மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள் பகுதி 11
நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம்.
வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான், சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் க்ஷத்திரியன்தான்.
-என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.
அப்படியானால், பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன் என்றாகுமே. உண்மையில் பிராமணர்களுக்கு இன்னது தான் தொழில் என சாஸ்திரம் ஏதாவது சொல்லியிருக்கிறதா? என்ற கேள்விதான் அது.
இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ‘படம் பார்த்து தெரிந்துகொள்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.
‘என்னடா… ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கும் சொல்லிக் கொடுக்கிறாரே இந்த ஆள்’ என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்து தான் பதிலை ஆரம்பிக்கவேண்டும்.
சொல்லிக் கொடுத்தவுடனேயே ‘பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல’; ‘பற்றிக்கொள்ளும் கற்பூரம் போல கிரகித்துக் கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமா சொல்லிக் கொடுக்கப்பட்டது –
அந்த புத்தகத்தில்? க்ஷத்திரியன் (ராஜா போல் படம்) நாட்டை ஆள்பவன் வைசியன் (ஒரு வியாபாரி படம்), வியாபாரம் செய்பவன் சூத்திரன் (ஏர் உழுவது மாதிரி படம்), விவசாயம் செய்பவன் அய்யர் (ஒரு பிராமணர் படம்) நல்லவர். இந்த ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள் மேலும் மேலும் படித்திருப்பீர்கள். ஆனால், அதில் பிராமணர் என்பவருக்கான தொழிலாக ‘நல்லவர்’ என எழுதப்பட்டிருக்கிறது
ஏன்? பிராமணியம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. பிராமணன் ப்ரம்மத்தின் அவதாரம்.
பிராமணன் தெய்வம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான். கொலை செய்யமாட்டான். லோக சாந்திக்காக வாழ்வான். இவனால் தான் அரசர்கள் முதற் கொண்டு அனைவரும் சமாதானமாக சேமமாக வாழ்கிறார்கள் என வேத நூல் நீட்டி முழக்கிச் சொன்னதைத் தான் நமது பாட நூல் அய்யர் – நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித் திரட்டி தந்திருக்கிறது.
சரி… நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா? அப்படியானால், மற்ற வர்ணத்தவர்கள் கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம் வகுப்பிலேயே எழுந்திருக்கலாம்.
அப்போது கேள்விகள் கேட்டால் வாத்தியார் அதட்டி அமர வைத்து விடுவார். ஆனால், சாஸ்திர புஸ்தகங்கள் அப்படியல்ல, பிராமணர்களின் கடமைகள், வேலைகள் என்னென்ன என்பதுபற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். சாஸ்திரக்காரர்கள்.
“அய்யர் – நல்லவர்” மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான் யஜனம். யாஜனம் அப்படி என்றால்? யஜனம் – பண்ணுவது யாஜனம் – பண்ணுவிப்பது பண்ணிவைப்பது எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைதான்.
எப்படி? இங்கேயும் பள்ளிக் குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது. சின்னக் குழந்தைகள் டைம் டேபிள் பயன்படுத்துவது போல ஒரு நாளில் இன்னின்ன சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். காலக்ரமப்படி கர்மாக்கள் வகித்துள்ளது சாஸ்திரம்.
என்னென்ன என்று பார்ப்போம்! காலை 4.30-இல் இருந்து 5 6 மணிக்குள் அதாவது சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.
சிறுநீர் கழிக்கச் செல்லும் போது பூணூலை எடுத்து காதில் சுற்றிக் கொள்ள வேண்டும். காலைக் கடன்கள் கழித்த பின் கை, கால்களை அலம்பிக் கொண்டு சில மந்திரங்களைச் சொல்லவேண்டும்.
பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்த்ரங்கள்.சூரியோதயத்துக்கு முன்னரே செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.
(பின்னாளில் ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால் ராட்சஸர்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே எல்லோரும் பிராமணர்களைத் தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை எடுத்து மந்த்ரங்கள் சொல்லித் தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள் ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மேலெழுந்தான் என சந்தியாவந்தனத்துக்கும் ஒரு திரைக்கதை தயாரித்தார்கள் பின் வந்தவர்கள்.
இந்தச் சடங்கில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனை காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள் பிராமணர்கள். இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப் பயிற்சிதான்.
அடுத்ததாக யஜனம், யாஜனம். இரண்டும் தான் அன்று முழுக்க பிராமணர்களின் பிரதானப் பணி. அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்கள் செய்யவேண்டும். பிறருக்கும் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்து வைத்து தட்சணைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ர உள்ளிட்ட மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும்.
சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து, பின் கொஞ்ச நேரம் சயனம் அதாவது தூக்கம்.
பிறகு சில சாஸ்திர புஸ்தகங்களைப் படிப்பது. மாலையில் சூரியன் சாயும் வேளையில் மறுபடியும் சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது.
இது தான் பிராமணர்களுக்கென சாஸ்த்திர புஸ்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம்.
இப்படி இருந்துகொண்டு மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது.– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு பகுதி – 12
பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை.
பிராமணர்களிடையே பிளவா? லோக சேமத்துக்காகவே தெய்வத்தின் அவதாரமாக வாழ்பவர்கள் எப்படி பிளவுபடுவார்கள். இதற்கான பதில் அறிவதற்கு முன்பு தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்வோம்.
உலகிலேயே பக்தியை காதலிலும், காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே பார்த்திருக்கிறோம். காதலையும், காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை ஆணாகவும், தன்னைப் பெண்ணாகவும்…. கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும் உருவகித்து “நாயக- நாயகி – பாவ”த்தை காட்டியது தமிழ் வழிபாடு.
பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக – நாயகி பாவ வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம் தான் லிங்கம்
இன்னும் லிங்கத்தைப் பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும், அதில் கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம்.
வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு சின்னம்.ஆமாம்… காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான் லிங்கத்தின் தத்துவம்.
ஆணும்… பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.
தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் இவ்வடிவத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால்
லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின் மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான் லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.
இப்படி லிங்க வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேத வழி வந்த பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன் சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகி விடுகிறான்.
விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த தேசிகர்.‘நசூத்ரஜா பகவத் பக்தாஜாலிப்ரா பாகவதா’என போகும் ஸ்லோகத்தில்தான் இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப் பட்டிருக்கிறது.
ஆரிய மதம் – வேத மதம் – ப்ராமணமதம் – வைஷ்ணவ மதம் என வைஷ்ணவம் தழைத்திருந்த அந்த நேரத்தில்…ஒரு குரல் எழுந்தது.
இன்றைய வடாற்காடு மாவட்டத்தில் இருக்கும் அடையப்பலம் எனும் ஊரைச் சேர்ந்த அப்பய்ய தீட்சிதர் என்பவரின் குரல்தான் அது.
“வேதத்தில் ப்ரம்மம் என சொல்லப் பட்டிருப்பதெல்லாம் சிவனைத்தான். விஷ்ணுவை அல்ல…” என குரல் கொடுத்த அப்பய்ய தீட்சிதர் ‘ஷிவோத் கிருஷ்டம்’ என அழைக்கப்பட்டவர். அதாவது பரமசிவனையே போற்றிப் புகழ்பவர் – சிவனையே துதிப்பவர் என்பது இதன் பொருள். வேதத்தில் சிவன்தான் மையப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை நிறுவ அப்பய்ய தீட்சிதர் நீலகண்ட விஜயம் எனும் நூல் உள்பட பல புஸ்தகங்களை எழுதினார்.
தீட்சிதரும் பிராமணர்தான். ஆனாலும், சிவனே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கடவுள் என அப்பய்ய தீட்சிதர் வரையறுத்ததற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன.
வேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைஷ்ணவ வித்வான்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.
இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.
நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்‘நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம் நாராயணா பரஹா…’என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். ‘அதனால் நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப் பெறுங்கள்’ என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.
“மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது” என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.
சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள…
வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட…
சைவ… வைணவ வாத, பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர். — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்…. )
ஆதிசங்கரர் யார்? ‘எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை’ பகுதி – 13
‘எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை’ ஆதிசங்கரர். இவர் எழுதியது என்ன? செய்தது என்ன? உபதேசித்தது என்ன?
விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.
இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது. இவர் எழுதியது என்ன? செய்தது என்ன?-உபதேசித்தது என்ன? இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இவரையே தெய்வமாக வழிபடும் ஓர் ஆன்மீக உலகம்தான் அது.
இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள் மட்டுமல்ல கோஷங்களும்கூட, எழுந்து கொண்டிருக்கின்றன.
யார் இவர்? கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே… அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர். அங்கமாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான் காலடி… தற்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழும்பியிருக்கும் ‘பெரியாறு’ நதி அழகாக காலடி வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இயற்கை செழிப்பான இந்த காலடியில்…ஷிவகுரு எனும் பிராமணர் இவருக்கு ஆரியம்பாள் எனும் பத்தினி இவர்களுக்கு மகனாக பிறந்த செழுமை பூமியில் தன் மழலை காலடிகளைப் பதித்தான் சங்கரன். காலடியே இவனைக் கண்டு துள்ளிக் குதித்தது. ‘அழகான குழந்தை… கண்ணைப் பாருங்கள். ஞானம் சிரிக்கிறது. காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது.’ என பார்த்த ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள்.
அப்பாவும்… அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க.. ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து விட்டார்.
அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள்… கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள். சங்கரனின் குடும்பம் ஏழ்மையில் விழுந்தது.ஆனாலும்… சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அவனது அப்பா.
அவனது வயிற்றுப் பசியையும் போக்கி… அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள். உள்ளூர் பண்டிதர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் போதே 8 வயதில் சங்கரனுக்கு உபநய சடங்கை செவ்வனே செய்து வைத்தார்கள்.இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது.
அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான். “அம்மா… உள்ளூர் பண்டிதர்களிடம் படித்தது போதும் அம்மா… நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேனே…” அம்மாவிடம் சொல்லி விட்டு…பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம் செய்தான் சங்கரன். அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக, நர்மதா நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கவுடபாதர் போன்ற வித்வான்களிடம் அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர்… அங்கே பல விடயங்களைத் தெரிந்து கொண்டார்.அவர்கள் உபதேசித்த விடயங்களை உள் வாங்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.
சங்கரர் கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் போன்றவற்றுக் கெல்லாம் பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்… அப்போது புத்தரையும் வாசிக்க ஆரம்பித்தார்.
அதுவரை அவர் படித்த வேதம்.. பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம் சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம்.
புத்தன் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். மறுபடியும் மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்கத் தொடங்கிய சங்கரர்.. இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார்.
புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய்… அதுதான் எனக்கு கிடைத்த ஞானம்.
நம் பிறப்பு பொய்.. வாழ்வு பொய் இவ்வுலகத்தில் ஞானம். அக்ஞானம் ஆகிய இரண்டும்தான் உண்டு, மற்ற எதுவுமே கிடையாது” என தனக்கு கிடைத்த ஞானத்தை ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர்.
வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் கடவுளைத் தவிர… என சங்கரர் மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.
இதெல்லாம் சங்கரரின் இளமைக்காலம். ஆண் பொய், பெண் பொய் அனைவரும் பொய் என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் மறுத்தார். அம்மா எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார். தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட உலகையே மாயம் என ஒப்புக் கொள்கிற இளைஞர்களை திரட்டினார் சங்கரர்.
அவருக்கு முதன் முதலில் கிடைத்தவர்கள் நான்குபேர். ஆனந்தகிரி, சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகம். இவர்கள் தன்னை பின்தொடர ஒவ்வொரு ஊராய் சென்றார்.
உலகமே மாயம் எதுவுமே உண்மையில்லை. எதற்கும் கலங்காதே… தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார் ஆதிசங்கரர்…‘எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை’ என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதி சங்கரரை அந்த சம்பவம் அழுத்தமாக உலுக்கியது. – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது பகுதி – 14
உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு. சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்…
வேதம், கர்மாக்களை பொய் என்று சொல்லி பிரச்சாரம், உபந்யாசம் என அருளிக் கொண்டிருந்த ஆதிசங்கரரைஅழுத்தமாகப் பாதித்த சம்பவம். இளமைப் பருவத்திலேயே – அவரது தாயாரும் இறந்ததுதான், அனைத்தையும் பொய் என்ற போதும் அன்னையின் இறப்பு சங்கரரை ரொம்பவே பாதித்தது.
வைதீகர்கள் வந்தார்கள். ‘பாரப்பா உன் அம்மாவுக்குரிய இறுதிச் சடங்குகளை நீதான் செய்யவேண்டும். வழக்கம்போல அது பொய், இது பொய் என உளறாதே…’ என அவர்கள் பலவந்தப்படுத்தியதை அடுத்து தன் அம்மாவுக்கான கடைசிக் காரியங்களை தான் இதுவரை உபதேசித்து வந்த கருத்துகளுக்கு மாறாக இருந்தபோதும் செய்து முடித்தார் சங்கரர்.
‘இனி நமக்காக, நம்மை நம்பி யாருமில்லை…’ என்ற நிலைமை அன்னையின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதால் சந்யாசத்தில் தீவிரமானார் ஆதிசங்கரர். மறுபடியும் ஒவ்வொரு ஊராகச் சுற்றினார்.
சந்யாசம் வாங்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு இளைஞனுக்கும் சூடான ஸ்லோகங்கள் மூலம் பரப்பினார்.
