மத்திய அரசு வழங்கிய ரூபா 24,800 மில்லியனைவிட அதிக நிதியுதவியை தேடித்தந்த அமைச்சர் சத்தியலிங்கம் ஏன் முதலமைச்சரால் இலக்கு வைக்கப்பட்டார்?

மத்திய அரசு வழங்கிய  ரூபா 24,800 மில்லியனைவிட அதிக நிதியுதவியை தேடித்தந்த  அமைச்சர் சத்தியலிங்கம் ஏன் முதலமைச்சரால்  இலக்கு வைக்கப்பட்டார்?

ந.லோகதயாளன் 

கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல   கட்சித் தலைவர்கள் கடந்த வாரம்  முதலமைச்சர் இல்லத்தில் கூடிக் கலைந்தது  கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழி கோலியது என்பதற்கும் அப்பால்  கூட்டமைபபிற்குள் நிலவிய பனிப்போர் மேடை ஏற்றப்படுவதற்கான ஓர் சந்தர்ப்பமாக அமைந்ததாகவும்  கொள்ளமுடியும்.

குறித்த கலந்துரையாடல்  முதலே இறுதிவரை அதியுச்ச சச்சரவாகவே கானப்பட்டபோதிலும் இறுதியில் என்னவோ வள்ளுவரின் இருவரிக் குறளைத் தாண்டி மூன்றுவரித் தீர்மானமாக வெளிவந்தது. மாலை 6 மணிக்கு கூடி 9.30 மணிக்கு நிறைவு செய்த கூட்டத்தின் தொகுப்பு மூன்றுவரித் தீர்மானம் மட்டுமே என்றால் அப்போ 3 மணி நேரம் உள்ளே என்னதான் நடந்தது?  அதாவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் கட்சித்தலைவர்களும் முதலமைச்சர் ஆகியோரும்  தமிழ்மக்களின் நலன்கருதி மேற்கொண்டதான  தீர்மானமாக  முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் சர்ச்சையை  குறைக்குமா? அல்லது மேலும் வலுக்கச் செய்யுமா? என்பதே தற்போது தலைதூக்கியுள்ள  பெரும் கேள்வியாகும்.

முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிபு அதிகாரங்களைப் பயன்படுத்தி  அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்தியுள்ளன.

அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது குறித்த அமைச்சர் எந்த ஒரு குற்றச்சாட்டையும் இழைத்ததாக அர்த்தப்படாது. அமைச்சரவை நியமனங்களைப் பொறுத்த மட்டில் அங்கத்துவக்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்து அவை மேற்கொள்ளப்படவேண்டும்  என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் இவ்வாறானதொரு இணக்கம் எட்டப்பட்டது என்றாலும் முதலமைச்சரின் நிலைப்பாட்டிற்கு சில கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேறு வழியில்லாமல் அந்த இடத்தில் அவர்கள் இணங்கிப் போயிருந்தாலும் முழுமனதோடு அவர்கள் இணங்கினார்கள் என்று சொல்வதற்கில்லை.எனவே இந்தப் பிரச்சினை இத்தோடு முடிந்துபோகும் என்று நான் நினைக்கவில்லை. அது தொடர்வதற்கான வாய்ப்புகளே இருக்கின்றன ரெலோ அமைப்பினர், தமது கட்சியின் சார்பில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற பா.டெனீஸ்வரனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதேபோன்று அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேசப்பட்டபோது, விசாரணைக் குழு விடுவித்த இரு அமைச்சர்களையும் நீக்கி விட்டு, டெனீஸ்வரனுக்குப் பதிலாக ரெலோ அமைப்பு பிரேரிப்பவருக்கும் மற்றைய அமைச்சுப் பதவியை புளொட்டுக்கும் வழங்கும் முடிவை முதலமைச்சர் முன்வைத்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தமது கட்சியின் அமைச்சரவைப் பிரதிநித்துவத்தை மாற்றி வழங்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டார்.

மாகாண சபையில் 15 பேர் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது அந்தக் கட்சிக்கு அமைச்சர் ஆசனம் வழங்காமல் விடுவது மேலும் பிரச்சினையை சிக்கலாக்கும் என்று புளொட் கட்சியின் தலைவர் நேரடியாகவே கூறினார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, திருமதி அனந்தி சசிதரன் எங்களது கட்சியின் அங்கத்தவராக இப்போது கருத வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.  எங்கள் கட்சிக்குரிய அமைச்சர் யார் என்பதை முன்மொழிவோம் என்று கூறியபோது   அந்த ஐவரின் (மாகாணசபையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அணி என்று அடையாளப்படுத்தப்படுவர்கள்) பெயரைத் தந்தால் அவர்களை நியமிக்கவே மாட்டேன் எனக்கெதிராக  நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது 43 குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்பட்டதாகவும் , 43 கேள்விகளுக்கு மட்டுமல்ல 400 கேள்விகளுக்கும்   பதிலளிக்க முடியும்   தற்போதைய நிலையில் வடமாகாண சபையின் தமிழரசுக் கட்சியின் பக்கம் 16 பேர் இருப்பதால் எனக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றவும்  முடியும்.  ஆனாலும் இவ்வாறான எதனையும் சந்திக்க  தயார் என்றார் முதலமைச்சர்.

இவ்வாறு உள்ளே உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்ட பின்பு வெளியில் வந்து வள்ளுவரின் குறள்கள் போன்று இருவரிகளில் 3  தீர்மானங்களை வெளியிட்டாலும் அது ஒருநாள்கூட நீடித்ததாக தெரியவில்லை. அதாவது மறுநாளே தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றுகூடி புதிய அமைச்சரவையில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் எவரும் பங்குகொள்வதில்லை என்ற தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

அதேவேளை வட மாகாணஙசபை உருவாக்கத்தின் பின்னர் மத்திய அரசிடமிருந்து 2014, 2015 , 2016, 2017 ஆகிய 4 ஆண்டுகளிலும் மாகாண சபைக்கு  அபிவிருத்தி நிதியாக  வழங்கப்பட்ட மொத்த நிதியிலும் பார்க்க சுகாதார அமகச்சர் தனி ஒரு அமைச்சராக மாகாணத்திற்கு தேடிக் கொடுத்த வருமானம் அதிகம் ஆகும்.

வட மாகாண சபையானது எந்தவொரு பெரிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவோ அல்லது அதற்கு ஒத்துழைக்கவோ கூடாது என்ற நிலைப்பாட்டில் இயங்குவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டின் வரிசையில் தற்போது சத்தியலிங்கத்தின் பட்டியலும் இணைந்துகொள்கின்றது. இந்தக் கொள்கையிலேயே வட மாகாண முதலமைச்சர் இயங்குகின்றார் என குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அடுக்கும் பட்டியலோ நீண்டது.  அப் பட்டியலில் ஐநா சபையால் வழங்கப்படவிருந்த 1,500 மில்லியன் டொலர்  யு.எஸ் நிதியை வேண்டாம் எனப் பதில் அனுப்பியது, முல்லைத்தீவில் இந்தியத் துணைத் தூதரகத்தால் அமைக்க முன்வந்த தொழில் நுட்பக் கல்லூரிக்கான காணியை வழங்காது வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியது, சாவகச்சேரிப் பகுதியில் அமைக்க எண்ணிய உப்பளத்தை தடுத்தமை , பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டமை எனப்  பட்டியல் நீள்கின்றது.

ஆனால் இதற்குப் பதிலாக இவ்வாறான பெரிய திட்டங்கள் எவற்றையாவது முதலமைச்சரின் இந்த 4 ஆண்டுகாலத்தில் வட மாகாணத்திற்குள் கொண்டு வர முயற்சித்தாரா என்றால் அதற்கு இல்லை என்பதே பதிலாகும்.   அத்தோடு பாரிய நிதியீட்டல்களைப் பெற்றவரும் மற்றுமோர் பாரிய நிதியாக 11, 600  மில்லியன் ரூபா நிதியை கிடைக்கச் செய்ய அனைத்து ஒப்பந்தங்களும் பூர்த்தி செய்யப்பட்டு அந்நிதியை வழங்கும் டென்மார்க் அரசும் மத்திய அரசும் அனுமதியும் வழங்கிவிட்ட திட்டத்தின் கதாநாயகனாக விழங்கும் வட மாகாண சுகாதார அமைச்சர் வடக்கில் பாரிய திட்டங்களை ஆரம்பித்தால் அரசு வடமாகணத்தை அபிவிருத்தி செய்கின்றது என்ற பெயர் வந்துவிடும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே அவரின் அமைச்சிற்கும் ஆப்பு வைக்கப்படுவதாக தற்போது கூறப்படுகன்றது.

அவ்வாறு இல்லை எனச் சொன்னாலும் நிச்சயமாக திட்டத்தை தயாரித்து அத்தனை முன் நகர்வையும் செய்தவர் அந்த இடத்தில் இருந்து நகரும்போது அங்கே நிச்சயமாக ஓர் தடங்கல்  ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.  அதாவது  கால தாமதம் ஏற்படுமேயன்றி நிதி திரும்பிச் செல்லாது. அந்தக் காலதாமத எல்லைக் காலத்தில் வட மாகாண சபையின் ஆயுள்காலம் நிறைவுபெற்றுவிடும்.  அப்போதும் இதனை ஓர் அரசியல் பேசுபொருளாக  இங்கு  எவையுமே இடம்பெறவில்லை எனச் சுட்டிக்காட்டும் உத்தி எனத் தற்போது  சுட்டிக்காட்டப்படுகின்றது.

நான்காண்டு கால ஆட்சியில் மத்திய அரசு வழங்கிய  ரூபா 24,800 மில்லியனைவிட அதிக நிதியுதவியைத் தேடித்தந்த  சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஏன் முதலமைச்சரால்  இலக்கு வைக்கப்பட்டார்? விசாரணைக் குழுவிடம் அமைச்சர் சத்தியலிங்கத்தை எப்படியும் மாட்டி வைக்க முடியாதா  என்று  முதலமைச்சர் ஏன் கேட்டார்? அமைச்சர்கள் சத்தியலிங்கம்  டெனீஸ்வரன் இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எண்பிக்கப்படவில்லை என்று விசாரணைக் குழு  தீர்ப்பளித்த பின்னரும் இன்னொரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என முதலமைச்சர்  ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறார்? இந்தக் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும்!

இந்த நிலையில் மாகாண சபையின் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் சற்றே சீற்றம் கொண்டுள்ள நிலையில் தமிழ் அரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  கொழும்பிற்கு அழைத்துள்ளார். இவ்வாறு கூட்டப்பட்ட கூட்டத்தில்  என்ன தீர்மானம் எட்டப்பட்டது என்பது தெரியவில்லை.  இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே மாகாண சபையின் தலைவிதியையும்   முதலமைச்சரின்  பதவிக் காலத்தையும்  தீர்மானிக்கும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.

இதேவேளை மாகாண சபையில் அமைச்சர்கள் பிரச்சணைக்கு விசாரணை என்கின்ற கோரிக்கையே காரணமாக அமைந்தது. அந்தக் கோரிக்கையினை தமிழரசுக்கட்சியே சபையில் முதலில் கொண்டுவந்ததாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுரேஸ் பிறேமச்சந்திரன் முதல்கொண்டு பலரும் தவறாகவே கருத்துரைத்தும் வருகின்றனர். உண்மையில் 09-02-2016 அன்று வட மாகாண சபையின் 45 ஆவது அமர்வில் புளட் அமைப்பின் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனே அமைச்சர்கள் மீதான விசாரணையை தீர்மானமாக கொண்டுவந்தார். இது சபை நடவடிக்கை குறிப்பேட்டின்  பதிவில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இவ்வாறு ஆவண ரீதியாகவுள்ள ஓர் விடயத்தையிட்டு பொய் உரைப்பதன் உள்நோக்கம் என்ன என்பதும் தனியே ஆராயப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply