என்றுமுள்ள செந்தமிழ் (41-50)

என்றுமுள்ள செந்தமிழ்

திருமந்திரம்  தமிழ் ஆகமம் என்று போற்றப்படுகிறது

(48)

இந்திய தத்துவஞானிகள் அனைவரையும் இருபெரும் பிரிவினராகப் பிரிப்பது வழக்கம். ஒரு பிரிவினர், வேத உபநிடதங்களில் கூறப்பட்டவற்றைச் சரியென ஒப்புக்கொள்ளுவோர். மற்றப் பிரிவினர் அவற்றைச் சரியென ஒப்புக்கொள்ளாதோர்.

வேதத்தை ஒப்புக்கொள்வோரை வைதிகர் என்ற சொல்லாலும் ஒப்புக்கொள்ளாதோரை அவைதிகர் என்ற சொல்லாலும் குறிப்பிடும் மரபு உண்டு. உலகாயதர், சமணர், பௌத்தர் ஆகிய மூவருமே அவைதிகர் எனப்படும் பிரிவைச் சேர்ந்தவர். வைதிகருக்குள் சாங்கியர், யோக மதத்தினர். நையாயிகர், மீமாம்சகர், வேதாந்திகள், சித்தாந்திகள் எனப் பல உட்பிரிவினர் உண்டு.

இவ்வுட்பிரிவுகளைத் தத்துவ தரிசனம் என்ற சொல்லாற் குறிப்பிடுவதுண்டு. தரிசனம் என்ற சொல்லுக்குக் காட்சி என்பது பொருள். ஞானிகளின் காட்சிக்குப் புலபபட்ட பேருண்மைகளே இத்தரிசனங்களில் அடங்கியவை என்பதை உணர்த்தவே இச்சொல் வழங்கப்படுகின்றது. நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம் என்பன வேதத்தை ஒப்புக்கொள்பவை. உலகாயதம், சமணம், பவுத்தம் ஆகிய மூன்றும் வேதத்தை எதிர்த்தெழுந்தவை.

வேத உபநிடதங்களின் சாரம் எனத்தக்கதாக வேதாந்த சூத்திரம் என்ற பெயரில் ஒரு நூல் எழுந்தது. அந்நூலுக்குச் சங்கரர், இராமானுசர், மத்துவர் ஆகிய மூவரும் மூன்று விதமான விளக்கங்களை எழுதினர். இவ்விளக்க வேறுபாட்டின் விளைவாக எழுந்தவையே  மத்துவரின் துவைதம்,  சங்கரரின் அத்வைதம், இராமானுசரின் விசிட்டாவைதம் ஆகிய வேதாந்தங்கள்.  சைவ சித்தாந்தம் வேதம் பொது  ஆகமங்கள் சிறப்பு எனக் கைக்கொள்ளுகின்றது.

இந்திய தத்துவ ஞானிகளுள் சங்கரர் இந்த உலகம், கயிறு பாம்பாகத் தோன்றுவது போன்ற ஒரு தோற்றமேயொழிய உண்மையல்ல என்றார். இந்தக் கருத்து மாயாவாதம் எனப்பட்டது. சைவ சித்தாந்திகள் உலகம் பொய்யல்ல அது இல்லாத பொருளல்ல அது உள்ள பொருளே என்ற கருத்தையுடையவர்கள்.

சித்தர்கள் இந்தப் பிரிவுகள் எதனிலும் எளிதாக உள்ளடக்கப்படாதவர்கள். சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டிப்பவர்கள். உருவ வழிபாட்டைச் சாடினவர்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தவர்கள். பிறப்பினால் வரும் சாதித் தீட்டுக்கள், சடங்குகள், சிலை வழிபாடு, கோயில் வழிபாடு இவற்றுக்கு எதிரான ஆணித்தரமான கருத்துக்களை முதன்முதலில் சித்தர் பாடல்களில் தான் காண்கிறோம். இதனாலேயே வைதிக இந்துக்கள் சித்தர் பாடல்களை ஒதுக்கியதாக சித்தர் வரலாற்றை ஆராய்ந்த ஸ்வெலபில் (Zvelebil)  என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”

என்பார் அகத்தியர்.

சித்தர் பாடல்களில் இறைவனை உணர்தல் பற்றிய நெறிகளை மறைபொருளாக வைத்துள்ளனர். இதனால் சாதாரண மனிதனுக்கும் இறையுணர்வு நிறைந்தவர்களுக்கும் ஒரே சமயத்தில் எட்டும் படியாக இந்தப் பாடல்கள் உள்ளன.

சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார் என்பதை முன்னர் பார்த்தோம்.  இன்றளவும் நாம் பயன்படுத்தும்,

1) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
2) யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
3) அன்பே சிவம்
4) என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே (தி.10 பா.20 )
5) உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
6) உறுதுணையாவது உயிரும் உடம்பும்
7) உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்
என தண்ணார் தமிழில் உலகத்தார்க்கு வழங்கியர் திருமூலரே.
திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளாகச் சிவ வழிபாட்டைச் சிவாகமங்கள் கூறுகின்றன. அவற்றைத் தத்துவ அடிப்படையில் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. சிவ வழிபாட்டில் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பிடம் பெற்றது.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

என்ற திருமந்திரப் பாடல் அர்ச்சனை வழிபாட்டை வலியுறுத்தும். அய்ந்தெழுத்தை மந்திரமாகக் கொண்டு வழிபடும் முறையைத் திருமந்திரம் பெரிதும் வலியுறுத்துகிறது.

அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும் 

என்று சிவாயநம என்ற அய்ந்தெழுத்தைத் திருமந்திரம் பெருமையாகப் பேசுகிறது. தத்துவ அடிப்படையில் கடவுள் உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் வழிபடக் கூடியவன் என்பதைத் திருமந்திரம் விளக்குகிறது. பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதே சிவ வழிபாடாகும்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே

கடவுள் தத்துவங்களை தண்ணார் தமிழால் உலகத்தார்க்கு வழங்கியவர்  திருமூலர். மனிதன் தெய்வீக உணர்வைப் பெறலாம் என்பது திருமந்திரத்தின் கொள்கையாகும்.  எனவேதான் திருமந்திரம் அல்லது மந்திரம் மூவாயிரம் தமிழ் ஆகமம் என்று போற்றப்படுகிறது. வேதாந்தச் சார்புள்ள இறைத் தத்துவங்கள் யாவும், “காயமே பொய், உடலை விடுத்து உயிரின் ஈடேற்றத்திற்காக உழை’ என்றே மாயாவாதம் பேசின. இப்போக்கை வன்மையாகக் கண்டித்து மறுத்த சித்தர்களில்  திருமூலரே முதன்மையானவர்.  திருமந்திரப் பாடல்களில் உடம்பின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார்.  திருமூலர் உடம்பார் அழிந்தால் உயிரார் அழிவார் என்கிறார்.

திருமூலரின் காலம் சரியாகத் தெரியவில்லை. கிபி 8 ஆம்  நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார்  `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியதேவார ஆசிரியர்கள் பாடியருளிய திருப்பதிகங்களில் திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும் திருமூலர் காலம் கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவாகிறது. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்து ஆண்டுக்கொரு மந்திரமாக மூவாயிரம் மந்திரங்களை அருளிச் செய்தார் எனச்  சேக்கிழார் பெரியபுராணத்தில்  28  பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்.   திருமூலர் இந்நிலவுலகில் நெடுங்காலம் சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பதை “ஒப்பில் எழு கோடி யுகமிருந்தேனே” (தி.10 பா.13)  எனவும் “இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி” (தி.10 பா.19) என்று அவர் கூறுவதில் இருந்து அறியக்கிடக்கிறது.

திருமந்திரத்தில் அய்ந்து கரத்தனை ஆனைமுகத்தனை என்று தொடங்கும் விநாயகர் வணக்கப்  பாடல்  பிற்காலத்தில் யாரோ ஒருவர் திருமந்திரம் நூலில் சேர்த்து விட்டார்.  திருமூலர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு  நூலும் தொண்டங்கியது இல்லை. விநாயக வழிபாடு பிற்காலத்தில் 63  நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற பரஞ்சோதி என்ற தளபதி வாதாபி (இன்றைய ஆந்திரா)  வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்தப் பகுதி மக்கள் வணங்கிய தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது தம்மோடு கொண்டுவந்தார் என்பதும் அப்பொழுது விநாயகரின் வயிறு  தொந்தியாக இல்லாமல் ஒட்டி யிருந்தது என்பதற்குச் சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர்  கோயிலிலும் மற்றொன்று இங்கிலாந்தில்  உள்ள  அருங்காட்சியத்திலும் ஒன்றாகச்  சாட்சி கூறுகிறது.