பிற்பாடு கேரளாவைத் தாண்டியும் சங்கரர் பயணம் மேற்கொண்டு அத்வைதத்தையும் சந்நியாசத்தையும் உபதேசித்தார் என்றும் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில் தகவல்கள் வழிகின்றன.
சங்கரர், சந்யாசிகள் எப்படி வாழவேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு… தன்னைப் பின்பற்றும் அதாவது சந்யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.
சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்திருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருள்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்றபோது… மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு.
சந்யாசி அக்னியைக்கூட தேவைக்காக நெருங்கக்கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்கவேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்றசங்கரர்… சந்யாச ஸ்மிருதி வகுத்த விதிகளை கடுமையாக பின்பற்றினார்.
சந்யாச ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது? ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்தது தான் சந்யாச ஸ்மிருதி.
‘பததீ அஸோவ் ஸ்வயம்பிக்க்ஷஹீ யஸ்ய ஏததுத்வயம் பவேது…’ — சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்…என்று சொன்ன சந்யாச ஸ்மிருதி, சந்யாசிகள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது.
எங்கு போனாலும் சந்யாசி கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். அல்லது பல்லக்கில் போகவேண்டும்.
இதைத் தவிர்த்து வேறு எந்த வசதிகளையும் சந்யாசிகள் பயன்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் ஸ்லோகத்தில் சொல்கிறார்கள்.
“வாகனஸ்த்தம் யதீம் திருஷ்ட்வாசஜேஸ ஸ்நான மாசரேது…”என போகும் இந்த ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் என்ன தெரியுமா?
சந்யாசியானவன் எத்தனை மாற்றங்கள் உலகியலில் வந்த பன்னாலும் தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்க வேண்டும். கால்நடையாக திரிந்து உன் உபதேசங்களைப் பரப்பவேண்டும். அதை விட்டுவிட்டு வண்டி வாகனங்களை தேடிக் கொண்டிருக்காதே. அவற்றில் ஏறி ஜம்மென உட்கார்ந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்காதே. அதைவிட மிகப்பெரிய பாவம் வேறெதும் இருக்க முடியாது.
உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது.
பிறகு அவர் எப்படி பயணம் செய்ய முடியும்? தவிர்க்க முடியாத துரதிருஷ்டவசமாக சந்யாசி அப்படிப்பட்ட வண்டிகளைப் பார்த்துவிட்டால் அந்த கணமே தலைமுழுகி ஸ்நானம் செய்து அப்பாவத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும் என ‘வாகன’த் தீட்டு பற்றி சந்நியாசிகளுக்கு அப்போதே அறிவுறுத்தியிருக்கிறது சந்யாச ஸ்மிருதி.
இத்தனைக் கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் துளிகூட வழுவாமல் தன் சந்யாசத்தை மேற்கொண்டிருந்தார் சங்கரர்.
இந்த இடத்தில் நானொரு விஷயத்தைச் சொல்வது மெத்தப் பொருத்தமாகயிருக்கும். மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த வாகனத் தீட்டு விஷயத்தில் ரொம்ப கவனமாயிருந்தார்.
தான் இருக்கும்வரை எவ்வித இயந்திர வாகனத்திலும் அவர் பயணித்ததில்லை. (பல்லக்குகளில் தான் ஏறிச் சென்று கொண்டிருந்தார்).
இளமையிலேயே இவ்வாறு சந்யாச ஸ்மிருதிகள்படி வாழ்ந்து வந்த ஆதிசங்கரர் இதோடு இல்லாமல் தானே பஜகோவிந்தம் என்னும் சாஸ்திர நூலையும் இயற்றினார்.
மூடமதே… அதாவது மூட மடனமே என மனங்களை அழைக்கும் பஜகோவிந்தத்தில் – ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகங்கள் இன்றளவும் சராசரி புருஷர்களுக்கும், சந்யாசிகளுக்கும் புத்தி சொல்லக் கூடியதாக… அறிவூட்டக் கூடியதாக அமைந்திருக்கின்றன.
பணத்தாசை பிடித்தால் என்ன நேரும்? பெண் பித்து பிடித்தால் என்ன நேரும்? என பல சூடான கருத்துகளை பஜகோவிந்தத்தில் (பஜகோவிந்தம் என்றால் கோவிந்தனை பஜனை செய்கிறேன் என பொருள்) எடுத்துக் காட்டியிருக்கிறார்
ஆதிசங்கரர். அதில் சில தேவையான ஸ்லோகங்களைப் பார்ப்போம். அவை சொல்லக்கூடிய விதத்தில் இன்றைய சந்யாசிகள் இருக்கிறார்களா என்றும் அந்த ஸ்லோகங்களின் ஜன்னல்கள் திறந்து தரிசிப்போம். – அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
Leave a Reply
You must be logged in to post a comment.