தமிழை கட்டிப்போட்ட சமஸ்கிருதம். பூசையில் சூழ்ச்சி
தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள்.
சமஸ்கிருதம் எப்படி தமிழை கட்டிப் போட்டது?.. அந்த காலத்தில். வேதம் தமிழ் தேசத்தையே ஆக்கிரமித்தது. எங்கும் வேதம். எதிலும் வேதம்.
இந்த சிலைக்கு ஏன் வெறும் பூ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?… இந்த சிலையில் வேதம் சொன்ன தேவதைகளை நாங்கள் வர வைத்து காட்டுகிறோம். அவர்கள் கண்ணுக்கு தெரியாத தேவதைகள். அஸரீரிகளாக இருப்பார்கள். அவர்களின் காதில் விழுமாறு வேத மந்த்ரங்களை நாம் உரத்து உச்சரித்தால் இந்த சிலைக்குள் எங்கள் வேதத்தின் தேவதை வரும்…”
பகுதி – 68.
நாலாயிர திவ்ய பிரபந்தம். இந்த சொற்களிலிருந்தே தமிழை அந்த காலத்தில் சமஸ்கிருதம் எப்படி கட்டிப் போட்டிருந்தது என்பதை அறியலாம்?
ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ் ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரம் இறைப் பாட்டுகளை திவ்யம் – (தூய்மை) ப்ரபந்தம் – (திரட்டு) என்ற இரு சமஸ்கிருத சொற்களால்தான் நாம் இன்றளவும் அழைத்து வருகிறோம்.
இனிமேலாவது… “அழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்’ என இந்த புனித நூலுக்கு தமிழ் தலைப்பு கொடுக்கலாம். சரி…
சமஸ்கிருதம் எப்படி தமிழை கட்டிப் போட்டது?…அந்த காலத்தில்… வேதம் தமிழ் தேசத்தையே ஆக்கிரமித்தது…
எங்கும் வேதம்… எதிலும் வேதம். அதாவது இங்கே உள்ள சிலைகள், நுட்பமான சிற்பங்களை பார்த்த பிராமணர்கள்…
“இந்த சிலைக்கு ஏன் வெறும் பூ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?.. இந்த சிலையில் வேதம் சொன்ன தேவதைகளை நாங்கள் வர வைத்து காட்டுகிறோம். அவர்கள் கண்ணுக்கு தெரியாத தேவதைகள். அஸரீரிகளாக இருப்பார்கள்.
அவர்களின் காதில் விழுமாறு வேத மந்த்ரங்களை நாம் உரத்து உச்சரித்தால் இந்த சிலைக்குள் எங்கள் வேதத்தின் தேவதை வரும்…” என்றார்கள்.
தமிழன் முதலில் சிலைக்கு பூ தான் போட்டுக் கொண்டிருந்தான். அதுதான் நமது வழிபாடு என்று முன்பே நான் சொல்லியிருந்தேன்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி (2940) தமிழ்ச் செய்யுளைப் பாருங்கள்.”நாடாத மலர் நாடிநாள்தோறும் நாராயணன் – தன்வாடாத மலர் – அடிக்கீழ்வைக்கவே வகுக்கின்று…வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ?…ஊடாது பனி வாடாய்…! உரைத்து ஈராய் எனது உடலே…”
அதாவது… இறைவனிடம் தனது எண்ணத்தை தெரிவிக்கும்படி… நாரைகள், அன்னங்கள், குயில்கள், மகன்றில்கள் (மரங்கொத்தி இனத்தைச் சேர்ந்த வளைந்த மூக்குடைய கடற்கரை பறவை), சிறிய குருகுகள் (கொக்குகள்), வரி வண்டுகள், இளங்கிளிகள், நாகணவாய் பறவைகள் ஆகியவற்றிடம் தூது செல்ல கேட்டுக் கொண்டே வரும் ஆழ்வார்…அடுத்து தூதாய் அனுப்ப பனிக்காற்றை தேர்ந்தெடுக்கிறார். வாடைக்காற்று வீசும் வேளையில்… அவ்வாடையிடம் வேண்டுகோள் வைக்கிறார்.
அதாவது பாட்டு தான் ஆழ்வாருடையது. பறவைகளையும், வண்டுகளையும், பனிக்காற்றையும் இங்கு தூதாக அனுப்புவது தலைமகள்.
அதாவது இறைவனைப் பிரிந்த தலைமகள். “வாடைக்காற்றே… வாடைக் காற்றே… இங்கே வா. என் பெருமானிடம் எனக்காக நீ போய் அவனிடம் ஒன்று சொல்வாயாக. இப்படி என்னைப் பிரிந்து அவனும், அவனைப் பிரிந்து நானும் இருப்பது நல்வினையாகாது என்று சொல்லு…உலகில் இத்தனை உயிர்களை, ஜீவன்களை, மனிதர்களை அவன்தான் படைத்தான்.
உலகில் உள்ள பல்வேறு வகை பூக்களை பறித்து நாள்தோறும் நாராயணனின் வாடாத பூமலர் திருவடிகளில் மெல்ல மெல்ல இட்டு வழிபடுவதற்காகவே அத்தனை பேரையும் படைத்தான். நான் மட்டும் அப்படி செய்யமுடியாத வகையில் பிரிவது என்ன நியாயம்?… அவனிடம் போய் நீ சொல்லு. என்னை ஏற்கவில்லையாயின்… நீ மறுபடி வந்து என் சதைகளை பிய்த்தெறி எலும்புகளை உடை… என் உடலை அறுத்தெறிந்துவிடு பனிக்காற்றே” எவ்வளவு அழகான இலக்கியம் பாருங்கள். தலைமகள் பனிக்காற்றிடம் சொல்வதாக ஆழ்வார் அருளுகிறார்.
அந்த பனிக்காற்று இன்றும் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் மூலம் நமக்கு அந்த காற்று என்ன சொல்கிறது?…
“பூக்களை பறித்து தினமும் பூ+செய் பூசை செய்வது தான் தமிழர் பண்பாடு ”என்று.
இந்தப்பண்பாட்டில்தான் குறுக்கே வந்தார்கள் பிராமணர்கள். “முதலில் நீ பூ போட்டுக் கொண்டே இரு… நான் வேதம் சொல்கிறேன்….’ என்று வெளியே நின்றார்கள்.
காரணம்… நீ பகவான் பக்கத்தில் நின்று எதாவது சொன்னால் அவன் மேல் எச்சில் தெறிக்கும். அதனால் நீ பூ போட்டபடியே இரு. நான் சத்தம் போட்டபடியே இருக்கிறேன் ”
இதற்கு பெயர் அத்யயன பட்டர். கொஞ்சநாள் ஆனது. அத்யயன பட்டரே உள்ளே வந்து விட்டார். உள்ளே என்றால்?… கர்ப்ப கிரகத்துக்குள். இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வெளி வேலைகளைப் பார்.அடுத்து… ஆகமக்காரர்களின் ஆதிக்கம்.
அவர்கள் முழு முதல் சமஸ்கிருதக்காரர்கள் ஆனதால். தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள். தமிழ் பூக்களை தூவி சமஸ்கிருத அர்ச்சனை நடத்தினார்கள்.
இப்படி “சமஸ்கிருத சர்க்கார்’ நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான்… நமது தமிழ் பக்தி இலக்கியத்தை முன்னிறுத்துவதற்காக … ஆங்காங்கே ஆழ்வார்கள் தோன்றினார்கள்.
5-ம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலங்களில்…இவர்கள் தங்களது மிகச்சிறந்த பக்தி மற்றும் தமிழ்ப்பாசம், தமிழறிவு காரணமாக நாராயணனை போற்றி அதேசமயம் வேதக் கருத்துக்களையும், வடமொழி கதைகளையும் உள் வாங்கி தமிழிலேயே பாடல்களை இயற்ற ஆரம்பித்தனர். இந்த 12 அழ்வார்கள் தங்களது பாடல்களை குறிப்பிட்ட கோயில்களில் குடி கொண்டுள்ள பெருமாள் மீது சாற்றிப் பாட… அந்த திருத்தலங்கள் தமிழ் பாடப் பெற்றதால் புனிதமாயின. அதாவது திவ்ய தேசமாயின. அப்படியிருந்தும் — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ( தொடரும் )
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.