திருமூலர்  தம்  காலத் தமிழ்நாட்டில்  தாய்மொழியாகிய தமிழும் தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின என்கிறார்.  (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

(49)

திருமூலர் திருமந்திரத்தில் சொல்லூம் கருத்துக்கள் மாயாவாதத்திற்கு நேர் முரணான மெய்ம்மை வாதத்தை அடி நிலையாகக் கொண்டவை. திருமூலர் ஒரு சித்தர். திருமந்திரத்தைத் ‘தந்திரம்’ என்றும் கூறுவதுண்டு. தந்திரம் என்பது இந்தியாவிலே பண்டுதொட்டு வளர்ந்து வந்த ஒரு வழிபாட்டு முறை. இவ்வுடலின் துணைக்கொண்டே –  இவ்வுடலின் மூலமாகவே – பேரின்பத்தை அடையும் உண்மையைக் காட்டுவன யோகம், தந்திரம் முதலியன. கிரியைகள், சடங்குகள், மந்திர உச்சாடனங்கள், உடற்பயிற்சி, உடல்வலிமை முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. யோகமும், தந்திரமும், மனித உடலுக்கு உண்மை  – மெய் என்னும் பெயரை மெய்யாகக் கூறியவர்கள் தந்திரவாதிகள். அந்தளவிற்கு அவர்கள் மெய்மை வாதிகள்.

சித்தர்களின் இப்பண்புகளைப் பற்றிச்  சாமி சிதம்பரனார் என்ற தமிழறிஞர் பின்வருமாறு கூறுகிறார்.

“சித்தர் பாடல்களை ஆழ்ந்து படித்தால், அவர்கள் வைதிக மதத்திற்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். வைதிக மதக் கொள்கைகள் பலவற்றைத் தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் தங்களை நாத்திகர் என்றோ, உலகாயதர்கள் என்றோ வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. வெளிப்படையாகப் பாடவில்லை. கடவுள் அன்பர்கள் போலவே காட்சியளிக்கின்றனர். ஆயினும் சித்தர்களின் பாடல்களிலே உலகாயதத்தை – நாத்திகத்தைப் பற்றிய கண்டனங்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய அறிவிலாளர்களும் ஆன்மா தனித்த ஒரு பொருள் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆன்மா என ஒன்று தனியாக மதவாதிகள் சொல்லுகின்ற படி அழியாத தனிப்பொருளாக இல்லையென்பதே பல அறிவியலாளர்களது  கருத்து. சித்தர்களின் கொள்கை இதற்கு ஒத்திருப்பதைக் காண்கிறோம்.”

சித்தர்களைப் பற்றிக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்து அவர்களது இரசாவாதத்தைப் பற்றிக்  கும்பகோணம் கே.சி. வீரராகவ  அய்யர்  தாம்  எழுதிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். அதில்  பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“பெரும்பாலான சித்தர்கள் சங்கரரின் ஒருமைவாதத் தத்துவத்தையும் இந்துக்களின் விக்கிரக வழிபாட்டையும் எதிர்த்து மறுத்தவராகவே காணப்படுகின்றனர்.”

இவ்வாறு சித்தர்கள் வைதிக சமயத்தை எதிர்த்து நிற்கவும் வைதிக நெறியினரும் அவர்களைத் தள்ளி வைத்தனர். அண்மைக் காலம் வரை சைவ சித்தாந்திகளும் சித்தர் நூல்களை விலக்கி வைத்திருந்தனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய கா.சு. பிள்ளை முதலிய சிலரே சித்தர் பாடல்களும் கற்கத் தகுந்தன எனக் கூறுத் தொடங்கினர். மரபு வழி வரும் கருத்துக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும்  மேற்கோள்கள் அமையும்.

“……………..உடம்பொடு

செத்திட்டு இருப்பர் சிவயோகிகள்

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்.”

“உறுதுணையாவது உயிரும் உடம்பும்.”

“உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்.”

சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு. எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும் மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும் தமிழ் சூழலில் வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.

சாதி சமயம் சாத்திரம் சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவுத் தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence) உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding) அறநிலை உணர்வை (external awareness) மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

சித்தர்களை புலவர்கள்,பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள்,அரசர்கள், மறவர்கள்,  புலமையாளர்கள், அறிவியலாளர்கள் பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும் உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் “ஆத்மன்”, சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபைத்  தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும். சித்தர்களின் கொள்கை  இறைவன்  எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் இறைவனின்  இடம். ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே இறைவன்  பணி, உடம்பினுள்ளேயே  இறைவனைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை. இதனைத் திருமூலர் சில தத்துவப் பாடல்கள் மூலம் விளக்குகிறார்.

உடம்பினை முன்னம் இழுக்கென்றி ருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.                   (திருமந்திரம், 723 )

முன்னை ஒரு காலத்தில் உடம்பினை  இழுக்காகக் கருதினேன். எவராலும் படைக்க முடியாத உடப்புக்குள்ளே உறுபொருளாகிய இறைவனைக் கண்டேன். உடம்பினுள்ளே உத்தமனாகிய இறைவன் கோயில் கொண்டுள்ளான் என்று உடம்பினை நான் உள்ளிருந்து ஆகாரம், புணர்ச்சி, நித்திரை, அச்சம் ஆகியவற்றினின்றும் பாதுகாக்கின்றேன் என்பது பாடலின் பொருள்.

திருமூலர் வாக்கியப்படி உங்கள் உடம்பில் இருப்பது தெய்வம்தான். ஆதலால் ஒவ்வொரு மனிதனும் தெய்வம்தான்.

யோகிகள், முனவர்கள் என்றால் உண்ணாமல் உறங்காமல் பட்டினி இருந்து உடலை வருத்துபவர்கள் என்பதுதான் பொதுவான எண்ணம். அதற்கு மாறாக திருமூலர் உடம்பை வளர்ப்பதன் மூலம் உயிரை வளர்க்கும் உபாயம் அறிந்ததாகச் சொல்கிறார்.  சுவரின்றிச் சித்திரம் எழுதமுடியாது. அது போல் உடல் இருக்கும் வரைதான் உயிர் நிலைக்கும். அகத்தூய்மை, புறத்தூய்மையுடன் உடலைப் பேணிக்காத்தல் வேண்டும்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.”     
           
     (திருமந்திரம், 724 )

உயிரானது உடம்பின் உள்ளே உள்ளது. உயிர் அழியாது பாதுகாக்க வேண்டும் எனில் இந்த உடம்பைத் தூய்மை நெறியில் வளர்த்தல் வேண்டும். அப்படி வளர்ப்போமாயின் மெய்ஞ்ஞானமாகிய இறைவனைச் சேர்வது என்பது உறுதி. பலர் பெருக்கச் சாப்பிட்டு, குடித்துக் கூத்தாடித் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களது உடலில் இருந்து உயிர் வேளையோடு வெளியேறிவிடுகிறது.  அதற்கான காரணத்தை விதிமேல் ஏற்றிவிடுகிறார்கள்.  (வளரும்)


என்றுமுள்ள செந்தமிழ்

என்னை இறைவன் நன்றாகப் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

(50)

தமிழ்மொழி காலந்தோறும் வளர்ச்சியும் தளர்ச்சியும் பெற்று வளந்திருக்கிறது. சங்க காலத்தில் அரசர்கள் தங்கள் ஆட்சி எல்லையை விரிவாக்க மாற்று அரசர்களோடு போர் செய்த போது தமிழில் புறப்பாடல்கள் பெருகி வளர்ந்தன.

காதலர்கள் ஒருவருக்கொருவர் உள்ளம் பறிகொடுத்து உண்மை அன்பை பரிமாறிக் கொண்டபோது அகப்பாடல்கள் செழித்து வளர்ந்தது.

தமிழ் மக்களிடையே பல்வேறு சமயங்கள் தென்னகத்தில் நுழைந்தபோது அய்ம்பெரும் காப்பியங்கள் அய்ஞ்சிறு காப்பியங்கள் படைக்கப்பட்டன.

பக்கி இயக்க காலத்தில் நாயன்மார்களின் தேவாரம், திருவாசகம், ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், சேக்கிழாரின் பெரிய புராணம், கம்பரின் இராம சரித்திரம் தோற்றம் பெற்றன.

வடமொழி ஆதிக்கத்தையும் மீறி தமிழ்மொழி வளர்ந்தது.

