இந்து மதம் எங்கே போகிறது? – பகுதி 66 -67

ஏன்சாமி! வீட்லபேசற தமிழ்லயே பகவான்ட்டயும் பேசுங்களேன் 

“ஏங்காணும்… இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி? எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே…” என குரல் கொடுத்தனர்.

“ஏன் சாமி… வீட்ல பேசும்போது உங்க மனைவிகிட்ட மகள்கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல… பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்…”

அவனை வழிபடும் முறைகள் பலவிதம் என்றாலும் எல்லாம் சரியே…. அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது…”


பகுதி – 66

வேதம் அறியாதவர்கள் மற்ற மதத்தை துவேஷிப்பார்கள் என்பதை பாவ மன்னிப்பு மந்த்ரங்கள்மூலம் பார்த்தோம். இதை நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது தமிழ் பேப்பர்களையும், இங்கிலீஷ் பேப்பர்களையும் உற்றுப் பார்த்தேன். பெரிய பெரிய எழுத்துகளில் ஒரு செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் பண்ணியிருந்தார்கள்.

அது என்னவென்றால், சிறீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாவத்தைப் போக்க ராமேஸ்வரத்துக்குப் போய் வந்தார் என்று ஒரு செய்தியைப் படித்தேன்.

ஒன்று பாவ மன்னிப்பையே துவேஷித்த ஸ்வாமிகள் இன்று தனக்காகவே பாவ நிவர்த்தி செய்யப் போகிறார் என்றால் அதை என்னவென்று சொல்வது.

இன்னொன்று… இந்த நேரத்தில் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ப்ரம்மசூத்திரக்காரர் படைத்த ப்ரம்ம சூத்திரத்தில் முக்கியமான வரி வருகிறது.

“பஹிஸ்து உபயதாபி ஸ்பிரு தேஹே ஆசாரஸ…”
என்று போகும் இந்த சூத்திரம் சொல்வது என்ன?

ரிஷிகள், சந்நியாசிகள், யதிகள், ஞானிகள் பாவம் பண்ணினால் அவர்களுக்கு அந்தப் பாவத்திலிருந்து விமோசனம் கிடையாது. ப்ராயசித்தம் கிடையாது. அவர்கள் செய்த பாவம் பாவம்தான். அது தீராது, போகாது என்கிறார் ப்ரம்ம சூத்ரக்காரர்.

மூத்தோர் சொல் அமிர்தங்கள் இப்படியிருக்க பாவ மன்னிப்பை அடிப்படையாக வைத்து மற்ற மதங்களை தூஷிப்பது வேதத்துக்கே அடுக்கவில்லை அதர்வண வேதம் சொல்கிறது பாருங்கள்:
“சமேத விஷ்வா வசஸா
பதிந்திவிபு யயேஹ
விபுஹீ யயேஹ
விபுஹீ அதிதிஹி தனனாம்
சபூர்யஹா நூதனம் ஆளவாசதீ
திம்வர்த்தனிஹி அனுவாவ்ருத்தே
ஏகையித் பூரி…”

மக்களே ஒன்று கூடுங்கள். கடவுள் ஒருவன்தான். அவனை யார் கூப்பிடுகிறார்களோ… அவர்களின் வீட்டுக்கு போவான். அவன் பழைமைக்கும், பழைமையானவன். புதுமைக்கும் புதுமையானவன். கடவுள் ஒருவன் என்றாலும், அவனை வழிபடும் வழிகள் லோகத்தில் பல்வேறு பட்டதாக இருக்கின்றன.

அவனை வழிபடும் முறைகள் பலவிதம் என்றாலும் எல்லாம் சரியே…. அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது…”

இது அதர்வண வேதம் சொல்லும் அறிவுரை.
இந்த வேத மந்த்ரம் அறியாதவர்கள்தான் அல்லது அறிந்தும் அறியாததுபோல இருப்பவர்கள்தான் பிற மதங்களை தூஷிப்பார்கள். பாவத்தை சம்பாதிப்பார்கள்.

பாவம் பற்றி விஸ்தாரமாகவே பார்த்தாயிற்று. அடுத்து உங்களுக்கு ஒரு சம்பவத்தை சொல்கிறேன். அதிலிருந்து நாம் அடுத்துப் பார்க்கப் போகும் தலைப்பு என்னவென்று உங்களுக்கும் புரிந்துவிடும்.

சுமார் 30 – 40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்துக்கு பக்கத்திலேயே உள்ள நாச்சியார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திடீரென இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. அந்தக் காலத்தில் கோயில்களில் முழுக்க முழுக்க சமஸ்கிருத மந்த்ரங்களே அனுஷ்டானத்தில் இருந்து வந்ததால்… தமிழும் ஒலிக்க வேண்டும். வழிபாடுகள் தமிழிலும் நடைபெறவேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

அப்போது அறநிலையத்துறை ஆணையராக கே.எஸ். நரசிம்மன் இருந்தார் என்று ஞாபகம் (தொண்ணூறை கடந்துவிட்ட போதிலும் வேதத்தில் உள்ளவற்றையே ஞாபகப்படுத்தி விட முடிகிறது. ஆனால், மிகச் சமீபத்தில் நடந்தது சட்டென ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது).

முக்கியமான அதிகாரிகள் நாச்சியார் கோயிலில் கூடியிருந்தனர்.கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலிலிருந்து சிறீ ராமதேசிகாச்சார் ஸ்வாமிகளும் மற்ற அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் அடியேனும் அமர்ந்திருந்தேன். துணை ஆணையர்தான் கூட்டம் கூட்டப்பட்ட காரணத்தை விளக்கினார்.

“தமிழ்லயும் அர்ச்சனை பண்ணணும்னு முடிவெடுத்திருக்கோம். அதனால தமிழ்ல எப்படி எப்படி அர்ச்சனைகள் செய்யலாம்னு எழுதிக் கொடுங்கோ” என கேட்கிறார்.

இதைக் கேட்ட உடனேயே… அர்ச்சகர்கள் தரப்பில்…
“ஏங்காணும்… இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி? எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே…” என குரல் கொடுத்தனர்.

அப்போது அதிகாரிகளில் ஒருத்தர்…
“ஏன் சாமி… வீட்ல பேசும்போது உங்க மனைவிகிட்ட மகள்கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல… பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்…”என்று இடைச்செருகல் செய்தார்.

துணை ஆணையர் என்னிடம் கேட்டார். அப்போது நானும் தமிழ் அர்ச்சனைகளை ஆதரித்து… ஒரு பேப்பரை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன்.அவர்கள் படித்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.


நாச்சியார்கோவிலில் நடந்து கொண்டிருக்கும் மீட்டிங்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லையா?பகுதி – 67

சம்பவத்தைச் சொல்கிறேன். நீங்கள் அடுத்து பார்க்கப்போகும் `சப்ஜெட்டை முடிவு செய்துகொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தேன்.ஆம்… நாம் பார்க்கப்போவது வழிபாட்டில் தமிழ் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறது என்பதைத்தான்.

மறுபடியும், நாச்சியார் கோயில் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம் வாருங்கள். துணை ஆணையர் `நாங்கள் கோயில்களில் தமிழில் அர்ச்சனை பண்ணுவதென்று முடிவெடுத்துள்ளோம். அதனால் நீங்கள் இனிமேல் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என கூற…எப்படி? எப்படி? தமிழில் அர்ச்சனை செய்வது எப்படி? என மொழிப் போர் நடத்த ஆரம்பித்தார்கள் சில பட்டாச்சார்யார்கள்.

ஆனால், அதிகாரிகளோ… ஏன்? தமிழில் அர்ச்சனை நடத்த முடியாதா? தமிழில் அர்ச்சனையை இதுவரை யாரும் எழுதவில்லையா? அப்படியானால் நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். இதை நாங்கள் கூட்டம் கூட்டும் முன்பே சொல்லியிருந்தோமே… எழுதி வந்துள்ளீர்களா என கேட்டனர்.

சில பட்டாச்சார்யார்கள் தாங்கள் எழுதி வந்ததை எடுத்துக் கொடுத்தனர். தமிழில் அர்ச்சனை செய்வது நடைமுறை சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தும் வகையில் அவர்கள் எழுதி வைத்திருந்ததை கொடுத்தனர். இது அதிகாரிகளுக்கு திருப்தியை தரவில்லை.

நானும் அந்த மீட்டிங்கில் இருந்தேன் அல்லவா, என்னிடம் தமிழ் அர்ச்சனை கேட்டார்கள். நானும் எழுதி வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்தேன். என்னவென்றால்…

உயர்வு அற உயர் நலம் உடையவன் போற்றி…
மயர்வு அற மதிநலம் அருளினன் போற்றி…
அயர்வு அற அமரர்கள் அதிபதி போற்றி…

இப்படியாக செந்தமிழில் நாராயணனை போற்றும் நாமங்கள் 108 எழுதிக் கொடுத்தேன். இது நானாக யோசித்து எழுதவில்லை. தமிழ் அர்ச்சனை என்றதுமே என் நினைவுக்கு வந்தவர்கள் ஆழ்வார்கள்.

நான் எழுதிக் கொடுத்தது நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழியில் தொடங்கி சில பாசுரங்களை `சஹஸ்ரநாமம் பாணியில் எடுத்துக் கொடுத்ததுதான்.

சஹஸ்ரநாமம் என்றால்…?

இன்னும் பல பிராமணர்களின் வீடுகளிலும் விஷ்ணு பக்தர்களின் வீடுகளிலும் டேப் ரெக்காடர்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது சஹஸ்ரநாமம். பல பிராமணர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சஹஸ்ரநாமம் சொன்னால் புண்ணியம் என்ற கொள்கை முடிவில் இருக்கிறார்கள்.

அதாவது பகவானின் ஆயிரம் பெயர்களைக் கூறி அவனைப் போற்றிச் சொல்வதுதான் சஹஸ்ரநாமம். ஆயிரம் நாமங்கள். அதாவது சமஸ்கிருத நாமங்கள். அதுதான் சஹஸ்ரநாமம்.

“சுக்லாம் ப்ரதரம் விஷ்ணும்” என்ற தனியனோடு ஆரம்பமாகி…
“விஸ்வம் விஷ்ணும் வஷட்காரோ பூத பவ்ய பவத் பிரபுஹு…”
என ஆரம்பிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் `பல ஸ்ருதி’ என்ற சஹஸ்ரநாமத்தைப்பற்றி மற்ற க்ரந்தங்கள் சொல்லியுள்ள புகழுரையோடு முடிகிறது. இதைத்தான் பெருமாள் கோயில்களில் அர்ச்சனைக்காக பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு… தமிழ் அர்ச்சனை, தமிழ் பூஜை செய்யவேண்டும் என்றுதான் நான் ஆழ்வார்களில் தலைமையும் பெருமையும் உடையவரான காரிமாறன் என இலக்கிய பக்தர்களால் அழைக்கப்படும் நம்மாழ்வாரின் பாசுரங்களை தமிழில் நாம அர்ச்சனைக்கு எழுதிக் கொடுத்தேன்.

இதைப் படித்துப் பார்த்த அதிகாரிகளுக்கு பரம இன்பம். தமிழில் இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் இருக்கும்போது ஏன் சமஸ்கிருத பாஷையை கட்டிக்கொண்டு நாம் அழவேண்டும்?

இதுபோல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தரும் நல்ல தமிழ் சொற்கோவைகளுடன் தமிழிலேயே இறை பூஜைகள் செய்யலாமே என்றனர். அப்படியே ஆகட்டும் என பணித்தனர்.

அதன்படி ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் அடிப்படையில் நான் எழுதிக் கொடுத்த 108 தமிழ் நாம வழிபாட்டு மொழிகள்… அப்போதே அர்ச்சகர்களின் எதிர்ப்போடு… 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் அரங்கேற்றப்பட்டது.

சமஸ்கிருத சஹஸ்ரநாமம் கேட்டே பழக்கப்பட்டுப்போன சாரங்கபாணி பெருமாள்… அன்றுதான் தன் இனிய தமிழ் நாமங்களை – அர்ச்சனை போற்றி பாணியில் கேட்டு மகிழ்ந்தார்.

தாத்தாச்சாரியாரே… இப்ப திருப்தியா? என கேட்டார் என்னிடம் ஒரு அதிகாரி. நான் சொன்னேன், “பெருமாளைக் கேட்டுப் பாருங்கோ, டபுள் திருப்தினு சொல்வார்” என்று. அவர் மகிழ்ந்து சிரித்தார். இது ஒன்றும் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. மொழி விளையாட்டைப் பற்றித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்று சாரங்கபாணி கோயிலில் அரங்கேறிய தமிழ் அப்போதே பல கோயில்களிலும் அரங்கேறியதா? இன்னும் பல கோயில்களில் தமிழில் அர்ச்சனை பண்ணுங்கோ என்றால் நம்மை ஏற இறங்க பார்க்கிறார்களே. இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் தமிழில் இருந்தும்… “தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்” என்று கோயில்களில் போர்டு வைத்திருக்கிறார்களே…. இந்த `உம்’ ஏன் வந்தது? உம்…?– அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 65. என் ஆண் உறுப்பு, கை, கால், வாய், மனசு வரை ராத்திரி செய்த பாவங்களை யெல்லாம் பனித்துளியை எப்படி போக்குவாயோ அதேபோல போக்கிவிடு.பிராம‌ணர்களின் பாவமன்னிப்பு வேண்டுதல்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply