ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான். எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ‘ப்ராமண புருஷனாக அவதரித்தால்தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும்…”
மோட்சம் வேண்டும் என்றால்… இந்தப் பிறவியை இப்படியே கழித்து… அடுத்த ஜென்மாவில் ப்ராமணனாக பிறக்கபகவானை பிரார்த்திக்க வேண்டும்.
காட்டுத் தீயாக… இடியாக, உதயசூர்யனாக, சிங்கமாக, கருடனாக வர்ணிக்கப்பட்ட ஸ்ரீராமானுஜர் தன் சிறுபிராயத்திலேயே வேத, உபநிஷத்துகளை அத்யயனம் செய்ய ஆரம்பித்தார்.
ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்ததாக தகவல்கள் பரவியிருந்தாலும், தான் எழுதியுள்ள எந்த க்ரந்தத்திலும் தன் சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரைப் பற்றியோ அங்கே அமைந்திருக்கும் பெருமாளைப் பற்றியோ எந்த ஒரு தகவலையும் ராமானுஜர் குறிப்பிடவில்லை. இன்னொன்று தமிழ்மொழியில் எந்த க்ரந்தத்தையும் அவர் அருளிச் செய்யவில்லை.
வேத, உபநிஷத்துகளோடு தன் முன்னோடிகளான நாதமுனி, ஆளவந்தார் பற்றியும் கசடற கற்றார் ராமானுஜர். நாதமுனிகளைப் பற்றி ஆளவந்தார் அருளிய ஸ்லோகம் ஒன்று.“ஜனித்வா வம்ஸே மாதிக்யா கேஸதாம்கசீனாம் சுத்தாநாம்சித் அசிது ஈஸ்வர தத்வ விஷதாம்…”
பிறக்கும்போதே புகழ் பொருந்திய வம்சத்திலே வந்த நாதமுனிகள் ‘சித்’ ஆகிய ஜீவாத்மா, அசித்தாகிய ஜடப்பொருளான உலகம், ஈஸ்வரனாகிய ப்ரம்மம் மூன்றும் மெய்யானவை என்றார். அதாவது மாயாவாதத்துக்கு எதிரான சிந்தனையை வெளியிட்டார்…” என அந்த ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறார் ஆளவந்தார்.
“நஸந்த்ரீசே திஷ்டதீ ரூபமஸ்ய நசக் குஹா பத்யயீகஷ்யனயேனம் ஹ்ருதா மனிஷாமனசா அபிகிருப்தஹா யயேனம் விதுஹீஅமிர்தா ஸ்தே பவந்த்தீ…என்று சொல்கிற உபநிஷத்து ஸ்லோகம் சொல்வது என்னவென்றால்…
பகவானுக்கு உருவம் கிடையாது. அரூபமானவன் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால்… உனக்கு வேணுமெனில் உன் மனதுக்குள் அவனை உருவம் உடையவனாக நினைத்துகொள். அவன் உருவத்தை தியானித்துக் கொண்டிரு…” என்கிறது.
நாதமுனிகள் சொன்னதையும், உபநிஷதுகள் சொன்னதையும் ராமானுஜர் தன் வேதாந்த அறிவில் விதைத்து முழுமூச்சாக சிந்தித்து முளைக்க வைத்தார். அதுதான் வசிஷ்டாத் வைதம் இது என்ன சொல்கிறது?
உலகில் எதுவுமே மாயை என்பது தவறு பகவானுக்கு ரூபம் உண்டு. அவன் வைகுந்தத்தில் வசிக்கிறான். அவன்தான் ஜீவாத்மாவாகிய நம்மையும், உலகத்தையும் படைத்தான். பகவானின் உருவம் மனசு கற்பித்ததில்லை. அவன் நிஜமான உருவம் கொண்டவன். பக்கத்தில் பிராட்டியோடு… வைகுண்டத்தில் இருக்கும் பகவானை நாமெல்லாம் தியானிக்க வேண்டும் என்பதுதான் ராமானுஜ உபதேசம்.
இவ்வாறு… புது தத்துவத்தை முரசறைந்த ராமானுஜர் இதை நிலைநாட்டுவதற்கும்… பரப்புவதற்கும் பல பயணங்கள் மேற்கொண்டார். உபநிஷத்தின் வியாக்யானமான ப்ரம்மசூத்திரம் முக்கியமான வேதாந்த நூல் இதைப்படித்து உரை எழுதுவது அதாவது பாஷ்யம் பண்ணுவது மிகக்கடினமான காரியம். சமஸ்கிருத மேதாவிலாசமும், ஞான சித்தியும் வாய்க்கப் பெற்றவர்கள் மட்டுமே இதை பண்ணமுடியும்.
அப்படிப்பட்ட ப்ரம்ம சூத்ரத்துக்கு சங்கரரர் உரை எழுதினார். அது சங்கர பாஷ்யம் எனப்பட்டது. மத்வர் உரை எழுதினார். அது மத்வ பாஷ்யம் என அழைக்கப்படுகிறது. அதே ப்ரம்ம சூத்ரத்துக்கு ராமானுஜரும் உரை எழுதினார். ஆனால்… அது ராமானுஜ பாஷ்யம் என அழைக்கப்படாமல் ‘ஸ்ரீபாஷ்யம்’ என மேன்மையோடு அழைக்கப்படுகிறது.
இந்த பாஷ்யத்தை படைப்பதற்காக… காஷ்மீர் பயணித்த ராமானுஜர் அங்கே போதாயணரைப் பார்த்தார். இன்றைய தட்பவெப்ப நிலையிலேயே இந்த்ரியங்களை நடுங்கச் செய்யும் காஷ்மீரம்.. பல நூற்றாண்டுகள் முன்பு எவ்வளவு பனிக்கட்டிகளை மடியில் கட்டிக் கொண்டிருக்கும். அப்பேற்பட்ட இடரிலும் போதாயணரை பார்த்து அவரிடத்திலே ப்ரம்மசூத்ரத்தை வாங்கினார் ராமானுஜர். ராமானுஜர் ப்ரம்மசூத்ரத்துக்கு பாஷ்யம் பண்ணப்போகிறார்.
அதில் சங்கர பாஷ்யத்துக்கு பதிலடி கொடுப்பார் என கருதிய அத்வைதிகள் சிலர் ராமானுஜருக்கு ப்ரம்மசூத்ரம் கிடைக்காமல் செய்வதற்கான வழிகளையும் காஷ்மீர்வரை சென்று மேற்கொண்டனர்.
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமோ? போதாயண வ்ருத்திக்காரர் என்ற காஷ்மீரத்து ஞானியிடமிருந்து மிகவும் கஷ்டப்பட்டு ப்ரம்மசூத்ரத்தை வாங்கி அதற்கு பாஷ்யம் அதாவது உரையெழுதினார் ஸ்ரீராமானுஜர்.
இங்குதான் ராமானுஜரைப் பற்றி இருவேறு கருத்துகள் ஆரம்பிக்கின்றன.
தான் அருளிய ஸ்ரீபாஷ்யத்தின் முதலிலேயே… “பூர்வாச்சாரியார்கள், அதாவது ப்ரம்ம சூத்ரத்தை பண்ணிய ஆச்சாரியார்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே நான் இங்கு தருகிறேன். இதில் என் கருத்தென எதுவும் இல்லை. அவர்கள் சொன்னதுதான் நான் சொன்னதும்” என ‘ஆமாம்’ போட்டுவிட்ட ராமானுஜர்.
ஸ்ரீ பாஷ்யத்தின் அபசூத்ராதிஹிரணம் என்ற பகுதியில் சொல்வது இதுதான்.
“பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர்களுக்குத்தான் மோட்சம் நான் சொல்வது மோட்சம் வேண்டும் என்றால்… இந்தப் பிறவியை இப்படியே கழித்து… அடுத்த ஜென்மாவில் ப்ராமணனாக பிறக்க பகவானை பிரார்த்திக்க வேண்டும்.
ஒருவேளை அடுத்த பிறவியில் பிராமணர்களாக பிறக்க அவர்களுக்கு ப்ராப்தம் கிடைக்குமானால் வேத, உபநிஷதுகளை கற்று… பகவானை தொடர்ந்து தியானித்து… மோட்சம் பெறலாம்.
அதுபோலவே… ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான் எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ‘ப்ராமண புருஷனாக அவதரித்தால்தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும்…” என்கிறார் ராமானுஜர். (மோட்சம் என்றால் அடுத்த ஜென்மம் பிறந்து அவதிப்படாமல் வைகுண்டத்தில் பகவானின் திருவடிகளை அடைந்து நித்ய ஆனந்தம் அனுபவிப்பது.
ஆனால்… ராமானுஜர் திருக்கோட்டியூர் கோவிலில் கோபுரத்தில் மீதேறி… அனைத்து சாதியினருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருமந்திரத்தை கூவிச் சொன்னார் என கெட்டியான தகவல் பரவிக் கிடக்கிறது.
இது ராமானுஜரின் வாழ்வில் நிகழ்ந்திருக்குமானால் தன் க்ரந்தங்கள் எதிலும் இதுபற்றி அவர் குறிப்பிடவில்லையே ஏன்?
ராமானுஜரின் சிஷ்யரான கூரத்தாழ்வான்… “பிராமணர்களுக்கு மட்டும் மோட்சம் என சொல்வது தவறு… எல்லா வர்ணத்தவரும்தான் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கவேண்டும்…” என சொன்னது ஏன்? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
Leave a Reply
You must be logged in to post a comment.