சித்தர்களால் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கு திருமூலரின் திருமந்திரம் முன்னோடி. திருமந்திரம் திருமந்திரமாலை எனவும் அழைக்கப்படுகிறது. தமிழில் மிகச் சிறந்த சாத்திர நூலாகவும் தோத்திர நூலாகவும் திருமந்திரம் விளங்குகிறது. ஆன்மீக ஈடேற்றத்திற்கு திருமந்திரம் வழிகாட்டுகிறது. திரு என்றால் தெய்வத்தன்மை வாய்ந்தது என்று பொருள். மந்திரம் என்றால் மறைமொழி. இந்நூல் பன்னிரு திருமுறைகளுள் பத்தாவதாக இடம்பெற்றுள்ளது.

திருமந்திரம்  சிறப்பாக சிவாகம உண்மைகளையும் உலக மக்கள் எல்லோரும் பொதுவாக மேற்கொள்ளுதற்குரிய நல் வாழ்க்கை முறையினையும் ஞானயோக நுண்பொருள்களையும் ஒருங்கே இனிய தமிழால் விரித்து விளக்குகிறது.

சைவ ஆகமங்களின் சாரமாகத் திகழும் இந்நூலை, தமிழில் எழுந்த சைவசமயஞ் சார்ந்த ஒரு கலைக்களஞ்சியம் என்றே கூறலாம். திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் ஒரு ‘தந்திரம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன. ஆகமங்கள் 28, அவற்றுள் ஒன்பதின் சாரமாக 9 தந்திரங்கள் அமைந்துள்ளன. காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்பனவே அந்த ஒன்பது தந்திரங்களாகும்.

திருமந்திரம் மக்களுக்கெல்லாம் அறத்தையும் ஆன்ம ஈடேற்றத்தையும் மருத்துவக் கூறுகளையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

ஆர்க்கும் இடுமின் அவர்இவர் என்னன்மின்

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்

என்ற வாக்கியங்கள் திருமந்திரத்தின் பொதுமைக்கு எடுத்துக்காட்டாகும்.

பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை மூன்றையும் முற்றும் துறந்த திருமூலரால் தமிழ்மொழிப் பற்றைத் துறக்க முடியவில்லை. சிவாகமப் பொருளை நன்றாகத் தமிழிற் செய்யும்படி இறைவன் தம்மை நன்றாகப் படைத்தனன் எனத் தம்மைத் தமிழோடு தொடர்பு படுத்திக் கூறுகிறார்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே……….. (திருமந்திரம் : 81)

தமிழில் ஆகமங்களின் சாரங்களைத் தொகுத்தளிப்பதே அவர் வருகையின் நோக்கம் என்பது உறுதியாகிறது.

திருமூலர் திருமந்திரத்தைப் பாடிய  காலத்தில் பாரத நாட்டில் தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளில் பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின. இப்பதினெண் மொழிகளில் வெளிவந்த மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்து கொள்வதில் அக் காலச் சான்றோர் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். இம்மொழிகள் யாவும் உலகமக்கள் நலன்கருதி அறமுதற் பொருள்களையுணர்ந்து கொள்ளுதற்குரிய சாதனமாக இறைவனாற் படைத்தளிக்கப்பெற்றன. இப்பதினெண் மொழிகளிற் கூறப்படும் அறமுதற் பொருள்களை உணர்ந்தவர்களே பண்டிதர் எனச் சிறப்பாக மதித்துப் பாராட்டப் பெற்றனர்.

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங்
கண்டவர் கூறுங் கருத்தறிவா ரென்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.              (திருமந்திரம் 10 பாடல் 111)

எனவரும் திருமந்திரத்தால் பண்டிதர் என்பவர் யார் என்பது இனிது விளங்கும்.

இவ்வாறு தமிழுடன் திசைமொழிகள் பதினேழினையும் சேர்த்துப் பதினெண்மொழிகள் என வழங்கும் வழக்கம் சங்க நூல்களிற் காணப்படவில்லை. தொல்காப்பியர் காலத்தில் `வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு` எனவும் சங்க காலத்தில் குணபுலம், குடபுலம், தென்புலம் எனவும் தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பகுக்கப் பெற்றிருந்தது.

சங்க காலத்திற்குப் பின் தமிழ்நாடு சேர மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பெற்றது. இப்பகுப்பினை, “தமிழ் மண்டலம் அய்ந்துந் தாவிய ஞானம்“ (திருமந்திரம் 10 பாடல் 1646) என வரும் திருமந்திரத்தில் திருமூலர் குறித்துள்ளார்.

வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் தெளிந்துணர்ந்த திருமூலர் சிவாகம உண்மைகளை தமிழ்நாட்டவர் யாவரும் ஓதியுணர்ந்து உய்தல் வேண்டும் என்னும் அருள்நோக்குடன் திருமந்திரப் பனுவலைப் பாடியிருக்க வேண்டும்.

ஆரியம், தமிழ் என்னும் இருமொழிகளையும் படித்துணர்ந்த காரணத்தால் திருமூலர் பாடிய திருமந்திரப் பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய வட சொற்களும் சேரி வழக்குச் சொற்களும் விரவிக் காணப்படுகிறது. திருமந்திரத்தின் மொழிக்கலப்பு திருமூலர் காலம் சங்க காலத்திற்குச் சில நூற்றாண்டுகள் பிந்தியவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம்; ஆணவம், கன்மம், மாயை; சித்து, அசித்து; சரியை, கிரியை, யோகம், ஞானம்; சத்து, அசத்து, சதசத்து; வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்; நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம்; சத்தாதி வாக்கு மனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம் விஞ்ஞானர் போன்ற சொற்களை திருமூலர் கையாண்டிருக்கிறார்.

தமிழ், வடமொழி என்னும் இருமொழிகளையும் கலந்து திருமூலர் தாமே படைத்து வழங்கிய அணுவன் (தி.10 பா.2501), மாயாள் (தி.10 பா.399) போன்ற புதுச் சொற்களும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன. வேதாகமங்களின் முடிந்த முடிபாகிய சைவசமயத் தத்துவம் என்ற பொருளில் சித்தாந்தம் என்ற சொற்றொடரை முதன் முதல் வழங்கியவர் திருமூலநாயனாரேயாவர்.

திருமூலர் திருமந்திரத்தில் தன்காலத்தில் வழக்கில் இருந்த ஆறுசமயங்கள் அவற்றிற் பலவாகிய நூறு சமயங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் வேத வழக்கொடு மாறுபட்ட புறச் சமயங்களாகிய பவுத்தம் சமணம் ஆகிய மதங்களைப் பற்றிய குறிப்பெதுவும் திருமந்திரப் பாடல்களில் இடம் பெறவில்லை.

திருமந்திரத்தை சமய தத்துவங்களுக்கு மட்டும் அல்லாது தமிழின் இனிமைக்காகவும் படிக்கலாம்.

உலகம் வேறு, இறைவன் வேறானவன் என்ற கருத்து சமய நம்பிக்கை உடையவர்களிடமும் உள்ளது. குழந்தை மரத்தால் செய்யப்பட்ட யானைப் பொம்மையைக் கண்டு ‘யானை” என்று அஞ்சித் தாயிடம் தஞ்சம் அடைகிறது. தாயோ இது யானை இல்லை மரம் என்று கூறிக் குழந்தையின் அச்சம் நீக்குகிறாள். இதனால் குழந்தை கண்டது யானையா? மரமா? என்ற அய்யம் எழுகிறது.

யானையாகக் கண்ட குழந்தைக்கு மரம் என்பது புலப்படவில்லை; மரம் என்ற தெளிவு பெற்ற தாய்க்கு யானை புலப்படவில்லை. இவற்றைப் போல் உலகத்தையும் உலகப் பொருள்களையும் இறைவனாகவே காண்பார்க்கு அவை புலப்படுவதில்லை. உலகமாகவே காண்பார்க்கு இறைவன் புலனாவதில்லை. இவ்வழகிய உண்மையைத் திருமந்திரப்  பாடல் ஒன்று  விளக்குகிறது.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே (திருமந்திரம் – 2290)

ஒரு சிற்பி கோயிலில் மரத்தினால் யானை செய்து வைத்திருந்தார். கோயிலுக்கு வந்த ஒருவர் அதனைப் பார்க்கின்றார். அது உண்மையான யானைப்போல் தோற்றமளித்தது. அப்போது அவருக்கு மரத்தினால் செய்யப்பட்ட யானை எ‌ன்று தோன்றவில்லை. ‌பிறகு மரத்தினால் செய்யப்பட்ட யானை எ‌ன்று நோக்கினார், அப்போது யானை தோன்றவில்லை மரம்தான் அவர் கண்ணில்பட்டது. ஒரு  பொருளை அவரவர் மனம், எண்ணம் கொண்டு பார்க்கும் வகையில் அதற்கேற்ப அது வேறுபடுகிறது. (வளரும்)


 

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply