என்றுமுள்ள செந்தமிழ் (81-90)

என்றுமுள்ள செந்தமிழ் 

கண்ணன் மனிநிலையை தங்கமே தங்கம்

(81) 

நாலாயிர திவ்வியபிரபந்தத்தை வெறும் பத்தி இலக்கியமாக மட்டும் படிக்காது அவற்றை சமூக அறிவியல் பின்னணியிலும் படிக்கும்  போதே ஆழ்வார்களின் மனிதநேயத்தை, மானிடம் தழுவிய பார்வையை முழுதாகப் பார்க்க  முடியும்.

ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் அவர்களுக்குப் பின்னால் வந்த புலவர்களையும் கவிஞர்களையும் பலமாகப் பாதித்திருக்கின்றன. அவர்களில் பாரதியார் ஒருவர். மற்றவர் கவியரசு கண்ணதாசன்.

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி  என்பது  பாரதியாரின் வாக்கு. தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர் பாரதியார்.

 “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”

“வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!”

இவ்வாறு தமிழ் மொழியின் வண்மையையும் தண்மையையும் பாரதியார் மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார்.  எப்போது? சமற்கிருதம் தேவ பாஷை,  தமிழ் நீச  பாஷை என்று   தமிழைப் பழித்தவர்கள் இருந்த காலத்தில்.  தமிழ் வழிபாட்டிற்கும் தமிழர் வீட்டுத் திருமணத்திற்கும் தகாத மொழி என்று இன்றும்  தள்ளப்பட்டு வருகிறது.

உண்மையில் பாரதியார் பிறப்பால் பிராமணர். ஆன காரணத்தால் தேவபாஷ” என்று அழைக்கப்பட்ட வடமொழியை அவர் உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இன்றுகூட நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காட்டுத் தமிழ் நாட்டுப் பிராமணர் வடமொழியைத் தங்கள் “தந்தை மொழி” எனக் கூறிக் கொள்கிறார்கள். திருக்கோயில்களில் தமிழ் மொழியில் அருச்சனை செய்யப்படுவதற்கு எதிராக அருச்சகர்களே போர்க் கொடி தூக்குகிறார்கள். இன்றும் தில்லைச் சிதம்பரத்தில் பூசை செய்யும் தீட்சதகர்கள் தமிழ்மொழி வழிபாட்டுக்கு எதிராக வாள் ஏந்துகிறார்கள்.

தமிழகத்தின்  தமிழ்மன்னர்கள் எழுப்பிய திருக்கோயில்களில் தேவாரமும் திருப்பாவையும் திருவெம்பாவையும் திருவாசகமும் ஓதுவதை விடுத்து வடமொழியில் மட்டுமே வழிபாடு நடாத்த வேண்டும் என்று  இன்றும் பிராமணர்கள் முரண் பிடிக்கிறார்கள்.

சமய குரவர்களான அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையாரும் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 96,000 தேவாரப் பாடல்கள் ஆகும். அதில் அப்பரடிகள் பாடிய பாடல்கள் 49,000 என்பர். இந்தப் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகள் தில்லைவாழ் அந்தணர்களின் தமிழ் எதிர்ப்பு உணர்வால் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் குடிகொண்டிருக்கும் தில்லையம்பலத்தில் செல்லரித்துப் போயின.

சோழப் பேரரசன் இராசராசன் ( கிபி 985-1014) மீட்டெடுத்த பதிகங்கள் வெறும் 796 (அப்பரடிகள் 313 பதிகங்கள்) மட்டுமே. “அரசே கவலற்க! இக்காலத்திற்கு வேண்டியனவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு வேண்டாதவற்றை யாமே செல்லரிக்க விட்டுவிட்டோம்” என இராசராசனுக்கு இறைவனின் வானுரை (அசரீரி) கேட்டதாம்! எனவே அவன் தில்லைவாழ் அந்தணர்களை மன்னித்து விட்டானாம்!
17 ஆம் நூற்றாண்டில் சாமிநாத தேசிகர் என்று ஒருவர் திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். அதனால் ஈசான தேசிகர் என்றும் அவருக்குப் பெயருண்டு. இலக்கணக் கொத்து என்ற அவருடைய நூலுக்கு, அவரே ஒரு பாயிரமும் எழுதியிருக்கிறார். (இலக்கணக் கொத்தை ஆறுமுக நாவலர் ஓலைச்சுவடியில் இருந்து வெளிக் கொணர்ந்தார்.) அந்தப் பாயிரத்தில் தான் இந்த “அய்ந்தெழுத்துப் பாடை” என்ற சொற்றொடர் வருகிறது. வடமொழியில் இல்லாத ழ. ற, ன, எ, ஒ ஆகிய அய்ந்தெழுத்துக்கள் தமிழில் உள்ளனவாம்; மற்றவை எல்லாம் வடமொழியில் இருக்கின்றனவாம். எனவே தமிழ் மொழி அய்ந்து  எழுத்துக்களால் ஆன மொழியாம். இப்படி தமிழ்மொழியை எள்ளல் செய்தவர்   ஈசான தேசிகர்.

அதாவது, “வடநூல் வழி கலவாது, தமிழைத் தனியே தர முடியாது – வேறு வாக்கில் சொன்னால், வடமொழி இன்றி தமிழ் தனித்தியங்காது; தமிழ்நூல் ஒன்றிலும் தனித் தமிழ் கிடையாது; அய்ந்தெழுத்தால் ஒரு பாடை என்று சொல்லிக் கொள்ள அறிவுடையோர் நாணுவோர்; நானும் நாணுகிறேன்; வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டிற்கும் ஒரே இலக்கணம்” என்று சொல்லுகிறார்.

மறுபுறம் இதே  சாமிநாத தேசிகர்தான் தனித்தமிழ் என்ற சொல்லாட்சியை தமிழ்கூறும் நல்லுலகிற்கு முதலில் அளித்தவர்.  இலக்கணக் கொத்தில் தான் அது முதலில் ஆளப்பட்டது. இந்த விதையை ஊன்றியவர் ஈசான தேசிகரே என்பது  வரலாற்றில் இடம் பெற்ற விந்தையான பதிவு.

ஆழ்வார்களுக்குப் பிறகு தமிழை மிகச் சரியான அளவில் பாமர மக்களும் புரியும் வடிவில் கையாண்டவர்  மகாகவி பாரதிதான்.  கண்ணன்  பாட்டு என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைக் பாடியிருக்கிறார். கண்ணன் என் தோழன், கண்ணன் என் தாய், கண்ணன் என் தந்தை, கண்ணன் என் அரசன்,  கண்ணன் என் சீடன், கண்ணன் எனது சற்குரு, கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை, கண்ணன் என் காதலன், கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை ……….  என கண்ணனை பல உறவு நிலைகளில் வைத்துப் பாடியிருக்கிறார்.  இந்தப் பாடல்களை ஒரேயடியாக அவர் பாடவில்லை. தனிப் பாடல்களாக இயற்றிய கவிதைகள் பின்னர் தொகுக்கப்பட்டன. சில கவிதைகள் கையெழுத்து வடிவிலேயே நின்றுவிட்டன.

“கண்ணன் – என் தாய்” என்ற பாடல் 1913 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாத  ஞானபாநு இதழில் வெளிவந்தது ஆகும். இந்தப் பாடல் கண்ணன் பாட்டு நூல் தொகுதியுள் இரண்டாம் பாடலாக இடம்பெற்றுள்ளது.

இந்தப் பாடல்கள்  கவிதையழகும்  பண்ணழகும்  கொண்டவை எனப்  பல்லோராலும் பாராட்டப்  படுகிறது.  தேசிய எழுச்சியின் காலகட்டத்தில் பாரதியின் தேச பக்திப் பாடல்கள் தேசிய இலக்கியத்தில் தனித்துவம் பெற்றமை போன்றே, பக்திச் சிற்றிலக்கியத்தில் அவர் இயற்றிய “கண்ணன் பாட்டு”ம் ஒப்புயர்வற்று விளங்குகிறது. ‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்பெறும் மகாகவி பாரதியாரின்  பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும். இந்த பாடத்தில் ‘கண்ணன் பாட்டின்’ சிறப்புக்களைச் சிறிது பார்க்கலாம்.

கண்ணன் பிறந்த இடம் வட மதுரை (மதுரா).  பெற்றெடுத்தவர் தேவகி.  வளர்ந்த இடம் கோகுலம். வளர்த்தவர் யசோதை. கோகுலம்.  கோகுலத்தில் ஒருநாள் காதல் அதிகமான இராதை கோபத்தில் ஆழ்ந்திருக்கிறாள்.  அவளுக்கு கண்ணன் மன நிலை  தெரியவில்லையாம்.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

இங்கே தங்கமே தங்கம்  என்பது இராதையின்  உற்ற தோழி! கண்ணனிடம் தன் தன் தோழியை  தூது அனுப்பப் பார்க்கிறாள்! தோழியோ தயங்குகிறாள்! “தங்கமே தங்கம்” என்று அவளைக் கெஞ்சி, சென்று, பார்த்து வரச் சொல்கிறாள்! கண்ணனின் மனநிலை எப்படி இருக்கு என்று கண்டு வரச் சொல்கிறாள்!

ஆனால் தோழிக்கு ஓர் அய்யம். இவளுக்குத்தான் மன நிலை சரியில்லை.  உறக்கம் இல்லை. பால் கசக்கிறது. படுக்கை நோகிறது. கோலக் கிளிமொழியும் குத்தல் எடுக்கிறது.

பாரதியாரின் இந்தப் பாடல் வெள்ளித் திரையிலும் (ஏழை படும் பாடு / தெய்வத்தின் தெய்வம் குரல்: எம்.எல்.வசந்தகுமாரி / எஸ்.ஜானகி) வந்திருக்கின்றன. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

வரலாற்றில்  சிவ வணக்கத்தை விட  திருமால் வணக்கம்  பண்டு தொட்டு இருந்து வருகிறது 

(82) 

பெரும்பான்மைத் தமிழர்களின் சமயம் சைவநெறியாக இருப்பதால் அவர்கள் நாயன்மார்களையும் அவர்கள் பாடிய தேவார திருவாசகங்களைப் போல்  பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய நாலாயிர திவ்ய பிரபந்தைத்அறிந்திலர்.

வரலாற்றில்  சிவ வணக்கத்தை விட  திருமால் வணக்கம்  பண்டு தொட்டு இருந்து வருகிறது. தொல்காப்பியம்/பொருளதிகாரம்/அகத்திணையியல்  நானிலத் தெய்வங்கள் பற்றிப் பேசுகிறது. தொல்காப்பியம் என்ற இலக்கண நூலே தமிழில் உள்ள மிகப் பழைய நூல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தொல்காப்பியம் இரண்டாவது தமிழ்ச் சங்க காலத்து நூல் எனத் துணியப்படுகிறது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்.                         (தொல்காப்பியம் அகத்திணையியல்)

இதன் பொருள் எல்லோருக்கும் தெரிந்ததே. மாயோன் மேய காடு உறை உலகமும் –  மாயவன் விரும்பிய  காடு பொருந்திய உலகமும் சேயோன் விரும்பிய மைவரை உலகமும் – முருகவேள் மேவிய மைவரை உலகமும், வேந்தன் விரும்பிய தீம்புனல் உலகமும் – இந்திரன் மேவிய தீம்புனல் உலகமும்  வருணன் மேய பெருமணல் உலகமும் – வருணன் விரும்பிய  பெருமணல் உலகமும் முறையே   முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையினானே சொல்லவும் படும்.

இந்த நிலத் தெய்வங்களின் வரிசையில்  சிவன் விடுபட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது. ஆனால் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்கள் சிவன் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

ஞாலம் காக்கும் நால்வர் பற்றியும், அவர்களது தோல்வி காணாத ஆற்றல் பற்றியும் புறநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்                       (புறநானூறு 56)

காளைமாட்டின்மேல், விரிந்த தீ நிறச் சடை, கையில் சூலம்,நஞ்சுண்ட நீலநிறத் தொண்டை ஆகியவற்றுடன் தோன்றும் சிவனாகிய கூற்றுவன் சீற்றம் கொள்வதில் ஈடு இணை அற்றவன்.

கடல் சங்கு போன்ற வெண்ணிறமு, யாஞ்சில் என்னும் உழுபடை, பணைமரச் சின்னம் பொறித்த கொடி ஆகியவற்றுடன் விளங்கும் பலராமன் வலிமையில் சிறந்து விளங்குபவன்.

கழுவிய நீலமணி போன்ற மேனிநிறமும், கருடப் பறவைச் சின்னம் பொறித்த கொடி, ஆகியவற்றைக் கொண்ட திருமால் ஆகியவற்றுடன் பகைவரை வெல்லும் புகழில் மேலோங்கி நிற்பவன்.

மயிலைக் கொடியாகவும், ஊர்தியாகவும் கொண்டு விளங்கும் முருகன் நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றலில் சிறந்து விளங்குபவன்.

திருமுருகாற்றுப்படை முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஆவினன்குடி (பழனி, பொதினி) என்னும் ஊரினை புள்ளணி நீள்கொடிச் செல்வன் (திருமால்), மூவெயில் முருக்கிய செல்வன் (சிவன்), நான்கு கொம்பு யானை ஏறிய செல்வன் (இந்திரன்), தாகரை பயந்த நான்முக ஒருவன் (பிரமன்) என்னும் நாற்பெருந் தெய்வம் பேணிவந்ததாகக் குறிப்பிடுகிறது.

திருமுருகாற்றுப்படை முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஆவினன்குடி (பழனி, பொதினி) என்னும் ஊரினை புள்ளணி நீள்கொடிச் செல்வன் (திருமால்), மூவெயில் முருக்கிய செல்வன் (சிவன்), நான்கு கொம்பு யானை ஏறிய செல்வன் (இந்திரன்), தாகரை பயந்த நான்முக ஒருவன் (பிரமன்) என்னும் நாற்பெருந் தெய்வம் பேணிவந்ததாகக் குறிப்பிடுகிறது.

நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவனாக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவன்.                                                                 (திருமுருகாற்றுப்படை 169-165)

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ‘தெய்வம்’ என்ற சொல் மொத்தம் ஆறு குறட்பாக்களில் பயின்று வந்துள்ளது. இச் சொல்லுக்கு ‘மனிதரிடத்தில் இல்லாத புதிய ஆற்றலைக் கொண்ட ஒரு கடவுள்’ என்றும் ‘விதி’ என்றும் பொருள் கொண்டு விளக்கம் கொடுத்துள்ளனர் பல உரை ஆசிரியர்கள்.  ஆனால் இப் பொருட்கள் இக் குறள்களுக்குப் பொருந்தாது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.                                (குறள் 43) 

வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.                                    (குறள் 50) 

தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை.                                   (குறள் 55) 

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.                                  (குறள் – 619) 

ஐயப்படாது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.                        (குறள் 702)

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடித்தற்றுத் தான் முந்துறும்.                            (குறள் 1023)

கடவுள் என்ற சொல்லை அவர் திருக்குறளில் கையாளவே இல்லை. கட+உள் என்று இச்சொல்லைப் பிரித்து நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நமக்கு உள்ளும் நம்மைக் கடந்தும்(அப்பாலும்) இருக்கிறது என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறுவர். அல்லது கடவுதல் (இயக்குதல், செலுத்துதல்) என்ற சொல் அடியாகப் பிறந்தது இச் சொல் என்ற கருத்தும் உண்டு. உயிர்களுக்கெல்லாம் அப்பால் நின்று ஒரு சக்தி அவற்றைக் கடவுகின்றது என்ற கருத்து இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட, உயிர்களுக்கும் மனிதருக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியில்(transcendent force) திருவள்ளுவருக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் அவர் இச்சொல்லைத் தமது நூலில் எங்குமே பயன்படுத்தவில்லை என்று கருதமுடியும்.

இறைவன்-தெய்வம் என்ற சொற்கள் கடவுள் என்ற கருத்துக்கு மாறானவை. தேவன் அல்லது தேவ என்ற சொல்தான் தெய்வம் என்ற வடிவத்தில் தமிழில் வழங்குகிறது. இச்சொல்லுக்கு மனிதனைவிட உயர்உலகம் ஒன்றில் வாழும் (மனிதனைவிட அதிகமான, ஆனால் எல்லைக்குட்பட்ட சக்தியுடைய) உயர்பிறவிகள் என்பது  பொருள்.  வள்ளுவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொல்கிறார். மனிதர்கள் தங்கள் நிலையில் உயரும்போது தெய்வம் ஆகிறார்கள்.

நாயன்மார்கள், ஆழ்வார்களது பக்தி இயக்கத்துக்குப் பின்னரே முழுமுதற் கடவுள் என்ற கோட்பாடு பிறந்தது.(வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே!

(83) 

கண்ணின் பிறப்பை பல்லாண்டு பாடி வாழ்த்திய பெரியாழ்வார் தாயாகி கிருஷ்ணாவதாரத்தின் பல்வேறு செயல்பாடுகளில் மனம் தோய்ந்து பக்திச்சுவை ததும்பப் பாடியிருக்கிறார்.

கண்ணனைக் குழந்தையாக எண்ணி அளவிலா அன்புடன் குழந்தையின் எல்லாச் செயல்களிலும் மனம் தோய்ந்து பாடியுள்ள பாசுரங்கள் இதயத்தை தொடும்  பாங்கின. பெரியாழ்வார் யாருக்குத் தாயாகிறார்? சகல உயிர்களுக்கும் அருள் செய்யும் பகவானுக்கே தாயாகிறாராம்.

கண்ணனை ஒரு தாயின் நிலையிலிருந்து பாடுகிறார். தாய் நிலையைத் தாலாட்டுப் பாடுதல், நிலவு காட்டுதல், இரண்டு கைகளைச் சேர்த்துச் சப்பாணி கொட்டச் செய்தல், முதுகில் அமரும் குழந்தையை வைத்து விளையாடுதல், கண்ணாம்பூச்சி காட்டுதல், காது குத்தல், நீராட்டுதல் எனப் பல நிகழ்வுகளை ஒட்டியே பாடியிருக்கிறார்.

கண்ணனைப் பற்றிய அவதாரச் சிறப்புகளை  பெரியாழ்வார் பாசுரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. காட்டாகச் சில பாசுரங்களை முன்னர் பார்த்தோம். மேலும்  காண்போம்.

கையும்காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும் கண்டாள் பிள்ளைவாயுளே.                                     (திருமொழி முதலாம் பத்து – பாடல் 6)

குழந்தைப் பிறந்தவுடனேயே, கருவிற்குள் மடங்கிய நிலையிலேயே இருப்பதால், அதனைக் குளிப்பாட்டும் பொழுது, உடலை நன்றாக உருவிவிட்டு, கைகளை முன்னும் பின்னும் மடக்கி, கால்கள் வளைந்துவிடாது இருப்பதற்காக, அதை நன்கு விரைப்பாக நீட்டிப் பிடித்த வண்ணம் வெந்நீரை ஊற்றுவர். குழந்தையின் உடலுக்கு உறுதி தரும் வண்ணம் குளிப்பாட்டும் பொழுது இயன்ற வகைகளில் கை காலை மடக்கி, சில உடற்பயிற்சிகளைச் செய்வர். இதனால், குழந்தையின் உடலும் நல்ல வடிவம் பெறும்.
கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர் – குழந்தையின் கை, கால்களை நன்கு உருவிவிட்டு, கால்கள் வளைந்துவிடாது, இருப்பதற்கு அதனை நிமிர்த்திவிடுவதற்காக, கடார நீர் – அகன்ற, பெரிய கொப்பரையில் நீரூற்றி, பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் – அகன்ற, பெரிய கொப்பரையில் நீரூற்றி, நல்ல வெதுவெதுப்பாக சுடவைத்து, மிதமான வெண்ணீராக்கி, பசுமையான பிஞ்சு மஞ்சளை, மைய அரைத்து மேனியெங்கும் பூசி, மஞ்சளின் ஒரு சிறிய துண்டைக் கொண்டு

(பைய – மெதுவாக, மெல்ல; வாட்டி – சூடு செய்து; பசுஞ்சிறு மஞ்சள் – பசுமையான, சிறிய மஞ்சள்)

ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட – தலைவனின் நாவினை வழிப்பதற்காக, யசோதையை, குழந்தையின் வாயைத் திறந்திட்ட போது, (ஐய – தலைவன்; அங்காத்தல் – வாய்திறத்தல்)

வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே – ஏழு உலகத்தையும் குழந்தை கண்ணனின் வாயினுள் யசோதை கண்டாளே. (வையம் – உலகம்; வாயுளே – வாயின் உள்ளே)

பிறந்தவுடன் குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக அகன்ற, பெரிய பாத்திரத்தில் நீரூற்றி, அதை கைபொறுக்குமளவுக்கு இதமாக சூடேற்றி, கண்ணனின் கை கால்களை நன்கு உருவிவிட்டு, அவை நன்கு உறுதிபடுவதற்காக, இதமான வெந்நீரை ஊற்றி கால்களை நிமிர்த்திவிட்டாள் யசோதை.  மருத்துவக் குணம் உடையதுமான மஞ்சளை, நன்றாக மைப்போல் அரைத்து, அதை உடல் முழுவதும் பூசினாள். அதன்பிறகு, கண்ணனின் நாக்கிலுள்ள அசடினை எடுப்பதற்காக, ஒரு சிறிய மஞ்சளால் நாவினை வழிக்க வாயைத் திறக்கும் போது, அண்டகுலத்துக்கு அதிபதியானவனின் வாயினுள் ஏழு உலகத்தையும் கண்டாள் யசோதை.

வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே!     (திருமொழி முதலாம் பத்து – பாடல் 7)

பிள்ளை வாயுள் வையமேழும் கண்ட யசோதை, தன்னருகில் குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு உடனிருந்த மற்ற ஆய்ச்சியரையும் அழைத்துக் காட்ட, அங்கிருந்த அனைவரும் கண்ணனின் வாயினுள் வையமேழும் இருந்த அதிசயத்தைக் கண்டு பின்வருமாறு யசோதையிடம் கூறினர்.

( வையகம் – உலகம்; மடநல்லார் – பெண்கள், இங்கு ஆய்ச்சியரைக் குறித்தது)

ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம் – குழந்தையின் வாயினுள் வையகம் கண்ட ஆயர் குலப் பெண்கள், ”இவன் ஆயர்குலத்தவருக்குப் பிறந்த சாதாரண மானிடப் புதல்வனே அல்லன்; காண்பதற்கும், பெறுவதற்கும் அரிதான தெய்வம் இவன். (புத்திரன் – புதல்வன், மகன்; அருந்தெய்வம் – அரிதான தெய்வம்)

பாய சீருடைப் பண்புடைப் பாலகன் – விரும்பத் தகுந்த குணங்களும், சிறந்த புகழினையும், சீரிய பண்புகளைக் கொண்ட பாலகன் இவன். (பாய – விரும்பத் தகுந்த; சீர் – புகழ்; பாலகன் – குழந்தை)

மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே – விரும்பத் தகுந்த குணங்களும், சிறந்த புகழும், சீரிய பண்பும் உடைய இந்த பாலகன், அந்த மாயோன் தான் என்று பெருமகிழ்ச்சி கொண்டனர், ஆயர்குலப் பெண்கள். (மாயன் – மாயோன்; மாதர் – பெண்கள் {மாந்தர் – மக்கள்)

குழந்தை கண்ணபிரானின் நாவினை நல்ல மஞ்சளால் வழித்துவிட, அவன் வாயை அங்காந்திட்ட போது, யசோதை குழந்தையின் வாயினுள்ளே வையம் ஏழினையும் கண்டாள். அவ்வருங்காட்சியை, உடனிருந்த ஆயர்குலப் பெண்களிடம் யசோதை காட்டிய போது, அவர்கள், ”இவன் ஆயர்குலத்தவருக்குப் பிறந்த சாதாரண மானுடப் பிள்ளையே அல்லன்; காண்பதற்கும் பெறுவதற்கும் அரிதான தெய்வமிவன்; எல்லாராலும் விரும்பத் தகுந்தவனும், மேன்மையான புகழும், சிறந்த குணங்களுமுடைய இந்த குழந்தை நம் குலத் தெய்வமான மாயோனே தான்” என்று கூறி பெரும் மகிழ்ச்சி கொண்டனர் ஆயர் குலப் பெண்கள்.

பெரியாழ்வாரின் பாடல்கள் ஒவ்வொன்றிலும் பக்திச் சுவை மட்டுமல்ல  அமரர் கண்ட தெள்ளு தமிழ்ச் சுவையும் கொட்டிக் கிடக்கிறது.  எந்தப் பாடலை விடுவது எதனை எடுப்பது என்பது கடினமாக இருக்கிறது. (தொடரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

இளங்கோ அடிகள் மூத்த ஆழ்வார்

(85)

நான் முன்னர் குறிப்பிட்டபடி திருமால் வணக்கமும்  சேயோன் வழிபாடும்  தொல்காப்பியர் காலம் தொட்டு இருந்து வருகிறது. தொல்காப்பியம் இடைச் சங்க காலத்து இலக்கண நூல் என்பது அறிஞர்களின் துணிபு.

எனவே தொல்காப்பியர்  கிமு 500 – 300  கும் இடைப்பட்ட காலத்தில்  வாழ்ந்திருக்கலாம். இடைச் சங்க காலத்து நூல்கள் எல்லாம் அழிந்து போயின. தொல்காப்பியம் பலாரால் போற்றப்பட்ட ஓர் இலக்கண நூல் என்பதால்  அது நீருக்கும் நெருப்புக்கும் இரையாகாமல் தப்பிவிட்டது. தொல்காப்பியம் அழிந்தொழிந்திருந்தால்  தமிழர்களின் தொன்மை,  வாழ்க்கை முறை, பண்பாடுகள் தெரியாமல் போயிருக்கும்.

தொல்காப்பியத்தை முதல் முதலில் அச்சிட்டு வெளியிட்டவர்  சி.வை. தாமோதரம் பிள்ளை ஆவார். 1891ல் முதல் பதிப்பு அச்சிடப்ப்ட்டது. 1610 சூத்திரங்கள் கொண்ட 3 அதிகாரங்களையும் அவர் வெளியிட்டார்.

தொல்காப்பியம் தமிழ்மக்களின் மிகப் பழமையான ஒரு சமுதாயக் கட்டுமானத்தை படம் பிடித்துக் காட்டுகிறது என்பதில் ஐயம் எதுவுமில்லை.

குறிஞ்சி நில (மலை) மக்கள் வேட்டையாடியும்
முல்லை நில (காடு) மக்கள் ஆனிரை மேய்த்தும்
மருதநில (ஆற்றுப்படுக்கை) மக்கள் பயிர் செய்தும்
நெய்தல் நில (கடலோரம்) மக்கள் மீன் பிடித்தும்

வாழ்ந்த சமுதாயத்தையே தொல்காப்பியத்தில் காணக் கூடியதாக இருக்கிறது.

வடமொழியும், பிறபண்பாடும் தமிழ் மொழியோடும் தமிழ்ப் பண்பாடோடும் உறவுகொள்ளத் தொடங்கிய காலத்தில்தான் தொல்காப்பியம் தோன்றியிருக்கிறது.

தொல்காப்பியரே தனது நூற்பாக்களில் கூறப்படும் விதிகளுக்கு தனக்கு முன்னரும் தனது காலத்திலும் இருந்த புலவர்களது கூற்றுக்களை என்ப, என்மனார் புலவர், மொழிப, யாப்பென மொழிப யாப்பறி புலவர் என்று  287 இடங்களில் சான்று காட்டுவார். எனவே தொல்காப்பியர் தமிழுக்கு புதிய இலக்கணம் வகுத்தார் என்பதைவிட அவருக்கு முந்தியிருந்த இலக்கணத்தைத் தொகுத்து நூல் வடிவில் தந்தார் என்பதே பொருந்தும்.  தொல்காப்பியருக்கு முன்னர் நூற்றுக் கணக்கான புலவர்கள் இலக்கியமும் இலக்கணமும் படைத்திருக்க வேண்டும்.  இலக்கியத்தில் இருந்துதான் இலக்கணம் பிறக்கிறது.

முதற் சங்கம்

கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற் சங்கமாகும். இச்சங்கத்தை நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89   அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது.

இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன.

இடைச் சங்கம்

தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற 3700 புலவர்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்களாகும்.

 கடைச் சங்கம்

கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது தொடங்கப் பெற்றது.

இச் சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடினர். இதில்  தொகுக்கப்பட்ட  நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவை ஆகும்.

முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை கிபி 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் களவியல் உரை என்ற நூல்தான் கூறுகின்றது. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, (11,990 ஆண்டுகள்)  பாடிய புலவர்களின் எண்ணிக்கை (8,598 புலவர்கள்)  சங்கம் நடத்திய அரசர்கள் (197 அரசர்கள்)  போன்ற  செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு அரசரும்  சராசரி 62  ஆண்டுகள் ஆண்டார்கள் என்பது சாத்தியமில்லை.

அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று  நக்கீரர் உரை கூறுகிறது.  இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாகப்  பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார்.

இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன. எனவே தமிழ்மொழியும் தமிழர் நாகரிகமும் தமிழர் பண்பாடும்  ஆகியவற்றுக்கு ஒரு  நெடிய வரலாறு உண்டு என்பதற்கு மறுப்பில்லை.

தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு நெறி வைணவம். திருமால் வழிபாட்டின் காலப்பழமைக்குத் தொல்காப்பியம், பரிபாடல், சிலப்பதிகாரம் முதலியன சான்று கூறி நிற்கின்றன.  திருமாலைப் போற்றிப் பாடிய பன்னிரு ஆழ்வார்களில் முதலாமவராகக் கருதப்படும் பொய்கையாழ்வாரின் காலம் கிபி ஏழாம் நூற்றாண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவரைவிடக் காலத்தால் மிக மூத்தவர் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் (கிபி 2 ஆம் நூற்றாண்டு). அடிகள் இயற்றிய ’ஆய்ச்சியர் குரவை’யே பின்னாளில் இயற்றப்பட்ட வைணவ பக்திப் பனுவல்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் தோற்றுவாயாகவும் விளங்கின்றது எனலாம்.

காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான் நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால், பெரியோன், பலராமன் முதலிய தெய்வங்களும் அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன.

’ஆய்ச்சியர் குரவை’யின் மூலம், கண்ணனின் குழந்தைப்பருவ மாயச் செயல்கள் தொடங்கி, அவன் வளர்ந்த பிறகு பாண்டவர்க்காகத் தூது சென்றது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும், திருமால் தன் மற்றைய அவதாரங்களில் நிகழ்த்திய அற்புதங்களையும், சாதாரண மக்கள் ஆடுகின்ற எளிய கூத்தின் வாயிலாக, அழகிய இசைப்பாடல் வடிவிலே சுருங்கச் சொல்லி விளங்கவைத்துள்ளார். இளங்கோ சமயத்தால் சமணராக இருந்தும்  புறச் சமயங்களான வைணவம், சைவம், பவுத்தம் பற்றியும் போற்றிப் பாடியிருக்கிறார்.

இராமகாதை படைத்த கம்பர் கம்பநாட்டாழ்வார் என்று பெருமைப் படுத்தப்படுகிறார்.  கண்ணன் பாட்டுப் பாடிய மகாகவி பாரதியையும் ஆழ்வார்களில் ஒருவராகக் போற்றப்படுகிறார்.  இவர்கள் அனைவரிலும் காலத்தால் முற்பட்டவரும் திருமாலின் புகழை மிகச்சிறப்பாய் முதலில் பாடியவருமான  இளங்கோவடிகள்  மூத்த ஆழ்வாராக, முதல் ஆழ்வாராகக் கருதிப் போற்றப்படுகிறார்.  இளங்பேகா அடிகளாரின் ஆய்ச்சியர் குரவை பாடல்கள் சிலவற்றை அடுத்த முறை பார்ப்போம். (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

ஆய்ச்சியர் குரவை

(86)

குடிமக்கள் காப்பியமாக இன்றளவும்  போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ஒரு சமணராக இருந்தும்  சமயப் பொதுமையைக் கடைப்பிடித்திருக்கிறார்.

இளங்கோ அடிகள் பேசாத பொருளில்லை, கூறாத அறமில்லை,  பாடாத தெய்வமில்லை எனுமளவிற்குப் பல்வேறு சமயங்களைப் பற்றிப் பாடி  நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களில்  சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி  மட்டுமே இன்று முழுமையாகக் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்கள் சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்டவை.  குண்டலகேசி, வளையாபதி மற்றும் சீவக சிந்தாமணி பிற்காலச் சோழர் காலத்தில் படைக்கப் பட்டவையாகும்.

குண்டலகேசி காப்பியம் பவுத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்த  19 முழுமையான பாடல்கள் மட்டுமே இன்று கிடைத்துள்ளன.

தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பவுத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.

வளையாபதி சமணம் சார்ந்த காப்பியம். ஒன்பதாம்   நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.  மிக அண்மைக் காலத்தில் மறைந்த நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை.  இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும் கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.

கிடைத்துள்ள பாடல்களின் அடிப்படையில்  இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்து காணப்படுகிறது.  திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்.

ஏட்டுச் சுவடி வடிவத்தில்  இருந்த  வளையாபதியை உ.வே. சாமிநாத ஐயர் திருவாவடுதுறை ஆதீனம்  மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடம்  தமிழ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கிருந்த நூலகத்தில் கண்டிருக்கிறார்.  ஆனால் பிற்காலத்தில் அதனை பதிப்பிக்க எண்ணி அந்த நூலைத் தேடியபோது அது கிடைக்கவில்லை.  இதனை சாமிநாத அய்யர்  தாம் எழுதிய என் சரிதம் என்ற நூலில் பின்வருமாறு  கண்ணீர் மல்க எழுதியுள்ளார்.

“திருவாடுதுறை மடத்துப் புத்தக சாலையில் வளையாபதி ஏட்டுச் சுவடியை நான் பார்த்திருக்கின்றேன். அந்தக் காலத்தில் அத்தகையப் பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராயவேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப்பார்த்தபோது அந்தசுவடி மடத்துப் புத்தக சாலையில் கிடைக்கவில்லை. தமிழ் நாடு முழுமையும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழந்தொழிந்துப் போயினவென்று தொந்து அவற்றிற்காக வருத்தமடைவது என் இயல்பு. கண்ணால் பார்த்த சுவடிகைக் கிட்டாமல் போயிற்றே என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. ‘கண்ணில்லான் பெற்றிழந்தான் என வுழந்தான் கடுந்துயரம்’ என்று கம்பர் குறிக்கும் துயருக்குத்தான் அதனை ஒப்பிட வேண்டும்.”

சீவக சிந்தாமணி திருத்தக்க தேவர் என்ற சமண புலவரால் இயற்றப்பட்டது. ஐம்பெரும் காப்பியங்களுள்  தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வடமொழியில் எழுதப்பட்ட  சூடாமணியைப் பின்பற்றி எழுதப்பட்டது.  சமண தொன்மங்களில்  தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை சுவையாகவும்  இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார்.  அம்முயற்சியில் அவர் வெற்றி பெற்றார் என்பதும் உண்மை. நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் காணப்படுகின்றன. சேக்கிழார் பெரிய புராணம் எழுதுவதற்கு  சீவக சிந்தாமணி  தூண்டுகோலாக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

இளங்கோ அடிகள் காலத்தில் காணப்பட்ட சமயப் பொதுமை பக்தி இயக்க காலத்தில் காணப்பட வில்லை. வேதத்துக்கு ஏற்பு இல்லாத அனைத்து நூல்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன என மயிலை சீனி வேங்கடசாமி  தான் எழுதிய  சமணமும் தமிழும் பவுத்தமும் தமிழும் என்ற நூல்களில் ஆங்காங்கே  குறிப்பிட்டுள்ளார்.  சமண, பவுத்த சமயங்கள் மட்டும் அல்ல அந்தச் சமயங்களுக்குரிய  நூல்களும் அழிக்கப்பட்டன.

இளங்கோ அடிகள்   சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், சமணம் என்ற பல்வேறு மதங்களின் வழிபடு தெய்வங்களை எவ்விதப் பேதமுமின்றிப் போற்றிப் பாடியுள்ளார். பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானையும் நீலமேனி நெடியோனாகிய திருமாலையும் அறுமுகச் செவ்வேளையும் மாலை வெண்குடை  இந்திரனையும் பாடியுள்ளார்.

மதுரைக் காண்டத்தில் ’வேட்டுவ வரி’ என்ற பகுதியில் கொற்றவையின் பெருமை வேட்டுவர்கள் மூலம் பேசப்படுகின்றது. வஞ்சிக் காண்டத்தில் இடம்பெற்றுள்ள ‘குன்றக் குரவை’யில் மலைவாழ் மக்களாகிய குறவர், செவ்வேளாகிய முருகனைப் பாடிப் பரவிக் குரவையாடுகின்றனர். வெவ்வேறு தெய்வங்களைத் தொழுதேத்தும் வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் மூலம் அத்தெய்வங்களின் சிறப்பை அடிகள்  கூறிச்செல்கின்றார். அவ்வாறு அவர் நமக்கு சுட்டிச் செல்லும் ஓர் அழகிய பகுதியே ஆய்ச்சியர் (இடையர்குல மக்கள்) திருமாலைப் போற்றிப் பாடுவும் ‘ஆய்ச்சியர் குரவை.’ மேற்குறிப்பிட்ட ‘வேட்டுவ வரி’, ‘குன்றக் குரவை’ ஆகியவற்றினும் விஞ்சிய பக்திச்சுவை ஆய்ச்சியர் குரவைப் பாடல்களில் காணப்படுகிறது.

கண்ணகி – கோவலன் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த ஆயர் முதுமகளான மாதரி  காலையில் எழுந்ததும் தயிர் கடைவதற்காகக் கடைகயிற்றுடன் தயிர்த் தாழியிடம் செல்கின்றாள். தாழியில் பால் உறையாதது கண்டு திகைக்கிறாள். அத்தோடு ஆநிரைகளின்  கண்களிலிருந்து கண்ணீர் வழிவதையும், அவை நடுங்கி நிற்பதையும் கண்டு, ’நமக்கு ஏதோ தீங்கு வருவதற்கான அறிகுறிகளாக இவை தோன்றுகின்றனவே’ என்று கலங்கி, ’நம் ஆயர்குலத் தோன்றலான கண்ணன், தன் அண்ணனாகிய பலராமனுடனும் காதலியாகிய நப்பின்னையுடனும் சேர்ந்தாடிய பால சரிதங்களைக் குரவைக் கூத்தாக ஆடி அவனைப் பணிவோம். நம் ஆநிரைகளுக்கும் கன்றுகளுக்கும் ஏற்பட்ட துயரத்தை அந்தக் கடல்வண்ணன் களைவான்’ என்று தன் மகளாகிய ஐயை என்பவளிடம் கூறியபடிக் குரவை ஆட ஏற்பாடு செய்கின்றாள்.

குரவைக் கூத்தென்பது பெண்கள் எழுவராகவோ அல்லது ஒன்பதுபேராகவோ இணைந்து, நண்டுபோல் (மோதிர விரலையும், நடுவிரலையும் மடித்து) கைகோர்த்துக் கொண்டு கண்ணனின் புகழ்பாடியபடியே ஆடும் கூத்தாகும். இங்கே மாதரி, ஆயர்குல மகளிர் எழுவரை வரிசையாக நிறுத்தி அவர்களுக்கு மாயவன், பலதேவன், நப்பின்னை என்று (குரவை முறைப்படி) பெயர்சூட்டுகின்றாள். பின்பு நப்பின்னை என்று பெயர் சூட்டப்பட்டவள் தன்னருகில் நிற்கும் மாயவன் கழுத்தில் துழாய் (துளசி) மாலையைச் சார்த்தி கூத்தாடிக் கொண்டே பாடுவதாக இப்பகுதி அமைகின்றது. அவள் கண்ணனைப் புகழ்ந்து பாடுவதாக ’அடிகள்’ இயற்றியுள்ள பாடல்கள்  முக்கனிகளுடன் பால், தெளிதேன், பாகு, பருப்பும் கலந்து உண்டது போல் இனிக்கின்றன.

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ!      ( சிலம்பு – மாயவனைப் பாடல்)

இப்பாடல்களில்  மாயக் கண்ணனின்  லீலைகள் சிறப்பாய்ப் பேசப்படுகின்றன.


என்றுமுள்ள செந்தமிழ்

மாயவன்  குழலோசை  கேட்போம் அல்லமோ?

(87)

சென்றமுறை படித்த பாடலை  மீளப்படித்து விட்டு அதன் பொருளைக் காண்போம்.

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையம்  தீங்குழல் கேளாமோ! தோழீ (ஆய்ச்சியர் குரவை மாயவன் பாடல்)

(1) தோழீ – தோழியே இனியாம்

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன் இன்று நம் ஆனுள் வருமேல் – ஆன் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு விளவினது கனிகளை உதிர்த்தவனாகிய மாயவன் இற்றைநாள் நமக்கு இரங்கி நமது ஆனிரைக்குள் வருவான்,

அங்ஙனம் வந்தால்; அவன் வாயில், கொன்றை அம் தீம் குழல் கேளாமோ – அம் மாயவனுடைய திருவாயின்கண் வைத்து இசைக்கின்ற கொன்றையங் குழலோசையை யாம் கேட்போம் அல்லமோ!

மரத்தடியிலே மேய்ந்து கொண்டிருந்த கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு, விளாங்கனியை உதிர்த்த  மாயவன்,  நம் வழிபாட்டின் காரணமாக இங்கு வந்தால் அவன் வாயிலிருந்து  வரும்  கொன்றையால்  ஆகிய இனிய குழல் ஓசையைக் கேட்போம் அல்லவா?

பாம்பு கயிறு  ஆக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பலம்  தீங்குழல் கேளாமோ! தோழீ!    (ஆய்ச்சியர் குரவை மாயவனைப் பாடல்)

(2) பாம்பு …….. தோழீ

பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் – வாசுகி என்னும் பாம்பினையே கடை கயிறாகக் கொண்டு திருப்பாற் கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிழ்தம் ஈந்த திருமால்

ஈங்கு நம் ஆனுள் வருமேல் – இவ்விடத்தே நமக்கிரங்கி நம்முடைய ஆனிரைக்குள் வருகுவன், அங்ஙனம் வந்தால்;

அவன் வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ – அவனுடைய திருவாயின்கண் வைத்திசைக்கின்ற ஆம்பற் குழலின் இன்னிசையை யாமும் ஒரு தலையாகக் கேட்போம்.

வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலை கடைந்த மாயவன், நம் வழிபாட்டின்  காரணமாக இங்கு வந்தால், அவன் வாயிலிருந்து வரும் ஆம்பலால் ஆகிய குழலிருந்து வரும் இனிய இசையைக் கேட்போம்.

இதனைத் தொடர்ந்து மாயவனைப் போற்றியும் புகழ்ந்தும்   ஆய்ச்சியர்  ஆடிப்  பாடுகின்றனர்.

தையல் கலையும் வளையும் இழந்தே  
கையில் ஒளித்தாள் முகம் என்கோ! யாம்
கையில் ஒளித்தாள் முகம் கண்டு  அழுங்கி
மையல் உழந்தான் வடிவு என்கோ! யாம்;    (ஆய்ச்சியர் குரவை மாயவனைப் பாடல்)

தையல் கலையும் விளையும் இழந்தே – தனது துகிலையும் வளையலையும் இழந்தமையால்;

கையில் ஒளித்தாள் தையல் முகம் என்கோ யாம் – நாணத்தால் தனது கையால் பொத்திக் கொள்ளப்பட்ட நப்பின்னையினது முகம் என்று சொல்லுவோமா?

யாம் அல்லது; கையில் ஒளித்தாள் முகம் கண்டு – நாணத்தால் தனது கையால் முகத்தைப் பொத்திக் கொண்டவளுடைய அந்த முகத்தைக் கண்டு;

அழுங்கி – இரங்கி; மையல் உழந்தான் – காமத்தால் மயங்கி அல்லலுற்ற அக்கண்ண பெருமானுடைய;

வடிவு என்கோ யாம் – உருவம் என்று சொல்வோமா? யாம், இவற்றுள் அழகான் மிக்கது யாதென்றறிகிலோம்.

அவன் நெஞ்சைக் கவர்ந்த அப்பெண், தன் புடவையையும்  வளையல்களையும் இழந்து, தன் கையால் மறைத்தாள், அவளின் முக  அழகை எங்ஙனம் கூற முடியும்? அவ்வாறு கையால் ஒளித்தவனின்  முகத்தைக் கண்டு வருந்தி, அவள் மேல் மையல் கொண்டாளே அவழ் அழகை எவ்வாறு புகழ முடியும்?

உலகமொழிகளுள் தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பதை அறிவோம்.  செம்மொழித் தகைமை பெற்ற ஆறு மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.

அவ்வாறே தமிழ் இசையும் முத்தமிழும் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு வளர்ந்து வந்துள்ளன. தமிழிற்கு பழைய இலக்கணமாக அமைந்த தொல்காப்பியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை போன்ற நிலங்களுக்குரிய யாழ் பற்றிக் கூறுகிறது.

இசை பற்றிய நூல்களுள் மறைந்தன போக எஞ்சியவற்றுள் பரிபாடலில் பாடல் இசைத்தோர் அவற்றிற்குரியப் பண் அமைத்தோர் போன்ற செய்திகள் கிடைக்கின்றன.

அடுத்து  கிபி இரண்டாம்  நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரம் ஒரு இசைச் சுரங்கம். இதில் இசை மற்றும் நாட்டியம் பற்றிய நுணுக்கங்கள் மிகுதியும் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகட்குப் பின்னர் சிலப்பதிகாரத்திற்குப் பொருள் கண்ட அடியார்க்கு நல்லாரும் அரும்பதனாரும் இசை மற்றும் நாட்டியம் பற்றி ஏராளமான குறிப்புகளை அளித்திருக்கின்றார்கள்.

சங்கத்தமிழானது இயல், இசை, நாடகமென மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளர்ந்து வந்தன. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலமென அறியப்படுகிறது. தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய பல தரவுகள் கூறப்பட்டுள்ளன. கிபி 6 – 10 ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய தேவார காலத்தில்  அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி பழந்தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தனர். தேவாரம் திருவாசகம் போலவே வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரும் பாடிய நாலாயிர திவ்யப்  பிரபந்தம் பண்ணோடு பாடப் பெற்றவை ஆகும்.

தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் அந்த அரிய நூல் இப்போது கிடைக்கவில்லை.

அகத்தியத்திற்கு முன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்க வேண்டும். அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம் பதினாறுபடலம் வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற நூல்களும் கால வெள்ளத்தில் அழிந்து போயின. எஞ்சிய நூல்கள்பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிலப்பதிகாரத்தில் காணப்பட்ட இசை நுணுக்கங்களை  சுவாமி விபுலானந்த அடிகள் 14  ஆண்டுகள் மேற்கொண்ட  இயலிசை ஆய்வின் அடிப்படையிலும் சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள் அடிப்படையிலும் யாழ்நூல் என்ற தலைசிறந்த இசைத் தமிழாய்வு நூலை எழுதி தமிழிசையை உலகறியச் செய்தார். இந்த நூல்  பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும்.

யாழ் நூலில் இசை நரம்பியல், பாலைத் திரியியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற பகுதிகளில் இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன. அந்நூல் இசை
இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.

பண்ணியலில் பாலை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்ற நாற்பெரும் பண்களும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் நால்வகை வேறுபாடுகளினால் ஒவ்வொன்றும் நான்காகி 16 பண்கள் ஆகும் நிலை கூறப்பட்டுள்ளது.

தேவார இயலில் 103 பண்களில் தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

பழந்தமிழிசை மரபிற்கும் வடநாட்டிசை மரபிற்கும் அமைந்த தொடர்பு நிலையையும் விளக்கியுள்ளார். தொடர்ந்து ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம். (வளரும்)என்றுமுள்ள செந்தமிழ்

முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!   

(88)

கோவலன் கொலையுண்டதால் விளைந்த தீநிமித்தங்களைக் கண்ட ஆய்ச்சியர் திருமாலை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர். இந்தக் குரவைக் கூத்தில்  கண்ணனைப் பற்றிய பல செய்திகள்  இடம் பெற்றுள்ளன. ஆய்ச்சியர் குரவை என்பது ஆயர்பாடியில் எருமன்றத்தில் கிருஷ்ணன் தன் தமையன் பலராமனுடன் விளையாடிய இளமைப் பருவ வரலாற்று  நாடகம் என்பது தெரிந்ததே.

“கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்” என வஞ்சத்தால் வந்து நின்ற பசுவின் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு வஞ்சக விளவின் பழத்தை உதிர்த்த கண்ணனின் செயல்  பேசப்பட்டதை முன்னர் பார்த்தோம்.

கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!    (சிலம்பு – ஆய்ச்சியர் குரவை 25)

கொல்லையஞ் சாரல் குருந்து ஒசித்த மாயவன் – நம் கொல்லையைச் சார்ந்த விடத்து வஞ்சத்தால் வந்து நின்ற குருந்த மரத்தினை முறித்த மாயவன்,

எல்லை நம் ஆனுள் வருமேல் – நம் வழிபாட்டால் பகலே நம் ஆனிரையுள் வருவானாயின்,

அவன் வாயில் முல்லையந் திங்குழல் கேளாமோ தோழீ – அவன் வாயினால் ஊதுகின்ற இனிய முல்லைக் குழலோசையைத் தோழீ கேட்போம். மாயவனைப் புகழ்ந்து ஆய்ச்சியர் பாடும் பாடல்கள் தொடர்கின்றன.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தை படைத்த இளங்கோ அடிகள் சமண சமயத்தவர் ஆவர். அப்படியிருந்தும்  சைவம், வைணவ மதங்களின் கடவுளரை வஞ்சகமில்லாமல் புகழ்ந்து பாடியிருக்கிறார். இந்தச் சமயப் பொதுமை இடைக்கால  மன்னர்களிடமும் புலவர்களிடமும் காணப்படவில்லை.

தேவார காலத்தில் சமண சமயத்தவர்களை  சைவர்கள் கழுவேற்றினார்கள். திருஞானசம்பந்தர் பதினாறாயிரம் அடியார் திருக்கூட்டத்துடன் மதுரைக்கு வந்து திருவாலவாயுடைய அண்ணலை வழிபட்டு ஒரு திருமடத்தில் தங்கியிருந்தார். சமணர்கள் தாம் அறிந்த நெருப்பு மந்திரத்தைக்கூறி திருமடத்தைக் கொழுத்த முயன்றார்கள்.

அம்மந்திரத்தினால் நெருப்பு பற்றவில்லை. அதைக்கண்டு தளர்ந்த சமணர்கள் ஒளிந்து சென்று பதினாறாயிரம் பேர் கண்ணயர்ந்து துயிலும் திருமடத்தில் தீ மூட்டினார்கள்.

பின்னர், அனல்வாது செய்தார்கள். புனல்வாதந் தொடங்கும்போது, “தோற்றவர் என் செய்வது?” என்று குலச்சிறையராகிய முதலமைச்சர் கேட்டார்.

அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்ற
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கெழு வேற்று வான் இவ்
வேந்தனே என்று சொன்னார்.

முடிவில் சமணர்கள் தோற்றார்கள். தோற்றதற்காக மட்டுமல்ல பதினாறாயிரம் அடியார்கள் துயின்ற திருமடத்தில் தீவைத்த குற்றத்திற்காகக் மதுரையை ஆண்ட  கூன்பாண்டியன்   “இவர்களைக் கழுவில் ஏற்றுக” என்று கூன்பாண்டியன் முதலமைச்சருக்குக் கட்டளையிட்டான்.

திருஞானசம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரைக் கழுவேற்றினார் என்று சைவசமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுகின்றன.  இவற்றை நினைவுபடுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றுங் காட்சியைச் சித்திரமாகத்  தீட்டி வைத்திருக்கிறார்கள்.  மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும்  விழாக்களில் ஐந்துநாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும். சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்ட ஊரின் பெயர் சாம நத்தம்!

பவுத்தம் அல்லது சாக்கியம், சமணம் ஆகிய சமயங்கள் இறைவனின் இருப்பையும் வேதங்களையும் ஒப்புக் கொள்ளாத நாத்தீகவாத மதங்களாகும்.

சமணசமயம் பலமுனைகளில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்தல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இவ்வாறு  சைவர்கள்  சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள. இவற்றைச் சைவ வைணவ நூல்களில் ஆங்காங்கே காணலாம்.

ஞான சம்பந்தர் 300 க்கும்   மேற்பட்ட தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளார். பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடலில் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று துன்பப் பட்டதையும் ஒன்பதாம் பாடலில் பிரமனும் மாலும் தேடிக் காண முடியாத சிவன் என்றும் பத்தாம் பாடலில் சமண பவுத்த மதத் துறவிகளின் போலி வாழ்க்கையைக் கடிந்தும் எள்ளி நகையாடியும் பதினோராம் பாடலில் தம் பெயரை இணைத்தும் அப்பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பயனைக் குறிப்பிட்டும் பாடியுள்ளார். கீழ்க்கண்ட தேவாரப்பாடல் இதற்குச் சான்று கூறும்:

புத்தர் புன்சமணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர் கருவூர்ஆனிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே!  (ஞானசம்பந்தர் தேவாரம்)

ஞானசம்பந்தர் சோழ நாட்டின் ‘போதி மங்கை’ எனும் தலத்தில் பவுத்தர்கள் அனைவருடனும் வாது செய்து வென்று, ஆத்தீக மார்கமான வேத தர்மத்தை நிறுவினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிக்கிறார்.

‘வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள்பேசிப் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!’           (திருவரங்கப் பதிகம் 879)

என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு உக்கிரமாக இருந்தது என்பதை விளக்குகின்றது. சமண சமயத்தவர்கள் தமிழகத்தில் இன்றும் உள்ளனர். சமணம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகும்.

புறநடையும் உண்டு. கோச்செங்கண் என்னும் சைவ மன்னன் சமயக்காழ்ப்பின்றி வைணவ ஆலயங்களை கட்டுவித்துள்ளமை வரலாறு.

சமணர்கள் தங்கள் பங்குக்கு திருநீறு பூசுகின்ற சைவர்களைக் கண்டால்  “கண்டு முட்டு”(பார்த்தவுடன் தீட்டாகிவிட்டோம்) என்றார்கள்.

சைவர்களைக் கண்டால் குளிப்பார்கள். அத்துணைக் கொடிய சமயமாக அவர்கள் அந்நாளில் கருதினார்கள். கண்டால் தீட்டு,கேட்டால் கூடத் தீட்டு என்ற நியதி நிலவியது.

சமணர்கள் தங்கள் குழந்தைகள் அழுதால் அச்சுறுத்தும் பொருட்டு ”பூச்சுக்காரன் வருகின்றான்; பூச்சாண்டி வருகின்றான்” என்று கூறுவார்கள். திருநீறு பூசுகின்றவர்கள் மீது அத்துணைப் பகைமை இருந்தது.

இந்தப் பின்னணியில்  சமணரான இளங்கோ அடிகளார் முத்தமிழையும் மூவேந்தர்களையும்  நான்கு சமயங்களையும்  ஏற்றிப் போற்றிப் பாடியிருப்பது மலைப்பாகவும்  இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

“இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ!யாம்
அறுவை ஒளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகம் என்கோ!யாம்”   (சிலம்பு – ஆய்ச்சியர் குரவை 25)

என்று வரும் பாடலில்  கன்னியரின் ஆடையை மறைத்து விளையாடிய கண்ணனின் அழகைப் பாடி மகிழும் பெண்களைப் பார்க்க முடிகிறது. (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

தென்கலை வடகலைச் சண்டை!   

(89) 

உலகில் உள்ள பெரிய மதங்களில் பிரிவினை காணப்படுகிறது.  ஒன்றாகத் தொடங்கிய மதங்கள்  காலப் போக்கில் பிரிந்துள்ளன.  16 ஆம் நூற்றாண்டில்  சமய சீர்திருத்த வாதம் அல்லது புரடஸ்தாந்தம் பிரிந்தது. பின்னதில் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் காணப்படுகின்றன.

இஸ்லாம் மதத்திலும்  சுன்னி, ஷியா என இரு  பிரிவுகள் உண்டு. உட்பிரிவுகளும் இருக்கின்றன. ஷியா என்றால் “அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும்.  ஷியாக்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே  அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள். ஆனால் சுன்னி பிரிவினர் வாரிசு முறையை ஏற்றுக் கொள்வதில்லை.

புத்தருக்குப் பின்னர் பவுத்தத்தில் ஹீனயான, மஹாயான என இரண்டு பிரிவுகள் தோன்றின.  மஹாயான பிரிவை நாகர்சுனன் என்ற தேரர் தோற்றுவித்தார். மஹாயான பவுத்தர்கள் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் இலக்கியங்களையும் நூல்களையும் எழுதியிருந்தனர். தேரவாத  பவுத்தர்கள்  பாளி மொழியில் தங்கள் சமயக் கோட்பாடுகளை எழுதியிருந்தனர்.  பவுத்தத்திலும்    பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன.

இந்து சமயம்  சைவம், வைணவம், சாக்கம், கவ்மாரம், கணாபத்தியம்  முதலிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். உலகின் மூன்றாவது பெரிய சமயமாக விளங்குகிறது. இந்தியாவிலேயே பெரும்பாலான இந்துக்கள் வாழ்கிறார்கள். நேப்பாளம் உலகின் ஒரேயொரு  இந்து இராச்சியமாக இருந்தது.  இப்போது இல்லை.

வைணவத்தில் தென்கலை வடகலை என இரண்டு பிரிவுகள் உண்டு. அவ்வப்போது இந்த இரண்டு பிரிவினரும் தங்களுக்குள்  சண்டை பிடித்துக் கொள்கிறார்கள்.

1918-1919    சிறீரங்கநாதர் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற சிக்கல் வைணவர்களுக்குள் ஏற்பட்டது. நீதி மன்றங்களை கடந்து, பிரிவுக் கவுன்சில் வரைக்கும் வழக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  பிரிவு கவுன்சில்  யானைக்கு ஓர் மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று  தீர்ப்பு வழங்கியது. அதன்படியே சிறீரங்கத்திலிருக்கும் வடகலை நாமக்காரர்கள் கெட்டிமேளத்தோடு வந்து ஒரு மாதம் யானைக்கு வடகலை நாமம் போட்டார்கள், பிறகு தென்கலை நாமக்காரர்கள் ஒரு மாதம் யானைக்குத் தென்கலை நாமம் போட்டார்கள்.

திருமாலை முதற்கடவுளாக வழிபடும் சமயம் வைணவம்.  திருமாலும் திருமகளும் சரிசமானமாக பூசைக்கும் வழிபாட்டிற்கும் பக்தி செலுத்துவதற்கும் உரியவர்கள். பண்டைய வடநாட்டு வைணவ சம்பிரதாயங்களைப் பெரிதும் கடைப் பிடிப்பவர்கள்.

தமிழும், சமஸ்கிருத மொழியும் தமிழ்நாட்டு வைணவத்திற்கு இரு கண்களைப்போல என்றாலும் அன்றாட வழிபாட்டில் இச்சமயத்தினர் வடமொழிக்குச் சற்று ஏற்றம் கொடுக்கிறார்கள்.   தென்கலை வைணவர்களுக்கும்  வடகலை வைணவர்களுக்கும் சுமார் பதினெட்டு வேறுபாடுகள் உள்ளதாகக் கூறுவர்.  வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருநாமம், ஆங்கில எழுத்து ‘Y’ போல இறுபுறமும் வெள்ளை நிறத்திலும் நடுவில் மஞ்சள் நிறத்தில் ஒரு நேர்க்கோடு கொண்டதாயும் இருக்கும். தென்கலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ‘U’ வடிவத்தில் வைத்துக் கொள்கிறார்கள்.

‘U’ வடிவம் இறைவனின் தாமரைப் பாதங்கள். இரண்டு கோடுகளும் ஒன்று அமைதியையும் மற்றொன்று அன்பையும் குறிக்கும். இதைத் திருமண் என்பார்கள். நடுவில் உள்ள சிகப்பு கோடு அம்மனை குறிக்கும். அதை ஸ்ரீ சூரணம் என்பர். இரு கலையாருமே ஆழ்வார்களுடைய பாசுரங்கள் வழி நிற்பவர்கள்.   இராமானுஜர்  பிறவியில் ஒரு வடகலை ஸ்மார்த்தர்.  தெற்கே திருவரங்கத்தில் வாழ்ந்திருந்தவர்களின் கருத்து தென்கலை என்றும் வடக்கே காஞ்சிபுரத்தில் வாழ்ந்திருந்தவர்களின் கருத்து வடகலை என்றும் சொல்லப்படுகிறது. தெற்கு வடக்கு என்பது தமிழகத்திற்கு உள்ளேயேயொழிய  தமிழக எல்லையைத் தாண்டவில்லை.

எம்பெருமானார்  என்பவர்தான் திராவிட வேதங்களை போற்றி வளர்த்தவர்களில் தலையானவர்.  இவரே வடமொழி வேதங்களைக்  கட்டிலும் தமிழ் வேதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.  நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பெருமாளுக்கு முன்னே ஓதச்  செய்து  வடமொழி  வேதத்தை அவன் பின் வரச் செய்தவரே இவர்தான்.  மாமுனிகள் தான் தமிழ் வேதங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் எனச் சொல்பவர்களும்  உண்டு.

ஆழ்வார்களில் பெரியாழ்வார் வம்சத்தினர் இன்னும் உள்ளனர். நாத முனிகளின் / ஆளவந்தாரின் வம்சமும் உள்ளது. இராமானுஜரின் உறவினர்களும் உள்ளனர். இவர்கள்  தென்கலை  சம்பிராதயஸ்தர்களே.

வைணவத்தின் அடிப்படை கொள்கையே சரணகதி தத்துவம் தான். எல்லாம் அவன் தான் அவன் பார்த்து கொள்வான் என்ற தத்துவமே சரணாகதி தத்துவம் .

வைணவக் கோவில்களில் பிராமணர்கள் மட்டுமே, சமஸ்கிருதத்தில் மட்டுமே எல்லா வழிபாடுகளையும் நடத்தியபோது இராமனுஜர் திவ்யபிரபந்தத்தை தென்னாட்டு வேதம் எனக்கூறி அவற்றுக்கும் கோவில்களில் இடமளிக்கவைத்தார். ஒருபுறம் வேத முழக்கமும் மறுபுறம் தமிழ் பாசுரங்களும் ஒலிக்க  பெருமாள் வீதி வலம் வருவார்.

இருந்தும்  இந்த மாதம்  சிறீரங்கம்  இரங்கநாதர்  கோயிலில்   குடமுழுக்கு நடந்தது.   சிறப்பு யாகப் பூசையின் போது தாங்களும் அந்த யாக பூசையில் கலந்து கொள்வோம் என்று கூறி வடகலையினர் சண்டையிட்டுக் கொண்டனர். வடகலை நாமக் குறியுடன் யாரும் பூசையில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறிய தென்கலைப் பார்ப்பனர்கள் 1941 ஆம் ஆண்டு துறையூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தென்கலை நாமக்குறி இருந்தால் மாத்திரமே யாகத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூறிவிட்டனர்.  ஆனால் வடகலையினரும் தென்கலையினரும்  ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விழாவின் போது  சண்டை பிடித்துக்  கொள்கிறார்கள்.

வடகலையினர் இது குறித்துக் கூறும் போது தங்களுக்கு திருவாராதனை பூசையில் பங்குண்டு, திருவாராதனை என்பது தங்களின் வேதபாராயணத்தில் உள்ள பிரிவுதானே தவிர்த்து அவர்களாக (தென்கலையினர்) உருவாக்கியது அல்ல, ஆகவே நாங்கள் சிறீரங்கநாதர் கோவிலில் நடக்கும் அனைத்து யாகபூசையிலும் கலந்துகொள்வோம், மேலும் யாகசாலை பூசை கோவிலுக்கு வெளியே உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடக்கிறது. இந்த மண்டபம் மற்றும் மண்டபத்தில் நடக்கும் அனைத்து விழாக்களிலும் நாங்களும் கலந்து கொள்வோம்  எனக் கூறுகிறார்கள்.  நூற்றாண்டு காலமாக நடக்கும் இவர்களின் சண்டையை இந்து அறநிலையத்துறையிடம் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பல்வேறு கால கட்டங்களில் நீதி மன்றம் கூறிவிட்டது.

இந்து அற நிலையத்துறையோ இது  தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கமுடியாது என்றும் தென்கலை வடகலைப் பிரிவினர் தங்களுக்குள்  பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டது.

மார்ச் 2001 இல்   சிறீரங்கம் இரங்கநாதர் கோயில்  குடமுழுக்கு  நடந்து முடிந்த பின்  உலகிலேயே உயர்ந்த 237 அடி உயரமுள்ள இராஜகோபுரத்தில் தென்கலை நாமம் போடப்பட்டது. இது வடகலை குழுவினரைப் புண்படுத்துவதாக சிறீரங்கம் அகோபில மடத்தின் 45 ஆவது பீடாதிபதியான ஜீயர் சுவாமிகள் கூறினார்.  ஜீயர் சுவாமிகள்   கூறுகையில் இராஜகோபுரம் எனக்கு முன்பு இருந்த ஜீயர் சுவாமிகளால் கட்டப்பட்டது. அவர் வடகலை நாமம் போடுபவராக இருந்தாலும் அவர் எந்தவிதமான சிக்கலும்  வரக்கூடாது என்பதற்காக ஒரு நாமமும் போடாமல் விட்டு விட்டார். ஆனால் இப்போதுள்ள கோவில் அதிகாரிகள் குடமுழுக்கு முடிந்தவுடன் இராஜகோபுரத்தின் ஆறாவது வாயிலில் தென்கலை நாமத்தை வைத்து அதற்கு மின்சார விளக்கும் போட்டுள்ளார்கள். இதே போல் கோவிலின் தேசிகர் சுவாமி சன்னதியிலும் தென்கலை நாமம் போடப்பட்டுள்ளது. இந்தக் கோயில் வடகலை நாமம் போடுபவரால் பராமரிக்கப்பட்டு வந்தாலும் இங்கு தென்கலை நாமம் போடப்பட்டுள்ளது.  வடகலை நாமதாரிகள் இது குறித்து நீதிமன்றம் செல்கிறார்கள்.

யாரும் ஆயுதம்  எடுத்து போராடாதவரை கவலையில்லை. (தொடரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

கோவா மலை ஆரம்   கோத்த கடல் ஆரம்

(90)

ஆய்ச்சியர் குரவை என்பது கண்ணகி – கோவலன் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த ஆயர் முதுமகளான மாதரி வாழ்ந்த   ஆயர் சேரியிலே பல தீய நிமித்தங்கள் தோன்றின. காலையில் எழுந்ததும் தயிர் கடைவதற்காகக் கடைகயிற்றுடன் தயிர்த் தாழியிடம் செல்கின்றாள். தாழியில் பால் உறையாதது கண்டு திகைக்கிறாள் குடத்திலிட்டு வைத்த பாலோ உறையவில்லை. வெண்ணெயோ உருக்கவும் உருகாது போயிற்று. ஆநிரைகளின்  அழகிய கண்களிலிருந்து நீர் சொரிகின்றன.  அவற்றின்  கழுத்து மணிகள் நிலத்திலே அறுந்து வீழ்கின்றன. ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் தீமை நேரும் என்று அஞ்சிய ஆயமகளிர்கள், தம் குலதெய்வமான கண்ணனை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர்.

ஆய்ச்சியர் குரவைக் கூத்தாக ஆடிப் பாடிய பாடல்கள் சிறவற்றைப் பார்த்தோம். இந்தப் பாடல்கள் பாடப்பட்ட காலம் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்தியவை.

பதிகங்கள் என்பன பத்துப் பாடல்களைப் கொண்டவை.  இந்த முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார்  என்று போற்றப்படும் புனிதவதியார்.   இவர் பாடிய பதிகங்கள் “மூத்த திருப்பதிகங்கள்” என்று அழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்த காலம் கிபி  ஐந்தாம் நூற்றாண்டாகும். இவர் தெய்வத்தைப் பண்ணிசையில் பாடி வழிகாட்டினார்.

காரைக்காலம்மையாரைத் தொடர்ந்து கிபி ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி  பத்தாம்  நூற்றாண்டு வரை தோன்றிய வைதீக சமய மறுமலர்ச்சிக் காலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாடினார்கள்.

இதே காலப் பகுதியில் தோன்றிய  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார்,  பெரியாழ்வார், ஆண்டாள்,  தொண்டரடிப் பொடியாழ்வார், திருபாணாழ்வார், திருமங்கையாழ்வார்  ஆகிய பன்னிரு ஆழ்வார்கள்  நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாடினார்கள்.   நாயன்மார்களும்  ஆழ்வார்களும் பழந்தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தவர்கள்.

தமிழர் வழிபாட்டு முறையை இசையிலிருந்து பிரிக்க முடியாது என்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை சிவபாதசேகரன் என்றும் திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராசஇராச சோழன் பெரு முயற்சியால் சிதம்பரம்  கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவில் கண்டெடுக்கப்பட்டவையே. அவற்றில் பண்ணிசை ஏதென்று அறியாத பதிகங்கள் இருக்கக் கண்டு, இராசராசன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த மதங்க சூளாமணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்க, அவர் வரையறுத்தப் பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.

தேவாரப் பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராசஇராசன் தொடங்கி பல அரசர்கள் தமிழகக்  கோயில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட  ஓதுவார் என்னும் இசைக்  கலைஞர்களை நியமித்தனர். கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம்  ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பெரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பிற்காலத்த அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்   முற்றிலும் தமிழ் இசைப்பாடல்களே.

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழ் இசையின் நுட்பத்துக்கும் வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ள காப்பியமாகும்.  சிலப்பதிகாரமும் அதன் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற்கின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள இசை நுணுக்கங்களையும் மாட்சிமைகளையும் விளக்கிக் காட்டப் பல நூல்களும் உரைகளும் உதவுகின்றன. பஞ்சமரபு வெண்பாக்களின் மூலமாகவும் அரும்பதவுரையாசிரியர் அடியார்க்கு நல்லார் உரைகளின் மூலமாகவும்  விபுலானந்த அடிகளார் இயற்றிய யாழ்நூல் மூலமும்  சிலப்பதிகார இசை நுணுக்கங்கள்  விளக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இசைக் குறிப்புகள் நிரம்பிய பகுதிகள் – ஆய்ச்சியர் குரவை, அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, கடலாடுகாதை, புரஞ்சேரியிருத்த காதை முதலியன.

தமிழ்மொழி இனிமையான மொழி என்பதைச் சிலப்பதிகாரத்தை மீள்கண்டு பிடித்த பின்னரே கண்டு கொண்டோம்.  பாரதியார் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என்று பாடிப் புகழ்ந்தார்.

கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம்,
தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே,
தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக்
கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால்.  

கோவாமலை ஆரம் கோத்த கடல் ஆரம் –   கோக்கப்படாத பொதியமலையின் ஆரமும் கோக்கப்பட்ட கொற்கைக்கடலின் ஆரமும்,

தேவர் கோன் பூண் ஆரம்  –  தேவர்களுகடகு அரசனானகிய  இந்திரன் அணிவித்த  ஆரமும்,

தென்னர் கோர் மார்பினவே – தென்னவர்க்கு அரசனாகிய பாண்டியன் மார்பில்  உள்ளன,

தேவர் கோன் பூணாரம்  பூண்டான்  –  இவ்வாறு இந்திரன் அணிவித்த  மாலையை அணிந்துள்ளவன்,  இறுதியாக உள்ளனவற்றைப் பூண்டவன் யாவனென்னின்,

செழுந்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால் – வளமிக்க துவராபதிக்கண் ஆனிரையை மேய்த்துக் குருந்த மரத்தினை முறித்த கண்ணனென்று கூறுவர்.

கோவா ஆரம் – சந்தனம், கோத்த ஆரம் – முத்து.

பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான்,
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்:
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்
பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால்.   (சிலம்பு – புகார் காண்டம் ஆய்ச்சியர் குரவை உள்வரி வாழ்த்து)

பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான் – பொன்னாகிய இமயமலையின் மையத்திலே தனது புலியை எழுதி இப்பாலுள்ள நிலமெல்லாம் ஆண்டவன்,

மன்னன் வளவன் மதிற் புகார் வாழ் வேந்தன் – மதிலையுடைய புகார் நகரத்து வாழும் வேந்தனாகிய சோழ மன்னனாவான்,

மன்னன் வளவன் மதிற்புகார் வாழ் வேந்தன் – அவன் யாவனென்னின்,

பொன்னந் திகிரிப் பொரு படையான் என்பரால் – போர் செய்யும் அழகிய சக்கரப்படையையுடைய திருமால் என்று கூறுவர். (வளரும்)

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply