உலகத் தமிழ் மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் தொடக்கம்
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது பன்னாட்டு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமானது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ்.இராதகிருஸ்ணன் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். முதல் நாள் நிகழ்வுகள் 10 அமர்வுகளாக இடம்பெற்றன. கல்விக்கான நிதியுதவி, மலர் வெளியீடு, ஆய்வுரைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. மாநாட்டில் 66 ஆய்வுக் கட்டுரைகள் பரிசீலிக்கப்பட்டன.
விருந்தினர்கள் சிறப்புரை நிகழ்த்தினர். முனைவர் பாஞ்.இராமலிங்கம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. மாநாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இ.விக்னேஸ்வ ரன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்திய, இலங்கைப் பேராசிரியர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
”தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்காக நூற்றுக்கணக்கான பாடசாலைகளை புலம் பெயர் நாடுகளில் உருவாக்கியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவ்வாறு அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ்ப் பாடசாலைகள் புலம்பெயர் நாடுகளில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழை வளர்ப்பதில் அவர்களும் பெரும் பங்காற்றினார்கள். ” என்று உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலதலைவர் வி.சு.துரைராஜா தனது உரையில் தெரிவித்தார்.
”உலகத் தமிழர் பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தை உருவாக்க முயற்சி எடுத்து வரும் இராஜாங்க அமைச்சருக்கு எமது நன்றிகள். அதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கண்டிப் பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும்” என்று தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் பாஞ்.இராமலிங்கம் தனது உரையில் தெரிவித்தார்.அதேவேளை மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். ரில்கோ விடுதியில் இடம்பெறும். சென்னை முனைவர் வா.மு.சேதுராமன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் கவியரங்கம், பேராளர் கருத்தரங்கம், பேராளர்களின் கருத்துரைகள், இலக்கியத் திரைப்படக்காட்சி, கலைநிகழ்வுகள் இடம்பெறும். நிகழ்வில் பேராளர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.