என்றுமுள்ள செந்தமிழ் (91-100)

என்றுமுள்ள செந்தமிழ்

திருவாய்மொழி மட்டும் திராவிட வேதம் எனப்பட்டது!

நக்கீரன்

(91)

சங்க காலத்துக்குப் பிந்திய காலத்தில் தமிழ்மொழியின்  சீருக்கும் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் தமிழகம் புகுந்த  சமணம், பவுத்தம், சைவம், வைணவம் போன்ற சமயங்கள் பங்ளிப்புச் செய்து வந்துள்ளன. இதனால் தமிழ்மொழி வாழும் மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் இன்றும்  இருந்து வருகிறது.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு சைவ சமயத்தின் பங்குபற்றி நாம் அறிந்திருப்பது போல, இந்து மதத்தின் (சனாதன தர்மம்) இன்னொரு கூறான வைணவம், சமணம், பவுத்தம் ஆகிய  சமயங்களின் பங்களிப்புப் பற்றி நாம் பெரிதும் அறிந்திருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, இலக்கியம் போன்ற அனைத்தும் மொழியைச் சார்ந்தே அமைகிறது. மொழியின்றேல் சமயம் இல்லை.

சைவம் வேறு தமிழ்மொழி வேறு அல்ல,  சைவம் இன்றேல் தமிழில்லை, தமிழ் இன்றேல் சைவம் இல்லை என்ற சொற்றொடர்கள் இன்றும் வழக்கில் உள்ளன.  சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று முருகப்பெருமானும் தமிழும் வேறில்லை. முருகனே தமிழ்; தமிழே முருகன் எனப் போற்றி பாடுவர். தமிழ் இலக்கணத்தை சிவனே அகத்தியருக்கு சொல்லிக் கொடுத்தார் என்ற ஐதீகமும் வேரூன்றி உள்ளது.

‘மன்னுமா மலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்று வித்தருளியும்’

எனும் திருவாசக வரிகள்  தமிழ்மொழியின் இலக்கணத்தைச் சிவபெருமான் முதன்முதலில் அகத்திய மாமுனிக்கு உபதேசித்தார் என்பதை அறியலாம்.

மேலைநாட்டு மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீன மொழிகளுக்கு நிகரான பழமையும், சிறப்பும் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. மிகு சைவம் தழைத்தோங்க அரும்பாடுபட்ட சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர் மற்றும் அருளாளர்களான  சேக்கிழார், அருணகிரிநாதர், குமரகுருபரர், இராமலிங்க அடிகளார்  போன்றோர்  தோன்றி  இறைவன் மீது  செந்தமிழில் பாடியருளினார்கள். இதனால் தமிழுக்கு தெய்வத்தமிழ் என்ற அடைமொழியும் உண்டு.

சுந்தரர், “இறைவன் தமிழை ஒத்தவன்’ என்றும் நாவுக்கரசர், “பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்’ என்றும் “தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்றும், சேக்கிழார் “ஞாலமளந்த மேன்மைத் தெய்வத்தமிழ்’ என்றும் இறைவனைத் தமிழாகவே போற்றியுள்ளார்கள்.

சம்பந்தர் முதலாம் திருமுறை (1469 பாடல்கள்), இரண்டாம் திருமுறை (1331 பாடல்கள்), மூன்றாம் திருமுறை (1358 பாடல்கள்), யாவும் திருஞான சம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்கள் ஆகும். நான்காம் திருமுறை (1070 பாடல்கள்), ஐந்தாம் திருமுறை (1015 பாடல்கள்) மற்றும் ஆறாம் திருமுறை (981 பாடல்கள்) அனைத்தும் திருநாவுக்கரசர் அருளிய தேவார பாடல்கள் ஆகும்.

சுந்தரர் பாடிய ஏழாம் திருமுறை (1025 பாடல்கள்)  மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருகோவையார்  எட்டாம் திருமுறை ஆகும். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை; பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரம்; பதினோராந் திருமுறை திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார் போன்றோர் முதல் நம்பியாண்டார் நம்பி வரை பன்னிருவர் பாடிய பாடல்கள்.  பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் அருளிய  பெரிய  புராணம்.  பன்னிரண்டு  திருமுறைகளிலும்  ஏறத்தாழ  18 ஆயிரம் பாடல்கள் உள்ளன.

சைவத்துக்கு பன்னிரு திருமுறைகள் போல வைணவத்துக்கு பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். வேதங்களை தமிழில் செய்தவர்கள் ஆழ்வார்கள்   எனக் கூறப்படுகிறது.

வைணவத்தில் “திராவிட வேதம்” என்று சொல்லாட்சி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே வந்து விட்டது.  அதாவது கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் அது வழக்கில் வந்து விட்டது.

“வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்” என்ற கருத்தாட்சியும் சொல்லாட்சியும் வைணவ திருக்கோயில்களில்  திருமால் வீதிவலம் வரும்போது  தமிழ் வேதத்தையே இறைவனுக்கு முன்னால் ஓதிச் செல்கிறார்கள்! தமிழ் வேதங்களுக்குப் பின்னால் தான், இறைவனின் பின்புறமாக, வடமொழி வேதங்கள் சொல்லப்பட்டு வருகின்றன!

இந்தக் காட்சியை சைவக் கோயில்களில் காண முடியாது. சைவக் கோயில்களில் தேவார, திருவாசகங்கள் கருவறைக்கு வெளியே சமற்கிருதத்தில் பூசைகள் செய்து முடிந்த பின்னர் வெளிவீதியில் நின்று பாடப்பெறுகின்றன.

வேதம் தமிழ் செய்தது என்றால், வேதத்தின் நேரடி  மொழி பெயர்ப்பு என்ற பொருளில்லை! வேதக் கருத்துக்களின் தொகுப்பைத் தமிழிலே செய்து வைக்கப்பட்டது என்பதே பொருள்!
திருவாய்மொழியின் துவக்கப் பகுதிகள் “பொது மறையாகவே” இருக்கும்! “நாரணன்” என்ற பெயரெல்லாம் தேடினாலும் கிடைக்காது! தத்துவம் எல்லாம் சொல்லி முடித்து, சங்கத் தமிழ் அகப்பாடல்களாக வரும் போது தான், அது வைணவ நூல் என்பது  தெரிய வரும்!

மேலும், வடமொழி வேதங்களை  முதல் மூன்று வருணத்தார் மட்டுமே ஓதலாம், பெண்கள் ஓதக் கூடாது என்றெல்லாம்  கட்டுப்பாடுகள் உண்டு! அதை மீறி, அனைவருக்கும் வேத/உபநிடதக் கருத்துக்கள், தமிழில் கிட்டும் வண்ணம் ஆக்கிய  காரணத்தால்தான்  “திராவிட வேதம்” என்று பெயரே தவிர, அது ஒரு சிறப்புப் பெயரோ அல்லது  சமயத்தின் உயர்வு – தாழ்வு காட்டும் சொல்லாட்சி அல்ல என்று உணர்தல் வேண்டும்.

திராவிட வேதம்/ தமிழ் வேதம் என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழியை மட்டும் ஏன் சிறப்பித்துச் சொல்ல வேண்டும்? இவ்வாறு சொன்னது வைணவர்கள் மட்டுமல்ல! பதிணெண் சித்தர்களில் ஒருவரான  இடைக்காட்டுச் சித்தரும் கூட!

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்து அமைந்த
செம்பொருளை, எம் மறைக்கும் சேண் பொருளை – தண் குருகூர்
சேய்மொழி அது என்பர் சிலர், யான் இவ்வுலகில்
தாய்மொழி அது என்பேன் தகைந்து.                        (இடைக்காடர்)

பரம்பொருளின் பரம், வியூகம் முதலான ஐந்து நிலைகளும்
வேதத்தின் நான்கு நிலைகளும்
தத்துவத்தின் சித், அசித், ஈஸ்வரன் (பசு,பதி,பாசம்) என்னும் மூன்று நிலைகளும்
ஒருங்கே பொழிந்த நூல் இந்தத் திருவாய்மொழி! எம்மறைக்கும் அது செம்மறை!
அது குருகூர் சடகோபனின் (நம்மாழ்வார்) தமிழ் மறை!
அது ஒரு குழந்தை பாடிய மொழி என்பார்கள் சிலர்!
ஆனால் இடைக்காடர் நான் சொல்கிறேன்.
அது சேய் மொழி அல்ல! எல்லாத் தத்துவங்களுக்கும் தாய் மொழி!

பிற்பாடு பல சமய நூல்கள் எழுந்தாலும் வைணவ நூல்களே எழுந்தாலும் கூட, அவற்றைத் “திராவிட வேதம்” என்று அடைமொழியால் சுட்டவில்லை! அனைவருக்கும் கிட்டும் வண்ணம் முதலில், வேதம் தமிழ் செய்த நோக்கத்தால் மட்டுமே, திருவாய்மொழி மட்டும் திராவிட வேதம் எனப்பட்டது! (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

நாரயணா என்னா நாவென்ன நாவே!

(92)

குடிமக்கள் காப்பியமாக இன்றளவும் கோலோச்சும் சிலப்பதிகாரத்தில்  இளங்கோ அடிகள் பேசாத பொருளில்லை, பாடாத தெய்வமில்லை எனுமளவிற்குப் பல்வேறு துறைகளையும் தொட்டுக்காட்டி  நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார். சிலப்பதிகாரம் போன்ற காப்பியம் வேறொரு மொழியில் இல்லை என அறிஞர்கள் சொல்கிறார்கள்.

சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், சமணம் என்ற பல்வேறு மதங்களின் வழிபடு தெய்வங்களையும் எவ்விதப் பேதமுமின்றிப் போற்றிப் பாடியுள்ளார். பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவனையும், நீலமேனி நெடியோனாகிய திருமாலையும் அறுமுகச் செவ்வேளையும் மாலை வெண்குடை மன்னவனாகிய இந்திரனையும் பாடியுள்ளார்.

காலத்தால் மிக மூத்த இளங்கோ அடிகள் (கிபி இரண்டாம் நூற்றாண்டு) இயற்றிய ’ஆய்ச்சியர் குரவை’யே பின்னாளில் இயற்றப்பட்ட வைணவ பக்திப் பனுவல்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் தோற்றுவாயாகவும் விளங்கின்றது என்பது புலனாகும்.  திருமாலைப் போற்றிப் பாடிய பன்னிரு ஆழ்வார்களில் முதலாமவராகக் கருதப்படும் பொய்கையாழ்வாரின் காலம் கிபி ஏழாம் நூற்றாண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆழ்வார்களினும் விஞ்சிய  திருமால் பக்தியை, இறைக் காதலை இப்பாடல்களில் சிலப்பதிகார ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறினால் அஃது சற்றும் மிகையில்லை.  திருமாலின் புகழை மிகச்சிறப்பாய் முதலில் எடுத்தோதிய இளங்கோவடிகள்  மூத்த ஆழ்வாராக, முதல் ஆழ்வாராகக் கருதிப் போற்றப்படுகிறார்.  தெய்வீக அருள் இல்லாது இத்தகைய அற்புதப் பாடல்களை, அருட்பாக்களை, தேனினும் இனிய பாடல்களை  ஒரு கவிஞன்  படைத்திருக்க முடியாது. பாரதியாரின் பாடல்களை படிப்பவர்களுக்கும்  அவரிடம் இந்த  தெய்வீக அருள்  இருப்பதைக்  காண்பார்கள்.

இராமகாதை படைத்த கம்பரை நாம் கம்பநாட்டாழ்வார் என்று பெருமைப்படுத்தியது போல. கண்ணன் பாட்டுப் பாடிய மகாகவி பாரதியையும் ஆழ்வார்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டாட வேண்டும்.

ஆய்ச்சியர் குரவையில் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட இளங்கோ அடிகள் அருளிய அற்புதப் பாடல்களை தொடர்ந்து பார்ப்போம்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஓர் சிறிய பகுதியாகிய ’ஆய்ச்சியர் குரவை’யின் மூலம், கண்ணனின் குழந்தைப் பருவ மாயச் செயல்கள் தொடங்கி, அவன் வளர்ந்த பிறகு பாண்டவர்க்காகத் தூது சென்றது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும், திருமால் தன் மற்றைய அவதாரங்களில் நிகழ்த்திய அற்புதங்களையும் சாதாரண மக்கள் ஆடுகின்ற எளிய கூத்தின் வாயிலாக, அழகிய இசைப்பாடல் வடிவிலே வடித்துள்ளார்.

வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி
கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே!                            (சிலப்பு – முன்னிலைப் பரவல்)

வட பகுதியில் உள்ள மேருமலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்ற பாம்பினை கயிறாகக் கொண்டு, கடல் போன்ற நீலநிறம் கொண்ட(வனே) பண்டைக் காலத்தில் ஒரு நாள் ஆழ்கடல் நடு (உட்)பகுதியினை கலக்கினாயே! அப்படி கலக்கிய கைகள் யசோதை தாயார் மோர் கடைகின்ற கயிற்றால் கட்டுண்ட கைகளாம்! தாமரை மலர் தனை தொப்புளில் கொண்டவனே!  இதென்ன மாயம் தானா? வியக்க வைக்கிறதே!

நம்மில் பலரும் “வடவரையை மத்தாக்கி..” எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை இசையரசி  எம் எஸ் சுப்புலட்சுமி பாடிக் கேட்டு அகம் மகிழ்ந்திருப்பார்கள்.

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே?
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே?

மூன்று உலகும் இரண்டு அடிகளால் முறையாய் நிரம்பாததை முடிக்கும் வண்ணம் தாவி (மகாபலியின் தலையின் மேல் வைத்த) அந்தச் சிவந்த திருவடி, சிவக்கும் வண்ணம் தம்பியோடு கானகம் புகுந்து சோ என்ற அரணும், அதில் வாழும் மக்களும்,போரில் இறக்கும் படி செய்து, தொன்மையான இலங்கையின் கட்டுக்காவலையும் அழித்த வீரனின் புகழ் கேளாத காதுகள் என்ன காதுகள்? அந்தத் திருமாலின் புகழினைக் கேளாத காது என்ன காதுகள்?

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

அனைவரைக் காட்டிலும் பெரியவனை, மாயங்கள் செய்பவனை, பெரிய உலகங்களெல்லாம் உருவாக்கும் தாமரை மலர் மேலுள்ள பிரம்மாவினை வயிற்றினில் கொண்டவனை,  வானவனை,  கண்களும், திருவடிகளும், கைகளும், திருவாயும் சிவக்க, கரிய நிறத்தவனைக் காணாமல் இருக்கும் கண்களுமென்ன கண்களா? கண் கொட்டாமல் காணவேண்டிய அழகினை,  கண்களினை இமைத்து காண்பவர்களின் கண்களென்ன கண்களா?

ஆய்ச்சியர் குரவையின் இறுதிப்பகுதியாகிய படர்க்கைப் பரவலில் அதாவது சேய்மை நிலையில் வைத்துப் போற்றும் பாடலின் இறுதிப்பாடலில்  திருமாலின் கிருஷ்ண அவதாரத்தை இளங்கோவடிகள் மிக உயர்ந்த நிலையில் போற்றுகின்றார். அப்பாடல் வருமாறு:

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாரயணா என்னா நாவென்ன நாவே

“அறியாமை மிக்க உள்ளம் கொண்ட கம்சனின் வஞ்சகச் செயல்களை வென்றவன் கண்ணன்; நான்கு திசைகளும் போற்றவும் வேதங்கள் முழங்கி வழிபடவும் பாண்டவர்களுக்காகத் துரியோதனன் முதலிய நூறு பேரிடம் தூது சென்றவன் கண்ணன்; இவனைப் போற்றிப் பாடாத நாக்கு பயனற்ற நாக்காகும். நாராயணா என்று கூறாத நாக்கு என்ன நாக்கு?” என்று இப்பாடல் கேட்கிறது. இங்கே கண்ணனின் மறச்செயல் கம்சனை வென்றது. அறச்செயல் பாரதத்தில் தூது சென்றது. இவ்விரண்டையும் போற்றிப் புகழும் வண்ணம் “நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?” என்று இளங்கோவடிகள் முடிக்கிறார்.

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்!
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!”

என்று  திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாடியிருப்பதை ஒப்பு நோக்கி மகிழலாம்.

(தொடரும்)


 உலக இலக்கிய வரலாற்றில் பெண்மைக்கு முதன்மை தந்த  காப்பியம்

நக்கீரன்

(93)

இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர்.

காப்பியம் என்பது தமிழ்ச் சொல்லா? வடசொல்லா?  காப்பியம் என்ற சொல், ‘காவ்யா’ என்ற வட சொல்லின் திரிபு என்பர். ‘காவியம்’ என்பதற்குக் கவியால் செய்யப்பட்டது என்று  ஒரு  விளக்கமும் தரப்படுகிறது.

காப்பியம்  என்றால் தமிழ் மொழியில் பாட்டு என்பது பொருள். சிலப்பதிகார  பதிகத்தில் இளங்கா அடிகளே,

அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினை சிலம்பு காரணமாக
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும்  யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்

என்கிறார்.

காப்பியக் கொள்கை பற்றிய விரிவான செய்தி பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இல்லை எனலாம். வடமொழி மரபை ஒட்டி எழுந்த தண்டியலங்காரமே முதல்முதலில் காப்பிய இலக்கணம் பற்றி விரிவாகப் பேசுகின்றது. தொடர்ந்து பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், மாறன் அலங்காரம் முதலான பாட்டியல் நூல்கள் இவ்விலக்கணம் பற்றிப் பேசுகின்றன.

தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியனார் காப்பியக் குடியைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறது.  வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள்  காணப்படுகின்றன. இவை காப்பு + இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன.

சிலப்பதிகாரம்  ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காப்பியங்களுக்கு நிகரானது. ஆங்கிலச் சொல்லான Epic என்பதும் ‘epo’ என்ற கிரேக்கச் சொல்லின் ஆக்கமாகக் கருதப்படுகிறது.  ‘epo’ என்றால் ‘to tell’ என்றும், ‘epos’ என்றால் ‘anything to tell’ என்றும் பொருள்படும். எனவே Epic என்பது மரபுவழியாகச் சொல்லப்பட்டு வருவது என்பது பொருளாகிறது.  சிலப்பதிகாரக் கதை மரபு வழியாக வந்த ஒரு கதையாகும்.

பொதினி என்று சங்க காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய வையாவி நாட்டை ஆண்ட சங்ககால அரசர்களுள் ஒருவன் ‘வையாவிக் கோப்பெரும் பேகன்’.  இவனது மனைவியின் பெயர் கண்ணகி. சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்து வந்தான்.

புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரை கூறித் திருத்தியிருக்கிறார்கள். அரிசில் கிழார்,  கபிலர்,  பரணர்,  பெருங்குன்றூர் கிழார்  ஆகிய புலவர்கள் கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனுக்கு பாடல்கள் மூலம் அறிவுரை கூறியுள்ளனர்.

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம். இது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்க் காப்பியம் ஆகும்.  மூவேந்தர்களையும் கதைத்தொடர்பால் ஒருங்கிணைக்கிறது.  சமண, பவுத்த, வைதீக சமயங்களைப் பத்தினி வழிபாட்டில் இணைத்துச் சமய ஒற்றுமை பேணுகிறது.  புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் எனச் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்களையே காண்டத் தலைப்பாகக் கொண்டு தமிழ்த் தேசியம் காண்கிறது.

இது மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொள்ளாது, வணிக மகளையும் கணிகை மகளையும் முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டது ஒரு புதுமையாகும்.

சிலப்பதிகாரம் மொழியாலும் பொருளாலும் இலக்கிய நயத்தாலும் இன்சுவையாலும் முதன்மை பெறும் காப்பியம் ஆகும்.  தமிழகத்தில் காணப்பட்ட பல்வேறு வகையான சிந்தனை மரபுகளையும், சமயங்களையும் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும்  பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது.  விரிந்த களப் பின்னணியும் காலப் பின்னணியும் கொண்டது. தமிழ்நாட்டில் வாழ்ந்த பல்வேறுபட்ட மக்கட் பிரிவினர், பழங்குடி மக்கள் பற்றி  சிலப்பதிகாரம்  பேசுகிறது. தமிழ் மக்களின் சமூக, சமய, அரசியல் சிந்தனைகளின்  பொற் களஞ்சியமாகத்  விளங்குகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, உலக இலக்கிய வரலாற்றில் பெண்மைக்கு முதன்மை தருகின்ற ஓர் உன்னதக் காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம் ஆகும்.

புறஞ்சேரியில் ஆய்ச்சியர்கள் சில தீய நிமித்தங்களைக் கண்டதால் வரும் துயர்கள் நீங்குவதற்காகக் கண்ணனைப் போற்றிக் குரவைக் கூத்தினை நிகழ்த்துகின்றனர். ஆய்ச்சியர் கண்ணனுடைய அவதாரச் சிறப்புக்களை எல்லாம் வியந்து போற்றிப் பாடி ஆடுகின்றனர்.

கூத்தின் முடிவில் கோவலன் கொலைப்பட்டான் என்ற செய்தி வருகிறது. அதனைக் கேட்ட கண்ணகி அழுது புலம்பி அரற்றுகிறாள். அவளது அவலம், பின்னர் பாண்டியன் மீது சினமாக மாறுகிறது. மன்னவன் தவற்றால், திருடன் என்று பழி சுமத்தப்பட்டு என் கணவன் கொலைப்பட்டான்,  அவனுக்கு ஏற்பட்ட பழியைத் துடைப்பேன் என்று வெகுண்டு எழுகிறாள். கதிரவனைப் பார்த்துக் கள்வனா என் கணவன்? என்று கேட்கிறாள். அப்போது கள்வன் அல்லன் என அசரீரி   சொல்கிறது.

தன் எஞ்சிய சிலம்பைக் கையில் ஏந்தியவளாய் மதுரை நகர்ப் பெண்களிடம் பலவாறு சூளுரைத்து நடக்கிறாள். காதற் கணவனைக் காண்பேன், அவன் வாயில் தீதுஅறு நல்லுரை கேட்பேன் என்கிறாள். மதுரை மக்கள் தென்னவன் கொற்றம் சிதைந்தது என்றும் செம்பொற் சிலம்பொன்று கையேந்தி வம்பப் பெருந்தெய்வம் வந்தது என்றும் அஞ்சிப் பதறுகின்றனர். கொலைப்பட்டுக் கிடக்கும் கோவலன் பாதம் பற்றி அழுகிறாள் கண்ணகி. அப்பொழுது அவன் உயிர்கொண்டு, நீ இங்கு இரு என்று சொல்லி, மறுபடி உடம்பைத் துறந்து வானுலகு செல்கிறான். பின் கண்ணகி தீ வேந்தனைக் கண்டு வழக்குரைப்பேன் என அரண்மனை செல்கிறாள்.

பாண்டிய மன்னனை விளித்து, ‘தேரா மன்னா! செப்புவது கேள்! என் கால் சிலம்பை விலைபேச முயன்று உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி நான். என் பெயர் கண்ணகி. எனது சிலம்பு நவமணிகளையுடைய பரல்களை உள்ளீடாகக் கொண்டது’ என வழக்குரைக்கிறாள். பாண்டியன்,  தன் தேவி சிலம்பு முத்துப் பரலை உடையது எனக் கூறிக் கோவலனிடமிருந்து திருட்டுச் சிலம்பெனக் கருதிக் கைப்பற்றப்பட்ட  சிலம்பை வரவழைத்து அதனைக் கண்ணகி முன் வைக்கிறான். கண்ணகி சிலம்பை உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்கப் பரல்கள் மன்னன்  முகத்தில்  தெறித்து  தரையில் வீழ்ந்தன.

    பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட
    யானோ அரசன்? யானே கள்வன் 
    மன்பதை காக்கும் தென்புலம் காவல்
   என்முதல் பிழைத்தது    கெடுக என் ஆயுள்        (சிலம்பு  20: 74-79)

எனக் கூறிப் பாண்டிய மன்னன்  மயங்கி  வீழ்ந்தனன்.   (தொடரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி சங்க கால  மரபில் வந்தவள்

நக்கீரன்

(94)

காப்பியம் என்ற இலக்கியம்  வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூக, சமய, அரசியல் வரலாற்றையோ அல்லது வரலாறாக நம்பப்படுவதையோ பாடுபொருளாகக் கொண்டுள்ளது. இவை வாய்மொழி மரபாகச் சொல்லப்பட்டு வந்த கதைகள் ஆகும்.

இவ்வாறு வரலாற்றுக்கு முந்தைய கால மனிதனின் வாழ்வியல் சிந்தனை மற்றும் சமய நம்பிக்கை பற்றிச் சொல்லப்பட்டு வந்த கதைகளே ஹோமர் போன்ற கவிஞர்களால் காப்பியமாகப் பாடப்பட்டன.

சிலப்பதிகாரம் தமிழின் முதற் காப்பியம் என்னும் பெருமை பெற்றது என்பது மட்டுமல்லாமல்  குடிமக்கள் வரலாற்றைப் பதிவு செய்த முதல் நூல் என்னும் பெருமையையும் ஒருங்கே பெற்ற நூல் ஆகும். அதிலும் ஒரு பெண்ணைக் காப்பியத் தலைவியாக்கிய பெருமையும் அதற்கு உள்ளது. தம்பி இளங்கோ அடிகளால் சொல்லோவியத்தாலும்  அண்ணன் செங்குட்டுவன்  கல்லோவியத்தாலும் பெருமை பெற்றவள் கண்ணகி. கால வெள்ளத்தில் கல்லோவியம் அழிந்து விட்டது. ஆயினும் கற்றோர் நினைவில் இன்றும் நின்று இனிமை தருகிறது சிலப்பதிகாரம் எனும் சொல்லோவியம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் தொடர் நிலைச் செய்யுளை முதன் முதலில் அமைத்த பெருமை, குடிமக்களை நாயகராகக் கொண்ட பெருமை  இளங்கோ அடிகளையே சாரும்.  பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிராத காலத்தில், பெண்ணுக்கு ஏற்றம் கொடுத்து அவளையே நாயகியாக்கி, பெண்ணால் இயலாதது ஏதுமில்லை என்று நிலைநாட்டியவர்.  உயர்ந்தோர் ஏத்தும் உரைசால் பத்தினியாகக் கண்ணகியை வடித்தார். அவளையே காவியத் தலைமைப் பாத்திரமாக, தன்னிகரில்லாத் தலைவியாக அமைத்துக் காவியம் அமைத்த புதுமையும் கவர்ச்சியானதே.

இன்று மேற்கு நாட்டினர், குறிப்பாக ஆங்கிலேயர் மத்தியில் ஆண் – பெண் சமத்துவம் பேரளவு ஒன்றாக உள்ளது. இருக்கின்ற சில வேறுபாடுகளும் சட்டத்தின் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் ஒத்த வேலைக்கு ஒத்த கூலி கொடுக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்  கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இடைக்கால இங்கிலாந்தில்  பெண்களுக்கு சமவுரிமை, சம வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. சமூகத்தில்  ஆண்களே மேலாதிக்கம் செலுத்தினர். ஒரு பெண்ணின் படிமம் (status) அவள் யாரை மணந்து கொள்கிறாளோ அவனைப்   பொறுத்தது. சட்டப்படி அரசிலும்  நிருவாகத்திலும் தள்ளிவைக்கப்பட்டாள். சட்டப்படியான உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தேவாலயங்களில் இருந்த பெண் துறவிகள் தேவாலய வழிபாட்டை நடத்த முடியவில்லை. கத்தோலிக்க மதத்தில் இந்தப் பாகுபாடு இன்றுவரை நீடிக்கிறது. கிறித்தவ சிந்தனையில் பெண்களின் தாழ்வு நிலை ஆதாம் – ஏவாள் காலத்தில் இருந்து  வருகிறது.

ஆதாம் மூலமாக, இயற்கையாகவே பாவம் செய்யவேண்டும் என்ற இயல்பு மானிட  குலத்திற்கு வந்தது, மற்றும் மனிதர்கள் இயற்கையாகவே பாவிகளானார்கள். ஆதாம் பாவம் செய்த பொழுது, அந்தப் பாவத்தினால் அவனது இயல்பு மாற்றப்பட்டது, அது அவனுக்கு ஆவிக்குரிய மரணத்தையும் துன்மார்க்கத்தையும் கொண்டு வந்தது. இவைகள் அவனுக்குப் பின்வந்த சந்ததிகள் மத்தியிலும் தொடர்ந்தது. நாம் பாவம் செய்கிறதினால் பாவிகள் அல்ல; மாறாக, நாம் பாவிகளானதினால் பாவம் செய்கிறோம். இப்படி நமக்கு அளிக்கப்பட்ட இந்தத் துன்மார்க்க  இயல்பைத்தான் மூல பாவம் (original sin) என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு மாறாக  தமிழர்களின் வரலாற்றில் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலத்தில் ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்று இருந்தனர். ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். முதற் சங்கத்தில் 549 புலவர்களும் இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும்   இருந்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர். இவர்கள் இயற்றிய  168  பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநல் ஆற்றுப்படை, நற்றிணை போன்ற நூல்களில்  இடம் பெற்றுள்ளன.

ஔவையார், வெள்ளி வீதியார், காக்கை பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், முடத்தாம கண்ணியார், குறமகள் இளவெயினி, பாரி மகளிர், ஆதி மந்தி போன்றோர்  பெண் புலவர்களில் சிலர்.

இதிலிருந்து சங்க காலப்  பெண்கள் கல்விச் சுதந்திரமும் படைப்புச் சுதந்திரமும் பெற்றிருந்தார்கள் என்பது தெரிய வருகிறது.

ஆண் படைப்பாளிகள் பெண்களுக்கு ஒழுக்கத்தையும், நன்னடத்தையையும் அறிவுறுத்தி இருந்ததை போலவே ஔவையார் ஆண்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பது பெண்மையின் இலக்கிய ஆளுமைக்கு சிறந்த சான்றாகும்.

“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே “
 என்கிறார்.

சங்க காலத்துப் பெண்கள் காதல் சுதந்திரமும் திருமண சுதந்திரமும் பெற்று இருந்தார்கள் என்பதற்கு களவு மனம், உடன் போக்குப் போன்ற பல சான்றுகள் உள்ளன. குறுந்தொகையில் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் இணைந்து களவு மணம் புரிந்திருக்கிறார்கள்.  செம்புலப் பெயல்நீரார் பாடிய பாடல் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே”  (குறுந்தொகை 40)

சங்க காலத்தில் விருந்தோம்பல் பெண்ணுக்குரிய தலையாய கடமையாகக் கருதப்பட்டது. பொழுது பாராமல் எல்லா நேரங்களிலும் பெண் விருந்தோம்பினாள் என்பதை “அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் ”   என்ற நற்றிணைப்  பாடல்  தெரிவிக்கிறது.

சங்க காலத்தில்  பெண்களே  திருமணத்தை நடத்தி வைத்தனர்.  தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும் கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!” என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது. அன்றிரவே மணப்பெண்ணை சாந்தி முகூர்த்தத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.  (அகநானூறு பாடல் 86)

சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி இந்தத் தமிழ் மரபில் வாழையடி வாழையாக வந்தவள்.  காவியத்தின் தொடக்க முதலே பேசப்படுவது கண்ணகியின் திறம்தான்.

“போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ” என்று கண்ணகி அறிமுகப்படுத்தப் படுகிறாள்.

கணிகையர் குலத்துதித்த மாதவியையும் கற்புக்கரசியாக்கித் துறவறத்தின் முடிமணியாகச் சிறக்க வைக்கும் சிறப்பையும் அவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாறு  மங்கையரின் மாட்சியைத் தெரிவிப்பதே சிலம்பின் உள்ளுறையாக அமைந்துள்ளது. பொதுவாக ஒரு நாடகக் காவியம் சிறப்பது அதன் கதாபாத்திரப் படைப்பின் திறத்தாலும் அவர்தம் பண்பு வளர்ச்சி தெளிவுறக் காட்டப் பெறுதலாலுமே அமையும். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்
நான் கனவில் கண்டேனடி என் தோழி!
நக்கீரன்

(95)

கம்பர் தாம் எழுதிய இராமாயண சரித்திரத்தில் கடவுள் வாழ்த்தை அடுத்து அவை அடக்கம் பாடுவார். கல்வியில் பெரிய கம்பன் பாடிய அவை அடக்கம் எம்மை மலைக்க வைக்கிறது. எவ்வளவு பெரிய கவிஞன் எவ்வளவு அடக்கத்தோடு அவை அடக்கம் பாடுகிறார்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ.
   (பாடல் 4: பாயிரம்: அவை அடக்கம் )

எப்போதம் இரைச்சலுடன் ஒலியை உடைய, உயர்ந்த பாற்கடலை அடைந்த ஒரு  பூனை, அதில் உள்ள பால் முழுவதையும் நக்கிக் குடித்துவிட முற்படுவதைப் போல ஆசை பற்றியதால் சொல்லத் தொடங்கினேன், குற்றம் இல்லாத வீரத்தை உடைய இராமப் பெருமானின் கதையை.

சக்கரவர்த்தி கம்பர் தன்னை எப்படி எல்லாம் தாழ்த்திவிட முடியுமோ அப்படித் தாழ்த்திவிட்டு  அவையோரை எப்படி எல்லாம் உயர்த்திப் பாட முடியுமோ அப்படிப் பாடிவிட்டு தனது இலக்கியப் படைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்கிறார்.  கம்பர் இடம் காணப்படும்  இந்தப் பணிவை மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம்  பத்து பதினைந்து   கவிதை இயற்றினால் போதும் உடனே தங்கள் பெயருக்கு முன்னால் கவிஞர் என்று போட்டுவிடுகிறார்கள்.

கம்ப இராமாயணம் வழி நூல். முதல் நூல் வால்மீகி இயற்றிய இராமாயணம். ஏழு காண்டங்களில் 24,000 ஸ்லோகங்களாக வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தை ஆறு காண்டங்களில் 10,500 பாடல்களாக இயற்றியுள்ளளான் கம்பன். சொற்சுவை, பொருட்சுவை, உவமை நயம், பாத்திரப் பண்பு, சந்த நயம், மொழிநடை என்ற எல்லா அழகும் நிரம்பியதாக இயற்றியுள்ளான் கம்பன். உலகப் புகழ் மிக்க தாந்தே, வெர்ஜில், மில்டன், ஷேக்ஸ்பியர், காளிதாசன் போன்ற புலவர்களுக்கும் மேம்பட்ட கவிஞன் கம்பன் என்று பன்மொழிப்புலவர்கள் பலரும் பாராட்டுகின்றனர். அதனாலேதான் வேறு எந்த தமிழ்ப்புலவர்க்கும் இல்லாத “கவிச் சக்கரவர்த்தி” என்ற பெயரும் பட்டமும் இவர் ஒருவருக்குமட்டுமே இன்றுவரை நின்று நிலைத்துள்ளது.

ஆரிய இராமனது கதையை தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்பச் சில இடங்களைக் கம்பன் மாற்றியுள்ளான். சீதையைக் கவர்ந்து சென்றபோது இராவணன் அவளது மேனியைத் தொட்டுத் தூக்கிச் சென்றதாக வால்மீகி பாட இது தமிழ்பண்பாட்டிற்கு ஒவ்வாது என உணர்ந்த கம்பன் அவளை அவளிருந்த தவச் சாலையோடும் தூக்கிச் சென்றதாகப் பாடிச் சீதையின் கற்புமேம்பாட்டையும் இராவணின் தோள் வலிமையையும் ஒருசேர உயர்த்திக் காட்டினார் கம்பர்.

வால்மீகியின் மூல நூலைக்கற்று அதில் மனம் தோய்ந்தததோடு அல்லாமல் தனக்கு முன்னே தமிழகத்தில் தோன்றி வைணவ பக்திபிரவாகத்தைப் பரப்பிய ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நன்கு கற்றவன் கம்பன். அதனலேதான் இராமனை மனிதருள் புனிதனாகமட்டுமே வால்மீகி காட்ட  கம்பர் மனித வடிவம் தாங்கிவந்த இறைவனாகக்  காட்டித் தனது நூலைப் பக்திப் பனுவலாக ஆக்கினான். இதனால் மூல நூலாகிய வால்மீகியிடமிருந்துகூடக் கம்பன் சில இடங்களில் வேறுபடுகிறான், புதியவற்றைப் படைத்துக்கொள்கிறான். இதற்கு அவனுக்கு ஆழ்வார்களின் பாசுரங்கள் துணைநின்றன.

என்றுமுள்ள செந்தமிழ் என்ற தலைப்பில் நான் எழுதிவருகிற  இந்தத் தொடர் பூனை பாற்கடலில் உள்ள   பால் முழுவதையும் நக்கிக் குடித்துவிட  ஆசைப்பட்ட கதை போன்றது. தமிழ்மொழிக்கு செம்மொழி தகைமை வாங்கித் தந்ததற்கு முக்கிய காரணம் தமிழில் காணப்படும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களும்  சங்க இலக்கியங்களும் ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும்  இராமாயணம் பெரிய புராணம் போன்ற சமய இலக்கியங்களுமே.

அழிந்தவை போக எஞ்சியவற்றை  ஊர் ஊராய் அலைந்து தேடிக் கண்டு பிடித்து அச்சில் கொண்டுவந்தவர் தமிழ்த் தாத்தா உ.சே. சாமிநாதர். நமது நாட்டுக்காரரான சி. வை.  தாமோதரம்பிள்ளை மற்றும் ஆறுமுக நாவலர் இருவருக்கும் இப்படியான பதிப்பில் பங்குண்டு. ஏட்டில் இருந்த நூல்கள் அச்சில் ஏறிய பின்னரே பொது மக்களும் அவற்றைப் படிக்க முடிந்தது. தமிழ் இலக்கியங்களை முறையாக ஆய்ந்து கற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். எனக்கு அந்தக் கொடுப்பனவு இல்லை. ஆங்கிலப் பள்ளியில் பாடங்களை ஆங்கிலத்தில் படித்த எனக்கு தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தைவும் ஒரு பாடமாக மட்டும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எஞ்சியவை நானாக அங்கும் இங்கும் தேடிப் படித்தவை.  இருந்தும் இளமையில் இலக்கியங்களை தக்க ஆசிரியரிடம் படிப்பது போல வராது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய சில பாடல்கள் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பாடிய பாடல்கள் பற்றி எழுதவில்லை. அவரது தேனினும் இனிய  திருப்பாவை பற்றி மட்டும் எழுதியுள்ளேன்.

ஆண்டாளை  பெரியாழ்வார் தனது நந்தவனத்தில்  கண்டெடுத்து  கோதை எனப்  பெயர் சூட்டி   தமிழையும் திருமால் பக்தியையும் ஊட்டி, அருமையுடனும் பெருமையுடனும் திருமகள் போல வளர்த்து வந்தார்.

குழந்தை முதலே கோதை கண்ணன் மீது பெரும் பக்தி கொண்டாள். அந்த பக்தி நாளாக நாளாக கண்ணன் மீது காதலாக மலர்ந்தது. எங்கு நோக்கிலும் கண்ணனின் திருவுருவம் தெரிந்தது.  வானில்  நீலம் கண்டால் அது கண்ணனின் நிறம் என்பாள்.  அழகு மலரைக் கண்டால் அது கண்ணனின் கண் என்பாள்.  கண்ணனை  திருமணம்  செய்து கொள்ளவேண்டும் என்று காத்திருந்தாள். வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்ற பாடல் மூலம் ஆயிரம் யானைகள் சூழ, உறவினர்கள் புடை சூழ கண்ணனை திருமணம் புரிய வேண்டும் என்று கனவு காண்கின்றாள். இந்தப் பாடல்கள் நாச்சியார் திருமொழி ஆறாம் திருமொழியில் இடம் பெற்றுள்ளன.

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாராணநம்பி நடக்கின்றானென்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான் 

திரு  நாராயணன் என்னை மணம் புரியத் தீர்மானித்துவிட்டான். என்னைப் பெண் கேட்டு வரும் சம்பிரதாயமாக ஆயிரம் யானைகள் சூழ வீதியில் வலம் வருகின்றான். அவனை வரவேற்க  நகரெங்கும் கட்டப்பட்ட தோரணங்கள், மக்கள் தம் கரங்களில் வைத்திருக்கும் பூரண கும்பங்கள் மற்றும் பல மங்கள அலங்காரங்கள் எல்லாவற்றையும் நான் என் கனவில் கண்டேனடி, என் தோழி!
மறுநாள் அவனுக்கும் எனக்கும் திருமணம் என்று முகூர்த்தம் நிச்சயித்தான் கண்ணன். கமுகு பாளையால் வேயப்பட்டிருந்த பந்தலின் கீழ் அந்த மாதவன், கோவிந்தன் ஒரு காளை போல வீற்றிருந்து இவ்வாறு அறிவிப்பதை நான் கனவில் கண்டேனடி என் தோழி! (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்
 கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழிநான் 

நக்கீரன்
(96)

பெரியாழ்வார் வீட்டில் இல்லாத சமயம், பெருமானுக்கு சார்த்துவதற்காக வைத்திருந்த மாலைகளை எடுத்து, தான்  கழுத்தில் அணிந்து கொண்டு, கண்ணனுக்குத் தோதாக, கோதை தான் இருக்கின்றேனா என்று கிணற்று நீரின் நிழலில் (கண்ணாடியில் தெரிவது போன்ற) பிரதிபிம்பத்தைப் பார்த்துப் பார்த்து  ஆண்டாள் மகிழ்வாளாம்.

ஆண்டாளின் அழகைக் காட்டிய அந்தக் கிணறு இன்றும் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆலயத்தில் உள்ளது என்கிறார்கள்.

அதன் பின்னே மாலைகளை பெருமாளுக்குச் சூடக் கொடுப்பாள். ஆகையாலே ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் என அழைக்கப்பட்டாள். ஆண்டாளுக்கு வேறு பல சிறப்புப் பெயர்களும் உண்டு. கரும்பார் குழல் கோதை, கோதைப்பிராட்டி, சூடிக்கொடுத்த நாச்சியார்  என்ற சிறப்பு பெயர்கள் பெற்றவள். திருமாலின் மனைவியாகும் பாக்கியம் செய்தவள்.

பெரியாழ்வார் மிகப் பெரும் தமிழ்ப்  புலவர் என்பதை முன்னர் கண்டோம். அவரின் மகள் அவரைப் போலவே தமிழ்ப் பாடல்கள் கட்டுவதில் பெரியாழ்வாருக்கு எந்தவிதத்திலும் சோடை போகாதவர்.  ஆண்டாள் பிறந்தது  காலம்   9 ஆம் நூற்றாண்டு நள ஆண்டு ஆடி மாதம். நட்சத்திரம்  ஆடி பூரம் (வளர்பிறை சதுர்த்தசி திதி) செவ்வாய்க் கிழமை.

ஆண்டாளின் பாடல்கள் இயற்றரவிணை கொச்சகக்கலிப்பா என்று சொல்கின்றார்கள். மிகக் கடினமான யாப்பு வகையைச் சேர்ந்தது. ஒரு பெண் அந்தக் காலத்தில் இப்படி யாத்தது மிகவும் வியப்பை  அளிக்கின்றது. ஆண்டாள் அருளியது திருப்பாவை  30  மற்றும் நாச்சியார் திருமொழி 143 ஆக  மொத்தம் 173 பாடல்கள் மட்டுமே. பாடல்கள் அத்தனையும்  சத்தான் தமிழில் முத்து முத்ததாகப் பாடப்பெற்றவை. படிக்கப் படிக்க இன்பம் அளிப்பவை.

ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். பெரியாழ்வார் இந்த நந்தவனத்திற்கு வந்தபோது, ஆண்டாளை எடுத்துக்  கரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து இரங்கனாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கிய பணியாகும். மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள்.

ஒருமுறை பெருமாள் அணிந்திருந்த மாலையில் நீண்ட முடி இருப்பதைக்  கண்ட அர்ச்சகர்கள் அதை எறிந்து விட்டு வேறுமாலை கொண்டு வரும்படி ஆழ்வாரிடம் கூறினார்கள்.  பகவானுக்குச் செய்யும் தொண்டில்  தவறு  நடந்து விட்டதே என்று ஆழ்வார் வருந்தினார். மறுநாளும் மாலை தொடுத்து ஆண்டவனுக்கு அனுப்பும் சமயத்தில், அந்த மாலையை ஆண்டாள் அணிவதைக் கண்டார். ஆண்டாளைக்  கண்டித்தார். அன்று இரவே பெருமாள் ஆழ்வாரின் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கூறினார். அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் பூமாலை மட்டுமின்றி பாமாலையும் சூடி மகிழ்ந்தாள்.

ஸ்ரீரங்கப்பெருமாளைத் திருமணம் செய்வதற்காக ஆண்டாள் மார்கழியில் நோன்பிருந்து பக்தியின் சாரமாக திருப்பாவையையும். காதலின் வரமாகவும் காதலின் வீரமாகவும் நாச்சியார் திருமொழியையும் பாடினார். தனது  தந்தையிடமும் இந்தத் தெய்வீகத் திருமணம் பற்றிக்  கூறினார்.

ஆழ்வாரும் ஆண்டாளைப் பல்லக்கில் ஏற்றி வந்தார். இதைக்கேள்விப்பட்ட பாண்டிய மன்னன் ஆண்டாள் திருமணத்தை சிறப்பாக நடக்க  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல ஆண்டான் விருப்பப்பட்டாள். ஆண்டாள் பாதம் வலிக்குமே என்றெண்ணிய இரங்கநாதர் அவனை தன் மார்பில் வீற்றிருக்கும்படியாக செய்தார். பங்குனி உத்திரநன்னாளில் ஆண்டாள்  – இரங்கநாதர் திருமணம் சிறப்பாக நடந்தது.

இன்றும் திருமலை-திருப்பதியில், தைத் திருநாளான பொங்கலில் தான் ஆண்டாள் திருமணம் கோதைப் பரிணயம்   என்று கொண்டாடப்படும்! காலையில் வேங்கட மாப்பிள்ளை பாரி வேட்டை எல்லாம் நடத்தி, வீரம் கொப்பளிக்க வருவார்! வந்து ஆண்டாளைக் கைத்தலம் பற்றுவார்! மாலை மாற்றல்  கூட அற்புதமாக நடக்கும்!
இவ்வளவு நாள், தான் சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றிப் போட்டாள்!

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தம்நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழிநான்
  (திருப்பாவை)

ஆண்டாள் திருப்பாவையில் இடம் பெற்ற இந்த வரிகளை கண்ணதாசன் “கந்தன் கருணை” படத்தில் இடம் பெற்ற “மனம் படைத்தேன் உன்னை” பாடலில் எப்படிப் ப யன் படுத்தி உள்ளார் என்பதைப் பாருங்கள் .

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு – நான்
வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!   (மனம் படைத்தேன்)

மத்தள மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க
கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் – அந்த
கனவுகள் நனவாக உறவு தந்தாய்!    (மனம் படைத்தேன்)

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் – தோழீ
தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்! (மனம் படைத்தேன்)

செவ்வேள் என நீ பெயர் கொண்டாய்
சொல்வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கைவேல் கொண்டு நீ பகை வென்றாய் – இரு
கண்வேல் கொண்டு நீ எனை வென்றாய்! (மனம் படைத்தேன்)                          

பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல்  பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்
பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்!

நக்கீரன்
(97)

என்றுமுள்ள செந்தமிழ் என்ற இந்தத் தொடரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவருகிறேன். தமிழ்மொழி மீது எனக்கு ஏற்பட்ட காதலே  இந்தத் தொடரை எழுத முக்கிய காரணியாக அமைந்தது. கால வெள்ளத்தில் அழிந்தது போக எஞ்சிய  படைப்புக்களின் தொகுப்பே சங்க இலக்கியங்கள்  ஆகும். அவற்றைப் படிக்கும் போது மலைப்பாக இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களது நாகரிக்கச் சிறப்பு எம்மைத் திகைக்க வைக்கிறது.  சங்க  இலக்கியங்களே தமிழ்மொழியை உலக மொழிகளோடு சரியாசனம்  வைக்கக்  காரணமாக இருந்துள்ளது.  செம்மொழித் தகைமையைப் பெற வைத்துள்ளது.

இலக்கியம் மக்களுக்குப் பயன்பட  வேண்டும். இல்லாவிட்டால் இலக்கியத்தால் பயனில்லை.   தமிழ் இலக்கியங்கள் வாழ்வின் பல்வேறு கூறுகளை எடுத்து  இயம்புகின்றன. மனிதன் எப்படி வாழவேண்டும், எதைக் கொள்ள வேண்டும் எதைத் தள்ள வேண்டும் என்பவற்றை எல்லாம் எடுத்துச் சொல்கின்றன. பழந்தமிழரின் வீரம், காதல், கொடை, விருந்தோம்பல் போன்ற நற்பண்புகளையும் சமூக வாழ்வியலையும் எடுத்தியம்புகிறது.

சங்க காலத் தமிழ் மக்கள் நாகரிகம், பண்பாடு, கல்வி, ஒழுக்கம்,தெய்வ வழிபாட்டு முறை ஆகிய வற்றில் மேம்பட்டு விளங்கினர் என்பதை இலக்கியங்கள் வழியாக நன்கு அறிய முடிகிறது .

மொழிக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் மனிதன் எப்படியும் வாழ்ந்து மடியாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று  வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார்கள்.

சங்க இலக்கியம் வழியாக சங்ககால மக்கள் அகத்திலும் புறத்திலும் தன்னிகரில்லாத வகையில் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக காதல் வாழ்விலும் புரிதலுடனும் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பக்குவத்துடனும் இருந்ததை உணர முடிகிறது. மேலும் விருந்தோம்பல், பொருள் தேடுதல் கல்வி ஈகை போன்ற நெறிகளை வாழ்வியலில்  கடைப் பிடித்து  வாழ்ந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.

திருக்குறள் உள்ளிட்ட நீதி இலக்கியங்கள் தோன்றி மனிதன் ஒழுக்கத்தைக்  உயிரினும் மேலாக கடைப்பிடிக்க வேண்டும். அதை உயர்வாய் மதிக்க வேண்டும். கல்வியே சிறந்த செல்வம். அதை இரந்தாவது  பெறவேண்டும்,  கொலை, களவு,  கள், காமம், சூது அறவே கூடாது.   தவவாழ்க்கை மேன்மையானது. ஆயினும் இல்லறத்தில் புகுதல் இனிமையானதே.  பிறர் மனைவி மேல் ஆசை, பரத்தமைப் பழக்கம் தவறானது,  பிறன்மனை நோக்காதது பேராண்மை என்று புகழப்பட்டது.

இன்று மேற்குலக நாடுகள் அறிவியலில், கல்வியில், செல்வத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றன. ஆனால் ஒழுக்கத்தில் உயர்ந்து நிற்கின்றனவா  என்றால் அப்படியில்லை. திருமணமாகி மிகக் குறுகிய காலத்தில் மணமுறிவு  ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். இந்த நோய் தமிழர்களது வாழ்வியலிலும் புகுந்துவிட்டது.

எனக்கிருக்கிற கவலை  சங்க இலக்கியங்கள் சொல்லும் விழுமியங்கள், ஒழுக்கங்கள் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருக்கிறது. தெரியும் வாய்ப்பு இல்லாது இருக்கிறது. எமது வாழ்க்கை முறை, கல்வி முறை மாறிவிட்டன. அறம், பொருள், இன்பத்தில் பொருள் தேடும் ஒன்றே இன்று முன்னிலைப்படுத்தப் படுகிறது.  ஒழுக்கம், நீதி போன்றவை பின் தள்ளப்பட்டுவிட்டன்.  ஒழுக்கம் இல்லாத பொருள், கல்வி, வீரம்  போன்றவற்றால் பயனில்லை.

தனிமனித ஒழுக்கம், சமுதாய ஏற்றத்தாழ்வு ஆகியவை அதிகரித்த காலத்தில் அவற்றை ஒழுங்குபடுடுத்துவதற்காகத்தான் அற இலக்கியம் தோன்றின.  சாதாரண குடிமக்களுக்கும் மன்னனுக்கும் கூட ஒழுக்கத்தை, அறத்தைப் போதிக்கவும் கடைப் பிடிக்கச் செய்யவும் தான் நீதி இலக்கியம் படைக்கப்பட்டது. இதைப் படைத்தவர்களில் சமண, பவுத்த முனிவர்களுக்கும் பெரும் பங்குண்டு என்பது வரலாறு.

இலக்கிய வடிவங்களில் ஒன்றான காப்பியங்கள் வழியாக  நீதி உரைக்க வேண்டும் என்பதற்காக உருவானவைதான் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி எனும் ஐம்பெரும் காப்பியங்களும், சூளாமணி, யசோதர காவியம், உதயணகுமார காவியம், நீலகேசி, நாககுமாரகாவியம் எனும் ஐஞ்சிறு காப்பியங்களும் ஆகும்.

மூன்று நீதி (திரிகடுகம்), நான்கு நீதி (நான்மணிக்கடிகை), ஐந்து நீதி (சிறுபஞ்சமூலம்), ஆறு நீதி (ஏலாதி) என்பவை எளிய சொற்செட்டோடும்,  சந்த ஒழுங்கோடும் அறக்கருத்துக்களை குடிமக்களுக்கும்  கோலோச்சும் மன்னனுக்கும் எடுத்துரைத்தன.  பிந்திய தலைமுறைக்கும் பயன்படுமாறு  செய்யப்பட்டதே நீதி இலக்கியங்கள் ஆகும். இதில் திருக்குறள்தான் முதன்மை இடம் பெறுகிறது.

குடிமக்கள் காப்பியம் என்று சிறப் பிக்கப்படும் சிலப்பதிகாரம், தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் தயங்காமல் எதிர்த்து நீதி கேட்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.   சிலப்பதிகார காப்பியத்தை எழுதிய இளங்கோ அடிகள் காப்பியத்தின் நோக்கம்பற்றிக் குறிப்பிடுகிறார்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது

(பிழைத்தல் – தவறு செய்தல்; கூற்று – எமன்; உரைசால் – புகழ்மிகுந்த; உருத்து – சினந்து)

இவையே அந்த மூன்று உண்மைகள் ஆகும். காப்பியத்தின் முடிவிலும் இளங்கோ அடிகள் பல அறிவுரைகளைக் கூறுகிறார்.

“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”                                                  (வரந்தரு காதை)

கற்பின் திண்மை, விருந்தோம்பல்,  அறவோர்க்கு அளித்தல், சான்றோரை ஓம்பல், அறம் பேணல், துறவிகளுக்கு உணவிடுதல்,  நீதி பிறழாமை, புலால்மறுத்தல், கள்ளுண்ணாமை, பொய்கூறாமை,  உயிர்க்கு உறுகண் செய்யாமை,   தானம், தவம் போற்றல் போன்ற இளங்கோ அடிகளின் அறிவுரைகள் வள்ளுவரின் குரலாக ஒலிக்கிறது.  (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்!

நக்கீரன்

(98)

இலக்கியத்தின் குறிக்கோள் காதலும்  போரும் அல்ல. இலக்கியத்தின் உண்மையான நோக்கம் மனித வாழ்க்கையை  செம்மைப்படுத்தல், மனிதனை உயர்ந்த மனிதனாக வாழச் செய்தல் ஆகும்.   உலகில்  அமைதி, பகுத்தறிவு, சமூக  நலன்,  மனித நேயம் போன்றவை  இலக்கியப் படைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். அவை அல்லாதன  இலக்கியம் என்ற சொல்லுக்குத் தகுதியானவை அல்ல.

பண்டைக்காலம் தொட்டே தமிழில் பல நீதி நூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும்  நீதி நூல் என்று கூறுமளவுக்குத் தனியான நூல்கள் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட  நூல்கள் பதிணெண் கணக்கு நூல்கள் என  வழங்கப்படுகின்றன. இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ள நூல்களில் பெரும்பாலானவை  (11) நீதி  நூல்களாகும். அறம், பொருள், இன்பம் என்ற உறுதிப்பொருட்களை  நான்கு அடிகளுக்கு மிகாமல் உரைப்பது  பதிணெண்கணக்கு  நூல்களின் சிறப்பாகும்.

சங்க காலப் புலவர்களின் அனுபவ உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதி நூல்களாகப் படைத்தனர்.  இந்த நூல்களில் இலக்கியச் சுவையும்  கற்பனையும் குன்றித் தோன்றினாலும்  அவை மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தி நல்வழியில் செல்லத்  தேவையான அறிவுரைகளை  எடுத்து இயம்புகின்றன.

இந்தத் தொண்டில்  12 ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த  அவ்வையார் இயற்றிய நீதி நூல்கள்   ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகியவை குறிப்பிடத்தக்கன. இந்த நூல்கள்  நல்லொழுக்கத்துக்கு முக்கியம் அளித்துள்ளன.

நல்வழி காரணப் பெயர். நல்ல வழிகளை சொல்வதால் நூலுக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது. நல்வழி என்பது நல்லவர்கள் சொல்லும் வழி, நல்ல கதிக்கு செல்லும் வழி என்று பொருள்படும். மூதுரையை போல், மக்கள் வாழ அறிவுரையை கூறும் பாடல்களை உடையது நல்வழி. இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.

இந்த நூல்கள் சிறார்களுக்கு மட்டும் எழுதப்பட்டவை என சிலர்  நினைக்கிறார்கள்.  அப்படி நினைப்பதற்குக் காரணம் தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு   ஆத்தி சூடியைக் ஆசிரியர்கள்  பயன்படுத்தும் வழக்கமாகும். உண்மையில் இந்த நீதி நூல்கள்  அகவை வேறுபாடின்றி  ஒருவன் வையத்தில்  வாழ்வாங்கு வாழும் வழியை எளிய தமிழில்  சொல்லிக் கொடுக்கின்றன.

அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு  எனக் குறிப்பிடுகிறது. உயிரினங்களுக்கு உதவுவது அறம் அல்லது  ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைப் பிற்காலத் தமிழ் நீதி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது.

அவ்வையாரின் நீதி நூல்கள் யாவும் ஒரு காலத்தில் தொடக்கப் பள்ளியிலேயே  சொல்லிக் கொடுக்கப்பட்டன.  பாவம் – புண்ணியம்,  நன்மை – தின்மை, உண்மை – பொய்  போன்ற  அறவியல் சார்ந்த கருத்துகள் யாவும் இளமையிலேயே ஊட்டப்பட்டன. இன்றைய நிலைமை தெரியவில்லை.

நல்வழி காரணப் பெயர். நல்ல வழிகளை சொல்வதால் நூலுக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது. நல்வழி என்பது நல்லவர்கள் சொல்லும் வழி, நல்ல கதிக்கு செல்லும் வழி என்று பொருள்படும். மூதுரையை போல், மக்கள் வாழ அறிவுரையை கூறும் பாடல்களை உடையது நல்வழி. இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.

நல்வழியில் கடவுள் வாழ்த்துத் தவிர்ந்த பிற பாடல்கள் நன்மையே செய்க, உயர்குலம் இழிகுலம் இல்லை,  காலம் அறிந்து செய்க, கவலையடைதல் கூடாது, பேராசை கூடாது,  ஒழுக்கம் பொருளின் சிறந்தது, குடிப்பிறந்தார் வறுமையிலும் உதவுவர், கொடுத்து உண்டு வாழ்க,   மானமே உயிரினும் சிறந்தது, விலைமகள் தொடர்பு கேடு தரும்,  வஞ்சனையில்லாதார்  வாழ்வு சிறக்கும், புதைத்த பணத்தால் யாருக்குப் பலன்? வழக்கில் ஓரம் சொன்னவர் மனைபாழ்,  வரவுக்கேற்ற செலவு, மன அமைதி வேண்டும், கொடையாளருக்கு எல்லாரும் உறவினர், இதனினும் இது நன்று, வன்சொல்லும் இன்சொல்லும், பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அறிவுடையோரும் பேதையும், பிறன்மனை விரும்பாமை போன்ற ஒழுங்கங்களை வற்புறுத்துகின்றன. எல்லோரும்  நன்மைகளையே செய்ய வேண்டும் என ஒரு பாடல் வற்புறுத்துகிறது.

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.                                            (நல்வழி 1)

நல்ல செயல் மேன்மை தரும், தீய செயல் அழிவைத் தரும், முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளே, பூமியில் மக்களாய்ப் பிறந்தார்க்கு, அவர் சேர்த்து வைத்த பொருளாகும்.  ஆராய்ந்து பார்த்தால் எந்த மதத்தினர் கூறுவதும் இதைத் தவிற வேறில்லை. எனவே, தீமைகளை விலக்கி, நன்மைகளையே செய்க.  அதாவது புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க.

பன்னிரண்டாம் நூற்றாண்டு  பிற்கால  சோழ அரசர்கள் ஆட்சி செய்த காலம். சாதியம் இறுக்கம் அடைந்து தமிழ் சமூகத்தை கூறுபோட்ட காலம்.  சாதி வேற்றுமையை  அவ்வையார் கடுமையாகச் சாடுகிறார்.

“சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”                                         (நல்வழி 2)

துன்பப்படுவோர்க்குக் கொடுத்து உதவுபவர் உயர்குலத்தார் ஆவர். அங்ஙனம் கொடாதவர் தாழ்ந்த குலத்தவர் ஆவர். உண்மை நூலில் சொல்லப்பட்ட கருத்தும் இதுவேயாகும். ஆதலால் பிறப்பால்  உயர்வு தாழ்வு இல்லை.

இன்றைய உலகில் பணத்துக்காக  வேர்க்க வேர்க்க உழைக்கின்றனர். ஒரு வேலைக்குப் பதில் இரண்டு வேலை எனப்  பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை ஏழை, எளிய மக்களுக்குக் கொடுப்பதில்லை. யாருக்கும் தெரியாமல் பதுக்கி  வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர்.

இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.

உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.                                                (நல்வழி 22)

அவ்வையார் அக்காலத்துக்குச் சொன்னது இக்காலத்துக்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் பொருந்தும். நீதி நூல்களைப் படியுங்கள். படித்துவிட்டு உங்கள் பிள்ளைகளுக்கும்  சொல்லிக் கொடுங்கள். (வளரும்)

 

About editor 3020 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply