விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம் -பகுதி 39
பெண்களின் இயற்கையான உடலியல் நிகழ்வை வேதம், எத்தனை கற்பனை முடிச்சுகளால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா?
வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது?
அடுத்து… நாம் பார்க்கப் போவது பெண்களின் வாழ்க்கையில் முக்கிய தருணமான திருமணம்.
வேதத்தில் சில இடங்களில் விவாஹம் என்றும் பாணிக்ரஹணம் என்றும் குறிப்பிடப்படும் திருமணம் மிகவும் தடபுடலாக நடத்தப்பட்டிருக்கிறது.
முதலில்… விவாஹம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்வோம். ஏனென்றால், இன்று வரையும் திருமணப் பத்திரிகைகளுக்கு ‘விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை’ என பெயரிட்டு அச்சடிக்கிறார்கள். விவாஹம் என்றால் Tribal வார்த்தை. அதாவது மலைப்பிரதேச பழங்குடியினர் வார்த்தை.
இதற்கு தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். இந்த அர்த்தத்தை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருமணங்களில் பெண்ணின் உறவினர்கள் பெண்ணை தூக்கிக்கொண்டு போவது என்ற ஒரு சடங்கை திணித்திருக்கிறார்கள்.
சரி… நாம் வேத திருமணத்துக்குப் போவோம். திருமண நடவடிக்கைகள் எப்படி ஆரம்பிக்கின்றன. தரகரை அனுப்புகிறது வேதம். ‘முதலில் நீ போய் பெண்ணை பார்த்துவிட்டு வா’ என்று.
“ப்ரதக் மந்தா திய ஸானஸ்ய வரேபி வராதுகாசுப்ர தீததா ஆஸ்மா சுமிந்த்ராஉபயம் ஜீஹோஷதீ…” என போகும் இந்த வேத மந்த்ரம்…
தரகர் எப்படி பெண் பார்க்க செல்லவேண்டும் என்று வலியுறுத்துகிறது. நீ மிக பகட்டான ஆடம்பர ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு பணக்காரன் போன்ற தோரணையுடன் பெண் பார்க்கச் செல்லவேண்டும்.
இல்லையென்றால், மாப்பிள்ளை வீட்டாரை பிச்சைக்காரன் என நினைத்துப் பெண் கொடுக்காமல் இருந்து விடுவார்கள் என மாப்பிள்ளை வீட்டாரின் பிரதிநிதியாக தரகரை வரையறை செய்து வைத்திருக்கிறது வேதம்
அவர் பார்த்து பேசிவிட்டு வந்தபின் அடுத்தது பெண்ணும், பையனும் பார்த்துக் கொள்கிறார்கள். பரஸ்பர பார்வை பரிவர்த்தனம், பிறகு கை பிடிக்கிறார்கள். அதாவது Mutual Meeting. அதாவது பாணிக்ரஹணம். எங்கே பார்த்துக் கொள்கிறார்கள்? மணமேடையில்?
அப்போது பெண்ணிடம் சொல்கிறார்கள்…தொஷ்டா அஸ்பை துவாம்பதிம்தொஷ்டா சகஸ்ரமாஹம் ஷிஹீதீர்க்கமாயு க்ரேனோவதாம்…
ஏ… பெண்ணே இவன்தான் உனக்கென தெய்வத்தால் அனுப்பி வைக்கப்பட்டவன். இனி இவன்தான் உனக்கு எல்லாம். இவன்தான் உன் கணவன். இவன் சொல்படிதான் இனி உன் சொர்க்கம். இவனை தெய்வத்தின் உத்தரவின் பேரில் நீ திருமணம் செய்துகொள்வாயாக.
நீ இவனோடு எதுவரைக்கும் வாழவேண்டும் என்றால்…“க்ருப்ணாபிதே சுப்ரஜா அஸ்த்வயாமயாபத்ய ஜலதஷ்டிம் யதாஸஹா” நீ கிழவியான பிறகு கூட உனக்கு இவன் தான் துணை என்கிறது வேதம். பொதுவாக திருமணம் இப்படி நடந்திருக்கிறது.
வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது?
ரிக் வேதத்தின் 10-ஆவது மண்டலத்தில் முதல் திருமணம்பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.சூர்யா என்கிற உஷஸ் என்பவள் சோமராஜனை காதலிக்கிறாள். அதாவது சந்திரனை காதலிக்கிறாள். அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால், இதை தன் அப்பனிடம் எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறாள்.
இந்த நிலையில்தான் சூர்யாவின் தந்தை அவளுக்கு திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டான். எப்படி? உலகெங்கும் உள்ள ராஜாக்களுக்கு அழைப்பு விடுக்கிறான். அவர்களுக்கு ஒரு பந்தயம்.
அதாவது சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ராஜாக்கள் தங்களது ரதங்களோடு வந்துவிடவேண்டும். அங்கே அனைத்து ராஜாக்களுக்கும் ரதப் பந்தயம் நடக்கும். குறிப்பிட்ட தூரத்திலுள்ள இலக்கை எந்த ராஜாவின் ரதம் முதலில் அடைகிறதோ அவருக்கு சூர்யா மணப்பெண்ணாக கிடைப்பாள்.
இப்படியாக… அனைத்து ராஜாக்களும் அந்த பந்தயத்துக்கு அழைக்கப் பட்டிருந்தார்கள். சூர்யாவை அடைந்தே தீருவது என்ற ஆசையோடு ஒவ்வொரு ராஜாவும் தங்கள் ரதங்களோடு வந்திருந்தனர்.
அந்த இடமே வண்ண மயமாக இருந்தது. பல தேசத்து குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்கள் அலங்காரமாய் அணிவகுத்திருந்தன. அந்தக் கூட்டத்தில் சூர்யாவை காதலித்துக் கொண்டிருக்கிற சோமராஜாவும் தன் ரதத்தோடு வந்திருந்தார்.
சூர்யாவுக்கும் பதற்றம் பரவிக் கிடந்தது. நமது நாயகன் பந்தயத்தில் முந்தி வந்து நம்மை கைப்பிடிப்பானா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்தாள் சூர்யா.
பந்தயம் ஆரம்பித்தது. ராஜமுரசு அறையப்பட்டதும் அனைத்து ரதங்களும் தயாராயின. சூர்யாவை பரிசுப் பொருளாக அடையவேண்டும் என்ற ஆசையில் ராஜாக்கள் தங்கள் ரதங்களில் கட்டப்பட்டிருந்த குதிரைகளை முடுக்க ஆரம்பித்தனர்.
இவர்களுக்கிடையே அஸ்வதி ராஜாவும் அழகான சூர்யாமேல் ஆசைப்பட்டான். ஏன் அவன் ஆசைப்படக் கூடாது என்கிறீர்களா? அவன் ரதத்தில் கட்டப்பட்டிருந்தவை குதிரைகள் அல்ல, கழுதைகள்.
குதிரைகள் ரதங்களோடு தனது கழுதை ரதத்தையும் வேகமாக செலுத்தினான் அஸ்வதி ராஜா.சூர்யா… தன் அரண்மனை மாடத்திலிருந்து இந்தப் பந்தயத்தை உற்று கவனித்துக் கொண்டிருந்தாள். தன் சோமராஜா முந்தவேண்டும் என்று அவள் தியானித்துக் கொண்டிருக்க…யாருமே எதிர்பாராத வகையில்..– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.