கும் ஆடையாக மாறிவிட்டது.
திருமண யோகம், திருமணப் பொருத்தம், தொழில் – வாணிக முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்பு, நாவூறு, கணவன் – மனைவி ஒற்றுமை, மனைப் பொருத்தம், தோச நீக்கம், சாதக பலன், கைரேகை பார்த்தல், காண்டம் வாசித்தல், நினைத்த காரியம் சொல்லல், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்துக்கும் பலன் சொல்லல் போன்றவற்றுக்குப் பரிகாரம் கண்டு அவற்றைத் தீர்த்து வைக்கத் தங்களால் முடியுமென்று இந்த சோதிடர்கள் முழுப் பக்க விளம்பரம் செய்கிறார்கள்.
இவற்றை எல்லாம் இவர்களால் தீர்த்து வைக்க முடியுமென்பது உண்மை என்றால் ஏன்  முதலில் இவர்கள் தங்கள் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைக்காமல்; இப்படி நாடு நாடாகப் பணம் தேடி அலைகிறார்கள்?

பிராமணர்களின் வீடுகளில் மட்டும் இருந்து வந்த சோதிடம் இன்று தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் குடி கொண்டுவிட்டது. குழந்தை பிறந்தது முதல் பெயர் சூட்டுவது, திருமணம் செய்து கொள்வது, தொழில் தொடங்குவது, வீடு வாங்குவது, குடி புகுவது, வேலை தேடுவது, மருத்துவம் பார்ப்பது வரை சோதிடர்களைத் தேடித் தமிழர்கள் அலைகிறார்கள்.
புவி உருண்டை என்றோ, அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஞாயிறையும் சுற்றி வருகிறது என்றோ, ஞாயிறு ஒரு கோள் அல்ல அது கோடான கோடி பால் மண்டலங்களில் காணப்படும் கோடான கோடி நட்சத்திரங்களில் ஒன்று என்று தெரியாத வர்களால்தான் சோதிட சாத்திரம் இயற்றப்பட்டது. இன்றும் ஞாயிறு பூமியைச் சுற்றுகிறது என்ற பிழையான அடிப்படையில்தான் சாதகம் கணிக்கப்படுகிறது.
ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் கோடிக்கணக்கான கற்;கள் தொலைவில் உள்ள கோள்கள், பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இராசிகள் மற்றும் நட்சத்திரங்கள்  சஞ்;சரிக்கும் இராசி வீடுகளைப் பொறுத்து அக்குழந்தையின் எதிர்காலமும் குணநலமும் கல்வி மற்றும் தொழில் மனைவி மக்கள் எல்லாம் அமைகிறது என்பது வெறும் கட்டுக் கதை. இன்றைய அறிவியல் உலகம் அதனை ஏற்றுக்கொள்ளாது. சிலரது சாதகத்தையும் அந்த சாதகத்திற்குரியவர்களின் குணநலன்கள் ஆளுமை மற்ற இயல்புகள் பற்றிய விபரங்களைக் கொடுத்து எந்தச் சாதகம் யாருடையது என்று கண்டு பிடிக்கச் சொன்னபோது சோதிடர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

குடுகுடுப்பைக்காரன் சொல்லும் குறியையும் குறத்தி கூறும் வாக்கையும் சோழி உருட்டிச் சோதிடம் கூறுபவனையும் கிளி சோசியம் பார்ப்பவனையும் கைரேகை பார்ப்பவனையும் சாதக பலன் சொல்பவனையும் பாமர மக்கள் நம்புகிறார்கள் என்றால் படித்தவர்களும் நம்புகிறார்கள் என்பதுதான் பெரிய சோகம்!

பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று நாடெங்கும் பரப்புரை செய்தவர்கள் தான் சோதிடத்திலே அறிவியல் இருக்கிறது எனப் பேசத் தொடங்கியுள்ளார்கள்.

சோதிடர் சொல்லும் எதிர்கூறலில் சில காகதாலியமாக நடந்து விடுவதைக் கொண்டு சோதிடம் உண்மை என்று சிலர் நம்பி விடுகிறார்கள். சோதிடர் சொல்வது நடக்காமல் போனால் “எல்லாம் பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தைப் பொறுத்தே நடக்கும்” என்று கூறிச் சமாளிக்கிறார்கள். இதனால் சோதிடரின் பிழைப்பு தடை இல்லாமல் தொடர்ந்து நடக்கிறது. மூன்றாவது உலக நாட்டில் வாழும் போது சோதிடம் போன்ற மூட நம்பிக்கையை நம்பினால் அதனைப் பெருந்தன்மையோடு மன்னித்துக் கொள்ளலாம். ஆனால் கனடா போன்ற முதல் உலக நாட்டுக்கு வந்த பின்னரும் சோதிடத்தை நம்புவது முட்டாள்த்தனம்.

தமிழ்மக்கள் சோதிடம் போன்ற மூடநம்பிக்ககளில் இருந்து விடுபட வேண்டும். உங்கள் எதிர்காலத்தை நீங்களே உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய்வருத்த கூலி தரும் என்பதை மறக்க வேண்டாம்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

-30-


 

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply